உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்
ஞாபகம் வைத்துக்கொள்ளும் அற்புதமான திறமையோடுதான் யெகோவா தேவன் மனித மூளையை உருவாக்கினார். பத்திரமாக சேமித்து வைப்பதற்குரிய ஒரு கிடங்காக அதைப் படைத்தார். அதில் வைக்கப்படும் மதிப்புமிக்க தகவல்கள் உபயோகிக்கப்பட்டாலும் குறைந்துபோவதில்லை. மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்ற தமது நோக்கத்திற்கு இசைவாகவே கடவுள் மூளையை இவ்வாறு உருவாக்கினார்.—சங். 139:14; யோவா. 17:3.
ஆனால் நிறைய விஷயங்கள் மனதில் நிற்காமல் அப்படியே நழுவிவிடுவதாக உங்களுக்கு தோன்றலாம். வேண்டிய சமயத்தில் அவை ஞாபகத்திற்கு வராமல் போகலாம். அப்படியென்றால் உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?
அக்கறை காட்டுங்கள்
ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கு முக்கியமாக தேவைப்படுவது அக்கறை. நம்மைச் சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்றெல்லாம் அக்கறையோடு கவனிப்பதை பழக்கமாக்கிக் கொண்டால் நம் மூளை இன்னுமதிக சுறுசுறுப்பாய் இயங்கும். அப்போது, நிரந்தர நன்மையளிக்கும் எதையாவது வாசிக்கையில் அல்லது கேட்கையில் அதே விதமான அக்கறை காட்டுவது எளிதாக இருக்கும்.
மற்றவர்களது பெயரை ஞாபகம் வைப்பது அநேகருக்கு கஷ்டமான ஒன்று. இருந்தாலும் கிறிஸ்தவர்களாகிய நமக்கு, மற்றவர்கள் முக்கியமானவர்கள்; உடன் கிறிஸ்தவர்கள், நாம் சாட்சி கொடுக்கும் மக்கள், அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நபர்கள் என அனைவருமே முக்கியமானவர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். நாம் கட்டாயம் ஞாபகம் வைக்க வேண்டிய பெயர்களை மறக்காமலிருக்க எது உதவும்? அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு சபைக்கு கடிதம் எழுதியபோது 26 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார். அவர்களுடைய பெயர்களை மட்டுமல்ல, அவர்களில் அநேகரைப் பற்றி குறிப்பான விவரங்களையும் எழுதியது, அவர்கள்மேல் அவருக்கிருந்த அக்கறையை காட்டுகிறது. (ரோ. 16:3-16) யெகோவாவின் சாட்சிகளது இன்றைய பயணக் கண்காணிகள் சிலர் வாராவாரம் வெவ்வேறு சபைகளுக்கு சென்றாலும் சபையினரின் பெயர்களை மறக்காமல் நினைவில் வைத்திருக்கின்றனர். அவர்களால் இது எப்படி முடிகிறது? ஒரு நபரோடு முதன்முறையாக பேசும்போது பல தடவை அவரைப் பெயர் சொல்லி கூப்பிட்டு பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். அவரது பெயரையும் முக அடையாளத்தையும் சம்பந்தப்படுத்த முயல்கிறார்கள். அதுமட்டுமல்ல, வெளி ஊழியம் செய்கையிலும் உணவருந்துகையிலும் பல்வேறு சகோதர சகோதரிகளோடு சேர்ந்து நேரத்தை செலவிடுகிறார்கள். நீங்கள் புதிதாக ஒருவரை சந்தித்தால் அவரது பெயரை ஞாபகம் வைத்துக்கொள்வீர்களா? முதலில், ஞாபகம் வைப்பதற்கான முக்கிய காரணத்தை மனதில் தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள்; அதன்பின் மேற்கண்ட சில ஆலோசனைகளை முயன்று பாருங்கள்.
நீங்கள் வாசிக்கும் விஷயங்களை ஞாபகம் வைப்பதும் முக்கியம். இந்த விஷயத்தில் முன்னேற உங்களுக்கு எது உதவும்? அக்கறை, புரிந்துகொள்ளுதல் ஆகிய இரண்டுமே உதவும். நீங்கள் வாசிக்கும் விஷயத்தில் போதியளவு அக்கறை காட்டினால்தான் அதில் முழு கவனம் செலுத்த முடியும். வாசிக்கும்போது உங்கள் மனம் வேறெங்கோ அலைபாய்ந்தால் அந்த விஷயங்கள் மனதில் பதியாது. வாசிக்கும் விஷயங்களை உங்களுக்கு பழக்கமான விஷயத்தோடு அல்லது ஏற்கெனவே அறிந்த தகவலோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும்போது புரிந்துகொள்ளுதல் அதிகரிக்கும். ‘இதை என் வாழ்க்கையில் எப்படி, எப்போது கடைப்பிடிக்க முடியும்? மற்றவர்களுக்கு உதவ இந்தத் தகவலை எப்படி பயன்படுத்துவேன்?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வார்த்தையாக படிப்பதற்கு பதிலாக ஒவ்வொரு சொற்றொடராக படிக்கும்போதும் புரிந்துகொள்ளுதல் அதிகரிக்கும். இதனால், சொல்ல வரும் கருத்துக்களையும் முக்கிய எண்ணங்களையும் எளிதில் கிரகித்துக்கொள்வீர்கள், அவற்றை ஞாபகம் வைப்பதும் எளிதாகும்.
மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க நேரமெடுங்கள்
கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், படித்ததை மீண்டும் நினைத்துப் பார்க்கும் மதிப்பை வலியுறுத்துகிறார்கள். படித்ததை உடனடியாக நினைவுக்கு கொண்டுவர ஒரு நிமிடம் செலவழித்தால் ஞாபகத்தில் தங்கும் விஷயம் இரு மடங்காகும் என ஒரு ஆராய்ச்சியில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் காட்டினார். ஆகவே முழு கட்டுரையை அல்லது அதன் பெரும் பகுதியை வாசித்து முடித்தவுடன் முக்கிய குறிப்புகளை மீண்டும் நினைவுபடுத்திப் பாருங்கள். அப்போதுதான் அவை நினைவில் தங்கும். நீங்கள் கற்ற புதிய விஷயங்களை எப்படி சொந்த வார்த்தைகளில் விளக்குவீர்கள் என்பதைப் பற்றி யோசியுங்கள். ஒரு விஷயத்தை வாசித்து முடித்தவுடன் மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்க்கையில் அது நீண்ட காலம் உங்கள் நினைவில் தங்கும்.
அதன்பின் அடுத்த சில நாட்களில், படித்ததை வேறொருவரிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் அவற்றை மீண்டும் நினைவுக்கு கொண்டுவர சந்தர்ப்பத்தை தேடுங்கள். குடும்பத்தில், சபையில், வேலை செய்யும் இடத்தில், பள்ளியில், அக்கம்பக்கத்தில், அல்லது வெளி ஊழியத்தில் எவரிடமாவது அதை பகிர்ந்துகொள்ளலாம். முக்கிய குறிப்புகளை மட்டுமல்ல வேதவசனங்களிலிருந்து அவை எவ்வாறு நியாயங்காட்டி விளக்கப்பட்டன என்பதையும் சொல்ல முயலுங்கள். இவ்வாறு செய்தால் முக்கியமான விஷயங்கள் மனதில் பதிந்து உங்களுக்கு பயன் தரும்; இதனால் மற்றவர்களும் பயன் பெறுவர்.
முக்கியமான விஷயங்களை தியானியுங்கள்
படித்ததை நினைவுபடுத்தி மற்றவர்களிடம் சொல்வதோடு, அதிலுள்ள முக்கியமான விஷயங்களை தியானிப்பதும் பயன் தருவதைக் காண்பீர்கள். பைபிள் எழுத்தாளர்களான ஆசாபும் தாவீதும் இதைத்தான் செய்தார்கள். ஆசாப் இப்படி சொன்னார்: “கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்.” (சங். 77:11, 12) தாவீதும் அதேபோல் எழுதினார்: “இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்,” “பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்.” (சங். 63:6; 143:5) நீங்களும் அவ்வாறு தியானிக்கிறீர்களா?
கவனத்தை ஒருமுகப்படுத்தி யெகோவாவின் செயல்கள், குணங்கள், சித்தத்தை வெளிப்படுத்தும் வசனங்கள் ஆகியவற்றை ஆழமாக தியானிப்பது, விஷயங்களை ஞாபகத்தில் வைப்பதற்கு மட்டுமே உதவுவதில்லை. அவ்வாறு தியானிப்பதை பழக்கமாக்கிக் கொள்கையில், உண்மையிலேயே முக்கியமான விஷயங்கள் இருதயத்தில் ஆழமாக பதியும். அது உங்கள் உள்ளான மனிதனை வடிவமைக்கும். உங்கள் நினைவில் பதிபவை உங்கள் உள்ளார்ந்த எண்ணங்களாகவே இருக்கும்.—சங். 119:16.
கடவுளுடைய ஆவியின் பங்கு
யெகோவாவின் நடவடிக்கைகளையும் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களையும் பற்றிய சத்தியங்களை ஞாபகம் வைப்பதற்கு நமக்கு துணைபுரியும் ஒன்று இருக்கிறது. இறப்பதற்கு முந்திய இரவில் இயேசு தம் சீஷர்களுக்கு பின்வருமாறு கூறினார்: “நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே [“உதவியாளர்,” NW] எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.” (யோவா. 14:25, 26) அவர் இப்படி சொன்னபோது மத்தேயுவும் யோவானும் அங்கிருந்தனர். பரிசுத்த ஆவி அவர்களுக்கு அப்படிப்பட்ட ‘உதவியாளராக’ இருந்ததா? ஆம் இருந்தது! சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிற்பாடு, கிறிஸ்துவைப் பற்றிய விவரமான முதல் பதிவை மத்தேயு எழுதி முடித்தார். மலைப்பிரசங்கம், கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கும் உலக முடிவிற்குமான அடையாளத்தைப் பற்றிய விவரங்கள் போன்ற மதிப்புமிக்க நினைவுகளை அதில் எழுதினார். இயேசு இறந்து அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு பிற்பாடு அப்போஸ்தலனாகிய யோவான் தனது சுவிசேஷத்தை எழுதினார்; இயேசு தம் ஜீவனை கொடுப்பதற்கு முந்திய இரவில் அப்போஸ்தலர்களிடம் சொன்ன நுணுக்கமான விவரங்களையும் அதில் எழுதினார். இயேசு தங்களுடன் இருந்தபோது சொன்னவற்றையும் செய்தவற்றையும் மத்தேயுவும்சரி யோவானும்சரி தெளிவாக ஞாபகம் வைத்திருந்தனர் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் எந்த முக்கியமான விவரங்கள் தமது எழுதப்பட்ட வார்த்தையில் இடம் பெற யெகோவா விரும்பினாரோ அவற்றை அவர்கள் மறந்துவிடாதிருக்க உதவுவதில் பரிசுத்த ஆவி பெரும் பங்கு வகித்தது.
இன்றும் பரிசுத்த ஆவி கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவி செய்கிறதா? கண்டிப்பாக! ஆனால் நாம் ஒருபோதும் கற்காத விஷயங்களை பரிசுத்த ஆவி அற்புதமாக நம் மனதுக்கு கொண்டுவருவதில்லை. இருந்தாலும் முன்பு நாம் படித்த முக்கிய விஷயங்களை நினைப்பூட்டும் கருத்தில் அது உதவி செய்கிறது. (லூக். 11:13; 1 யோ. 5:14) தேவையான சந்தர்ப்பங்களில், ‘பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய . . . கட்டளைகளையும் நினைவுகூரும்படி,’ நம் சிந்தனைத் திறனை அது தூண்டுகிறது.—2 பே. 3:1, 2.
‘மறவாதிருங்கள்’
யெகோவா திரும்பத் திரும்ப இஸ்ரவேலரிடம் ‘மறவாதிருங்கள்’ என எச்சரித்தார். ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அப்படியே ஞாபகம் வைக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் சொந்த நாட்டங்களிலேயே மூழ்கிப்போய், யெகோவாவின் செய்கைகளை நினைவிலிருந்து நீக்கி விடாதிருக்க வேண்டியிருந்தது. யெகோவாவின் தேவதூதன் எகிப்தின் முதற்பேறான குமாரர்கள் அனைவரையும் கொன்றுபோட்டபோது தாங்கள் எப்படி பாதுகாக்கப்பட்டனர் என்பதை அவர்கள் நினைவில் பசுமையாக வைக்க வேண்டியிருந்தது. அதேபோல், யெகோவா செங்கடலை பிளந்து தங்களுக்கு வழி உண்டாக்கியதையும் தண்ணீரை மீண்டும் திரும்பி வரச்செய்து பார்வோனையும் அவனது சேனைகளையும் மூழ்கடித்ததையும் நினைவில் வைத்துப் பாதுகாக்க வேண்டியிருந்தது. கடவுள் சீனாய் மலையில் நியாயப்பிரமாணத்தை அளித்ததையும் வனாந்தரத்தின் வழியாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு நடத்திச் சென்றதையும் இஸ்ரவேலர் நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. இந்த சம்பவங்களைப் பற்றிய நினைவுகள் அவர்களது தினசரி வாழ்க்கையில் பெரும் பாதிப்பை எப்போதும் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தில் அவர்கள் அவற்றை மறவாதிருக்க வேண்டியிருந்தது.—உபா. 4:9, 10; 8:10-18; யாத். 12:24-27; சங். 136:15.
மறவாதிருக்க நாமும் கவனமாக இருக்க வேண்டும். அன்றாட பிரச்சினைகளோடு நாம் போராடுகையில் யெகோவாவை நினைவில் வைக்க வேண்டும்; அவர் எப்படிப்பட்ட கடவுள், தமது குமாரனையே பரிசாக கொடுத்ததில் அவர் காட்டிய அன்பு போன்றவற்றை நினைத்துப் பார்க்க வேண்டும். நமக்கு பரிபூரண நித்திய வாழ்க்கையை வழங்க அந்தக் குமாரன் தம் உயிரை மீட்கும் பொருளாக கொடுத்து நம் பாவங்களைப் போக்க வழிசெய்தார். (சங். 103:2, 8; 106:7, 13; யோவா. 3:16; ரோ. 6:23) தவறாமல் பைபிள் வாசித்து, சபைக் கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபடும்போது இந்த மதிப்புமிக்க சத்தியங்கள் நம் மனதில் பசுமையாக இருக்கும்.
தீர்மானம் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில், அது பெரிதோ சிறிதோ, அந்த முக்கிய சத்தியங்களை நினைவுபடுத்தி பாருங்கள்; அவை உங்கள் சிந்தையை சரியாக செதுக்க அனுமதியுங்கள். மறவாதீர்கள். உதவிக்கு யெகோவாவை நாடுங்கள். விஷயங்களை மனித கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதற்கு பதிலாக அல்லது அபூரண இருதயம் சொல்வதையெல்லாம் நம்பிவிடுவதற்குப் பதிலாக, உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய வார்த்தையிலிருக்கும் எந்த ஆலோசனைகள் அல்லது நியமங்கள் என் தீர்மானத்தை பாதிக்க வேண்டும்?’ (நீதி. 3:5-7; 28:26) ஒருபோதும் வாசித்திராத அல்லது கேட்டிராத விஷயங்களை உங்களால் நினைவுபடுத்த முடியாது. ஆனால் திருத்தமான அறிவிலும் யெகோவாவிற்கான அன்பிலும் பெருகும்போது, கடவுளுடைய ஆவி உங்கள் ஞாபகத்திற்கு கொண்டுவரும் அறிவுக் களஞ்சியமும் பெருகும்; யெகோவாவின்மீது மேன்மேலும் வளரும் உங்கள் அன்பு அந்த அறிவிற்கு இசைவாக நடக்கத் தூண்டும்.