அதிகாரம் 9
இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது?
“அன்பானவர் இறக்கும்போது ஒருவர் துயரப்படுகிறார், ஏனென்றால் மரணம் என்பது அறிவுக்கு எட்டாத இடத்துக்குள் மறைந்துபோகும் அன்பானவரின் இழப்பாக இருக்கிறது.” இப்படித்தான் தன் அப்பாவும் அதற்குப்பின் விரைவில் தன் அம்மாவும் இறந்துபோனபோது ஒரு மகன் சொன்னான். அவனுடைய வேதனையும் ஆழமான இழப்பின் உணர்வும் அவன் “உணர்ச்சிப்பூர்வமாக மூழ்கிக்”கொண்டிருப்பதுபோல அவனை உணரச்செய்தது. ஒருவேளை நீங்கள் இதேப் போன்ற ஒரு விதத்தில் துயரத்தை அனுபவித்திருக்கலாம். உங்களுடைய அன்பானவர்கள் எங்கே இருக்கின்றனர் மற்றும் நீங்கள் எப்போதாவது அவர்களை மறுபடியுமாக பார்ப்பீர்களா என்பதாகவும் ஒருவேளை யோசித்திருக்கலாம்.
2 துக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சில பெற்றோரிடம், “தமக்கென்று பரலோகத்துக்கு எடுத்துச்செல்வதற்கு கடவுள் மிகவும் அழகான மலர்களை பறித்துக்கொண்டுவிடுகிறார்,” என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அது உண்மையில் அப்படி இருக்கிறதா? நம்முடைய இறந்த அன்பானவர்கள் ஆவி மண்டலத்திற்கு சென்றுவிட்டிருக்கிறார்களா? எல்லா வேதனையிலிருந்தும் ஆசையிலிருந்தும் விடுபட்ட இன்பமான ஒரு நிலை என்பதாக விவரிக்கப்படும் நிர்வாணா என்பதாக சிலர் அழைக்கும் காரியமாக இது இருக்கிறதா? நாம் நேசிக்கும் இவர்கள் பரதீஸில் சாவாமையுள்ள ஒரு வாழ்க்கையின் நுழைவாயிலைக் கடந்துவிட்டார்களா? அல்லது மற்றவர்கள் சொல்கிறபடி, கடவுளைக் கோபப்படுத்தியிருப்பவர்களுக்கு மரணம் என்பது ஒருபோதும் முடிவுறாத வாதனைக்குள் விழுந்துவிடுவதாக இருக்கிறதா? இறந்தோர் நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்க முடியுமா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு உண்மையான பதில்களைப் பெற்றுக்கொள்வதற்கு, நாம் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை கலந்தாலோசிப்பது அவசியமாகும்.
மனிதருக்குள் இருக்கும் அந்த “ஆவி” என்பது என்ன?
3 பண்டைய கிரேக்க அறிஞர்கள் சாக்ரட்டீஸ் மற்றும் பிளேட்டோ ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் இயல்பாகவே சாவாமையுள்ளதாக இருக்கும் ஏதோவொன்று—மரணத்துக்குப்பின் வாழ்ந்து உண்மையில் ஒருபோதும் இறக்காத ஆத்துமா ஒன்று—இருக்கவேண்டும் என்பதாக கருதினர். உலகம் முழுவதிலும், லட்சக்கணக்கானோர் இன்று இதை நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை அநேகமாக இறந்துபோன தங்களுடைய அன்பானவர்களின் நலனில் அக்கறையைத் தோற்றுவிக்க காரணமாயிருப்பது போல இறந்தோரைக் குறித்து பயத்தைத் தோற்றுவிக்கிறது. இறந்தோரைப் பற்றி பைபிள் முற்றிலும் வித்தியாசமான ஏதோவொன்றை நமக்குக் கற்பிக்கிறது.
4 இறந்தோரின் நிலைமையைப்பற்றி சிந்திக்கையில், நம்முடைய முதல் தகப்பனாகிய ஆதாம் ஒரு ஆத்துமாவை உடையவனாக இல்லை என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். அவன் ஒரு ஆத்துமாவாக இருந்தான். பிரமிப்பூட்டுகிற படைப்பின் ஒரு செயலில், கடவுள் மனிதனை—ஆத்துமாவை—பூமியின் அடிப்படை மூலக்கூறுகளிலிருந்து உருவாக்கி பின்னர் “ஜீவசுவாசத்தை” அவன் நாசியிலே ஊதினார். ஆதியாகமம் 2:7 நமக்குச் சொல்கிறது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” ஆதாமின் உயிர் சுவாசிப்பதன் மூலம் காக்கப்பட்டது. என்றபோதிலும், கடவுள் ஆதாமுக்குள் ஜீவசுவாசத்தை வைத்தபோது, மனிதனின் நுரையீரலுக்குள் காற்றை ஊதுவதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருந்தது. பைபிள் பூமியில் வாழும் உயிரினங்களில் சுறுசுறுப்பாக செயல்படும் “உயிர்சக்தி”யைப் பற்றி பேசுகிறது.—ஆதியாகமம் 7:22, NW.
5 “உயிர்சக்தி” என்பது என்ன? அது ஆதாமின் உயிரற்ற உடலில் கடவுள் வைத்த உயிரின் இன்றியமையாத தூண்டுதிறனாக இருக்கிறது. இந்தச் சக்தி அதற்குப்பின் சுவாசித்தலின் மூலமாக காக்கப்பட்டது. ஆனால் சங்கீதம் 146:4-ல் குறிப்பிடப்பட்டுள்ள அந்த “ஆவி” என்பது என்ன? அந்த வசனம் இறந்துபோகும் ஒரு நபரைப் பற்றி இவ்விதமாகச் சொல்கிறது: “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” பைபிள் எழுத்தாளர்கள் இந்த வகையில் “ஆவி” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியபோது, சரீரம் செத்தப்பின் தொடர்ந்து உயிர்வாழும் உடலிலின்று பிரிந்த ஒரு ஆத்துமாவை மனதில் கொண்டிருக்கவில்லை.
6 மரணத்தின்போது மனிதர்களிலிருந்து பிரிந்துசெல்லும் அந்த “ஆவி” நம்முடைய படைப்பாளரிடமிருந்து வந்த உயிர்சக்தியாகும். (சங்கீதம் 36:9; அப்போஸ்தலர் 17:28) இந்த உயிர்சக்தி, மின்சாரம் தன் ஆற்றலால் இயக்கும் அந்தக் கருவியின் அம்சங்களை எடுத்துக்கொள்ளாதிருப்பது போலவே, அது உயிரூட்டுகிற உயிரினத்தின் எந்தச் சிறப்பியல்புகளையும் கொண்டிருப்பது இல்லை. மின்சாரம் போய்விடும்போது விளக்கு அணைந்துபோவது போலவே ஒருவர் இறக்கும்போது, ஆவி (உயிர்சக்தி) உடலிலுள்ள உயிரணுக்களுக்கு உயிரூட்டுவதை நிறுத்திக்கொள்கிறது. உயிர்சக்தி மனித உடலை, மனிதனை—ஆத்துமாவை—இயக்குவதை நிறுத்திக் கொள்ளும்போது இறந்துபோகிறது.—சங்கீதம் 104:29; பிரசங்கி 12:1, 7.
“மண்ணுக்குத் திரும்புவாய்”
7 பாவியாகிய ஆதாமுக்கு மரணம் எதைக் குறிக்கும் என்பதை யெகோவா தெளிவாக விளக்கினார். கடவுள் சொன்னார்: “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) ஆதாம் எங்கே திரும்பிப் போவான்? பூமிக்கு, அவன் படைக்கப்பட்ட அந்த மண்ணுக்கு. மரணத்தின்போது ஆதாம் வெறுமனே இல்லாமல் போவான்!
8 இந்த விஷயத்தில், மனிதரின் மரணம் மிருகங்களுடையதிலிருந்து வித்தியாசமாக இல்லை. அவையும்கூட ஆத்துமாக்கள், அதே ஆவி அல்லது உயிர்சக்தி அவற்றிற்கு சக்தியளிக்கிறது. (ஆதியாகமம் 1:24) பிரசங்கி 3:19, 20-ல், ஞானவானான சாலொமோன் நமக்குச் சொல்கிறார்: “இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; [மரணத்தில்] மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல. . . . எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.” மனிதன் கடவுளுடைய சாயலில், யெகோவாவின் பண்புகளைப் பிரதிபலிக்கும் விதமாக படைக்கப்பட்டிருந்ததில் மிருகங்களைவிட மேன்மையானவனாக இருந்தான். (ஆதியாகமம் 1:26, 27) என்றபோதிலும், மரணத்தின்போது மனிதர்களும் மிருகங்களும் ஒன்றுபோல மண்ணுக்கே திரும்புகி[ன்றன]றார்கள்.
9 மரணம் என்பது என்ன என்பதை இவ்வாறு சொல்லி சாலொமோன் மேலுமாக விளக்கினார்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” ஆம், இறந்தோருக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது. இதன் காரணமாகவே சாலொமோன் இவ்வாறு துரிதப்படுத்தினார்: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 10) இறந்தோர் எங்கே போகின்றனர்? மனிதவர்க்கத்தின் பொது கல்லறையாகிய ஷியோலுக்கு (எபிரெயுவில், sheʼohlʹ). இறந்துபோன நம்முடைய அன்பானவர்கள் எதைக் குறித்தும் உணர்வுள்ளவர்களாக இல்லை. அவர்கள் துன்பப்பட்டுக்கொண்டில்லை, அவர்கள் எவ்வகையிலும் நம்மைப் பாதிக்கமுடியாது.
10 நாம் அனைவரும் நம்முடைய அன்பானவர்களும் ஒருசில வருடங்கள் மாத்திரமே வாழ்ந்து பின்னர் என்றுமாக இல்லாமற்போய்விட வேண்டுமா? பைபிளின்படி அப்படியல்ல. ஆதாம் கலகம் செய்த சமயத்தில், மனிதரின் பாவத்தினுடைய பயங்கரமான விளைவுகளை மாற்றிட யெகோவா தேவன் உடனடியாக ஏற்பாடுகளை செய்தார். மனிதவர்க்கத்திற்கான கடவுளுடைய நோக்கத்தில் மரணம் ஒரு பாகமாக இருக்கவில்லை. (எசேக்கியேல் 33:11; 2 பேதுரு 3:9) ஆகவே, மரணம் என்பது நமக்கு அல்லது நம்முடைய அன்பானவர்களுக்கு முடிவாக இருக்க வேண்டியதில்லை.
‘நித்திரையடைதல்’
11 நம்மையும் நம்முடைய இறந்துபோன அன்பானவர்களையும் ஆதாமிய மரணத்திலிருந்து விடுவிப்பது யெகோவாவின் நோக்கமாக இருக்கிறது. ஆகவே, கடவுளுடைய வார்த்தை இறந்தோரை நித்திரையிலிருப்பதாக குறிப்பிடுகிறது. உதாரணமாக, தம்முடைய சிநேகிதன் லாசரு இறந்துவிட்டான் என்று அறிந்தபோது, இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்.” சீஷர்கள் இந்தக் கூற்றின் பொருளை உடனடியாக கிரகித்துக்கொள்ளாத காரணத்தால், இயேசு வெளிப்படையாக இவ்வாறு சொன்னார்: “லாசரு மரித்துப்போனான்.” (யோவான் 11:11, 14) அதற்குப்பின் இயேசு, லாசருவின் சகோதரிகளாகிய மார்த்தாளும் மரியாளும் தங்களுடைய சகோதரனின் மரணத்தைக் குறித்து துக்கித்துக்கொண்டிருந்த இடமாகிய பெத்தானியா பட்டணத்துக்குச் சென்றார். இயேசு மார்த்தாளிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்,” என்று சொன்னபோது, மனித குடும்பத்தின்மீது மரணத்தின் பாதிப்புகளை மாற்றிட கடவுள் கொண்டுள்ள நோக்கத்தில் விசுவாசத்தை அவள் வெளிப்படுத்தினாள். அவள் சொன்னாள்: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்.”—யோவான் 11:23, 24.
12 மரணத்துக்குப்பின் வேறு எங்காவது வாழ்ந்துகொண்டிருக்கும் சாவாமையுள்ள ஒரு ஆத்துமாவைப் பற்றி எதையும் மார்த்தாள் சொல்லவில்லை. லாசரு தொடர்ந்து வாழ்வதற்காக ஏதோ ஒரு ஆவி மண்டலத்திற்குள் ஏற்கெனவே சென்றுவிட்டான் என்பதாக அவள் நம்பிக்கொண்டில்லை. மார்த்தாளுக்கு இறந்தோரிலிருந்து உயிர்த்தெழும் அதிசயமான நம்பிக்கையில் விசுவாசம் இருந்தது. லாசருவின் உடலிலிருந்து சாவாமையுள்ள ஒரு ஆத்துமா பிரிந்துவிட்டது என்பதாக அல்ல, ஆனால் இறந்துபோன தன்னுடைய சகோதரன் இல்லாமற்போய்விட்டான் என்பதாகவே அவள் புரிந்துகொண்டாள். பரிகாரம் அவளுடைய சகோதரன் உயிர்த்தெழுப்பப்படுவதாகும்.
13 யெகோவா தேவன் மனிதவர்க்கத்தை மீட்பதற்கு இயேசு கிறிஸ்துவுக்கே அதிகாரமளித்திருக்கிறார். (ஓசியா 13:14) ஆகவே மார்த்தாளின் கூற்றுக்குப் பதிலளிப்பவராக இயேசு சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” (யோவான் 11:25) நான்கு நாட்களாக இறந்தவனாயிருந்த லாசருவின் கல்லறைக்குச் சென்று அவனை மறுபடியுமாக உயிருக்குக் கொண்டுவந்தபோது, இதன் சம்பந்தமாக கடவுள் கொடுத்திருந்த தம்முடைய வல்லமையை காண்பித்தார். (யோவான் 11:38-44) இந்த உயிர்த்தெழுதலை அல்லது இயேசு கிறிஸ்து நடப்பித்த மற்றவற்றை பார்த்தவர்களின் சந்தோஷத்தை சற்று கற்பனை செய்துபாருங்கள்!—மாற்கு 5:35-42; லூக்கா 7:12-16.
14 இதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள்: மரணத்துக்குப் பின் சாவாமையுள்ள ஒரு ஆத்துமா தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறதென்றால், யாருமே உயிர்த்தெழுப்பப்படவோ உயிருக்குக் கொண்டுவரப்படவோ தேவை இருக்காது. உண்மையில், லாசருவைப் போன்ற ஒருவர் அதிசயமான ஒரு பரலோக வெகுமதியை ஏற்கெனவே அடைந்துவிட்டிருந்தால் பூமியின்மீது அபூரணமான ஒரு வாழ்க்கைக்கு அவனைத் திரும்ப உயிர்த்தெழுப்புவது தயவுள்ள காரியமாக இருக்காது. உண்மையில், “சாவாமையுள்ள ஆத்துமா” என்ற சொற்றொடரை பைபிள் ஒருபோதும் பயன்படுத்துவது கிடையாது. மாறாக, பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்பதாக வேதவாக்கியங்கள் சொல்கின்றன. (எசேக்கியேல் 18:4, 20) ஆகவே மரணத்துக்கு உண்மையான பரிகாரமாக பைபிள் உயிர்த்தெழுதல் ஏற்பாட்டை சுட்டிக்காண்பிக்கிறது.
“ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ளவர்கள் அனைவரும்”
15 “உயிர்த்தெழுதல்” என்பதற்கு இயேசுவின் சீஷர்கள் பயன்படுத்திய வார்த்தையின் நேர்பொருள் “எழும்புவது” அல்லது “எழுந்து நிற்பது,” என்பதாகும். இது மரணத்தின் உயிரற்ற நிலைமையிலிருந்து எழும்புவது—மனிதவர்க்கத்தின் பொது பிரேதக் குழியிலிருந்து எழுந்து நிற்பதாகும். யெகோவா தேவனால் ஒரு நபரை சுலபமாக உயிர்த்தெழுப்பிவிட முடியும். ஏன்? ஏனென்றால் யெகோவாவே உயிரை தோற்றுவித்தவராக இருக்கிறார். இன்று, மனிதர்களால் ஆண்கள் மற்றும் பெண்களின் குரல்களையும் உருவங்களையும் ஒரு வீடியோ நாடாவில் பதிவுசெய்து, இந்தத் தனிநபர்கள் இறந்தபின்பு இந்தப் பதிவுகளைத் திரும்பப் போட்டு பார்க்கமுடியும். அப்படியென்றால் நிச்சயமாகவே, நம்முடைய சர்வ வல்லமையுள்ள படைப்பாளர் எந்த ஒரு தனிநபரின் விவரங்களையும் பதிவுசெய்து அவனுக்கு அல்லது அவளுக்குப் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு உடலைக் கொடுத்து அதே நபரை உயிர்த்தெழுப்ப முடியும்.
16 இயேசு கிறிஸ்து சொன்னார்: “ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ளவர்கள் அனைவரும் அவருடைய [இயேசுவினுடைய] குரலைக் கேட்டு வெளிவரும் நேரம்வருகிறது. நல்ல காரியங்களைச் செய்தவர்கள் ஜீவனுக்குரிய ஓர் உயிர்த்தெழுதலுக்கும் தீய காரியங்களை பழக்கமாய் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்புக்குரிய ஓர் உயிர்த்தெழுதலுக்கும் வருவார்கள்.” (யோவான் 5:28, 29, NW) யெகோவாவின் ஞாபகத்தில் இருக்கும் அனைவரும் உயிர்த்தெழுப்பப்பட்டு அவருடைய வழிகளில் போதிக்கப்படுவார்கள். தேவனைப் பற்றிய அறிவுக்கு இசைவாக செயல்படுகிறவர்களுக்கு இது ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலாக இருக்கும். என்றபோதிலும், கடவுளுடைய போதனைகளையும் ஆட்சியையும் நிராகரித்துவிடுகிறவர்களுக்கு இது கண்டனத்துக்குரிய நியாயத்தீர்ப்புக்கான உயிர்த்தெழுதலாக இருக்கும்.
17 இயல்பாகவே, யெகோவாவின் ஊழியர்களாக நீதியுள்ள போக்கைப் பின்தொடர்ந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். உண்மையில், உயிர்த்தெழுதல் நம்பிக்கையானது, வன்முறையான துன்புறுத்தலின் விஷயத்திலும்கூட மரணத்தை எதிர்ப்பட அநேகரை பலப்படுத்தியிருக்கிறது. கடவுள் அவர்களை மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். (மத்தேயு 10:28) ஆனால் இலட்சக்கணக்கானோர், கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களுக்கு இணங்கி நடப்பார்களா என்பதைக் காண்பிக்காமலே இறந்துவிட்டிருக்கிறார்கள். அவர்களும்கூட உயிர்த்தெழுப்பப்படுவர். இதன் சம்பந்தமாக யெகோவாவின் நோக்கத்தைக் குறித்து நம்பிக்கையுள்ளவராக அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று நான் தேவனிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.’—அப்போஸ்தலர் 24:15.
18 அப்போஸ்தலன் யோவான் கடவுளுடைய சிங்காசனத்துக்கு முன்பாக உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் நிற்கின்ற கிளர்ச்சியூட்டும் தரிசனம் ஒன்றை கண்டார். யோவான் பின்னர் எழுதினார்: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் [“ஹேடீஸும்,” NW] தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.” (வெளிப்படுத்துதல் 20:12-14) அதைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள்! கடவுளுடைய ஞாபகத்திலிருக்கும் அனைவருக்கும் மனிதவர்க்கத்தின் பொது கல்லறையாகிய ஹேடீஸ் (கிரேக்குவில் haiʹdes) அல்லது ஷியோலிலிருந்து விடுவிக்கப்படும் எதிர்பார்ப்பு இருக்கிறது. (சங்கீதம் 16:10; அப்போஸ்தலர் 2:31) அவர்கள் கடவுளைச் சேவிப்பார்களா என்பதை தங்களுடைய செயல்களினால் நிரூபிக்க ஒரு வாய்ப்பைக் கொண்டிருப்பர். அதற்குப்பின், “மரணமும் ஹேடீஸும்,” ‘அக்கினிக் கடல்’ என்றழைக்கப்படுவதற்குள் தள்ளப்படும், இது “கெஹன்னா” என்ற பதத்தைப் போலவே முழுமையாக அழிக்கப்படுவதை அடையாளப்படுத்துகிறது. (லூக்கா 12:5) உயிர்த்தெழுதல் முழுமையடையும்போது மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேத கல்லறைதானே காலியாக்கப்பட்டு இல்லாமல் போகும். கடவுள் எவரையும் வாதிப்பதில்லை என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொள்வது எத்தனை ஆறுதலளிப்பதாக உள்ளது!—எரேமியா 7:30, 31.
எங்கே உயிர்த்தெழுந்து வருவார்கள்?
19 வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான ஆண்களும் பெண்களும் பரலோகத்தில் ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்படுவர். இயேசுவோடு ராஜாக்களும் ஆசாரியர்களுமாய், முதல் மனிதனாகிய ஆதாமிலிருந்து மனிதவர்க்கம் சுதந்தரித்துக்கொண்டிருக்கும் மரணத்தின் எல்லா பாதிப்புகளையும் மாற்றிவிடுவதில் அவர்கள் பங்குகொள்வர். (ரோமர் 5:12; வெளிப்படுத்துதல் 5:9, 10) கிறிஸ்துவோடு ஆட்சிசெய்ய கடவுள் எத்தனை பேரை பரலோகத்துக்கு எடுத்துச்செல்வார்? பைபிளின் பிரகாரம் 1,44,000 பேரை மட்டுமே. (வெளிப்படுத்துதல் 7:4; 14:1) யெகோவா இந்த உயிர்த்தெழுப்பப்படும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பரலோகத்தில் வாழும் பொருட்டு ஒரு ஆவி உடலைத் தருவார்.—1 கொரிந்தியர் 15:35, 38, 42-45; 1 பேதுரு 3:18.
20 இறந்துபோயிருக்கும் பெரும்பாலானவர்கள் ஒரு பரதீஸிய பூமிக்குள் உயிர்த்தெழுப்பப்படுவர். (சங்கீதம் 37:11, 29; மத்தேயு 6:10) பரலோகத்துக்கு சிலரை உயிர்த்தெழுப்புவதற்கு ஒரு காரணம் பூமியிடமாக கடவுளுடைய நோக்கத்தை முடிப்பதற்கே ஆகும். பரலோகத்திலுள்ள இயேசு கிறிஸ்துவும் 1,44,000 பேரும் நம்முடைய முதல் பெற்றோர் தூக்கியெறிந்துவிட்ட பரிபூரணத்துக்குக் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தை படிப்படியாக கொண்டுசெல்வர். இது உயிர்த்தெழுப்பப்பட்டவர்களையும் உட்படுத்தும் என்பது தமக்கு பக்கத்தில் அறையப்பட்டிருந்த இறந்துகொண்டிருந்த மனிதனிடம், “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்,” என்று இயேசு சொன்னதிலிருந்து காண்பிக்கப்படுகிறது.—லூக்கா 23:42, 43.
21 இன்று இத்தனை தவிப்பை உண்டுபண்ணும் மரணம் பரதீஸிய பூமியில் நீக்கப்பட்டுவிடும். (ரோமர் 8:19-21) யெகோவா தேவன் “மரணத்தை ஜெயமாக விழுங்குவார்,” என்பதாக தீர்க்கதரிசியாகிய ஏசாயா அறிவித்தார். (ஏசாயா 25:8) கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் வேதனையிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையை அனுபவிக்கும் அந்தக் காலத்தைப் பற்றிய ஒரு தரிசனம் அப்போஸ்தலன் யோவானுக்குக் கொடுக்கப்பட்டது. ஆம், ‘தேவன்தாமே அவர்களோடேகூட இருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.’—வெளிப்படுத்துதல் 21:1-4.
22 பைபிளின் தெளிவான போதனைகள் இறந்தோருக்கு என்ன நேரிடுகிறது என்பதைப் பற்றிய குழப்பத்தை நீக்குகின்றன. அழிக்கப்படப் போகும் “கடைசி சத்துரு” மரணம் என்பதாக வேதவாக்கியங்கள் வெளிப்படையாகச் சொல்கின்றன. (1 கொரிந்தியர் 15:26) உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றிய அறிவிலிருந்து நாம் என்னே பலத்தையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ள முடியும்! கடவுளுடைய ஞாபகத்திலுள்ள இறந்துபோன நம்முடைய அன்பானவர்கள் தம்மை நேசிக்கிறவர்களுக்காக அவர் வைத்திருக்கும் எல்லா நல்ல காரியங்களையும் அனுபவிப்பதற்காக மரண நித்திரையிலிருந்து எழுந்து வருவார்கள் என்பதற்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம்! (சங்கீதம் 145:16) இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாக நிறைவேற்றப்படும். ஆனால் அதனுடைய ஆட்சி எப்போது ஆரம்பமாக வேண்டியிருந்தது? நாம் பார்க்கலாம்.
உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்
மனிதருக்குள் இருக்கும் அந்த ஆவி என்ன?
இறந்தோரின் நிலைமையை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?
யார் உயிர்த்தெழுப்பப்படுவர்?
[கேள்விகள்]
1. அன்பான ஒருவர் இறந்துபோகையில் மக்கள் எவ்வாறு உணருகின்றனர்?
2. மரணத்தின் சம்பந்தமாக கலக்கமுறச்செய்யும் என்ன கேள்விகள் எழும்புகின்றன?
3. சாக்ரட்டீஸ் மற்றும் பிளேட்டோ மரணத்தைப்பற்றி என்ன கருத்தை உடையவர்களாக இருந்தனர், இது இன்று எவ்வாறு மக்களைப் பாதிக்கிறது?
4. (அ) ஆத்துமாவைப்பற்றி ஆதியாகமம் நமக்கு என்ன சொல்கிறது? (ஆ) ஆதாமை உயிருள்ளவனாக்குவதற்கு கடவுள் அவனுக்குள் என்ன வைத்தார்?
5, 6. (அ) “உயிர்சக்தி” என்பது என்ன? (ஆ) சங்கீதம் 146:4-ல் குறிப்பிடப்பட்டுள்ள “ஆவி” உடலுக்கு உயிரூட்டுவதை நிறுத்திக் கொள்கையில் என்ன சம்பவிக்கிறது?
7. ஆதாம் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் அவனுக்கு என்ன சம்பவிக்கும்?
8. ஆத்துமாக்களாக, எந்த விதத்தில் மனிதர்கள் மிருகங்களுக்கு மேலானவர்களாக இல்லை?
9. இறந்தோரின் நிலை என்ன, அவர்கள் எங்கே போகின்றனர்?
10. மரணம் முடிவாக இருக்க வேண்டியதில்லை என்பதாக நாம் ஏன் சொல்லமுடியும்?
11. இயேசு இறந்துபோயிருந்த தம்முடைய சிநேகிதன் லாசருவின் நிலைமையை எவ்வாறு விவரித்தார்?
12. துக்கத்திலிருந்த மார்த்தாளுக்கு இறந்தோரைப்பற்றி என்ன நம்பிக்கை இருந்தது?
13. கடவுள் கொடுத்திருக்கும் எந்த வல்லமையை இயேசு உடையவராக இருந்தார், இந்த வல்லமையை அவர் எவ்விதமாக காண்பித்தார்?
14. உயிர்த்தெழுதலும் சாவாமையுள்ள ஒரு ஆத்துமா பற்றிய கருத்தும் ஏன் பொருத்தமற்றதாக உள்ளது?
15. (அ) “உயிர்த்தெழுதல்” என்ற பதம் எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) தனி நபர்களை உயிர்த்தெழுப்புவது ஏன் யெகோவா தேவனுக்குப் பிரச்சினையாக இருக்காது?
16. (அ) ஞாபகார்த்த கல்லறையிலுள்ள அனைவரையும் குறித்து இயேசு என்ன வாக்குறுதியைக் கொடுத்தார்? (ஆ) ஒரு நபரின் உயிர்த்தெழுதல் எப்படியாக அமையும் என்பதை எது தீர்மானிக்கும்?
17. யார் உயிர்த்தெழுப்பப்படுவர்?
18. (அ) அப்போஸ்தலன் யோவான் உயிர்த்தெழுதலைப்பற்றிய என்ன தரிசனத்தைப் பெற்றார்? (ஆ) ‘அக்கினிக் கடலில்’ அழிக்கப்படுவது என்பது என்ன, இந்தக் ‘கடல்’ எதை அடையாளப்படுத்துகிறது?
19. மனிதவர்க்கத்தில் ஒரு சிலர் ஏன் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுவர், என்ன வகையான உடலை கடவுள் அவர்களுக்குத் தருவார்?
20. உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் உட்பட கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் எதை அனுபவிக்கும்?
21. ஏசாயா தீர்க்கதரிசி மற்றும் அப்போஸ்தலன் யோவானின் பிரகாரம் மரணத்துக்கு என்ன நேரிடும்?
22. உயிர்த்தெழுதலைப்பற்றிய அறிவு உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
[பக்கம் 85-ன் படம்]
கல்லறையிலிருந்து லாசருவை இயேசு அழைத்தது போலவே, லட்சக்கணக்கானோர் உயிர்த்தெழுப்பப்படுவர்
[பக்கம் 86-ன் படம்]
‘கடவுள் மரணத்தை ஜெயமாக விழுங்கும்போது’ சந்தோஷம் வியாபித்திருக்கும்