இருபத்தோறாம் அதிகாரம்
பயத்தையும் சந்தேகத்தையும் போக்க போராடினார்
1-3. பரபரப்பான ஒரு நாளில் பேதுரு எதையெல்லாம் பார்த்திருந்தார், அன்றிரவு அவருக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?
பேதுரு படாத பாடுபட்டு துடுப்பு போடுகிறார். அப்போது, இருளில் உற்றுப் பார்க்கிறார். ‘கீழ்வானில் மங்கலாக ஒளிக்கீற்று தென்படுகிறதே, பொழுது புலர ஆரம்பித்துவிட்டதோ’ என யோசிக்கிறார். மணிக்கணக்காகத் தண்டு வலித்ததால் அவரது முதுகும் தோள்பட்டையும் ஒடிவதுபோல் ஒரே வலி! புயல்காற்று அவரது கேசத்தைச் சீற்றத்துடன் கோதிவிடுகிறது... கலிலேயாக் கடலைக் கடைந்தெடுக்கிறது. கடல் அலைகள் அவரது படகில் மோத... சில்லென்ற தண்ணீர் அவர்மீது தெறிக்க... தொப்பலாக நனைந்துவிடுகிறார். ஆனாலும் சளைக்காமல் துடுப்பு போடுகிறார்.
2 இக்கரையில் இயேசுவைத் தனியே விட்டுவிட்டு பேதுருவும் அவரது தோழர்களும் படகேறி வந்திருக்கிறார்கள். அன்று இயேசு சில ரொட்டிகளையும் மீன்களையும் வைத்து ஆயிரக்கணக்கானோரின் வயிற்றுப் பசியை விரட்டியிருந்தார். ஆகவே, இயேசுவை ராஜாவாக்க வேண்டுமென மக்கள் துடித்தார்கள், அவரோ அரசியலில் ஈடுபட கொஞ்சம்கூட விரும்பவில்லை. அரசியல் ஆர்வம் சீடர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். மக்களிடமிருந்து விலகிவந்தபின், படகில் அக்கரைக்குப் போகச் சொல்லி சீடர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டார்; இவரோ ஜெபம் செய்ய தனியாக மலைமீது ஏறிப்போனார்.—மாற். 6:35-45; யோவான் 6:14-17-ஐ வாசியுங்கள்.
3 சீடர்கள் படகேறிய சமயத்தில் தலைக்கு மேலே முழுமதி முகம் காட்டிக்கொண்டிருந்தது; இப்போது மேற்கே அடிவானை நோக்கி மெதுவாக இறங்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், சீடர்கள் சில மைல் தூரம்தான் கடந்துவந்திருக்கிறார்கள். சீடர்கள் தங்களுடைய சக்தியெல்லாம் திரட்டி படகை செலுத்துவதால்... காற்றின் இரைச்சலும் கடலின் சீற்றமும் அவர்களுடைய காதைக் கிழிப்பதால்... ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளக்கூட முடிவதில்லை. அப்போது, பேதுரு ஒருவேளை ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்து போயிருக்கலாம்.
இரண்டு வருடங்களில், இயேசுவிடமிருந்து பேதுரு ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றிருந்தார், ஆனால் இன்னும் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது
4. என்ன விஷயத்தில் பேதுரு நமக்குச் சீரிய உதாரணமாகத் திகழ்கிறார்?
4 யோசிக்கத்தான் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றனவே! முதன்முதலில் நாசரேத்தூர் இயேசுவுடன் பேதுரு அறிமுகமாகி இரண்டுக்கும் மேலான வருடங்கள் உருண்டோடிவிட்டன. இயேசுவிடமிருந்து நிறையப் பாடங்களைக் கற்றுக்கொண்டார், ஆனால் இன்னும் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிக் கற்றுக்கொண்டதால்... பயம், சந்தேகம் போன்ற தடைக்கற்களைத் தகர்த்தெறியப் போராடியதால்... இன்று நமக்குச் சீரிய உதாரணமாகத் திகழ்கிறார். எப்படி என்று பார்க்கலாம்.
“நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்”
5, 6. பேதுரு எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்திவந்தார்?
5 இயேசுவை முதன்முதல் சந்தித்த அந்த நாள் பேதுருவின் நினைவுப் பெட்டகத்தைவிட்டு அகலவே அகலாது. “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்” என்ற சிலிர்ப்பூட்டும் செய்தியை முதன்முதலில் அவரிடம் சொன்னது அவருடைய சகோதரன் அந்திரேயாதான். அதுமுதல் பேதுருவின் வாழ்க்கை அடியோடு மாற ஆரம்பித்தது.—யோவா. 1:41.
6 பேதுரு கப்பர்நகூமில் குடியிருந்தார்; இந்த நகரம் கலிலேயாக் கடல் என்ற நன்னீர் ஏரியின் வடக்குக் கரையோரம் அமைந்துள்ளது. பேதுருவும் அந்திரேயாவும், செபெதேயுவின் மகன்களான யாக்கோபுடனும் யோவானுடன் கூட்டு சேர்ந்து மீன்பிடி தொழில் செய்துவந்தார்கள். பேதுருவின் வீட்டில் அவரது மனைவி மட்டுமல்ல, மாமியாரும் சகோதரன் அந்திரேயாவும்கூட வசித்துவந்தார்கள். மீன்பிடி தொழில் செய்து இவ்வளவு பேரையும் காப்பாற்றுவது சாமானிய விஷயமல்ல; அதற்குக் கடின உழைப்பு... சக்தி... திறமை... வேண்டுமே! அவர்கள் எத்தனையோ இரவுகள் தூக்கங்கெட்டு கடலுக்குச் செல்வதை... இரண்டு படகுகளுக்கு இடையே வலை வீசுவதை... வலைக்குள் விழுகிற மீன்களை மேலே இழுப்பதை... கொஞ்சம் உங்களுடைய கண்ணுக்குள் படம்பிடித்துப் பாருங்கள். இராப்பொழுது மட்டுமா வேலை, மீன்களைப் பிரித்தெடுத்து விற்பது... வலைகளைப் பழுதுபார்த்து சுத்தம் செய்வது... எனப் பகற்பொழுதும் ஒரே வேலைதான்.
7. இயேசுவைப் பற்றி பேதுரு என்ன கேள்விப்பட்டார், அது ஏன் மெய்சிலிர்க்கும் செய்தி?
7 பேதுருவின் சகோதரன் அந்திரேயா, ஒருகாலத்தில் யோவான் ஸ்நானகரின் சீடராய் இருந்தார் என பைபிள் சொல்கிறது. யோவான் கற்பித்த விஷயங்களை பேதுருவுக்கு அந்திரேயா சொல்லியிருப்பார், அவற்றை மிகுந்த ஆர்வத்துடன் அவரும் கேட்டிருப்பார். ஒருநாள் யோவான் ஸ்நானகர் நாசரேத்தூர் இயேசுவைச் சுட்டிக்காட்டி, “இதோ! கடவுளுடைய ஆட்டுக்குட்டி” என்று சொன்னதை அந்திரேயா கேட்டார்; சற்றும் தாமதிக்காமல் அவர் இயேசுவின் சீடரானார்; அதோடு, மேசியா வந்துவிட்டார் என்ற மெய்சிலிர்க்கும் செய்தியை பேதுருவிடம் வந்து ஆர்வம்பொங்க சொன்னார். (யோவா. 1:35-40) கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதேன் தோட்டத்தில் கலகம் நடந்தபோது, மனிதகுலத்துக்கு நம்பிக்கை தீபமேற்ற ஒரு விசேஷ நபர் வருவாரென யெகோவா தேவன் வாக்குறுதி தந்திருந்தார். (ஆதி. 3:15) அந்த நபரைத்தான்... மீட்பராகிய மேசியாவைத்தான்... அந்திரேயா சந்தித்திருந்தார்! பேதுருவும் இயேசுவைச் சந்திக்க ஓட்டமாய் ஓடினார்.
8. பேதுருவுக்கு இயேசு வைத்த பெயரின் அர்த்தம் என்ன, அது பொருத்தமற்றது என ஏன் சிலர் நினைக்கிறார்கள்?
8 அன்றுவரை சீமோன் அல்லது சிமியோன் என்ற பெயரில்தான் பேதுரு அறியப்பட்டிருந்தார். ஆனால் இயேசு அவரைப் பார்த்து, “ ‘நீ யோவானுடைய மகன் சீமோன்; இனி கேபா என அழைக்கப்படுவாய்’ என்றார். (கேபா என்ற வார்த்தை பேதுரு என மொழிபெயர்க்கப்படுகிறது).” (யோவா. 1:42) “கேபா” என்ற பெயர்ச்சொல்லுக்கு, “கல்” என்று அர்த்தம். இயேசு சொன்ன அந்த வார்த்தைகள் தீர்க்கதரிசன அர்த்தமுள்ளவை. கிறிஸ்தவர்கள் மத்தியில் பேதுரு உறுதியானவராக... நம்பகமானவராக... திடமானவராக... விளங்குவார் என்பதை இயேசுவால் முன்னரே பார்க்க முடிந்தது. பேதுரு தன்னை அப்படிப்பட்ட மனிதராகப் பார்த்தாரா? சந்தேகம்தான். இன்று சுவிசேஷப் பதிவுகளை வாசிக்கிற சிலரும்கூட பேதுருவை உறுதியானவராகவும் நம்பகமானவராகவும் கருதுவதில்லை. சொல்லப்போனால், உறுதியற்ற, நிலையற்ற மனிதராகத்தான் பைபிள் அவரை விவரிக்கிறதெனக் கூறுகிறார்கள்.
9. யெகோவாவும் அவரது மகனும் நம்மிடம் எதைப் பார்க்கிறார்கள், அவர்களுடைய கண்ணோட்டம்தான் சரியானதென நாம் ஏன் நம்ப வேண்டும்?
9 பேதுருவிடம் குறைகள் இருந்தன என்பது உண்மைதான். அது இயேசுவுக்கும் தெரியும். ஆனால், யெகோவாவைப் போல் இயேசுவும் மற்றவர்களிடம் இருக்கிற நிறைகளையே எப்போதும் பார்த்தார். பேதுருவுக்குள் புதைந்து கிடந்த நல்ல குணங்களைக் கவனித்து, அவற்றை இன்னும் சிறப்பாக வெளிக்கொண்டுவர உதவினார். இன்றும்கூட யெகோவாவும் அவரது மகனும் நம்மிடம் இருக்கிற நல்ல குணங்களையே பார்க்கிறார்கள். நம்மிடம் அப்படியொன்றும் நல்ல குணம் இல்லையென நாம் நினைக்கலாம். ஆனால், அவர்களுடைய கண்ணோட்டம்தான் சரியானது என நாம் நம்ப வேண்டும்; அவர்கள் நம்மைச் செதுக்கிச் சீராக்குவதற்கு, பேதுருவைப் போலவே, நாமும் அனுமதிக்க வேண்டும்.—1 யோவான் 3:19, 20-ஐ வாசியுங்கள்.
“பயப்படாதே”
10. பேதுரு எதைக் கண்கூடாகப் பார்த்திருப்பார், ஆனாலும் என்ன செய்தார்?
10 பின்பு, பேதுரு ஒருவேளை இயேசுவுடன் சேர்ந்து ஓரளவு காலம் ஊழியத்திற்குப் போயிருப்பார். அப்படியானால், இயேசு செய்த முதல் அற்புதத்தைப் பார்த்திருப்பார்; அதாவது, கானா ஊர் கல்யாண விருந்தில் தண்ணீரைத் திராட்சமதுவாக இயேசு மாற்றியதைப் பார்த்திருப்பார். அதைவிட முக்கியமாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய மகத்தான செய்தியை... நம்பிக்கையூட்டும் செய்தியை... இயேசு அறிவிப்பதைக் கேட்டார். என்றாலும், அவர் இயேசுவை விட்டுவிட்டு தன்னுடைய மீன்பிடி தொழிலுக்கே திரும்பினார். சில மாதங்களுக்குப் பிற்பாடு மறுபடியும் இயேசுவை நேருக்குநேர் சந்தித்தார்; இம்முறை, முழுநேரமாக ஊழியம் செய்ய இயேசுவிடமிருந்து பேதுரு அழைப்பைப் பெற்றார்.
11, 12. (அ) ராத்திரி மீன்பிடிக்க போனபோது பேதுரு பட்ட கஷ்டத்தை விவரியுங்கள். (ஆ) இயேசுவின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது பேதுரு எதைப் பற்றி யோசித்திருக்கலாம்?
11 அந்த ராத்திரி கடலுக்குப் போனதில் பேதுருவுக்குச் சோர்வுதான் மிஞ்சியது. அவரும் அவருடைய கூட்டாளிகளும் எத்தனையோ தடவை வலை வீசியும் ஒன்றுமே அகப்படவில்லை. பல வருடகால அனுபவத்தையும் தொழில் நுணுக்கத்தையும் பேதுரு பயன்படுத்திப் பார்த்துவிட்டார்; அந்த ஏரியில் மீன்கள் எங்கெல்லாம் இரைதேடி வருமோ அங்கெல்லாம் வலைபோட்டுப் பார்த்துவிட்டார். கலங்கிய நீருக்கு அடியில் ஓடுகிற மீன்களைப் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்... அவையெல்லாம் வலைக்குள் மாட்டிக்கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்... என்றெல்லாம் மற்ற மீனவர்களைப் போலவே இவரும் நினைத்திருப்பார். இருந்தாலும், அப்படி நினைக்க நினைக்க அவருக்கு இன்னும் அதிக விரக்திதான் உண்டாகியிருக்கும். ஏதோ பொழுதுபோக்குக்காக அவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கவில்லை; பிழைப்புக்காகத்தான் இவ்வளவு பாடுபட்டார்; அதை நம்பித்தான் அவருடைய குடும்பமே இருந்தது. கடைசியில், அவர் வெறுங்கையோடு கரைக்குத் திரும்பினார். வலைகளைச் சுத்தப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் அங்கே வந்த இயேசுவைச் சந்தித்தார்.
இயேசு அறிவித்த முக்கிய செய்தியை... ஆம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை... எத்தனை முறை கேட்டபோதிலும் பேதுருவுக்குச் சலிப்பே தட்டவில்லை
12 ஒரு பெரிய கூட்டம் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்தது; அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆர்வத்துடன் அள்ளிக்கொண்டிருந்தது. நெரிசல் அதிகமானதால், பேதுருவின் படகில் இயேசு ஏறிக்கொண்டு, கரையைவிட்டுச் சற்றே கடலுக்குள் தள்ளச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். அவருடைய குரல் தெளிவாகக் கேட்டதால், அங்கிருந்தவாறே மக்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். கரையிலிருந்த மற்றவர்களைப் போலவே பேதுருவும் காதைத் தீட்டிக்கொண்டு கவனித்தார். இயேசு அறிவித்த முக்கிய செய்தியை... ஆம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை... எத்தனை முறை கேட்டபோதிலும் பேதுருவுக்குச் சலிப்பே தட்டவில்லை. அப்போது அவருடைய மனதில் இப்படியெல்லாம் ஓடியிருக்கலாம்: ‘நம்பிக்கையளிக்கும் இந்தச் செய்தியை நாடெங்கும் அறிவிப்பதில் கிறிஸ்துவுக்கு ஆதரவு தருவது எப்பேர்ப்பட்ட பாக்கியமாய் இருக்கும்! ஆனால், இதெல்லாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வருமா? எப்படி என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவேன்? ராத்திரி பூராவும் வலை வீசியும் மீனே கிடைக்கவில்லையே!’—லூக். 5:1-3.
13, 14. பேதுருவுக்காக இயேசு என்ன அற்புதம் செய்தார், பேதுரு எப்படிப் பிரதிபலித்தார்?
13 இயேசு பேசி முடித்தபின் பேதுருவை நோக்கி, “படகை ஆழத்திற்குக் கொண்டுபோய், உங்கள் வலைகளைப் போட்டு மீன்பிடியுங்கள்” என்று சொன்னார். பேதுருவுக்குள் சந்தேக மேகம் சூழ்ந்துகொண்டது. “போதகரே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும்கூட ஒன்றும் கிடைக்கவில்லை; இருந்தாலும், நீங்கள் சொல்வதால் வலைகளைப் போடுகிறேன்” என்று கூறினார். பேதுரு அப்போதுதான் வலைகளை அலசி முடித்திருந்தார். ‘மறுபடியும் வலை வீசுவதா? அதுவும் மீன்கள் இரை தேடி வராத இந்த நேரத்திலா?’ என அவர் யோசித்திருக்கலாம். ஆனாலும் வலை வீசினார். அதோடு, இன்னொரு படகிலிருந்த தன்னுடைய கூட்டாளிகளை வரச்சொல்லி அவர் ஒருவேளை சைகை காட்டியிருக்கலாம்.—லூக். 5:4, 5.
14 பேதுரு வலைகளை இழுக்க ஆரம்பித்தபோது, வலை பயங்கரமாய்க் கனத்தது. அவர் கஷ்டப்பட்டு இழுத்தார்; கடைசியில் பார்த்தால், வலைக்குள் எக்கச்சக்கமான மீன்கள் துள்ளிக்கொண்டிருந்தன! அவரால் நம்பவே முடியவில்லை! உதவிக்காக இன்னொரு படகில் இருந்தவர்களிடம் சைகை காட்டி அவசர அவசரமாக அழைத்தார். அவர்கள் வந்து பார்க்கையில், ஒரு படகு கொள்ளாத அளவுக்கு மீன்கள்! அதனால், இரண்டு படகுகளையும் நிரப்பினார்கள்; அப்படியிருந்தும் எடை தாங்காமல் அந்தப் படகுகள் மூழ்க ஆரம்பித்தன. பேதுருவுக்குத் தாங்க முடியாத ஆச்சரியம்! முன்பு இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்திருந்தார், ஆனால் இப்போது தன் வாழ்விலேயே இயேசு பெரிய அற்புதம் செய்வதைப் பார்த்தார்! இயேசுவால் மீன்களைக்கூட வலையில் சிக்க வைக்க முடிகிறதே! பேதுருவைப் பயம் கவ்வியது. உடனே இயேசுவின் முன்னால் மண்டியிட்டு, “எஜமானே, நான் ஒரு பாவி, என்னைவிட்டுப் போய்விடுங்கள்” என்று சொன்னார். கடவுளுடைய சக்தியால் இப்படிப்பட்ட மகா அற்புதங்களைச் செய்கிறவருடன் இருப்பதற்குத் தனக்குத் தகுதியே இல்லை என்று நினைத்தார்.—லூக்கா 5:6-9-ஐ வாசியுங்கள்.
15. சந்தேகப்படுவதிலும் பயப்படுவதிலும் அர்த்தமே இல்லை என்பதை பேதுரு புரிந்துகொள்ள இயேசு அவருக்கு எப்படி உதவினார்?
15 பேதுருவிடம் இயேசு, “பயப்படாதே. இதுமுதல் நீ மனிதர்களை உயிருடன் பிடிப்பாய்” என்று கனிவுடன் சொன்னார். (லூக். 5:10, 11) சந்தேகப்படுவதற்கோ பயப்படுவதற்கோ அது நேரமல்ல. குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா என்று பேதுரு சந்தேகப்படுவதோ ஊழியம் செய்ய தனக்குத் தகுதியே இல்லை என்று பயப்படுவதோ அர்த்தமற்றது. பிரமாண்டமான ஒரு வேலையை... மனித சரித்திரத்தையே மாற்றப்போகும் ஓர் ஊழியத்தை... இயேசு செய்ய வேண்டியிருந்தது. அவர் சேவை செய்கிற கடவுள் ‘தாராளமாய் மன்னிக்கிறவர்.’ (ஏசா. 55:7, NW) குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கும் சரி ஊழியம் செய்வதற்கும் சரி, பேதுருவுக்கு யெகோவா நிச்சயம் உதவி செய்வார்.—மத். 6:33.
16. இயேசு அழைத்தபோது பேதுருவும் யாக்கோபும் யோவானும் என்ன செய்தார்கள், அது ஏன் அவர்கள் எடுத்த மிகச் சிறந்த தீர்மானம்?
16 பேதுருவும் யாக்கோபும் யோவானும்கூட கீழ்ப்படிந்தார்கள். “அவர்கள் தங்களுடைய படகுகளைக் கரை சேர்த்தபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிப் போனார்கள்.” (லூக். 5:11) இயேசு மீதும் அவரை அனுப்பிய கடவுள் மீதும் தனக்கு விசுவாசம் இருப்பதை பேதுரு காட்டினார். இது அவர் எடுத்த மிகச் சிறந்த தீர்மானம். இன்று, சந்தேகத்தையும் பயத்தையும் விட்டொழித்து கடவுளுடைய சேவையில் ஈடுபடும் கிறிஸ்தவர்களும் பேதுருவைப் போலவே விசுவாசத்தைக் காட்டுகிறார்கள். இப்படி யெகோவாமீது அவர்கள் வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.—சங். 22:4, 5.
“ஏன் சந்தேகப்பட்டாய்?”
17. இயேசுவைச் சந்தித்தபின் அந்த இரண்டு வருட காலத்தில் நடந்த என்னென்ன சம்பவங்களை பேதுரு நினைத்துப் பார்த்திருக்கலாம்?
17 இயேசுவை பேதுரு முதன்முதல் சந்தித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆரம்பத்தில் பார்த்தபடி, அன்றிரவு காற்று பலமாக வீசும்போது கலிலேயாக் கடலில் பேதுரு படகைச் செலுத்திக் கொண்டிருக்கிறார். அப்போது, அவர் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்தது என்பது நமக்குத் தெரியாது. யோசிப்பதற்கு விஷயங்களா இல்லை! பேதுருவின் மாமியாரை இயேசு குணப்படுத்தியிருந்தார். மலைப்பிரசங்கத்தை ஆற்றியிருந்தார். தாமே யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆம் மேசியா, என்பதைத் தமது போதனைகளாலும் அற்புதங்களாலும் திரும்பத் திரும்பக் காட்டியிருந்தார். மாதங்கள் செல்லச் செல்ல, சந்தேகம், பயம் போன்ற சுபாவங்களையெல்லாம் பேதுரு கட்டுப்படுத்த கற்றிருந்தார். அவரை 12 அப்போஸ்தலரில் ஒருவராகவும் இயேசு தேர்ந்தெடுத்திருந்தாரே! ஆனால், பயத்தையும் சந்தேகத்தையும் பேதுரு இன்னும் முழுமையாய் விட்டொழிக்கவில்லை, அதை அவரே சீக்கிரத்தில் புரிந்துகொள்வார்.
18, 19. (அ) கலிலேயாக் கடலில் பேதுரு பார்த்ததை விவரியுங்கள். (ஆ) பேதுருவின் வேண்டுகோளை இயேசு எவ்வாறு நிறைவேற்றினார்?
18 நான்காம் ஜாமம்... அதாவது வைகறை சுமார் 3 மணிக்கும் சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட நேரம்... துடுப்பு போடுவதை பேதுரு திடீரென நிறுத்திவிட்டு நிமிர்ந்து உட்காருகிறார். அதோ, சற்று தூரத்தில் அலைகள்மீது ஏதோ அசைகிறது! அலைகள் உயரே எழும்பி விழுவதுதான் நிலவொளியில் அப்படித் தெரிகிறதா? இல்லை, அது இங்குமங்கும் ஆடாமல் இருக்கிறதே... நெடுநெடுவென இருக்கிறதே... மனிதன் மாதிரி தெரிகிறதே! ஆம், மனிதனேதான்! அதுவும் கடல்மீது நடந்து வருகிறான்! அந்த உருவம் நெருங்கி வருகையில்... படகைக் கடந்து செல்வதுபோல் தோன்றுகிறது. சீடர்கள் திகிலடைந்து, “ஏதோ உருவம்!” என்று சொல்லி அலறுகிறார்கள். “தைரியமாக இருங்கள், நான்தான்; பயப்படாதீர்கள்” என்று அந்த மனிதன் சொல்கிறார். அவர் வேறு யாருமில்லை, இயேசு!—மத். 14:25-28.
19 பேதுரு அவரிடம், “எஜமானே, நீங்கள்தான் என்றால், நானும் இந்தத் தண்ணீர்மீது நடந்து உங்களிடம் வருவதற்குக் கட்டளையிடுங்கள்” என்று சொல்கிறார். முதலில் அபார தைரியத்தைக் காட்டுகிறார்! அந்த அதிசயத்தைப் பார்த்து அசந்துபோகிறார். கடல்மீது நடந்துசெல்கிற அந்த அற்புத அனுபவத்தைத் தானும் ருசித்துப்பார்க்கத் துடிக்கிறார். இப்படி, தன்னுடைய விசுவாசத்தை இன்னும் பலப்படுத்திக்கொள்ள நினைக்கிறார். இயேசுவும் அவரை வரச்சொல்லி அன்புடன் அழைக்கிறார். அசைந்தாடும் படகிலிருந்து பேதுரு இறங்கி, அலையடிக்கும் கடல் நீரில் கால் வைக்கிறார். அப்போது, ஏதோ தரையில் கால் பதித்ததைப் போல அவருக்குள் ஓர் உணர்வு! அந்த நேரத்தில் பேதுருவுக்கு ஏற்பட்ட சிலிர்ப்பைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! அப்படியே அடிமேல் அடி வைத்து இயேசுவிடம் நடந்துபோகிறார்! ஒரே பிரமிப்பு!! ஆனால், விரைவில் வேறொரு உணர்ச்சி அவரை ஆட்கொள்கிறது.—மத்தேயு 14:29-ஐ வாசியுங்கள்.
20. (அ) பேதுருவின் கவனம் ஏன் சிதறியது, அதனால் என்ன நடந்தது? (ஆ) பேதுருவுக்கு என்ன பாடத்தை இயேசு புகட்டினார்?
20 பேதுரு தன் கவனத்தை இயேசு மீதே ஊன்ற வேண்டியிருக்கிறது. பொங்கியெழும் அலைகள் மீது இயேசுதான் யெகோவாவின் சக்தியால் அவரை நடக்க வைக்கிறார். பேதுரு தம்மீது விசுவாசம் வைத்ததால் அவரைக் கடல்மீது நடக்க வைக்கிறார். ஆனால் பேதுருவின் கவனம் சிதறுகிறது. ஆம், ‘புயல்காற்றைக் கண்டதும் பயந்துபோகிறார்.’ படகின்மீது அலைகள் பலமாய் மோதுவதை... தண்ணீரையும் நுரையையும் வீசியடிப்பதை... பேதுரு பார்க்கிறார்; அப்படியே பீதியில் உறைந்துவிடுகிறார். அந்த ஏரியில் மூழ்குவதுபோல் நினைத்திருக்கலாம். மனதில் பயம் கூடக்கூட... விசுவாசம் குறைய ஆரம்பிக்கிறது. “கல்” என அடைமொழி சூட்டப்பட்டவர்... அதாவது உறுதிக்கு உதாரணமாய் விளங்குவார் என நம்பப்பட்டவர்... விசுவாசத்தில் ஆட்டங்கண்டு, அப்படியே மூழ்க ஆரம்பிக்கிறார். அவருக்கு நன்றாக நீந்த வரும், ஆனால் இப்போது அந்தத் திறமைமீது நம்பிக்கை வைப்பதில்லை. “எஜமானே, என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று சொல்லி அலறுகிறார். உடனே இயேசு அவருடைய கையைப் பிடித்துத் தூக்கிவிடுகிறார். இயேசு அந்தக் கடல் நீரில் நின்றுகொண்டே, பேதுருவின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டி ஒரு முக்கியமான பாடத்தைப் புகட்டுகிறார்; “விசுவாசமில்லாதவனே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்று கேட்கிறார்.—மத். 14:30, 31.
21. சந்தேகம் ஏன் ஆபத்தானது, நாம் எப்படி அதை எதிர்த்துப் போராடலாம்?
21 “சந்தேகப்பட்டாய்”—எவ்வளவு பொருத்தமான வார்த்தை! சந்தேகம் வலிமைமிக்கது, அழிக்க வல்லது. அதற்கு நாம் இடம்கொடுத்துவிட்டால், நம் விசுவாசத்தை அரித்து ஆன்மீக ரீதியில் நம்மை வீழ்த்திவிடும். சந்தேகத்தை விட்டொழிக்க நாம் கடினமாகப் போராட வேண்டும்! எப்படி? நம்முடைய கவனத்தைச் சரியான இடத்தின் மீது ஊன்றுவதன் மூலமே. நம்மைப் பயப்பட வைக்கிற... சந்தேகப்பட வைக்கிற... யெகோவா மற்றும் இயேசுவிடமிருந்து கவனத்தைத் திருப்புகிற... காரியங்களைப் பற்றியே நாம் யோசித்துக் கொண்டிருந்தால், நம் சந்தேகங்கள் பெருகும். அதற்குப் பதிலாக, யெகோவாவை... அவரது மகனை... அவர்கள்மீது அன்பு வைப்போருக்காக அவர்கள் செய்ததை... செய்துவருவதை... செய்யப்போவதை... பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்; அப்போதுதான், நம் விசுவாசத்தை மூழ்கடிக்கும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
22. பேதுருவின் விசுவாசத்தைப் பின்பற்றுவது பயனளிக்குமென ஏன் நினைக்கிறீர்கள்?
22 இயேசுவுடன் சேர்ந்து பேதுரு படகில் ஏறியவுடன் புயல்காற்று அடங்குகிறது. கலிலேயாக் கடல்மீது அமைதித் தென்றல் அடிக்கிறது. “நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்” என மற்றவர்களோடு சேர்ந்து பேதுருவும் சொல்கிறார். (மத். 14:33) பொழுது விடிகிறது. பேதுருவின் உள்ளத்தில் நன்றி பெருக்கெடுக்கிறது. பயத்தையும் சந்தேகத்தையும் விட்டுவிடுவதற்குக் கற்றுக்கொள்கிறார். ஆனால் இயேசு முன்னறிவித்தபடி, உறுதியான கிறிஸ்தவராவதற்கு அவர் இன்னும் நிறைய முன்னேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. விடாமுயற்சி செய்ய... முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்ல... திடத்தீர்மானமாய் இருக்கிறார். நீங்களும் அதேபோல் திடத்தீர்மானமாய் இருக்கிறீர்களா? பேதுருவின் விசுவாசத்தைப் பின்பற்றுவது மிகுந்த பயனளிக்கும்.