வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
யெகோவாவை “ஆவியோடு” வணங்குவது என்றால் என்ன?
சீகார் என்ற ஊருக்கு அருகே இருந்த யாக்கோபின் கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த சமாரிய பெண்ணிடம் இயேசு கிறிஸ்து சாட்சிகொடுக்கையில் இவ்வாறு சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (யோவான் 4:24) உண்மை வணக்கம் ‘உண்மையோடு’ செலுத்தப்பட வேண்டும்; எப்படியென்றால், பைபிளில் யெகோவா தேவன் தம்மையும் தம்முடைய நோக்கங்களையும் பற்றி வெளிப்படுத்தியிருப்பதற்கு இசைவாக இருக்க வேண்டும். கடவுளுக்கு நாம் செய்யும் சேவை ஆவியோடும் செய்யப்பட வேண்டுமென்றால் அது வைராக்கியமுள்ளதாக, அதாவது விசுவாசம், அன்பு ஆகியவை நிறைந்த இதயத்தால் உந்துவிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். (தீத்து 2:14) என்றபோதிலும், ‘ஆவியோடு தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும்’ என்ற இயேசுவின் கூற்றில், நாம் எந்த மனநிலையோடு யெகோவாவை சேவிக்க வேண்டும் என்பதைவிட அதிகம் உட்பட்டிருப்பதை சூழமைவு காட்டுகிறது.
கிணற்றின் அருகே சமாரிய பெண்ணிடம் இயேசு உரையாடியது, வணக்கத்தில் பக்தி வைராக்கியம் உட்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பற்றியது அல்ல. பொய் வணக்கத்திலும் வைராக்கியத்தையும் பக்தியையும் காட்ட முடியும். மாறாக, சமாரியாவிலுள்ள ஒரு மலையிலோ அல்லது எருசலேமிலுள்ள ஆலயத்திலோ—இரண்டுமே சொல்லர்த்தமான இடங்கள்—பிதாவை தொழுதுகொள்ளாமல், அவரது உண்மையான இயல்பின் அடிப்படையில் வணங்குவதற்கு புதிய முறை ஒன்றை இயேசு சுட்டிக்காட்டினார். (யோவான் 4:21) அவர் இவ்வாறு சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார்.” (யோவான் 4:24) மெய்க் கடவுள் பருப்பொருளால் ஆனவர் அல்ல, அவரை பார்க்கவோ தொடவோ முடியாது. அவரை நாம் பார்க்கத்தக்க ஆலயத்திலோ மலையிலோ வழிபட முடியாது. ஆகவே, கண்ணால் காண முடிகிறதற்கும் அப்பாற்பட்ட வணக்கத்தின் ஒரு அம்சத்தைப் பற்றியே இங்கே இயேசு குறிப்பிடுகிறார்.
உண்மையோடு செலுத்தப்பட வேண்டியதோடுகூட, கடவுள் ஏற்றுக்கொள்கிற வணக்கம் பரிசுத்த ஆவியால், அதாவது கடவுளுடைய காணக்கூடாத செயல் நடப்பிக்கும் சக்தியால் வழிநடத்தப்படவும் வேண்டும். “அந்த [பரிசுத்த] ஆவி எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்கிறது” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். மேலும், “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்” என்றும் அவர் எழுதினார். (1 கொரிந்தியர் 2:8-12; NW) கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதமாக வணங்குவதற்கு அவருடைய ஆவியையும் அதன் வழிநடத்துதலையும் பெறுவது அவசியம். அது மட்டுமல்லாமல், அவருடைய வார்த்தையைப் படித்து அதைப் பின்பற்றுவதன் மூலம் நம்முடைய ஆவியை அல்லது மனப்பான்மையை அவருடைய ஆவியின் வழிநடத்துதலுக்கேற்ப நாம் மாற்றிக்கொள்வதும் முக்கியம்.
[பக்கம் 28-ன் படம்]
தேவனை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குங்கள்