உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ‘கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டினார்’
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
    • மகத்தான அன்பின் செயல்

      4. இயேசு சாதாரண மனிதரல்ல என்பதை எப்படி ஒரு ரோம சேவகர் அறிந்துகொண்டார், அந்தச் சேவகர் என்ன முடிவுக்கு வந்தார்?

      4 இயேசுவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை மேற்பார்வையிட்ட ரோம நூற்றுக்கு அதிபதி, இயேசுவின் மரணத்திற்கு முன்பு இருள் சூழ்ந்ததையும் அதைத் தொடர்ந்து பூமியதிர்ச்சி ஏற்பட்டதையும் கண்டு மலைத்துப் போனார். “நிச்சயமாகவே இவர் கடவுளுடைய மகன்தான்” என்று வியந்துரைத்தார். (மத்தேயு 27:54) இயேசு சாதாரண மனிதர் அல்ல. உன்னத கடவுளுடைய ஒரே மகனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அல்லவா அந்த படைவீரர் துணை போயிருந்தார்! இந்த மகன் தம் தகப்பனுக்கு எவ்வளவு அருமையானவராக இருந்தார்?

      5. பரலோகத்தில் யெகோவாவும் அவருடைய மகனும் நீண்ட காலம் சேர்ந்து இருந்ததை எப்படி விளக்கலாம்?

      5 ‘படைப்புகளிலேயே முதல் படைப்பு’ என இயேசுவை பைபிள் அழைக்கிறது. (கொலோசெயர் 1:15) சற்று கற்பனை செய்து பாருங்கள்—இந்த அண்டம் தோன்றுவதற்கு முன்னரே யெகோவாவின் மகன் வாழ்ந்து வந்தார்! அப்படியானால், தந்தையும் மகனும் எவ்வளவு காலம் சேர்ந்து இருந்தனர்? இந்த அண்டத்திற்கு 1,300 கோடி வயதாகிறது என அறிவியலாளர்கள் சிலர் கணக்கிடுகின்றனர். அவ்வளவு காலத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அந்தக் காலத்தை மக்கள் புரிந்துகொள்வதற்காக, 110 மீட்டர் நீளமுடைய காலக்கிரம அட்டவணையை ஒரு பிளானட்டோரியம் வடிவமைத்திருக்கிறது. பார்வையாளர்கள் அந்தக் காலக்கிரம அட்டவணையை பார்த்தவாறு நடந்து செல்லும்போது, அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அண்டத்தின் ஆயுளில் சுமார் 7.5 கோடி ஆண்டுகளை குறிக்கிறது. அந்த அட்டவணையின் கடைசியில், முழு மனித சரித்திரத்தையும் அடையாளப்படுத்துவதற்கு ஒரு குறி போடப்பட்டிருக்கிறது; அது வெறும் ஒரு தலை முடியின் தடிமனே உள்ளது! ஒருவேளை இந்த மதிப்பீடு சரியாக இருந்தாலும்கூட, அந்த முழு காலக்கிரம அட்டவணையும் நிச்சயமாகவே யெகோவாவின் மகனுடைய ஆயுட்காலத்தை குறிப்பிடுவதற்குப் போதிய நீளமுடையதாக இருக்காது! அப்படியென்றால் இத்தனை யுகங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

      6. (அ) யெகோவாவின் மகன், மனிதனாக தோன்றுவதற்கு முன்னர் எந்த வேலையில் ஈடுபட்டு வந்தார்? (ஆ) யெகோவாவுக்கும் அவருடைய மகனுக்கும் இடையே எப்படிப்பட்ட பந்தம் நிலவுகிறது?

      6 தகப்பனின் “கைதேர்ந்த கலைஞனாக” இந்த மகன் மகிழ்ச்சியோடு வேலை செய்தார். (நீதிமொழிகள் 8:30) “அவரில்லாமல் எதுவுமே உண்டாகவில்லை” என பைபிள் சொல்கிறது. (யோவான் 1:3) ஆகவே யெகோவாவும் அவருடைய மகனும் ஒன்றுசேர்ந்து எல்லாவற்றையும் உருவாக்கினர். எப்பேர்ப்பட்ட பூரிப்பும் மகிழ்ச்சியும் மிக்க சமயங்களை அவர்கள் அனுபவித்தனர்! பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு அதிசயிக்கத்தக்கது என்பதை பலர் ஒத்துக்கொள்வர். சொல்லப்போனால், அன்பு ‘பரிபூரணமாக இணைக்கும்.’ (கொலோசெயர் 3:14) அப்படியானால், கோடானு கோடி ஆண்டுகளாக நிலவும் பந்தத்தின் வலிமையை நம்மில் யாரால் உணர முடியும்? இதுவரை உருவான அன்பின் கட்டிலேயே மிக பலமான ஒன்றால் யெகோவா தேவனும் அவருடைய மகனும் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

      7. இயேசு முழுக்காட்டுதல் பெற்ற சமயத்தில் அவரைப் பற்றி யெகோவா என்ன சொன்னார்?

      7 இருந்தாலும், தகப்பன் தமது மகனை மனித குழந்தை வடிவில் பிறப்பதற்கு இந்தப் பூமிக்கு அனுப்பினார். இதற்காக, பரலோகத்தில் தமது ஆசை மகனோடு குலவி மகிழுவதையே சில பத்தாண்டுகளுக்கு தியாகம் செய்தார். இயேசு பரிபூரண மனிதராக வளர்ந்து வருவதை பரலோகத்திலிருந்து தகப்பன் மிகுந்த ஆர்வத்தோடு கவனித்தார். சுமார் 30 வயதில், இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அவரைப் பற்றி யெகோவா எப்படி உணர்ந்தார் என்பதை நாம் ஊகிக்க வேண்டியதில்லை. பரலோகத்திலிருந்து அவரே இவ்வாறு சொன்னார்: “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்.” (மத்தேயு 3:17) முன்னுரைக்கப்பட்ட அனைத்தையும், அதாவது அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட அனைத்தையும் இயேசு உண்மையோடு நிறைவேற்றியதைக் கண்டு அவருடைய தகப்பன் அகமகிழ்ந்திருக்க வேண்டும்!—யோவான் 5:36; 17:4.

      8, 9. (அ) கி.பி. 33, நிசான் 14 அன்று இயேசு எதை அனுபவித்தார், அவருடைய பரலோக தகப்பன் எவ்வாறு பாதிக்கப்பட்டார்? (ஆ) தமது மகன் பாடுபட்டு மரிப்பதற்கு யெகோவா ஏன் அனுமதித்தார்?

      8 ஆனால் கி.பி. 33, நிசான் 14 அன்று யெகோவா எப்படி உணர்ந்தார்? அந்த இரவில் இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டு கலகக்காரர்களால் கைது செய்யப்பட்டபோது எப்படி உணர்ந்தார்? இயேசு தமது நண்பர்களால் கைவிடப்பட்டு, சட்ட விரோதமாக விசாரணை செய்யப்பட்டபோது எப்படி உணர்ந்தார்? பரிகசிக்கப்பட்டு, எச்சில் துப்பப்பட்டு, முஷ்டியால் தாக்கப்பட்டபோது எப்படி உணர்ந்தார்? வாரினால் அடிக்கப்பட்டு, அவருடைய முதுகு நார் நாராக கிழிக்கப்பட்டபோது எப்படி உணர்ந்தார்? கைகளிலும் கால்களிலும் ஆணி அடிக்கப்பட்டு, கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருக்கையில் மக்கள் அவரைப் பார்த்து நிந்தித்தபோது எப்படி உணர்ந்தார்? அவருடைய அன்பு மகன் தாங்கொணா வேதனையில் துடித்துக்கொண்டு அவரை நோக்கி கூக்குரலிட்டபோது அந்தத் தகப்பன் எப்படி உணர்ந்தார்? இயேசு தமது இறுதி மூச்சை விட்டபோது, படைப்பின் சமயத்திலிருந்து முதன்முறையாக தம் அன்பு மகன் இல்லாமல் போனதைப் பார்த்து யெகோவா எப்படி உணர்ந்தார்?—மத்தேயு 26:14-16, 46, 47, 56, 59, 67; 27:38-44, 46; யோவான் 19:1.

      9 வாயில் வார்த்தைகளின்றி தவிக்கிறோம் அல்லவா? யெகோவாவுக்கு உணர்ச்சிகள் இருப்பதால் தமது மகன் மரிக்கையில் அவர் அனுபவித்த வேதனையை நாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நம்மால் விவரிக்க முடிந்ததெல்லாம், அதை ஏன் அனுமதித்தார் என்பதே. அந்த வேதனையையெல்லாம் அவர் ஏன் வருவித்துக் கொண்டார்? இதற்கான காரணம், மிக முக்கியமான ஒரு பைபிள் வசனத்தில், சிறிய சுவிசேஷம் என அழைக்கப்படும் ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது; “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்” என்று அந்த வசனமாகிய யோவான் 3:16 குறிப்பிடுகிறது. ஆகவே யெகோவா அதை அனுமதித்ததற்கான காரணம், அன்பே. நமக்காக பாடுபட்டு மரிப்பதற்கு தமது மகனை அனுப்பியது யெகோவா தந்த மிகப் பெரிய பரிசு, இதுவரை யாருமே செய்திராத மகத்தான அன்பின் செயல்.

      ‘கடவுள் தன்னுடைய ஒரே மகனை தந்தார்’

  • ‘கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டினார்’
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
    • 12 பெரும்பாலான சமயங்களில், பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆகாப்பி என்பது நியமத்தின் அடிப்படையிலான அன்பை குறிக்கிறது. ஆகவே, இது உணர்ச்சிப்பூர்வ வெளிக்காட்டு மட்டும் அல்ல. இது பரந்த இயல்புடையது, நன்கு யோசித்து, தெரிந்தே வெளிக்காட்டப்படும் பண்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவ அன்பு துளிகூட சுயநலம் இல்லாதது. உதாரணமாக, மீண்டும் யோவான் 3:16-ஐ கவனியுங்கள். தம்முடைய ஒரே மகனையே தந்து கடவுள் அன்பு காட்டின ‘உலகம்’ எது? மீட்கத்தக்க மனிதவர்க்க உலகமே அது. பாவ வாழ்க்கை வாழும் மக்கள் பலரையும் அது உட்படுத்துகிறது. உண்மையுள்ள ஆபிரகாமை நண்பராக நேசித்தது போல் ஒவ்வொருவரையும் யெகோவா நேசிக்கிறாரா? (யாக்கோபு 2:23) இல்லை, ஆனால் யெகோவா அன்போடு அனைவருக்கும் நற்குணத்தைக் காட்டுகிறார், அது தமக்கே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் அப்படி செய்கிறார். எல்லாரும் மனந்திரும்பி தங்களுடைய வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். (2 பேதுரு 3:9) அநேகர் அப்படி செய்கிறார்கள். இவர்களை தமது நண்பர்களாக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்