அதிகாரம் 67
“அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”
இயேசுவைக் கைது செய்ய காவலர்கள் அனுப்பப்படுகிறார்கள்
இயேசுவுக்கு ஆதரவாக நிக்கொதேமு பேசுகிறார்
கூடாரப் பண்டிகைக்காக இயேசு இன்னமும் எருசலேமில்தான் இருக்கிறார். ‘மக்களில் பலர் அவர்மேல் விசுவாசம் வைப்பதை’ பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார். மதத் தலைவர்களுக்கோ பயங்கர எரிச்சலாக இருக்கிறது. அதனால், அவரைக் கைது செய்ய காவலர்களை அனுப்புகிறார்கள். (யோவான் 7:31, 32) ஆனால், இயேசு அவர்களைப் பார்த்து ஒளிந்துகொள்ளவில்லை.
அதற்குப் பதிலாக, அவர் எருசலேமில் எல்லாருக்கும் முன்பாகத் தொடர்ந்து கற்பிக்கிறார். “இன்னும் கொஞ்சக் காலம்தான் உங்களோடு இருப்பேன், அதன் பின்பு என்னை அனுப்பியவரிடமே போய்விடுவேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் கண்டுபிடிக்க மாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்துக்கு உங்களால் வரவும் முடியாது” என்று அவர்களிடம் சொல்கிறார். (யோவான் 7:33, 34) அவர் சொன்னது யூதர்களுக்குப் புரியவில்லை. அதனால் அந்த யூதர்கள், “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி இவன் எங்கே போகப் போகிறான்? கிரேக்கர்கள் மத்தியில் சிதறியிருக்கிற யூதர்களிடம் போகப் போகிறானோ, கிரேக்கர்களுக்கும்கூட கற்பிக்கப் போகிறானோ? ‘என்னைத் தேடுவீர்கள், ஆனால் கண்டுபிடிக்க மாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்துக்கு உங்களால் வரவும் முடியாது’ என்று சொல்கிறானே, இதற்கு என்ன அர்த்தம்?” என்று பேசிக்கொள்கிறார்கள். (யோவான் 7:35, 36) இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றியும் தான் உயிர்த்தெழுந்து பரலோகத்துக்குப் போகப்போவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய எதிரிகளால் அங்கே வர முடியாது.
பண்டிகையின் ஏழாம் நாள் ஆரம்பிக்கிறது. பண்டிகை சமயத்தில், குருமார் ஒருவர் தினமும் காலையில் சீலோவாம் குளத்திலிருந்து எடுத்த தண்ணீரை, ஆலயத்தில் இருக்கிற பலிபீடத்தின் அடியில் வழிந்தோடும்படி ஊற்றுவார். இயேசு இந்தப் பழக்கத்தை மனதில் வைத்து, “ஒருவன் தாகமாக இருந்தால், அவன் என்னிடம் வந்து தண்ணீர் குடிக்கட்டும். ஒருவன் என்மேல் விசுவாசம் வைத்தால், வேதவசனத்தில் சொல்லியிருக்கிறபடி, ‘வாழ்வு தரும் தண்ணீர் அவனுக்குள்ளிருந்து ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்’” என்று மக்களிடம் சொல்கிறார்.—யோவான் 7:37, 38.
தன்னுடைய சீஷர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டு, பரலோகத்தில் வாழ்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதைப் பற்றித்தான் இயேசு இங்கே சொல்கிறார். இயேசு இறந்த பிறகுதான் அவர்கள் அபிஷேகம் செய்யப்படுவார்கள். அதாவது, அடுத்த வருஷம் பெந்தெகொஸ்தே நாளில், அவருடைய சீஷர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படுவார்கள். அன்றைக்கு அவர்கள் சத்திய வார்த்தைகளை மக்களிடம் பிரசங்கிக்க ஆரம்பிக்கும்போது வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிக்கும்.
இயேசு கற்பித்த விஷயங்களைக் கேட்ட சிலர், “நிச்சயமாகவே இவர்தான் வர வேண்டிய தீர்க்கதரிசி” என்று சொல்கிறார்கள். அதாவது, மோசேயைவிட பெரிய தீர்க்கதரிசி வருவார் என்று வேதவசனங்கள் இவரைப் பற்றித்தான் சொல்கின்றன என்று பேசிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், “இவர்தான் கிறிஸ்து” என்று சொல்கிறார்கள். ஆனால் வேறு சிலர், “கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? அவர் தாவீதின் வம்சத்தில், தாவீது குடியிருந்த பெத்லகேம் கிராமத்திலிருந்துதான் வருவாரென வேதவசனம் சொல்கிறது, இல்லையா?” என்று வாக்குவாதம் செய்கிறார்கள்.—யோவான் 7:40-42.
இப்படி இரண்டு விதமாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இயேசுவைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், யாரும் அவரைப் பிடிக்கவில்லை. இயேசுவைக் கைது செய்யப்போன காவலர்கள் வெறுங்கையோடு திரும்பிப் போகிறார்கள். “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் அவர்களிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர்கள், “அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை” என்று சொல்கிறார்கள். அதைக் கேட்டு மதத் தலைவர்களுக்குப் பயங்கர கோபம் வருகிறது. அதனால், “நீங்களுமா ஏமாந்துவிட்டீர்கள்? தலைவர்களிலும் பரிசேயர்களிலும் ஒருவராவது அவன்மேல் விசுவாசம் வைத்திருக்கிறார்களா? திருச்சட்டத்தைப் புரிந்துகொள்ளாத இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்று ஏளனமாகச் சொல்கிறார்கள்.—யோவான் 7:45-49.
இதைக் கேட்டதும், பரிசேயராகவும் நியாயசங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிற நிக்கொதேமு இயேசுவுக்கு ஆதரவாகப் பேசுகிறார். கிட்டத்தட்ட இரண்டரை வருஷங்களுக்கு முன்னால், அவர் ராத்திரி நேரத்தில் இயேசுவைச் சந்தித்து, அவர்மீது விசுவாசம் வைத்திருப்பதாகச் சொல்லியிருந்தார். இப்போது அவர், “ஒருவனை முதலில் விசாரித்து அவன் என்ன செய்தானென்று தெரிந்துகொள்ளாமல் அவனுக்குத் தீர்ப்பளிக்கும்படி நம்முடைய திருச்சட்டம் சொல்கிறதா?” என்று தைரியமாகக் கேட்கிறார். அதற்கு அவர்கள், “நீங்களும் கலிலேயரா என்ன? கலிலேயாவிலிருந்து எந்தத் தீர்க்கதரிசியும் வர மாட்டார் என்பதை வேதவசனங்களில் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள்” என்று சொல்கிறார்கள்.—யோவான் 7:51, 52.
கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று வேதவசனங்கள் நேரடியாகச் சொல்லவில்லை. ஆனாலும், கிறிஸ்து அங்கிருந்து வருவார் என்று அவை குறிப்பிட்டன. ‘மற்ற தேசத்தார் குடியிருக்கிற கலிலேயாவில் பெரிய வெளிச்சம்’ பிரகாசிக்கும் என்று அவை முன்கூட்டியே சொல்லியிருந்தன. (ஏசாயா 9:1, 2; மத்தேயு 4:13-17) அதோடு, வேதவசனங்கள் சொன்னபடியே, இயேசு பெத்லகேமில்தான் பிறந்தார்; தாவீதின் வம்சத்திலிருந்துதான் வந்தார். பரிசேயர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கலாம். ஆனாலும், மக்கள் மத்தியில் இயேசுவைப் பற்றிய தவறான கருத்துகளை அவர்கள் பரப்பியிருக்கலாம்.