அறிவைப் பெறுதல் இன்றும் என்றும்
ஜெர்மானிய மருத்துவர் உல்ரிக் ஷ்ட்ரூன்ஸ் என்பவர் என்றும் இளமை என்ற ஆங்கில நூல் தொகுப்பை எழுதினார். உடற்பயிற்சி, சத்துள்ள உணவுப் பழக்கங்கள், தகுந்த வாழ்க்கை பாணி ஆகியவை ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுசுக்கும் உதவுமென அதில் விவாதித்துள்ளார். ஆனால், தனது ஆலோசனைகளின்படி நடந்தால் என்றென்றும் வாழலாம் என வாசகர்களுக்கு அவர் உத்தரவாதம் அளிக்கவில்லை.
என்றாலும், ஒரு விதமான அறிவு நித்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதை இப்படியும் மாற்றிச் சொல்லலாம்: நீங்கள் நித்தியமாக வாழ்ந்தால், பிரயோஜனமுள்ள அந்த அறிவை நித்தியத்திற்கும் வளர்க்க முடியும். கடவுளிடம் இயேசு கிறிஸ்து இவ்வாறு ஜெபித்தார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே [“அறிவைப் பெற்றுவருவதே,” NW] நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) முதலில், “நித்திய ஜீவன்” என்றால் என்ன என்பதை நாம் பார்க்கலாம்; பின்பு அதைப் பற்றிய அறிவில் என்னவெல்லாம் உட்பட்டுள்ளது, அதை நீங்கள் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பார்க்கலாம்.
வெகு விரைவில், சிருஷ்டிகர் இந்தப் பூமியை நீண்ட காலம் வாழ்வதற்கேற்ற ஒரு நிஜ பரதீஸாக மாற்றப் போகிறார் என்று பைபிள் சொல்கிறது. அத்தகைய பரதீஸை உருவாக்க வேண்டுமென்றால் நோவாவின் நாட்களில் ஜலப்பிரளயத்தை வரவைத்தது போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். மத்தேயு 24-ம் அதிகாரம் வசனங்கள் 37-39-ல், நாம் வாழும் காலத்தை ‘நோவாவின் நாட்களுக்கு’ இயேசு ஒப்பிட்டார். அப்போதிருந்த ஜனங்கள் தங்களது ஆபத்தான சூழ்நிலையை “உணராதிருந்தார்கள்.” நோவா பிரசங்கித்த செய்தியையும் அவர்கள் அசட்டை செய்தார்கள். அதற்குப் பின்பு, ‘நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்’ வந்தது; இந்த அறிவைப் பெற்றுக்கொள்ள மறுத்த எல்லோரையும் ஜலப்பிரளயம் வாரிக்கொண்டு போனது. நோவாவும் அவருடன் பேழைக்குள் இருந்தவர்களும் தப்பிப்பிழைத்தார்கள்.
நம்முடைய காலத்திலும் அது போன்ற ஒரு ‘நாள்’ வரப்போவதாக இயேசு சொன்னார். இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய அறிவுக்கு செவிசாய்ப்பவர்கள் தப்பிப்பிழைக்கும் எதிர்பார்ப்பை மட்டுமல்ல, என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பையும் பெறுவார்கள். அதுமட்டுமல்ல, கடவுளுடைய நினைவில் இருக்கும் மரித்தவர்கள் மறுபடியும் சாகாமலிருக்கும் எதிர்பார்ப்புடன் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (யோவான் 5:28, 29) இந்த இரண்டு விஷயங்களையும் இயேசு எவ்வாறு குறிப்பிட்டார் என்பதை கவனியுங்கள். மரித்தவர்கள் உயிர்த்தெழுவதைப் பற்றி மார்த்தாளிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் இவ்வாறு கூறினார்: “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.” இந்த ‘நாள்’ வெகு சமீபத்தில் இருக்கிறதென அத்தாட்சிகள் காட்டுகின்றன; அப்படியென்றால் நீங்கள் ‘என்றென்றைக்கும் மரியாமல்’ இருக்கப்போகும் காலம் வெகு விரைவில் வரப்போகிறது!—யோவான் 11:25-27.
பின்பு மார்த்தாளிடம், “இதை விசுவாசிக்கிறாயா?” என்று இயேசு கேட்டார். அவள் “ஆம், ஆண்டவரே” என்று பதிலளித்தாள். அதே கேள்வியை இயேசு உங்களிடம் இன்று கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? மரிக்காமல் வாழ முடியும் என்பதை நம்புவது உங்களுக்கு ஒருவேளை கடினமாக இருக்கலாம். அப்படியே கடினமாக இருந்தாலும், அதற்குரிய அத்தாட்சிகளை அறிந்துகொள்ள விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ‘என்றென்றைக்கும் மரிக்காமல்’ இருந்தால் நீங்கள் எந்தளவு கற்றுக்கொள்வீர்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள். நேரம் போதாததால், வாழ்க்கையில் இப்போது கற்றுக்கொண்டு செய்ய முடியாத எல்லாவற்றையும் அப்போது உங்களால் செய்ய முடிவதை எண்ணிப் பாருங்கள்! மரித்துப் போயிருக்கும் உங்கள் அன்பானவர்களோடு மீண்டும் ஒன்றுசேர்வதை யோசித்துப் பாருங்கள்! இவற்றை சாத்தியமாக்கும் அந்த அறிவுதான் என்ன, அதை நீங்கள் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?
ஜீவனைத் தரும் அறிவைப் பெறுவது—நம்மால் முடியும்
கடவுளையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவைப் பெற்றுவருவது நம் திறமைக்கு அப்பாற்பட்டதா? இல்லை. கடவுளுடைய படைப்புகளைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு முடிவே இல்லை என்பது உண்மைதான். ஆனால், ‘அறிவையும்’ ‘நித்திய ஜீவனையும்’ சம்பந்தப்படுத்தி இயேசு பேசிக் கொண்டிருந்தபோது, வானவியலைப் பற்றியோ மற்ற அறிவியல் துறைகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. பைபிளில் காணப்படும் ‘வார்த்தைகளும்,’ ‘கட்டளைகளும்,’ ‘தேவனை அறியும் அறிவுக்கு’ அடிப்படையானவை என நீதிமொழிகள் 2-ம் அதிகாரம் வசனங்கள் 2, 5 குறிப்பிடுகின்றன. இயேசுவைப் பற்றி சொல்கையில், நாம் ‘நித்திய ஜீவனை அடைவதற்குத்’ தேவையான யாவும் பைபிளில் எழுதப்பட்டுள்ளன என்று யோவான் 20:30, 31 குறிப்பிட்டுக் காட்டுகிறது.
எனவே, யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய பைபிள் அறிவே நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவதற்குப் போதுமானதாகும். பைபிள் தனிச்சிறப்புமிக்க ஒரு நூல். படிப்பறிவில்லாதவர்களும்கூட நித்திய ஜீவனைப் பெறுவதற்குத் தேவையான போதிய அறிவைப் பெற்றுகொள்ளும் விதத்தில் பைபிளை எழுதும்படி படைப்பாளர் செய்திருக்கிறார். அதே விதமாக, படிக்கும் விஷயங்களை உடனடியாக புரிந்துகொள்ளும் திறனும் நேரமும் வசதியும் உடையவர்கள் பைபிளிலிருந்து எப்போதும் ஏதாவது புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் கட்டுரையை உங்களால் படிக்க முடிவதே உங்களுக்குக் கற்றுக்கொள்ளும் திறமை இருக்கிறது என்பதை காட்டுகிறது; ஆனால் இத்திறமையை நீங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்?
பைபிள் விஷயங்களை ஏற்கெனவே நன்கு அறிந்த ஒருவரின் உதவியோடு, தனிப்பட்ட விதமாக பைபிளைப் படிப்பதே இந்த அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு மிகச் சிறந்த வழி என்று உலகம் முழுவதிலுமுள்ள அனுபவங்கள் காட்டியிருக்கின்றன. நோவா தன் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு அறிவைப் புகட்ட முயற்சி எடுத்த விதமாகவே, உங்கள் வீட்டுக்கு வந்து பைபிளைப் பற்றி உரையாட யெகோவாவின் சாட்சிகள் விரும்புகிறார்கள். கடவுள் நம்மிடமிருந்து எதை தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டையோ நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தையோ அவர்கள் பயன்படுத்தக்கூடும்.a விசுவாசமுள்ள ஜனங்கள் பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் ‘என்றென்றைக்கும் மரிக்காமல்’ இருப்பார்கள் என்பதை நம்புவது உங்களுக்குக் கடினமாக இருந்தாலும், இது போன்ற பைபிள் உரையாடல் வாயிலாக அந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைக்க முடிகிறது. எனவே நீங்கள் என்றென்றும் வாழ ஆசைப்பட்டால் அல்லது அதற்கான அத்தாட்சிகளைத் தெரிந்துகொள்ள விரும்பினால், என்ன செய்ய வேண்டும்? பைபிளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பைபிள் படிப்புக்கு எவ்வளவு காலம் எடுக்கும்? முந்தைய பாராவில் குறிப்பிடப்பட்ட 32-பக்க சிற்றேடு, நூற்றுக்கணக்கான மொழிகளில் கிடைக்கிறது; வெறும் 16 சுருக்கமான பாடங்களே அதில் உள்ளன. அல்லது, வாரத்திற்கு ஒரு மணிநேரம் நீங்கள் ஒதுக்கினால், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்திலிருந்து பைபிளின் முக்கிய விஷயங்களைப் பற்றி சில மாதங்களிலேயே கற்றுக்கொள்ளலாம். இந்தப் பிரசுரங்கள் கூடுதலான அறிவைப் பெற்றுக்கொள்ளவும் கடவுளிடம் ஆழ்ந்த அன்பை வளர்த்துக்கொள்ளவும் அநேகருக்கு உதவி செய்திருக்கின்றன. இவ்வாறாக, நித்திய ஜீவனைப் பெறுவதற்கான வாய்ப்பை கொடுப்பதன் மூலம் தம்மை உண்மையில் நேசிக்கிறவர்களுக்கு சிருஷ்டிகர் பலனளிப்பார்.
ஜீவனைத் தரும் அறிவை நம்மால் நிச்சயம் பெற முடியும், இது எளிதாகவும் கிடைக்கிறது. 2,000-த்திற்கும் அதிகமான மொழிகளில், பைபிளின் ஒரு பகுதியாவது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விதமாகவும் பைபிள் பிரசுரங்களின் வாயிலாகவும் உங்களுடைய அறிவை வளர்ப்பதற்கு உதவ, 235 நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
தனிப்பட்ட படிப்பு
கடவுளோடு நீங்கள் வைத்திருக்கும் உறவு, உங்களுக்கும் அவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். அதை உங்களால் மட்டுமே பாதுகாத்து ஸ்திரமாக்க முடியும், அவரால் மட்டுமே உங்களுக்கு நித்திய ஜீவனையும் அளிக்க முடியும். எனவே, அவருடைய வார்த்தையை தனிப்பட்ட விதமாக நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். உங்கள் வீட்டுக்கு ஒருவரை தவறாமல் வரச் சொல்வதன் மூலம் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவது உங்களுக்கு எளிதாக இருக்கலாம்.
பைபிளிலும் பைபிள் பிரசுரங்களிலும் ‘தேவனை அறியும் அறிவு’ இருப்பதால், அவற்றை நீங்கள் பத்திரமாக வைத்திருப்பது பொருத்தமாக இருக்கும். (நீதிமொழிகள் 2:5) அப்படி செய்தால், அவை பல வருடங்களுக்கு உங்களிடம் இருக்கும். வளரும் நாட்டைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தால், பள்ளியில் அதிகமான பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள்; கேட்பதன் மூலமாகவோ பார்ப்பதன் மூலமாகவோ மட்டுமே கற்றிருப்பீர்கள். உதாரணமாக, பெனினில், 50-க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அவர்கள் பாடப் புத்தகங்களையே பார்த்திராவிட்டாலும்கூட, ஒவ்வொருவரும் நான்கோ ஐந்தோ மொழிகளை சரளமாக பேசுகின்றனர். கேட்பதன் மூலமாகவும், பார்ப்பதன் மூலமாகவும், கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலமாகவும் நீங்கள் கற்றுக்கொள்ளும் இந்தத் திறமை உண்மையில் ஒரு பரிசே. ஆனாலும், உங்களுடைய படிப்புக்கு புத்தகங்கள் பெரிதும் உதவி புரிவதை உங்களால் உணர முடியும்.
உங்களுடைய வீடு மிகச் சிறியதாக இருந்தாலும், பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் வைப்பதற்கு ஒரு நல்ல இடத்தை ஒதுக்க முயற்சி செய்யுங்கள். எடுத்துப் படிப்பதற்கு வசதியாகவும், பத்திரமாகவும் இருக்கும் ஓர் இடத்தில் அவற்றை வையுங்கள்.
குடும்பப் படிப்பு
ஒரு பெற்றோராக இருந்தால், நீங்கள் பெற்றுக்கொள்ளும் அறிவை உங்களுடைய பிள்ளைகளும் பெற்றுக்கொள்ள உதவி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். வளரும் நாடுகளில், வாழ்க்கைக்குத் தேவையான அநேக திறமைகளை வளர்க்க பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் கற்றுக்கொடுப்பது வழக்கம். சமைப்பது, விறகுகளை சேகரிப்பது, தண்ணீர் மொண்டு வருவது, விவசாயம் செய்வது, மீன் பிடிப்பது, மார்க்கெட்டுகளில் பண்டமாற்றுவது போன்றவை அவற்றில் அடங்கும். இவை உண்மையில் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியே. ஆனால், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற கல்வியை அநேக பெற்றோர்கள் கொடுப்பதில்லை.
உங்களுடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், உங்களுக்கு நேரமே இல்லை என ஒருவேளை உணரலாம். சிருஷ்டிகரும்கூட உங்களுடைய நிலைமையை அறிவார். பிள்ளைகளுக்கு எப்படி போதிக்க வேண்டும் என்பதை அநேக வருடங்களுக்கு முன்னர் அவர் சொன்னதை கவனியுங்கள்: ‘நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ (உபாகமம் 6:7) இதை மனதிற்கொண்டு, பின்வருவதைப் போன்ற கற்பிக்கும் திட்டம் ஒன்றை நீங்களாவே ஏன் போடக்கூடாது?
1. ‘உங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும்’: உங்களிடம் ஒருவர் வந்து கலந்தாலோசித்தது போல, ஒவ்வொரு வாரமும் தவறாமல் உங்கள் பிள்ளைகளோடு கலந்துபேச நீங்கள் முயற்சி எடுங்கள். எல்லா வயதிலுள்ள பிள்ளைகளுக்கும் போதிப்பதற்கேற்ற பைபிள் பிரசுரங்களை யெகோவாவின் சாட்சிகள் கொடுக்கிறார்கள்.
2. “வழியில் நடக்கிறபோதும்”: வாழ்க்கைக்குத் தேவையான காரியங்களை அல்லது அறிவுரைகளை இயல்பான சூழலில் நீங்கள் கற்றுக்கொடுப்பது போலவே, யெகோவாவைப் பற்றியும் உங்கள் பிள்ளைகளிடம் இயல்பான சூழலில் கலந்து பேசுங்கள்.
3. ‘நீங்கள் படுத்துக்கொள்ளுகிறபோதும்’: ஒவ்வொரு இரவும் உங்கள் பிள்ளைகளோடு ஜெபம் செய்யுங்கள்.
4. ‘நீங்கள் எழுந்திருக்கிறபோதும்’: ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு பைபிள் வசனத்தை கலந்தாலோசிப்பதால் அநேக குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. இதற்காக தினமும் வேதவாக்கியங்களை ஆராய்தல்b என்ற சிறுபுத்தகத்தை யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்துகிறார்கள்.
தங்கள் பிள்ளைகளில் ஒருவராவது உயர் கல்வியைப் பெறுவதற்கு, வளர்ந்த நாடுகளிலுள்ள பெற்றோர்கள் பலர் கடுமையாக பிரயாசப்படுகிறார்கள். அவ்வாறு தங்கள் பெற்றோர்கள் வயது சென்றவர்களாக ஆகும்போது, பிள்ளைகளால் அவர்களைக் கவனித்துக்கொள்ள முடியும்தான். ஆனால், நீங்கள் பைபிளைப் படித்து, உங்களுடைய பிள்ளைகளும் அவ்வாறு படிக்க உதவும்போது, நீங்களும் உங்களுடைய முழு குடும்பமும் என்றென்றும் வாழ்வதை சாத்தியமாக்கும் அறிவைப் பெற்றுக்கொள்வீர்கள்.
எல்லாமே தெரியும் என்று நாம் சொல்லும் காலம் என்றாவது வருமா? நிச்சயமாக வராது. முடிவில்லா இந்த அண்டத்தில் நம் பூமி பயணித்துக் கொண்டிருக்கையில், நாம் தொடர்ந்து அறிவைப் பெற்றுக்கொண்டேதான் இருப்போம். பிரசங்கி 3:11 சொல்கிறது: “அவர் [கடவுள்] சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் [“நித்தியகால நினைவையும்,” NW] அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.” உண்மையில், அறிவைப் பெற்றுவருவது மகிழ்ச்சியைத் தரும், அதற்கு முடிவேயில்லை.
[அடிக்குறிப்புகள்]
a இரண்டுமே யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
‘அறிவைப் பெற்றுவருவதே நித்திய ஜீவன்’
[பக்கம் 7-ன் படங்கள்]
இன்றும் என்றும் அறிவைப் பெற்றுவர உங்கள் குடும்பத்தினருக்கு உதவுங்கள்