யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
யோவான் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய குறிப்புகளை தேவ ஆவியின் வழிநடத்துதலால் கடைசியாக எழுதி முடித்தவர் “இயேசுவுக்கு அன்பாயிருந்த” யோவானே. (யோவா. 21:20) இவர் இந்தச் சுவிசேஷத்தை சுமார் பொ.ச. 98-ல் எழுதினார். இதில் சொல்லப்பட்டுள்ள பெரும்பாலான விஷயங்கள் மற்ற மூன்று சுவிசேஷங்களிலும் காணப்படுவதில்லை.
அப்போஸ்தலன் யோவான் இந்தச் சுவிசேஷத்தை ஒரு திட்டவட்டமான நோக்கத்தோடுதான் எழுதியிருக்கிறார். தான் எழுதிய விஷயங்களைக் குறித்து அவர் இவ்வாறு கூறுகிறார்: “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.” (யோவா. 20:31) இதிலுள்ள தகவல் நமக்கு உண்மையிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்தது.—எபி. 4:12.
“இதோ, . . . தேவ ஆட்டுக்குட்டி”
இயேசுவைப் பார்த்ததும் முழுக்காட்டுபவரான யோவான், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று எவ்வித சந்தேகமுமின்றி அறிவிக்கிறார். (யோவா. 1:29) சமாரியா, கலிலேயா, யூதேயா, யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள தேசம் ஆகியவற்றின் வழியாக இயேசு பயணிக்கையில் ஜனங்களுக்குப் பிரசங்கிக்கிறார், கற்பிக்கிறார், அற்புதங்களைச் செய்கிறார். அதனால், ‘அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைக்கிறார்கள்.’—யோவா. 10:41, 42.
இயேசு செய்த தலைசிறந்த அற்புதங்களில் ஒன்றுதான் லாசருவின் உயிர்த்தெழுதல். இறந்து நான்கு நாட்களாகியிருந்த லாசரு உயிர்த்தெழுப்பப்பட்டதைப் பார்த்த அநேகர் இயேசுவில் விசுவாசம் வைக்கிறார்கள். என்றாலும், பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் இயேசுவைக் கொலைசெய்ய ஆலோசனை செய்கிறார்கள். ஆகவே, இயேசு அந்த இடத்தைவிட்டு ‘வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப் போகிறார்.’—யோவா. 11:53, 54.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:35, 40—முழுக்காட்டுபவரான யோவானுடன் அந்திரேயாவைத் தவிர வேறு எந்தச் சீஷரும் நின்றிருந்தார்? இந்தச் சுவிசேஷத்தை எழுதியவர், முழுக்காட்டுபவரான யோவானை “யோவான்” என்றே எப்போதும் குறிப்பிடுகிறார்; அதே சமயத்தில், தன்னுடைய பெயரை அவர் ஒரு தடவைகூட குறிப்பிடவில்லை. ஆகவே, பெயர் குறிப்பிடப்படாத அந்தச் சீஷர் இச்சுவிசேஷத்தை எழுதிய யோவானாகத்தான் இருக்க வேண்டும்.
2:20—எந்த ஆலயம் ‘நாற்பத்தாறு வருஷத்தில்’ கட்டப்பட்டது? செருபாபேல் கட்டின ஆலயத்தை யூதேயாவின் ராஜாவான ஏரோது திரும்பப் புதுப்பித்துக் கட்டியதையே யூதர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். ஏரோதுவினுடைய ஆட்சியின் 18-ஆம் வருடத்தில், அதாவது பொ.ச.மு. 18/17-ல், ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டும் வேலை ஆரம்பமானது என சரித்திராசியரான ஜொஸிஃபஸ் குறிப்பிட்டார். ஆலயமும் முக்கியமான பிற கட்டிடங்களும் எட்டு வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டன. என்றாலும், ஆலய வளாகத்திலுள்ள பிற கட்டிடங்களை எல்லாம் கட்டும் வேலை பொ.ச. 30-க்குப் பிறகும் நீடித்தது. அதனால்தான், ஆலயத்தைக் கட்டுவதற்கு 46 வருடங்கள் எடுத்ததாக யூதர்கள் சொன்னார்கள்.
5:14—பாவம் செய்வதால்தான் நோய் வருகிறதா? அப்படி உறுதியாய்ச் சொல்ல முடியாது. இயேசு சுகப்படுத்திய அந்த நபர், ஆதாமிலிருந்து வழிவழியாய் வந்த அபூரணத்தின் காரணமாக 38 வருடங்கள் வியாதியாய் இருந்தார். (யோவா. 5:1-9) அவருக்கு இப்போது இரக்கம் காட்டப்பட்டிருப்பதால், அவர் இனி இரட்சிப்புக்குரிய வழியில் நடக்க வேண்டும், அவர் வேண்டுமென்றே பாவம் செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் நோயைவிட மோசமான தீங்கை அவர் அனுபவிக்க நேரிடும் என்ற அர்த்தத்திலேயே இயேசு அவ்வாறு சொன்னார். அந்த நபர் வேண்டுமென்றே பாவம் செய்தால், மன்னிப்பைப் பெற முடியாது; அப்போது உயிர்த்தெழுதல் என்ற எதிர்பார்ப்பின்றி இறக்க நேரிடும்.—மத். 12:31, 32; லூக். 12:10; எபி. 10:26, 27.
5:24, 25—‘மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறவர்கள்’ யார்? ஒருசமயம், ஆன்மீக ரீதியில் மரித்த நிலையில் இருந்தவர்களைப் பற்றியே இயேசு இங்கு குறிப்பிடுகிறார்; ஆனால், இயேசுவின் வார்த்தைகளை அவர்கள் கேட்டபோது அவரை விசுவாசித்து தங்களுடைய மோசமான வாழ்க்கைப் பாதையை விட்டுவிலகினார்கள். அவர்கள் ‘மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள்.’ ஏனென்றால், மரணத்தீர்ப்பிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு, கடவுள்மீது அவர்கள் விசுவாசம் வைத்திருப்பதால் என்றென்றும் வாழும் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார்கள்.—1 பே. 4:3-6.
5:26; 6:53—‘ஒருவர் தனக்குள் ஜீவனுள்ளவராய் இருப்பதன்’ அர்த்தம் என்ன? இயேசு கிறிஸ்து ‘தமக்குள் ஜீவனுள்ளவராய் இருப்பது,’ கடவுளிடமிருந்து விசேஷித்த இரண்டு தகுதிகளைப் பெற்றிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. அதாவது, மனிதர் கடவுளிடம் நல்ல நிலைநிற்கையைப் பெற உதவும் திறனையும் மரித்தோரை உயிர்த்தெழுப்பி அவர்களுக்கு ஜீவனை அளிப்பதற்கான வல்லமையையும் பெற்றிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. இயேசுவைப் பின்பற்றுவோர், ‘தங்களுக்குள் ஜீவனுள்ளோராய் இருப்பது,’ முழு நிறைவான ஜீவனை, அதாவது நித்திய ஜீவனைப் பெறுவதை அர்த்தப்படுத்துகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பரலோகத்திற்குச் செல்கையில் இத்தகைய ஜீவனைப் பெறுவார்கள். பூமியில் வாழும் நம்பிக்கையுடைய உண்மையுள்ளவர்கள், கிறிஸ்துவினுடைய ஆயிர வருட ஆட்சியின் முடிவில் நடக்கவிருக்கும் கடைசி பரீட்சையில் வெற்றிபெற்ற பிறகே அந்த ஜீவனைப் பெறுவார்கள்.—1 கொ. 15:52, 53; வெளி. 20:5, 7-10.
6:64—யூதாஸ் காரியோத்தை இயேசு தேர்ந்தெடுத்தபோதே தம்மை அவன் காட்டிக்கொடுப்பான் என்பதை அறிந்திருந்தாரா? இல்லை என்றே சொல்லலாம். என்றாலும், பொ.ச. 32-ன்போது ஒருசமயம் தமது அப்போஸ்தலரிடம், “உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான்,” அதாவது, பழிதூற்றுபவன் இருக்கிறான் என்று இயேசு சொன்னார். ஒருவேளை, யூதாஸ் காரியோத்து தவறான வழியில் செல்ல ஆரம்பித்திருந்ததை அந்தக் கட்டத்தில் இயேசு கவனித்திருக்கலாம். அதன் காரணமாகவே, யூதாசை ‘ஆதிமுதலாய்’ அறிந்திருப்பதாக அவர் சொல்லியிருக்கலாம்.—யோவா. 6:66-71.
நமக்குப் பாடம்:
2:4. இயேசு முழுக்காட்டப்பட்டு, கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட குமாரனாய் இருப்பதால் தம் பரலோகத் தகப்பனுடைய ஆலோசனையையே தாம் கேட்க வேண்டும் என்பதை மரியாளுக்கு உணர்த்தினார். இயேசு தம்முடைய ஊழியத்தை அப்போதுதான் ஆரம்பித்திருந்த போதிலும், தம்முடைய உயிரைப் பலியாக கொடுப்பது உட்பட தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து முடிப்பதற்கான வேளையையும், அதாவது காலத்தையும் அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் கடவுளுடைய வேலையைச் செய்வதை அவருடைய குடும்பத்தார்கூட, சொல்லப்போனால் மரியாள்கூட தடைசெய்ய இடம்கொடுக்கவில்லை. நாமும்கூட இதே உறுதியோடு யெகோவா தேவனுக்குச் சேவை செய்ய வேண்டும்.
3:1-9. யூதரின் அதிகாரியான நிக்கொதேமுவின் உதாரணத்திலிருந்து நாம் இரண்டு பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். முதலாவதாக, சாதாரண தச்சரின் மகனை கடவுள் அனுப்பிய போதகராக அவர் அடையாளம் கண்டுகொண்டார். இது அவருக்கு மனத்தாழ்மையும், கூரிய அறிவும், ஆன்மீக விஷயங்களில் நாட்டமும் இருந்ததைக் காட்டியது. இன்று உண்மை கிறிஸ்தவர்களுக்கு மனத்தாழ்மை அவசியம். இரண்டாவதாக, இயேசு பூமியில் இருந்தபோது அவருடைய சீஷராவதற்கு நிக்கொதேமு தயங்கினார். ஒருவேளை, மனித பயமோ, பொருளாசையோ ஆலோசனைச் சங்கத்தில் அவர் வகித்த பதவி மீதுள்ள மோகமோ அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இதிலிருந்து ஒரு முக்கியப் பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்: ‘நம் சிலுவையை [அதாவது, கழுமரத்தை] அநுதினமும் எடுத்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றுவதற்கு’ இத்தகைய காரியங்கள் முட்டுக்கட்டையாய் இருக்க நாம் அனுமதிக்கக் கூடாது.—லூக். 9:23.
4:23, 24. நம்முடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்வதற்கு, பைபிளில் சொல்லப்பட்டுள்ள சத்தியத்திற்கு இசைய, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடு நாம் அவரை வணங்க வேண்டும்.
6:27. “நித்திய ஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காக” உழைப்பது, நம்முடைய ஆன்மீக தேவையைத் திருப்தி செய்துகொள்ள முயற்சி செய்வதை அர்த்தப்படுத்துகிறது. அப்படிச் செய்யும்போது நாம் ‘சந்தோஷமுள்ளவர்களாய்’ இருப்போம்.—மத். 5:3, NW.
6:44. யெகோவா நம் ஒவ்வொருவரிடமும் அக்கறையுள்ளவராய் இருக்கிறார். பிரசங்க வேலை, தமது பரிசுத்த ஆவி ஆகியவற்றின் மூலமாக அவர் நம்மைத் தம்முடைய குமாரனிடம் ஈர்க்கிறார். எப்படியெனில், பிரசங்க வேலையின் வாயிலாக பைபிள் சத்தியத்தை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வழிசெய்கிறார். பரிசுத்த ஆவியின் வாயிலாக அந்தச் சத்தியங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றைக் கடைப்பிடிப்பதற்கும் உதவுகிறார்.
11:33-36. துக்கத்தால் கண்ணீர்விடுவது பலவீனத்திற்கு அடையாளம் அல்ல.
‘என்னைப் பின்பற்றி வாருங்கள்’
பொ.ச. 33-ஆம் வருடத்தின் பஸ்கா பண்டிகை நெருங்கி வருகிறது. இயேசு பெத்தானியாவுக்குத் திரும்புகிறார். நிசான் 9 அன்று அவர் கழுதைக்குட்டியின் மேல் ஏறி எருசலேமுக்கு வருகிறார். நிசான் 10 அன்று அவர் மறுபடியும் ஆலயத்திற்கு வருகிறார். தம் தகப்பனுடைய பெயர் மகிமைப்படும்படி அவர் ஜெபம் செய்கிறார்; அதற்குப் பதில் அளிக்கும் விதத்தில், “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்” என பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் பிறக்கிறது.—யோவா. 12:28.
சீஷர்களுடன் பஸ்கா உணவைச் சாப்பிடுகையில், இயேசு அவர்களுக்கு முடிவான ஆலோசனையை வழங்குகிறார்; அதன் பிறகு அவர்கள் சார்பாக ஜெபம் செய்கிறார். பிற்பாடு, அவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு கழுமரத்தில் கொலை செய்யப்படுகிறார். அடுத்து, அவர் உயிர்த்தெழுப்பப்படுகிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
14:2—தம்மை உண்மையோடு பின்பற்றுகிறவர்களுக்காக இயேசு எந்த விதத்தில் பரலோகத்தில் ‘ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவார்’? கடவுளிடத்திற்குச் சென்று தம்முடைய இரத்தத்தின் மதிப்பை இயேசு சமர்ப்பித்ததன்மூலம் புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்தியதை இந்த ஆயத்தம் பண்ணுவது உட்படுத்தலாம். கிறிஸ்து ராஜ்ய அதிகாரத்தைப் பெற்றதையும் அதன் பிறகு அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட ஆரம்பித்ததையும்கூட இது உட்படுத்தலாம்.—1 தெ. 4:14-17; எபி. 9:12, 24-28; 1 பே. 1:19; வெளி. 11:15.
19:11—தம்மை ஒப்புவித்தவனைப்பற்றி பிலாத்துவிடம் பேசுகையில், யூதாஸ் காரியோத்தைத்தான் இயேசு அர்த்தப்படுத்தினாரா? யூதாசின் பெயரையோ வேறு யாருடைய பெயரையோ இயேசு குறிப்பிட்டுச் சொல்லாததிலிருந்து, அவரைக் கொலை செய்வதில் யாருக்கெல்லாம் பங்கிருந்ததோ அவர்களை எல்லாம் மனதில் வைத்தே அவர் அப்படிச் சொன்னார் என்பது தெரிகிறது. அப்படியானால், யூதாசுக்கும் ‘பிரதான ஆசாரியர் மற்றும் சங்கத்தார் யாவருக்கும்’ பரபாசை விடுதலையாக்கும்படி வற்புறுத்தின ‘ஜனங்களுக்கும்’ இயேசுவைக் கொலை செய்வதில் பங்கு இருந்தது.—மத். 26:59-65; 27:1, 2, 20-22.
20:17—‘என்னைத் தொடாதே,’ அதாவது பற்றிக்கொள்ளாதே, என்று மகதலேனா மரியாளிடம் இயேசு ஏன் சொன்னார்? இயேசு அப்போதே பரலோகத்திற்குச் சென்றுவிடுவாரோ, அவரை இனிப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என நினைத்து மகதலேனா மரியாள் அவரைக் கெட்டியாகப் பிடித்திருக்கலாம். தாம் உடனடியாகப் போகப்போவதில்லை என்பதை அவளுக்கு உறுதிப்படுத்தவே தம்மைப் பற்றிக்கொள்ள வேண்டாமென இயேசு அவளிடம் சொன்னார். அவ்வாறு பற்றிக்கொள்வதற்குப் பதிலாக, தம்முடைய சீஷரிடம் போய் தாம் உயிர்த்தெழுப்பப்பட்ட செய்தியை அறிவிக்குமாறு சொன்னார்.
நமக்குப் பாடம்:
12:36. நாம் ‘ஒளியின் பிள்ளைகளாவதற்கு,’ அதாவது ஒளியைப் பிரகாசிப்பதற்கு, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வது அவசியம். அதன் பிறகு, ஆன்மீக இருளில் இருப்போரை விடுவித்து ஒளியினிடத்திற்கு, அதாவது கடவுளிடத்திற்கு, வழிநடத்த அந்த அறிவை நாம் பயன்படுத்த வேண்டும்.
14:6. நாம் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஒரே வழியாக இருப்பவர் இயேசு கிறிஸ்து. இவர்மீது விசுவாசம் வைத்து இவருடைய மாதிரியைப் பின்பற்றுவதன் மூலமே யெகோவாவிடம் நாம் நெருங்கி வர முடியும்.—1 பே. 2:21.
14:15, 21, 23, 24; 15:10. கடவுளுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவது அவருடைய அன்பிலும் அவரது குமாரனுடைய அன்பிலும் நிலைத்திருக்க நமக்கு உதவுகிறது.—1 யோ. 5:3.
14:26; 16:13. யெகோவாவின் பரிசுத்த ஆவி நமக்குக் கற்றுக்கொடுப்பதற்கும் மறந்துபோனவற்றை நினைவுபடுத்துவதற்கும் உதவுகிறது. சத்தியத்தை வெளிப்படுத்துவதற்கும்கூட இது உதவுகிறது. ஆகவே, அறிவிலும் ஞானத்திலும் விவேகத்திலும் பகுத்துணர்விலும் சிந்திக்கும் திறனிலும் முன்னேற இது நமக்கு உதவும். அப்படியானால், நாம் விடாமல் ஜெபம் செய்வது அவசியம், முக்கியமாக பரிசுத்த ஆவிக்காக ஜெபம் செய்வது அவசியம்.—லூக். 11:5-13.
21:15, 19. “இவைகளிலும்” (NW) அதிகமாக, அதாவது அவர்களுக்கு முன் இருந்த மீன்களிலும் அதிகமாக, இயேசுவை நேசிக்கிறாரா என்ற கேள்வி பேதுருவிடம் கேட்கப்பட்டது. அவர் மீன் பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு முழுக்க முழுக்க தம்மையே பின்பற்றுவதன் அவசியத்தை இதன்மூலம் இயேசு வலியுறுத்திக் காட்டினார். நான்கு சுவிசேஷ புத்தகங்களையும் நாம் ஆராய்ந்த பிறகு, நமக்கு விருப்பமான எதையும்விட இயேசுவை அதிகமாக நேசிக்க வேண்டும் என்ற நம் தீர்மானத்தில் உறுதியாய் இருப்போமாக. ஆம், முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்றுவோமாக.
[பக்கம் 31-ன் படம்]
நிக்கொதேமுவின் மாதிரியிலிருந்து நீங்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறீர்கள்?