“சத்தியமாவது என்ன”?
இ ந்தக் கேள்வியை இயேசுவிடம் ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்து ஏளனமாய் கேட்டார். பதிலைத் தெரிந்துகொள்ள அவருக்கு ஆசையில்லை, இயேசுவும் அவருக்குப் பதிலைச் சொல்லவில்லை. சத்தியம் என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாதென பிலாத்து ஒருவேளை நினைத்திருக்கலாம்.—யோவான் 18:38.
சத்தியத்திடம் இத்தகைய ஏளன மனப்பான்மையை இன்று அநேகர் வெளிக்காட்டுகிறார்கள்; இவர்களில் மதத் தலைவர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரும் அடங்குவர். தார்மீக சத்தியமும் ஆன்மீக சத்தியமும் திட்டவட்டமானவை அல்ல, நபருக்கு நபர் வேறுபடுபவை, சதா மாறுபவை என்று இவர்கள் நம்புகிறார்கள். சொல்லப்போனால், ஜனங்கள் எது சரி, எது தவறு என்பதைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று இது சொல்லாமல் சொல்கிறது. (ஏசாயா 5:20, 21) முந்தைய தலைமுறையினர் கட்டிக்காத்து வந்த உயர்ந்த நெறிமுறைகளும் ஒழுக்கநெறிகளும் இந்தக் காலத்துக்கு ஒத்துவராதென ஜனங்கள் நிராகரிக்கலாம் என்றும் இது மறைமுகமாய்ச் சொல்கிறது.
பிலாத்து அப்படிக் கேள்வி கேட்டதற்குக் காரணமான வார்த்தைகள் கவனத்தில் வைக்க வேண்டியவை. “சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என்று இயேசு சொல்லியிருந்தார். (யோவான் 18:37) இயேசுவைப் பொறுத்தவரை சத்தியம் என்பது தெளிவற்ற, புரிந்துகொள்ள முடியாத கருத்து அல்ல. தம்முடைய சீஷர்களுக்கு அவர் பின்வருமாறு வாக்குறுதி அளித்தார்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:32.
அத்தகைய சத்தியத்தை எங்கே கண்டுபிடிக்கலாம்? இயேசு ஒருசமயம் ஜெபம் செய்கையில் கடவுளிடம், “உம்முடைய வசனமே சத்தியம்” என்று சொன்னார். (யோவான் 17:17) கடவுளுடைய ஆவியின் உதவியோடு எழுதப்பட்ட பைபிள் அந்தச் சத்தியத்தை வெளிப்படுத்துகிறது; அது எதிர்காலத்திற்கான, அதாவது நித்திய வாழ்வுக்கான, நம்பகமான வழிகாட்டுதலையும் உறுதியான நம்பிக்கையையும் அளிக்கிறது.—2 தீமோத்தேயு 3:15-17.
அத்தகைய சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பை பிலாத்து ஆர்வமில்லாமல் நிராகரித்தார். அப்படியொரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்ன ‘சத்தியத்தை’ இயேசு கற்பித்தாரென யெகோவாவின் சாட்சிகளிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம், அல்லவா? அந்தச் சத்தியத்தை அவர்கள் சந்தோஷமாய் உங்களுக்குச் சொல்லித் தருவார்களே.