மரித்தோர் எங்கே இருக்கின்றனர்?
“பூமி ஒரு சந்தைவெளி; பரலோகமே நமது வீடு,” என்பது மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நீக்ரோ மக்களின் ஒரு பழமொழி. இந்தக் கருத்து அநேக மதங்களில் எதிரொலிக்கப்படுகிறது. பூமியானது நாம் குறுகிய நேரம் வந்துபோகிற ஒரு சந்தைவெளியைப் போல் இருக்கிறது என்ற கருத்தை அது தெரிவிக்கிறது. இந்த நம்பிக்கையின்படி, மரணத்தின்போது நம்முடைய உண்மையான இருப்பிடமாகிய பரலோகத்துக்கு நாம் சென்றுவிடுகிறோம்.
ஒரு சிலர் பரலோகத்துக்குச் செல்கிறார்கள் என்பதாக பைபிள் நிச்சயமாகவே போதிக்கிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலரிடம் இவ்வாறு சொன்னார்: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; . . . ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.”—யோவான் 14:2, 3.
எல்லா நல்ல ஆட்களும் பரலோகத்துக்குச் செல்கிறார்கள் என்றோ பரலோகமே மனிதவர்க்கத்தின் வீடு என்றோ இயேசுவின் வார்த்தைகள் அர்த்தப்படுத்துவதில்லை. பூமியின்மீது ஆளுகைச் செய்வதன் சம்பந்தமாக சிலர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். மனித அரசாங்கங்களால் பூமியிலுள்ள விவகாரங்களை ஒருபோதும் வெற்றிகரமாக சமாளிக்க முடியாது என்பதை யெகோவா தேவன் அறிந்திருந்தார். ஆகவே அவர், கடைசியாக பூமியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன்னுடைய ஆதிநோக்கத்தின்படி அதை ஒரு பரதீஸாக மாற்றக்கூடிய ஒரு பரலோக அரசாங்கத்துக்காக அல்லது ராஜ்யத்துக்காக ஏற்பாடுசெய்தார். (மத்தேயு 6:9, 10) இயேசு கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக இருப்பார். (தானியேல் 7:13, 14) அவரோடு ஆளுகைச் செய்வதற்காக மற்றவர்கள் மனிதவர்க்கத்திலிருந்து தெரிந்துகொள்ளப்படுவர். பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள் ‘நம்முடைய தேவனுக்கு முன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக’ இருந்து ‘பூமியின் மேல் அரசாளுவார்கள்’ என்று பைபிள் முன்னறிவித்தது.—வெளிப்படுத்துதல் 5:10.
யார் பரலோகத்துக்குச் செல்கின்றனர்?
இந்தப் பரலோக அரசர்கள் கொண்டிருக்கப்போகிற பெரும் உத்தரவாதத்தை எண்ணிப்பார்க்கையில், அவர்கள் கண்டிப்பான தேவைகளைப் பூர்த்திசெய்யவேண்டும் என்பது ஆச்சரியமாயில்லை. பரலோகத்துக்குச் செல்கிறவர்கள் யெகோவாவைப் பற்றிய திருத்தமான அறிவை உடையவர்களாக இருந்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். (யோவான் 17:3; ரோமர் 6:17, 18) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் கிருபாதார பலியில் விசுவாசத்தை அப்பியாசிப்பது அவசியமாக இருக்கிறது. (யோவான் 3:16) என்றாலும் இன்னும் அதிகம் உட்பட்டிருக்கிறது. அவர்கள் அவருடைய குமாரன் மூலமாக அழைக்கப்பட்டும் தெரிந்துகொள்ளப்பட்டும் இருக்கவேண்டும். (2 தீமோத்தேயு 1:9, 10; 1 பேதுரு 2:9) மேலுமாக அவர்கள் ‘மறுபடியும் பிறந்தவர்களாக,’ கடவுளுடைய பரிசுத்த ஆவியால் பிறப்பிக்கப்பட்ட முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும். (யோவான் 1:12, 13; 3:3-6) அவர்கள் மரணம் வரையாக கடவுளுக்குத் தங்களுடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வதும்கூட அவசியமாகும்.—2 தீமோத்தேயு 2:11-13; வெளிப்படுத்துதல் 2:10.
உயிரோடிருந்து மரித்துவிட்ட எண்ணற்ற இலட்சக்கணக்கான ஆட்கள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. அநேகருக்கு உண்மையான கடவுளைப்பற்றி தெரிந்துகொள்வதற்கே வாய்ப்பில்லாமல் இருந்திருக்கிறது. மற்றவர்கள் பைபிளை ஒருபோதும் வாசித்திருக்கவில்லை, இவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி குறைந்த அளவே அல்லது ஒன்றுமே அறியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்று பூமியிலுள்ள உண்மை கிறிஸ்தவர்களின் மத்தியிலும்கூட, வெகு சிலரே பரலோக வாழ்க்கைக்காக கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக, பரலோகத்துக்குச் செல்கிறவர்கள் ஒப்பிடுகையில் சிறிய எண்ணிக்கையினராக இருக்கவேண்டும். இயேசு இவர்களை “சிறுமந்தை” என அழைத்தார். (லூக்கா 12:32) பின்னால், பரலோகத்தில்கிறிஸ்துவோடுஆட்சிசெய்வதற்காக“பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட”வர்களின் எண்ணிக்கை 1,44,000-மாக மாத்திரமே இருக்கும் என்பது யோவான் அப்போஸ்தலனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. (வெளிப்படுத்துதல் 14:1, 3; 20:6) பூமியில் வாழ்ந்திருந்த கோடிக்கணக்கான ஆட்களோடு ஒப்பிடுகையில், அது நிச்சயமாகவே ஒரு சிறிய எண்ணிக்கையாகும்.
பரலோகத்துக்குச் செல்லாதவர்கள்
பரலோகத்துக்குச் செல்லாதவர்களுக்கு என்ன நேரிடுகிறது? ஒரு சில மதங்கள் போதிப்பது போல அவர்கள் நித்திய வாதனைக்குரிய ஓரிடத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை, ஏனென்றால் யெகோவா அன்புள்ள தேவனாக இருக்கிறார். அன்புள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நெருப்புக்குள் போடுவதில்லை, அதுபோல யெகோவா அப்படிப்பட்ட ஒரு வகையில் மக்களை சித்திரவதைச் செய்வதில்லை.—1 யோவான் 4:8.
மரித்துவிட்டிருக்கும் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு பூமிக்குரிய ஒரு பரதீஸில் உயிர்த்தெழுப்பப்படுவதாகும். யெகோவா “குடியிருப்புக்காக” பூமியை படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 45:18) சங்கீதக்காரன் சொன்னார்: “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரனுக்குக் கொடுத்தார்.” (சங்கீதம் 115:16) பரலோகம் அல்ல, பூமியே மனிதவர்க்கத்தின் நிரந்தரமான வீடாக இருக்கும்.
இயேசு இவ்வாறு முன்னறிவித்தார்: ‘ஞாபகார்த்த கல்லறையிலுள்ள யாவரும் [‘மனுஷகுமாரனாகிய’ இயேசுவினுடைய] சத்தத்தைக் கேட்டு வெளியே வரும் காலம் வரும்.’ (யோவான் 5:27-29) கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இதை உறுதிசெய்தார்: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 24:15) வாதனையின் கழுமரத்தில், இயேசு மனந்திரும்பிய குற்றவாளிக்கு பூமிக்குரிய ஒரு பரதீஸில் உயிர்த்தெழுதல் மூலமாக ஜீவனை அளிப்பதாக வாக்களித்தார்.—லூக்கா 23:43.
ஆனால், பூமியில் உயிரோடு எழுப்பப்படப் போகிற மரித்தோரின் இப்போதைய நிலை என்ன? இயேசுவின் ஊழியக்காலத்தின்போது நடந்த ஒரு சம்பவம் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க உதவிசெய்கிறது. அவருடைய நண்பன் லாசரு மரித்துவிட்டிருந்தான். அவனை உயிர்த்தெழுப்ப இயேசு போவதற்கு முன்னால் தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்.” (யோவான் 11:11) இவ்விதமாக இயேசு மரணத்தை நித்திரைக்கு, கனவுகளில்லாத ஆழ்ந்த நித்திரைக்கு ஒப்பிட்டு பேசினார்.
மரணத்தில் நித்திரைப்பண்ணுதல்
மற்ற வேதவசனங்கள் மரணத்தில் நித்திரைபண்ணும் இந்தக் கருத்துக்கு இணக்கமாக இருக்கின்றன. மரணத்தின்போது ஆவி உலகத்துக்கு கடந்துசெல்கிற சாவாமையுள்ள ஓர் ஆத்துமா மனிதருக்கு இருக்கிறது என்பதாக அவை போதிப்பதில்லை. மாறாக பைபிள் இவ்விதமாகச் சொல்கிறது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள். . . . அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று. . . . நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 6, 10) மேலுமாக, மனிதன் “தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்,” என்று சங்கீதக்காரன் அறிவித்தார்.—சங்கீதம் 146:4.
மரணத்தில் நித்திரைபண்ணுகிறவர்கள் நம்மைப் பார்க்கவோ கேட்கவோ முடியாது என்பதை இந்த வேதவாக்கியங்கள் தெளிவாக்குகின்றன. அவர்களால் ஆசீர்வாதத்தை அல்லது ஆபத்தைக் கொண்டுவர இயலாது. அவர்கள் பரலோகத்திலும் இல்லை, அல்லது மூதாதையரின் சமுதாயத்திலும் வாழ்ந்துகொண்டில்லை. அவர்கள் உயிரற்றவர்கள், அவர்கள் இல்லை.
கடவுளுடைய குறித்த நேரத்தில், இப்பொழுது மரணத்தில் நித்திரைபண்ணுகிறவர்களாக அவருடைய ஞாபகத்தில் இருப்பவர்கள் ஒரு பரதீஸிய பூமியில் உயிருக்கு கொண்டுவரப்படுவர். அது மனிதவர்க்கம் இப்பொழுது அனுபவித்துவரும் தூய்மைக்கேடு, தொந்தரவுகள் மற்றும் பிரச்சினைகள் இல்லாத சுத்திகரிக்கப்பட்ட ஒரு பூமியாக இருக்கும். என்னே ஒரு சந்தோஷமான காலமாக அது இருக்கும்! அந்தப் பரதீஸில், என்றுமாக வாழும் எதிர்பார்ப்பை அவர்கள் உடையவர்களாக இருப்பர், ஏனென்றால் சங்கீதம் 37:29 நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”
[பக்கம் 6, 7-ன் பெட்டி]
நான் மரித்தோரை வணங்குவதை விட்டுவிட்டேன்
“நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய அப்பா மரித்துப்போன அவருடைய அப்பாவுக்கு வழக்கமாக பலிகளைச் செலுத்தும்போது அவருக்கு உதவியாக இருந்தேன். ஒரு சமயம் என்னுடைய அப்பா பயங்கரமான ஒரு நோயிலிருந்து குணமடைந்தபோது, அவர் குணமடைந்ததைப் போற்றும் வகையில் மரித்துப்போன அவருடைய அப்பாவுக்கு வெள்ளாடு, சேனைக்கிழங்கு, கோலா கொட்டைகள் மற்றும் மதுபான படையல்களைச் செய்யவேண்டும் என்பதாக பூசாரி அவருக்குச் சொன்னார். மேலுமான வியாதிகளையும் ஆபத்துக்களையும் தடுத்துவிடும்படியாக மரித்த தன்னுடைய மூதாதையரிடம் வேண்டிக்கொள்ளவும் அவர் ஆலோசனை சொன்னார்.
“என்னுடைய தாத்தாவின் கல்லறையில் செய்யப்படவேண்டிய படையலுக்குத் தேவையானவற்றை என்னுடைய அம்மா வாங்கினார்கள். உள்ளூர் பழக்கத்துக்கு இசைவாக கல்லறை எங்களுடைய வீட்டின் அருகிலேயே இருந்தது.
“படையலை அனுசரிக்க நண்பர்கள், உறவினர்கள், மற்றும் அயலகத்தார் அழைக்கப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக நேர்த்தியாய் உடுத்தியிருந்த என்னுடைய அப்பா, இதற்கு முன்பாக படையல்களில் பயன்படுத்தப்பட்டிருந்த வெள்ளாடுகளின் மண்டையோடுகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த அந்தக் கோயில் இருந்த திசைநோக்கி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். திராட்சமதுவை ஒரு புட்டியிலிருந்து சிறிய கோப்பைக்குள் ஊற்றி என்னுடைய அப்பாவுக்கு கொடுப்பது என்னுடைய வேலையாக இருந்தது. முறையாக, அவர் இதை படையலாக தரையில் ஊற்றினார். என்னுடைய அப்பா அவருடைய அப்பாவின் பெயரை மூன்று முறை கூப்பிட்டு எதிர்கால ஆபத்துக்களிலிருந்து விடுவிக்கும்படியாக அவரிடமாக வேண்டிக்கொண்டார்.
“கோலா கொட்டைகள் வழங்கப்பட்டன, செம்மறிக்கடாவை அடித்து, வேகவைத்து அங்கிருந்த அனைவரும் அதைச் சாப்பிட்டார்கள். சாப்பிடுவதில் நான் சேர்ந்துகொண்டு பாடலுக்கும் முரசொலிக்கும் ஏற்ப நடனமாடினேன். என்னுடைய அப்பா வயதானவராக தோற்றமளித்தபோதிலும் அழகாகவும் சிறிதும் விட்டுக்கொடுக்காமலும் நடனமாடினார். இடையிடையே அங்கிருந்த அனைவரையும் ஆசீர்வதிக்கும்படியாக தன்னுடைய மூதாதையரை வேண்டிக்கொண்டார், நானும் உட்பட எல்லாரும் இசே என்று பதிலளித்தோம், ‘அப்படியே ஆகட்டும்,’ என்பது அதன் பொருள். நான் என்னுடைய அப்பாவை கூர்ந்த அக்கறையோடும் வியப்போடும் கவனித்துக்கொண்டிருந்து, மரித்த மூதாதையருக்கு பலிகளைச் செலுத்த நான் போதிய வயதுடையவனாகும் நாளுக்காக ஏங்கிக்கொண்டிருந்தேன்.
“அநேக பலிகள் செலுத்தப்பட்டபோதிலும் குடும்பத்துக்குச் சமாதானம் கிட்டவில்லை. என்னுடைய அம்மாவுக்கு மூன்று மகன்கள் இன்னும் உயிரோடிருந்தபோதிலும், மூன்று மகள்களில் எவருமே நீண்ட காலம் உயிரோடில்லை; அனைவரும் சிறுபிராயத்திலேயே மரித்துவிட்டனர். மறுபடியுமாக என்னுடைய அம்மா கர்ப்பமானபோது, என்னுடைய அப்பா குழந்தை பத்திரமாகப் பிறப்பதற்காக பெருமளவில் பலிகளைச் செலுத்தினார்.
“மற்றொரு பெண்குழந்தை அம்மாவுக்குப் பிறந்தது. இரண்டு வருடங்களுக்குப் பின் அது நோயுற்று மரித்துப்போனது. என்னுடைய அப்பா பூசாரியை கலந்து பேசினார். ஒரு விரோதியே மரணத்துக்குக் காரணம் என்பதாக அவர் சொன்னார். குழந்தையின் ‘ஆத்துமா’ எதிர்த்து சண்டைசெய்வதற்கு, எரிகிற மரத்துண்டும், ஒரு புட்டி மதுபானமும், ஒரு நாய்க்குட்டியும் பலிக்குத் தேவை என்பதாக பூசாரி சொன்னார். எரிகிற மரத்துண்டு கல்லறையின்மீது வைக்கப்பட்டு, மதுபானம் கல்லறையில் தெளிக்கப்பட்டு, நாய்க்குட்டி கல்லறையின் அருகே உயிரோடு புதைக்கப்பட வேண்டும். இது மரணத்துக்கு வஞ்சம்தீர்த்துக்கொள்ள மரித்துப்போன அந்தப் பெண்ணின் ஆத்துமாவை எழுப்பிவிடும் என்பதாக நம்பப்பட்டது.
“நான் மதுபான புட்டியையும் எரிகிற மரத்துண்டையும் கல்லறைக்கு எடுத்துச் சென்றேன், என்னுடைய அப்பா நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு வந்து பூசாரியின் அறிவுரைப்படி புதைத்துவிட்டார். ஏழு நாட்களுக்குள், மரித்துப்போன பெண்ணின் ஆத்துமா அவளுடைய அகால மரணத்துக்குக் காரணமான நபரை அழித்துவிடும் என்பதாக நாங்கள் அனைவரும் நம்பினோம். இரண்டு மாதங்கள் கடந்தன, சுற்றுப்புறத்தில் எவரும் மரித்துப்போனதாகச் செய்தி இல்லை. நான் ஏமாற்றமடைந்தேன்.
“அப்பொழுது எனக்கு வயது 18. அதற்குப் பின் விரைவில், நான் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தேன். மரித்தோரால் உயிருள்ளோருக்கு நன்மையோ தீமையோ செய்யமுடியாது என்பதை அவர்கள் வேதவாக்கியங்களிலிருந்து எனக்குக் காண்பித்தார்கள். கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவு என்னுடைய இருதயத்தில் வேர்கொண்டபோது, இனி மரித்தோருக்கு பலிசெலுத்துவதற்கு என்னால் அவரோடு வரமுடியாது என்பதை அப்பாவிடம் சொல்லிவிட்டேன். அவரைக் கைவிட்டுவிட்டதாகச் சொல்லி முதலில் என்னிடம் கோபமாக இருந்தார். ஆனால் புதிதாக கண்டுபிடித்த விசுவாசத்தை நான் துறக்க மனமில்லாதிருந்ததைக் கண்டபோது, அவர் யெகோவாவை வணங்குவதை எதிர்க்கவில்லை.
“நான் 1948, ஏப்ரல் 18-ம் தேதி என்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலமாக அடையாளப்படுத்தினேன். அப்போது முதற்கொண்டு, அதிகமான சந்தோஷத்தோடும் மனநிறைவோடும் யெகோவாவைத் தொடர்ந்து சேவித்துக்கொண்டு, நமக்கு உதவிசெய்யவும் தீங்குசெய்யவும் முடியாத மரித்துப்போன மூதாதையரை வணங்குவதிலிருந்து விடுபடுவதற்கு மற்றவர்களுக்கு உதவிசெய்துவருகிறேன்.”—நைஜீரியாவிலுள்ள பெனின் நகரில் வசிக்கும் J. B. ஒமீக்பி என்பவரால் அளிக்கப்பட்டது.
[பக்கம் 7-ன் படம்]
ஒரு பரதீஸிய பூமியின்மீது மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுகையில் அங்கே பெரும் மகிழ்ச்சி உண்டாயிருக்கும்