பாடம் 18
என்றும் கடவுளுடைய நண்பராக இருங்கள்!
நண்பரை சம்பாதிக்க முயற்சி தேவை; அவரை தொடர்ந்து நண்பராக வைத்திருக்கவும் முயற்சி தேவை. கடவுளுடைய நண்பராக ஆவதற்கும் தொடர்ந்து அவருடைய நண்பராக இருப்பதற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அதிக பலன் உண்டு. “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று தம்மை விசுவாசித்தவர்களிடம் இயேசு சொன்னார். (யோவான் 8:32) இதன் அர்த்தம் என்ன?
நீங்கள் இப்பொழுதே விடுதலையை அனுபவிக்கலாம். சாத்தான் பரப்பிய பொய்களிலிருந்தும் பொய் போதனைகளிலிருந்தும் நீங்கள் விடுதலை பெறலாம். யெகோவாவை பற்றி தெரியாத லட்சக்கணக்கானோருடைய வாழ்க்கை நம்பிக்கையில்லாமல் சூனியமாக இருக்கிறது, இதிலிருந்தும் நீங்கள் விடுதலை பெறலாம். (ரோமர் 8:22) ‘மரண பயத்திலிருந்தும்’ கடவுளுடைய நண்பர்கள் விடுதலை பெறலாம்.—எபிரெயர் 2:14, 15.
கடவுளுடைய புதிய உலகில் நீங்கள் விடுதலையை அனுபவிக்கலாம். எதிர்காலத்தில் எப்பேர்ப்பட்ட மகத்தான விடுதலை! பரதீஸிய பூமியில் போர், வியாதி, குற்றச்செயல் ஆகியவற்றிலிருந்து விடுதலை. வாட்டும் வறுமையிலிருந்தும் பசியின் கொடுமையிலிருந்தும் விடுதலை. முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை. பயம், ஒடுக்குமுறை, அநீதி ஆகியவற்றிலிருந்தும் விடுதலை. கடவுளைப் பற்றி பைபிள் சொல்கிறது: “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் [“உயிர்களின்,” NW] வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.”—சங்கீதம் 145:16.
கடவுளுடைய நண்பர்கள் என்றென்றும் வாழ்வார்கள். நித்திய ஜீவன் ஓர் அருமையான பரிசு, தம்முடைய நட்பை நாடும் அனைவருக்கும் கடவுள் இந்தப் பரிசை தருவார். (ரோமர் 6:23) முடிவில்லா வாழ்க்கை உங்களுக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்!
அநேக காரியங்களை செய்ய உங்களுக்கு நேரம் இருக்கும். ஓர் இசைக் கருவியை எப்படி இசைப்பது என்பதை நீங்கள் ஒருவேளை கற்றுக்கொள்ள விரும்பலாம். அல்லது ஓவியம் தீட்டவோ தச்சு வேலை செய்யவோ கற்றுக்கொள்ள ஆசைப்படலாம். விலங்குகளைப் பற்றியோ தாவரங்களைப் பற்றியோ கற்றுக்கொள்ள விரும்பலாம். பல இடங்களுக்கு பயணம் செய்து பல்வேறு நாடுகளையும் மக்களையும் பார்ப்பதற்கும் நீங்கள் விரும்பலாம். நித்திய ஜீவன் இவை அனைத்தையும் உங்களுக்கு சாத்தியமாக்கும்!
நீங்கள் அநேக நண்பரை சம்பாதிக்க நேரம் கிடைக்கும். நித்திய காலமாக வாழும்போது, கடவுளுடைய நண்பராக இருக்கும் மற்ற அநேகரோடும் அறிமுகமாகலாம். அவர்களுடைய திறமைகளையும் சிறந்த பண்புகளையும் அறிந்துகொள்வீர்கள், அவர்கள் உங்களுக்கும் நண்பர்களாக இருப்பார்கள். நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள், அவர்களும் உங்களை நேசிப்பார்கள். (1 கொரிந்தியர் 13:8) என்றும் வாழ்வதால் பூமியிலுள்ள எல்லாரையும் நண்பராக ஆக்கிக்கொள்ள நேரம் இருக்கும்! எல்லாவற்றையும் விட, நூற்றாண்டுகள் கடந்து செல்லச் செல்ல யெகோவாவுடன் உங்களுடைய நட்பு மேன்மேலும் பலப்படும். நீங்கள் என்றும் கடவுளுடைய நண்பராக இருப்பீர்களாக!