அதிகாரம் மூன்று
‘நான் மனத்தாழ்மையாக இருக்கிறேன்’
1-3. இயேசு எப்படிப்பட்ட முறையில் எருசலேமிற்குள் பவனி வருகிறார், கூட்டத்தாரில் சிலர் ஏன் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கலாம்?
எருசலேமெங்கும் ஒரே பரபரப்பு! சலசலப்பு!! ஒரு மாமனிதர் பவனி வந்துகொண்டிருக்கிறார். ஊருக்கு வெளியே சாலையின் இரண்டு பக்கத்திலும் மக்கள் திரண்டிருக்கிறார்கள். அவரை வரவேற்க வழிமீது விழிவைத்துக் காத்திருக்கிறார்கள்! சிலர் அவரை தாவீது ராஜாவின் வாரிசு... இஸ்ரவேலின் அரசர்... என்று சொல்கிறார்கள். அவரை வாழ்த்தி வரவேற்க சிலர் குருத்தோலைகளைக் கையில் பிடித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் வழி நெடுக தங்களுடைய அங்கிகளைக் கம்பளமாய் விரிக்கிறார்கள், இளந்தளிர் பூத்த மரக்கொப்புகளைப் பரப்புகிறார்கள். (மத்தேயு 21:7, 8; யோவான் 12:12, 13) அவருடைய வருகை எப்படி இருக்குமென அநேகர் யோசித்துக்கொண்டிருக்கலாம்.
2 அவர் ஆரவாரத்தோடு வருவாரென சிலர் எதிர்பார்த்திருக்கலாம். ஏனென்றால், பிரபல மனிதர்கள் சிலர் பகட்டாக பவனி வந்ததைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். உதாரணத்திற்கு, தாவீதின் மகன் அப்சலோம் தன்னை ராஜாவாக பறைசாற்றிக்கொண்டு ரதத்தில் வந்தபோது தனக்கு முன்னால் 50 மனிதர்களை ஓடச் செய்தான். (2 சாமுவேல் 15:1, 10) ரோம அரசர் ஜூலியஸ் சீஸர் இதைவிட பகட்டான வரவேற்பு வேண்டுமென கேட்டார்; ஒருசமயம் 40 யானைகள் இருபுறமும் விளக்குகள் ஏந்திவர, ரோம அரசவைக்கு அவர் ஊர்வலமாய் சென்றார்! ஆனால், இப்போது இவர்களைவிட ஒரு மாபெரும் மனிதரை எருசலேம் வாசிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் புரிந்திருந்ததோ இல்லையோ, இவர்தான் மேசியா, பூமியில் வாழ்ந்தவர்களிலேயே உன்னத மனிதர்! ஆனால், இந்த வருங்கால அரசர் பவனி வருவதைப் பார்த்து சிலர் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.
3 அவர் எந்த ரதத்திலும் ஏறிவரவில்லை, யாரும் அவர் முன்னால் ஓடவுமில்லை, குதிரைகளின் அணிவகுப்பும் இல்லை, யானைகளோ இல்லவே இல்லை. பொதி சுமக்கும் ஒரு கழுதையின்மேல் இயேசு ஏறி வருகிறார்.a அவர் ராஜ வஸ்திரம் தரித்து வரவில்லை, அவர் ஏறிவந்த “வாகனத்திற்கு” எந்த அலங்காரமும் செய்யப்படவில்லை. அந்தக் கழுதைமீது பளபளப்பான பட்டாடை போர்த்தப்படவில்லை, ஆனால் அவருடைய அன்பு சீஷர்கள் அதன்மீது சாதாரண ஆடைகளைத்தான் விரித்திருந்தார்கள். இயேசுவைவிட மிக... மிக... தாழ்ந்த மனிதர்களே பகட்டோடும் ஆரவாரத்தோடும் பவனிவர துடித்தபோது, இயேசு மட்டும் ஏன் இவ்வளவு எளிமையான முறையில் எருசலேமிற்குள் நுழைய விரும்புகிறார்?
4. மேசியானிய அரசர் எருசலேமுக்குள் வரும் விதத்தைக் குறித்து பைபிள் என்ன முன்னுரைத்தது?
4 இயேசு பின்வரும் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்: “சந்தோஷத்தில் துள்ளு! எருசலேம் மகளே, வெற்றி முழக்கம் செய்! இதோ, உன் ராஜா உன்னிடம் வருகிறார்! அவர் நீதியுள்ளவர்; மீட்பு தருகிறவர். அவர் தாழ்மையுள்ளவர்; அவர் கழுதையின் மேல் ஏறிவருகிறார்.” (சகரியா 9:9) தாமே கடவுளால் நியமிக்கப்பட்ட அரசர் என்பதை மேசியா (அதாவது, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்) ஒருநாள் எருசலேம் மக்களுக்கு வெளிப்படுத்துவார் என இந்தத் தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டியது. அதோடு, இப்படி அவர் தம்மை வெளிப்படுத்தும் விதமும் அவர் ஏறிவரும் விலங்கும் அவருக்கு இருக்கும் அற்புதமான ஒரு குணத்தை, ஆம், மனத்தாழ்மையை, படம்பிடித்துக் காட்டும்.
5. இயேசுவின் மனத்தாழ்மை நம்மை ஏன் அவரிடம் சுண்டியிழுக்கிறது, இந்த விஷயத்தில் நாம் இயேசுவைப் பின்பற்ற கற்றுக்கொள்வது ஏன் அவசியம்?
5 இயேசுவிடம் இருக்கும் அதிஅற்புதமான குணங்களில் மனத்தாழ்மையும் ஒன்று. இந்தக் குணம் நம்மை அவரிடம் சுண்டியிழுக்கிறது, அவரைப் போலவே மனத்தாழ்மையைக் காட்ட நம்மைத் தூண்டுகிறது. முந்திய அதிகாரத்தில் பார்த்தபடி, இயேசு மாத்திரமே “வழியும் சத்தியமும் வாழ்வுமாக” இருக்கிறார். (யோவான் 14:6) அதனால், இதுவரை பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் யாருமே கடவுளுடைய மகன் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அல்ல. ஆனாலும், இயேசுவிடம் ஆணவமோ, தலைக்கனமோ, ‘தான்’ என்ற கர்வமோ இம்மி அளவுகூட இல்லை. அபூரண மனிதர்களுக்கும் இயேசுவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினால், தலைக்கனம் என்ற குணத்தை எதிர்த்துப் போராட வேண்டும். (யாக்கோபு 4:6) தலைக்கனத்தை யெகோவா அறவே வெறுக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆகவே, இயேசுவைப் போல் மனத்தாழ்மையுடன் இருக்க நாம் கற்றுக்கொள்வது அவசியம்.
மனத்தாழ்மை—ஒரு நீண்ட சரித்திரம்
6. மனத்தாழ்மை என்றால் என்ன, மேசியா மனத்தாழ்மையுடன் இருப்பார் என்று யெகோவாவுக்கு எப்படித் தெரியும்?
6 மனத்தாழ்மை என்பது தாழ்ந்த சிந்தை; தலைக்கனத்துக்கும் ஆணவத்திற்கும் நேர்மாறான குணம். இதயத்திலிருந்து ஊற்றெடுக்கிற ஒரு பண்பு; ஒருவருடைய சொல்லிலும் செயலிலும், மற்றவர்களுடன் அவர் பழகும் விதத்திலும் இது பளிச்சிடும். மேசியா மனத்தாழ்மையுடன் இருப்பார் என்று யெகோவாவுக்கு எப்படித் தெரியும்? மனத்தாழ்மைக்கு உன்னத உதாரணமாய்த் திகழ்ந்த யெகோவாவை இயேசு அப்படியே பிரதிபலித்தார், அதை யெகோவா அறிந்திருந்தார். (யோவான் 10:14) அதோடு, இயேசு மனத்தாழ்மையுடன் நடந்துகொண்டதை யெகோவா கண்ணாரக் கண்டார்.
7-9. (அ) சாத்தானுடன் ஏற்பட்ட விவாதத்தின்போது மிகாவேல் எப்படி மனத்தாழ்மையைக் காட்டினார்? (ஆ) மனத்தாழ்மை காட்டுவதில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு மிகாவேலைப் பின்பற்றலாம்?
7 இதற்கு ஓர் அருமையான உதாரணம் யூதா புத்தகத்தில் உள்ளது: “மோசேயின் உடலைப் பற்றித் தலைமைத் தூதராகிய மிகாவேலுக்கும் பிசாசுக்கும் விவாதம் ஏற்பட்டபோது, மிகாவேல் அவனைக் கண்டனம் செய்யத் துணியவில்லை, கடுமையான வார்த்தைகளில் திட்டவில்லை. அதற்குப் பதிலாக, ‘யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்’ என்றுதான் சொன்னார்.” (யூதா 9) மிகாவேல் என்ற பெயர் இயேசுவுக்குப் பொருந்துகிறது—பூமிக்கு வருவதற்கு முன்பும் சரி பின்பும் சரி. அந்தப் பெயர், தலைமைத் தூதராக அவர் வகிக்கும் பங்கைக் குறிக்கிறது, அதாவது யெகோவாவின் பரலோக தூத சேனைக்குத் தலைவராக அவர் வகிக்கும் பங்கைக் குறிக்கிறது.b (1 தெசலோனிக்கேயர் 4:16) சாத்தானோடு ஏற்பட்ட இந்தப் பிரச்சினையை மிகாவேல் எப்படிக் கையாண்டார் என்பதைக் கவனியுங்கள்.
8 சாத்தான் எதற்காக மோசேயின் உடலைக் கேட்டான் என்ற விவரம் யூதா புத்தகத்தில் இல்லை; ஆனால், அவன் ஏதாவது தவறான நோக்கத்தோடு கேட்டிருப்பான் என்பது மட்டும் நிச்சயம். உத்தமரான மோசேயின் உடலைப் பயன்படுத்தி பொய் வழிபாட்டை முன்னேற்றுவிக்க ஒருவேளை அவன் நினைத்திருக்கலாம். சாத்தானின் சதித்திட்டத்தை மிகாவேல் எதிர்த்தபோதிலும் சட்டென அவனைக் கண்டனம் செய்யாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார். கண்டனத் தீர்ப்பைப் பெறுவதற்கு சாத்தான் தகுதியுள்ளவன்தான்; என்றாலும் அந்தச் சமயத்தில், ‘நியாயந்தீர்க்கிற அதிகாரம் முழுவதும்’ மிகாவேலுக்குக் கொடுக்கப்படாததால் சாத்தானை யெகோவாவே நியாயம் தீர்க்கட்டும் என்று அவர் விட்டுவிட்டார். (யோவான் 5:22) தலைமைத் தூதராக மிகாவேல் பெரும் அதிகாரம் பெற்றிருந்தார். இருந்தாலும், கூடுதல் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளாமல் மனத்தாழ்மையோடு யெகோவாவிடம் விட்டுவிட்டார். அதுமட்டுமல்ல, தன்னடக்கத்தையும் காட்டினார், அதாவது தன் வரம்பை உணர்ந்து நடந்தார்.
9 இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்ய யூதாவைக் கடவுள் தூண்டியதற்குக் காரணம் இருந்தது. ஏனென்றால், யூதாவின் காலத்தில் வாழ்ந்தவர்களில் சிலர் மனத்தாழ்மையுடன் நடந்துகொள்ளவில்லை. அவர்கள் “தங்களுக்குப் புரியாத காரியங்களையெல்லாம் பழித்துப் பேசுகிறார்கள்.” (யூதா 10) அபூரணர்களான நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வெகு எளிதில் அகம்பாவம் நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடும்! கிறிஸ்தவ சபையில் செய்யப்படும் ஏதாவது ஒரு காரியத்தை நாம் புரிந்துகொள்ளாதபோது—உதாரணமாக, மூப்பர்கள் எடுத்த முடிவை நாம் புரிந்துகொள்ளாதபோது—எப்படி நடந்துகொள்கிறோம்? மூப்பர்கள் எடுத்த முடிவுக்கான எல்லா காரணமும் தெரியாமல் அதைப் பற்றி விமர்சனம் செய்தால், நமக்கு மனத்தாழ்மை இல்லை என்றுதானே அர்த்தம்? ஆகவே, கடவுளால் கொடுக்கப்பட்ட அதிகாரம் நமக்கு இல்லாத பட்சத்தில் ஏதாவது விஷயத்தைக் குறித்து நாமே நியாயந்தீர்க்காமல் மிகாவேலை பின்பற்றுவோமாக.
10, 11. (அ) கடவுளுடைய மகன் மனமுவந்து பூமிக்கு வர ஒப்புக்கொண்டது ஏன் குறிப்பிடத்தக்கது? (ஆ) மனத்தாழ்மை காட்டுவதில் நாம் எப்படி இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?
10 பூமிக்கு வருவதற்கான நியமிப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமும் கடவுளுடைய மகன் மனத்தாழ்மையைக் காட்டினார். அதற்கு அவர் என்னென்ன தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் தலைமைத் தூதராக இருந்தார்; ‘வார்த்தையாகவும்’ இருந்தார், அதாவது யெகோவாவின் சார்பாகப் பேசும் முக்கிய பிரதிநிதியாகவும் இருந்தார். (யோவான் 1:1-3) ‘பரிசுத்தமும் மகிமையும் நிறைந்த [யெகோவாவுடைய] உயர்ந்த குடியிருப்பில்,’ அதாவது, பரலோகத்தில் அவர் தங்கியிருந்தார். (ஏசாயா 63:15) என்றாலும், அந்த மகன் “தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போல் ஆனார், ஒரு மனிதராக ஆனார்.“ (பிலிப்பியர் 2:7) அவருக்குக் கொடுக்கப்பட்ட பூமிக்குரிய நியமிப்பைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! ஒரு யூத கன்னியின் கருப்பைக்கு அவருடைய உயிர் மாற்றப்பட்டது; மனித குழந்தையாக அங்கே ஒன்பது மாதம் வளர்ந்தார். ஓர் ஏழை தச்சனுடைய வீட்டில் பிறந்தார்; ஒன்றும் செய்ய முடியாத பச்சிளம் குழந்தையாக... தத்தி தவழும் பிள்ளையாக... சிறுவனாக... இளைஞனாக... வளர்ந்துவந்தார். அவர் பரிபூரணராக இருந்தபோதிலும் வாலிப பருவம் முழுவதும் அவருடைய அபூரண பெற்றோருக்கு அடங்கி நடந்தார். (லூக்கா 2:40, 51, 52) மனத்தாழ்மைக்கு எப்பேர்ப்பட்ட முன்மாதிரி!
11 சில சமயங்களில் தாழ்வாய் கருதப்படும் வேலைகளை நாம் மனப்பூர்வமாய் ஏற்று செய்வதன் மூலம் இயேசு காட்டிய மனத்தாழ்மையை நம்மால் பின்பற்ற முடியுமா? உதாரணமாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கையில் மக்கள் நம்மை அசட்டை செய்யும்போது... கேலி செய்யும்போது... எதிர்க்கும்போது... அந்த வேலை ஒரு தாழ்வான வேலைபோல் தோன்றலாம். (மத்தேயு 28:19, 20) ஆனால், அந்த வேலையை நாம் தொடர்ந்து செய்தால் உயிர்களைக் காப்பாற்றுவதில் நாமும் உதவலாம். அப்படி இல்லையென்றாலும், மனத்தாழ்மையுடன் இருக்க கற்றுக்கொள்வோம்; அதோடு, நம்முடைய எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம்.
மனிதனாக இயேசு காட்டிய மனத்தாழ்மை
12-14. (அ) மக்கள் தம்மைப் புகழ்ந்தபோது இயேசு எப்படி மனத்தாழ்மை காட்டினார்? (ஆ) என்னென்ன விதங்களில் இயேசு மற்றவர்களிடம் மனத்தாழ்மையுடன் நடந்துகொண்டார்? (இ) இயேசு வெறுமனே பெயருக்காக மனத்தாழ்மை காட்டவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?
12 இயேசு பூமியில் ஊழியம் செய்த காலம் முழுவதும் மனத்தாழ்மைக்குப் பெயர்போனவராகத் திகழ்ந்தார். எப்படி? எல்லா புகழையும் மகிமையையும் தமது தகப்பனுக்கே அர்ப்பணித்தார். இயேசுவின் ஞானமான வார்த்தைகளைக் கேட்டு... அவர் செய்த அற்புதங்களைப் பார்த்து... அவருடைய நற்குணங்களைக் கண்டு... மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள். ஆனால், அந்தப் புகழை இயேசு ஒருபோதும் தமக்கு எடுத்துக்கொள்ளவில்லை, யெகோவாவுக்கே சமர்ப்பித்தார்.—மாற்கு 10:17, 18; யோவான் 7:15, 16.
13 மக்களை நடத்திய விதத்திலும் இயேசு மனத்தாழ்மையைக் காட்டினார். சொல்லப்போனால், மக்களிடமிருந்து சேவை பெறுவதற்கு அல்ல, அவர்களுக்குச் சேவை செய்யவே வந்தார் என்பதை இயேசு தெளிவாகக் காட்டினார். (மத்தேயு 20:28) மற்றவர்களிடம் சாந்தமாக, நியாயமாக நடந்துகொண்டதன் மூலம் மனத்தாழ்மையைக் காட்டினார். சீஷர்கள் தமக்கு ஏமாற்றம் அளித்தபோது அவர்கள்மீது எரிந்து விழவில்லை; மாறாக, அவர்களிடம் அன்பாகவே நடந்துகொண்டார். (மத்தேயு 26:39-41) ஓய்வு எடுப்பதற்காக அமைதியான, தனிமையான இடத்தைத் தேடிச் சென்ற சமயத்தில் மக்கள் அவரைப் பார்க்க வந்தார்கள்; அப்போது இயேசு அவர்களைத் திருப்பி அனுப்பிவிடவில்லை, தம்முடைய சொந்த சௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு “நிறைய விஷயங்களை” கற்பித்தார். (மாற்கு 6:30-34) இஸ்ரவேல் தேசத்தைச் சேராத ஒரு பெண் தன் மகளைக் குணப்படுத்தும்படி இயேசுவிடம் விடாமல் கெஞ்சியபோது, ஆரம்பத்தில் தமக்கு குணப்படுத்த மனதில்லை என்பதைத் தெரியப்படுத்தினார்; என்றாலும், அதைக் கோபத்தோடு தெரியப்படுத்தவில்லை. பின்பு, அவளுடைய அபார விசுவாசத்தைக் கண்டு அவளுக்கு உதவினார். இந்தப் பதிவைக் குறித்து 14-ஆம் அதிகாரத்தில் இன்னும் விவரமாகச் சிந்திப்போம்.—மத்தேயு 15:22-28.
14 “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். பல வழிகளில் அதை நிரூபித்தும் காட்டினார். (மத்தேயு 11:29) மனத்தாழ்மையைப் பெயருக்காகவோ ஒரு நல்ல பண்பு என்பதற்காகவோ அவர் காட்டவில்லை. அது அவருடைய இதயத்திலிருந்து பிறந்தது. அதனால்தான், சீஷர்களுக்கு மனத்தாழ்மையைக் கற்பிக்க இயேசு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தார்!
மனத்தாழ்மையாய் இருக்க சீஷர்களுக்குக் கற்பித்தார்
15, 16. உலக ஆட்சியாளர்களுக்கு நேர்மாறாக சீஷர்கள் எப்படிப்பட்ட மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென இயேசு விரும்பினார்?
15 மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதில் அப்போஸ்தலர்கள் மந்தமாய் இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு அந்தக் குணத்தைக் கற்பிக்க இயேசு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார். உதாரணமாக, கடவுளுடைய அரசாங்கத்தில் தங்களுக்கு முதன்மையான ஸ்தானம் வேண்டுமென யாக்கோபும் யோவானும் ஒருசமயம் தங்களுடைய தாய் மூலம் இயேசுவிடம் கேட்டார்கள். “என்னுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உங்களை உட்கார வைக்க எனக்கு அதிகாரம் இல்லை. என் தகப்பன் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர்கள்தான் அங்கே உட்கார முடியும்” என்று இயேசு தன்னடக்கத்துடன் சொன்னார். ஆனால், மற்ற பத்து அப்போஸ்தலர்களும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் “கோபப்பட்டார்கள்.” (மத்தேயு 20:20-24) இந்தப் பிரச்சினையை இயேசு எப்படிக் கையாண்டார்?
16 அவர்கள் அனைவரையும் அன்புடன் கடிந்துகொண்டார். “மற்ற தேசத்து ஆட்சியாளர்கள் மக்களை அடக்கி ஆளுவதும், உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துவதும் உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும். உங்களில் முதலாவதாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்” என்று சொன்னார். (மத்தேயு 20:25-27) ‘மற்ற தேசத்து ஆட்சியாளர்களிடம்’ கர்வமும் பதவி மோகமும் சுயநலமும் இருந்ததை அப்போஸ்தலர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட அதிகார வெறிபிடித்த கொடுங்கோலர்களைப் போல் தம்முடைய சீஷர்கள் இருக்கக் கூடாதென இயேசு கற்பித்தார். அவர்கள் மனத்தாழ்மையுடன் இருக்க வேண்டியிருந்தது. இயேசு புகட்டிய பாடத்தை அப்போஸ்தலர்கள் புரிந்துகொண்டார்களா?
17-19. (அ) சாவதற்கு முந்தின இரவன்று, மனத்தாழ்மை காட்டுவதில் இயேசு தமது அப்போஸ்தலர்களுக்குக் கற்றுக்கொடுத்த மறக்கமுடியாத பாடம் என்ன? (ஆ) மனிதராக இருந்தபோது மனத்தாழ்மையைப் பற்றி இயேசு கற்றுக்கொடுத்த மிகவும் சக்திவாய்ந்த பாடம் என்ன?
17 அது அவர்களுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இந்தப் பாடத்தை இயேசு அவர்களுக்கு ஒருமுறையோ இருமுறையோ அல்ல, பலமுறை கற்றுக்கொடுத்தார். தங்களில் யார் பெரியவன் என்று ஒருசமயம் சீஷர்கள் வாக்குவாதம் செய்தபோது, இயேசு ஒரு சிறுபிள்ளையை அவர்கள் மத்தியில் நிறுத்தி, பிள்ளைகளைப் போலவே இருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார். ஏனென்றால், கர்வம், பதவி தாகம், அந்தஸ்துக்கான ஆசை ஆகியவையெல்லாம் பொதுவாக பெரியவர்களிடம் காணப்படுமே தவிர பிள்ளைகளிடம் துளியும் இருக்காது. (மத்தேயு 18:1-4) பலமுறை பாடம் கற்பித்த பின்பும், அவர் சாவதற்கு முந்தின இரவன்றுகூட அவர்களிடம் கர்வம் தலைதூக்கியதைக் கவனித்தார். அப்போது, மறக்கமுடியாத ஒரு பாடத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஒரு துண்டை எடுத்து தம் இடுப்பில் கட்டிக்கொண்டு மிக மிக தாழ்வான ஒரு வேலையைச் செய்தார்; பொதுவாக, அந்தக் காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு வேலைக்காரர்கள் செய்யும் ஒரு வேலையைச் செய்தார். இயேசு தம் அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவருடைய பாதங்களையும் கழுவினார்; ஏன், சீக்கிரத்தில் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதங்களையும் கழுவினார்!—யோவான் 13:1-11.
18 அந்தச் சந்தர்ப்பத்தில், “உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்” என்று இயேசு சொன்ன வார்த்தைகள் மனத்தாழ்மையின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தின. (யோவான் 13:15) அவர் கற்பித்த பாடம் இப்போதாவது சீஷர்களின் இதயத்தில் பதிந்ததா? தங்களில் யார் பெரியவன் என்ற வாக்குவாதம் மீண்டும் அன்றிரவே அவர்களுக்குள் எழுந்தது! (லூக்கா 22:24-27) அப்போதும்கூட அவர்களிடம் இயேசு பொறுமையாகவே இருந்தார், அவர்களுக்கு மனத்தாழ்மையுடன் கற்பித்தார். அதன்பின்பு மிகவும் சக்திவாய்ந்த ஒரு பாடத்தை அவர்களுக்குப் புகட்டினார். “சாகும் அளவுக்கு, ஆம், சித்திரவதைக் கம்பத்தில் சாகும் அளவுக்கு, தன்னையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்.” (பிலிப்பியர் 2:8) பயங்கரமான குற்றவாளி... தெய்வ நிந்தனை செய்தவன்... என்றெல்லாம் பழிசுமத்தப்பட்டு, இழிவான மரணத்தைத் தழுவ தயாராய் இருந்தார். இதன்மூலம் கடவுளுடைய மகன் தம்மை தனித்தன்மை வாய்ந்த ஒரு மனிதராக நிரூபித்தார். ஆம், யெகோவாவின் படைப்புகளில் இயேசுவே மனத்தாழ்மைக்கு மணிமகுடமாய் திகழ்ந்தார்!
19 ஒருவேளை இந்தப் பாடமே—மனிதனாக இயேசு கற்பித்த இந்தக் கடைசி பாடமே—அப்போஸ்தலர்களுடைய மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கலாம். பிற்பாடு, பல்லாண்டுகளாக இவர்கள் தாழ்மையுடன் ஊழியம் செய்துவந்ததாக பைபிள் சரித்திரம் காட்டுகிறது. சரி, நம்மைப் பற்றியென்ன?
இயேசு காட்டிய மாதிரியை நீங்கள் பின்பற்றுவீர்களா?
20. மனத்தாழ்மை இதயத்திலிருந்துதான் பிறக்கிறதென்று நமக்கு எப்படித் தெரியும்?
20 “கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த இதே மனப்பான்மை உங்களுக்கும் இருக்கட்டும்” என்று நம் ஒவ்வொருவருக்கும் பவுல் அறிவுரை கூறுகிறார். (பிலிப்பியர் 2:5) இயேசுவைப் போல் நமக்கும் மனத்தாழ்மை இதயத்திலிருந்து பிறக்க வேண்டும். ஆனால் அது இதயத்திலிருந்துதான் பிறக்கிறதென்று நமக்கு எப்படித் தெரியும்? “எதையும் பகையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்யுங்கள். மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்” என்று பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். (பிலிப்பியர் 2:3) அப்படியானால், மற்றவர்களைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டத்தில்தான் இதற்கான பதிலே இருக்கிறது. மற்றவர்களை நம்மைவிட மேலானவர்களாக, மிக முக்கியமானவர்களாக கருத வேண்டும். நீங்கள் இந்த அறிவுரையைக் கடைப்பிடிப்பீர்களா?
21, 22. (அ) கிறிஸ்தவ கண்காணிகள் மனத்தாழ்மை காட்டுவது ஏன் அவசியம்? (ஆ) மனத்தாழ்மையை நாம் அணிந்திருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
21 இயேசு இறந்து பல வருடங்கள் கழிந்த பிறகும் மனத்தாழ்மை எந்தளவு முக்கியம் என்பது அப்போஸ்தலன் பேதுருவின் மனதில் பசுமையாக இருந்தது. கிறிஸ்தவ கண்காணிகள் தங்களுடைய கடமைகளை மனத்தாழ்மையோடு செய்ய வேண்டும் என்றும், யெகோவாவின் ஆடுகளை ஒருபோதும் அடக்கி ஆளக்கூடாது என்றும் பேதுரு கற்பித்தார். (1 பேதுரு 5:2, 3) பொறுப்புகளை, கர்வம் கொள்வதற்குக் கொடுக்கப்பட்ட ஓர் அனுமதிச் சீட்டாகக் கருதக்கூடாது. மாறாக, பொறுப்புகள் அதிகரிக்க அதிகரிக்க மனத்தாழ்மையை அதிகமதிகமாகக் காட்ட வேண்டும். (லூக்கா 12:48) அதேசமயத்தில், இந்தக் குணம் கண்காணிகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இன்றியமையாதது.
22 வேண்டாமென மறுத்தபோதிலும் இயேசு தன்னுடைய பாதங்களைக் கழுவியதை பேதுரு நிச்சயம் மறந்திருக்க மாட்டார்! (யோவான் 13:6-10) “எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு பேதுரு எழுதினார். (1 பேதுரு 5:5, அடிக்குறிப்பு) “அணிந்துகொள்ளுங்கள்” என்ற சொற்றொடர், ஒரு வேலைக்காரன் வீட்டு வேலைகளைச் செய்வதற்குமுன் இடுப்பில் துணியை அணிந்துகொள்வதை, அதாவது கட்டிக்கொள்வதைக் குறிக்கிறது. அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுவதற்குமுன் இயேசு தமது இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டதை இந்த வார்த்தைகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. நாம் இயேசுவைப் பின்பற்றினால் கடவுள் கொடுத்திருக்கும் எந்த வேலையையாவது கண்ணியக் குறைவாகக் கருதுவோமா? நாம் மனத்தாழ்மையுடன் இருக்கிறோம் என்பது மற்றவர்களுக்குப் பளிச்செனத் தெரிய வேண்டும் என்றால் அதை நாம் எப்போதுமே அணிந்திருக்க வேண்டும்.
23, 24. (அ) கர்வத்தை நாம் ஏன் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்? (ஆ) மனத்தாழ்மை பற்றிய என்ன தவறான கருத்தை நீக்க அடுத்த அதிகாரம் உதவி செய்யும்?
23 கர்வம் விஷம் போன்றது. அதன் விளைவுகள் படுநாசகரமாய் இருக்கும். ஒருவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் சரி, அவரிடம் கர்வம் இருந்தால் கடவுளுக்குமுன் அவர் ஒன்றுக்கும் உதவாதவர் போல் இருப்பார். ஆனால், ஒருவருக்கு மனத்தாழ்மை இருந்தால் அவரிடம் எந்தத் திறமையும் இல்லையென்றாலும் யெகோவாவுக்கு அதிக பிரயோஜனமுள்ளவராக இருப்பார். கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள நாம் தினமும் கடினமாய் உழைத்தால் நமக்குப் பலன் நிச்சயம். “கடவுளுடைய பலத்த கைக்குள் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; அப்போது, சரியான நேரத்தில் கடவுள் உங்களை உயர்த்துவார்” என்று பேதுரு எழுதினார். (1 பேதுரு 5:6) இயேசு தம்மை மிகவும் தாழ்த்தியதால் யெகோவா அவரை உயர்த்தினார். நீங்கள் மனத்தாழ்மை காட்டும்போது உங்களுக்கும் யெகோவா பலனளிப்பார்.
24 மனத்தாழ்மையுடன் இருப்பதைச் சிலர் கோழைத்தனமாகக் கருதுவது வருந்தத்தக்க விஷயம். இது முற்றிலும் தவறான கருத்து என்பதை இயேசுவின் உதாரணமே நமக்குக் காட்டுகிறது; ஏனென்றால், மனத்தாழ்மை காட்டுவதில் தலைசிறந்து விளங்கிய இயேசு, தைரியம் காட்டுவதிலும் தலைசிறந்து விளங்கினார். இது அடுத்த அதிகாரத்தில் சிந்திக்கப்படும்.
a ஒரு புத்தகம் இந்தச் சம்பவத்தைப் பற்றி விவரிக்கும்போது கழுதைகளைக் குறித்து இவ்வாறு சொல்கிறது: “அவை சாதாரண மிருகங்கள்; . . . அதுமட்டுமல்ல மந்தமாக இருப்பவை, முரண்டு பிடிப்பவை, ஏழைகளின் தினசரி வேலைக்குப் பயன்படுத்தப்படுபவை, அவலட்சணமானவை.”
b இயேசுதான் மிகாவேல் என்பதற்கான கூடுதல் அத்தாட்சிகளுக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய அதிகாரப்பூர்வ வெப்சைட் jw.org-ல் “பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்” என்ற பகுதியில் இருக்கும் “தலைமைத் தூதராகிய மிகாவேல் யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.