இயேசுவின் பிறப்பு எப்படி, ஏன் நிகழ்ந்தது
“இது சாத்தியமே இல்லை!” இயேசுவின் பிறப்பைப் பற்றி கேட்கையில் கிறிஸ்தவரல்லாத அநேகர் இப்படித்தான் சொல்வார்கள். கன்னிப்பெண் கர்ப்பமாகி மனித தந்தையின் உதவி இல்லாமல் பிள்ளை பெற்றாள் என்று நம்புவது விஞ்ஞானத்திற்கு முரணாக உள்ளது என அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்த விஷயத்தின் பேரில் நியாயத்தை எடுத்துக்கூறிய ஒரு கடிதத்தை லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் 1984-ல் பிரசுரித்தது. அது இவ்வாறு சொன்னது: “அற்புதங்கள் நிகழ்வதை மறுத்து வாதாடுவதற்கு விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது நியாயமல்ல. ஏனெனில் அற்புதங்கள் நிகழ்வதை நம்புவது விசுவாசத்தால்தான்; அதைப் போல அற்புதங்கள் நிகழ்வதில்லை என நம்புவதும் விசுவாசத்தால்தான்.” பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் 14 அறிவியல் பேராசிரியர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார்கள். “கன்னிப்பெண் குழந்தை பெற்றது, சுவிசேஷங்களிலுள்ள அற்புதங்கள், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை சரித்திரத்தில் நிகழ்ந்த சம்பவங்களாக நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்” என அவர்கள் சொன்னார்கள்.
ஆகிலும், இயேசு ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்பதை முதல் முறையாக கேட்கும் ஒருவர் குழம்பிப்போவது நிச்சயமே. ஏனெனில் கடவுளின் தூதன், “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக” என இயேசுவின் கன்னித்தாயாகிய மரியாளிடம் சொன்னபோது அவரே திகைத்துப்போனாரே. “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே” என்று பதிலுக்கு கேட்டார். அப்போது, கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு இந்த அற்புதத்தை நடப்பிப்பார் என்பதை தேவதூதன் விளக்கிவிட்டு “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்றும் சொன்னார். (லூக்கா 1:31, 34-37) மனிதரின் அற்புத இனப்பெருக்க ஆற்றலைப் படைத்தவர் ஒரு கன்னிகையை கருத்தரிக்க வைத்து இயேசுவை பிறப்பிக்கும்படி செய்ய முடியாதா என்ன? இந்தப் பிரபஞ்சத்தையும் அதன் துல்லியமான சட்டங்களையும் உருவாக்கிய கடவுளுக்கு, மரியாளின் கருப்பையிலுள்ள ஒரு முட்டையை பயன்படுத்தி பரிபூரண மனிதகுமாரனை உருவாக்குவது ஒரு பெரிய கஷ்டமல்ல.
ஏன் அவசியமாக இருந்தது
மரியாள் தேவபயமுள்ள யோசேப்புடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்த சமயத்திலேயே கருத்தரித்தார். கடவுளுடைய தூதன் யோசேப்புக்கு ஒரு சொப்பனத்தில் தோன்றி, அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கன்னிப்பெண் கர்ப்பமாக இருந்ததற்கான அதிசய காரணத்தை விளக்கிக் கூறினார். தேவதூதன் இவ்வாறு சொன்னார்: “உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.” (மத்தேயு 1:20, 21) எபிரெயுவில் இயேசு என்ற பெயரின் அர்த்தம் “யெகோவாவே இரட்சிப்பு.” பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் இந்த இரட்சிப்புக்காக இயேசுவின் மூலம் யெகோவா தேவன் செய்திருக்கும் ஏற்பாட்டையும் நமக்கு இது நினைவூட்டுகிறது.
முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்தான், அதனால் அவனுடைய பிள்ளைகள் அனைவரும் அபூரணராய் பிறந்திருக்கின்றனர். கடவுளுடைய சட்டங்களை மீறும் மனச்சாய்வைப் பெற்றிருக்கின்றனர். (ரோமர் 5:12) ஆதாமின் சந்ததியார் எவ்வாறு பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு பரிபூரணத்தை அடைய முடியும்? நியாயத்தராசை சமநிலைப்படுத்துவதற்கு ஆதாமின் உயிருக்கு இணையான மதிப்புள்ள மற்றொரு பரிபூரண மனித உயிர் செலுத்தப்பட வேண்டும். இந்தக் காரணத்துக்காகவே, பரிபூரண மனிதனாக இயேசு அற்புதமாக பிறக்கும்படி கடவுள் வழிவகை செய்தார். இதற்காகவே சத்துருக்கள் தம்மை கொலை செய்வதற்கும் இயேசு இடமளித்தார். (யோவான் 10:17, 18; 1 தீமோத்தேயு 2:5, 6) ஆகவே இயேசு உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குச் சென்ற பிறகு பின்வருமாறு நம்பிக்கையோடு சொல்ல முடிந்தது: “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய [மனிதவர்க்கத்தின் பொதுவான கல்லறை] திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.”—வெளிப்படுத்துதல் 1:18.
மரணத்திற்கும் பாதாளத்துக்குமுரிய அடையாள அர்த்தமுள்ள திறவுகோல்களைக் கொண்டு, ஆதாம் இழந்துபோனதை பாவமுள்ள மனிதர் திரும்பவும் பெறுவதற்கான வழியை இயேசு திறந்து வைத்தார். இயேசு இதை இவ்வாறு விளக்கினார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.” (யோவான் 11:25, 26) என்னே ஓர் அதிசயமான வாக்குறுதி! ஆனால் இயேசுவின் பிறப்புக்கு இதைவிட அதிமுக்கியமான காரணம் உண்டு.
அதிமுக்கிய காரணம்
மரியாளின் கருப்பையில் உருவானபோதுதான் இயேசுவின் வாழ்க்கையே ஆரம்பமானது என நினைப்பது தவறு. “நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்” என்று அவர் தெள்ளந்தெளிவாக சொன்னார். (யோவான் 6:38) படைப்பின் ஆரம்பம் முதற்கொண்டே இயேசு தம் பரம தந்தையோடு பரலோகத்தில் வாழ்ந்தவர். சொல்லப்போனால், பைபிள் அவரை ‘தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர்’ என்று வருணிக்கிறது. (வெளிப்படுத்துதல் 3:14) கடவுளுடைய ஆட்சியை எதிர்க்கும்படி முதல் மனித ஜோடியைத் தூண்டிய பொல்லாத தூதனின் கலகத்தனத்தை இவர் பரலோகத்திலிருந்து நேரடியாக பார்த்தார். கடவுளுடைய பரிபூரண மனித குமாரனாக பிறக்கும்படி விரும்புவதற்கு இயேசுவுக்கு இதுவே அதிமுக்கியமான காரணத்தைக் கொடுத்தது. அது என்ன?
சர்வலோகத்தையும் ஆளும் உரிமை தம் பரலோக தந்தைக்கே இருக்கிறது என்று நிரூபிக்க அவர் விரும்பினார். பூமியில் அவர் பிறந்தது முதல் இறந்தது வரை உண்மையுள்ளவராக நிலைத்திருந்ததன் மூலம், யெகோவா தம் சிருஷ்டிகளை ஆளும் விதத்திற்கு தாம் கட்டுப்பட்டிருக்க மனமுள்ளவராக இருந்ததைக் காட்டினார். கடவுளுடைய சத்துருக்களின் கைகளில் கொல்லப்படுவதற்கு முன்பாக, பலிக்குரிய மரணத்தை அனுபவிக்க தாம் ஏன் மனமுள்ளவராக இருந்தார் என்பதை இயேசு தெளிவாக கூறினார். நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்று உலகம் அறிய வேண்டும் என்று அவர் சொன்னார். (யோவான் 14:31) முதல் மனிதர்களாகிய ஆதாமும் ஏவாளும் இப்படிப்பட்ட ஒரு அன்பை வளர்த்திருந்தால், அவர்களுக்கு வந்த அதிக சுலபமான சோதனையில் உண்மையுள்ளவர்களாக நிரூபித்திருக்க முடியும்.—ஆதியாகமம் 2:15-17.
இயேசு உண்மையுள்ளவராக இருந்தபடியால், அவர் பொல்லாத தூதனாகிய சாத்தானை பொய்யனாக நிரூபித்தார். பரலோகத்திலுள்ள தூதர்களுக்கு முன்னால் இவ்வாறு சொல்வதன் மூலம் சாத்தான் கடவுளையும் மனிதனையும் அவதூறாக பேசியிருந்தான்: “தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்.” (யோபு 2:1, 4) உயிருக்கு ஆபத்து என்று வந்துவிட்டால் எல்லா மனிதருமே கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போய்விடுவார்கள் என்று சாத்தான் தவறாக குற்றஞ்சாட்டினான்.
மேற்கூறப்பட்ட விவாதங்கள் எல்லாம் ஆட்சி செய்வதற்கான கடவுளுடைய உரிமைக்கு நேரடியான சவாலாக இருந்தன. அவற்றைத் தீர்ப்பதற்காக இயேசு ஒரு மனிதராக பிறந்து மரணம்வரை உண்மையுள்ளவராக தம்மை நிரூபிக்க மனமுள்ளவராக இருந்தார்.
ஆகவே, இயேசு பூமியில் பிறந்ததற்கான முக்கிய காரணத்தை அவர்தாமே இவ்வாறு கூறுகிறார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன்.” (யோவான் 18:37) கடவுளுடைய ஆட்சி முற்றிலும் நீதியானது, அதற்குக் கீழ்ப்பட்டிருப்பது நித்திய மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை அவர் தம் சொல்லிலும் செயலிலும் காட்டினார். இயேசு “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடு”ப்பதற்காக இந்த உலகத்திற்குள் வந்ததையும் விளக்கினார். இதனால் பாவமுள்ள மனிதர்கள் பரிபூரணத்தையும் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்வதற்கு வழி பிறக்கும் என்றும் கூறினார். (மாற்கு 10:45) மனிதகுலம் இந்த முக்கியமான விஷயங்களைக் கிரகித்துக்கொள்வதற்கு இயேசுவின் பிறப்பைப் பற்றிய பதிவு தேவையாக இருந்தது. அதோடு, இயேசுவின் பிறப்பை ஒட்டி நடந்த சம்பவங்களில் மற்ற முக்கியமான பாடங்கள் உள்ளன. அடுத்தக் கட்டுரையில் இதைக் காணலாம்.
[பக்கம் 4-ன் படங்கள்]
ஆதாமின் சந்ததியார் எவ்வாறு பாவத்திலிருந்து காப்பாற்றப்பட முடியும்?