யெகோவாவை ஒரு நிஜமான நபராக பார்க்கிறீர்களா?
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக். 4:8.
1. யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள ஏன் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்?
நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த ஒரு யெகோவாவின் சாட்சியா? அப்படியென்றால், உங்களிடம் ஒரு பெரிய சொத்து இருக்கிறது. அதுதான் யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தம். ஆனால், இந்தப் பந்தம் முறிந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், நாம் சாத்தானுடைய உலகத்தில் வாழ்கிறோம். அதுமட்டுமில்லாமல், நாம் பாவிகளாக இருப்பதால் நிறைய தவறுகள் செய்கிறோம். அதனால், யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.
2. யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
2 யெகோவாவை ஒரு நிஜமான நபராக நீங்கள் பார்க்கிறீர்களா? அவர் உங்களுடைய நண்பராக இருக்கிறாரா? அவரோடு உங்களுக்கு இருக்கும் பந்தம் பலப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று யாக்கோபு 4:8 சொல்கிறது. ஆனால், கடவுளிடம் நெருங்கி வருவதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது அவர் உங்களிடம் நிச்சயமாக நெருங்கி வருவார். நீங்கள் எந்தளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ அந்தளவுக்கு யெகோவா ஒரு நிஜமான நபராக இருப்பார். அவரோடு உங்களுக்கு இருக்கும் பந்தமும் நாளுக்கு நாள் பலப்படும். அப்படி செய்யும்போது இயேசு சொன்ன மாதிரியே நீங்களும், யெகோவா “நிஜமானவர் . . . எனக்கு அவரைத் தெரியும்” என்று சொல்வீர்கள். (யோவா. 7:28, 29) இருந்தாலும், யெகோவாவிடம் நெருங்கி போவதற்கு நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும். அது என்ன?
3. யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு என்ன செய்ய வேண்டும்?
3 யெகோவாவிடம் நெருங்கிப் போக வேண்டுமென்றால் அவரிடம் நீங்கள் தவறாமல் பேச வேண்டும், அவர் பேசுவதையும் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால், யெகோவாவிடம் எப்படிப் பேசுவது? வேறு ஒரு ஊரில் இருக்கும் உங்கள் நண்பரிடம் பேசுவதற்கு அவருக்கு அடிக்கடி ஃபோன் செய்வீர்கள் அல்லது கடிதம் எழுதுவீர்கள். அதேமாதிரி யெகோவாவிடம் நீங்கள் அடிக்கடி ஜெபம் செய்யும்போது அவரிடம் பேசுகிறீர்கள் என்று சொல்லலாம். (சங்கீதம் 142:2-ஐ வாசியுங்கள்.) யெகோவா பேசுவதை உங்களால் எப்படி கேட்க முடியும்? அவருடைய வார்த்தையான பைபிளை நீங்கள் அடிக்கடி படிக்கும்போது... படித்த விஷயங்களை நன்றாக யோசித்து பார்க்கும்போது... அவர் பேசுவதை உங்களால் கேட்க முடியும். (ஏசாயா 30:20, 21-ஐ வாசியுங்கள்.) இப்படி நீங்கள் இரண்டு பேரும் பேசிக்கொள்வதால் உங்களுக்குள் இருக்கும் பந்தம் பலப்படும். அவர் உங்களுடைய நண்பராகவும் இருப்பார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
யெகோவா பேசுவதைக் கேளுங்கள்
4, 5. பைபிளை படிக்கும்போது யெகோவா உங்களிடம் பேசுகிறார் என்று எப்படி சொல்லலாம்? இதற்கு ஒரு உதாரணம் கொடுங்கள்.
4 மனிதர்கள் எல்லாருமே தன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். அதனால்தான் நமக்கு பைபிளை கொடுத்திருக்கிறார். இருந்தாலும், தனி நபராக நீங்கள் கடவுளிடம் நெருங்கிப் போக என்ன செய்ய வேண்டுமென்று பைபிள் சொல்கிறதா? நிச்சயமாக சொல்கிறது. தினமும் பைபிளை படித்து அதைப் பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்க்கும்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். படித்த விஷயங்களை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் யோசித்துப் பாருங்கள். அப்படி செய்யும்போது, யெகோவா உங்களிடம் பேசுகிறார் என்று சொல்லலாம். அப்போது அவர் உங்களுக்கு நல்ல நண்பராக இருப்பார். நீங்களும் அவரிடம் இன்னும் நெருங்கிப் போவீர்கள்.—எபி. 4:12; யாக். 1:23-25.
5 உதாரணத்திற்கு, “பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள்” என்ற வசனத்தை நீங்கள் படிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பதற்காக உங்கள் வாழ்க்கையை ஏற்கெனவே எளிமையாக வைத்திருந்தால் இந்த வசனத்தை படிக்கும்போது எப்படி உணர்வீர்கள்? ‘நான் யெகோவாவுக்கு பிடிச்ச மாதிரி வாழ்றேன். அதனால அவர் என்னை பார்த்து சந்தோஷப்படுவார்’ என்று நினைப்பீர்கள். ஆனால், உங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்கு நீங்கள் முதலிடம் கொடுக்கவில்லை என்றால் எப்படி இருக்கும்? யெகோவாவிடம் நெருங்கி போக நீங்கள் இன்னும் என்ன செய்ய வேண்டுமென்று அவரே உங்களுக்கு சொல்வதைப் புரிந்துகொள்வீர்கள்.—மத். 6:19, 20.
6, 7. (அ) பைபிள் படிக்கும்போது யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கிற பந்தம் எப்படிப் பலப்படும்? (ஆ) என்ன குறிக்கோளோடு பைபிளை படிக்க வேண்டும்?
6 பைபிளை படிக்கும்போது நாம் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி வாழ இன்னும் என்ன செய்ய வேண்டுமென்று கற்றுக்கொள்வோம். அதுமட்டுமில்லாமல், யெகோவா செய்திருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றியும், அவரிடம் இருக்கிற அருமையான குணங்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம். அப்போது, நாம் அவரை இன்னும் அதிகமாக நேசிப்போம். அவரும் நம்மை அதிகமாக நேசிப்பார். யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தமும் நாளுக்கு நாள் பலப்படும்.—1 கொரிந்தியர் 8:3-ஐ வாசியுங்கள்.
7 பைபிளை படிக்கும்போது நாம் நிறைய புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வோம். ஆனால், இந்தக் குறிக்கோளோடு மட்டுமே நாம் பைபிளை படிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, யெகோவா எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்வதற்காகப் படிக்க வேண்டும். யோவான் 17:3 இப்படி சொல்கிறது: “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும் நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.” யெகோவாவை பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு நாம் பைபிளை படிக்கும்போது, அவரிடம் இன்னும் நெருங்கிப் போவோம். அப்போது, அவர் நமக்கு ஒரு நிஜமான நபராக இருப்பார்.—யாத்திராகமம் 33:13-ஐ வாசியுங்கள்; சங். 25:4.
8. (அ) அசரியா ராஜாவை யெகோவா தண்டித்ததைப் பற்றி பைபிளில் படிக்கும்போது சிலர் என்ன நினைக்கலாம்? (ஆ) யெகோவாவை பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தால் நீங்கள் எப்படி யோசிக்க மாட்டீர்கள்?
8 யெகோவா நம்முடைய நெருங்கிய நண்பராக இருந்தால், சில பைபிள் பதிவுகளைப் படிக்கும்போது ‘யெகோவா ஏன் அப்படி செஞ்சார்’ என்று நாம் யோசிக்க மாட்டோம். உதாரணத்திற்கு, யூதாவை ஆட்சி செய்த அசரியா ராஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஜனங்கள் எல்லாரும் பொய் கடவுளை வணங்கினாலும் அசரியா ராஜா யெகோவாவை மட்டுமே வணங்கினார். அசரியா ராஜா, ‘கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார்’ என்று பைபிளில் வாசிக்கிறோம். (2 இரா. 15:1-5) இருந்தாலும், யெகோவா அவரை தொழுநோயால் தண்டித்தார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் ஏன் தண்டித்தார் என்ற காரணத்தை சொல்லவில்லை. இந்தப் பதிவை படிக்கும்போது, யெகோவா ஏன் இப்படி அநியாயமாக நடந்துகொண்டார், காரணமே இல்லாமல் ஏன் அசரியா ராஜாவை தண்டித்தார் என்று யோசிக்கிறீர்களா? யெகோவா எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தால் அவர் எதை செய்தாலும் அதை சரியாகத்தான் செய்வார் என்று நம்புவீர்கள். அதோடு, அவர் எப்போதுமே ‘மட்டாய்த் தண்டிப்பார்,’ அதாவது சரியான அளவுக்குத்தான் தண்டிப்பார் என்று நம்புவீர்கள். (எரே. 30:11) அப்படியென்றால், யெகோவா ஏன் அசரியாவை தண்டித்தார் என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அவர் சரியான காரணத்துக்காகத்தான் அவரை தண்டித்திருப்பார் என்று நம்புவீர்கள்.
9. யெகோவா அசரியாவை தண்டித்தது சரிதான் என்று எப்படித் தெரிந்துகொள்கிறோம்?
9 அசரியா ராஜாவைப் பற்றி இன்னொரு பைபிள் புத்தகத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அசரியா ராஜாவுக்கு உசியா என்ற இன்னொரு பெயரும் இருந்தது. (2 இரா. 15:7, 32) இரண்டு நாளாகமம் 26:3-5, 16-21-ல் உசியாவை பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது. உசியா ஆரம்பத்தில் யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டாலும் அதற்கு பிறகு அவர் பெருமை பிடித்தவராக ஆகிவிட்டார். அதனால்தான், ‘தனக்குக் கேடுண்டாக, அவனுடைய மனம் மேட்டிமையானது’ என்று பைபிள் சொல்கிறது. குருமார்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலையை அவர் செய்ய துணிந்தார். அவர் செய்வது பெரிய தவறு என்று 81 குருமார்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது, அவர்கள்மீதே உசியா பயங்கரமாக ‘கோபப்பட்டார்.’ அப்படியென்றால், அவருக்கு எவ்வளவு பெருமை இருந்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். யெகோவா ஏன் அவரை தண்டித்தார் என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா?
10. யெகோவா செய்கிற எல்லா விஷயத்திற்கும் காரணம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஏன் நினைக்கக் கூடாது? யெகோவா எதை செய்தாலும் அதை சரியாகத்தான் செய்வார் என்று எப்படி நம்பலாம்?
10 இந்தப் பதிவில் இருந்து நாம் என்ன முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்கிறோம்? அசரியாவை பற்றி பைபிளில் போதுமான விவரம் இருப்பதால் யெகோவா அவரை ஏன் தண்டித்தார் என்று நமக்குப் புரிகிறது. ஒருவேளை மற்ற பைபிள் பதிவுகளில் இந்த மாதிரியான விவரம் எதுவும் இல்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யெகோவா அநியாயமாக நடந்துகொண்டார் என்று நினைப்பீர்களா? அல்லது, யெகோவா எப்போதுமே சரியானதைத்தான் செய்வார் என்று நம்புவதற்கு பைபிளில் போதுமான ஆதாரங்கள் இருக்கும் என்று நினைப்பீர்களா? (உபா. 32:4) யெகோவாவை பற்றி இன்னும் எந்தளவுக்கு நன்றாகத் தெரிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு அவரை நேசிப்போம். அவர் எதை செய்தாலும் அதை சரியாகத்தான் செய்வார் என்று நம்புவோம். அப்போது, யெகோவா செய்கிற எல்லா விஷயத்துக்கும் காரணம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டோம். அப்படியென்றால், நாம் பைபிளை நன்றாகப் படிக்கும்போது அவர் நமக்கு ஒரு நிஜமான நபராகவும், நண்பராகவும் இருப்பார்.—சங். 77:12, 13.
நீங்கள் யெகோவாவிடம் பேசுங்கள்
11-13. யெகோவா நம்முடைய ஜெபத்தை கேட்கிறார் என்று எப்படி சொல்லலாம்? (ஆரம்பப் படம்)
11 ஜெபம் செய்யும்போது நாம் யெகோவாவை புகழ்கிறோம், அவருக்கு நன்றி சொல்கிறோம், அவரிடம் உதவி கேட்கிறோம். யெகோவாவிடம் நெருங்கிப் போக இது எல்லாமே நமக்கு உதவியாக இருக்கும். (சங். 32:8) இருந்தாலும் உங்களுடைய ஜெபங்களை அவர் கேட்கிறார் என்று நீங்கள் எப்படி உறுதியாக நம்பலாம்?
12 ‘நான் செய்ற ஜெபத்தை எல்லாம் கடவுள் கேட்குறது இல்லைனாலும் என்னோட மன நிம்மதிக்காக ஜெபம் செய்றேன்’ என்று சிலர் சொல்கிறார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? ஜெபத்தில் அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி சொல்லும்போது, உண்மையிலேயே அவர்களுடைய பிரச்சினை என்னவென்றும்... அதற்கான தீர்வு என்னவென்றும்... புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். ஒருபக்கம் இது உண்மையாக இருந்தாலும், யெகோவா நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார். அதை எப்படி நாம் உறுதியாக சொல்லலாம்?
13 இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு அவருடைய அப்பா யெகோவா, மனிதர்களுடைய ஜெபத்திற்கு பதில் கொடுத்ததை நேரடியாகப் பார்த்தார். இயேசு பூமிக்கு வந்தபோது யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அவருடைய மனதில் இருந்ததை எல்லாம் அவரிடம் கொட்டினார். ஒருசமயம் அவர் இரவு முழுவதும் ஜெபம் செய்தார். (லூக். 6:12; 22:40-46) யெகோவா ஜெபத்தை கேட்க மாட்டார் என்று நினைத்திருந்தால் இயேசு இப்படி ஜெபம் செய்திருப்பாரா? அதுமட்டுமில்லாமல், யெகோவாவிடம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்று அவருடைய சீடர்களுக்கும் சொல்லி கொடுத்தார். யெகோவா ஜெபத்தைக் கேட்க மாட்டார் என்றால் அவர் ஏன் அப்படி சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்? அப்படியென்றால், யெகோவா அவருடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்று இயேசு உறுதியாக நம்பினார். அதனால்தான், “தகப்பனே, என் ஜெபத்தைக் கேட்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் எப்போதுமே என் ஜெபத்தைக் கேட்பீர்கள்” என்று இயேசு சொன்னார். அப்படியென்றால், யெகோவா நம்முடைய ‘ஜெபத்தையும் கேட்கிறார்’ என்று நாம் உறுதியாக நம்பலாம்.— யோவா. 11:41, 42; சங். 65:2.
14, 15. (அ) குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக ஜெபம் செய்யும்போது நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? (ஆ) ஜெபம் செய்ததால் கேத்தி எப்படி யெகோவாவிடம் நெருங்கிப் போனார்?
14 சிலசமயம் உங்கள் ஜெபங்களுக்கு யெகோவா கொடுக்கிற பதிலை உங்களால் தெளிவாகப் பார்க்க முடியாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக நீங்கள் ஜெபம் செய்யும்போது யெகோவா உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பது தெளிவாக தெரியும். அப்போது யெகோவா உங்களுக்கு நிஜமானவராக இருப்பார். உங்கள் மனதில் இருக்கிற கஷ்டத்தை எல்லாம் யெகோவாவிடம் சொல்லும்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.
15 கேத்திa என்ற சகோதரியுடைய அனுபவத்தைக் கவனியுங்கள். (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) வெளி ஊழியத்திற்குப் போவது கேத்திக்கு பிடிக்காது. இருந்தாலும் ஊழியத்திற்கு தவறாமல் போனார். இதைப் பற்றி கேத்தி இப்படி சொல்கிறார்: “ஊழியத்துக்கு போகணும்னாலே எனக்கு பிடிக்காது. சொல்லப்போனா ஊழியத்துக்கு போறதுல எனக்கு கொஞ்சம்கூட இஷ்டம் இல்லை. ஆனா, வேலையில இருந்து நான் ஒய்வுபெற்ற சமயத்துல ஒரு மூப்பர் என்கிட்ட வந்து பயனியர் ஃபார்மை கொடுத்தார். ஒரு ஒழுங்கான பயனியரா ஆகுறதுக்கு அவர் என்னை உற்சாகப்படுத்துனார். அதனால நானும் பயனியர் செய்யணும்னு முடிவு செஞ்சேன். ஊழியத்தை ஆர்வமா செய்றதுக்கு உதவி செய்யுங்கனு யெகோவாகிட்ட தினமும் ஜெபம் செஞ்சேன்.” கேத்தியுடைய ஜெபத்தை யெகோவா கேட்டாரா? கேத்தி சொல்கிறார்: “நான் மூணு வருஷமா பயனியர் செஞ்சிட்டு இருக்கேன். நிறைய நேரம் ஊழியம் செய்றதுனாலயும், மத்த சகோதரிகள்கிட்ட இருந்து கத்துக்கிறதுனாலயும் நான் ஊழியத்துல இப்போ நல்லா பேசுறேன், ஊழியத்தை ஆர்வமா செய்றேன். சொல்லப்போனா ஊழியம் செய்றது எனக்கு இப்போ ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. அதுமட்டுமில்ல, முன்னாடி இருந்ததைவிட இப்போ நான் யெகோவாவோட நெருங்கிய பந்தத்தை அனுபவிக்கிறேன்.” இப்படி ஜெபம் செய்ததினால் கேத்திக்கு யெகோவா ஒரு நிஜமான நபராக இருக்கிறார்.
நீங்கள் என்ன செய்யலாம்?
16, 17. (அ) யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தம் பலப்பட நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
16 யெகோவாவிடம் நாம் எப்போதும் நெருங்கிய பந்தத்தை வளர்க்கலாம், அதற்கு முடிவே கிடையாது. அவரிடம் நெருங்கிப் போவதற்கு, அவர் பேசுவதைத் தினமும் கேட்க வேண்டும். அதாவது, பைபிளை தினமும் படிக்க வேண்டும். அதேசமயம் நாமும் அவரிடம் பேச வேண்டும். அதாவது, ஜெபம் செய்ய வேண்டும். அப்போது யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம் நாளுக்கு நாள் பலப்படும். நம்முடைய கஷ்டங்களையும் நம்மால் சமாளிக்க முடியும்.
17 ஆனால், நாம் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும் சிலசமயம் நம்முடைய பிரச்சினைகளுக்குத் தீர்வே கிடைக்காமல் போகலாம். அந்த மாதிரி சமயத்தில் யெகோவாமீது நமக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்துவிடலாம். யெகோவா நம்முடைய ஜெபத்தைக் கேட்பதில்லை என்று நினைக்கலாம். யெகோவா நம்முடைய நண்பராக இருக்கிறாரா என்ற சந்தேகம்கூட நமக்கு வந்துவிடலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில் என்ன செய்வது? அடுத்த கட்டுரையில் இதைப் பற்றி பார்க்கலாம்.
a பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது.