‘அந்நியருடைய சத்தத்திற்கு’ எச்சரிக்கையாக இருங்கள்
“அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் [“ஒருகாலும்,” NW] அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்.”—யோவான் 10:5.
1, 2. (அ) மரியாளை இயேசு பேர்சொல்லி அழைத்தபோது அவள் எப்படி பிரதிபலித்தாள், இயேசு முன்பு சொல்லியிருந்த எந்தக் கூற்றை இச்சம்பவம் சித்தரிக்கிறது? (ஆ) இயேசுவோடு நெருங்கியிருக்க எது நமக்கு உதவுகிறது?
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, தம்முடைய காலியான கல்லறைக்கு அருகே அந்தப் பெண்மணி நின்றுகொண்டிருப்பதை பார்க்கிறார். அவருக்கு அவளை நன்றாக தெரியும். அவள்தான் மகதலேனாள் மரியாள். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன், பேய் பிடித்திருந்த அவளை அவர் குணப்படுத்தியிருந்தார். அது முதற்கொண்டு அவரோடும் அவருடைய அப்போஸ்தலர்களோடும் சேர்ந்து அவர்களுடைய அன்றாட தேவைகளை கவனித்து வந்திருந்தாள். (லூக்கா 8:1-3) ஆனால் இன்று, அவள் துக்கம் தாளாமல் அழுது கொண்டிருக்கிறாள். காரணம், தன் கண்முன் இயேசு மரித்ததை பார்த்திருந்தாள், அதுவும் இப்பொழுது அவருடைய சடலம்கூட காணாமல் போயிருந்தது! அவளிடம் இயேசு இவ்வாறு கேட்கிறார்: “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய்”? அவரைத் தோட்டக்காரரென்று நினைத்தவளாய், “ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன்” என்று பதிலளிக்கிறாள். பின்பு இயேசு “மரியாளே” என்று கூப்பிடுகிறார். நன்கு பரிச்சயமான அவருடைய குரலைக் கேட்டதும் சட்டென்று அவரை அடையாளம் கண்டுகொள்கிறாள். எல்லையற்ற மகிழ்ச்சியில் “ரபூனி” என்று வியந்தபடி அவரிடம் நெருங்குகிறாள்.—யோவான் 20:11-18.
2 இந்தப் பதிவு, மரிப்பதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு இயேசு சொல்லியிருந்த ஒரு கூற்றை நெஞ்சைத் தொடும் விதத்தில் சித்தரிக்கிறது. தம்மை ஒரு மேய்ப்பனுக்கும் தம்மை பின்பற்றுகிறவர்களை ஆடுகளுக்கும் ஒப்பிட்டு, மேய்ப்பன் தன் ஆடுகளை பேர்சொல்லி கூப்பிடுவான் என்றும் அவைகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கின்றன என்றும் அவர் சொன்னார். (யோவான் 10:3, 4, 14, 15, 27, 28) ஆம், ஆடு தன் மேய்ப்பனை அடையாளம் கண்டுகொள்வது போல, மரியாள் தன்னுடைய மேய்ப்பரான கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்டாள். இன்று இயேசுவை பின்பற்றுகிறவர்களுடைய விஷயத்திலும் இதுவே உண்மை. (யோவான் 10:16) ஆடுகளின் பகுத்தறியும் திறனுள்ள காதுகள் மேய்ப்பனோடு நெருங்கியிருக்க அவைகளுக்கு உதவுவது போல, நம்முடைய ஆன்மீக பகுத்தறிவு நல்ல மேய்ப்பரான இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நெருங்க பின்பற்ற நமக்கு உதவுகிறது.—யோவான் 13:15; 1 யோவான் 2:6; 5:20.
3. ஆட்டுத்தொழுவம் பற்றிய இயேசுவின் உவமை என்ன கேள்விகளை நம் மனதில் எழுப்புகிறது?
3 எனினும், ஆடுகளுக்கு மனிதருடைய சத்தங்களைப் புரிந்துகொள்ளும் திறன் இருப்பதால் அவற்றோடு பிரியமாக பழகுபவரின் சத்தத்தை மாத்திரமல்ல, எதிரியின் சத்தத்தைக்கூட அவற்றால் கண்டுகொள்ள முடியுமென்று அதே உவமை காண்பிக்கிறது. இத்தகைய திறன் நமக்கு மிகவும் அவசியம், ஏனென்றால் நயவஞ்சக எதிரிகள் நமக்கும்கூட இருக்கிறார்கள். அவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? அவர்களிடமிருந்து நம்மை நாமே எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம்? இதைக் கண்டுபிடிக்க, ஆட்டுத்தொழுவம் பற்றிய உவமையில் இயேசு கூடுதலாக என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம்.
‘வாசல் வழியாய்ப் பிரவேசிக்காதவன்’
4. மேய்ப்பனைப் பற்றிய உவமையின்படி, ஆடுகள் யாருக்கு பின்பாக செல்கின்றன, யாருக்கு பின்பாக செல்வதில்லை?
4 இயேசு இவ்வாறு குறிப்பிடுகிறார்: “வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்ட பின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்து போகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் [“ஒருகாலும்,” NW] அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்.” (யோவான் 10:2-5) ‘சத்தம்’ என்ற வார்த்தையை இயேசு மூன்று முறை பயன்படுத்துவதை கவனியுங்கள். இரண்டு முறை மேய்ப்பனுடைய சத்தத்தைப் பற்றி பேசுகிறார், ஆனால் மூன்றாவது முறையோ, ‘அந்நியருடைய சத்தத்தைப்’ பற்றி குறிப்பிடுகிறார். எப்படிப்பட்ட அந்நியரைப் பற்றி இயேசு இங்கே பேசிக்கொண்டிருக்கிறார்?
5. யோவான் 10-வது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்நியனைப் போன்றவர்களை நாம் ஏன் உபசரிப்பதில்லை?
5 நாம் உபசரிக்க விரும்புகிற அந்நியரைப் பற்றி இயேசு இங்கே பேசிக்கொண்டில்லை; உபசரித்தல் என்ற வார்த்தை பைபிளின் மூல மொழியில் “அந்நியர்மேல் அன்பாயிருத்தல்” என பொருட்படுகிறது. (எபிரெயர் 13:2) இயேசுவின் உவமையிலுள்ள அந்த அந்நியன் அழைக்கப்பட்ட ஒரு விருந்தாளி அல்ல. அவன் ‘ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல் வழியாய்ப் பிரவேசியாமல், வேறு வழியாய் ஏறுகிறான்.’ அவன் “கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.” (யோவான் 10:1) கடவுளுடைய வார்த்தையின்படி முதன்முதலாக கள்ளனும் கொள்ளைக்காரனுமாக மாறியவன் யார்? பிசாசாகிய சாத்தானே. இதற்கான அத்தாட்சி ஆதியாகம புத்தகத்தில் உள்ளது.
அந்நியனுடைய சத்தம் முதன்முதலில் கேட்கப்பட்ட சமயம்
6, 7. சாத்தானை ஒரு அந்நியன் என்றும் திருடன் என்றும் அழைப்பது ஏன் பொருத்தமாக இருக்கிறது?
6 முதன்முதலில் அந்நியனுடைய சத்தம் பூமியில் எப்படி கேட்டது என்பதை ஆதியாகமம் 3:1-5 விவரிக்கிறது. ஒரு பாம்பை பயன்படுத்தி முதல் மனுஷியான ஏவாளை சாத்தான் அணுகினதாகவும், மோசம்போக்குகிற விதத்தில் அவளிடம் பேசினதாகவும் பதிவு சொல்கிறது. இந்தப் பதிவில் அவன் ‘ஒரு அந்நியன்’ என்று நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்பது உண்மைதான். என்றாலும், அவனுடைய நடவடிக்கைகள், யோவான் 10-வது அதிகாரத்திலுள்ள இயேசுவின் உவமையில் சொல்லப்பட்டுள்ள அந்நியனோடு அநேக விதங்களில் ஒத்திருக்கின்றன. ஒரு சில ஒப்புமைகளைக் கவனியுங்கள்.
7 ஆட்டுத் தொழுவத்திலிருந்து ஆடுகளைத் திருட அந்த அந்நியன் வேறு வழியாய் வருகிறான் என இயேசு குறிப்பிடுகிறார். அதேபோல் சாத்தானும் ஒரு பாம்பை பயன்படுத்தி ஏவாளை மறைமுகமாக அணுகினான். இந்தத் தந்திரமான அணுகுமுறையே சாத்தானின் சுயரூபத்தை வெட்ட வெளிச்சமாக்கியது, ஆம், அவன் ஒரு நயவஞ்சக திருடன். அதுமட்டுமல்ல, உவமையில் சொல்லப்பட்டுள்ள அந்த அந்நியன் ஆடுகளின் சொந்தக்காரரிடமிருந்து அவற்றைத் திருட முனைகிறான். நிஜத்தில், அவன் திருடனைவிட மோசமானவன். காரணம், அவன் ஆடுகளை “கொல்லவும் அழிக்கவும்”கூட குறியாக இருக்கிறான். (யோவான் 10:10) அதுபோலவே சாத்தானும் ஒரு திருடனாக இருந்தான். ஏவாளை வஞ்சித்து, அவளுடைய பற்றுறுதியை கடவுளிடமிருந்து திருடினான். அதுமட்டுமல்ல, மனிதர்களுக்கு மரணத்தை அவன் வருவித்ததால், அவன் ஒரு கொலைகாரனாகவும் இருக்கிறான்.
8. யெகோவாவுடைய வார்த்தைகளையும் உள்நோக்கங்களையும் பற்றி சாத்தான் எவ்வாறு திரித்துக் கூறினான்?
8 சாத்தான் யெகோவாவின் வார்த்தைகளையும் உள்நோக்கங்களையும் திரித்துக் கூறிய விதத்திலிருந்து அவனுடைய நேர்மையற்ற தன்மை புலப்பட்டது. ‘நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ’ என்று அவன் ஏவாளிடம் கேட்டான். ஆச்சரியமடைந்தவனைப் போல் காட்டிக்கொண்டு, ‘கடவுளால் எப்படி இவ்வளவு அநியாயமாய் நடந்துகொள்ள முடியும்?’ என்பது போல் அவன் கேட்டான். கூடுதலாக, ‘நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்று தேவன் அறிவார்’ எனவும் சொன்னான். “தேவன் அறிவார்” என்ற அவனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள். ‘கடவுளுக்கு என்ன தெரியுமோ அது எனக்கும் தெரியும். அவருடைய உள்நோக்கமும் எனக்கு தெரியும், அது ரொம்ப மோசமானது’ என்பது போல் சாத்தான் சொன்னான். (ஆதியாகமம் 2:16, 17; 3:1, 5) வருத்தகரமாக, இந்த அந்நியனுடைய சத்தத்திற்கு ஏவாளும் ஆதாமும் தங்கள் செவிகளை விலக்கவில்லை. மாறாக, அதற்கு செவிசாய்த்து தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் துன்பத்தை வருவித்துக் கொண்டார்கள்.—ரோமர் 5:12, 14.
9. அந்நியர்களுடைய சத்தம் இன்று கேட்கப்படும் என்பதை நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?
9 இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்தி இன்றும்கூட சாத்தான் கடவுளுடைய மக்களை தவறாக வழிநடத்துகிறான். (வெளிப்படுத்துதல் 12:9) அவன் ‘பொய்க்குப் பிதாவாக’ இருக்கிறான்; அவனுடைய மாதிரியைப் பின்பற்றி கடவுளுடைய மக்களை தவறாக வழிநடத்த முயல்கிறவர்கள் அவனுடைய பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். (யோவான் 8:44) அப்படிப்பட்ட அந்நியர்களுடைய சத்தம் இன்று கேட்கப்படுகிற சில வழிகளை நாம் கவனிக்கலாம்.
அந்நியர்களுடைய சத்தம் இன்று கேட்கப்படும் விதம்
10. அந்நியருடைய சத்தம் கேட்கப்படுகிற ஒரு வழி என்ன?
10 வஞ்சனையான நியாயவிவாதங்கள். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்.” (எபிரெயர் 13:9) என்ன வகையான போதனைகள் அவை? நம்மை ‘அலைப்புண்டு திரியச்’ செய்யும் போதனைகள் அவை என்பதால், நம்முடைய ஆவிக்குரிய சமநிலையைக் குலைத்துப் போடுகிற போதனைகளைப் பற்றியே பவுல் இங்கே குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது. இந்த அந்நிய போதனைகளை யார் போதித்துக் கொண்டிருப்பது? கிறிஸ்தவ மூப்பர்கள் அடங்கிய தொகுதியிடம் பவுல் இவ்வாறு உரைத்தார்: “உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 20:30) ஆம், பவுலின் நாட்களில் இருந்தது போலவே இன்றும்கூட, கிறிஸ்தவ சபையின் முன்னாள் அங்கத்தினர் சிலர் ‘மாறுபாடானவைகளை,’ அதாவது அரைகுறை உண்மைகளை மற்றும் அப்பட்டமான பொய்களைப் போதிப்பதன் மூலம் ஆடுகளை தவறாக வழிநடத்த முயல்கிறார்கள். அப்போஸ்தலன் பேதுரு சொல்கிறபடி, அவர்கள் பயன்படுத்துவது சத்தியத்தைப் போல தோன்றும் வெறும் ‘கள்ள வார்த்தைகளே,’ ஆனால் கள்ள நோட்டுகளைப் போல அவை ஒன்றுக்கும் உதவாதவை.—2 பேதுரு 2:3, NW.
11. விசுவாசதுரோகிகளின் வழிகளையும் குறிக்கோளையும் பற்றி 2 பேதுரு 2:1, 3-லுள்ள வார்த்தைகள் எப்படி அம்பலப்படுத்துகின்றன?
11 ‘அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப் பண்ணுவார்கள்’ என்று சொல்வதன் மூலம் விசுவாசதுரோகிகளின் செயல்முறைகளை பேதுரு மேலும் அம்பலப்படுத்துகிறார். (2 பேதுரு 2:1, 3) இயேசு சொன்ன உவமையில் ‘வாசல் வழியாய்ப் பிரவேசியாமல், வேறு வழியாய் ஏறிவருகிற’ திருடனைப் போல, விசுவாசதுரோகிகளும் தந்திரமான வழிகளில் நம்மை அணுகுகிறார்கள். (கலாத்தியர் 2:4; யூதா 4) அவர்களுடைய குறிக்கோள் என்ன? பேதுரு தொடர்ந்து சொல்கிறார்: “உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக் கொள்ளுவார்கள்.” விசுவாசதுரோகிகள் என்னதான் சொல்லி தங்கள் செயல்களை நியாயப்படுத்தினாலும், உண்மையில் திருடர்களின் முக்கிய குறிக்கோள் “திருடவும் கொல்லவும் அழிக்கவும்” வேண்டுமென்பதே. (யோவான் 10:10) எனவே, அப்படிப்பட்ட அந்நியர்களைக் குறித்து ஜாக்கிரதை!
12. (அ) நம்முடைய சகவாசம் மூலம் நமக்கு எப்படி அந்நியருடைய சத்தம் கேட்கலாம்? (ஆ) சாத்தானுடைய தந்திரங்களுக்கும் இன்றுள்ள அந்நியர்களுக்கும் என்ன ஒப்புமை உள்ளது?
12 தீங்கிழைக்கும் சகவாசம். நாம் யாருடன் சகவாசம் வைத்துக் கொள்கிறோமோ அவர்கள் மூலமாகவும் அந்நியருடைய சத்தம் கேட்கப்படலாம். தீங்கிழைக்கும் சகவாசங்களால் குறிப்பாக இளைஞர்கள் ஆபத்துக்குள்ளாகலாம். (1 கொரிந்தியர் 15:33, NW) முதல் மனித ஜோடியில் வயதும் அனுபவமும் குறைந்த ஏவாளையே சாத்தான் குறி வைத்தான் என்பதை நினைவில் வையுங்கள். யெகோவா அவளை சுதந்திரமாக இருக்க விடாமல் ஒரேயடியாய் கட்டுப்படுத்துகிறார் என்பதாக அவளை நம்ப வைத்தான். ஆனால் அதற்கு நேர்மாறானதே உண்மை. யெகோவா தம்முடைய மனித சிருஷ்டிகளை நேசித்தார்; அவர்களுடைய நலனில் அக்கறை காட்டினார். (ஏசாயா 48:17) அதுபோலவே, உங்கள் பெற்றோர் உங்களைச் சுதந்திரமாக இருக்க விடாமல் ஒரேயடியாய் கட்டுப்படுத்துகிறார்களென இளைஞர்களான உங்களை நம்ப வைக்க அந்நியர்கள் இன்று முயற்சிக்கலாம். அப்படிப்பட்ட அந்நியர்கள் உங்கள் மீது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்? ஒரு கிறிஸ்தவ பெண் இப்படி ஒத்துக்கொள்கிறாள்: “என்னுடைய வகுப்பு மாணவர்களால் என்னுடைய விசுவாசம் கொஞ்ச காலத்திற்கு சற்று பலவீனமடைந்தது. என்னுடைய மதம் நியாயமற்றதாக இருக்கிறதென்றும், அதில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கிறதென்றும் அவர்கள் எப்போது பார்த்தாலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.” ஆனால், உங்கள் பெற்றோர் உங்களை நேசிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆகையால் உங்கள் பெற்றோர் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பள்ளி மாணவர்கள் குலைத்துப்போட முற்பட்டால், ஏவாளைப் போல ஏமாந்துவிடாதீர்கள்.
13. தாவீது எவ்வாறு ஞானமாக நடந்துகொண்டார், எந்த ஒரு வழியில் நாம் அவரை பின்பற்ற முடியும்?
13 தீங்கிழைக்கும் சகவாசத்தைப் பற்றி சங்கீதக்காரனான தாவீது இவ்வாறு குறிப்பிட்டார்: “வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் [“சுயரூபத்தை மறைத்துக் கொள்கிறவர்களிடத்தில்,” NW] நான் சேருவதில்லை.” (சங்கீதம் 26:4) அந்நியர்களுக்கே உரிய சுபாவம் இங்கே மற்றொரு முறை விளக்கப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா? ஒரு பாம்பை பயன்படுத்தி சாத்தான் தன்னுடைய சுயரூபத்தை மறைத்துக் கொண்டது போல் அந்நியர்கள் தங்களுடைய சுயரூபத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஒழுக்கங்கெட்ட சிலர் இன்று இன்டர்நெட்டை பயன்படுத்தி தங்கள் சுயரூபத்தையும் உண்மையான நோக்கங்களையும் மறைத்துக் கொள்கிறார்கள். வக்கிரபுத்தியுள்ள ஆட்கள் உங்களை தங்களுடைய வலையில் சிக்க வைப்பதற்காக இன்டர்நெட் சாட் ரூம்களில் இளைஞர்களைப் போலக்கூட நடிக்கலாம். இளைஞர்களே, உங்களுடைய ஆவிக்குரிய தன்மை பாதிக்கப்படாமலிருக்க தயவுசெய்து மிக மிக எச்சரிக்கையாயிருங்கள்.—சங்கீதம் 119:101; நீதிமொழிகள் 22:3.
14. சில சமயங்களில் அந்நியருடைய சத்தத்தை மீடியா எப்படி பரப்புகிறது?
14 பொய்க் குற்றச்சாட்டுகள். சில செய்தி அறிக்கைகள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி சாதகமாக குறிப்பிட்டாலும் சில சமயங்களில் மீடியா அந்நியர் பக்கமாக சேர்ந்துகொண்டு அவர்களுடைய ஒருதலைப்பட்சமான சத்தத்தைப் பரப்புகிறது. உதாரணத்திற்கு, யெகோவாவின் சாட்சிகள் இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் ஆட்சியை ஆதரித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஒரு நாட்டில் வெளியிடப்பட்டது. மற்றொரு நாட்டில், யெகோவாவின் சாட்சிகள் சர்ச் கட்டிடங்களை நாசப்படுத்துவதாக ஓர் அறிக்கை குற்றஞ்சாட்டியது. இன்னும் பல நாடுகளில், சாட்சிகள் தங்கள் பிள்ளைகளுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மறுக்கிறார்கள் எனவும், சக வணக்கத்தார் செய்யும் வினைமையான பாவங்களைக் கண்டும்காணாமல் விட்டுவிடுகிறார்கள் எனவும் மீடியா குற்றஞ்சாட்டியது. (மத்தேயு 10:22) இருந்தபோதிலும், நம்மை தனிப்பட்ட விதமாக அறிந்திருக்கும் நல்மனமுள்ளவர்களுக்கு அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யென்று நன்கு தெரியும்.
15. மீடியா அளிக்கிற எல்லா செய்திகளையும் நம்புவது ஏன் ஞானமான செயலல்ல?
15 அந்நியருடைய சத்தத்தைப் பரப்பும் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்ப்படுகையில் நாம் என்ன செய்ய வேண்டும்? நீதிமொழிகள் 14:15-லுள்ள ஆலோசனைக்கு செவிசாய்க்க வேண்டும்: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” மீடியா அளிக்கிற எல்லா செய்திகளையும் உண்மையென நம்புவது ஞானமான செயலல்ல. என்றாலும், மீடியா வெளியிடுகிற அனைத்து தகவல்களையுமே நாம் சந்தேகிப்பதில்லை, அதே சமயத்தில், ‘உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என்பதையும் நாம் மறந்துவிடுவதில்லை.—1 யோவான் 5:19.
‘ஏவப்பட்ட வார்த்தைகளைச் சோதித்தறியுங்கள்’
16. (அ) ஆடுகள் நடந்துகொள்கிற விதம், யோவான் 10:4-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் உண்மையென்று எப்படி தெளிவாக்குகிறது? (ஆ) பைபிள் எதை செய்யும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறது?
16 நாம் பழகிக்கொண்டிருப்பது ஒரு நண்பனிடமா அல்லது ஒரு வஞ்சகனிடமா என்பதை எப்படி நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்? “ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால்” மேய்ப்பனுக்கு பின்செல்கின்றன என்று இயேசு சொல்கிறார். (யோவான் 10:4) மேய்ப்பனுடைய தோற்றமல்ல, அவனுடைய குரலே அவனுக்கு பின்செல்ல ஆடுகளைத் தூண்டுகிறது. ஆனால், ஆடுகள் மேய்ப்பனின் குரலைக் கேட்டல்ல, அவனுடைய உடையை பார்த்துத்தான் அவன் பின்செல்கின்றன என்று ஒரு பார்வையாளர் வாதாடியதாய் பைபிள் தேசங்களைப் பற்றிய ஒரு புத்தகம் சொல்கிறது. பழக்கமான குரலை வைத்துத்தான் ஆடுகள் அடையாளம் கண்டுகொள்கின்றன என்று ஒரு மேய்ப்பன் அந்தப் பார்வையாளரிடம் விளக்கினான். இதை நிரூபிக்க, இருவரும் உடைகளை மாற்றிக்கொள்ளலாமென ஆலோசனையும் கொடுத்தான். அவ்வாறே மேய்ப்பனின் உடையை அணிந்துகொண்ட அந்தப் பார்வையாளர் ஆடுகளைக் கூப்பிட்டார், ஆனால் அவை அவரிடம் செல்லவில்லை. அவருடைய குரல் அவைகளுக்கு தெரியவில்லை. இதற்கு நேர்மாறாக, மேய்ப்பன் வித்தியாசமான உடையிலிருந்த போதிலும் அவற்றைக் கூப்பிட்டபோது அவை உடனே அவனிடம் வந்தன. ஆக, ஒருவர் மேய்ப்பனைப் போல காட்சியளித்தாலும், தோற்றத்தை வைத்து மட்டுமே அவர்தான் மேய்ப்பன் என ஆடுகள் நம்பிவிடுவதில்லை. கூப்பிடுகிறவருடைய குரலை மேய்ப்பனுடைய குரலோடு ஒத்துப்பார்த்து அவை செயல்படுகின்றன. இதைப் போலவே நாமும் செய்ய வேண்டுமென கடவுளுடைய வார்த்தை சொல்கிறது, அதாவது ‘ஏவப்பட்ட அந்த வசனிப்புகள் கடவுளிடமிருந்து வந்தவையா என்பதை பரிசோதித்துப் பார்க்கும்படி’ சொல்கிறது. (1 யோவான் 4:1, NW; 2 தீமோத்தேயு 1:13) இவ்வாறு செய்ய எது நமக்கு உதவும்?
17. (அ) யெகோவாவுடைய சத்தம் நமக்கு எப்படி பரிச்சயமாகும்? (ஆ) யெகோவாவைப் பற்றிய அறிவு என்ன செய்ய நமக்கு உதவும்?
17 யெகோவாவின் சத்தத்தை, அதாவது செய்தியை எந்தளவுக்கு திருத்தமாக நாம் அறிந்திருக்கிறோமோ அந்தளவுக்கு எளிதாக அந்நியனுடைய சத்தத்தைக் கண்டுபிடிக்க முடியும். அப்படிப்பட்ட அறிவை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதை பைபிள் சுட்டிக்காட்டுகிறது. அது சொல்கிறது: “வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” (ஏசாயா 30:21) நமக்கு பின்னால் ஒலிக்கும் “வார்த்தை” கடவுளுடைய வார்த்தையான பைபிளிலிருந்தே வருகிறது. நாம் ஒவ்வொரு முறையும் பைபிளை படிக்கும்போது, நம்முடைய பெரிய மேய்ப்பரான யெகோவாவின் குரலையே நாம் கேட்பது போல் இருக்கும். (சங்கீதம் 23:1) எனவே, நாம் எந்தளவுக்குப் பைபிளை படிக்கிறோமோ, அந்தளவுக்கு கடவுளுடைய சத்தம் நமக்கு பரிச்சயமாக ஆகிவிடும். அன்னியோன்னியமான இந்த அறிவு அந்நியருடைய சத்தத்தைச் சட்டென அடையாளம் கண்டுகொள்ள நமக்கு உதவும்.—கலாத்தியர் 1:8.
18. (அ) யெகோவாவுடைய சத்தத்தை அறிந்திருப்பதில் என்ன உட்பட்டுள்ளது? (ஆ) மத்தேயு 17:5-ன்படி, நாம் ஏன் இயேசுவின் சத்தத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்?
18 யெகோவாவுடைய சத்தத்தை அறிந்திருப்பதில் கூடுதலாக என்ன உட்பட்டுள்ளது? கேட்பது மட்டுமல்லாமல் அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிவதும் உட்பட்டுள்ளது. ஏசாயா 30:21-ஐ மறுபடியும் கவனியுங்கள். கடவுளுடைய வார்த்தை இவ்வாறு அறிவிக்கிறது: “வழி இதுவே.” ஆம், பைபிளைப் படிக்கும்போது, யெகோவாவுடைய வழிநடத்துதல்கள் நம் செவிகளில் விழுகின்றன. அடுத்தபடியாக, அவர் கட்டளையிடுவதாவது: “இதிலே நடவுங்கள்.” நாம் கேட்பதற்கு இசைய நடக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். படிக்கும் விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், யெகோவாவுடைய சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தோம் என்பதையும் அதற்கு கீழ்ப்படிந்தோம் என்பதையும் காண்பிக்கலாம். (உபாகமம் 28:1) யெகோவாவுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிவது இயேசுவின் சத்தத்திற்கு கீழ்ப்படிவதையும் அர்த்தப்படுத்தும், ஏனெனில் யெகோவா தாமே நம்மிடம் அவ்வாறு செய்யும்படி சொல்லியிருக்கிறார். (மத்தேயு 17:5) நல்ல மேய்ப்பரான இயேசு கிறிஸ்து, நம்மை என்ன செய்யும்படி சொல்லியிருக்கிறார்? சீஷர்களை உண்டுபண்ண வேண்டும் என்றும், ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரரை’ நம்ப வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். (மத்தேயு 24:45; 28:18-20) அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிவது நமக்கு நித்திய ஜீவனை அர்த்தப்படுத்தும்.—அப்போஸ்தலர் 3:23.
‘அவைகள் அவனை விட்டோடிப்போம்’
19. அந்நியருடைய சத்தத்திற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
19 அப்படியென்றால், அந்நியருடைய சத்தத்திற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? ஆடுகள் பிரதிபலித்த விதமாகவே நாம் பிரதிபலிக்க வேண்டும். அவை “[“ஒருகாலும்,” NW] அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்” என இயேசு சொன்னார். (யோவான் 10:5) நம்முடைய பிரதிபலிப்பில் இரு விஷயங்கள் உட்பட்டுள்ளன. முதலாவதாக, ‘ஒருகாலும் அந்நியனுக்குப் பின்செல்லாமல்’ இருக்க வேண்டும். ஆம், அந்நியனை ஒதுக்கித் தள்ளுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், “ஒருகாலும்” என்பதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க சொல் ஒதுக்கித் தள்ளுவதை மிகவும் வலிமைமிக்க விதத்தில் தெரியப்படுத்துகிறது. (மத்தேயு 24:35; எபிரெயர் 13:5) இரண்டாவதாக, நாம் ‘அவனை விட்டோடிப்போக’ வேண்டும், அதாவது அவனைவிட்டு விலகிப்போக வேண்டும். நல்ல போதகருடைய சத்தத்திற்கு இசைவாக இல்லாத போதனைகளை போதிப்பவர்களிடம் நாம் இப்படிப்பட்ட பிரதிபலிப்பைக் காட்டுவதே சரியான ஒரே வழி.
20. (அ) வஞ்சனையான விசுவாசதுரோகிகளை, (ஆ) தீங்கிழைக்கும் சகவாசங்களை, (இ) ஒருதலைப்பட்சமான மீடியா தகவல்களை எதிர்ப்படும்போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
20 ஆகையால், விசுவாசதுரோக கருத்துகளை தெரிவிக்கும் நபர்களை எதிர்ப்பட்டால், கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிற விதமாகவே நடக்க நாம் விரும்புகிறோம்: ‘நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலக வேண்டும்.’ (ரோமர் 16:17; தீத்து 3:10) அதுபோலவே, தீங்கிழைக்கும் சகவாசத்தினால் நேரிடுகிற ஆபத்துகளை எதிர்கொள்ளும் கிறிஸ்தவ இளைஞர்கள், இளம் தீமோத்தேயுவிற்கு பவுல் கொடுத்த ஆலோசனையைப் பொருத்துபவர்களாக இருக்க வேண்டும்: ‘பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு.’ அதோடு, மீடியாவின் பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்ப்படும்போது, தீமோத்தேயுவிற்கு பவுல் மேலுமாக கொடுத்த புத்திமதியை நாம் நினைவில் வைக்க வேண்டும்: ‘அவர்கள் [அந்நியருடைய சத்தத்தைக் கேட்பவர்கள்] கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு.’ (2 தீமோத்தேயு 2:22; 4:3-5) அந்நியருடைய சத்தம் என்னதான் தேனாக இனித்தாலும், நம்முடைய விசுவாசத்தைத் தகர்க்கக்கூடிய எதையும் விட்டு நாம் ஓடிப்போக வேண்டும்.—சங்கீதம் 26:5; நீதிமொழிகள் 7:4, 21; வெளிப்படுத்துதல் 18:2, 4.
21. அந்நியருடைய சத்தத்திற்கு தங்கள் செவிகளை விலக்குகிறவர்களுக்கு என்ன ஆசீர்வாதம் காத்திருக்கிறது?
21 ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் அந்நியருடைய சத்தத்தைக் கேட்க மறுப்பதன் மூலம் லூக்கா 12:32-லுள்ள நல்ல போதகரின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கிறார்கள். அதில் இயேசு அவர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” அதுபோலவே, “வேறே ஆடுகளும்” இயேசுவின் பின்வரும் வார்த்தைகளைக் கேட்க ஆவலோடு இருக்கிறார்கள்: “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.” (யோவான் 10:16; மத்தேயு 25:34) ‘அந்நியருடைய சத்தத்திற்கு’ நம் செவிகளை விலக்கினோமென்றால் மனதிற்கு இதமளிக்கும் எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம் நமக்கு காத்திருக்கிறது!
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஆட்டுத்தொழுவம் பற்றிய இயேசுவின் உவமையில் சொல்லப்பட்டுள்ள அந்நியனின் விவரிப்புகள் எப்படி சாத்தானுக்கு பொருந்துகின்றன?
• இன்று அந்நியருடைய சத்தம் எவ்வாறு கேட்கப்படுகிறது?
• அந்நியருடைய சத்தத்தை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம்?
• அந்நியருடைய சத்தத்திற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
கிறிஸ்துவை மரியாள் அடையாளம் கண்டுகொண்டாள்
[பக்கம் 16-ன் படம்]
அந்நியன் ஆடுகளைத் திருட நேர் வழியில் வர மாட்டான்
[பக்கம் 18-ன் படம்]
அந்நியருடைய சத்தத்திற்கு நாம் எப்படி பிரதிபலிக்கிறோம்?