அதிகாரம் 17
கிறிஸ்து திரும்பிவருதலைக் காண்பது எப்படி?
“நான் மறுபடியும் வருகிறேன்.” (யோவான் 14:3, NW) இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்துக்கு முந்தின இரவில் தம்முடைய அப்போஸ்தலருடன் இருக்கையில் இந்த வாக்கை அவர்களுக்குக் கொடுத்தார். ராஜ்ய அதிகாரத்தில் கிறிஸ்து திரும்பிவருதல் மனிதவர்க்கத்துக்குக் கொண்டு வரப்போகிற அந்தச் சமாதானத்துக்கும், உடல் நலத்துக்கும், ஜீவனுக்கும் இப்போது இருக்கும் தேவையைப்போல் அவ்வளவு அதிகம் முன்னொருபோதும் இருந்திருக்கவில்லையென்று நீங்கள் ஒருவேளை ஒப்புக்கொள்வீர்கள். ஆனால் கிறிஸ்து எப்படித் திரும்பி வருகிறார்? யார் அவரைக் காண்கிறார்கள்? எவ்வகையில்?
2 தாம் திரும்பி வருகையில், கிறிஸ்து பூமியில் வாழ்வதற்கு வருகிறதில்லை. அதற்கு மாறாக, அவரோடுகூட அரசராக ஆளவேண்டியவர்கள் அவரோடு பரலோகத்தில் வாழ்வதற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இயேசு தம்முடைய அப்போஸ்தலரிடம் பின்வருமாறு கூறினார்: “நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” (யோவான் 14:3) ஆகவே, கிறிஸ்து திரும்பி வருகையில், பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறவர்கள் ஆவி ஆட்களாகி, கிறிஸ்துவை அவருடைய மகிமைப்படுத்தப்பட்ட ஆவி உடலில் காண்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:44) ஆனால், பரலோகத்துக்குப் போகாதவர்களாகிய மனிதவர்க்கத்தின் மற்ற எல்லோரும், கிறிஸ்து திரும்பி வருகையில் அவரைக் காண்பார்களா?
அவர் ஏன் மனிதனாகத் திரும்ப வரமுடியாது
3 அதே இரவில் இயேசு தொடர்ந்து தம்முடைய அப்போஸ்தலரிடம்: “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் [இனி ஒருபோதும், NW] காணாது,” என்று சொன்னார். (யோவான் 14:19) “உலகம்” என்பது மனிதவர்க்கத்தைக் குறிக்கிறது. ஆகவே பூமியிலுள்ள மக்கள், தாம் பரலோகத்துக்கு ஏறிச்சென்ற பின்பு தம்மை மறுபடியும் காணமாட்டார்கள் என்று இயேசு இங்கே தெளிவாகச் சொன்னார். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.”—2 கொரிந்தியர் 5:16.
4 என்றபோதிலும், கிறிஸ்து தாம் கொல்லப்பட்ட அதே மனித உடலில் திரும்பி வருவார் என்றும், பூமியில் வாழும் எல்லோரும் அவரைக் காண்பார்கள் என்றும் பல ஆட்கள் நம்புகின்றனர். பைபிளோவெனில் கிறிஸ்து மகிமையில் எல்லா தூதர்களோடும் திரும்பி வருகிறார் என்றும், அவர் “தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்,” என்றும் சொல்லுகிறது. (மத்தேயு 25:31) இயேசு வந்து ஒரு மனிதனைப் போல் பூமிக்குரிய ஒரு சிங்காசனத்தில் உட்காருவாரென்றால், அவர் அந்த நிலையில் தேவதூதர்களைப் பார்க்கிலும் தாழ்ந்தவராயிருப்பார். ஆனால் அவர், கடவுளுடைய இந்த ஆவி குமாரர்கள் எல்லோரையும்விட மிக வல்லமையுள்ளவராயும் மிக அதிக மகிமையுள்ளவராயும் வருகிறார், ஆகவே, அவர்கள் இருப்பதைப் போலவே அவர் காணக்கூடாதவராக இருக்கிறார்.—பிலிப்பியர் 2:8-11.
5 மறுபட்சத்தில், 1,900 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்கு முன்பாக இயேசு தம்மைத் தாழ்த்தி ஒரு மனிதனாவது அவசியமாயிந்தது. அவர் தம்முடைய பரிபூரண மனித உயிரை, நம்மை மீட்கும் பொருளாகக் கொடுக்க வேண்டியதாயிருந்தது. இயேசு ஒரு முறை இதைப் பின்வருமாறு விளக்கினார்: “நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே.” (யோவான் 6:51) இவ்வாறாக இயேசு தம்முடைய மாம்ச உடலை மனிதவர்க்கத்துக்காகப் பலி செலுத்தினார். இந்தப் பலி எவ்வளவு காலத்துக்குச் செல்லத்தக்கதாய் இருந்தது? “இயேசுவின் உடல் எல்லாக் காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி செலுத்தப்பட்டதன் மூலம் நாம் பரிசுத்தப்படுத்தப்பட்டிருக்கிறோம்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் பதிலளிக்கிறான். (எபிரெயர் 10:10, NW) இந்த உலகத்தின் ஜீவனுக்காகத் தம்முடைய மாம்சத்தைச் செலுத்திவிட்டதனால், கிறிஸ்து அதை ஒருபோதும் மறுபடியும் எடுக்க முடியாது, மறுபடியும் ஒரு தடவையாக மனிதனாக முடியாது. இந்த அடிப்படைக் காரணத்தினிமித்தமாக அவர் திரும்பி வருதல், அவர் எல்லாக் காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி செலுத்திவிட்ட அந்த மனித உடலில் ஒருபோதும் இருக்க முடியாது.
மாம்ச உடல் பரலோகத்துக்கு எடுத்துச் செல்லப்படவில்லை
6 என்றபோதிலும் கிறிஸ்து தம்முடைய மாம்ச உடலைப் பரலோகத்துக்கு எடுத்துச் சென்றார் என்று பலர் நம்புகின்றனர். கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பட்டபோது, அவருடைய மாம்ச உடல் அதற்கு மேலும் அந்தக் கல்லறையில் இருக்கவில்லை என்ற இந்தக் காரியத்தை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். (மாற்கு 16:5-7) மேலும், அவருடைய மரணத்துக்குப் பின்பு இயேசு, தாம் உயிரோடிருப்பதைத் தம்முடைய சீஷர்களுக்குக் காட்டும்படி ஒரு மாம்ச உடலில் அவர்களுக்குத் தோன்றினார். ஒரு முறை, தாம் உண்மையில் உயிர்த்தெழுப்பப்பட்டிருந்தார் என்பதை அப்போஸ்தலனாகிய தோமா நம்பும்படியாக, அவன் தன்னுடைய விரலை தம்முடைய விலாப் புறத்திலிருந்த துளையில் இடும்படியுங்கூட செய்தார். (யோவான் 20:24-27) இது, கிறிஸ்து, தாம் கொல்லப்பட்ட அதே உடலில் உயிர்த்தெழுப்பப்பட்டார் என்று நிரூபிக்கிறதல்லவா? என்று கேட்கின்றனர்.
7 இல்லை, நிரூபிக்கிறதில்லை. “கிறிஸ்து பாவங்களினிமித்தம் எல்லாக் காலத்துக்கும் ஒரே தடவையாக மரித்தார்.” (NW) “அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்,” என்று பைபிள் வெகு தெளிவாகச் சொல்லுகிறது. (1 பேதுரு 3:18) மாம்சத்தையும் இரத்தத்தையும் கொண்ட உடலையுடைய மனிதர் பரலோகத்தில் வாழ முடியாது. பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதைக் குறித்து பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; . . . மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க மாட்டாது.” (1 கொரிந்தியர் 15:44-50) ஆவிக்குரிய உடலையுடைய ஆவி ஆட்கள் மாத்திரமே பரலோகத்தில் வாழக்கூடும்.
8 அப்படியானால், இயேசுவின் மாம்ச உடலுக்கு என்ன நேரிட்டது? அவருடைய கல்லறை வெறுமையாக இருந்ததைச் சீஷர்கள் கண்டார்களல்லவா? ஆம், அப்படியே கண்டார்கள், ஏனென்றால் கடவுள் இயேசுவின் உடலை நீக்கிவிட்டார். கடவுள் ஏன் இவ்வாறு செய்தார்? ஏனென்றால் பைபிளில் எழுதப்பட்டிருந்ததை அது நிறைவேற்றினது. (சங்கீதம் 16:10; அப்போஸ்தலர் 2:31) இவ்வாறாக யெகோவா, முற்காலத்தில் மோசேயின் உடலுக்குத் தாம் செய்திருந்ததைப் போலவே, இயேசுவின் உடலை நீக்குவதைத் தகுதியாகக் கண்டார். (உபாகமம் 34:5, 6) அந்த உடல் கல்லறையில் விடப்பட்டிருந்தால், அவர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டிருந்ததை இயேசுவின் சீஷர்கள் விளங்கியிருந்திருக்க முடியாது. அந்தச் சமயத்தில் அவர்கள் ஆவிக்குரிய காரியங்களை முற்றிலுமாய்ப் புரிந்து கெள்ளாதவர்களாக இருந்தார்கள்.
9 அப்போஸ்தலனாகிய தோமா, இயேசுவின் விலாப்புறத்திலுள்ள துளையில் தன் விரலை விடக்கூடியவனாக இருந்ததால், இது, இயேசு கழுமரத்தில் அறையப்பட்ட அதே உடலில் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார் என்று காட்டுகிறதல்லவா? இல்லை, சென்ற காலங்களில் தூதர்கள் செய்ததைப் போல் இயேசு வெறுமென கண்களுக்குப் புலப்படத்தக்கதாகத் தோன்றினார் அல்லது மாம்ச உடலை ஏற்றிருந்தார். தாம் யார் என்று தோமாவை நம்ப வைப்பதற்கு, அவர் காயத் துளைகளைக் கொண்ட ஓர் உடலைப் பயன்படுத்தினார். அவர் முழுமையாக மனிதனைப்போல் தோன்றி, அல்லது அவ்வாறாகத் தோற்றத்துக்குக் காணப்பட்டு, ஆபிரகாம் ஒருமுறை வரவேற்று விருந்தளித்த அந்தத் தூதர்கள் செய்ததைப் போலவே, சாப்பிடவும் பானம் பண்ணவும் கூடியவராக இருந்தார்.—ஆதியாகமம் 18:8; எபிரெயர் 13:2.
10 இயேசு, தாம் கொல்லப்பட்ட அந்த உடலுக்கு ஒப்பான ஓர் உடலில் தோமாவுக்குத் தோன்றினபோதிலும், தம்மைப் பின்பற்றினவர்களுக்குத் தோன்றினபோது வெவ்வேறுபட்ட உடல்களையும் ஏற்றிருந்தார். இவ்வாறாக மகதலேனா மரியாள் இயேசுவை முதலில் கண்டபோது அவர் ஒரு தோட்டக்காரர் என்று எண்ணினாள். மற்றச் சமயங்களில் அவருடைய சீஷர்கள் அவரை இன்னாரென்று முதலில் அடையாளங் கண்டுகொள்ளவில்லை. இந்தச் சந்தர்ப்பங்களில், அவருடைய சொந்தத் தோற்றமல்ல, அவர்களுக்குத் தெரிந்த அவருடைய பழக்கமான ஏதோ வார்த்தை அல்லது செயலே அவரை இன்னாரென்று அவர்களுக்கு அடையாளங் காட்டியது.—யோவான் 20:14-16; 21:6, 7; லூக்கா 24:30, 31.
11 தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு 40 நாட்களளவும் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ஒரு மாம்ச உடலில் அவ்வப்போது தோன்றினார். (அப்போஸ்தலர் 1:3) பின்பு அவர் பரலோகத்துக்குத் திரும்பிச் சென்றார். ஆனால் சிலர் பின்வருமாறு கேட்கக்கூடும்: ‘அப்பொழுது அங்கிருந்த அந்த இரண்டு தூதர்கள் அப்போஸ்தலரிடம், கிறிஸ்து “எவ்விதமாக வானத்துக்குள் போகக் கண்டீர்களோ அவ்விதமாகவே வருவார்,” என்று சொன்னார்களல்லவா?’ (அப்போஸ்தலர் 1:11, தி.மொ.) ஆம், சொன்னார்கள். ஆனால் அதே உடலில் என்று அல்ல, “அவ்விதமாக” என்றே அவர்கள் சொன்னதைக் கவனியுங்கள். இயேசு திரும்பிச் சென்ற அந்த விதம் என்ன? அது யாவரறியும் பகட்டான காட்சி எதுவுமில்லாமல், அமைதியாக இருந்தது. அவருடைய அப்போஸ்தலர் மாத்திரமே அதைப்பற்றி அறிந்திருந்தார்கள். உலகம் அதை அறியவில்லை.
12 இயேசு தம்முடைய அப்போஸ்தலரை விட்டு பரலோகத்துக்குத் திரும்பிச் சென்ற அந்த விதத்தைப் பைபிள் எப்படி விவரிக்கிறதென்பதைக் கவனியுங்கள்: “அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அவர் உயர எடுத்துக் கொள்ளப்பட்டார்; ஒரு மேகம் அவர்கள் கண்களுக்கு அவரை மறைத்து எடுத்துக்கொண்டது.” (அப்போஸ்தலர் 1:9, தி.மொ.) ஆகவே இயேசு வானத்துக்குள் செல்லத் தொடங்கினபோது, ஒரு மேகம் அவருடைய அப்போஸ்தலரின் இயல்பான கண் பார்வைக்கு அவரை மறைத்தது. ஆகவே, பிரிந்து செல்லும் இயேசு அவர்களுக்கு காணக்கூடாதவரானார். அவர்கள் அவரைப் பார்க்க முடியவில்லை. பின்பு தம்முடைய ஆவிக்குரிய உடலில் அவர் பரலோகத்துக்கு ஏறிச் சென்றார். (1 பேதுரு 3:18) இவ்வாறாக அவர் திரும்ப வருதல் ஆவிக்குரிய உடலில், காணக்கூடாததாக இருக்கும்.
கண்கள் யாவும் அவரைக் காண்பது எப்படி?
13 அப்படியானால், வெளிப்படுத்துதல் 1:7-லுள்ள இந்தச் சொற்களை நாம் எப்படி விளங்கிக் கொள்வது? அங்கே அப்போஸ்தலனாகிய யோவான் பின்வருமாறு எழுதினான்: “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.” இங்கே இயல்பான மாம்சக் கண்களால் அல்ல, ஆனால் பகுத்தறியும் அல்லது மனதால் உணரும் கருத்திலேயே காண்பதைப் பற்றி பைபிள் பேசுகிறது. இவ்வாறாக, ஒருவன் ஒரு காரியத்தை மனதில் விளங்கிக் கொள்கையில் அல்லது புரிந்து கொள்கையில் அவன் ‘காண்கிறேன்’ அல்லது ‘தெரிகிறது’ என்று சொல்லக்கூடும். உண்மையில், பைபிள், “மனக்கண்களைப்” பற்றிப் பேசுகிறது. (எபேசியர் 1:19) ஆகவே “கண்கள் யாவும் அவரைக் காணும்,” என்ற இந்தக் கூற்றானது, கிறிஸ்து வந்திருக்கிறார் என்று எல்லோரும் அப்பொழுது புரிந்துகொள்வார்கள் அல்லது கண்டுகொள்வார்கள் என்று அர்த்தங் கொள்கிறது.
14 இயேசுவை உண்மையில் “குத்தினவர்கள்” பூமியில் உயிரோடு இல்லை. ஆகவே, அந்த முதல் நூற்றாண்டு மனிதருடைய நடத்தையைப் பின்பற்றி தற்காலத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுவோரைத் துன்புறுத்துகிற ஆட்களை அவர்கள் குறிக்கின்றனர். (மத்தேயு 25:40, 45) இப்படிப்பட்ட பொல்லாதவர்களின்பேரில் கிறிஸ்து மரண தண்டனையை நிறைவேற்றப்போகிற அந்தக் காலம் சீக்கிரம் வரும். இதைப் பற்றி அவர்கள் முன்னதாகவே எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தத் தண்டனை நிறைவேற்றம் நடந்தேறுகையில், என்ன நடக்கிறதென்பதை அவர்கள் “காண்பார்கள்” அல்லது கண்டுகொள்வார்கள். அவர்களுடைய புலம்பல் நிச்சயமாகவே மிகுதியாயிருக்கும்!
கிறிஸ்து பூமிக்குத் திரும்பி வருகிறாரா?
15 திரும்பிவருதல் என்பது சொல்லர்த்தமான ஓர் இடத்துக்கு ஒருவர் செல்வதையே எப்பொழுதும் குறிக்கிறதில்லை. இவ்வாறாக, நோயுற்றோர் ‘சுகத்துக்குத் திரும்பியதாகச்’ சொல்லப்படுகின்றனர். முன்னாள் அதிபதி ‘ஆட்சிக்குத் திரும்பி வருவதாகச்’ சொல்லப்படலாம். இவ்விதமாகவே, கடவுள் ஆபிரகாமிடம்: “அடுத்த வருஷம் இதே காலத்தில் நான் உன்னிடம் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரனிருப்பான்,” என்று சொன்னார். (ஆதியாகமம் 18:14; 21:1) யெகோவா திரும்ப வருவதானது, சொல்லர்த்தமாய்த் திரும்பிவருதலையல்ல, ஆனால் தாம் வாக்குக் கொடுத்திருந்ததைச் செய்வதற்கு யெகோவா தம்முடைய கவனத்தைச் சாராளிடமாகத் திருப்புவதையே குறித்தது.
16 இவ்விதமாகவே, கிறிஸ்து திரும்பிவருதல் அவர் சொல்லர்த்தமாய் இந்தப் பூமிக்குத் திரும்பி வருகிறாரென்று அர்த்தங் கொள்ளுகிறதில்லை. அதற்கு மாறாக, அவர் இந்தப் பூமியின் பேரில் ராஜ்ய அதிகாரத்தை ஏற்று தம்முடைய கவனத்தைப் பூமிக்குத் திருப்புகிறார் என்றே அது குறிக்கிறது. இதைச் செய்வதற்கு அவர் தம்முடைய பரலோக சிங்காசனத்தை விட்டு உண்மையில் கீழே பூமிக்கு இறங்கி வருவதற்கு அவசியமில்லை. முந்தின அதிகாரத்தில் நாம் பார்த்தபடி கிறிஸ்து திரும்பி வந்து அரசாளத் தொடங்குவதற்கான கடவுளுடைய காலம், பொ.ச. 1914-ம் ஆண்டில் வந்ததென்று பைபிள் அத்தாட்சி காட்டுகிறது. அப்பொழுதே பின்வரும் இந்தச் சத்தம் பரலோகத்தில் கேட்கப்பட்டது; “இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 12:10.
17 கிறிஸ்து திரும்ப வருவதானது காணக்கூடாததாக இருப்பதால், அது உண்மையில் நடந்தேறிவிட்டதென்பதை உறுதிப்படுத்த ஏதாவது ஒரு வழி இருக்கிறதா? ஆம், இருக்கிறது, தாம் காணக்கூடாதவராக வந்திருக்கிறார் என்றும் இந்த உலகத்தின் முடிவு சமீபித்திருக்கிறது என்றும் நாம் தெரிந்து கொள்வதற்கு ஏதுவான காணக்கூடிய ஓர் “அடையாளத்தைக்” கிறிஸ்து தாமே கொடுத்தார். இந்த “அடையாளத்தை” நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
[கேள்விகள்]
1. (எ) கிறிஸ்து என்ன வாக்குக் கொடுத்தார்? (பி) கிறிஸ்து திரும்பி வருவதற்கு என்ன தேவை இருக்கிறது?
2. (எ) தாம் திரும்பி வருகையில், தம்முடைய அப்போஸ்தலர் உட்பட, தம்மைப் பின்பற்றும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களைக் கிறிஸ்து எங்கே எடுத்துக் கொள்ளுகிறார்? (பி) அங்கே அவர்கள் என்ன வகையான உடலை உடையவர்களாக இருப்பார்கள்?
3. மனிதர் மறுபடியும் ஒருபோதும் கிறிஸ்துவைக் காண்பதில்லை என்று எந்தப் பைபிள் அத்தாட்சி காட்டுகிறது?
4. கிறிஸ்து, வல்லமை வாய்ந்த காணக்கூடாத ஆவி ஆளாகத் திரும்பி வருகிறார் என்று எது காட்டுகிறது?
5. கிறிஸ்து ஏன் ஓரு மனித உடலில் திரும்பி வர முடியாது?
6. கிறிஸ்து தம்முடைய மாம்ச உடலைப் பரலோகத்துக்கு எடுத்துச் சென்றார் என்று ஏன் பல ஆட்கள் நம்புகின்றனர்?
7. கிறிஸ்து ஓர் ஆவி ஆளாகப் பரலோகத்துக்குச் சென்றார் என்று எது நிரூபிக்கிறது?
8. கிறிஸ்துவின் மனித உடலுக்கு என்ன நடந்தது?
9. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு புலப்படத்தக்கதாகத் தோன்றின உடலிலிருந்த ஒரு காயத்துக்குள் தோமா எப்படி தன் விரலை விடக்கூடியவனாக இருந்தான்?
10. இயேசு வெவ்வேறுபட்ட மாம்ச உடல்களை ஏற்றார் என்று எது காட்டுகிறது?
11, 12. (எ) எந்த விதமாய்க் கிறிஸ்து பூமியை விட்டுச் சென்றார்? (பி) கிறிஸ்து திரும்பிவருதல் எந்த விதமாய் இருக்கும்படி நாம் எதிர்பார்க்கவேண்டும்?
13. கிறிஸ்து மேகங்களுடன் வருகையில் “கண்கள் யாவும் அவரைக் காணும்” என்ற இந்தக் கூற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?
14. (எ) “அவரைக் குத்தினவர்கள்” என்பது குறிப்பதென்ன? (பி) கிறிஸ்து வந்திருப்பதைக் கடைசியாக எல்லோரும் கண்டுகொள்கையில் ஏன் மிகுந்த புலம்பல் உண்டாயிருக்கும்?
15. “திரும்பிவருதல்” என்ற இந்தப் பதம் எந்த முறையில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது?
16. (எ) எவ்வகையில் கிறிஸ்து பூமிக்குத் திரும்பி வருகிறார்? (பி) கிறிஸ்து எப்பொழுது திரும்பிவந்தார்? அப்பொழுது என்ன உண்டாயிற்று?
17. கிறிஸ்து திரும்ப வருவதானது காணக்கூடாததாக இருப்பதால், அவர் வந்துவிட்டார் என்று நாம் தெரிந்துகொள்ளக் கூடும்படியாக அவர் என்ன கொடுத்தார்?
[பக்கம் 142-ன் படம்]
கிறிஸ்து தம்முடைய உடலை பலியாகக் கொடுத்துவிட்டார். அதை அவர் திரும்ப எடுத்துக் கொண்டு மறுபடியும் ஒரு மனிதனாக ஒருபோதும் முடியாது
[பக்கம் 144, 145-ன் படங்கள்]
இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, மகதலேனா மரியாள் அவரை ஏன் ஒரு தோட்டக்காரன் என்று தவறாக எண்ணிக்கொண்டாள்?
உயிர்த்தெழுப்பட்ட இயேசு எந்த மாம்ச உடலில் தோமா தன் விரலை விடும்படி கேட்டார்?
[பக்கம் 147-ன் படம்]
கிறிஸ்து தாம் இந்தப் பூமியை விட்டுச் சென்ற அதே விதமாகவே திரும்பி வரவேண்டும். அவர் எவ்விதமாகச் சென்றார்?