உண்மையான செல்வங்களை நாடுங்கள்!
“அநீதியான செல்வங்களை வைத்து உங்களுக்காக நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள்.”—லூக். 16:9.
1, 2. இந்தச் சகாப்தத்தில் ஏழைகள் எப்போதுமே இருப்பார்கள் என்று ஏன் சொல்லலாம்?
இன்றைய பொருளாதார அமைப்பு மிகவும் மோசமானதாகவும் அநியாயமானதாகவும் இருக்கிறது. நிறைய இளைஞர்கள் இன்று வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். சிலர், தங்கள் உயிரையே பணயம் வைத்து பணக்கார நாடுகளுக்குப் போகிறார்கள். எங்கு பார்த்தாலும் வறுமை இருக்கிறது; ஏன், பணக்கார நாடுகளிலும்கூட இருக்கிறது. உலகம் முழுவதும், பணக்காரர்கள் பணக்காரர்களாகிக்கொண்டே போகிறார்கள். ஏழைகள் இன்னும் ஏழைகளாகிக்கொண்டே போகிறார்கள். 99 சதவிகித மக்களிடம் இருக்கிற ஒட்டுமொத்த பணம், பெரிய பணக்காரர்களாக இருக்கிற வெறும் 1 சதவிகித மக்களிடம் இருப்பதாக சமீப கணக்கெடுப்புகள் சொல்கின்றன. இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, கோடிக்கணக்கான மக்கள் பரம ஏழைகளாக இருக்கிறார்கள். மற்றவர்களோ, பல தலைமுறைகளுக்குத் தேவையான பணத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலைமையைப் பற்றி இயேசுவுக்குத் தெரிந்திருந்ததால்தான், “ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்” என்று சொன்னார். (மாற். 14:7) இந்தளவு ஏற்றத்தாழ்வு இருப்பதற்கு என்ன காரணம்?
2 கடவுளுடைய அரசாங்கம் வரும்வரை இந்தப் பொருளாதார அமைப்பு இப்படித்தான் இருக்கும் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ‘வியாபாரிகளால்’ பிரதிநிதித்துவம் செய்யப்படுகிற இந்த வியாபார உலகமும், அரசியல் மற்றும் மத அமைப்புகளும் சாத்தானுடைய உலகத்தின் பாகமாக இருக்கின்றன என்று பைபிள் காட்டுகிறது. (வெளி. 18:3) அரசியல் மற்றும் பொய் மத அமைப்புகளிலிருந்து கடவுளுடைய மக்களால் முழுவதும் விலகியிருக்க முடியும். ஆனால், கடவுளுடைய மக்கள் நிறைய பேரால், சாத்தானுடைய உலகத்தின் பாகமான இந்த வியாபார உலகத்திலிருந்து முழுமையாக விலகியிருக்க முடியாது.
3. நாம் என்னென்ன கேள்விகளைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்?
3 கிறிஸ்தவர்களாக, இந்த வியாபார உலகத்தை நாம் எப்படிக் கருதுகிறோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அதற்காக, நாம் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘கடவுளுக்கு உண்மையாக இருக்கிறேன் என்பதைக் காட்டும் விதத்தில் பொருள் வசதிகளை நான் எப்படிப் பயன்படுத்துவேன்? இந்த வியாபார உலகத்தோடு இருக்கும் தொடர்பை நான் எப்படிக் குறைத்துக்கொள்வேன்? இன்று கடவுளுடைய மக்கள் முழுமையாக அவரை நம்பியிருக்கிறார்கள் என்பதை என்னென்ன உதாரணங்கள் காட்டுகின்றன?’
அநீதியான நிர்வாகியைப் பற்றிய உதாரணம்
4, 5. (அ) இயேசுவின் உதாரணத்தில் வரும் அந்த நிர்வாகிக்கு என்ன நடந்தது? (ஆ) என்ன செய்யும்படி தன்னைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு சொன்னார்?
4 லூக்கா 16:1-9-ஐ வாசியுங்கள். இயேசு சொன்ன அநீதியான நிர்வாகியைப் பற்றிய உதாரணத்தை நாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். பொருள்களையெல்லாம் வீணாக்குவதாக அவன்மேல் புகார் வந்ததால், அவனை வேலையைவிட்டு நீக்க அவனுடைய எஜமான் முடிவு செய்தார்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆனால், அந்த நிர்வாகி ‘ஞானமாக நடந்துகொண்டான்.’ வேலையைவிட்டுப் போவதற்கு முன்பு, பிற்பாடு தனக்கு உதவியாக இருப்பதற்காக ‘நண்பர்களைச் சம்பாதித்துக்கொண்டான்.’ அதற்காக, இந்த உலகத்தில் வாழ்வதற்கு தன் சீஷர்கள் அநீதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு அவர்களை உற்சாகப்படுத்தவில்லை. ஏனென்றால், ‘இந்த உலகத்தின் பிள்ளைகள்தான்’ அப்படி நடக்கிறார்கள். அப்படியென்றால், இயேசு ஏன் இந்த உதாரணத்தைச் சொன்னார்?
5 அந்த நிர்வாகி திடீரென்று கஷ்டமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டான். அதே போல, அநீதி நிறைந்த இந்த வியாபார உலகத்தில் தங்கள் வாழ்க்கையை நடத்த, தன்னைப் பின்பற்றும் பெரும்பாலானோர் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், “அநீதியான செல்வங்களை வைத்து உங்களுக்காக நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். ஏனென்றால், அவை இல்லாமல் போகும்போது, அந்த நண்பர்களான யெகோவாவும் இயேசுவும் “உங்களை என்றென்றும் நிலைத்திருக்கும் வீடுகளில் ஏற்றுக்கொள்வார்கள்.” இயேசுவின் இந்த ஆலோசனையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6. அதிக லாபம் சம்பாதிப்பது கடவுளுடைய நோக்கத்தின் ஒரு பாகமாக இருக்கவில்லை என்று ஏன் சொல்லலாம்?
6 செல்வங்களை ‘அநீதியானவை’ என்று சொன்னதற்கான காரணத்தைப் பற்றி இயேசு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இருந்தாலும், அதிக லாபம் சம்பாதிப்பது கடவுளுடைய நோக்கத்தின் ஒரு பாகமாக இருக்கவில்லை என்பதை பைபிள் தெளிவுபடுத்துகிறது. உதாரணத்துக்கு, ஏதேன் தோட்டத்தில், தேவைக்கும் அதிகமானதை ஆதாம் ஏவாளுக்கு யெகோவா இலவசமாகக் கொடுத்தார். (ஆதி. 2:15, 16) பிற்பாடு, முதல் நூற்றாண்டிலிருந்த பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தபோது, “ஒருவரும் தங்களுடைய உடைமைகளில் ஒன்றைக்கூட தங்களுடையது என்று சொல்லிக்கொள்ளவில்லை; எல்லாவற்றையும் பொதுவாக வைத்துப் பயன்படுத்தினார்கள்.” (அப். 4:32) பூமியின் விளைச்சலை மனிதர்கள் இலவசமாக அனுபவிக்கும் காலம் வரும் என்று ஏசாயா தீர்க்கதரிசியும் சொன்னார். (ஏசா. 25:6-9; 65:21, 22) ஆனால், அந்தக் காலம் வரும்வரை, இந்த உலகத்தின் “அநீதியான செல்வங்களை” வைத்து வாழ்க்கையை நடத்த, இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ‘ஞானமாக நடந்துகொள்ள’ வேண்டும். அதே சமயத்தில், கடவுளையும் சந்தோஷப்படுத்த வேண்டும்.
அநீதியான செல்வங்களை எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம்?
7. லூக்கா 16:10-13-ல் இயேசு என்ன ஆலோசனை கொடுக்கிறார்?
7 லூக்கா 16:10-13-ஐ வாசியுங்கள். இயேசுவின் உதாரணத்தில் வரும் அந்த நிர்வாகி, தன் சுயநலத்துக்காக நண்பர்களைச் சம்பாதித்துக்கொண்டான். ஆனால், தன்னைப் பின்பற்றுபவர்கள் சுயநலமற்ற காரணத்துக்காக பரலோகத்தில் நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொன்னார். அந்த உதாரணத்துக்கு அடுத்து வருகிற வசனங்கள், ‘அநீதியான செல்வங்களை’ பயன்படுத்துவதை கடவுளுக்கு உண்மையாக இருப்பதோடு சம்பந்தப்படுத்திப் பேசுகின்றன. அநீதியான செல்வங்களை நாம் பயன்படுத்துவதை வைத்து, நாம் கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்; இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் இயேசு விரும்பினார். அப்படியென்றால், கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
8, 9. அநீதியான செல்வங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கடவுளுக்கு உண்மையாக இருக்கிற சிலருடைய உதாரணங்களைச் சொல்லுங்கள்.
8 கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான ஒரு வழி, உலகம் முழுவதும் நடக்கும் பிரசங்க வேலைக்கு நன்கொடை கொடுப்பதற்காக நம் செல்வங்களைப் பயன்படுத்துவதாகும். (மத். 24:14) இந்தியாவில் இருக்கும் ஒரு சிறுமி, ஒரு சிறிய பணப்பெட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக காசுகளைச் சேர்த்து வைத்தாள். தனக்கென்று அவள் பொம்மைகளைக்கூட வாங்கவில்லை. அந்தப் பெட்டி நிறைந்தவுடன், அந்த எல்லா காசுகளையும் பிரசங்க வேலைக்காகக் கொடுத்துவிட்டாள். இந்தியாவில், தென்னந்தோப்பு வைத்திருக்கும் ஒரு சகோதரர், மலையாள மொழிபெயர்ப்பு அலுவலகத்துக்கு நிறைய தேங்காய்களை நன்கொடையாகக் கொடுத்தார். அந்த அலுவலகத்துக்குத் தேங்காய் தேவைப்பட்டதால், தான் கொடுக்கும் பணத்தைவிட தான் கொடுக்கும் தேங்காய் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும் என்று அவர் நினைத்தார். இதுதான் ‘ஞானமான’ செயல்! அதே போல, கிரீஸில் இருக்கும் சகோதரர்கள், ஒலிவ எண்ணெய், பாலாடைக் கட்டி ஆகிய பொருள்களையும் மற்ற உணவுப் பொருள்களையும் பெத்தேல் குடும்பத்துக்குத் தவறாமல் கொடுத்துவருகிறார்கள்.
9 இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரர், இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். ஆனால், இலங்கையில் இருக்கிற தன் நிலத்தையும் வீட்டையும், சபை கூட்டங்கள் நடத்தவும் மாநாடுகள் நடத்தவும் முழுநேர ஊழியர்களைத் தங்க வைக்கவும் கொடுத்திருக்கிறார். இது, பொருளாதார ரீதியில் அவர் செய்கிற தியாகம்! அவர் செய்கிற இந்தத் தியாகம், அங்கே இருக்கிற வசதி இல்லாத பிரஸ்தாபிகளுக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது. நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கிற நாடுகளில் இருக்கிற சகோதரர்கள், தங்கள் வீடுகளை ராஜ்ய மன்றங்களாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால், அங்கே இருக்கிற வசதி இல்லாத பயனியர்களுக்கும் பிரஸ்தாபிகளுக்கும் வாடகை இல்லாத ஒரு ராஜ்ய மன்றம் கிடைக்கிறது.
10. நாம் தாராள குணத்தைக் காட்டுவதால் நமக்கு என்ன சில ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன?
10 கடவுளுடைய மக்கள் ‘சின்ன விஷயத்தில் உண்மையுள்ளவர்களாக’ இருக்கிறார்கள் என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. (லூக். 16:10) தங்கள் பொருள் வசதிகளை இவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காகப் பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட தியாகங்கள் செய்வதைப் பற்றி யெகோவாவின் நண்பர்களான இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தங்களுடைய தாராள குணத்தால் பரலோகத்தில் “உண்மையான” செல்வங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நினைத்து இவர்கள் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். (லூக். 16:11) ஒரு சகோதரி, கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைக்காக தவறாமல் நன்கொடை கொடுத்துவருகிறார். தனக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “பொருள் வசதிகளை தர்ற விஷயத்துல நான் தாராள குணத்த காட்டுனதுனால, இத்தனை வருஷத்துல வித்தியாசமான நிறைய விஷயங்கள் எனக்கு நடந்திருக்கு. பொருள் வசதிகள நான் எந்தளவு தாராளமா தர்றேனோ, அந்தளவு மத்தவங்களோட பழகுற விஷயத்திலயும் என்னால தாராள குணத்த காட்ட முடிஞ்சிருக்கு. மன்னிக்கிறதுலயும், மத்தவங்ககிட்ட பொறுமையா நடந்துகிறதுலயும் இன்னும் தாராளமா இருக்க முடிஞ்சிருக்கு. ஏமாற்றங்களை சமாளிக்கவும், ஆலோசனைய ஏத்துக்கவும் நான் கத்துக்கிட்டேன்.” தாராள குணத்தைக் காட்டியதால் தங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்திருப்பதாக நிறைய பேர் உணர்ந்திருக்கிறார்கள்.—சங். 112:5; நீதி. 22:9.
11. (அ) தாராள குணத்தைக் காட்டுவதன் மூலம் நாம் ‘ஞானமாக நடந்துகொள்கிறோம்’ என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) கடவுளுடைய மக்கள் மத்தியில் இன்று என்ன நடந்துவருகிறது? (ஆரம்பப் படம்)
11 மற்றவர்கள் ஊழியம் செய்ய உதவுவதற்கு நம் செல்வங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் ‘ஞானமாக நடந்துகொள்ளலாம்.’ முழுநேர ஊழியம் செய்யவோ, தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போகவோ, நம்மால் முடியவில்லை என்றாலும் நாம் மற்றவர்களுக்கு உதவலாம். (நீதி. 19:17) உதாரணத்துக்கு, மிகவும் ஏழ்மையான நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. அந்த மாதிரியான நாடுகளில், பிரசுரங்களை விநியோகிக்கவும் பிரசங்க வேலையை ஆதரிக்கவும் நன்கொடைகள் ரொம்பவே உதவுகின்றன. காங்கோ, மடகாஸ்கர், ருவாண்டா போன்ற நாடுகளில் பைபிள் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வாரம் முழுவதும் அல்லது மாதம் முழுவதும் சம்பாதிக்கிற பணத்தைக் கொடுத்தால்தான் அவர்களால் ஒரு பைபிளை வாங்க முடியும். பல வருஷங்களாக, குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்குவதா அல்லது பைபிளை வாங்குவதா என்று அவர்கள் முடிவெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, மற்றவர்கள் கொடுக்கிற நன்கொடைகளின் மூலமும், ‘மற்றவர்களிடம் மிகுதியாக இருப்பதை வைத்து சிலருடைய பற்றாக்குறையை ஈடுகட்டுவதன்’ மூலமும் யெகோவாவின் அமைப்பு பைபிளை மொழிபெயர்த்து விநியோகிக்கிறது. இதன் மூலம், குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும், நம்மோடு சேர்ந்து பைபிள் படிப்பவர்களுக்கும் விலையில்லாமல் பைபிள் கிடைக்கிறது. (2 கொரிந்தியர் 8:13-15-ஐ வாசியுங்கள்.) அதனால், கொடுக்கிறவர்களாலும் பெற்றுக்கொள்கிறவர்களாலும் யெகோவாவின் நண்பர்களாக ஆக முடிகிறது.
வியாபார உலகத்தோடு இருக்கும் தொடர்பை எப்படிக் குறைத்துக்கொள்ளலாம்?
12. கடவுள்மேல் வைத்திருந்த நம்பிக்கையை ஆபிரகாம் எப்படிக் காட்டினார்?
12 வியாபார உலகத்தோடு இருக்கும் தொடர்பை குறைத்துக்கொள்வதன் மூலமும், “உண்மையான” செல்வங்களை நாடுவதன் மூலமும் நாம் யெகோவாவின் நண்பர்களாக ஆகலாம். இதைத்தான் விசுவாசமுள்ள மனிதரான ஆபிரகாம் செய்தார். அவர் யெகோவாவின் நண்பராக ஆக விரும்பியதால், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து செல்வச்செழிப்பான ஊர் நகரத்தைவிட்டுப் போனார்; கூடாரங்களில் வாழ்ந்தார். (எபி. 11:8-10) பொருள் வசதிகள்மேல் நம்பிக்கை வைக்காமல் அவர் எப்போதுமே யெகோவாமேல் நம்பிக்கை வைத்தார். (ஆதி. 14:22, 23) அதுபோன்ற ஒரு விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்றுதான் இயேசு மற்றவர்களை உற்சாகப்படுத்தினார். பணக்காரனாக இருந்த ஒரு வாலிபனிடம் ஒரு சமயம் இயேசு இப்படிச் சொன்னார்: “நீ குறையில்லாதவனாக இருக்க விரும்பினால், போய் உன் சொத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா; அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்.” (மத். 19:21) ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசம் அந்த வாலிபனுக்கு இருக்கவில்லை. ஆனால், நிறைய பேர் கடவுள்மேல் அசைக்க முடியாத விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்கள்.
13. (அ) தீமோத்தேயுவுக்கு பவுல் என்ன ஆலோசனை கொடுத்தார்? (ஆ) அந்த ஆலோசனையை இன்று நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?
13 தீமோத்தேயு விசுவாசமுள்ள மனிதராக இருந்தார். அப்போஸ்தலன் பவுல், அவரை ‘கிறிஸ்து இயேசுவின் சிறந்த படைவீரன்’ என்று அழைத்தார். பிறகு, தீமோத்தேயுவிடம் இப்படிச் சொன்னார்: “படைவீரனாகச் சேவை செய்கிற எந்த மனிதனும் மற்ற தொழில்களில் ஈடுபட மாட்டான்; தன்னைப் படைவீரனாகச் சேர்த்துக்கொண்டவரின் பிரியத்தைச் சம்பாதிக்கவே முயற்சி செய்வான்.” (2 தீ. 2:3, 4) பத்து லட்சத்துக்கும் அதிகமான முழுநேர ஊழியர்கள் உட்பட, இன்று இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாரும் பவுலின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள தங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்கிறார்கள். இந்தப் பேராசை பிடித்த உலகத்தில் இருக்கும் கவர்ச்சியான விளம்பரங்களை அவர்கள் ஒதுக்கித்தள்ளுகிறார்கள். “கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை” என்ற நியமத்தை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். (நீதி. 22:7) தன்னுடைய வியாபார உலகத்துக்காகவே நாம் நம் நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்த வேண்டும் என்று சாத்தான் ஆசைப்படுகிறான். வீடு, கார், படிப்பு அல்லது கல்யாணம் ஆகியவற்றுக்காக சிலர் பெரியளவில் கடன் வாங்குகிறார்கள். நாம் கவனமாக இல்லை என்றால் பல வருஷங்களுக்குக் கடனாளிகளாக இருக்க வேண்டியிருக்கும். நாம் எளிமையாக வாழ்ந்தால்... கடன் வாங்காமல் இருந்தால்... செலவுகளைக் குறைத்துக்கொண்டால்... நாம் ஞானமாக நடந்துகொள்கிறோம் என்று சொல்லலாம். இப்படி, இன்றைய வியாபார உலகத்துக்கு அடிமையாகாமல், நம்மால் கடவுளுக்குச் சுதந்திரமாகச் சேவை செய்ய முடியும்.—1 தீ. 6:10.
14. நாம் என்ன செய்ய தீர்மானமாக இருக்க வேண்டும்? சில உதாரணங்களைக் கொடுங்கள்.
14 நம் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். ஒரு சகோதரரும் அவருடைய மனைவியும் அதிக லாபம் தரும் ஒரு பெரிய தொழில் செய்துவந்தார்கள். இருந்தாலும், மறுபடியும் முழுநேர ஊழியம் செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டதால், அந்தத் தொழிலை விட்டுவிட்டார்கள். அவர்களுடைய மோட்டார் படகையும் மற்ற பொருள்களையும் விற்றார்கள். நியு யார்க், வார்விக்கில் நடந்த உலகத் தலைமை அலுவலகத்தின் கட்டுமான வேலைக்குப் போனார்கள். அந்த வேலை அவர்களுக்கு விசேஷமானதாக இருந்தது. ஏனென்றால், அங்கே பெத்தேலில் சேவை செய்துகொண்டிருந்த அவர்களுடைய மகளோடும் மருமகனோடும் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. அதோடு, அந்தச் சகோதரரின் அப்பா அம்மாவும் வார்விக்கில் சேவை செய்துகொண்டிருந்தார்கள்; சில வாரங்களுக்கு அவர்களோடு சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது. அமெரிக்கா, கொலரடோவைச் சேர்ந்த ஒரு பயனியர் சகோதரிக்கு வங்கியில் பகுதிநேர வேலை கிடைத்தது. அவர் நன்றாக வேலை செய்தது அங்கிருந்தவர்களுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அதனால், அவருக்கு முழுநேர வேலை கொடுப்பதாகவும் சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்துவதாகவும் அவர்கள் சொன்னார்கள். ஆனால் ஊழியத்தை நன்றாகச் செய்ய முடியாமல் போகும் என்பதால் அவர் அந்த முழுநேர வேலையை ஏற்றுக்கொள்ளவில்லை. யெகோவாவின் ஊழியர்கள் செய்த நிறைய தியாகங்களில் இவை சில உதாரணங்கள் மட்டுமே! கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கும்போது, பொருள் வசதிகளைவிட கடவுளோடு இருக்கிற பந்தத்தையும் உண்மையான செல்வங்களையுமே நாம் உயர்வாக மதிப்போம்.
பொருள் வசதிகள் இல்லாமல் போகும்போது...
15. என்ன செல்வங்கள் நமக்கு அதிக திருப்தியைத் தரும்?
15 பொருள் வசதிகள் இருப்பதால் மட்டும் கடவுளுடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ‘நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாக’ இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். (1 தீமோத்தேயு 6:17-19-ஐ வாசியுங்கள்.) லூச்சீயாb என்ற சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அல்பேனியாவில் ஊழியம் செய்வதற்கான தேவை அதிகம் இருந்ததைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். அதனால், 1993-ல் இத்தாலியிலிருந்து அல்பேனியாவுக்குக் குடிமாறிப் போனார். தனக்கு ஒரு வேலை இல்லை என்றாலும், யெகோவா தன்னைக் கவனித்துக்கொள்வார் என்று நம்பினார். அல்பேனிய மொழியை அவர் கற்றுக்கொண்டார். 60-க்கும் அதிகமான ஆட்கள் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணிக்க அவர் உதவியிருக்கிறார். நம் பகுதியில் ஊழியம் செய்யும்போது, நமக்கும் அதே போன்ற பலன்கள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ளவும் அவருடைய நண்பர்களாக ஆகவும் மற்றவர்களுக்கு நம்மால் உதவ முடியும். அதற்காக நாம் எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் நாம் என்றென்றும் பொக்கிஷமாக நினைப்போம்.—மத். 6:20.
16. (அ) இன்றைய வியாபார உலகத்துக்கு என்ன ஆகும்? (ஆ) அதைத் தெரிந்துவைத்திருக்கும்போது பொருள் வசதிகளை நாம் எப்படிக் கருதுவோம்?
16 இன்றைய வியாபார உலகம் நிச்சயம் முடிவுக்கு வரும் என்று இயேசு தெளிவுபடுத்தினார். “அவை [அநீதியான செல்வங்கள்] இல்லாமல் போகும்போது” என்று இயேசு சொன்னார்; ‘இல்லாமல் போனால்’ என்று சொல்லவில்லை. (லூக். 16:9) இந்தக் கடைசி நாட்களில் சில வங்கிகள் திவாலாகியிருக்கின்றன. சில நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. சீக்கிரத்தில் நிலைமைகள் இன்னும் மோசமாகும். சாத்தானுடைய உலகத்தின் பாகமாக இருக்கிற அரசியல், மதம் மற்றும் வியாபார அமைப்புகள் இல்லாமல் போகும். வியாபார உலகத்தில் எப்போதுமே மிக முக்கியமானவையாக இருந்திருக்கிற தங்கத்துக்கும் வெள்ளிக்கும்கூட எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும்; இதைத் தீர்க்கதரிசியான எசேக்கியேலும் செப்பனியாவும் முன்கூட்டியே சொல்லியிருக்கிறார்கள். (எசே. 7:19; செப். 1:18) இந்த உலகத்தின் அநீதியான செல்வங்களுக்காக உண்மையான செல்வங்களைத் தியாகம் செய்துவிட்டோம் என்பதை காலம்போன கடைசியில் உணர்ந்தால் நமக்கு எப்படி இருக்கும்? பணம் சம்பாதிப்பதற்காக வாழ்க்கை முழுவதும் வேலை செய்து கடைசியில் அந்தப் பணமெல்லாம் போலி என்பதை உணரும் ஒரு நபரைப் போல்தான் நாமும் உணர்வோம். (நீதி. 18:11) இந்த உலகத்தின் பொருள் வசதிகள் நிச்சயம் இல்லாமல் போய்விடும். அதனால், பொருள் வசதிகளைப் பயன்படுத்தி பரலோகத்தில் நண்பர்களைச் சம்பாதிப்பதற்காகக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். யெகோவாவுக்காகவும் அவருடைய அரசாங்கத்துக்காகவும் நாம் செய்யும் செயல்கள் நம்மை ஆன்மீக ரீதியில் பணக்காரர்களாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!
17, 18. கடவுளுடைய நண்பர்கள் எதை எதிர்பார்க்கலாம்?
17 கடவுளுடைய அரசாங்கம் வரும்போது, யாருமே வாடகை தரவோ கடன் வாங்கவோ வேண்டியதில்லை. உணவு இலவசமாகவும் தாராளமாகவும் கிடைக்கும். அதோடு, மருத்துவர்களுக்காகவும் மருந்துகளுக்காகவும் பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. யெகோவாவின் நண்பர்கள் பூமியின் மிகச் சிறந்த விளைச்சல்களை சந்தோஷமாக அனுபவிப்பார்கள். தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் ஆகியவை முதலீடு செய்வதற்காகவோ பதுக்கி வைப்பதற்காகவோ பயன்படுத்தப்படாமல், அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படும். உயர் தரமான மரங்கள், கற்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவை விலையில்லாமல் கிடைக்கும்; அழகான வீடுகளைக் கட்டுவதற்காக அவை பயன்படுத்தப்படும். நம் நண்பர்கள், நாம் பணம் கொடுப்போம் என்பதற்காக அல்ல, நமக்கு உதவ வேண்டும் என்ற ஆசையால் நமக்கு உதவுவார்கள்! அப்போது, பூமியில் இருக்கிற எல்லாவற்றையும் நாம் எல்லாரோடும் பகிர்ந்துகொள்வோம்.
18 பரலோகத்தில் நண்பர்களைச் சம்பாதிப்பவர்களுக்குக் கிடைக்கப்போகும் அருமையான ஆசீர்வாதங்களில் இவை கொஞ்சம்தான்! “என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்” என்று இயேசு சொல்லும்போது, பூமியில் இருக்கிற யெகோவாவின் வணக்கத்தார் சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பார்கள்.—மத். 25:34.
a அவன்மேல் சொல்லப்பட்ட புகார் உண்மையா பொய்யா என்பதைப் பற்றி இயேசு எதுவும் குறிப்பிடவில்லை. லூக்கா 16:1-ல் இருக்கிற “புகார் வந்தது” என்ற வார்த்தைகள், யாரோ அவனைப் பற்றி மோசமாக பொய் சொல்லிவிட்டதை அர்த்தப்படுத்தலாம். இந்த உதாரணத்தில், அந்த நிர்வாகி தன் வேலையை இழந்ததற்கான காரணத்தை இயேசு முக்கியப்படுத்திக் காட்டவில்லை; வேலையை இழந்ததற்குப் பிறகு அவன் எப்படி நடந்துகொண்டான் என்பதைத்தான் முக்கியப்படுத்திக் காட்டினார்.
b சகோதரி லூச்சீயா மூசாநெட்டின் அனுபவம், ஜூலை 8, 2003 விழித்தெழு! பக்கங்கள் 20-24-ல் இருக்கிறது.