-
‘வாழ்வின் புத்தகத்தில்’ உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கிறதா?காவற்கோபுரம் (படிப்பு)-2022 | செப்டம்பர்
-
-
வாழ்வு பெறும்படியும் நியாயத்தீர்ப்பு பெறும்படியும் உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள்
13-14. (அ) யோவான் 5:29-ஐ முன்பு நாம் எப்படிப் புரிந்துகொண்டோம்? (ஆ) அந்த வசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?
13 பூமியில் உயிரோடு எழுப்பப்படப்போகிறவர்களைப் பற்றியும் இயேசு சொன்னார். உதாரணத்துக்கு, “நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள். நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்று சொன்னார். (யோவா. 5:28, 29) இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன?
14 இயேசு சொன்னதை முன்பு நாம் எப்படிப் புரிந்துகொண்டோம்? நினைவுக் கல்லறைகளில் இருக்கிறவர்கள் உயிர்த்தெழுந்த பின்பு என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி இயேசு இங்கே சொல்கிறார் என்று முன்பு நாம் நினைத்தோம். அதாவது, உயிரோடு வருகிற சிலர் நல்லது செய்வார்கள் என்றும் சிலர் கெட்டது செய்வார்கள் என்றும் நினைத்தோம். ஆனால், அவர்கள் நல்லது செய்வார்கள் என்றும், கெட்டது செய்வார்கள் என்றும் இயேசு சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். அதற்குப் பதிலாக, “நல்லது செய்தவர்கள்” என்றும், “கெட்டதைச் செய்துவந்தவர்கள்” என்றும்தான் சொன்னார். அப்படியென்றால், இறந்துபோவதற்கு முன்பு அவர்கள் செய்த செயல்களைப் பற்றித்தான் இயேசு சொன்னார். இது நமக்கு நியாயமாகவும் படுகிறது இல்லையா? ஏனென்றால், பூஞ்சோலை பூமியில் கெட்டது செய்பவர்கள் இருக்கவே மாட்டார்கள். அநீதிமான்கள் சாவதற்கு முன்புதான் கெட்ட விஷயங்களைச் செய்திருப்பார்கள். ஆனால், “வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்றும், “நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்றும் இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன?
15. யார் “வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்,” ஏன்?
15 நீதிமான்கள், அதாவது சாவதற்கு முன்பு நல்லது செய்தவர்கள், “வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.” ஏனென்றால், அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும். அப்படியென்றால், “நல்லது செய்தவர்கள்” உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று யோவான் 5:29-ல் சொல்லப்பட்டிருப்பதும் ‘நீதிமான்கள்’ உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று அப்போஸ்தலர் 24:15-ல் சொல்லப்பட்டிருப்பதும் ஒன்றுதான். இந்த விளக்கம் ரோமர் 6:7-வுடன் ஒத்துப்போகிறது. “இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்? நீதிமான்கள் செய்யும் பாவங்களை அவர்கள் சாகும்போது யெகோவா ரத்து செய்துவிடுகிறார். அதேசமயத்தில், அவர்கள் உண்மையோடு செய்த சேவையை அவர் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார். (எபி. 6:10) ஆனாலும், அந்த நீதிமான்களுடைய பெயர்கள், தொடர்ந்து வாழ்வின் புத்தகத்தில் இருக்க வேண்டுமென்றால் கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பு.
16. ‘நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவது’ என்றால் என்ன?
16 சாவதற்கு முன்பு மோசமான விஷயங்களை செய்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் இறந்தபோது அவர்களுடைய பாவங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் உயிரோடு இருந்தபோது யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்யவில்லை. அதனால், அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் எழுதப்படவில்லை. ‘கெட்டது செய்துவந்தவர்கள்’ உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று யோவான் 5:29-ல் சொல்லப்பட்டிருப்பதும் ‘அநீதிமான்கள்’ உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று அப்போஸ்தலர் 24:15-ல் சொல்லப்பட்டிருப்பதும் ஒன்றுதான். இவர்கள் “நியாயத்தீர்ப்பு பெறும்படி உயர்த்தெழுப்பப்படுவார்கள்.”c அதாவது, இவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்களா இல்லையா என்பதை இயேசு கிறிஸ்து பார்ப்பார். (லூக். 22:30) வாழ்வின் புத்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் எழுதப்படலாமா, வேண்டாமா என்று இயேசு முடிவு எடுக்க வேண்டுமென்றால் அதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். இந்த அநீதிமான்கள் தங்களுடைய பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு யெகோவாவுக்குத் தங்களையே அர்ப்பணிக்கும்போதுதான், அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் புத்தகத்தில் எழுதப்படும்.
-
-
‘வாழ்வின் புத்தகத்தில்’ உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கிறதா?காவற்கோபுரம் (படிப்பு)-2022 | செப்டம்பர்
-
-
c இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிற “நியாயத்தீர்ப்பு” என்ற வார்த்தை தண்டனைத் தீர்ப்பை அர்த்தப்படுத்துகிறது என்று முன்பு சொல்லியிருந்தோம். உண்மைதான், “நியாயத்தீர்ப்பு” என்ற வார்த்தைக்கு அந்த அர்த்தம் இருக்கலாம். ஆனால், இந்த வசனத்தின் சூழமைவைப் பார்க்கும்போது, இயேசு இங்கே “நியாயத்தீர்ப்பு” என்ற வார்த்தையைப் பொதுவான ஒரு அர்த்தத்தில்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெரிகிறது. இங்கு “நியாயத்தீர்ப்பு” என்பது மதிப்பிடுவதையும் கண்காணிப்பதையும் குறிக்கிறது. இல்லையென்றால், ஒரு கிரேக்க பைபிள் அகராதி சொல்கிறபடி, “ஒருவருடைய நடத்தையைப் பரிசோதிப்பதை” குறிக்கிறது.
-