அதிகாரம் 130
இயேசு கொல்லப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிறார்
மத்தேயு 27:31, 32 மாற்கு 15:20, 21 லூக்கா 23:24-31 யோவான் 19:6-17
இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து முயற்சி செய்கிறார்
இயேசு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படுகிறார்
இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்றுபோகின்றன. இயேசுவைக் காட்டுமிராண்டித்தனமாக அடித்து, கேலி செய்து, மக்கள் முன்னால் நிறுத்தியபோதும்கூட, முதன்மை குருமார்களும் அவர்களுடைய ஆட்களும் மனம் மாறவில்லை. இயேசுவை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதனால், “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்! மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று விடாமல் கத்துகிறார்கள். அப்போது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள், இவனிடம் எந்தக் குற்றத்தையும் நான் பார்க்கவில்லை” என்கிறார்.—யோவான் 19:6.
இயேசு ரோம அரசாங்கத்துக்கு எதிரானவர் என்று பிலாத்துவை நம்ப வைத்து, அவருக்கு மரண தண்டனை வாங்கிக்கொடுக்க யூதர்களால் முடியவில்லை. அதனால், மத சம்பந்தமான ஒரு குற்றச்சாட்டை இப்போது சொல்கிறார்கள். நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் இயேசுவை விசாரணை செய்தபோது, அவர் தெய்வ நிந்தனை செய்தார் என்று குற்றம்சாட்டியிருந்தார்கள். இப்போது அதே குற்றச்சாட்டை பிலாத்துவிடம் சொல்கிறார்கள். “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது, அந்தச் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனென்றால், இவன் தன்னைக் கடவுளுடைய மகன் என்று சொல்லிக்கொண்டான்” என்கிறார்கள். (யோவான் 19:7) இந்தக் குற்றச்சாட்டு பிலாத்துவுக்குப் புதிதாக இருக்கிறது!
பயங்கர சித்திரவதையை இயேசு அமைதியாகத் தாங்கிக்கொண்டதை பிலாத்து பார்த்திருந்தார். இயேசுவைப் பற்றி பிலாத்துவின் மனைவியும் கனவு கண்டிருந்தாள். அதனால், இயேசுவை விடுதலை செய்ய ஏதாவது வழி கிடைக்குமா என்று பார்க்க பிலாத்து தன்னுடைய மாளிகைக்குள் போகிறார். (மத்தேயு 27:19) இந்தக் கைதி “கடவுளுடைய மகன்” என்று யூதர்கள் குற்றம்சாட்டியதைக் கேட்டு பிலாத்து குழம்புகிறார். இயேசு கலிலேயாவைச் சேர்ந்தவர் என்று பிலாத்துவுக்குத் தெரியும். (லூக்கா 23:5-7) ஆனாலும், “நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?” என்று கேட்கிறார். (யோவான் 19:9) இயேசு இதற்கு முன்னால் பரலோகத்தில் வாழ்ந்திருப்பாரோ, அவர் கடவுளாக இருப்பாரோ என்றெல்லாம் பிலாத்து யோசித்திருக்கலாம்.
தான் ஒரு ராஜா என்றும், தன்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகம் அல்ல என்றும் பிலாத்துவிடம் இயேசு நேரடியாகவே சொல்லியிருந்தார். அதைப் பற்றி இன்னும் விளக்கமாகப் பேச இயேசு விரும்பாததால், பிலாத்துவுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இயேசு தன்னை அவமதிப்பதாக பிலாத்து நினைத்துக்கொள்கிறார். அதனால், “என்னிடம் பேச மாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, உன்னைக் கொல்லவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா?” என்று இயேசுவிடம் கோபமாகக் கேட்கிறார்.—யோவான் 19:10.
அப்போது இயேசு, “மேலே இருந்து உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றால் எனக்கு எதிராக எதையும் செய்ய உங்களுக்கு அதிகாரம் இருக்காது. இதனால்தான் என்னை உங்களிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவம் இருக்கிறது” என்று சொல்கிறார். (யோவான் 19:11) அநேகமாக, யாரோ ஒரு ஆளைப் பற்றி இயேசு இங்கே சொல்லியிருக்க மாட்டார். பிலாத்துவைவிட காய்பா, அவருடைய கூட்டாளிகள், யூதாஸ் இஸ்காரியோத்து ஆகியோருக்கு இந்தப் பாவத்தில் பெரும் பங்கு இருக்கிறது என்றுதான் சொல்லியிருப்பார்.
இயேசு நடந்துகொள்கிற விதமும் அவருடைய வார்த்தைகளும் பிலாத்துவை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இயேசு ஒரு கடவுளாக இருப்பாரோ என்ற பயம் அவருக்கு இன்னும் அதிகமாகிறது. அதனால், இயேசுவை விடுதலை செய்ய அவர் மறுபடியும் முயற்சி செய்கிறார். யூதர்களோ, “இவனை விடுதலை செய்தால் ரோம அரசனுக்கு நீங்கள் நண்பர் கிடையாது. தன்னை ராஜா என்று சொல்லிக்கொள்கிற எவனும் ரோம அரசனுக்கு விரோதி” என்று அவரை மிரட்டுகிறார்கள்.—யோவான் 19:12.
இயேசுவை ஆளுநர் மறுபடியும் வெளியே கொண்டுவருகிறார். நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்து, “இதோ! உங்கள் ராஜா!” என்று மக்களிடம் சொல்கிறார். ஆனாலும், யூதர்கள் மசியவில்லை. “இவனை ஒழித்துக்கட்டுங்கள்! ஒழித்துக்கட்டுங்கள்! மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று கோஷம் போடுகிறார்கள். பிலாத்து அவர்களிடம், “உங்கள் ராஜாவையா கொல்லச் சொல்கிறீர்கள்?” என்று ஆதங்கத்தோடு கேட்கிறார். யூதர்கள் பல காலமாக ரோம ஆட்சியின்கீழ் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாலும், “ரோம அரசனைத் தவிர வேறெந்த ராஜாவும் எங்களுக்கு இல்லை” என்று முதன்மை குருமார்கள் கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் சொல்கிறார்கள்.—யோவான் 19:14, 15.
யூதர்கள் விடாப்பிடியாக இருப்பதால், பிலாத்து கோழைத்தனமாக, இயேசுவைக் கொல்வதற்கு ஒத்துக்கொள்கிறார். இயேசு போட்டிருக்கிற கருஞ்சிவப்பு நிற சால்வையை எடுத்துவிட்டு, அவருடைய மேலங்கியை அவருக்குப் போட்டுவிடுகிறார்கள். அவருடைய மரக் கம்பத்தை அவரையே சுமக்க வைக்கிறார்கள்.
இப்போது நிசான் 14, வெள்ளிக்கிழமை மத்தியான நேரம். வியாழக்கிழமை விடியற்காலையிலிருந்து இப்போதுவரை இயேசு தூங்கவே இல்லை. பயங்கரமான சித்திரவதைகளை அடுத்தடுத்து அனுபவித்திருக்கிறார். அதனால், கனமான மரக் கம்பத்தைத் தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் திணறுகிறார். கடைசியில், அதைத் தூக்க அவருக்குக் கொஞ்சம்கூட சக்தியில்லாமல் போய்விடுகிறது. அதனால், படைவீரர்கள் சீமோன் என்பவரைக் கட்டாயப்படுத்தி இயேசுவின் மரக் கம்பத்தைச் சுமக்க வைக்கிறார்கள். அவர் ஆப்பிரிக்காவில் இருக்கிற சிரேனே ஊரைச் சேர்ந்தவர். இயேசுவுக்குப் பின்னால் நிறைய பேர் போகிறார்கள். அவர்களில் சிலர் துக்கத்தில் தங்களை அடித்துக்கொண்டு, அழுது புலம்பிக்கொண்டே போகிறார்கள்.
தன் பின்னால் அழுதுகொண்டு வருகிற பெண்களை இயேசு பார்த்து, “எருசலேம் மகள்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். ஏனென்றால், ‘கருத்தரிக்க முடியாத பெண்களும் பிள்ளை பெறாத பெண்களும் பாலூட்டாத பெண்களும் சந்தோஷமானவர்கள்!’ என்று சொல்லப்படும் நாட்கள் வரும். அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்!’ என்றும், குன்றுகளைப் பார்த்து, ‘எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!’ என்றும் சொல்வார்கள். மரம் பச்சையாக இருக்கும்போதே இப்படிச் செய்கிறார்கள் என்றால், மரம் பட்டுப்போன பின்பு என்ன நடக்கும்?” என்று சொல்கிறார்.—லூக்கா 23:28-31.
யூத தேசத்தைப் பற்றித்தான் அவர் இங்கே சொல்கிறார். இயேசுவும் அவர்மேல் விசுவாசம் வைத்திருக்கிற யூதர்கள் பலரும் அந்தத் தேசத்தில் இருப்பதால், இப்போது அந்தத் தேசம் ஓரளவு பச்சையாக இருக்கிற மரத்தைப் போல இருக்கிறது. இயேசு இறந்து, இந்தச் சீஷர்கள் ஒரு புதிய ஆன்மீக தேசத்தின் பாகமாக ஆகும்போது, இந்த யூத தேசம் ஆன்மீக ரீதியில் காய்ந்துபோய், பட்டுப்போன மரத்தைப் போல ஆகிவிடும். இந்தத் தேசத்துக்கு எதிராகக் கடவுள் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை ரோமப் படைவீரர்கள் நிறைவேற்றும்போது, மக்கள் கதறி அழுவார்கள்.