தப்பெண்ணமே தலைதூக்காத ஒரு காலம்
தப்பெண்ணம் நம்மிடம் இருப்பதற்கான அறிகுறி ஏதாவது தென்படுகிறதா? உதாரணமாக, ஒருவரைப் பற்றி நமக்குத் தெரியாத போதிலும் அவருடைய தோல் நிறத்தை, நாட்டை, இனத் தொகுதியை அல்லது இனப் பிரிவை வைத்து இவர் இப்படித்தான் என முடிவுகட்டி விடுகிறோமா? அல்லது ஒவ்வொருவரிடமும் தனித்தன்மையுடன் பளிச்சிடும் குணங்களுக்காக அவர்களை மதிக்கிறோமா?
இயேசுவின் நாட்களில் யூதேயாவிலும் கலிலேயாவிலும் வாழ்ந்த ஜனங்கள் பொதுவாக ‘சமாரியருடன் சம்பந்தம் கலவாதிருந்தார்கள்.’ (யோவான் 4:9) “ஒரு சமாரியனின் முகத்தில் நான் முழிக்கவே கூடாது” என்ற சொல் வழக்கு டால்மூட்டில் காணப்படுகிறது; இது, சந்தேகமின்றி அநேக யூதர்களின் மனதைப் படம் பிடித்துக் காட்டியது.
இயேசுவின் அப்போஸ்தலருக்கும்கூட சமாரியர்கள் மீது ஓரளவு தப்பெண்ணம் இருக்கத்தான் செய்திருக்கும். ஒருசமயம் அவர்கள் ஒரு சமாரிய கிராமத்திற்கு சென்றபோது அக்கிராமத்தார் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. செவிசாய்க்காத அந்த ஜனங்களை, அக்கினி வந்து அழித்துப் போடும்படி கட்டளையிட சம்மதமாவென யாக்கோபும் யோவானும் இயேசுவிடம் கேட்டார்கள். அவர்களைக் கண்டிப்பதன் மூலம் அவர்களது எண்ணம் தவறானது என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.—லூக்கா 9:52-56.
பின்னர், எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு மனிதன் கள்ளர்களால் தாக்கப்பட்டதைப் பற்றிய உவமையை இயேசு சொன்னார். அதில், மதப் பற்றுள்ள இரண்டு யூதர்கள் அந்த மனிதனுக்கு உதவ மனமின்றி நிற்காமல் போய்விட்டார்கள். ஆனாலும் பின்னர் வந்த ஒரு சமாரியன் நின்று, அந்த மனிதனின் காயங்களுக்குக் கட்டுப்போட்டார். பிறகு, அவனது காயங்களிலிருந்து குணமடையும்படி அவனை பராமரிக்கவும் ஏற்பாடு செய்தார். இந்த சமாரியன் தன்னை ஓர் உண்மையான அயலான் என நிரூபித்தார். (லூக்கா 10:29-37) இந்த உவமையின் மூலம், மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களைக் காணாதபடி தப்பெண்ணம் அவர்களது கண்களை மறைத்துப்போட்டது என்பதை கேட்போர் புரிந்துகொள்ள இயேசு உதவினார். சில வருடங்களுக்குப் பிறகு, யோவான் சமாரியாவிற்குத் திரும்பி வந்தார், அங்கிருந்த அநேக கிராமங்களில் பிரசங்கித்தார்; தான் அழித்துப்போட விரும்பிய அந்தக் கிராமத்திற்கும்கூட அவர் அப்போது பிரசங்கிக்க சென்றிருக்கலாம்.—அப்போஸ்தலர் 8:14-17, 25.
ரோம நூற்றுக்கதிபதியான கொர்நேலியுவிடம் இயேசுவைக் குறித்துப் பேச அப்போஸ்தலன் பேதுரு ஒரு தேவதூதனால் வழிநடத்தப்பட்டார்; அப்போது அவரும் பாரபட்சம் காட்டாமல் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. யூதர் அல்லாதவர்களிடம் பேதுரு எந்தச் சகவாசமும் வைத்துக் கொள்ளவில்லை, மேலும் அநேக யூதர்களுக்கு ரோம போர்வீரர்களைக் கண்டாலே துளியும் பிடிக்காதிருந்தது. (அப்போஸ்தலர் 10:28) ஆனால் இந்த விஷயத்தில் கடவுளுடைய வழிநடத்துதல் இருந்ததைப் பேதுரு கவனித்தபோது இவ்வாறு சொன்னார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
தப்பெண்ணத்தை விட்டொழிப்பதற்கான உள்நோக்கம்
“ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாக இயேசு கற்பித்திருந்த முக்கிய நியமத்தை தப்பெண்ணம் மீறச் செய்கிறது. (மத்தேயு 7:12) பிறந்த ஊரை, தோல் நிறத்தை, அல்லது பின்னணியை மட்டுமே காரணம் காட்டி ஒருவர் பகைக்கப்படுவதை யார்தான் விரும்புவர்? கடவுளுடைய பட்சபாதமற்ற தராதரத்தையும்கூட தப்பெண்ணம் மீறச் செய்கிறது. யெகோவா, ‘மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப் பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்தார்’ என பைபிள் கற்பிக்கிறது. (அப்போஸ்தலர் 17:26) எனவே எல்லாரும் சகோதரர்கள்தான்.
அதுமட்டுமல்ல, கடவுள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நியாயம் தீர்க்கிறார். ஒருவருடைய அப்பா அம்மாவோ, தாத்தா பாட்டியோ செய்ததை வைத்து அவரைக் கடவுள் கண்டனம் செய்கிறதில்லை. (எசேக்கியேல் 18:20; ரோமர் 2:6) வேற்று நாட்டவரால் ஒடுக்கப்பட்டாலும்கூட அந்நாட்டைச் சேர்ந்த தனி நபர்களைப் பகைப்பது நியாயமாகாது; இழைக்கப்படும் அநீதிக்கு அந்நபர்கள் எந்த விதத்திலும் தனிப்பட்டவர்களாக பொறுப்பேற்க முடியாது. ‘தங்கள் சத்துருக்களைச் சிநேகிக்கவும், தங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கவும்’ இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 5:44, 45.
இத்தகைய போதனைகளே தப்பெண்ணத்தைத் தவிர்க்க முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு உதவியது, அதோடு, விசேஷித்த சர்வதேச சகோதரத்துவமாக திகழவும் உதவியது. அவர்கள் பலதரப்பட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவரையொருவர் சகோதரர், சகோதரி என அழைத்துக் கொண்டார்கள், உண்மையில் அப்படித்தான் கருதினார்கள். (கொலோசெயர் 3:9-11; யாக்கோபு 2:5; 4:11) இந்த மாற்றத்தை ஊக்குவித்த நியமங்கள் இன்றும்கூட அதே விதமான பலன்களைத் தரலாம்.
இன்று தப்பெண்ணத்தை எதிர்த்துப் போராடுவது
கிட்டத்தட்ட நாம் எல்லாரும் முன்னதாகவே நம் மனதில் சில விஷயங்களைத் தீர்மானித்திருப்போம்; ஆனால் இவை தப்பெண்ணத்திற்கு நம்மை வழிநடத்திவிடக் கூடாது. “தீர விசாரிக்கும் முன்னே செய்யப்படும் முடிவுகள், உண்மையை அறியவரும்போது மாற்றிக்கொள்ளப்பட வேண்டும்; அப்படி மாற்றிக்கொள்ளாதபோதுதான் அவை தப்பெண்ணங்களாக உருவெடுக்கின்றன” என தப்பெண்ணத்தின் இயல்பு புத்தகம் சொல்கிறது. ஆட்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும்போது பெரும்பாலும் தப்பெண்ணம் விட்டொழிக்கப்படுகிறது. இருந்தாலும், “காரியங்களை ஒன்றுசேர்ந்து செய்யும்போதுதான் மனப்பான்மைகளில் மாற்றம் ஏற்படும்” என அதே புத்தகம் குறிப்பிடுகிறது.
இப்படித்தான், நைஜீரியாவைச் சேர்ந்த இபோ இனத்தவரான ஜான் என்பவருக்கு ஹௌசா இனத்தவர் மீது தப்பெண்ணம் இருந்தது; ஆனால், அந்தத் தப்பெண்ணத்தைப் பிற்பாடு அவர் சரிசெய்து கொண்டார். “பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் ஹௌசா இன மாணவர்கள் சிலரை சந்தித்தேன், அவர்கள் என் நண்பர்களானார்கள்; அவர்களுக்கு அருமையான கொள்கைகள் இருப்பதை அறிந்துகொண்டேன். ஒரு ஹௌசா மாணவனுடன் சேர்ந்து நான் ஒரு புராஜெக்ட் செய்தேன், நாங்கள் இருவரும் நன்கு ஒத்துப்போனோம்; இதற்கு முன் இபோ இன மாணவன் ஒருவனோடு சேர்ந்து வேலை செய்தபோதோ அவனுடைய வேலையையும் சேர்த்து நானே செய்ய வேண்டியிருந்தது” என்கிறார் அவர்.
தப்பெண்ணத்தை விரட்டி அடிக்கும் ஆயுதம்
இனப் பகைமைக்கு எதிராக யுனெஸ்கோ என்ற அறிக்கைப்படி, “புதுப்புது வகையான இனப் பகைமை, ஏற்றத்தாழ்வு, தள்ளி வைப்பது போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவும் அருமையான ஆயுதம் கல்விதான்.” இது சம்பந்தமாக சிறந்த உதவி அளிப்பது பைபிள் கல்வி மட்டும்தான் என யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். (ஏசாயா 48:17, 18) ஜனங்கள் அதன் போதனைகளைப் பின்பற்றுகையில் பிற இனத்தவர் மீதான சந்தேகம் மறைகிறது அந்த இடத்தை மரியாதை பிடித்துக் கொள்கிறது, பகைமையெனும் நெருப்பை அன்பு எனும் நீர் அணைத்துவிடுகிறது.
தப்பெண்ணங்களைப் போக்கிக்கொள்ள பைபிள் கைகொடுத்திருக்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் அனுபவப்பூர்வமாக கண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியையும் இனத்தொகுதியையும் சேர்ந்த ஆட்களுடன் இணைந்து வேலை செய்வதற்கான தூண்டுதலையும் வாய்ப்பையும் பைபிள் அவர்களுக்கு அளிக்கிறது. இத்தொடர் கட்டுரையின் முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட கிறிஸ்டீனா யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர். அவர் சொல்வதாவது: “என் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ராஜ்ய மன்றங்களில் நடைபெறும் கிறிஸ்தவ கூட்டங்கள் உதவுகின்றன. என் மீது யாருக்கும் தப்பெண்ணம் இல்லை என்பதால் அங்கிருக்கையில் பாதுகாப்பாக உணருகிறேன்.”
ஜாஸ்மின் என்பவரும் ஒரு யெகோவாவின் சாட்சி. இவர் ஒன்பது வயதாக இருக்கும்போது முதன்முதலில் இனப் பகைமையை எதிர்ப்பட்டார். “வியாழக்கிழமைதான் எப்போதும் நிம்மதியான நாள், ஏனென்றால் அன்று நான் ராஜ்ய மன்றத்துக்குப் போகிறேன். அங்கு எல்லாரும் என்னிடம் அன்பாக பழகுகிறார்கள். என்னை வெறுத்து ஒதுக்குவதற்கு பதிலாக ‘ஸ்பெஷலானவளைப்’ போல என்னை உணர வைக்கிறார்கள்” என்கிறார் அவர்.
யெகோவாவின் சாட்சிகள் ஏற்பாடு செய்யும் வாலண்டியர் வேலைகள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைக்க வைக்கின்றன. சைமன் என்பவர் பிரிட்டனில் பிறந்தவராக இருந்தாலும் அவருடைய குடும்பத்தார் கரீபியனிலிருந்து வந்த குடியேறிகள். தனியார் கட்டுமான கம்பெனிகளில் கொத்தனாராக வேலை செய்த காலத்தில் அவர் ஏகப்பட்ட தப்பெண்ணங்களை எதிர்ப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது மதத்தைச் சேர்ந்தவர்களுடன் வாலண்டியராக வேலை செய்த வருடங்களில் அப்படிப்பட்ட தப்பெண்ணங்களை அவர் எதிர்ப்படவே இல்லை. “அநேக நாடுகளைச் சேர்ந்த சக யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து வேலை செய்திருக்கிறேன், நாங்கள் ஒருவருக்கொருவர் நன்கு ஒத்துப்போக கற்றுக்கொண்டோம். சொல்லப்போனால், வேறு நாட்டையும் வித்தியாசமான பின்னணியையும் சேர்ந்த சிலர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்” என சொல்கிறார் சைமன்.
யெகோவாவின் சாட்சிகளும் அபூரணர்கள்தான். எனவே அவர்களும் தப்பெண்ணத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியிருக்கலாம். ஆனால் கடவுள் பட்சபாதம் பார்க்காதவர் என்பதை அறிந்திருப்பது தொடர்ந்து போராட அவர்களுக்கு பலமான தூண்டுதலை அளிக்கிறது.—எபேசியர் 5:1, 2.
தப்பெண்ணத்தை எதிர்த்து போராடும்போது எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன. பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களுடன் பழகும்போது நம் வாழ்க்கை வளமடைகிறது. மேலும், தம்முடைய ராஜ்யத்தின் மூலம் நீதி நிலவுகிற மனித சமுதாயத்தை கடவுள் சீக்கிரத்தில் நிறுவப் போகிறார். (2 பேதுரு 3:13) அந்தக் காலம் இனி தப்பெண்ணம் தலைதூக்காத காலமாயிருக்கும். (g04 9/8)
[பக்கம் 11-ன் பெட்டி]
தப்பெண்ணத்திற்கு இடங்கொடுக்கிறேனா?
உங்களுக்கே தெரியாமல் சில தப்பெண்ணங்களுக்கு இடங்கொடுத்திருக்கிறீர்களா என்பதைக் கண்டுபிடிக்க பின்வரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்:
1. ஒரு குறிப்பிட்ட இனப் பின்னணியை, பிராந்தியத்தை, அல்லது நாட்டைச் சேர்ந்தவர்களிடம் முட்டாள்தனம், சோம்பேறித்தனம், கஞ்சத்தனம் போன்ற விரும்பத்தகாத குணங்கள் இருப்பதாக நான் நினைத்துக் கொள்கிறேனா? (அநேக ஜோக்குகள் இத்தகைய தப்பெண்ணத்தை ஊக்குவிக்கின்றன.)
2. பொருளாதார, சமூக பிரச்சினைகளுக்கு குடியேறிகள்தான் அல்லது வேறொரு இனத் தொகுதியினர்தான் காரணமென அவர்கள் மீது பழி சுமத்தும் மனப்பான்மை எனக்கு இருக்கிறதா?
3. என் நாட்டவருக்கு வேறொரு நாட்டவர் மீது காலம் காலமாக பகைமை இருப்பதால், நானும் அந்நாட்டவரை வெறுக்கிறேனா?
4. நான் சந்திக்கும் நபர்கள் எத்தகைய தோல் நிறத்தை, கலாச்சாரத்தை, இனப் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைத் தனி நபர்களாக கருதும் மனப்பான்மை எனக்கு இருக்கிறதா?
5. வேறொரு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்திக் கொள்கிறேனா? அப்படித் தெரிந்துகொள்ள முயற்சி எடுக்கிறேனா?
[பக்கம் 8-ன் படம்]
நல்ல சமாரியனைப் பற்றிய தம் உவமையில் இயேசு தப்பெண்ணத்தை மேற்கொள்ளும் விதத்தை நமக்குக் கற்றுக்கொடுத்தார்
[பக்கம் 8-ன் படம்]
‘தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்’ என்று கொர்நேலியுவின் வீட்டிலிருக்கையில் பேதுரு சொன்னார்
[பக்கம் 9-ன் படம்]
பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களை பைபிள் போதனை ஒன்றிணைக்கிறது
[பக்கம் 9-ன் படம்]
தாங்கள் கற்றுக்கொண்டதை யெகோவாவின் சாட்சிகள் கடைப்பிடிக்கிறார்கள்
[பக்கம் 10-ன் படம்]
கிறிஸ்டீனா—“என் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ராஜ்ய மன்றங்களில் நடைபெறும் கூட்டங்கள் உதவுகின்றன”
[பக்கம் 10-ன் படம்]
ஜாஸ்மின்—“எல்லாரும் என்னிடம் அன்பாக பழகுகிறார்கள். என்னை வெறுத்து ஒதுக்குவதற்கு பதிலாக ‘ஸ்பெஷலானவளைப்’ போல என்னை உணர வைக்கிறார்கள்”
[பக்கம் 10-ன் படங்கள்]
சைமன், கட்டுமானப் பணி வாலண்டியர்—“ஒருவருக்கொருவர் நன்கு ஒத்துப்போக கற்றுக்கொண்டோம்”