அதிகாரம் 69
அவர்களுடைய தகப்பன்—ஆபிரகாமா, பிசாசா?
ஆபிரகாம்தான் தங்களுடைய தகப்பன் என்று யூதர்கள் சொல்கிறார்கள்
ஆபிரகாமுக்கு முன்பே இயேசு இருந்தார்
கூடாரப் பண்டிகைக்காக இயேசு இன்னமும் எருசலேமில்தான் இருக்கிறார். முக்கியமான சத்தியங்களை அந்தச் சமயத்தில் அவர் கற்பிக்கிறார். அங்கிருக்கிற யூதர்களில் சிலர், “நாங்கள் ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர்கள், எந்தக் காலத்திலும் எந்த மனுஷனுக்கும் நாங்கள் அடிமைகளாக இருந்தது கிடையாது” என்று சற்று முன்புதான் அவரிடம் சொல்லியிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய போதனையை நீங்கள் ஏற்றுக்கொள்ளாததால் என்னைக் கொல்ல வழிதேடுகிறீர்கள். நான் என்னுடைய தகப்பனோடு இருந்தபோது பார்த்த காரியங்களைப் பேசுகிறேன். நீங்கள் உங்களுடைய தகப்பனிடமிருந்து கேட்ட காரியங்களைச் செய்கிறீர்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 8:33, 37, 38.
தன்னுடைய தகப்பன் வேறு, அவர்களுடைய தகப்பன் வேறு என்றுதான் இயேசு சொல்கிறார். ஆனால் அந்த யூதர்கள் இதைப் புரிந்துகொள்ளாமல், “ஆபிரகாம்தான் எங்கள் தகப்பன்” என்று மறுபடியும் சொல்கிறார்கள். (யோவான் 8:39; ஏசாயா 41:8) அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர்கள். அதனால், கடவுளுடைய நண்பரான ஆபிரகாம் வணங்கிய அதே கடவுளைத்தான் தாங்களும் வணங்குவதாக நினைக்கிறார்கள்.
இப்போது இயேசுவின் பதிலைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். அவர், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்றால், ஆபிரகாம் செய்த செயல்களையே செய்வீர்கள்” என்று சொல்கிறார். ஏனென்றால், உண்மையான மகன் தன் அப்பாவைப் போலத்தான் நடந்துகொள்வான். “ஆனால், கடவுளிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன என்னைக் கொல்ல இப்போது வழிதேடுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே” என்று இயேசு சொல்கிறார். பிறகு, “உங்களுடைய தகப்பன் செய்த செயல்களைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்” என்றும் சொல்கிறார். இதைக் கேட்டதும் யூதர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.—யோவான் 8:39-41.
இயேசு யாரைப் பற்றிப் பேசுகிறார் என்பது யூதர்களுக்கு இன்னமும் புரியவில்லை. அதனால், தாங்கள் முறையாகப் பிறந்த பிள்ளைகள்தான் என்று சொல்லி அவரிடம் வாதம் செய்கிறார்கள். “நாங்கள் முறைகேடாக பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தகப்பன் இருக்கிறார், அவர்தான் கடவுள்” என்று இயேசுவிடம் சொல்கிறார்கள். உண்மையில் கடவுள்தான் அவர்களுடைய தகப்பனா? அதற்கு இயேசு இப்படிச் சொல்கிறார்: “கடவுள்தான் உங்கள் தகப்பன் என்றால், நீங்கள் என்மேல் அன்பு காட்டுவீர்கள். ஏனென்றால், நான் கடவுளிடமிருந்து இங்கே வந்திருக்கிறேன். நான் சுயமாக வரவில்லை, அவர்தான் என்னை இங்கே அனுப்பினார்” என்று சொல்கிறார். பிறகு இயேசு ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்கான பதிலையும் சொல்கிறார். “நான் சொல்வதை ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? என் வார்த்தையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததால்தான்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—யோவான் 8:41-43.
அவரை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று புரிய வைக்க இயேசு முயற்சி செய்துவிட்டார். இப்போது அவர், “பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள்” என்று நேரடியாகவே சொல்கிறார். அவர்களுடைய தகப்பன் எப்படிப்பட்டவன்? “ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; . . . சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை” என்று இயேசு அவனைப் பற்றித் தெளிவாகச் சொல்கிறார். அதோடு, “கடவுள் உங்கள் தகப்பனாக இருந்தால் அவருடைய வார்த்தைகளைக் கேட்பீர்கள். அவர் உங்கள் தகப்பனாக இல்லாததால் அவருடைய வார்த்தைகளை நீங்கள் கேட்பதில்லை” என்றும் சொல்கிறார்.—யோவான் 8:44, 47.
அதைக் கேட்டதும் யூதர்களுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. அதனால், “‘நீ ஒரு சமாரியன், பேய் பிடித்தவன்’ என்றெல்லாம் நாங்கள் சொல்வது சரிதான்” என்கிறார்கள். “சமாரியன்” என்று சொல்லி, இயேசுமேல் தங்கள் வெறுப்பைக் கொட்டுகிறார்கள். இயேசு அதைக் கண்டுகொள்ளவில்லை. அவர், “நான் பேய் பிடித்தவன் அல்ல, நான் என் தகப்பனுக்கு மதிப்புக் கொடுக்கிறேன், நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள்” என்று சொல்கிறார். இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது இயேசு அடுத்ததாகச் சொல்கிற வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. “என் வார்த்தையைக் கேட்டு நடக்கிற யாரும் சாகவே மாட்டார்கள்” என்று அவர் சொல்கிறார். அப்போஸ்தலர்களுக்கும் அவரைப் பின்பற்றுகிற மற்றவர்களுக்கும் சாவே வராது என்ற அர்த்தத்தில் இயேசு அப்படிச் சொல்லவில்லை. உயிர்த்தெழுதல் நம்பிக்கையே இல்லாத ‘இரண்டாம் மரணம்,’ அதாவது நிரந்தர அழிவு, அவர்களுக்கு வராது என்றுதான் சொல்கிறார்.—யோவான் 8:48-51; வெளிப்படுத்துதல் 21:8.
யூதர்கள் அவர் சொன்னதை அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள். அதனால், “உனக்குப் பேய் பிடித்திருக்கிறது என்பது இப்போது எங்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்துபோனார், தீர்க்கதரிசிகளும் இறந்துபோனார்கள். ஆனால் நீ, ‘என் வார்த்தையைக் கேட்டு நடக்கிற யாரும் சாகவே மாட்டார்கள்’ என்று சொல்கிறாய். இறந்துபோன எங்கள் தகப்பனாகிய ஆபிரகாமைவிட நீ என்ன உயர்ந்தவனா? . . . உன்னை நீ யாரென்று சொல்லிக்கொள்கிறாய்?” என்று கேட்கிறார்கள்.—யோவான் 8:52, 53.
இயேசு தன்னை மேசியா என்று சொல்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், அவர்கள் இப்படிக் கேள்வி கேட்கிறார்கள். இயேசு நேரடியாகப் பதில் சொல்லாமல், “நானே என்னை மகிமைப்படுத்தினால், என் மகிமை வீணாக இருக்கும். என் தகப்பன் என்னை மகிமைப்படுத்துகிறார். அவரை உங்கள் கடவுள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். இருந்தாலும், உங்களுக்கு அவரைத் தெரியாது. ஆனால், எனக்கு அவரைத் தெரியும். அவரைத் தெரியாது என்று நான் சொன்னால் உங்களைப் போலவே நானும் ஒரு பொய்யனாக இருப்பேன்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—யோவான் 8:54, 55.
கடவுளுக்கு உண்மையாக இருந்த ஆபிரகாமின் உதாரணத்தை இயேசு சொல்கிறார். “உங்கள் தகப்பனாகிய ஆபிரகாம் என் நாளைப் பார்க்கப்போகிற எதிர்பார்ப்பில் ரொம்பச் சந்தோஷமாக இருந்தார், அதைப் பார்த்து சந்தோஷப்பட்டார்” என்கிறார். கடவுளின் வாக்குறுதியை ஆபிரகாம் நம்பினார். அதனால், மேசியா எப்போது வருவார் என்று ஆசையாக எதிர்பார்த்தார். யூதர்கள் இயேசுவிடம், “உனக்கு இன்னும் 50 வயதுகூட ஆகவில்லை, நீயா ஆபிரகாமைப் பார்த்திருக்கிறாய்?” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருந்திருக்கிறேன்” என்கிறார். தான் இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பு, பரலோகத்தில் சக்தியுள்ள தூதராக இருந்ததைப் பற்றித்தான் இயேசு குறிப்பிடுகிறார்.—யோவான் 8:56-58.
ஆபிரகாமுக்கு முன்பே தான் வாழ்ந்ததாக இயேசு சொன்னதும், யூதர்களுக்குப் பயங்கர கோபம் வருகிறது. அவரைக் கல்லால் அடிக்க அவர்கள் தயாராகிறார்கள். ஆனால், இயேசு அவர்களிடமிருந்து தப்பித்துப் போகிறார்.