ஏன் உண்மை பேச வேண்டும்?
மான்ப்ரட் 18 வயது இளைஞராக இருந்தபோது ஒரு கம்பெனியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்.a அவரும், அவரோடு பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த அநேகரும் வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு தொழில் கல்லூரியில் படிக்க அந்த கம்பெனி ஏற்பாடு செய்திருந்தது. அந்தத் தொழில் கல்லூரியில் ஒருநாள், வழக்கத்தைவிட முன்னதாகவே வகுப்பு முடிந்துவிட்டது. கம்பெனி விதிப்படி, இதுபோன்ற சூழ்நிலையில் அவர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும். ஆனால், மான்ப்ரட்டைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ஜாலியாகப் பொழுதைக் கழிக்க போய்விட்டார்கள். மான்ப்ரட்டோ வேலைக்குத் திரும்பினார். பயிற்சி பெறுபவர்களைக் கவனிக்கும் பொறுப்பிலிருந்த கம்பெனி நிர்வாகி எதேச்சையாக வேலை செய்யுமிடத்திற்கு வந்தார். மான்ப்ரட்டைப் பார்த்ததும், “நீ ஏன் கல்லூரிக்கு போகவில்லை? அதுசரி, மற்றவர்கள் எல்லாரும் எங்கே?” என்று கேட்டார். இப்போது மான்ப்ரட் என்ன பதில் சொல்ல வேண்டும்?
இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையில் அநேகர் சிக்கிக்கொள்கிறார்கள்: உண்மையைச் சொல்வதா, அல்லது சக மாணவர்களின் செயலை மூடி மறைத்து அவர்களைக் காப்பாற்றுவதா? அவர் உண்மையைச் சொன்னால் மற்றவர்கள் மாட்டிக்கொள்வார்கள், அவரை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைமையில் பொய் சொல்வது சரிதானா? நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? மான்ப்ரட் என்ன செய்தார் என்பதைப் பிறகு கவனிக்கலாம். அதற்கு முன்னால், உண்மையைச் சொல்ல வேண்டுமா கூடாதா என்று தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படும்போது எதை மனதில் வைக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கலாம்.
உண்மையும் பொய்யும்—ஆரம்பத்திலிருந்தே போராட்டம்
மனிதர்கள் படைக்கப்பட்ட சமயத்தில் உண்மை மட்டுமே இருந்தது. திரித்து கூறுவதோ, கதைகட்டுவதோ, உண்மையை மாற்றிப் பேசுவதோ இல்லாதிருந்தது. படைப்பாளரான யெகோவா ‘சத்தியபரராகிய கர்த்தர்.’ அவருடைய வார்த்தையே சத்தியம்; அவரால் பொய் சொல்ல முடியாது; அவர் பொய் சொல்வதையும் பொய் சொல்பவர்களையும் கண்டனம் செய்கிறார்.—சங்கீதம் 31:5; யோவான் 17:17; தீத்து 1:3.
அப்படியென்றால், பொய் எவ்வாறு ஆரம்பமானது? இதற்கு நம்பகமான பதிலை இயேசு கிறிஸ்து அளித்தார். தம்மைக் கொல்ல வழிதேடிக்கொண்டிருந்த மத எதிரிகளிடம் பேசுகையில் அதைச் சொன்னார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.” (யோவான் 8:44) ஆம், ஏதேன் தோட்டத்தில் ஆதாமையும் ஏவாளையும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகச் செய்து, அவர்களைப் பாவத்திற்குள்ளும் மரணத்திற்குள்ளும் சாத்தான் தள்ளியதைப் பற்றியே இயேசு சொல்லிக்கொண்டிருந்தார்.—ஆதியாகமம் 3:1-5; ரோமர் 5:12.
சாத்தான், “பொய்க்குப் பிதா” என்பதை இயேசுவின் வார்த்தைகள் தெளிவாக்குகின்றன. பொய், உண்மையின்மை ஆகியவற்றின் மூலகாரணன் அவனே. உண்மையின்மையை ஊக்குவிப்பதில் அவன் முக்கிய பங்காற்றுகிறான். சொல்லப்போனால், அவன் ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிறான்.’ உலகமுழுவதும் பரவிக்கிடக்கும் பொய்யினால் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு அவனே முக்கிய பொறுப்பாளி.—வெளிப்படுத்துதல் 12:9.
உண்மைக்கும் பொய்க்கும் இடையே சாத்தான் தொடங்கி வைத்த போராட்டம் இன்றும் கடுமையாக நடந்து வருகிறது. சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் அதைக் காண முடிகிறது, தனிமனிதர் ஒவ்வொருவரையும் அது பாதிக்கிறது. ஒருவர் உண்மையின் பக்கத்தில் இருக்கிறாரா அல்லது பொய்யின் பக்கத்தில் இருக்கிறாரா என்பதை அவர் வாழும் விதத்திலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். கடவுளுடைய பக்கத்தில் இருப்போர் அவருடைய வார்த்தையாகிய பைபிளில் உள்ள சத்தியத்தின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். சத்தியப் பாதையில் நடக்காதவர்கள், தெரிந்தோ தெரியாமலோ சாத்தானின் கைகளில் விழுந்துவிடுகிறார்கள். ஏனெனில், ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’—1 யோவான் 5:19; மத்தேயு 7:13, 14.
பொய் சொல்வதற்கான தூண்டுதல்—ஏன்?
“உலகமுழுவதும்” சாத்தானின் கைகளில் இருக்கிறது என்ற உண்மையை அறியும்போது, ஏன் அநேகர் பொய் சொல்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ‘“பொய்க்குப் பிதா”வான சாத்தான் ஏன் பொய் சொன்னான்?’ என்று நாம் கேட்கலாம். முதல் தம்பதியினர் உட்பட உலகிலுள்ள அனைத்து படைப்புகளுக்கும் உன்னத பேரரசராய் இருக்கும் உரிமை யெகோவாவுக்குத்தான் இருக்கிறது என்பதைச் சாத்தான் அறிந்திருந்தான். இருந்தாலும், இந்த உயர்ந்த, தனிச்சிறப்பான ஸ்தானத்தை அடைய வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். அதைப் பெறுவதற்கான எவ்வித உரிமையும் அவனுக்கு இல்லை. பேராசை, சுயநல லட்சியம் ஆகியவற்றின் தூண்டுதலால், யெகோவாவின் உன்னத ஸ்தானத்தைப் பறிக்க சாத்தான் சதி செய்தான். இதற்காகப் பொய்யையும் புரட்டையும் பயன்படுத்தினான்.—1 தீமோத்தேயு 3:6.
இன்று நிலைமை எவ்வாறு இருக்கிறது? பெரும்பாலும் பேராசையும் சுயநல லட்சியமும்தான் அநேகர் பொய் சொல்வதற்குப் காரணமாக இருக்கின்றன என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா? காசைக் குறிவைக்கும் வர்த்தகம், சீர்கெட்ட அரசியல், பொய் மதம் ஆகியவற்றில் ஏமாற்றும், பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் புரையோடியிருக்கின்றன. ஏன்? பெரும்பாலும், பேராசைதான் அதற்குக் காரணம், அல்லவா? தாங்கள் முன்னேற வேண்டும், தங்களுக்கு உரியதாயிராத ஆஸ்தி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றைப் பெற வேண்டும் என்ற லட்சியமும் இதற்குக் காரணம், அல்லவா? பண்டைய இஸ்ரவேலை ஆண்ட ஞானமுள்ள சாலொமோன் ராஜா பின்வருமாறு எச்சரித்தார்: “செல்வத்தைக் குவிக்கத் துடிக்கிறவன் குற்றமற்றவனாக நிலைத்திருக்க மாட்டான்.” (நீதிமொழிகள் 28:20, NW) அப்போஸ்தலன் பவுலும் பின்வருமாறு எழுதினார்: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 6:10) அதிகாரத்திற்கும் அந்தஸ்துக்கும் பேராசைப்படுவதிலும்கூட இதுவே உண்மையாக இருக்கிறது.
பொய் சொல்வதற்கான மற்றொரு காரணம்: பயம். உண்மையைச் சொன்னால் என்ன ஆகுமோ, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தால் அநேகர் பொய் சொல்கிறார்கள். மற்றவர்கள் தங்களை விரும்ப வேண்டும், அவர்களில் ஒருவராக தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயற்கையே. இந்த ஆசையின் காரணமாக அவர்கள் உண்மையைக் கொஞ்சம் திரித்துக் கூறலாம்; தவறுகளை மூடுவதற்கோ, கசப்பான உண்மைகளை மறைப்பதற்கோ, அல்லது வெறுமனே நல்ல பெயர் எடுப்பதற்கோ அப்படிச் செய்யலாம். “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” என்று சாலொமோன் எழுதியது பொருத்தமாகவே இருக்கிறது.—நீதிமொழிகள் 29:25.
சத்தியத்தின் கடவுளுக்கு உண்மைத்தன்மையைக் காட்டுதல்
கம்பெனி நிர்வாகி விளக்கம் கேட்டபோது மான்ப்ரட் எவ்வாறு பதில் அளித்தார்? அவர் உண்மையைச் சொன்னார். “இன்று வகுப்பு சீக்கிரத்திலேயே முடிந்துவிட்டது. அதனால், நான் வேலைக்குத் திரும்பிவிட்டேன். மற்றவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. நீங்களே நேரடியாக அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார்.
மான்ப்ரட் தந்திரமாக, தவறான தகவலைக் கொடுத்திருக்கலாம். மற்ற மாணவர்கள் முன் ஒரு ஹீரோவாக வலம் வந்திருக்கலாம். ஆனால், உண்மையைப் பேசுவதில் அவர் உறுதிகாட்டியதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. ஆம், அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. நேர்மையாக இருந்ததன் மூலம் அவரால் தன் மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடிந்தது. அதோடு, தன் முதலாளியின் நம்பிக்கையையும் பெற முடிந்தது. ஆகவே, பயிற்சி காலத்தில் அவர் நகை துறைக்கு அனுப்பப்பட்டார். பொதுவாக, பயிற்சி பெறுவோரை அங்கே அனுப்பமாட்டார்கள். சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு, அந்த கம்பெனியில் மான்ப்ரட் பதவி உயர்வு பெற்று, பொறுப்பான பதவியில் அமர்ந்தபோது, அவருக்குப் பயிற்சி அளித்த நிர்வாகி அவரை வாழ்த்துவதற்காக ஃபோன் செய்தார். மான்ப்ரட் உண்மை பேசிய அந்தச் சந்தர்ப்பத்தை அப்போது ஞாபகப்படுத்தினார்.
யெகோவா சத்தியத்தின் கடவுளாக இருப்பதால், அவருடன் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள விரும்புவோர் “பொய்யைக் களைந்து,” “மெய்யைப் பேச” வேண்டும். கடவுளுடைய ஊழியர்கள் சத்தியத்தை நேசிக்க வேண்டும். “மெய்ச்சாட்சிக்காரன் பொய் சொல்லான்” என்று மேற்குறிப்பிடப்பட்ட ஞானி எழுதினார். அப்படியானால், பொய் என்றால் என்ன?—எபேசியர் 4:25; நீதிமொழிகள் 14:5.
பொய் என்றால் என்ன?
எல்லா பொய்யும் உண்மைக்குப் புறம்பானவை. ஆனால் உண்மைக்குப் புறம்பான எல்லாமே பொய் அல்ல. ஏன் அப்படி? பொய் என்பது “ஒரு விஷயத்தைச் சொல்பவருக்கு அது உண்மையல்ல என்பது தெரிந்திருந்தும், பிறரை ஏமாற்றுவதற்காக அதை அடித்துச் சொல்வதை” அர்த்தப்படுத்துகிறதென ஓர் அகராதி விளக்கம் அளிக்கிறது. ஆம், பொய் சொல்பவருக்குப் பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எனவே, தெரியாமல் ஒருவருக்குத் தவறான தகவல்களைக் கொடுப்பதற்கும், பொய் சொல்வதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.
அதோடு, நம்மிடம் யாராவது குறிப்பிட்ட சில தகவல்களைக் கேட்கையில், எல்லா விவரங்களையும் அவரிடம் சொல்ல வேண்டுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும். உதாரணமாக, வேறொரு கம்பெனியின் நிர்வாகி மான்ப்ரட்டிடம் அதே கேள்விகளைக் கேட்டிருந்தால், அவரிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசியம் மான்ப்ரட்டுக்கு இருந்திருக்குமா? இல்லை. அவற்றைத் தெரிந்துகொள்வதற்கான எந்த உரிமையும் அடுத்த கம்பெனியின் நிர்வாகிக்கு இல்லாததால் மான்ப்ரட் எதையும் சொல்ல வேண்டிய அவசியமிருந்திருக்காது. ஆனால், இந்தச் சூழ்நிலையிலும்கூட பொய் சொல்வது தவறுதான்.
இவ்விஷயத்தில் இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்? ஒரு சந்தர்ப்பத்தில், இயேசுவை விசுவாசிக்காத சிலர் அவருடைய பயணத் திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார்கள். “இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்” என்று அவர்கள் இயேசுவிடம் சொன்னார்கள். அதற்கு அவர் எப்படிப் பதில் அளித்தார்? “நீங்கள் [எருசலேமில் நடக்கும்] இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை.” அதன் பிறகு விரைவிலேயே, இயேசு பண்டிகையில் கலந்துகொள்ள எருசலேமுக்குச் சென்றார். பிறகு, ஏன் அவர்களிடம் இயேசு அவ்வாறு பதில் அளித்தார்? அவர் இருக்கும் இடத்தைப்பற்றித் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கவில்லை. இயேசு அவர்களிடம் பொய் சொல்லவில்லை, அதேசமயத்தில் எல்லா தகவல்களையும் சொல்லவும் இல்லை. தமக்கோ தம் சீஷர்களுக்கோ அவர்கள் தீங்கு விளைவிப்பதைத் தடுக்கவே அவ்வாறு சொன்னார். இது ஒரு பொய் அல்ல. ஏனெனில், கிறிஸ்துவைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு எழுதினார்: “அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.”—யோவான் 7:1-13; 1 பேதுரு 2:22.
பேதுருவைப் பற்றி என்ன சொல்லலாம்? இயேசு கைது செய்யப்பட்ட அன்றிரவு, அவரைத் தெரியாது என்று பேதுரு மூன்று முறை பொய் சொல்லவில்லையா? ஆம், மனிதர்களுக்குப் பயப்பட்டதால் பேதுரு பொய் சொன்னார். ஆனால், அவர் உடனடியாக ‘மனங்கசந்து அழுதார்.’ மனந்திரும்பியதால் அவருடைய பாவம் மன்னிக்கப்பட்டது. அதோடு, தான் செய்த தவறிலிருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, இயேசுவைப் பற்றி பொதுமக்களிடம் பகிரங்கமாகப் பேசினார். பிரசங்கிக்கக் கூடாதென எருசலேமிலிருந்த யூத அதிகாரிகள் மிரட்டியபோது உறுதியாய் மறுத்துவிட்டார். நாமும் கணநேர பலவீனத்தில் விழுந்து சொல்லிலோ செயலிலோ எளிதில் தவறிவிடலாம். ஆகவே, பேதுரு தற்காலிகமாக இணங்கிப்போனாலும் சீக்கிரத்தில் அதிலிருந்து மீண்டது நம் எல்லாருக்கும் உற்சாகத்தை அளிக்கிறது.—மத்தேயு 26:69-75; அப்போஸ்தலர் 4:18-20; 5:27-32; யாக்கோபு 3:2.
உண்மை என்றும் நிலைத்திருக்கும்
“சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்” என்று நீதிமொழிகள் 12:19 சொல்கிறது. ஆம், உண்மையான பேச்சு நிலையானது. மக்கள் உண்மையைப் பேசத் தீர்மானித்து, அதன்படி நடக்கையில் மனித உறவுகள் அதிக வலுவானவையாகவும் சந்தோஷம் தருபவையாகவும் ஆகின்றன. உண்மை உள்ளவர்களாய் இருப்பதால் உடனடி நன்மைகளையும் பெறலாம். சுத்தமான மனசாட்சி, நற்பெயர் ஆகியவை நமக்குக் கிடைக்கும். அதோடு, தம்பதிகளிடையேயும், குடும்பத்திலும், நண்பர்களிடையேயும், தொழில் தொடர்புகளிலும் உறவுகள் பலப்படும்.
மறுபட்சத்தில், பொய்களோ சீக்கிரத்தில் வெட்ட வெளிச்சமாகிவிடும். பொய் பேசுவோர் கொஞ்ச காலத்திற்குப் பிறரை ஏமாற்றலாம், ஆனால் சீக்கிரத்தில் அவர்களுடைய சாயம் வெளுத்துவிடும். அதோடு, பொய்யையும், அதைப் பரப்புவோரையும் சத்தியத்தின் கடவுளான யெகோவா பொறுத்துக்கொள்வதற்கு ஓர் எல்லை இருக்கிறது. உலகமுழுவதையும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் பொய்க்குப் பிதாவான சாத்தானின் ஆதிக்கத்திற்கு யெகோவா முடிவுகட்டுவார் என்று பைபிள் உறுதி அளிக்கிறது. பொய்யையும் பொய்யர்களையும் யெகோவா விரைவில் துடைத்தழித்துவிடுவார்.—வெளிப்படுத்துதல் 21:8.
“சத்திய உதடு” என்றென்றுமாக நிலைத்திருக்கையில் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்!
[அடிக்குறிப்பு]
a அவருடைய உண்மையான பெயர் அல்ல.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
அநேகர் பொய் சொல்வதற்கு பேராசையும் சுயநல லட்சியமுமே காரணம்
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
எல்லா பொய்யும் உண்மைக்குப் புறம்பானவை. ஆனால் உண்மைக்குப் புறம்பான எல்லாமே பொய் அல்ல
[பக்கம் 6-ன் படம்]
கிறிஸ்துவை பேதுரு மறுதலித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 7-ன் படம்]
உண்மையைப் பேசுவது வலுவான, திருப்தியான உறவுகளுக்கு வழிவகுக்கிறது