இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
கானா ஊரில் இரண்டாவது அதிசயம்
யூதேயாவில் நீடிக்கப்பட்ட விசேஷித்த பிரசங்கவேலை செய்தபின் இயேசு தன்னுடைய ஊர் பிராந்தியத்திற்குத் திரும்பிவரும்போது இளைப்பாறுவதற்காக அல்ல, மாறாக, அவர் வளர்ந்த நாடாகிய கலிலேயாவில் இன்னும் விரிவான ஊழியத்தைத் துவங்குகிறார். ஆனால் அவருடைய சீஷர்கள் அவரோடு தங்குவதற்குப் பதிலாக தங்களுடைய சொந்த குடும்பங்களுக்கும் அவர்களின் முந்தைய வேலைகளுக்கும் வீட்டிற்குத் திரும்புகின்றனர்.
என்ன செய்தியை இயேசு பிரசங்கிக்கத் துவங்குகிறார்? இதைத்தான்: “தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் வந்திருக்கிறது. ஜனங்களே, மனஸ்தாபப்பட்டு, நற்செய்தியில் விசுவாசம் கொள்ளுங்கள்.” அதனுடைய பிரதிபலிப்பு? கலிலேயர் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள். எல்லோராலும் அவர் கனம்பண்ணப்பட்டார். என்றாலும் அது குறிப்பாக அவருடைய செய்தியின் காரணமாயில்லை. ஆனால் அதற்கு மாறாக, அவர்களில் அநேகர் சில மாதங்களுக்கு முன் எருசலேமில் பஸ்காவுக்குப் போயிருந்ததினாலும், அவர் நடத்தின பிரசித்தமான அடையாளங்களைப் பார்த்ததினாலுமே.
தெளிவாக இயேசு தன்னுடைய பெரிய கலிலேயா ஊழியத்தை கானா ஊரில் ஆரம்பிக்கிறார். இதற்கு முன்னால் யூதேயாவிலிருந்து திரும்ப வந்தபோது அவர் ஒரு கல்யாண விருந்தில் தண்ணீரைத் திராட்ச ரசமாக மாற்றினாரென்பதை நீங்கள் நினைவுபடுத்தக்கூடும். இந்த இரண்டாவது தடவையில் ராஜாவாகிய ஏரோது அந்திப்பாவின் அரசாங்க அதிகாரி ஒருவனின் குழந்தை அதிக நோயுற்றிருக்கிறது. இயேசு யூதேயாவிலிருந்து கானா ஊருக்கு வந்திருக்கிராரென்று கேள்விப்பட்டு அந்த அதிகாரி கப்பர் நகூமிலுள்ள தன் வீட்டிலிருந்து அவரைக் காண்பதற்கு வெகுதூரம் பிரயாணப்பட்டு போனான். துக்கம் நிறைந்தவனாக அவன் கூறுகிறான்: “என்னுடைய பிள்ளை மரிப்பதற்கு முன் தயவு செய்து உடனே வாரும்.”
இயேசு பிரதியுத்தரவளிக்கிறார்: “நீ வீட்டிற்குத் திரும்பிப்போ, உன்னுடைய மகன் குணப்பட்டிருக்கிறான்!” ஏரோதின் அதிகாரி நம்பி வீட்டிற்குத் திரும்பும் நீண்ட பயணத்தைத் துவங்குகிறான். வழியில், எல்லாம் சரியாகி விட்டதென்றும், அவனுடைய குமாரன் குணப்பட்டுவிட்டானென்றும் சொல்வதற்காகத் துரிதப்பட்டு வந்த அவனுடைய வேலைக்காரர்களால் சந்திக்கப்படுகிறான்! அவன் கேட்கிறான்: “எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று?”
“நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது” என்று உத்தரவளிக்கிறார்கள்.
உன்னுடைய மகன் குணப்பட்டிருக்கிறானென்று இயேசு சொன்ன அதே நேரத்தில்தான் என்பதை அந்த அதிகாரி உணருகிறான். அதன் பிறகு அந்த மனிதனும் அவனுடைய வீட்டார் யாவரும் கிறிஸ்துவின் சீஷர்களாகிறார்கள்.
இவ்விதமாக கானா ஊர், யூதேயாவிலிருந்து திரும்பி வந்திருப்பதை அடையாளப்படுத்திக் காட்டுவதாக இயேசு இரண்டு தடவைகளிலும் அற்புதம் செய்த அநுக்கிரகம் பெற்ற இடமாக ஆகிவிட்டது. இவை மட்டுமே இயேசு இதுவரையில் செய்த அற்புதங்களாக நிச்சயமாக இல்லை. ஆனால் அவர் கலிலேயாவுக்குத் திரும்புவதை அவை சுட்டிக்காட்டியதினால் குறிப்புடையவையாக இருக்கின்றன.
இப்பொழுது இயேசு நாசரேத்திற்கு வீட்டை நோக்கிச் செல்கிறார். அங்கே அவருக்கு என்ன காத்திருக்கிறது? யோவான் 4:43-54; மாற்கு 1:14, 15, NW; லூக்கா 4:14, 15
● இயேசு கலிலேயாவுக்குத் திரும்பும்போது அவருடைய சீஷர்களுக்கு என்ன நேரிடுகிறது, மேலும் ஜனங்கள் அவரை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்?
● என்ன அற்புதத்தை இயேசு செய்கிறார்? அது, சம்பந்தப்பட்டவர்களின் மேல் என்ன செல்வாக்கைக் கொண்டிருக்கிறது?
● கானா ஊர் எப்படி இயேசுவால் அநுக்கிரகம் பெற்றதாயிருக்கிறது?(w86 2/1)