ராஜ்ய நற்செய்தி—அது என்ன செய்தி?
கடந்த ஆண்டு உலகம் முழுவதிலும் 235 நாடுகளில் 60,35,564 இளைஞரும் முதியோரும் இந்தச் செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கு 117,12,70,425 மணிநேரத்தை செலவழித்திருக்கின்றனர். அறிவிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை விளம்பரப்படுத்தவும் விவரிக்கவும் அச்சடிக்கப்பட்ட 70 கோடிக்கும் அதிக பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்திருக்கின்றனர். அதை எங்கும் பரப்புவதற்கு ஆயிரக்கணக்கான ஆடியோ, வீடியோ கேசட்டுகளையும் விநியோகித்திருக்கின்றனர். அப்படி என்ன செய்தி அது?
அதுவே கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி. சரித்திரம் காணாத அளவுக்கு இன்று “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் [“நற்செய்தி,” NW]” பிரசங்கிக்கப்படுவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.—மத்தேயு 24:14.
உலகம் முழுவதிலும், பிரசங்கிக்கும், போதிக்கும் இந்த வேலையில் ஈடுபடுபவர்கள் அனைவருமே வாலண்டியர்கள். பொதுவான கண்ணோட்டத்தில், அவர்கள் ஒருவேளை அதற்கு தகுதியற்றவர்களாக தோன்றலாம். இருப்பினும், அவர்களுடைய தைரியத்திற்கும் வெற்றிக்கும் காரணம்? ராஜ்ய நற்செய்தி வலிமைமிக்கதாய் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். ஏனென்றால் அது மனிதகுலம் அனுபவிக்கப் போகும் ஆசீர்வாதங்களைப் பற்றிய செய்தி. மகிழ்ச்சி, பொருளாதார கஷ்டங்களிலிருந்து விடுதலை, நல்ல அரசாங்கம், சமாதானமும் பாதுகாப்பும், அநேகருக்கு நம்ப முடியாததாக தோன்றும் நித்திய ஜீவன் போன்ற அந்த ஆசீர்வாதங்களுக்காகத்தான் மக்கள் ஏங்கித் தவிக்கின்றனரே! வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் தேடியலைவோருக்கு இது உண்மையாகவே நற்செய்தி. அறிவிக்கப்படும் ராஜ்ய நற்செய்தியை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் இந்த ஆசீர்வாதங்கள் மட்டுமல்ல இன்னும் அதிகத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம்.
ராஜ்யம் என்பது என்ன?
நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வரும் அந்த ராஜ்யம் எது? எந்த ராஜ்யத்திற்காக ஜெபிக்கும்படி கோடிக்கணக்கானவர்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்கிறதோ அந்த ராஜ்யமே. பலரும் அறிந்த அந்த ஜெபம் இதுதான்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:9, 10.
25 நூற்றாண்டுகளுக்கும் முன்பு தானியேல் என்ற எபிரெய தீர்க்கதரிசி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்ட ராஜ்யம்தான் அது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
ஆகவே, இந்த நற்செய்தி ஒரு ராஜ்யத்தை அல்லது அரசாங்கத்தைப் பற்றியது. அந்த அரசாங்கம் கடவுளுடைய அரசாங்கம். அது, துன்மார்க்கத்தை முற்றிலும் நீக்கிவிட்ட பிறகு பூமி முழுவதையும் சமாதானத்துடன் ஆட்சி செய்யும். படைப்பாளர் எந்த நோக்கத்துடன் மனிதகுலத்தையும் பூமியையும் படைத்தாரோ அந்த நோக்கத்தை அந்த அரசாங்கம் நிறைவேற்றி வைக்கும்.—ஆதியாகமம் 1:28.
“பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது”
ஒப்புக்கொடுத்த ஒருவர் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜ்ய நற்செய்தியை முதன்முதலாக பிரசங்கித்தார். அவருடைய தோற்றமும் பாணியும் மக்களின் கவனத்தை அதிகம் கவர்ந்தன. அவர்தான் யோவான் ஸ்நானன். யூத ஆசாரியன் சகரியாவுக்கும் அவருடைய மனைவி எலிசபெத்துக்கும் மகனாய் பிறந்தார். யோவான் ஒட்டகமயிர் உடையை அணிந்து, தனக்கு முன்னடையாளமாக இருந்த எலிசா தீர்க்கதரிசியைப் போல அரையில் வார்க்கச்சையைக் கட்டியிருந்தார். ஆனாலும் அவர் அறிவித்த செய்தியே அநேகரின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது. “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று அவர் அறிவித்து வந்தார்.—மத்தேயு 3:1-6.
யோவான் பேசியது யூதர்களிடம், இவர்கள் உண்மை கடவுளாகிய யெகோவாவை வணங்குவதாக சொல்லிக் கொண்டவர்கள். ஒரு தேசமாக அவர்கள் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன் மோசேயின் மூலம் நியாயப்பிரமாண உடன்படிக்கையைப் பெற்றிருந்தனர். அப்போது மகத்தான ஆலயம் எருசலேமில் இன்னும் இருந்தது. நியாயப்பிரமாணத்திற்கு இசைய அங்கே பலிகள் செலுத்தப்பட்டு வந்தன. தங்கள் வணக்கமே கடவுளுக்குப் பிரியமானது என யூதர்கள் உறுதியாக நம்பி வந்தனர்.
ஆனால் யோவானின் பேச்சைக் கேட்டவர்களில் சிலர், தாங்கள் நினைத்தது போல் தங்கள் மதம் கடவுளுக்குப் பிரியமானது அல்ல என்பதை உணர ஆரம்பித்தனர். கிரேக்க கலாச்சாரமும் தத்துவமும் யூத மதபோதனைகளில் ஒன்றர கலந்துவிட்டிருந்தன. கடவுள் மோசேயிடம் ஒப்புவித்த நியாயப்பிரமாணத்தை மனித நம்பிக்கைகளும் பாரம்பரியங்களும் களங்கப்படுத்தி, மதிப்பற்றதாக்கின. (மத்தேயு 15:6) துளியும் கருணையில்லாத கல்நெஞ்சம் படைத்த மதத்தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தியதால் அவர்களில் பெரும்பாலானோர் கடவுளுக்குப் பிரியமான விதத்தில் வணங்கவில்லை. (யாக்கோபு 1:27) கடவுளுக்கும் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கும் எதிராக அவர்கள் செய்த பாவங்களுக்காக மனந்திரும்ப வேண்டியது அவசியமாக இருந்தது.
அந்தச் சமயத்தில் வாழ்ந்த அநேக யூதர்கள் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா அல்லது கிறிஸ்து வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆகவே, “இவன்தான் கிறிஸ்துவோ” என்றும் சிலர் யோவானைக் குறித்து யோசித்தனர். தான் கிறிஸ்து அல்ல என்று யோவான் கூறி வேறொருவரிடம் அவர்களை வழிநடத்தினார். “அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல” என்று அவரைக் குறித்து சொன்னார். (லூக்கா 3:15, 16) யோவான் தன் சீஷர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தி வைக்கையில், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று கூறினார்.—யோவான் 1:29.
அது உண்மையில் நற்செய்திதான். அது, ஜீவனுக்கும் மகிழ்ச்சிக்குமான வழியை—“உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற” இயேசுவை—எல்லாருக்கும் அடையாளம் காட்டியது. அனைவரும் ஆதாம், ஏவாளின் பிள்ளைகளாக ஆனதால் பாவம், மரணம் ஆகியவற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். “ஒரே மனுஷனுடைய [ஆதாமினுடைய] கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய [இயேசுவினுடைய] கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்” என்று ரோமர் 5:19 விளக்குகிறது. இயேசு, ‘பாவத்தை சுமந்துதீர்க்கும்’ பலி ஆட்டைப்போல இருந்து, மனிதனின் பரிதாபமான நிலையை மாற்றவிருந்தார். “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” என்று பைபிள் விளக்குகிறது.—ரோமர் 6:23.
பரிபூரணமான மனிதராக, சொல்லப்போனால் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதராக இயேசு, நற்செய்தியை பிரசங்கிப்பதில் ஈடுபட்டார். மாற்கு 1:14, 15-லுள்ள பைபிள் பதிவு சொல்கிறதாவது: “யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை [“நற்செய்தியை,” NW] விசுவாசியுங்கள் என்றார்.”
இயேசு அறிவித்த நற்செய்தியை கேட்டு விசுவாசித்தவர்கள் அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றனர். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை [இயேசுவை] ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” என யோவான் 1:12 சொல்லுகிறது. கடவுளுடைய பிள்ளைகளாக அல்லது குமாரர்களாக இருப்பதால், அவர்கள் நித்திய ஜீவன் என்ற பரிசை பெற தகுதிபெற்றனர்.—1 யோவான் 2:25.
முதல் நூற்றாண்டில் இருந்தவர்கள் மட்டுமே அந்த ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பெறும் பாக்கியம் செய்தவர்கள் அல்ல. முன்னறிவிக்கப்பட்டபடி, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி இன்று பூமியிலுள்ள அனைவருக்கும் அறிவிக்கப்பட்டும் போதிக்கப்பட்டும் வருகிறது. ஆகவே இன்றும் அந்த ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பெற முடியும். இந்த ஆசீர்வாதங்களைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த கட்டுரை அதற்கு பதிலளிக்கும்.