அதிகாரம் 5
யாருடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்கிறார்?
நீங்கள் எப்போதாவது, ‘யாருடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்கிறார்?’ என்பதாக யோசித்ததுண்டா? சமாரியாவில் கெரிசீம் மலையருகே இயேசு கிறிஸ்துவோடு பேசியபோது குறிப்பிட்ட ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட ஒரு கேள்வி மனதில் வந்திருக்கக்கூடும். சமாரியர்களுடைய வணக்கத்துக்கும் யூதர்களுடைய வணக்கத்துக்கும் இடையேயுள்ள ஒரு வித்தியாசத்துக்குக் கவனத்தைத் திருப்பும் விதமாக, அவள் சொன்னாள்: “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே.” (யோவான் 4:20) இயேசு சமாரியப் பெண்ணிடம் கடவுள் எல்லா வணக்கத்தையும் ஏற்றுக்கொள்கிறார் என்பதாக சொன்னாரா? அல்லது கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு திட்டவட்டமான காரியங்கள் தேவை என்பதாக அவர் சொன்னாரா?
2 இயேசுவின் வியப்பூட்டும் பதில் இவ்வாறு இருந்தது: “நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.” (யோவான் 4:21) சமாரியர்கள் வெகு காலமாக யெகோவாவுக்கு பயந்திருந்தனர், மற்ற கடவுட்களை கெரிசீம் மலையில் வணங்கிவந்திருக்கின்றனர். (2 இராஜாக்கள் 17:33) அந்த இடமோ அல்லது எருசலேமோ உண்மை வணக்கத்தில் முக்கியமானதாக இல்லை என்பதாக இயேசு கிறிஸ்து இப்பொழுது சொன்னார்.
ஆவியோடும் உண்மையோடும் வணங்குங்கள்
3 இயேசு தொடர்ந்து சமாரியப் பெண்ணிடம் சொன்னார்: “நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.” (யோவான் 4:22) சமாரியர்கள் பொய் மத கருத்துக்களை உடையவர்களாக இருந்தனர், அவர்கள் பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை மாத்திரமே—சமாரியர்களின் ஐந்தாகமம் என்று அறியப்பட்டிருந்த தங்களுடைய சொந்த திருத்தப்பட்ட வாசகத்தை மாத்திரமே—ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்டதாக ஏற்றுக்கொண்டனர். ஆகவே, அவர்கள் உண்மையில் கடவுளை அறிந்திருக்கவில்லை. இருப்பினும், யூதர்களிடம் வேதாகம அறிவு ஒப்படைக்கப்பட்டிருந்தது. (ரோமர் 3:1, 2) உண்மையுள்ள யூதர்களுக்கும் செவிசாய்க்கக்கூடிய மற்றவர்களுக்கும் கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு அவர்களுக்குத் தேவையானதை வேதாகமம் அளித்தது.
4 உண்மையில், யூதர்களும் சமாரியர்களும் ஆகிய இருவருமே கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு தங்களுடைய வணக்க முறையை சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாக இயேசு காண்பித்தார். அவர் சொன்னார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.” (யோவான் 4:23, 24) நாம் கடவுளை “ஆவியோடு,” விசுவாசமும் அன்பும் நிறைந்த இருதயங்களால் தூண்டப்பட்டு வணங்குவது அவசியமாகும். அவருடைய வார்த்தையாகிய பைபிளைப் படிப்பதன் மூலமும் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய சத்தியத்துக்கு இசைவாக வணங்குவதன் மூலமும் கடவுளை “உண்மையோடு” வணங்க முடியும். அதைச் செய்ய நீங்கள் ஆவலாயிருக்கிறீர்களா?
5 உண்மை வணக்கத்தைக் கடவுள் விரும்புகிறார் என்பதை இயேசு வலியுறுத்தினார். இது யெகோவாவுக்கு ஏற்கத்தகாத வணக்க முறைகள் இருப்பதைக் காண்பிக்கிறது. கடவுளுக்குப் பக்தியுள்ள கனத்தைக் கொடுத்து அவருக்குப் பரிசுத்த சேவை செய்வதே அவரை வணங்குவதாகும். வலிமை மிகுந்த ஒரு ஆட்சியாளருக்கு நீங்கள் கனத்தைக் காண்பிக்க விரும்பினால், நீங்கள் அவருக்கு சேவைசெய்து அவரைப் பிரியப்படுத்தக்கூடியதை செய்வீர்கள். அப்படியென்றால், நிச்சயமாகவே நாம் கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறோம். ‘என்னுடைய மதம் எனக்குப் பிடித்திருக்கிறது,’ என்பதாக வெறுமனே சொல்வதற்குப் பதிலாக, நம்முடைய வணக்கம் கடவுளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா என்பதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
பிதாவின் சித்தத்தைச் செய்தல்
6 நாம் மத்தேயு 7:21-23-ஐ வாசித்து எல்லா வணக்கமும் கடவுளுக்கு ஏற்கத்தகுந்ததா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான காரணியை அடையாளம் காணமுடியுமா என்பதைப் பார்க்கலாம். இயேசு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் [பொல்லாத ஆவி சிருஷ்டிகளைத்] துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”
7 உண்மை வணக்கத்தில் இயேசு கிறிஸ்துவை கர்த்தராக ஏற்றுக்கொள்வது முக்கியமே. ஆனால் இயேசுவின் சீஷர்களென உரிமைபாராட்டிக்கொள்ளும் அநேகருடைய வணக்கத்தில் ஏதோவொன்று இல்லாதிருக்கும். சிலர் அற்புதமான சுகமளித்தல் என்று சொல்லப்படுகிறது போன்ற “அற்புதங்களை” நடப்பிப்பார்கள் என்பதாக அவர் சொன்னார். இருப்பினும், இயேசு அத்தியாவசியம் என்பதாகச் சொன்ன காரியத்தைச் செய்வதில் அவர்கள் தவறிவிடுவார்கள். அவர்கள் “[அவருடைய] பிதாவின் சித்தத்தின்படி செய்”யாதிருப்பார்கள். நாம் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினால், பிதாவின் சித்தம் என்ன என்பதைக் கற்றுக்கொண்டு, பிறகு அதைச் செய்ய வேண்டும்.
திருத்தமான அறிவு—ஒரு பாதுகாப்பு
8 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு யெகோவா தேவனைப் பற்றியும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் திருத்தமான அறிவு தேவையாக இருக்கிறது. இப்படிப்பட்ட அறிவு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது. அப்படியென்றால், நாம் அனைவருமே கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ளும் விஷயத்தைக் கருத்தாய் எடுத்துக்கொள்ள விரும்புவோம். நாம் உண்மை மனதுடனும் நம்முடைய வணக்கத்தில் வைராக்கியமாகவும் இருக்கும் வரையில் கவலைப்படுவதற்கு எந்த அவசியமுமில்லை என்பதாக சிலர் சொல்கின்றனர். மற்றவர்கள், ‘குறைந்த அளவு உங்களுக்கு இருக்கையில், குறைவாகவே உங்களிடம் எதிர்பார்க்கப்படும்,’ என்பதாக சொல்கின்றனர். இருப்பினும், தேவனையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய அறிவில் பெருகும்படியாக பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது.—எபேசியர் 4:13; பிலிப்பியர் 1:9; கொலோசெயர் 1:9.
9 இப்படிப்பட்ட அறிவு நம்முடைய வணக்கத்தின் தூய்மை கெடுக்கப்படுவதற்கு எதிராக பாதுகாப்பாக இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல், ‘ஒளியின் தூதனைப்’ போல பாவனைச் செய்யும் குறிப்பிட்ட ஒரு ஆவி சிருஷ்டியைப் பற்றி பேசினார். (2 கொரிந்தியர் 11:14) இப்படியாக மாறுவேஷத்தில் இருக்கும் இந்த ஆவி சிருஷ்டி—சாத்தான்—கடவுளுடைய சித்தத்துக்கு எதிர்மாறான காரியங்களைச் செய்வதற்கு நம்மைத் தவறாக வழிநடத்த முயற்சிசெய்கிறான். சாத்தானோடு சம்பந்தப்பட்ட மற்ற ஆவி சிருஷ்டிகளும்கூட மனிதர்களுடைய வணக்கத்தின் தூய்மையைக் கெடுத்துவந்திருக்கிறார்கள், ஏனென்றால் பவுல் சொன்னார்: “அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்”கள். (1 கொரிந்தியர் 10:20) அதேவிதமாகவே அநேகர் தாங்கள் கடவுள் விரும்பியதைச் செய்யாதிருந்தபோதிலும், தாங்கள் சரியான வழியில் வணங்குவதாக நினைத்திருக்கின்றனர். அவர்கள் அசுத்தமான பொய் வணக்கத்துக்குள் தவறாக வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். நாம் சாத்தானையும் பேய்களையும் பற்றி பின்னால் அதிகமாக கற்றுக்கொள்வோம், ஆனால் கடவுளின் இந்தச் சத்துருக்கள் நிச்சயமாகவே மனிதவர்க்கத்தினுடைய வணக்கத்தின் தூய்மையைக் கெடுத்து வந்திருக்கின்றனர்.
10 யாரோ ஒருவர் உங்கள் தண்ணீர் சப்ளையில் வேண்டுமென்றே விஷத்தைக் கலந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தால், அதிலிருந்து தொடர்ந்து குடித்துக்கொண்டே இருப்பீர்களா? நிச்சயமாகவே, பாதுகாப்பான, சுத்தமான தண்ணீர் கிடைக்கும் ஏதாவது ஓரிடத்தை நீங்கள் கண்டுபிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள். ஆம், கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவு, உண்மை மதத்தை அடையாளங்கண்டுகொள்ளவும் கடவுளுக்கு வணக்கத்தை ஏற்கத்தகாததாக்கும் அசுத்தமானப் பொருட்களை நிராகரித்துவிடவும் நமக்கு உதவிசெய்கிறது.
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாக
11 இயேசு பூமியில் இருந்தபோது, அநேக யூதர்கள் தேவனை அறியும் திருத்தமான அறிவின்படி நடக்காதவர்களாக இருந்தார்கள். ஆகவே அவர்கள் யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான ஒரு நிலைநிற்கையைக் கொண்டிருக்கும் வாய்ப்பை இழந்துபோனார்கள். அவர்களைக் குறித்து பவுல் எழுதினார்: “தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.” (ரோமர் 10:2) கடவுள் சொன்னதற்கு செவிகொடுப்பதற்குப் பதிலாக அவர்கள் கடவுளை எவ்வாறு வணங்குவது என்பதை தங்களுக்குதாங்களே தீர்மானித்துக்கொண்டனர்.
12 ஆரம்பத்தில் இஸ்ரவேலர் கடவுளால் கொடுக்கப்பட்டிருந்த தூய்மையான வணக்கத்தை கடைப்பிடித்து வந்தனர், ஆனால் அது மனிதர்களுடைய போதனைகளாலும் தத்துவங்களாலும் கறைபட்டுபோனது. (எரேமியா 8:8, 9; மல்கியா 2:8, 9; லூக்கா 11:52) பரிசேயர்கள் என்றறியப்பட்டிருந்த யூத மதத் தலைவர்கள் தங்களுடைய வணக்கம் கடவுளுக்கு ஏற்கத்தகுந்தது என்பதாக நினைத்த போதிலும், இயேசு அவர்களிடம் சொன்னார்: “இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.”—மாற்கு 7:6, 7.
13 பரிசேயர்கள் செய்தது போல நாம் செய்வது கூடிய காரியமா? வணக்கத்தைப் பற்றி கடவுள் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்குப் பதிலாக நமக்குக் கடத்தப்பட்டிருக்கும் மத சம்பந்தமான பாரம்பரியங்களை நாம் பின்பற்றிக்கொண்டிருந்தால் இது நமக்கு நேரிடக்கூடும். மிகவும் உண்மையாயிருக்கும் இந்த ஆபத்தைக் குறித்து எச்சரிப்பவராய் பவுல் எழுதினார்: “ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.” (1 தீமோத்தேயு 4:1) ஆகவே நம்முடைய வணக்கம் கடவுளுக்குப் பிரியமாயிருக்கிறது என்பதாக வெறுமனே ஊகித்துக்கொள்வது போதுமானதல்ல. இயேசுவை சந்தித்த சமாரியப் பெண்ணைப் போல, நாம் நம் வணக்க முறையை நம்முடைய பெற்றோரிடமிருந்து சுதந்தரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் கடவுளுடைய அங்கீகாரத்தை பெறும் வகையில் காரியங்களைச் செய்துகொண்டிருப்பதைக் குறித்து நாம் நிச்சயப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
கடவுளைக் கோபப்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கையாயிருங்கள்
14 நாம் கவனமாயிருந்தாலொழிய, கடவுளுக்கு ஏற்கத்தகாத ஏதோவொன்றை நாம் செய்துவிடக்கூடும். உதாரணமாக, அப்போஸ்தலன் யோவான் ஒரு தூதனுடைய பாதத்தில் “வணங்கும்படி” விழுந்தார். ஆனால் தூதன் இவ்விதமாக எச்சரித்தார்: “இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரனோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்.” (வெளிப்படுத்துதல் 19:10) ஆகவே உங்களுடைய வணக்கம் எந்த வகையான விக்கிரகாராதனையாலும் கறைபட்டில்லாதிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை நீங்கள் காண்கிறீர்களா?—1 கொரிந்தியர் 10:14.
15 ஒருசில கிறிஸ்தவர்கள் கடவுளைப் பிரியப்படுத்தாத மத சம்பந்தமான பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்த போது, பவுல் கேட்டார்: “பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.” (கலாத்தியர் 4:8-11) அந்த நபர்கள் தேவனை அறியும் அறிவைப் பெற்றிருந்தனர், ஆனால் பின்னால் யெகோவாவுக்கு ஏற்கத்தகாததாய் இருந்த மத சம்பந்தமான பழக்கங்களையும் பண்டிகை நாட்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் தவறுசெய்தனர். பவுல் சொன்னவிதமாகவே, நாம் ‘தொடர்ந்து கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று சோதித்துப்பார்க்க வேண்டும்.’—எபேசியர் 5:10, NW.
16 நாம் மதசம்பந்தமான பண்டிகை நாட்களையும் கடவுளுடைய நியமங்களை மீறுவதாக இருக்கும் பழக்க வழக்கங்களையும் தவிர்ப்பதைக் குறித்து நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:21) உதாரணமாக இயேசு தம்மைப் பின்பற்றுவோரைக் குறித்து இப்படிச் சொன்னார்: “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:16) உங்கள் மதம் உலக விவகாரங்களிடமாக நடுநிலைமை வகிக்கும் இந்த நியமத்தை மீறுகிற சடங்குகளிலும் விடுமுறை நாட்களிலும் ஈடுபட்டிருக்கிறதா? அல்லது உங்கள் மதத்தைப் பின்பற்றுவோர் அப்போஸ்தலன் பேதுரு விவரித்த நடத்தையை உட்படுத்தக்கூடிய பழக்க வழக்கங்களிலும் பண்டிகைகளிலும் சில சமயங்களில் பங்குகொள்கின்றனரா? அவர் எழுதினார்: “சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர் இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம் பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.”—1 பேதுரு 4:3.
17 அப்போஸ்தலன் யோவான் நம்மைச் சுற்றியுள்ள தேவபக்தியற்ற உலகத்தின் ஆவியைப் பிரதிபலிக்கும் எந்தப் பழக்க வழக்கங்களையும் தவிர்ப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். யோவான் எழுதினார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:15-17) ‘தேவனுடைய சித்தத்தைச் செய்கிறவர்கள்’ என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? ஆம், நாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்து இந்த உலகத்தின் ஆவியைப் பிரதிபலிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்ப்போமானால், நாம் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும்!
கடவுளுடைய உயர்ந்த தராதரங்களைக் காத்துக்கொள்ளுங்கள்
18 கடவுள் தம்முடைய உயர்ந்த தராதரங்களைக் காத்துக்கொள்கிறவர்களையே தம்முடைய வணக்கத்தாராக கொண்டிருக்க விரும்புகிறார். பண்டைய கொரிந்துவிலிருந்த சிலர், ஒழுக்கமற்ற நடத்தையைக் கடவுள் சகித்துக்கொள்வார் என்பதாக தவறாய் நினைத்துவிட்டனர். 1 கொரிந்தியர் 6:9, 10-ஐ வாசிப்பதன் மூலம் அவர்கள் எவ்வளவு தவறாக இருந்தனர் என்பதை நாம் காணமுடியும். நாம் கடவுளை ஏற்கத்தகுந்த விதமாக வணங்க வேண்டுமென்றால், நாம் சொல்லிலும் செயலிலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும். அதைச் செய்வதற்கு உங்களுடைய வணக்க முறை உங்களுக்கு உதவிசெய்கிறதா?—மத்தேயு 15:8; 23:1-3.
19 மற்ற ஆட்களோடு நம்முடைய செயல்தொடர்புகளும்கூட கடவுளுடைய தராதரங்களைப் பிரதிபலிக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியே அவர்களையும் நடத்தும்படியாக இயேசு கிறிஸ்து நம்மை உற்சாகப்படுத்தினார், ஏனென்றால் இது உண்மை வணக்கத்தின் பாகமாக இருக்கிறது. (மத்தேயு 7:12) சகோதர சிநேகத்தைக் காட்டுவதைக் குறித்து அவர் என்ன சொன்னார் என்பதையும்கூட கவனியுங்கள்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) இயேசுவின் சீஷர்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்து உடன் வணக்கத்தாருக்கும் மற்றவர்களுக்கும் நன்மைசெய்ய வேண்டும்.—கலாத்தியர் 6:10.
முழு ஆத்துமாவோடுகூடிய வணக்கம்
20 உங்களுடைய இருயத்தில் கடவுளை ஏற்கத்தகுந்த விதமாக வணங்குவதற்கு நீங்கள் விரும்பலாம். அப்படி விரும்பினால், நீங்கள் வணக்கத்தைப்பற்றிய யெகோவாவின் நோக்கை கொண்டிருக்கவேண்டும். சீஷனாகிய யாக்கோபு கடவுளுடைய நோக்கே முக்கியம், நம்முடையது அல்ல என்பதை வலியுறுத்தினார். யாக்கோபு சொன்னார்: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” (யாக்கோபு 1:27) கடவுளைப் பிரியப்படுத்தவேண்டும் என்ற ஆசையோடு, நம்முடைய வணக்கம் தேவபக்தியற்ற பழக்கங்களால் கறைபட்டில்லாதிருப்பதை அல்லது அவர் இன்றியமையாததாக கருதும் எதையோ விட்டுவிடாதிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வணக்கத்தை ஆராய்வது அவசியமாகும்.—யாக்கோபு 1:26.
21 சுத்தமான, முழு ஆத்துமாவோடுகூடிய வணக்கம் மாத்திரமே யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது. (மத்தேயு 22:37; கொலோசெயர் 3:24) அதைவிட குறைவானதை இஸ்ரவேல் ஜனம் கடவுளுக்குக் கொடுத்தபோது, அவர் சொன்னார்: “குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே?” அவர்கள் குருடான, ஊனமான மற்றும் நோயுற்ற மிருகங்களை கடவுளுக்குப் பலியிடுவதன் மூலம் கடவுளுக்குக் கோபமூட்டிக் கொண்டிருந்தார்கள், அவர் இப்படிப்பட்ட வணக்கச் செயல்களை நிராகரித்தார். (மல்கியா 1:6-8) யெகோவா மிகவும் தூய்மையான வணக்கத்துக்குப் பாத்திரராக இருக்கிறார், தனிப்பட்ட பக்திக்கு குறைவாக அவர் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை.—யாத்திராகமம் 20:5; நீதிமொழிகள் 3:9; வெளிப்படுத்துதல் 4:11.
22 இயேசுவோடு பேசிய சமாரியப் பெண் கடவுள் அங்கீகரிக்கும் முறையில் கடவுளை வணங்குவதில் அக்கறையுள்ளவளாகத் தோன்றினாள். அதுவே நம்முடைய ஆசையாக இருந்தால், கறைபடுத்தும் எல்லா போதனைகளையும் பழக்க வழக்கங்களையும் நாம் தவிர்த்துவிடுவோம். (2 கொரிந்தியர் 6:14-18) மாறாக, நாம் தேவனை அறியும் அறிவைப் பெற்றுக்கொள்வதில் நம்மைநாமே மும்முரமாக ஈடுபடுத்தி அவருடைய சித்தத்தைச் செய்வோம். ஏற்கத்தகுந்த வணக்கத்துக்கான அவருடைய தேவைகளை நெருக்கமாக பின்பற்றுவோம். (1 தீமோத்தேயு 2:3, 4) யெகோவாவின் சாட்சிகள் அதையே செய்ய முயற்சிசெய்கின்றனர், கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்வதில் அவர்களைச் சேர்ந்துகொள்ளும்படியாக அவர்கள் உங்களை கனிவாக துரிதப்படுத்துகின்றனர். (யோவான் 4:24) இயேசு சொன்னார்: “தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.” (யோவான் 4:23) நீங்கள் இப்படிப்பட்ட ஒரு ஆளாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. அந்தச் சமாரியப் பெண்ணைப் போல, சந்தேகமின்றி நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள விரும்புவீர்கள். (யோவான் 4:13-15) ஆனால் மக்கள் முதியோராகி மரித்துக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஏன் என்பதை அடுத்த அதிகாரம் விளக்குகிறது.
உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்
யோவான் 4:23, 24-ல் காண்பிக்கப்பட்டுள்ளபடி, கடவுள் எந்த வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்?
குறிப்பிட்ட பழக்கங்கள் மற்றும் பண்டிகைகள் கடவுளுக்குப் பிரியமா என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்கலாம்?
ஏற்கத்தகுந்த வணக்கத்துக்கு ஒருசில தேவைகள் யாவை?
[கேள்விகள்]
1. வணக்கத்தைப்பற்றி ஒரு சமாரியப் பெண் என்ன அறிந்துகொள்ள விரும்பினாள்?
2. சமாரிய பெண்ணுக்குப் பதிலளிக்கையில், இயேசு என்ன சொன்னார்?
3. (அ) சமாரியர்கள் உண்மையில் கடவுளை ஏன் அறிந்திருக்கவில்லை? (ஆ) உண்மையுள்ள யூதர்களும் மற்றவர்களும் எவ்விதமாக கடவுளை அறிந்துகொள்ள முடியும்?
4. இயேசுவின்படி, யூதர்களும் சமாரியர்களும் ஆகிய இருவருமே அவர்களுடைய வணக்கம் கடவுளுக்கு ஏற்கத்தகுந்ததாக இருப்பதற்கு என்ன செய்வது அவசியமாகும்?
5. (அ) “வணக்கம்” என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) கடவுள் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நாம் விரும்பினால் என்ன செய்யவேண்டும்?
6, 7. இயேசு ஏன் தம்முடைய சீஷர்களென உரிமைபாராட்டிக் கொள்ளும் சிலரை ஏற்றுக்கொள்வதில்லை?
8. நாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய வேண்டுமென்றால், என்ன தேவைப்படுகிறது, தவறான என்ன கருத்துக்களை நாம் தவிர்க்க வேண்டும்?
9. திருத்தமான அறிவு நம்மை எவ்வாறு பாதுகாக்கிறது, நமக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பு தேவையாக இருக்கிறது?
10. யாரோ ஒருவர் உங்கள் தண்ணீர் சப்ளையில் வேண்டுமென்றே விஷத்தைக் கலந்திருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள், கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவு என்ன செய்வதற்கு நமக்கு உதவிசெய்கிறது?
11. அநேக யூதர்களின் வணக்கத்தில் என்ன தவறு இருந்தது?
12. இஸ்ரவேலரின் வணக்கத்தை எது கறைபடுத்தியது, என்ன விளைவோடு?
13. பரிசேயர்கள் செய்தது போல நாம் எவ்வாறு செய்துவிடக்கூடும்?
14, 15. கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய அறிவை நாம் ஓரளவு கொண்டிருந்தாலும்கூட நாம் ஏன் கவனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
16. பண்டிகை நாட்களும் பழக்க வழக்கங்களும் கடவுளைப் பிரியப்படுத்துகின்றனவா என்பதை நாம் தீர்மானிக்க யோவான் 17:16 மற்றும் 1 பேதுரு 4:3 எவ்வாறு உதவிசெய்கின்றன?
17. உலகத்தின் ஆவியைப் பிரதிபலிக்கும் எதையும் நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
18. நடத்தையைக் குறித்து ஒருசில கொரிந்தியர்கள் எவ்வாறு தவறாக நினைத்துவிட்டனர், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?
19. நாம் மற்றவர்களை நடத்தும் விதத்தை உண்மை வணக்கம் எவ்விதமாக பாதிக்கிறது?
20, 21. (அ) என்ன வகையான வணக்கத்தைக் கடவுள் தேவைப்படுத்துகிறார்? (ஆ) மல்கியாவின் நாளில் யெகோவா ஏன் இஸ்ரவேலின் வணக்கத்தை நிராகரித்துவிட்டார்?
22. கடவுள் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், நாம் எதைத் தவிர்ப்போம், நாம் எதைச் செய்வோம்?
[பக்கம் 44-ன் முழுபடம்]