சத்தியத்தை நழுவ விடாதீர்கள்
சத்தியத்தை ஏற்றுக்கொள்வதால் தான் சிலகாரியங்களை இழக்க நேரிடும் என்பதை பொந்தியு பிலாத்து ஒருவேளை உணர்ந்திருக்கக்கூடும். கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒருவனாக ஆவது, அவருடைய ஆட்சியை ஏற்றுக்கொள்வதையும் தன்னுடைய விவகாரங்களில் ஒரு முழு திருப்பத்தைச் செய்யவேண்டியதையும் குறித்தது. சரியாகவே சாலொமோன் நீதிமொழிகள் 23:23-ல் சொன்னான்: “சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே, அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் [தெளிந்துணர்வு, NW] வாங்கு.
“சத்தியத்தை வாங்குவதா?” என்று கேட்கிறீர்கள். ஆம், ஒருவர் சத்தியத்தையும் ஞானத்தையும் தெளிந்துணர்வையும் விலைகொடுத்து வாங்கவேண்டியதாயிருக்கிறது என்பதை பைபிள் மதித்துணரச் செய்கிறது. என்றபோதிலும் சத்தியம் கற்பனை செய்து பார்க்க முடியாதளவுக்கு மதிப்பு மிகுந்ததாயிருக்கிறது. ஏன், “அதை விற்காதே,” என்று சாலொமோன் புத்தி சொல்லுகிறான்!. மதிப்பில் வேறு எதுவுமே சத்தியத்துக்கு ஈடாகாது என்று சொல்வது போல் இருந்தது.
‘ஆனால் சத்தியம் என்பது என்ன?’ என்ற பிலாத்துவின் கேள்வியைப் பலர் எதிரொலிக்கின்றனர். சத்தியம் என்பது இன்று பலருக்கு புரிந்துகொள்வதற்குரிய ஒரு கருத்தாக இருக்கிறது. உதாரணமாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை சொன்னதாவது: “விஞ்ஞான உண்மை என்ற பதத்திற்கு ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைக் கொடுப்பது அல்லது பொருத்துவது கடினமான ஒரு காரியம். எனவே ‘உண்மை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம், நாம் ஓர் அனுபவத்தின் உண்மையை ஒரு கணிதத் தொடரை அல்லது ஒரு விஞ்ஞானக் கோட்பாட்டைக் கையாளுகிறோமா என்பதைச் சார்ந்து வித்தியாசப்படக்கூடியதாயிருக்கிறது. ‘மத சத்தியங்கள்’ எனக்கு எதையும் தெளிவுபடுத்துவதாக இல்லை.” (ஐடியாஸ் அண்ட் ஒப்பினியன்ஸ், அல்பர்ட் ஐன்ஸ்டீன்) சத்தியம் ஐன்ஸ்டீனுக்குப் பிடிபடவில்லை என்ற உண்மைதானே அது உங்களையும் கடந்துவிட வேண்டும் என்பதைக் குறிக்குமா? இல்லவே இல்லை.
“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்,” என்று இயேசு மிகத் தெளிவாகச் சொன்னார். (யோவான் 14:6) ஆம், “சத்தியம்” கிறிஸ்து இயேசுவையும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிறவராக, பாவமுள்ள மனிதவர்க்கத்தை மீட்பவராக, கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக நியமிக்கப்பட்டவராக பிரதான ஆசாரியராக, மற்றும் துன்மார்க்கரை அழிப்பவராக யெகோவா தேவனின் நோக்கங்களில் அவருடைய ஸ்தானத்தையும் மையமாகக் கொண்டிருக்கிறது. (ரோமர் 15:8; 1 தீமோத்தேயு 2:5, 6; யோவான் 3:16; எபேசியர் 1:20-22; தானியேல் 7:13, 14; மத்தேயு 6:9, 10; எபிரெயர் 4:14; வெளிப்படுத்தின விசேஷம் 19:11-21; 2 தெசலோனிக்கேயர் 1:7-9) என்றபோதிலும் ஒருவர் இந்தச் சத்தியத்தை எப்படி “வாங்க” முடியும்?
“அறிவை உட்கொள்ளுதல்”
யோவான் 17:3-லுள்ள இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் சத்தியத்தை வாங்க ஆரம்பிக்கிறார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை உட்கொள்ளுதலே நித்திய ஜீவனைக் குறிக்கிறது.” இதைத் தனியாகச் செய்வதாக இருந்தால் இது ஒரு பெரிய காரியமாக இருக்கும். முதலாம் நூற்றாண்டில் நீதிமன்ற அதிகாரியாகிய எத்தியோப்பியன் ஒருவன் இருந்தான். அவன் இந்தக் காரியத்தைத் தனியே செய்துபார்க்க முயற்சித்தான். ஆனால், கடினமான ஒரு பைபிள் தீர்க்கதரிசனத்தைப் படித்துப் புரிந்துகொள்ள முயன்ற அவனைப் பார்த்து சுவிசேஷகனாகிய பிலிப்பு, “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?” என்று கேட்டான். இதற்கு அந்த மனிதன்: “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?” என்றான் (அப்போஸ்தலர் 8:28-31) ஒருவேளை நீங்கள் அப்படி உணரக்கூடும்.
எனவே யெகோவாவின் சாட்சிகள் உங்களுடைய வீட்டிலேயே பைபிளை உங்களோடு சேர்ந்து படிக்க மனமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.a இப்படிப்பட்ட படிப்புகளுக்குக் கட்டணம் எதுவுமில்லை. “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்,” என்றார் இயேசு. (மத்தேயு 10:8) ஆனால் சத்தியத்தை வாங்குவது உங்களுக்கு இன்னொரு விதத்தில் செலவை உட்படுத்தும்—உங்களுடைய நேரத்தையும் முயற்சியையும் கேட்கிறது. என்றபோதிலும் இயேசு கிறிஸ்து—உயிருள்ளவரும் பரலோகங்களில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறவருமாகிய அவர்—நீங்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார். (லூக்கா 5:13-ஐ ஒப்பிடவும்) கடவுளுடைய ஆவி அவர்களை “சகல சத்தியத்திற்குள்ளும்” வழி நடத்தும் என்று தம்முடைய முதல் சீஷர்களுக்கு வாக்களித்தார். (யோவான் 16:13) இது உங்களுக்கும் பொருந்தக்கூடும். எனவே சத்தியத்தைக் கற்றுக்கொள்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைக்காதீர்கள்.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கும் பைபிள் படிப்பு உதவி புத்தகங்கள் மூலம் பைபிளை ஆழமாகப் படிப்பது அதிக எளிதாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரசுரங்களில் சிலவற்றின் பெயர்கள்தானே உண்மையிலேயே சத்தியத்தைத் தேடுபவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது: இவற்றில் சில நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம், ஆங்கிலத்தில் ஒரு புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல், ஒரே மெய்த் தேவனின் வணக்கத்தில் ஒன்றுபட்டிருத்தல், மற்றும் வாழ்க்கை—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது சிருஷ்டிப்பின் மூலமா?.b
இந்தப் பிரசுரங்கள் உங்களுக்கு வேத வசனங்களை புரியக்கூடிய நடையில், உங்கள் தற்கரீதியான எண்ணத்திற்கு மட்டுமல்லாமல் உங்கள் இருதயத்திற்கும் கவர்ச்சியாக ஆக்குகின்றன. அதன் உண்மைத்தன்மையாலும் ஆராய்ச்சியாலும் நடைமுறையான ஆலோசனையாலும் அது சத்தியம் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. இந்தப் பிரசுரங்களின் துணைகொண்டு பைபிள் சத்தியங்களை நீங்கள் படிக்கும்போது, “சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,” என்று இயேசு சொன்னதன் அர்த்தத்தைப் போற்ற ஆரம்பிப்பீர்கள். (யோவான் 8:32) இதில் “சத்தியம்” என்ற வார்த்தை, கடவுளுடைய எழுதப்பட்ட சத்திய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் கிறிஸ்தவ போதனைகளின் முழு தொகுதியையும் உட்படுத்துகிறது? (2 தீமோத்தேயு 2:15; எபேசியர் 1:13) சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுதல் ஏன் விடுதலையளிப்பதாயிருக்கிறது?
உதாரணமாக, “மரண பயம்” மனிதவர்க்கத்தை “ஜீவகாலமெல்லாம் அடிமைத்தனத்திற்குள்” வைத்திருக்கிறது. (எபிரெயர் 2:15) மரணத்திற்குப் பின் பரலோக ஆசியைப் பெறும் மங்கலான ஒரு நம்பிக்கையைப் பலர் கொண்டிருப்பினும் இது இப்படியாக இருக்கிறது. என்றபோதிலும் பைபிள் சத்தியங்கள் வீண் பயங்களிலிருந்து ஒருவரை விடுவிக்கிறது. மரித்தவர்கள் வாதனையான நெருப்பு மிகுந்த ஓர் இடத்தில் அவதிப்பட்டுக் கொண்டில்லை, ஏனென்றால் “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்,” என்று ஒருவர் கற்றுக்கொள்கிறார். (பிரசங்கி 9:5, 10; சங்கீதம் 146:4-ஐயும் பிரசங்கி 3:19, 20-ஐயும் பாருங்கள்) மரித்து பரலோகத்திற்குச் செல்லும் எந்தவித இயல்பான உள்ளுணர்வும் மனிதனுக்கு இல்லை என்று பைபிள் காண்பிக்கிறது. மறுபட்சத்தில், கடவுள் நித்திய கால நினைவையும் அவன் உள்ளத்திலே வைத்திருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் என்றென்றும் வாழவே விரும்புகிறான்!—பிரசங்கி 3:11. ரோமர் 5:12; 6:23-ஐயும் ஒப்பிடுங்கள்.
அந்த ஆசை பைபிள் குறிப்பிடும் ‘புதிய பூமியிலே’ நிறைவேற்றப்படும். (2 பேதுரு 3:13; மத்தேயு 6:9, 10-ஐயும் ஒப்பிடவும்.) “புதிய பூமியில்” ஜீவனை அடைபவர்கள் “பரதீஸை” அனுபவிப்பார்கள் என்று இயேசு குறிப்பிட்டார். (லூக்கா 23:43) அது வேதனையும் கண்ணீரும் நீங்கிய ஒரு உலகமாக இருக்கும் என்பதை மதித்துணர மற்ற வசனங்கள் உதவுகிறது! (வெளிப்படுத்துதல் 21:4; ஏசாயா 11:6-9) இந்த நம்பிக்கை உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றக்கூடும் என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்! ஆனால் முதலாவதாக நீங்கள அறிவை உட்கொள்ள வேண்டும்.
பெருமையை விட்டுக்கொடுத்தல்
சங்கீதம் 25:9-ல் பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.” இல்லை, பெருமையும் அகந்தையுமுள்ள ஆட்களுக்குக் கடவுள் சத்தியத்தை அளிக்க மாட்டார். “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.” (1 பேதுரு 5:5) சத்தியத்தைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை பொந்தியு பிலாத்துவுக்குக் கடுகளவாவது இருந்திருக்கக்கூடும். ஆனால், பிலாத்து ஒரு பிடிவாதக்காரன் என்று பூர்வ எழுத்தாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ரோமர்களுக்கோ யூத மதத்தினர் விசித்திரமான ஒரு மதத்தை அப்பியாசித்த வெறுக்கத்தகுந்த மக்களாக இருந்தனர்; இவர்களை அடக்கி வைக்க விரும்பினர்! பெருமையும் அரசியல் பேராசையுமே பிலாத்துவுக்கு இடறலாக இருந்தன.—நீதிமொழிகள் 16:18.
அப்படியே இன்றும் அநேகர் யெகோவாவின் சாட்சிகள் தாங்கியிருக்கும் செய்தியை அறிய சிறிதளவு ஆர்வமுள்ளவர்களாயிருக்கின்றனர். என்றபோதிலும் யெகோவாவின் சாட்சிகள் குறைந்த வருவாயுள்ளவர்களாயிருப்பதையும், அவர்கள் கூட்டங்களை நடத்தும் அடக்கமான இடங்கள் (இராஜ்ய மன்றங்கள்) கிறிஸ்தவ மண்டலத்தின் பெரிய பெரிய சர்ச்சுகளுடன் ஒப்பிடப்பட முடியாததுமாயிருப்பதையும், அவர்களில் வெகு சிலரே உயர் படிப்புள்ளவர்களாயிருப்பதையும் காண்பவர்களாயிருக்கக்கூடும். ஆனால் 1 கொரிந்தியர் 1:26-29-ல் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள்: “எப்படியெனில் சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்து கொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.”
அப்படிப்பட்ட “தாழ்ந்தவர்களிடமி”ருந்து சத்தியத்தைப் படிப்பது உங்களுடைய பெருமையை விட்டுக் கொடுப்பதைக் குறிக்கிறது; ஆனால் சத்தியத்திற்காக செலுத்தப்படும் அந்த விலை மிக அதிகமா?
அறிவைச் செயல்படுத்துதல்
விஷயங்களைத் தெரிந்துகொள்ளுதல்தானே—சத்தியத்தையுங்கூட தெரிந்து கொள்ளுதல்தானே—போதாது. எனவேதான் நாம் ஞானத்தை ’வாங்கும்படியாக’ துரிதப்படுத்தப்படுகிறோம். (நீதிமொழிகள் 23:23) அறிவின் பிரயோகிப்பே ஞானம்! “ஞானமே முக்கியம்” என்று சாலொமோன் சொன்னான். (நீதிமொழிகள் 4:5-7) ஆம், அறிவை செயல்படுத்தாவிட்டால் அதனால் என்ன பயன்? எனவே கடவுளுடைய வழிகளையும், சட்டங்களையும், பிரமானங்களையும், நினைப்பூட்டுதல்களையும், ஆலோசனைகளையும் கற்றுக்கொண்டப் பிறகு அவற்றை உங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். “ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்,” என்றார் இயேசு.—மத்தேயு 11:19.
பெந்தியு பிலாத்து சத்தியத்தை மறுத்தான். என்றபோதிலும், அந்தத் தவற்றை நீங்கள் செய்யக்கூடாது. பெருமை, பேராசை அல்லது வேதப்பூர்வமற்ற ஒரு தீயப் பழக்கத்தின்பேரில் உங்கள் பற்று ஆகிய காரணங்களால் சத்தியத்தை நழுவ விடுதல் முட்டாள்தனமான செயலாகும். “என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.” (சங்கீதம் 119:144) ஆம், சத்தியத்தையும் ஞானத்தையும் பெற்றுக்கொள்வதற்கான விலையைக் கொடுக்க மனமுள்ள ஒருவன் “பிழைத்திருக்கலாம்,” ஏனென்றால் அதை வாங்குபவன் “ஜீவனைக் கண்டவனாவான், யெகோவாவிடம் அவன் தயைப் பெறுவான்.”—நீதிமொழிகள் 8:35.
யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்த ஒருவர் இப்படியாகச் சொன்னார்: “சத்தியம் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்று சொல்லுவது ஒரு ஆசீர்வாதம்.” அது உங்களுடைய வாழ்க்கையையுங்கூட மாற்றக்கூடும். எனவே சத்தியத்தை நழுவ விடாதீர்கள்! சத்தியத்தையும் ஞானத்தையும் தெளிந்துணர்வையும் வாங்குவதற்கான இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதில் வருத்தப்பட மாட்டீர்கள். (w86 3/1)
[அடிக்குறிப்புகள்]
a இப்படிப்பட்ட வேதப்படிப்பு ஒன்றை நீங்கள் விரும்பினால் இந்த பத்திரிகையின் பிரசுரிப்போருக்கு எழுத தயங்காதீர்கள். தகுதியுள்ள ஊழியர் ஒருவர் உங்களை உங்கள் வீட்டில் வந்து சந்திக்க நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்பாடுசெய்வோம்.
b உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டவை.
[பக்கம் 4-ன் படம்]
பெருமை பொந்தியு பிலாந்து சத்தியத்தை நழுவ விடும்படி செய்திருக்கக்கூடும்