இந்தப் புத்தகத்தை நம்பலாமா?
“நம்பகத்தன்மைக்கு உறுதியளிக்கும் அடையாளங்கள் எந்தவொரு உலகப்பிரகாரமான வரலாற்றில் இருப்பதைவிட பைபிளில் அதிகம் இருப்பதை நான் காண்கிறேன்.”—சர் ஐசக் நியூட்டன், இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி.1
இந்தப் புத்தகத்தை, அதாவது பைபிளை நம்பலாமா? உண்மையில் வாழ்ந்த மக்களைப் பற்றியும், உண்மையில் இருந்த இடங்களைப் பற்றியும், நிஜத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும் இது குறிப்பிடுகிறதா? அப்படியென்றால், பொறுப்புணர்வுள்ள, நேர்மையுள்ள எழுத்தாளர்களே இதை எழுதினார்கள் என்பதற்கு நிரூபணம் இருக்கவேண்டும். நிச்சயம் அத்தகைய நிரூபணம் இருக்கிறது. அநேக நிரூபணங்கள் பூமிக்கடியில் புதைந்து கிடப்பவையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. பார்க்கப்போனால், இன்னும் ஏராளமான நிரூபணங்கள் இந்தப் புத்தகத்திலேயே உள்ளன.
நிரூபணத்தை மண்ணுக்கு வெளியே எடுத்தல்
பைபிள் குறிப்பிடும் இடங்களில் தோண்டி பார்த்தபோது, புதைந்து கிடந்த பண்டைய கலைப்பொருட்கள் கிடைத்தன. இந்தக் கண்டுபிடிப்பு, வரலாற்று ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பைபிள் திருத்தமாக இருப்பதை ஆதரித்திருக்கிறது. புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்துள்ள ஒருசில நிரூபணங்களைப் பார்க்கலாம்.
தாவீது, தைரியசாலியான ஓர் இளம் மேய்ப்பன்; பிற்காலத்தில் இவர் இஸ்ரவேலின் ராஜாவாக ஆனார்; பைபிள் வாசகருக்கு இவரைப் பற்றி நன்றாகத் தெரியும். இவருடைய பெயர் பைபிளில் 1,138 தடவை வருகிறது. ‘தாவீதின் வீட்டார்’ என்ற சொற்றொடர் 25 தடவை வருகிறது; இது அடிக்கடி இவருடைய ராஜ பரம்பரையைக் குறிக்கிறது. (1 சாமுவேல் 16:13; 20:16; NW) சமீப காலம்வரை, தாவீது வாழ்ந்தார் என்பதற்கு தெளிவான நிரூபணம் பைபிளில் தவிர வேறு எங்குமே காணப்படவில்லை. அப்படியென்றால், தாவீது வெறும் ஒரு கற்பனை கதாபாத்திரமா?
1993-ல், அவ்ரயாம் பிரான் என்ற பேராசிரியருடைய தலைமையில் சென்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் குழு, வியப்பூட்டும் ஒன்றைக் கண்டுபிடித்தது. இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி இஸ்ரேல் ஆய்வு இதழ் (ஆங்கிலம்) அறிக்கை செய்தது. அவர்கள் சென்ற இடம் பண்டைய காலத்தில் டெல் தாண் என்று அழைக்கப்பட்ட ஒரு மேட்டுப்பகுதி. இது இஸ்ரேலுக்கு வடக்கே இருந்த பகுதி. எரிமலைப் பாறையிலான கறுப்பு கல் ஒன்றை அவர்கள் இங்கே கண்டெடுத்தார்கள். அந்தக் கல்லில் ‘தாவீதின் வீட்டார்,’ ‘இஸ்ரவேலின் ராஜா’ என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.2 எழுத்து பொறிக்கப்பட்ட காலம், பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டு. இஸ்ரேலுக்கு கிழக்கில் வாழ்ந்திருந்த ஆராமியர்கள் (Aramaeans) என்ற இஸ்ரவேலின் எதிரிகள் எழுப்பிய வெற்றிச் சின்னத்தின் ஒரு பகுதிதான் இந்தக் கல்வெட்டு என்று சொல்லப்படுகிறது. இந்தப் பழைய கல்வெட்டு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
பேராசிரியர் பிரானும் அவருடைய சக ஊழியராகிய பேராசிரியர் யோஸெஃப் நாவேயும் வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பைபிள் அகழ்வாராய்ச்சி விமர்சனம் என்ற ஆங்கில பத்திரிகையில் ஒரு கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “பைபிளைத் தவிர, பண்டைய கல்வெட்டில் தாவீதின் பெயர் காணப்படுவது இதுவே முதல் தடவை.”3a இந்தக் கல்வெட்டில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. ‘தாவீதின் வீட்டார்’ என்ற சொற்றொடர் ஒரே சொல்லாக எழுதப்பட்டுள்ளது. மொழியியல் நிபுணர் பேராசிரியர் அன்ஸன் ரேனி இவ்வாறு விளக்குகிறார்: “ஒரு தனி நபரின் பெயர் நன்கு பிரபலமாக இருந்தால் . . . பெரும்பாலும் சொற்களை தனித்தனியே பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். நிச்சயம், ‘தாவீதின் வீட்டார்’ என்பதும் அப்படிப்பட்ட ஒரு பெயரே. பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அந்தப் பெயர் அரசியல் ரீதியிலும் புவியியல் ரீதியிலும் மிகப் பரவலாக தெரிந்த ஒன்றாக இருந்தது.”5 எனவே, பண்டைய உலகில் தாவீது ராஜாவைப் பற்றியும் அவரது ராஜ பரம்பரையைப் பற்றியும் நன்கு தெரிந்திருந்தது என்ற விஷயம் தெளிவாக உள்ளது.
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அசீரியாவின் மாபெரும் நகர் நினிவே உண்மையில் இருந்ததா? அப்படி ஓர் இடம் இருந்தது என்பதை 19-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பைபிள் திறனாய்வாளர்கள் நம்பமறுத்தார்கள். ஆனால், 1849-ல் சர் ஆஸ்டென் ஹென்றி லேயார்ட் என்பவர், பண்டைய நினிவேயின் ஒரு பகுதியென்று நிரூபிக்கப்பட்ட கூயென்ஜீ என்ற இடத்தில், சனகெரிப் அரசனுடைய அரண்மனையின் இடிபாடுகளை தோண்டி எடுத்தார். இப்போது திறனாய்வாளர்கள் தங்கள் வாயை கப்சிப் என்று மூடிக்கொண்டார்கள். ஆனால், தெரிந்துகொள்ள வேண்டிய ஏராளமான தகவல்கள் இந்த இடிபாடுகளில் பொதிந்து கிடந்தன. நன்கு பாதுகாக்கப்பட்ட அறையின் சுவர் ஒன்றில், ஒரு சித்திரம் செதுக்கப்பட்டிருந்தது. அந்தச் சித்திரத்தில் ஒரு நல்ல அரணான நகரம் கைப்பற்றப்பட்ட காட்சியும், பிடிபட்ட கைதிகள், படையெடுத்து வந்த அரசனின் முன்பாக அணிவகுத்து வருவதும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த அரசனின் தலைக்கு மேல் இந்த வாசகம் செதுக்கப்பட்டிருந்தது: “சனகெரிப், உலகத்தின் ராஜா, அசீரியாவின் ராஜா, ஒரு நிமேடில், அதாவது சிம்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டு, லாகீசிலிருந்து (லாகீசு) (கொண்டு வந்த) கொள்ளைப்பொருட்களை முறைப்படி மேற்பார்வையிட்டார்.”6
இந்தச் சித்திரத்தையும் இதில் பொறிக்கப்பட்டுள்ள வாசகத்தையும் பிரிட்டிஷ் மியூஸியத்தில் காணலாம். யூதாவின் நகரமாகிய லாகீசை சனகெரிப் பிடித்தான் என்ற பதிவு பைபிளில் 2 இராஜாக்கள் 18:13, 14-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவுடன் இந்தச் சித்திரமும், அதன் வாசகமும் நன்றாக ஒத்துப்போகின்றன. இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்பைப் பற்றி குறிப்பிடுகையில் லேயார்ட் இவ்வாறு எழுதினார்: “இந்தக் கண்டுபிடிப்புகளுக்குமுன்பு, நினிவே என்று குறிக்கப்பட்ட இவ்விடத்தில், மண்ணும் குப்பைக்கூளங்களும் குவிந்துள்ள இவ்விடத்திற்கு அடியில் [யூதாவின் ராஜா] எசேக்கியாவுக்கும் சனகெரிப்புக்கும் இடையே நடந்த போர்களைப் பற்றிய வரலாறு மறைந்து கிடக்கிறது என்றும், அந்த வரலாற்றை போர் நடந்த சமயத்தில் சூட்டோடு சூடாக சனகெரிப்பே எழுதினார் என்றும் சொல்லி, பைபிளின் சின்னஞ்சிறிய விவரங்களும்கூட உறுதிசெய்யப்பட்டன என்றால் யாராவது நம்பி இருப்பார்களா?”7
மண்பாண்டம், கட்டடத்தின் இடிபாடுகள், களிமண் பலகைகள், நாணயங்கள், பத்திரங்கள், நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுகள் என இன்னும் பல கலைப்பொருட்களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். ஊர் என்னும் பெயரையுடைய கல்தேயரின் நகரத்தை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்தனர். வாணிபத்திற்கும் மதத்திற்கும் மையமாக விளங்கிய அந்நகரத்தில் ஆபிரகாம் வாழ்ந்திருந்தார்.8 (ஆதியாகமம் 11:27-31) பொ.ச.மு. 539-ல் மகா கோரேசுவின் கையில் பாபிலோன் வீழ்ச்சியடைந்த நிகழ்ச்சியை, 19-ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட நபோனிடஸ் கல்வெட்டு விவரிக்கிறது. இச்சம்பவம் தானியேல் 5-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.9 பண்டைய தெசலோனிக்கேயா நகரத்தின் ஒரு வளைவில் (archway) (அதன் துண்டுகள் பிரிட்டிஷ் மியூஸியத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன) பொறிக்கப்பட்டுள்ள ஒரு செய்தியில் நகர ஆளுநர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் “பாலிடார்கஸ்” என்று விவரிக்கப்பட்டனர். இது கிரேக்க இலக்கியத்தில் அறியப்படாத ஒரு வார்த்தை. ஆனால், இவ்வார்த்தையை பைபிள் எழுத்தாளர் லூக்கா பயன்படுத்தினார்.10 (அப்போஸ்தலர் 17:6, NW, அடிக்குறிப்பு) இவ்வாறாக, லூக்காவின் மற்ற விவரப்பதிவுகளின் நம்பகத்தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்டது போலவே, அவரது இந்த விவரப்பதிவும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.—லூக்கா 1:3-ஐ ஒப்பிடுக.
ஆனால், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலேயே கருத்துவித்தியாசங்கள் இருக்கின்றன. இப்படியிருக்கையில், அவர்கள் பைபிளுடன்தானா ஒத்துப்போவார்கள்? இருந்தாலும்கூட, பைபிள் ஒரு நம்பகமான புத்தகம் என்பதற்கு உறுதியான நிரூபணம் பைபிளிலேயே இருக்கிறது.
விவரங்களை ஒளிவுமறைவின்றி அளித்தல்
நேர்மையுள்ள வரலாற்று ஆசிரியர்கள் வெறும் வெற்றிகளை மாத்திரம் (சனகெரிப் லாகீசை கைப்பற்றிய பதிவின் கல்வெட்டைப்போன்று) அல்ல ஆனால் தோல்விகளையும், வெறும் பலங்களை மாத்திரம் அல்ல ஆனால் பலவீனங்களையும் பதிவு செய்வார்கள். ஒருசில உலகப்பிரகாரமான வரலாறுகள் மாத்திரம் அவ்வாறு நேர்மையாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அசீரியாவின் வரலாற்று ஆசிரியர்களைப் பற்றி, டானியேல் டி. லெக்கென்பில் இவ்வாறு விவரிக்கிறார்: “வீண் ஜம்பம் அடித்துக்கொண்ட ராஜாங்கத்திற்காக வேண்டி, திருத்தமாக பதிவு செய்யவேண்டிய வரலாற்றைக்கூட தந்திரமாக மாற்றி எழுதி அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியிருப்பது அடிக்கடி தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.”11 அசுர்னாசிரிபால் என்ற அசீரிய ராஜா பெருமை அடித்துக்கொண்ட சரித்திரப் பதிவுகள் அத்தகைய ‘ராஜாங்க ஜம்பத்தை’ இவ்வாறு விவரிக்கின்றன: “நானே மகத்துவம் உள்ளவன், நானே மாட்சிமை மிகுந்தவன், நானே உயர்வாகப் போற்றப்படுபவன், நானே வல்லமை உள்ளவன், நானே உயர்வாக மதிக்கப்படுபவன், நானே பெரும் சிறப்புமிக்கவன், நானே ஈடு இணையற்றவன், நானே பராக்கிரமசாலி, நானே துணிந்தவன், நானே ஆண் சிங்கம், நானே வீரன்!”12 இப்படிப்பட்ட பதிவை நீங்கள் வாசிக்கும்போது, இதிலுள்ள ஒவ்வொரு குறிப்பும் நம்பகமான வரலாறு என்று ஒத்துக்கொள்வீர்களா?
அதற்கு நேர் மாறாக, பைபிள் எழுத்தாளர்கள் உள்ளதை உள்ளவாறே சொல்லியிருக்கிறார்கள். இஸ்ரவேலின் தலைவராக இருந்த மோசே, தன் சகோதரன் ஆரோன், தன் சகோதரி மிரியாம், ஆரோனின் மகன்களான நாதாப், அபியூ ஆகியோர் செய்த தவறுகளையும், தன் சொந்த மக்கள் செய்த தவறுகளையும், மேலும் தன்னுடைய சொந்த தவறையும் அப்படியே ஒளிவுமறைவின்றி சொல்லிவிட்டார். (யாத்திராகமம் 14:11, 12; 32:1-6; லேவியராகமம் 10:1, 2; எண்ணாகமம் 12:1-3; 20:9-12; 27:12-14) தாவீது ராஜா செய்த பயங்கரமான தவறுகள் மறைக்கப்படவில்லை, ஆனால் பதிவுசெய்யப்பட்டன. இதில் விசேஷம் என்னவென்றால், ராஜாவாக தாவீது ஆட்சிசெய்துகொண்டிருந்தபோதே அவை பதிவுசெய்யப்பட்டன. (2 சாமுவேல், அதிகாரங்கள் 11 மற்றும் 24) மத்தேயு தன் பெயர் தாங்கிய பைபிள் புத்தகத்தை எழுதினார். தனி முக்கியத்துவம் பெறவேண்டும் என்பதற்காக எவ்வாறு அப்போஸ்தலர்கள் (அதில் அவரும் ஒருவராக இருந்தார்) சண்டைபோட்டனர் என்ற விஷயத்தையும், இயேசு கைதான இரவில் எல்லாரும் அவரை அம்போவென்று விட்டுவிட்டு ஓட்டம்பிடித்தனர் என்ற விஷயத்தையும் அவர் மறைக்காமல் சொல்கிறார். (மத்தேயு 20:20-24; 26:56) ஆரம்ப கிறிஸ்தவ சபைகள் சிலவற்றில் பாலியல் ஒழுக்கக்கேடு, பிரிவினைகள் போன்ற பல பிரச்சினைகள் இருந்தன என்பதை கிறிஸ்தவ கிரேக்க வேதாகம கடிதங்களை எழுதிய எழுத்தாளர்கள் ஒளிவுமறைவின்றி ஒத்துக்கொண்டார்கள். பிரச்சினைகளை எடுத்துக் கூறும்போது, அவர்கள் வார்த்தைகளை மென்று விழுங்கி, பூசி மெழுகாமல் நேரடியாக உண்மையை சொன்னார்கள்.—1 கொரிந்தியர் 1:10-13; 5:1-13.
இவ்வாறு ஒளிவுமறைவின்றி, திறந்தமனதோடு உள்ளதை உள்ளபடி சொல்வது, சத்தியத்திற்காக கொண்டுள்ள மனப்பூர்வமான அக்கறையைச் சுட்டிக்காட்டுகிறது. தங்கள் அன்பானவர்களைப் பற்றியும், தங்கள் சொந்த மக்களைப் பற்றியும், ஏன் தங்களைப் பற்றியும்கூட சாதகமற்ற தகவலை அறிவிக்க பைபிள் எழுத்தாளர்கள் கொஞ்சமும் தயங்கவில்லை என்றால், அவர்கள் எழுதியவற்றை நம்பலாம் என்பதற்கு இதைவிட வேறு நல்ல காரணம் இருக்க முடியுமா?
விவரங்களின் துல்லியம்
நீதிமன்ற வழக்கு விசாரணைகளில், சாட்சியம் அளிக்கும் சாட்சி ஒருவரின் உண்மைத்தன்மையை, அவர் கூறிய சிறு சிறு உண்மைகளின் அடிப்படையில் தீர்மானிப்பார்கள். சிறு சிறு விவரங்கள் என்றாலும், அவற்றிற்கிடையே இருக்கும் ஒத்திசைவு, விவரங்கள் சரியானவை என்றும் நேர்மையானவை என்றும் நிரூபிக்கிறது. ஆனால் பயங்கரமான வித்தியாசங்கள் இருக்கின்றன என்றால், கதை ஜோடிக்கப்பட்டுள்ளது என வெட்டவெளிச்சம் ஆகிவிடும். மறுபட்சத்தில், ஒவ்வொரு சிறிய விவரத்தையும் மிக நுட்பமாக வேண்டுமென்றே வரிசைப்படுத்தி அளித்தாலும் அது பொய்யான சாட்சியம் என்பதைக் காட்டிவிடும்.
ஆனால், இந்த விஷயத்தில் பைபிள் எழுத்தாளர்கள் அளிக்கும் “சாட்சியம்” எவ்வளவு நம்பகமானது? பைபிள் எழுத்தாளர்கள் வியப்பூட்டும் விதத்தில் ஒத்திசைவை காட்டினார்கள். சின்னஞ்சிறிய விவரமாக இருந்தாலும்கூட அப்படியொரு ஒத்திசைவு இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு விவரத்தையும் மிக கவனமாக வேண்டுமென்றே வரிசைப்படுத்தி அமைத்ததால் வரவில்லை இந்த ஒத்திசைவு. அப்படியிருந்தால், அது தந்திரமாக செய்யப்பட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை தந்திருக்கும். எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கே தெரியாமல் மற்ற எழுத்தாளர் எழுதிய விவரங்களோடு அடிக்கடி ஒத்திசைந்து போனார்கள். அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவாக இருக்கிறது. சில உதாரணங்களைப் பாருங்கள்.
பைபிள் எழுத்தாளர் மத்தேயு எழுதினார்: ‘இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார்.’ (மத்தேயு 8:14, பொ.மொ.) பேதுருவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற ஒரு சுவாரஸ்யமான விவரத்தை இங்கு மத்தேயு சொன்னார். ஆனால் அது அவ்வளவு முக்கியமான ஒரு விவரம் அல்ல. இந்தச் சின்னஞ்சிறிய விவரம் பவுலால் ஆதரிக்கப்பட்டது. அவர் எழுதினார்: “மற்ற அப்போஸ்தலரும், . . . கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?”b (1 கொரிந்தியர் 9:5) ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக தன்னை காத்துக்கொள்வதற்காக இங்கு பவுல் விவாதித்துக்கொண்டிருக்கிறார் என்பதை சூழமைவு காட்டுகிறது. (1 கொரிந்தியர் 9:1-4) மத்தேயுவின் விவரப்பதிவு துல்லியமானது என்பதை ஆதரிப்பதற்காக, பேதுரு கல்யாணம் ஆனவர் என்ற இந்தச் சிறிய விவரத்தை பவுல் சொல்லவில்லை, ஆனால் எதிர்பாராமலே சொன்னார் என்பது தெள்ளத்தெளிவாக இருக்கிறது.
இயேசு கைதான இரவில், அவருடைய சீஷர் ஒருவர் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் ஒரு காதை ஒரே வெட்டில் துண்டித்துப்போட்டார் என்ற விவரத்தை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷக எழுத்தாளர்களும் பதிவு செய்துள்ளனர். சுவிசேஷக எழுத்தாளர் யோவான் மாத்திரம், “அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்” என சொல்வதன் மூலம் அவசியமில்லாததாக தோன்றும் ஒரு விவரத்தை தருகிறார். (யோவான் 18:10, 26) ஏன் யோவான் மாத்திரம் அந்த ஆளின் பெயரைச் சொல்கிறார்? வேறு எங்குமே சொல்லப்படாத ஒரு சிறிய உண்மையை ஒருசில வசனங்களுக்குக் கீழே அந்தப் பதிவு அளிக்கிறது: யோவான் ‘பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்தான்.’ பிரதான ஆசாரியனுடைய குடும்ப அங்கத்தினர்களை அவருக்கு நன்கு தெரியும். வேலைக்காரர்களுக்கும் அவரை நன்றாகத் தெரியும். அவர்களோடு அவர் பழகி இருக்கிறார். (யோவான் 18:15, 16) எனவே, காயப்பட்ட ஆளின் பெயரை யோவான் மாத்திரம் எழுதினார் என்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் மற்ற சுவிசேஷக எழுத்தாளர்களைப் பொருத்தமட்டில், அந்த ஆள் ஒரு அன்னியனே; அதனால் அவர்கள் அவனுடைய பெயரை குறிப்பிடவில்லை.
சில சமயங்களில், விவரங்கள் விலாவாரியாக விவரிக்கப்படாமல் ஒரு பதிவில் விட்டுப்போயிருக்கும். ஆனால், மற்றொரு இடத்தில் எதிர்பாராமல் சொல்லப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, இயேசுவை யூத நியாயசங்கத்தில் விசாரணை செய்கையில், அங்கிருந்த சிலர் ‘அவரைக் கன்னத்தில் அறைந்து: கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.’ மத்தேயு எழுதிய விவரப்பதிவு இதைச் சொல்கிறது. (மத்தேயு 26: 67, 68) இயேசுவை அறைந்தவன், அங்கேயே அவருக்குமுன் நின்றுகொண்டிருக்கையில், அடித்தவன் யார் என்று “ஞானதிருஷ்டியினால்” சொல்லும்படி அவர்கள் ஏன் இயேசுவிடம் கேட்டார்கள்? இதற்கான விளக்கத்தை மத்தேயு தரவில்லை. ஆனால், விட்டுப்போன இந்த விவரத்தை மற்ற இரண்டு சுவிசேஷக எழுத்தாளர்கள் தருகிறார்கள். அதாவது இயேசுவை துன்புறுத்தியவர்கள் அவரை அறைவதற்குமுன் அவருடைய முகத்தை மூடிவிட்டார்கள். (மாற்கு 14:65; லூக்கா 22:64) கடைசி துளி விவரம் வரையாக அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அற்றவராக மத்தேயு தன்னுடைய விவரப்பதிவை அளிக்கிறார்.
ஒருமுறை இயேசுவின் போதனையைக் கேட்க பெரும் கூட்டம் திரண்டிருந்தது என்ற சம்பவத்தைப் பற்றி யோவானின் சுவிசேஷம் சொல்கிறது. அந்தப் பதிவின்படி, மக்கள் கூட்டத்தை இயேசு கண்டபோது, ‘அவர் பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.’ (யோவான் 6:5) மற்ற எல்லா சீஷர்களும் இருக்க, இயேசு ஏன் பிலிப்புவிடம் மாத்திரம் அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்கவேண்டும்? ஏன் என்று இந்த எழுத்தாளர் சொல்லவில்லை. ஆனால், இதே பதிவை லூக்கா அறிவிக்கும்போது, இந்தச் சம்பவம் கலிலேயா கடலின் வடக்குக் கரையில் அமைந்திருந்த பெத்சாயிதா என்ற பட்டணத்திற்கு அருகில் நடந்ததாக சொல்கிறார். இதற்கு முன்பு, “பிலிப்பென்பவன் . . . பெத்சாயிதா பட்டணத்தான்” என்பதை யோவானின் சுவிசேஷம் சொல்கிறது. (யோவான் 1:44; லூக்கா 9:10) நியாயமாகவே அந்த ஊரின் பக்கத்திலிருந்து வரும் ஒருவரிடத்தில் இயேசு கேட்டிருக்கிறார். விவரப்பதிவுகளுக்கு இடையே அமைந்திருக்கும் ஒத்திசைவு அபாரமாக உள்ளது. இருப்பினும், அவை எதிர்பாராமலேயே அமைந்தன என்பது தெளிவாக உள்ளது.
சில சமயங்களில், சில விவரங்கள் விடுபட்டுப்போனால், அது பைபிள் எழுத்தாளரின் நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு, 1 இராஜாக்களின் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர், இஸ்ரவேலில் கடுமையான வறட்சி இருந்தது என்று சொல்கிறார். அது அவ்வளவு கடுமையாக இருந்ததால், ராஜாவுக்கு தன்னுடைய குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் உயிரோடு காப்பாற்ற போதுமான தண்ணீரும் புல்லும் கிடைக்கவில்லை. (1 இராஜாக்கள் 17:7; 18:5) ஆனால், கர்மேல் பர்வதத்தில் (பலியில் உபயோகிப்பதற்காக) சுமார் 1,000 சதுர மீட்டர் நீளத்திற்கு சுற்றிப்போகும் வாய்க்கால் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் கொண்டுவந்து ஊற்றும்படி எலியா தீர்க்கதரிசி கட்டளையிட்டார் என்று அதே பதிவு சொல்கிறது. (1 இராஜாக்கள் 18:33-35) வறட்சி இருந்த சமயத்தில் அவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்திருக்கும்? 1 இராஜாக்களின் பதிவை எழுதிய எழுத்தாளர் அதற்கான காரணத்தை விவரிக்க சிரமம் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், மத்தியதரைக் கடல் கரையில் கர்மேல் அமைந்திருந்தது என்பது இஸ்ரவேலில் இருந்த எவருக்கும் தெரியும். பிறகு, அதே பதிவில் இதைப்பற்றி எதிர்பாராமலே குறிப்பிடப்பட்டுள்ளது. (1 இராஜாக்கள் 18:43) இவ்வாறாக, கடல் நீர் உடனடியாக கிடைத்திருக்கலாம். மற்ற விஷயங்களை விவரமாக விளக்கும் இப்புத்தகம், ஒரு கட்டுக்கதையை உண்மை என்று காட்ட நினைத்திருந்தால், இதனை எழுதிய எழுத்தாளரால் நன்றாகவே கதைகட்டியிருக்க முடியுமே. அப்படி இருந்தும் ஒத்திசைவு இல்லாதது போல் தோன்றும் இந்த விவரத்தை தெரிந்தே ஏன் விட்டுவிட்டார்?
ஆகவே, பைபிளை நம்பலாமா? உண்மையில் வாழ்ந்த ஆட்களைப் பற்றியும், இருந்த இடங்களைப் பற்றியும், நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் பைபிள் குறிப்பிடுகிறது என்பதை ஊர்ஜிதம் செய்ய போதுமான கலைப்பொருட்களை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். ஆனாலும், பைபிளிலேயே காணப்படும் நிரூபணம்தான் அதிக வலிமையாக இருக்கிறது. உண்மையில் நடந்த விஷயங்களை, உள்ளதை உள்ளபடி எழுத விரும்பிய எழுத்தாளர்கள் எவரையும் விட்டுவிடமாட்டார்கள். அவர்களைப் பற்றி எழுத வேண்டியிருந்தாலும்கூட பரவாயில்லை, எழுதத் தயங்கமாட்டார்கள். எழுதப்பட்ட விஷயங்கள் ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து செல்வதும், அதுவும் திட்டமிட்டு ஏதும் எழுதப்படாமல், எதிர்பாராமலே ஒத்திசைந்து போவதும் பைபிள் சத்தியம் என்பதற்கு மறுக்கமுடியாத “சாட்சியம்” அளிக்கின்றன. ‘நம்பகத்தன்மைக்கு உறுதியளிக்கும் இத்தகைய அடையாளங்களோடு’ திகழும் பைபிளை நீங்கள் தயங்காமல் நம்பலாம்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு, 1868-ல் கண்டெடுக்கப்பட்ட மீஷா கல்வெட்டின் (மோவாபிய கல் என்றும் அழைக்கப்படுகிறது) உருத்தெரியாமல் இருந்த வாக்கியத்தை புதுப்பித்து, ஒட்டவைத்து பார்க்கையில், அதிலும் ‘தாவீதின் வீட்டார்’ என்ற குறிப்பு அடங்கியுள்ளது என பேராசிரியர் ஆன்ட்ரி லாலெர் அறிக்கையிட்டார்.4
b செமிட்டிக் மொழியில் “கேபா” என்பதன் இணையான அர்த்தம் “பேதுரு” என்பதாகும்.—யோவான் 1:42.
[பக்கம் 15-ன் படம்]
அந்த டெல் தாண் துண்டு
[பக்கம் 16-ன் படம்]
லாகீஷ் கைப்பற்றப்பட்டதை சித்தரிக்கும் செதுக்கப்பட்ட அசீரியச் சுவர், 2 இராஜாக்கள் 18:13, 14-ல் சொல்லப்பட்டுள்ளது