அதிகாரம் 127
பிலாத்துவிடம் கொண்டுபோகப்படுகிறார்
மத்தேயு 27:1-11 மாற்கு 15:1 லூக்கா 22:66–23:3 யோவான் 18:28-35
காலையில் நியாயசங்கத்தின் முன்னால் விசாரணை
யூதாஸ் இஸ்காரியோத்து தூக்குப்போட முயற்சி செய்கிறான்
மரண தண்டனை கொடுக்கும்படி பிலாத்துவிடம் அனுப்பப்படுகிறார்
இயேசுவைத் தெரியாது என்று பேதுரு மூன்றாவது தடவை சொன்னபோது, கிட்டத்தட்ட விடியும் நேரம் ஆகிவிட்டது. நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் இயேசுவைப் பெயருக்கு விசாரித்துவிட்டு, அங்கிருந்து போய்விடுகிறார்கள். வெள்ளிக்கிழமை அதிகாலையில், அவர்கள் மறுபடியும் ஒன்றுகூடுகிறார்கள். தாங்கள் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்வதற்காகவும், ராத்திரியில் நடத்திய சட்டவிரோதமான விசாரணையை மூடிமறைப்பதற்காகவும் இப்படிச் செய்திருக்கலாம். இப்போது, அவர்கள் முன்னால் இயேசு நிறுத்தப்படுகிறார்.
நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும், “நீ கிறிஸ்துவா? எங்களுக்குச் சொல்” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு, “நான் அதை உங்களுக்குச் சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை. உங்களிடம் நான் கேள்வி கேட்டாலும் நீங்கள் பதில் சொல்லப்போவதில்லை” என்று சொல்கிறார். இருந்தாலும், தானியேல் 7:13 தன்னைப் பற்றித்தான் சொல்கிறது என்பதை அவர்களிடம் சுட்டிக்காட்டுகிறார். “இப்போதுமுதல் மனிதகுமாரன் வல்லமையுள்ள கடவுளின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பார்” என்று தைரியமாகச் சொல்கிறார்.—லூக்கா 22:67-69; மத்தேயு 26:63.
அதற்குப் பிறகும், “அப்படியானால், நீ கடவுளுடைய மகனா?” என்று அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு இயேசு, “நான் அவர்தான் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்” என்கிறார். இயேசு தெய்வ நிந்தனை செய்தார் என்று சொல்லி கொலை செய்வதற்கு இந்த வார்த்தைகளே போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், “இனி நமக்கு வேறு சாட்சி எதற்கு?” என்று சொல்கிறார்கள். (லூக்கா 22:70, 71; மாற்கு 14:64) பிறகு, அவர்கள் இயேசுவைக் கட்டி, ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவிடம் கூட்டிக்கொண்டு போகிறார்கள்.
பிலாத்துவிடம் இயேசு கொண்டுபோகப்படுவதை ஒருவேளை யூதாஸ் இஸ்காரியோத்து பார்த்திருக்கலாம். இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட விஷயம் தெரிந்ததும், தான் செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறான், வேதனைப்படுகிறான். ஆனாலும், உண்மையாக மனம் திருந்தி, கடவுளிடம் மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, 30 வெள்ளிக் காசுகளைத் திருப்பிக் கொடுப்பதற்காகப் போகிறான். அவன் முதன்மை குருமார்களிடம், “எந்தத் தப்பும் செய்யாத ஒருவரை காட்டிக்கொடுத்துப் பாவம் செய்துவிட்டேன்” என்று சொல்கிறான். அதற்கு அவர்கள், “எங்களுக்கென்ன? அது உன் பாடு!” என்று ஈவிரக்கமில்லாமல் பதில் சொல்கிறார்கள்.—மத்தேயு 27:4.
யூதாஸ் அந்த 30 வெள்ளிக் காசுகளையும் ஆலயத்தில் வீசியெறிகிறான். ஏற்கெனவே செய்த பாவம் போதாதென்று, இப்போது தூக்குப் போட்டுக்கொண்டு சாகவும் முயற்சி செய்கிறான். அநேகமாக, அவன் தூக்குக் கயிற்றைக் கட்டியிருந்த மரத்தின் கிளை முறிந்துபோயிருக்கலாம். அதனால், கீழே இருக்கிற பாறைகளில் விழுந்து, உடல் சிதறி செத்துப்போகிறான்.—அப்போஸ்தலர் 1:17, 18.
விடியற்காலையில், பொந்தியு பிலாத்துவின் மாளிகைக்கு இயேசு கொண்டுபோகப்படுகிறார். அவரைக் கொண்டுபோன யூதர்கள் அந்த மாளிகைக்குள் நுழையவில்லை. வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களின் மாளிகைக்குப் போய்த் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அப்படித் தீட்டுப்பட்டால், புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின் முதல் நாளான நிசான் 15-ல் அவர்களால் சாப்பிட முடியாது. இந்தப் பண்டிகை, பஸ்கா பண்டிகையின் பாகமாகக் கருதப்பட்டது.
பிலாத்து வெளியே வந்து, “இந்த மனுஷன்மேல் நீங்கள் என்ன குற்றம் சுமத்துகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கிறார். அதற்கு அவர்கள், “இவன் ஒரு குற்றவாளி இல்லையென்றால், இவனை உங்களிடம் ஒப்படைத்திருக்கவே மாட்டோம்” என்று சொல்கிறார்கள். அவர்கள் தனக்கு நெருக்கடி கொடுப்பதாக பிலாத்து நினைத்திருக்கலாம். அதனால், “இவனை நீங்களே கொண்டுபோய் உங்கள் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள்” என்கிறார். அதற்கு யூதர்கள், “யாருக்கும் மரண தண்டனை விதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்று சொல்கிறார்கள். இயேசுவைச் சாகடிப்பதற்காகத்தான் பிலாத்துவிடம் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை இந்த வார்த்தைகள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.—யோவான் 18:29-31.
பஸ்கா பண்டிகை சமயத்தில், அவர்கள் இயேசுவைக் கொலை செய்தால் மக்கள் மத்தியில் கலவரம் வெடிக்கலாம். ரோம அரசாங்கத்துக்கு எதிராகக் குற்றம் செய்கிற ஆட்களுக்கு மரண தண்டனை கொடுக்க ரோமர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால், இயேசு ரோம அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லி, அவருக்கு மரண தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று யூதர்கள் நினைக்கிறார்கள். அப்படிச் செய்தால், தங்கள்மீது எந்தப் பழியும் வராது என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள்.
இயேசு தெய்வ நிந்தனை செய்தார் என்று இந்த மதத் தலைவர்கள் பிலாத்துவிடம் சொல்லவில்லை. அதற்குப்பதிலாக, ‘இந்த மனுஷன் [1] எங்களுடைய மக்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான், [2] ரோம அரசனுக்கு வரி கட்டக் கூடாது என்றும், [3] தான்தான் கிறிஸ்துவாகிய ராஜா என்றும் சொல்லிக்கொள்கிறான்’ என்று புதிய குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.—லூக்கா 23:2.
பிலாத்து ரோம அரசாங்கத்தின் பிரதிநிதி. அதனால், இயேசு தன்னை ஒரு ராஜா என்று சொல்லிக்கொள்வதாக யூதர்கள் சொன்னதும் அதைப் பற்றி விசாரிக்க நினைக்கிறார். அவர் தன்னுடைய மாளிகைக்குள் போய் இயேசுவைக் கூப்பிட்டு, “நீ யூதர்களுடைய ராஜாவா?” என்று கேட்கிறார். அதாவது, ‘ரோம அரசனுக்குப் போட்டியாக உன்னை ஒரு ராஜா என்று சொல்லிக்கொண்டு இந்தப் பேரரசின் சட்டத்தை மீறினாயா?’ என்று கேட்கிறார். பிலாத்து தன்னைப் பற்றி எந்தளவு கேள்விப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென இயேசு நினைத்திருக்கலாம். அதனால், “நீங்களே இதைக் கேட்கிறீர்களா, அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொன்னதை வைத்துக் கேட்கிறீர்களா?” என்று இயேசு கேட்கிறார்.—யோவான் 18:33, 34.
இயேசுவைப் பற்றி எந்த உண்மையும் பிலாத்துவுக்குத் தெரியாது. ஆனால், உண்மையைத் தெரிந்துகொள்ள பிலாத்து ஆசைப்படுகிறார். அதனால், “நான் ஒரு யூதனா என்ன?” என்று கேட்கிறார். பிறகு, “உன்னுடைய தேசத்தாரும் முதன்மை குருமார்களும்தான் உன்னை என்னிடம் ஒப்படைத்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்கிறார்.—யோவான் 18:35.
அப்போது, அரசாங்கத்தைப் பற்றி மழுப்பாமல் இயேசு தெளிவாகப் பதில் சொல்கிறார். அவர் பதில் சொல்கிற விதத்தைப் பார்த்து ஆளுநரான பிலாத்து ரொம்ப ஆச்சரியப்படுகிறார்.