பைபிளின் கருத்து
மாஸ் கிறிஸ்தவர்களின் நோக்குநிலை என்ன?
இரண்டாம் போப் ஜான் பால் குறிப்பிட்டதாக த நியூ யார் டைம்ஸ் பின்வருமாறு அறிவித்தது: “ஒரு கத்தோலிக்கர் மாஸுக்கு செல்லவில்லை என்றால் அவர் பாவம் செய்வதாக சர்ச் கருதுகிறதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.” மதப்பற்றுள்ள கத்தோலிக்கர்கள் இந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. மாஸ் என்றால் என்ன? சர்ச்சும் பைபிளும் இந்த விஷயத்தில் ஒத்துப்போகின்றனவா?
கத்தோலிக்கர்களிடம் எதிர்பார்க்கப்படுபவை என்ற ஆங்கில புத்தகத்தில் கத்தோலிக்க பாதிரி மார்ட்டின் ஜே. ஸ்காட், மாஸுக்கு இவ்வாறு விளக்கமளிக்கிறார்: “கல்வாரியிலோ கிறிஸ்துவின் பலி இரத்தத்தோடு செலுத்தப்பட்டது. மாஸிலோ கிறிஸ்துவின் பலி இரத்தமின்றி செலுத்தப்படுகிறது. அடிப்படையில் மாஸ் என்பது சிலுவையில் பலியாக செலுத்தப்பட்டதற்கு முற்றிலும் சமமே. இது வெறும் சொல்லணியோ, உருவக வழக்கோ, மிகைப்படுத்தி கூறப்பட்டதோ அல்ல. கடவுளுடைய குமாரனை நம்முடைய பலிபீடத்திற்கு கொண்டுவந்து கடவுளுக்கு பலி செலுத்துவதை மாஸ் அர்த்தப்படுத்துகிறது.”
மாஸ்—மறைநூலின் போதனையா?
மதப்பற்றுள்ள கத்தோலிக்கர்கள், மாஸ் மறைநூலின் போதனைதான் என்பதாக நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக கர்த்தருடைய இராப்போஜனத்தில் இயேசு சொன்ன வார்த்தைகளை இவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் தம்முடைய அப்போஸ்தலருக்கு பகிர்ந்தளித்தபோது அப்பத்தைக் குறித்து இயேசு, “இஃது என் உடல்” என்பதாக சொன்னார். திராட்சை ரசத்தை குறிப்பிடும்போது “என் இரத்தம் இது” என்பதாக கூறினார். (மத்தேயு 26:26-28) a இயேசு இதை சொன்னபோது தம்முடைய உடலையும் இரத்தத்தையும் முறையே அப்பமாகவும் திராட்சை ரசமாகவும் உண்மையிலேயே மாற்றினார் என்பதாக கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா (1967) பின்வருமாறு எச்சரிக்கிறது: “ ‘இஃது எனது உடல்’ அல்லது ‘என் இரத்தம் இது’ என்ற வார்த்தைகளை நாம் அப்படியே சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணமாக, ‘அறுவடை, உலகின் முடிவு’ (மத் 13:39) அல்லது ‘உண்மையான திராட்சைக் கொடி நானே’ (அருள 15:1) என்ற வசனங்களை கவனிக்கலாம். இந்த வாக்கியங்களில் உள்ள கிரேக்க வினைச்சொல் வெறுமனே அடையாள அர்த்தத்தில் அல்லது பிரதிநிதித்துவம் செய்யும் அர்த்தத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.” ஆகவே மத்தேயு 26:26-28-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் சொற்றொடர், இராப்போஜனத்தில் அப்பமும் திராட்சை ரசமும் இயேசுவின் சொல்லர்த்தமான சரீரமாகவும் இரத்தமாகவும் மாறியது என்பதை நிரூபிக்கிறதில்லை என அதிகாரப்பூர்வமான இந்த என்ஸைக்ளோப்பீடியாவும்கூட ஒத்துக்கொள்கிறது.
இயேசு பின்வருமாறு சொன்னதை சிலர் குறிப்பிடலாம்: “நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. . . . என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்.” (அருளப்பர் 6:51, 54) இதை கேட்டுக்கொண்டிருந்த சிலர் இயேசுவின் வார்த்தைகளை சொல்லர்த்தமாக எடுத்துக்கொண்டதால் அதிர்ச்சியடைந்தனர். (அருளப்பர் 6:60) நாம் ஒருவேளை கேட்கலாம்: இயேசு உண்மையிலேயே அந்த சந்தர்ப்பத்தில் தம்முடைய உடலை அப்பமாக மாற்றினாரா? நிச்சயமாகவே இல்லை! இயேசு அடையாள அர்த்தத்தில் பேசிக்கொண்டிருந்தார். தம்முடைய பலியின் மூலமாக மனிதவர்க்கத்திற்கு உயிரை கொடுக்கவிருந்ததால் தம்மை அப்பத்திற்கு ஒப்பிட்டு பேசினார். அருளப்பர் 6:35, 40-ல் குறிப்பிடப்பட்டபடியே உண்பதும் குடிப்பதும் இயேசுவின்மீதுள்ள நம்பிக்கையை செயலில் காண்பிப்பதைக் குறிக்கிறது.
கத்தோலிக்க சர்ச்சின் முக்கிய சமயச்சடங்காக மாஸ் இருப்பதால் இறைவாக்கியங்களும் இதை ஆதரிக்கும் என்பதாக ஒருவர் எதிர்பார்க்கலாமா? வேதவசனங்கள் தெளிவாகவே அவ்விதம் ஆதரிக்கவில்லை. த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா (1913-ன் பதிப்பு) காரணத்தை விளக்கியது: “நம்முடைய கோட்பாட்டின் முக்கிய காரணம் . . . பாரம்பரியமே, இது வெகு பூர்வகாலங்கள் முதற்கொண்டு பூசையின் [மாஸின்] பலியின் வேண்டிப்பெறும் மதிப்பை அளிக்கிறது.” ஆம், ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் மாஸ், பாரம்பரியத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறதே தவிர பைபிளின்படி அல்ல.
என்னதான் உண்மை மனதோடு நடத்தப்பட்டாலும் பைபிளுக்கு முரண்படும் எந்த மரபும் கடவுளுக்கு ஏற்கத்தகுந்ததல்ல. தம்முடைய நாளில் வாழ்ந்த மதத்தலைவர்களை இயேசு இவ்வாறு கண்டனம் செய்தார்: “உங்கள் பரம்பரை வழக்கங்களால் கடவுளின் வார்த்தையை பயனற்றதாக்கிவிட்டீர்கள்.” (மத்தேயு 15:6, நியூ ஜெருசலேம் பைபிள்) இறைவார்த்தைகளுக்கு இயேசு அதிக மதிப்புக் கொடுத்தார். ஆகவே பரிசுத்த வசனங்களின் அடிப்படையில் மாஸ் பற்றிய போதனையை ஆராய்ந்து பார்ப்போமா?
இயேசு எத்தனை தடவை பலியிடப்பட்டார்?
சர்ச்சில் மாஸ் நடக்கும் ஒவ்வொரு தடவையும் இயேசு பலியிடப்படுவதாக கத்தோலிக்க சர்ச் போதிக்கிறது. இருப்பினும் இயேசு ஒவ்வொரு தடவையும் உண்மையிலேயே மரிப்பதில்லை, அது இரத்தமில்லா பலியாகும் என்பதாகவும் சர்ச் சப்பைக்கட்டுகட்டி வாதிடுகிறது. இந்த கருத்தை பைபிள் ஒத்துக்கொள்கிறதா? எபிரேயர் 10:12, 14-ல் (நி.ஜெ.பைபிள்) செல்லப்படுவதைக் கவனியுங்கள்: “[இயேசு] பாவங்களுக்காக ஒரே ஒரு பலியை அளித்து, கடவுளின் வலதுபுறத்தில் என்றென்றும் அமர்ந்துள்ளார். தாம் பரிசுத்தராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்.”
இருப்பினும், ‘நாம் எல்லாரும் பலதடவை பாவம் செய்வதால் இயேசு தம்மைத் தாமே மீண்டும் மீண்டும் பலியாக செலுத்தவேண்டாமா?’ என்பதாக ஒரு பக்திமிக்க கத்தோலிக்கர் ஆட்சேபிக்கலாம். பைபிளில் இதற்கான பதில் எபிரேயர் 9:25, 26-ல் இருக்கிறது: “அவர் [கிறிஸ்து] வானகத்திற்குள் நுழைந்தது தம்மைத் திரும்பத் திரும்ப ஒப்புக்கொடுப்பதற்காக அன்று. . . . உலகின் இறுதிக் காலமான இப்போது தம்மைத் தாமே பலியிட்டு, பாவங்களைத் தொலைக்க ஒரேமுறை உலகில் தோன்றினார்.” கிறிஸ்து “தம்மைத் திரும்பத் திரும்ப ஒப்புக்கொடுப்பதற்காக அன்று” என்று குறிப்பிட்ட விஷயத்தை மிகவும் கவனமாக சிந்தியுங்கள். உரோமையர் 5:19-ல் அப்போஸ்தலனாகிய பவுல் காரணத்தைக் கொடுக்கிறார்: “ஒரு மனிதனின் [ஆதாமின்] கீழ்ப்படியாமையால் அனைவரும் பாவிகளானதுபோல், ஒருவரின் [இயேசுவின்] கீழ்ப்படிதலால் அனைவரும் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.” ஆதாமுடைய கீழ்ப்படிதலற்ற ஒரு நடவடிக்கையால் நாம் எல்லாரும் மரணத்திற்குள் அடிமைகளாக விற்கப்பட்டிருக்கிறோம்; எல்லாரையும் மீட்க இயேசு ஒரே முறை தம்மையே பலியாக கொடுத்தார்; அந்தப் பலியில் விசுவாசம் வைப்பதன் அடிப்படையில் இப்பொழுதே நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பையும் எதிர்காலத்தில் நிலைவாழ்வையும் நாம் பெற்றுக்கொள்வோம்.
இயேசு ஒரே ஒரு முறை பலியிடப்படுவதற்கும் மீண்டும் மீண்டுமாக பலியிடப்படுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இயேசுவின் பலிக்கு எந்தளவுக்கு போற்றுதல் இருக்கிறது என்பதை அது உட்படுத்துகிறது. இதுவரை கொடுக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த பரிசாக இயேசுவின் பலி இருக்கிறது. ஆம், இப்பரிசு மதிப்புமிக்கதாகவும் பூரணமானதாகவும் இருக்கிறது. ஆகவே இது மீண்டும் மீண்டும் செலுத்தப்பட வேண்டிய அவசியம் ஒருபோதுமில்லை.
சந்தேகமில்லாமல் இயேசுவின் பலி நாம் நினைவுகூருவதற்கு தகுதியானதுதான். ஆனால் ஒரு நிகழ்ச்சியை நினைவுகூருவதற்கும் அதை மீண்டும் மீண்டும் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணத்திற்கு திருமணமான ஒரு தம்பதியை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்கு திருமணம் நடந்த அந்த நாளை நினைவுகூருவார்களே தவிர உண்மையிலேயே அப்போது நடந்த சடங்குகளை அப்படியே மீண்டும் நடத்த மாட்டார்கள். ஒவ்வொரு வருடமும் யெகோவாவின் சாட்சிகள் இயேசுவினுடைய மரணத்தின் வருடாந்தர நினைவு ஆசரிப்பை அனுசரிக்கிறார்கள். “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்கு சாட்சிகள் கீழ்ப்படிந்து அதை ஆசரிக்கிறார்கள்; அந்த ஆசரிப்பு அவரையே பலியாக கொடுப்பதல்ல. (லூக்காஸ் 22:19) இதனோடுகூட வருடம் முழுவதும் இக்கிறிஸ்தவர்கள், தங்களுடைய வாழ்க்கையையும் செயல்களையும் நம்பிக்கைகளையும் மறைநூலுக்கு இசைய கொண்டுவருவதற்கு கடுமையாக முயற்சிக்கிறார்கள். இதன் வாயிலாக ஆண்டவராகிய யெகோவாவோடும் இயேசு கிறிஸ்துவோடும் அனலான உறவை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.
இதற்காக, இவர்கள் தங்களுடைய எண்ணங்களில் மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. மனித பாரம்பரியங்களை அல்ல, மாறாக இறைவாக்கியத்தை உண்மையுடன் ஆதரித்தால் கடவுளிடமிருந்து ஆசி பெறமுடியும் என்பதை சாட்சிகள் அறிந்திருப்பதால் மகிழ்ச்சியடைகின்றனர். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, இயேசு ஒரே தடவை சிந்தின பலியின் இரத்தத்தில் விசுவாசத்தை சாட்சிகள் காட்டுவார்களேயானால் அவர்களுடைய எல்லா பாவத்தையும் அந்த இரத்தம் நீக்கிவிடும்.—1 அருளப்பர் 1:8, 9.
[அடிக்குறிப்புகள்]
a குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட எல்லா வசனங்களும் தமிழ் கத்தோலிக்க பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவை.
[பக்கம் 26-ன் படம்]
செ. கிலஸின் மாஸ் (நகல்)
[படத்திற்கான நன்றி]
Erich Lessing/Art Resource, NY