இயேசு சிலுவையில் இறந்தாரா?
பைபிள் தரும் பதில்
நிறைய பேர், சிலுவையை கிறிஸ்தவ மதத்தின் மிகப் பிரபலமான சின்னமாகக் கருதுகிறார்கள். ஆனால், இயேசுவைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவியைப் பற்றி பைபிள் எந்த விவரிப்பையும் தருவதில்லை. அதனால், அது எந்த வடிவத்தில் இருந்ததென்று யாருக்குமே துல்லியமாகத் தெரியாது. என்றாலும், இயேசு சிலுவையில் அல்ல, செங்குத்தான ஒரு மரக்கம்பத்தில்தான் இறந்தார் என்பதற்கு பைபிள் அத்தாட்சிகளை அளிக்கிறது.
இயேசுவைக் கொல்வதற்கு உபயோகிக்கப்பட்ட கருவியைப் பற்றி குறிப்பிடும்போது, ஸ்டவ்ரஸ் என்ற கிரேக்க வார்த்தையை பொதுவாக பைபிள் பயன்படுத்துகிறது. (மத்தேயு 27:40; யோவான் 19:17) பல மொழிபெயர்ப்புகள் இந்த வார்த்தையை “சிலுவை” என்று பலமுறை மொழிபெயர்த்திருந்தாலும், “செங்குத்தான மரக்கம்பம்” என்பதுதான் இதன் அடிப்படை அர்த்தம் என்று ஏராளமான அறிஞர்கள் சொல்கிறார்கள்.a ஸ்டவ்ரஸ் என்பது “இரண்டு மரக்கட்டைகள் எந்தவொரு கோணத்திலும் குறுக்காக வைக்கப்பட்டிருப்பதை நிச்சயமாகவே அர்த்தப்படுத்தாது” என எ க்ரிட்டிக்கல் லெக்ஸிகன் அண்ட் கன்கார்டன்ஸ் டு த இங்கிலிஷ் அண்ட் கிரீக் நியு டெஸ்டமென்ட் சொல்கிறது.
ஸ்டவ்ரஸ் என்ற வார்த்தைக்கு இணையாக சைலோன் என்ற கிரேக்க வார்த்தையையும் பைபிள் பயன்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 5:30; 1 பேதுரு 2:24) இந்த வார்த்தை “மரக்கட்டை,” “கம்பம்,” அல்லது “மரம்” என்ற அர்த்தங்களைத் தருகிறது.b அதனால்தான், த கம்பேனியன் பைபிள் இப்படிச் சொல்கிறது: “இரண்டு மரக்கட்டைகள் இருந்ததாக மூல கிரேக்க வேதாகமத்தில் [புதிய ஏற்பாட்டில்] மறைமுகமாகக்கூட எதுவும் பதிவு செய்யப்படவில்லை.”
சிலுவை வணக்கத்தைக் கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா?
இயேசு எந்த விதமான கருவியில் இறந்திருந்தாலும் சரி, நம்முடைய வணக்கத்தில் நாம் சிலுவையைப் பயன்படுத்தக் கூடாது என்பதைப் பின்வரும் உண்மைகளும் பைபிள் வசனங்களும் சுட்டிக்காட்டுகின்றன:
உருவப்படங்களையோ சிலுவை போன்ற அடையாளச் சின்னங்களையோ வணங்குவதைக் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை. ‘எந்தவொரு வடிவத்திலும் சிலைகளை’ செய்து வணங்கக் கூடாதென்று இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கட்டளை கொடுத்தார். அதேபோல், “சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கும் கட்டளை கொடுத்திருக்கிறார்.—உபாகமம் 4:15-19; 1 கொரிந்தியர் 10:14.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்களுடைய வணக்கத்தில் சிலுவையைப் பயன்படுத்தவில்லை.c அப்போஸ்தலர்களுடைய போதனைகளும் முன்னுதாரணமும் எல்லா கிறிஸ்தவர்களுமே பின்பற்ற வேண்டிய சிறந்த மாதிரியாக இருக்கிறது.—2 தெசலோனிக்கேயர் 2:15.
வணக்கத்தில் சிலுவையைப் பயன்படுத்துவது புறமதப் பழக்கத்திலிருந்து வந்திருக்கிறது.d இயேசு இறந்து நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு, சர்ச்சுகள் அவருடைய போதனையிலிருந்து வழிவிலகிப்போயின. அந்தச் சமயத்தில், சர்ச்சில் புதிய அங்கத்தினர்களாக ஆனவர்கள் சிலுவை போன்ற “தங்களுடைய புறமதச் சின்னங்களையும் அடையாளங்களையும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.” (த எக்ஸ்பேண்டட் வைன்ஸ் எக்ஸ்பொசிட்டரி டிக்ஷனரி ஆஃப் நியு டெஸ்டமென்ட் வெர்ட்ஸ்) ஆனால், ஆட்களைக் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவதற்குப் புறமத அடையாளச் சின்னங்களைப் பயன்படுத்துவதை பைபிள் ஆதரிப்பதில்லை.—2 கொரிந்தியர் 6:17.
a பாருங்கள்: டி. ஆர். டபிள்யு. வுட் பதிப்பாசிரியரின் நியு பைபிள் டிக்ஷனரி, மூன்றாம் பதிப்பில் பக்கம் 245; தியலோஜிக்கல் டிக்ஷனரி ஆஃப் த நியு டெஸ்டமென்ட், தொகுப்பு VII-ல், பக்கம் 572; த இன்டர்நேஷனல் ஸ்டான்டர்டு பைபிள் என்ஸைக்ளோப்பீடியா, திருத்திய பதிப்பு, தொகுப்பு 1, பக்கம் 825; த இம்ப்பீரியல் பைபிள்-டிக்ஷனரி, தொகுப்பு II, பக்கம் 84.
b பாருங்கள்: த எக்ஸ்பேண்டட் வைன்ஸ் எக்ஸ்பொசிட்டரி டிக்ஷனரி ஆஃப் த நியு டெஸ்டமென்ட் வெர்ட்ஸ், பக்கம் 1165; லிடல் அண்ட் ஸ்காட்டின் எ கிரீக்-இங்கிலிஷ் லெக்சிகன், ஒன்பதாம் பதிப்பு, பக்கங்கள் 1191-1192; தியலோஜிக்கல் டிக்ஷனரி ஆஃப் த நியு டெஸ்டமென்ட், தொகுப்பு V, பக்கம் 37.
c பாருங்கள்: என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, 2003, “சிலுவை” என்ற தலைப்பில்; த க்ராஸ்—இட்ஸ் ஹிஸ்டரி அண்ட் ஸிம்பாலிஸம், பக்கம் 40; த கம்பேனியன் பைபிள், ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி ப்ரெஸ், பிற்சேர்க்கை 162, பக்கம் 186.
d பாருங்கள்: த என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன், தொகுப்பு 4, பக்கம் 165; த என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா, தொகுப்பு 8, பக்கம் 246; சிம்பல்ஸ் அரௌண்ட் அஸ், பக்கங்கள் 205-207.