கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல
“கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல . . . அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எந்த ஜாதியானாயினும் அவர் அங்கீகாரத்துக்குரியவன்.”—அப்போஸ்தலர் 10:34, 35, தி.மொ.
“உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் படைத்த கடவுள் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர். கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. . . . பூமியின்மீதெங்கும் குடியிருக்க மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒன்றிலிருந்தே [ஒரே முற்பிதாவிலிருந்தே, ஆங்கில பிலிப்ஸ் பைபிள்] உண்டுபண்ணி”னார். (அப்போஸ்தலர் 17:24-26, தி.மொ.) இவ்வார்த்தைகளைப் பேசினவர் யார்? கிரீஸில், அத்தேனே பட்டணத்தின் மார்ஸ் மேடையில், அல்லது அரையோப்பாகில், தன் பிரசித்திப்பெற்றப் பேச்சைக் கொடுத்தபோது கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் சொன்னான்.
2 பவுல் சொன்னது, படைப்பில் இருந்துவரும் அதிசயமான பற்பல வகைகளைப் பற்றிச் சிந்திக்கும்படி நம்மை நன்றாய்ச் செய்விக்கலாம். யெகோவா தேவன் அத்தனைப் பல வெவ்வேறு வகைகளில் மனிதரையும், மிருகங்களையும், பறவைகளையும், பூச்சிகளையும், தாவரவர்க்கங்களையும் படைத்தார். அவையெல்லாம் ஒன்றுபோல் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு சோர்வுற்றதாயிருக்கும்! அவற்றின் பல்வேறு வகை வாழ்க்கையை உயிர்க்களை வாய்ந்ததாக்குவதற்கும் கவர்ச்சிகரமாக்குவதற்கும் உதவிசெய்கிறது. உதாரணமாக, தென் ஆப்பிரிக்காவில் யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டுக்கு ஜப்பானிலிருந்து வந்திருந்த ஒருவர், அங்கே தாம் கவனித்த ஜாதியினரின் மற்றும் நிறத்தாரின் பல்வேறுவகையைக் கண்டு மனக் கவர்ச்சியடைந்தார். மிகப் பெரும்பான்மையர் ஒரே ஜாதி இயல்புடையோராயிருக்கும் ஜப்பான் எவ்வளவு வேறுபட்டிருக்கிறதென அவர் வியந்து கூறினார்.
3 ஆனால் ஜாதிகளுக்குள் பல்வேறு நிறம் அடிக்கடி வினைமையான பிரச்னைகளை உண்டுபண்ணுகிறது. வேறு நிறத் தோலுடையோர் தாழ்ந்தவரென பலர் எண்ணுகின்றனர். இது வெறுப்பையும், பகைமையையும் ஜாதிபேத மனக்கேட்டுடன் கொடுமைக்காளாக்குவதையுங்கூட எழுப்புகிறது. நம்முடைய சிருஷ்டிகர் இவ்வாறிருக்கும்படி கருதினாரா? அவர் பார்வையில் சில ஜாதியார் மேம்பட்டோராய் இருக்கிறார்களா? யெகோவா பட்சபாதமுள்ளவரா?
நம்முடைய சிருஷ்டிகர்—பட்சபாதமுள்ளவரா?
4 சரித்திரத்தில் சற்றுப் பின்சென்று கவனிப்பதால் மனிதவர்க்கம் முழுவதையும் நம்முடைய சிருஷ்டிகர் கருதும் முறையைப் பற்றி ஓரளவு விளக்கத்தை நாம் அடைய முடியும். பொ.ச.மு. 936-லிருந்து 911 வரை யூதாவை ஆண்ட அரசன் யோசபாத் பல முன்னேற்றங்களைச் செய்து, தெய்வீகச் சட்டத்தின்பேரில் ஆதாரங்கொண்ட நியாய விசாரணை முறைமை சரியானபடி செயற்படுவதற்கு ஏற்பாடு செய்தான். அவன் பின்வரும் சிறந்த அறிவுரையை நியாயாதிபதிகளுக்குக் கொடுத்தான்: “நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுக்கென்றல்ல யெகோவாவுக்கென்றே நியாயம் விசாரிக்கவேண்டும்; . . . இந்த வேலையை எச்சரிக்கையாயிருந்து செய்யுங்கள், நமது கடவுளாகிய யெகோவாவினிடம் அநியாயமில்லை, அவர் பக்ஷபாதமுள்ளவரல்ல.”—2 நாளாகமம் 19:6, 7, தி.மொ.
5 பல நுற்றாண்டுகளுக்கு முன்னால், தீர்க்கதரிசியாகிய மோசே இஸ்ரவேல் கோத்திரத்தாருக்குப் பின்வருமாறு சொல்லியிருந்தான்: “உங்கள் கடவுளாகிய யெகோவா . . . ஒருவரையும் பட்சபாதத்துடன் நடத்துவதில்லை.” (உபாகமம் 10:17, NW) பவுல், ரோமருக்கு எழுதின தன் நிருபத்தில் கூறின அறிவுரையாவது: “முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். . . . தேவனிடத்தில் பட்சபாதமில்லை [பட்சபாதபாசத்துக்குரியவர் இல்லை, NEB].”—ரோமர் 2:9-11.
6 ஆனால் சிலர் ஒருவேளை பின்வருமாறு கேட்கலாம்: ‘இஸ்ரவேலரைப் பற்றியதென்ன? அவர்கள் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் அல்லவா? அவர் அவர்களிடம் பட்சபாதம் காட்டினாரல்லவா? “உன் கடவுளாகிய யெகோவா பூமியின்மீதுள்ள சகல ஜனங்களிலும் உன்னையே தமக்குச் சொந்த ஜனமாகத் தெரிந்தெடுத்தார்,” என்று மோசே இஸ்ரவேல் ஜனம் முழுவதற்கும் சொன்னான் அல்லவா?’—உபாகமம் 7:6.
7 இல்லை, இஸ்ரவேலரைத் தனிப்பட்ட நோக்கத்துக்காகக் கடவுள் பயன்படுத்தினதில் அவர் பட்சபாதம் காட்டவில்லை. மேசியாவைப் பிறப்பிப்பதற்கு ஒரு ஜனத்தைத் தெரிந்தெடுக்கையில், யெகோவா உண்மையுள்ள எபிரெய கோத்திரத் தலைவர்களின் சந்ததியாரைத் தெரிந்தெடுத்தார். ஆனால் யூதர்கள் மேசியாவான இயேசு கிறிஸ்துவை ஏற்க மறுத்து, அவரைக் கொன்றுபோட்டபோது, கடவுளுடைய தயவை இழந்துவிட்டனர். எனினும், இன்று, இயேசுவில் விசுவாசங்காட்டும் எந்த ஜாதி அல்லது ஜனத்தாராயினும் அதிசயமான ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கவும் முடியும். (யோவான் 3:16; 17:3) நிச்சயமாகவே, கடவுளுடைய பங்கில் பட்சபாதம் இல்லையென இது நிரூபிக்கிறது. மேலும், அந்நியன் எந்த ஜாதியானாயினும் தேசத்தானாயினும் பொருட்படுத்தாமல் “அந்நியரில் அன்புகூருங்கள்,” “அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம்,” என்று யெகோவா இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார். (உபாகமம் 10:19; லேவியராகமம் 19:33, 34) அப்படியானால், மெய்யாகவே, பரலோகத்திலுள்ள நம்முடைய அன்புள்ள தகப்பன் பட்சபாதமுள்ளவரல்லர்.
8 இஸ்ரவேலர் தனிப்பட்ட சிலாக்கியங்களை அனுபவித்தது உண்மையே. ஆனால் அவர்களுக்குக் கனத்தப் பொறுப்பும் இருந்தது. யெகோவாவின் சட்டங்களைக் கைக்கொள்ளவேண்டிய கடமையின்கீழ் அவர்கள் இருந்தனர், அவற்றிற்குக் கீழ்ப்படியத் தவறியவர்கள் சாபத்துக்குள்ளானார்கள். (உபாகமம் 27:26) உண்மையில், கடவுளுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாததற்காக இஸ்ரவேலரைத் திரும்பத் திரும்பத் தண்டிக்க வேண்டியிருந்தது. ஆகவே, யெகோவா அவர்களைப் பட்சபாதத்துடன் நடத்தவில்லை. அதற்கு மாறாக, தீர்க்கதரிசன மாதிரிகளை உண்டுபண்ணவும் எச்சரிக்கைக்குரிய மாதிரிகளை அளிக்கவும் பயன்படுத்தினார். மகிழ்ச்சி தருவதாய், இஸ்ரவேல் ஜனத்தின்மூலமே கடவுள், சகல மனிதவர்க்கத்தின் ஆசீர்வாதத்துக்காக, மீட்பராகிய இயேசு கிறிஸ்துவைப் பிறப்பித்தார்.—கலாத்தியர் 3:14; ஆதியாகமம் 22:15-18-ஐ ஒத்துப்பாருங்கள்.
இயேசு பட்சபாதம் காட்டினாரா?
9 யெகோவாவிடம் பட்சபாதம் இல்லையாதலால், இயேசு பட்சபாதம் காட்டுபவராக இருக்கக்கூடுமா? பின்வரும் இதைக் கவனியுங்கள்: “என் சித்தத்தையல்ல என்னையனுப்பின பிதாவின் சித்தத்தையே நான் நாடுகி”றேன், என்று இயேசு ஒருமுறை சொன்னார். (யோவான் 5:30, தி.மொ.) யெகோவாவுக்கும் அவருடைய மிக நேசமான குமாரனுக்குமிடையில் பரிபூரண ஒற்றுமை இருந்துவருகிறது. எல்லாவற்றிலும் இயேசு தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்கிறார். உண்மையில், கருத்திலும் நோக்கத்திலும் அவர்கள் அவ்வளவு ஒருமைப்பட்டிருப்பதால் இயேசு: “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்,” என்று சொல்ல முடிந்தது. (யோவான் 14:9) எப்படியெனில் 33-க்கு மேற்பட்ட ஆண்டுகள், இயேசு பூமியில் மனிதனாக வாழும் மெய்யான அனுபவத்தைக் கொண்டிருந்தார், அப்போது தம் உடனொத்த மனிதரை அவர் எவ்வாறு நடத்தினாரென பைபிள் வெளிப்படுத்துகிறது. மற்ற ஜாதியாரிடம் அவர் என்ன மனப்பான்மையுடன் இருந்தார்? முன்கூட்டியே தவறான மனச்சாய்வு அல்லது பட்சபாதம் கொண்டிருந்தாரா? இயேசு ஜாதிபேதம் பார்ப்பவராயிருந்தாரா?
10 இயேசு தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் பெரும்பாகத்தை யூத ஜனங்களுடன் செலவிட்டார். ஆனால் ஒருநாள் புறஜாதியான ஒரு பொனீஷியா நாட்டுப் பெண், அவரை அணுகி, தன் மகளைச் சுகப்படுத்தும்படி கெஞ்சினாள். அதற்கு இயேசு பின்வருமாறு பதிலுரைத்தார்: “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல.” எனினும் அந்தப் பெண்: “ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும்,” என்று மன்றாடினாள். அதற்கு அவர்: “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.” யூதர்களுக்கு நாய்கள் அசுத்தமான மிருகங்கள். ஆகவே புறஜாதியாரை “நாய்க் குட்டிகள்” என்று குறிப்பாய் அழைத்ததால் இயேசு அவர்கள்பேரில் தவறான மனச்சாய்வைக் காட்டினாரா? இல்லை, எப்படியெனில் அவர், ‘காணாமற்போன இஸ்ரவேல் ஆடுகளைக்’ கவனிக்கத் தமக்குக் கடவுள் தனிப்பட்ட பொறுப்புக் கொடுத்து அனுப்பினதை அப்போதுதான் குறிப்பிட்டார். மேலும், யூதரல்லாதவர்களை மூர்க்கமான நாய்களுக்கு அல்ல, “நாய்க் குட்டிகளுக்கு” ஒப்பிட்டதன்மூலம், அந்த ஒப்பிடுதலைக் கனிவாக்கினார். நிச்சயமாகவே, அவர் சொன்னது அந்தப் பெண்ணைப் பரீட்சித்தது. எனினும், மனத்தாழ்மையுடன் அந்த மறுப்பை எதிர்த்து மேற்கொள்ள அவள் தீர்மானித்து, புத்திநுட்பத்தோடு: “மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே,” என்று பதிலுரைத்தாள். அந்தப் பெண்ணின் விசுவாசத்தால் மனங்கனிந்து, இயேசு அவளுடைய மகளை உடனடியாகச் சுகப்படுத்தினார்.—மத்தேயு 15:22-28.
11 சில சமாரியரோடு இயேசுவின் சந்திப்புகளையும் கவனியுங்கள். யூதருக்கும் சமாரியருக்குமிடையில் கடும் வெறுப்பு இருந்துவந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், இயேசு ஒரு சமாரிய கிராமத்தில் தாம் தங்குவதற்கு ஆயத்தங்கள் செய்யும்படி கேட்டு ஆட்களை அனுப்பினார். ஆனால் அந்த சமாரியர்கள், “அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” இது யாக்கோபுக்கும் யோவானுக்கும் அவ்வளவு மிகக் கோபமூட்டினதால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை அழிக்கும்படி கேட்க அவர்கள் விரும்பினர். ஆனால் இயேசு அந்த இரு சீஷர்களையும் கடிந்துகொண்டார், அவர்களெல்லாரும் வேறு கிராமத்துக்குச் சென்றார்கள்.—லூக்கா 9:51-56.
12 யூதருக்கும் சமாரியருக்குமிடையில் இருந்துவந்த அந்த வெறுப்பு உணர்ச்சியில் இயேசு பங்குகொண்டாரா? மற்றொரு சந்தர்ப்பத்தில் என்ன நடந்ததென்பதைக் கவனியுங்கள். இயேசுவும் அவருடைய சீஷர்களும் யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருந்தனர், அவர்கள் சமாரியாவினூடே கடந்துசெல்ல வேண்டியிருந்தது. பயணத்தால் களைப்புற்று, இயேசு யாக்கோபின் கிணற்றருகில் சற்று இளைப்பாறும்படி உட்கார்ந்தார், அவருடைய சீஷர்கள் உணவு வாங்குவதற்கு சீகார் ஊருக்குச் சென்றிருந்தனர். இதற்கிடையில், ஒரு சமாரிய பெண் தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசுதாமே மற்றொரு சந்தர்ப்பத்தில் சமாரியரை “வேறு ஜாதியின”ரென வகைப்படுத்திக் கூறியிருந்தார். (லூக்கா 17:16-18, The Kingdom Interlinear Translation of the Greek Scriptures) ஆனால் அவர் அவளிடம்: “தாகத்துக்குத்தா,” என்றார். யூதர்கள் சமாரியருடன் ஒரு தொடர்பும் வைத்துக்கொள்வதில்லையாதலால், ஆச்சரியமடைந்த அந்தப் பெண்: “நீர் யூதன், நான் சமாரிய ஸ்திரீ; தாகத்துக்குத்தாவென்று என்னிடங் கேட்கிறதெப்படி?” என்று பதிலுரைத்தாள்.—யோவான் 4:1-9, தி.மொ.
13 ஆனால் இயேசு அந்தப் பெண்ணின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் விட்டார். அதற்குப் பதில், அவளுக்கு ஒரு சாட்சி கொடுக்க அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார், தாம் மேசியா எனவும் ஒப்புக்கொண்டார்! (யோவான் 4:10-26) ஆச்சரியமடைந்த அந்தப் பெண் கிணற்றண்டையில் தன் தண்ணீர் குடத்தை விட்டுவிட்டு, ஊருக்குத் திரும்பியோடி, நடந்ததை மற்றவர்களுக்குச் சொல்லத் தொடங்கினாள். அவள் ஒழுக்கக்கேடான வாழ்க்கை நடத்தியிருந்தபோதிலும், ஆவிக்குரிய காரியங்களில் தனக்கு அக்கறை இருந்ததை வெளிப்படுத்தி: “அவர் கிறிஸ்துதானோ”? என்று கேட்டாள். இதன் கடைசி பலன் என்ன? அந்தப் பெண் கொடுத்த நல்ல சாட்சியின் காரணமாக அந்த ஊர் ஜனங்கள் பலர் இயேசுவில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 4:27-42) ஜாதி பிரச்னையின்பேரில் பைபிள்பூர்வ நோக்கு என்ற தன் ஆங்கில புத்தகத்தில் சபை மதநூல் பேராசிரியர் தாமஸ் ஓ. ஃபிகார்ட் பின்வரும் இக்குறிப்பைக் கூறினார்: “தவறான ஜாதி பாரம்பரியத்தைக் கனிவான குறிப்புடன் தள்ளி வைப்பதற்குப் போதிய முக்கியத்துவமிருந்ததென நம்முடைய கர்த்தர் எண்ணியிருந்தாரெனில், பின் நாமும் இன்று ஜாதி வேறுபாட்டுணர்ச்சி நதியில் விழுங்கப்படாதிருக்க எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.”
14 யெகோவாவின் பட்சபாதமற்றத் தன்மை பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஜனங்கள் யூத மதத்தை ஏற்றவர்களாகும்படி அனுமதித்தது. பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னால் எருசலேமிலிருந்து காசாவுக்குச் சென்ற வனாந்தர பாதையில் நடந்ததைக் கவனியுங்கள். எத்தியோப்பிய அரசியின் சேவையிலிருந்த ஒரு கறுப்பு மனிதன் தன் இரதத்தில் செல்கையில் ஏசாயா தீர்க்கதரிசனத்தை வாசித்துக்கொண்டிருந்தான். இந்த அதிகாரி யூதமதம் மாறிய விருத்தசேதனஞ்செய்யப்பட்டவன், எப்படியெனில் “பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்”தான் யெகோவாவின் தூதன் யூத சுவிசேஷகனான பிலிப்புவுக்குத் தோன்றி: “நீ போய் அந்த இரதத்துடனே சேர்ந்துகொள்,” என்று சொன்னான். பிலிப்பு மறுத்து: “இல்லை! அவன் வேறொரு ஜாதி மனிதன்,” என்று சொன்னானா? அவ்வாறு சொல்லவில்லை! இரதத்தில் ஏறிக்கொள்ளும்படியான அழைப்பை ஏற்று, அவனுடன் உட்கார்ந்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அவனுக்கு விளக்குவதில் அவன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்! தண்ணீர் நிரம்பிநின்ற ஓர் இடத்தை அவர்கள் நெருங்கினபோது, எத்தியோப்பியன் பிலிப்புவை: “நான் ஞானஸ்நானம் [பாப்டிஸம்] பெறுகிறதற்குத் தடையென்ன”? என்று கேட்டான். அவன் முழுக்காட்டப்படுவதைத் தடுப்பதற்கு எதுவும் இல்லாததனால், பிலிப்பு அந்த எத்தியோப்பியனைச் சந்தோஷமாய் முழுக்காட்டினான், யெகோவா அந்த மகிழ்ச்சிநிறைந்த மனிதனைப் பட்சபாதமற்றத் தம்முடைய குமாரனான, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் அபிஷேகம்பண்ணப்பட்டவனாக ஏற்றுக்கொண்டார். (அப்போஸ்தலர் 8:26-39) ஆனால் தெய்வீகப் பட்சபாதமற்றத் தன்மையின் மேலுமான அத்தாட்சி சீக்கிரத்தில் வெளிப்படலாயிற்று.
ஒரு பெரிய மாற்றம்
15 இயேசுவின் மரணம் உலகப்பிரகாரமான ஜாதி வேறுபாட்டுணர்ச்சி மனச்சாய்வை ஒழிக்கவில்லை. ஆனால் அந்தப் பலிக்குரிய மரணத்தைக் கொண்டு, கடவுள், இயேசுவின் யூத சீஷருக்கும் அவரைப் பின்பற்றின புறஜாதியாருக்கும் இருந்த உறவை மாற்றினார். எபேசுவிலிருந்த புறஜாதி கிறிஸ்தவர்களுக்குத் தான் எழுதினபோது அப்போஸ்தலன் பவுல் இதைக் குறிப்பிட்டு பின்வருமாறு கூறினான்: “முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, . . . அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்”தார். அந்தச் “சுவர்,” அல்லது பிரிவினைக்கு அடையாளம், நியாயப்பிரமாண உடன்படிக்கை ஏற்பாடாகும், அது யூதருக்கும் புறஜாதியாருக்கும் இடையில் ஒரு தடுப்பாகச் செயல்பட்டது. யூதரும் புறஜாதியாருமான இருதிறத்தாரும் கிறிஸ்துவின்மூலம் “ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாத்தியத்தை . . . பெற்றிருக்”கக்கூடும்படி, அது கிறிஸ்துவின் மரணத்தின் அடிப்படையின்பேரில் நீக்கிப்போடப்பட்டது.—எபேசியர் 2:11-18.
16 மேலும், எந்த ஜாதியாரான ஜனங்களும் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிக் கற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியால் ‘மறுபடியும் பிறந்து’, கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய சுதந்தரவாளிகளாகக் கூடும்படி அப்போஸ்தலன் பேதுருவுக்கு “பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்கள்” கொடுக்கப்பட்டன. (மத்தேயு 16:19; யோவான் 3:1-8) பேதுரு மூன்று அடையாளக் குறிப்பான திறவுகோல்களைப் பயன்படுத்தினான். முதல் திறவுகோலை யூதருக்கும், இரண்டாவதைச் சமாரியருக்கும், மூன்றாவதைப் புறஜாதியாருக்கும் பயன்படுத்தினான். (அப்போஸ்தலர் 2:14-42; 8:14-17; 10:24-28; 42-48) பட்சபாதமற்றக் கடவுளாகிய யெகோவா, இவ்வாறு, எல்லா ஜாதிகளிலிருந்தும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்குக் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சகோதரரும் ராஜ்யத்தில் உடன்-சுதந்தரருமாயிருக்கும் சிலாக்கியத்தைத் திறந்துவைத்தார்.—ரோமர் 8:16, 17; 1 பேதுரு 2:9, 10.
17 மூன்றாவது திறவுகோலை—புறஜாதியாருக்கு—பயன்படுத்தும்படி பேதுருவை ஆயத்தஞ்செய்வதற்கு, அசுத்தமான மிருகங்களைப்பற்றிய ஓர் அசாதாரண தரிசனத்தை அவனுக்குக் கொடுத்து: “பேதுருவே, எழுந்திரு, அடித்துச் சாப்பிடு,” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. அந்தப் பாடம் என்னவென்றால்: “கடவுள் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே,” என்பதாகும். (அப்போஸ்தலர் 10:9-16, தி.மொ.) இந்தத் தரிசனத்தின் பொருளென்னவென பேதுரு மிகுந்த மனக்குழுப்பத்தில் இருந்தான். ஆனால் சீக்கிரத்தில் மூன்று ஆட்கள் அவனை செசரியாவில் தங்கியிருந்த ரோம பட்டாள நூற்றுக்கதிபதி கோர்நேலியுவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி வந்துசேர்ந்தார்கள். அந்தப் பட்டணம் யூதேயாவிலுள்ள ரோம பட்டாளத் தளபதி அலுவலகமாதலால், அது கொர்நேலியு தன் வீட்டைக் கொண்டிருப்பதற்கு இயல்பான இடமே. அந்தப் புறஜாதி சூழ்நிலையில் கொர்நேலியு, தன் உறவினருடனும் நெருங்கிய நண்பருடனும் பேதுருவுக்காகக் காத்திருந்தான். அப்போஸ்தலன் அவர்களுக்குப் பின்வருமாறு நினைப்பூட்டினான்: “அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர் பேசாமல் வந்தேன்.”—அப்போஸ்தலர் 10:17-29.
18 காரியங்களைக் கடவுள் வழிநடத்தினதைக் கொர்நேலியு விளக்கிக் கூறியபின், பேதுரு பின்வருமாறு கூறினான்: “கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல என்றும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எந்த ஜாதியானாயினும் அவர் அங்கீகாரத்துக்குரியவனென்றும் நிச்சயமாய் அறிந்துகொள்ளுகிறேன்.” (அப்போஸ்தலர் 10:30-35, தி.மொ.) பின்பு, அப்போஸ்தலன் இயேசுகிறிஸ்துவைப் பற்றித் தொடர்ந்து சாட்சிகொடுத்துக் கொண்டிருந்தபோது ஆச்சரியமுண்டாக்கின ஒன்று நடந்தது! “இந்தக் காரியங்களைப் பற்றிப் பேதுரு இன்னும் பேசிக்கொண்டிருக்கையிலேயே வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லார்மீதும் பரிசுத்த ஆவி இறங்கினது.” பேதுருவின் யூதத் தோழர்கள் மற்ற “ஜாதிகளின் ஜனங்களின்மீதும் இலவச வரமாகிய பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதனால், ஆச்சரியப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் பல மொழிகளில் பேசி கடவுளை மகிமைப்படுத்துவதை அவர்கள் கேட்டார்கள்.” பேதுரு பின்வருமாறு கூறினான்: “நாம் பெற்றதைப்போலவே பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கும் இவர்கள் முழுக்காட்டப்படாதபடி எவராவது தண்ணீரை விலக்கமுடியுமா?” பட்சபாதமற்றப் பரலோகக் கடவுளின் பரிசுத்த ஆவி, விசுவாசித்த அந்தப் புறஜாதியார்மீது ஊற்றப்பட்டிருந்ததால் யார் மறுக்க முடியும்? ஆகையால், அவர்கள் “இயேசு கிறிஸ்துவின் பெயரில் முழுக்காட்ட”ப்படும்படி பேதுரு கட்டளையிட்டான்.—அப்போஸ்தலர் 10:36-48, NW.
“சகல ஜாதிகளிலுமிருந்து”
19 நாம் இப்பொழுது “கடைசி நாட்களில்” நம்மைக் காண்கிறோம், “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்” (NW) வாழ்க்கையின் உண்மையாயிருக்கின்றன. மற்றக் காரியங்களோடுகூட, ஆட்கள் தற்பிரியரும், வீம்புக்காரரும், அகந்தையுள்ளவர்களும், சுபாவ அன்பில்லாதவர்களும், எதற்கும் இணங்காதவர்களும், தன்னடக்கமில்லாதவர்களும், கொடுமையுள்ளவர்களும், துணிகரமுள்ளவர்களும், இறுமாப்புள்ளவர்களுமாயிருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5, தி.மொ.) இத்தகைய சமுதாயச் சூழ்நிலையில், ஜாதிபேத பகைமையும் சண்டைகளும் உலகமெங்கும் பெருகிக்கொண்டிருப்பது ஆச்சரியமாயில்லை. பல நாடுகளில், வெவ்வேறுபட்ட ஜாதியாரும் நிறத்தாருமான மக்கள் ஒருவரையொருவர் இழிவாகக் கருதுகின்றனர் அல்லது பகைக்கவுஞ்செய்கின்றனர். இது சில நாடுகளில் உண்மையில் போரிடுவதற்கும் பயங்கர கொடுமைகளுக்குங்கூட வழிநடத்தியிருக்கிறது. அறிவு ஒளிபெற்ற சமுதாயங்களென அழைக்கப்படுபவற்றிலும், ஜாதிபேத வெறுப்பு மனச்சாய்வை ஒழித்து மேற்கொள்வது பல ஆட்களுக்குக் கடினமாயிருக்கிறது. இந்த “நோய்” ஒருவர் சற்றும் எதிர்பாராத இடப்பகுதிகளுக்குள், தங்கள் சமாதான தன்மையில் ஒரு காலத்தில் எளிய அழகுவாய்ந்திருந்த சமுத்திரத் தீவுகள் போன்றவற்றில் பரவிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
20 எனினும், உலகத்தின் பற்பல பாகங்களில் ஜாதி ஒற்றுமை இல்லாத நிலையிலும், பட்சபாதமற்றக் கடவுளாகிய யெகோவா, எல்லா ஜாதிகளிலும் தேசங்களிலுமிருந்து வரும் நேர்மையான இருதயமுள்ள ஆட்களை மிகக் கவனிக்கத்தக்கச் சர்வதேச ஒற்றுமைக்குள் கொண்டுவருவதைப் பற்றி முன்னறிவித்தார். தெய்வீக ஏவுதலினால் அப்போஸ்தலனாகிய யோவான், “ஒருவரும் எண்ணமுடியாத திரள்கூட்டம். இவர்கள் சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலுமிருந்து வந்தவர்கள். . . . சிங்காசனத்திற்கு முன்னும் ஆட்டுக்குட்டிக்கு முன்னும் நின்று” யெகோவாவைத் துதித்துக் கொண்டிருந்ததைக் கண்டான். (வெளிப்படுத்துதல் 7:9, தி.மொ.) இந்தத் தீர்க்கதரிசனம் ஏற்கெனவே நிறைவேறிக்கொண்டிருக்கிறது. இன்று, 212 நாடுகளில் சகல தேசங்களையும் ஜாதிகளையும் சேர்ந்த, 35,00,000-க்கு மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள், ஒற்றுமையையும் ஜாதி பேதமற்ற ஒத்திசைவையும் அனுபவித்து மகிழ்கின்றனர். ஆனால் அவர்கள் இன்னும் அபூரணராயிருக்கின்றனர். ஜாதிபேத உணர்ச்சியை முற்றிலும் வென்றுமேற்கொள்வது, தங்களையறியாமலே, இவர்களில் சிலருக்கும் கடினமாயிருக்கிறது. இந்தப் பிரச்னையை நாம் எப்படி மேற்கொள்வது? இந்தக் காரியத்தை, பட்சபாதமற்றக் கடவுளாகிய யெகோவாவின் ஏவப்பட்ட வார்த்தையில் கொடுத்துள்ள உதவியான அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த இதழில் ஆலோசிப்போம். (w88 5⁄15)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவா இஸ்ரவேலரைப் பயன்படுத்தினதில் பட்சபாதமுள்ளவரல்லவென ஏன் சொல்வீர்கள்?
◻ இயேசு கிறிஸ்து ஜாதிபேத உணர்ச்சி அல்லது பட்சபாதம் உள்ளவராக இல்லையென்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
◻ “கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல” என்பதைக் காண பேதுரு எவ்வாறு உதவிசெய்யப்பட்டான்?
◻ இவ்வுலகத்தில் ஜாதி ஒற்றுமை இல்லாதபோதிலும், ஒற்றுமையைப் பற்றிய என்ன தீர்க்கதரிசனம் இப்பொழுது நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கிறது?
[கேள்விகள்]
1. பூர்வ அத்தேனே பட்டணத்தில், ஜாதியைப் பற்றிப் பவுல் என்ன முக்கியமானக் கூற்றைச் சொன்னான்?
2. எது வாழ்க்கையை உயிர்க்களைவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமுள்ளதாக்க உதவிசெய்கிறது? தென் அமெரிக்காவுக்குச் சென்ற ஜப்பானியர் ஒருவரின் மனதைக் கவர்ந்தது எது?
3. வேறுபட்ட தோல் நிறத்தைச் சிலர் எவ்வாறு கருதுகின்றனர்? இது எதற்கு வழிநடத்துகிறது?
4-6. (எ) பட்சபாதத்தைப் பற்றி அரசன் யோசபாத் என்ன சொன்னான்? (பி) யோசபாத் சொன்னதை மோசேயும் பவுலும் எவ்வாறு உறுதிப்படுத்தினார்கள்? (சி) சிலர் என்ன கேள்வியை எழுப்பலாம்?
7. (எ) யூதர்கள் மேசியாவை ஏற்க மறுத்துவிட்டபோது என்ன நடந்தது? (பி) இன்று, யார் கடவுளிடமிருந்து வரும் அதிசயமான ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ முடியும்? எவ்வாறு?
8. (எ) யெகோவா இஸ்ரவேலரிடம் பட்சபாதம் காண்பிக்கவில்லையென எது நிரூபிக்கிறது? (பி) யெகோவா இஸ்ரவேலரை எவ்வாறு பயன்படுத்தினார்?
9. (எ) எவ்வாறு யெகோவாவும் இயேசுவும் ஒன்றாயிருக்கிறார்கள்? (பி) இயேசுவைக் குறித்து என்ன கேள்விகள் எழும்புகின்றன?
10. (எ) உதவிக்காக வேண்டின ஒரு பொனீஷிய நாட்டுப் பெண்ணின் மன்றாட்டுக்கு இயேசு எவ்வாறு பதிலுரைத்தார்? (பி) புறஜாதியாரை “நாய்க் குட்டிகள்” என்றழைத்ததில் இயேசு தவறான மனச்சாய்வைக் காட்டினாரா? (சி) அந்த மறுப்பை அந்தப் பெண் எவ்வாறு மேற்கொண்டாள்? அதன் பலன் என்ன?
11. இயேசு உட்பட்ட ஒரு சம்பவத்தில் தெளிவாகியபடி, யூதரும் சமாரியரும் ஒருவரோடொருவர் எத்தகைய மனப்பான்மை கொண்டிருந்தனர்?
12. ஒரு சமாரிய பெண் தன்னிடம் இயேசு தண்ணீர் கேட்டதன்பேரில் ஏன் ஆச்சரியமடைந்தாள்?
13. (எ) சமாரிய பெண்ணின் மறுப்புக்கு இயேசு எவ்வாறு பதிலுரைத்தார்? அவளுடைய பிரதிபலிப்பு என்ன? (பி) இதன் முடிவு பலன் என்ன?
14. சுவிசேஷகனாகிய பிலிப்புவின் ஊழிய காலத்தின்போது யெகோவாவின் பட்சபாதமற்றத் தன்மைக்கு அத்தாட்சி எவ்வாறு வெளியாகியது?
15. இயேசுவின் மரணத்துக்குப் பின் என்ன மாற்றம் ஏற்பட்டது? பவுல் இதை எவ்வாறு விளக்குகிறான்?
16. (எ) பேதுருவுக்கு ஏன் ராஜ்யத்தின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டன? (பி) எத்தனை திறவுகோல்கள் இருந்தன? அவற்றைப் பயன்படுத்தினதால் உண்டான பலன் என்ன?
17. (எ) என்ன அசாதாரணமான தரிசனம் பேதுருவுக்குக் கொடுக்கப்பட்டது, ஏன்? (பி) சில ஆட்கள் பேதுருவை யாருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றனர், அங்கே யார் அவனுக்காகக் காத்திருந்தனர்? (சி) எதைக் குறித்துப் பேதுரு அந்தப் புறஜாதியாரை நினைப்பூட்டினான், எனினும் கடவுள் எதை அவனுக்குத் தெளிவாகக் கற்பித்தார்?
18. (எ) கொர்நேலியுவுக்கும் அவன் வீட்டில் கூடியிருந்தவர்களுக்கும் பேதுரு என்ன தனிச் சிறப்புவாய்ந்த முக்கிய அறிவிப்பு செய்தான்? (பி) இயேசுவைப் பற்றிப் பேதுரு சாட்சி கொடுத்தப் பின், மிக ஆச்சரியமுண்டாக்கின என்ன நிகழ்ச்சி நடந்தேறிற்று? (சி) விசுவாசித்த அந்தப் புறஜாதியார் சம்பந்தமாக அப்பொழுது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
19. ஜாதிபேத பகைமை ஏன் பெருகிக்கொண்டிருக்கிறது? எந்த அளவுக்குப் பெருகுகிறது?
20. (எ) தேவாவியால் ஏவப்பட்ட என்ன தரிசனத்தை யோவான் கண்டான்? (பி) இந்தத் தீர்க்கதரிசன தரிசனம் எந்த அளவுக்கு நிறைவேறிக்கொண்டிருக்கிறது? (சி) முற்றிலும் வென்று மேற்கொள்வதற்கு என்ன முட்டுப்பாடு சிலருக்கு இன்னும் இருக்கிறது? இதைத் தீர்க்கும் பரிகாரத்தை அவர்கள் எங்கே தேடவேண்டும்?
[பக்கம் 25-ன் படம்]
‘பூமியின்மீதெங்கும் குடியிருக்க மனுஷஜாதியான சகல ஜனங்களையும் கடவுள் உண்டுபண்ணினார்,’ என்று அப்போஸ்தலன் பவுல் அத்தேனியருக்குச் சொன்னான்.
[பக்கம் 27-ன் படம்]
இயேசு பட்சபாதமற்றவராதலால், சீகாருக்கருகில் யாக்கோபின் கிணற்றண்டையில் சமாரிய பெண்ணுக்குச் சாட்சிகொடுத்தார்