திரித்துவம்
சொற்பொருள் விளக்கம்: கிறிஸ்தவமண்டல மதங்களின் மையக் கோட்பாடு. அதனேசியன் விசுவாசப்பிரமாணத்தின்படி, மூன்று தெய்வீக ஆட்கள் இருக்கின்றனர் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி), ஒவ்வொருவரும் நித்தியரென சொல்லப்படுகின்றனர், ஒவ்வொருவரும் சர்வவல்லவரென சொல்லப்படுகின்றனர், ஒருவரும் மற்றவரைப் பார்க்கிலும் பெரியவரோ தாழ்ந்தவரோ இல்லை, ஒவ்வொருவரும் கடவுளெனவும், எனினும் ஒன்றாக ஒரே கடவுளெனவும் சொல்லப்படுகின்றனர். இந்தக் கோட்பாட்டின் மற்றக் கூற்றுகள், இந்த மூன்று “ஆட்கள்” வெவ்வேறு தனித்தனி ஆட்கள் அல்லர் ஆனால் மூன்று செயல்வகைகள் அவற்றில் தெய்வீக உள்ளியல்பு அமைந்திருக்கிறது என்று அழுத்திக்கூறுகின்றன. இவ்வாறு சில திரித்துவக்கோட்பாட்டாளர்கள் இயேசு கிறிஸ்து கடவுள் என்ற, அல்லது இயேசுவும் பரிசுத்த ஆவியும் யெகோவா என்ற தங்கள் நம்பிக்கையை அழுத்திக்கூறுகின்றனர். இது பைபிள் போதகமல்ல.
திரித்துவக் கோட்பாட்டின் தொடக்கம் என்ன?
தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு சொல்லுகிறது: “திரித்துவம் என்றச் சொல்லோ, அதைப்போன்ற திட்டவட்டமான ஏதோ கோட்பாடோ, புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறதில்லை, மேலும் இயேசுவும் அவரைப் பின்பற்றினவர்களும் பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த ஷீமாவை [யூதரின் அன்றாட மதவாசகத்தை] மறுத்துப்பேசவும் எண்ணவில்லை: ‘இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (உபா. 6:4). . . . இந்தக் கோட்பாடு பல நூற்றாண்டுகளினூடேயும் பல வாத எதிர்வாதங்களினூடேயும் படிப்படியாய் உருவாயிற்று. . . . 4-ம் நூற்றாண்டின் முடிவுக்குள் . . . இந்தத் திரித்துவக் கோட்பாடு அது முதற்கொண்டு காத்துவந்துள்ள இந்த உருவத்தைப் பெரிய அளவு மாறுதலின்றி ஏற்றது.”—(1976), மைக்ரோபீடியா, புத். X, பக். 126.
நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு கூறுகிறது: “‘ஒரே கடவுள் மூன்று ஆட்களில்’ என்ற இந்த வாய்ப்பாடு, 4-ம் நூற்றாண்டின் முடிவுக்கு முன்னால், உறுதியாய் ஸ்தபிக்கப்படவில்லை, நிச்சயமாகவே கிறிஸ்தவ வாழ்க்கைக்குள்ளும் அதன் மத விசுவாச அறிவிப்பிலும் முழுமையாய் ஒன்றுபட்டிணைக்கப்படவுமில்லை. ஆனால் இந்த வாய்ப்பாடே அதே முறையில் திரித்துவக்கோட்பாட்டாளரின் கொள்கை என்ற மத மதிப்புப் பெயருக்கு முதல் உரிமை கொண்டிருக்கிறது. அப்போஸ்தல பிரமுகர்களுக்குள், இத்தகைய மனப்போக்கை அல்லது மனத்தோற்றத்தை மிகச் சிறிதாயினும் ஒத்திருக்கும் எதுவும் இல்லை.”—(1967), புத். XIV, பக். 299.
தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா என்பதில் நாம் வாசிப்பதாவது: “கிறிஸ்தவம் யூதமதத்திலிருந்து வந்தது மற்றும் யூதமதம் கண்டிப்பாய்த் தனியொருமையை [கடவுள் ஒரே ஆள் என்று நம்புவதை] வலியுறுத்துவதாகும். எருசலேமிலிருந்து நைசியாவுக்கு வழிநடத்தின அந்தப் பாதை சற்றேனும் நேராக இல்லை. நான்காம் நூற்றாண்டு திரித்துவக் கோட்பாட்டு மதம் கடவுளின் இயல்பைப்பற்றிய ஆரம்பக் கிறிஸ்தவ போதகத்தைத் திருத்தமாய் ஆழ்ந்து சிந்திக்கவில்லை; அதற்கு நேர்மாறாக அது, இந்தப் போதகத்திலிருந்து விலகிச்சென்ற ஒன்றாகும்.”—(1956), புத். XXVII, பக். 294L.
நோவியா டிக்ஷனரி யூனிவெர்செல், என்ற அகராதியின்படி, “பிளேட்டோனிய திரித்துவம், அதுதானேயும் முற்பட்டகால ஆட்களின் காலத்துக்குச் செல்லும் முந்தின திரித்துவங்களின் வெறும் திரும்ப ஒழுங்குசெய்யப்பட்ட அமைப்பாயிருக்கையில், கிறிஸ்தவ சர்ச்சுகளால் கற்பிக்கப்பட்ட அந்தத் திரித்துவத்தின் மூன்று ஆட்கள் அல்லது தெய்வீக ஆட்களைப் பிறப்பித்த பகுத்தறிவினடிப்படையாயமைந்த தத்துவஞான பண்புகளுக்குரிய திரித்துவமெனத் தோன்றுகிறது. . . . இந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் [பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டு, பிளேட்டோவின்] இந்தத் தெய்வீகத் திரித்துவ எண்ணத்தை . . . பூர்வ [புறமத] மதங்கள் எல்லாவற்றிலும் காணலாம்.”—(பாரிஸ், 1865-1870), M. லக்காட்ரி பதிப்பித்தது, புத். 2, பக். 1467.
ஜான் L. மெக்கென்ஸி, S. J., தன்னுடைய பைபிள் அகராதியில் பின்வருமாறு சொல்கிறார்: “தன்மையின் ஒற்றுமைக்குள் ஆட்களின் திரித்துவம், கி[ரேக்க] தத்துவஞானத்துக்குரிய சொற்களாகிய ‘ஆள்’ மற்றும் ‘தன்மை’ என்ற பதங்களில் விளக்கம் செய்யப்பட்டுள்ளது; உண்மையில் இந்தச் சொற்கள் பைபிளில் காணப்படுகிறதில்லை. இந்தத் திரித்துவக் கோட்பாட்டு விளக்கங்கள் நெடுங்கால வாத எதிர்வாத போரட்டங்களின் விளைவாக எழும்பின, அவற்றில் இந்தச் சொற்களும் ‘உள்ளியல்பு’ மற்றும் ‘பண்பியல்பு’ போன்ற மற்றவையும் சில இறைமையியல் வல்லுநர்களால் கடவுளுக்குப் பிழைபட பயன்படுத்தப்பட்டன.”—(நியு யார்க், 1965), பக். 899.
“திரித்துவம்” என்றச் சொல்லோ திரித்துவக் கோட்பாட்டைப்பற்றிய ஒரு கூற்றோ பைபிளில் காணப்படுகிறதில்லையென்று திரித்துவக் கோட்பாட்டாளர்கள் ஒப்புக்கொள்கிறபோதிலும், இந்தக் கோட்பாட்டில் உள்ளடங்கிய எண்ணங்கள் அங்கே காணப்படுகின்றனவா?
“பரிசுத்த ஆவி” ஓர் ஆள் என்று பைபிள் போதிக்கிறதா?
பரிசுத்த ஆவியைக் குறிப்பிடுகிற சில தனி வசனங்கள் ஆள்தன்மையைக் குறிப்பிடுவதாகத் தோன்றலாம். உதாரணமாக, பரிசுத்த ஆவி சகாயர் (தி.மொ.) எனவும் (கிரேக்கில், பராக்ளிட்டாஸ்; “தேற்றரவாளன்,” UV; “பரிந்து பேசுபவர்,” JB, NE) ‘போதிப்பார்,’ ‘சாட்சி கொடுப்பார்,’ ‘பேசுவார்’ மற்றும் ‘கேள்விப்படுவார்’ எனவும் குறிப்பிட்டிருக்கிறது. (யோவான் 14:16, 17, 26; 15:26; 16:13) ஆனால் மற்ற வசனங்களில், ஆட்கள் பரிசுத்த ஆவியால் “நிரப்பப்பட்டார்கள்” என்றும், சிலர் அதால் ‘முழுக்காட்டப்பட்டார்கள்’ அல்லது “அபிஷேகம்பண்”ணப்பட்டார்கள் என்றும் சொல்லியிருக்கிறது. (லூக்கா 1:41; மத். 3:11, NW; அப். 10:38) பரிசுத்த ஆவியைக் குறிப்பிடும் இந்தப் பிந்திய குறிப்புரைகள் நிச்சயமாகவே ஓர் ஆளுக்குப் பொருந்துகிறதில்லை. முழுமையாக பைபிள் கற்பிப்பது என்னவென்பதைப் புரிந்துகொள்ள, இந்த எல்லா வசனங்களையும் ஆழ்ந்து கவனிக்கவேண்டும். நியாயமான முடிவு என்ன? இங்கே முதலில் குறிப்பிடப்பட்ட வசனங்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியை, அவருடைய செயல்படும் சக்தியை, ஆளாக உருவகஞ்செய்யும் ஒரு சொல்லணியைப் பயன்படுத்துகின்றன. ஞானம், பாவம், மரணம், தண்ணீர், இரத்தம் ஆகியவையும் பைபிளில் ஆளாக உருவகஞ்செய்யப்பட்டிருக்கின்றன. (பக்கங்கள் 380, 381-ல், “ஆவி” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)
பிதாவின் சொந்தப் பெயர்—யெகோவா—என பரிசுத்த வேத எழுத்துக்களில் நமக்குச் சொல்லியிருக்கிறது. குமாரன் இயேசு கிறிஸ்து என்று அவை நமக்குத் தகவல் அளிக்கின்றன. ஆனால் வேத எழுத்துக்களில் ஓரிடத்திலும் பரிசுத்த ஆவிக்கு ஒரு சொந்தப் பெயர் பயன்படுத்தியில்லை.
அப்போஸ்தலர் 7:55, 56-ல் பரலோகத்தின் ஒரு காட்சி ஸ்தவானுக்குக் கொடுக்கப்பட்டதெனவும் அதில் “தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதை,” அவன் கண்டானெனவும் அறிவித்திருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியைக் கண்டதாக அவன் குறிப்பிடவில்லை. (வெளிப்படுத்துதல் 7:10; 22:1, 3.)
புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “பு[திய] ஏ[ற்பாட்டின்] பெரும்பான்மையான வசனங்கள் கடவுளுடைய ஆவியை ஏதோவொன்று எனவே வெளிப்படுத்துகின்றன, யாரோ ஒருவர் என்றல்ல; இது ஆவி மற்றும் கடவுளின் வல்லமை ஆகிய இவற்றிற்குள்ள இணையொத்தநிலையில் முக்கியமாய்க் காணப்படுகிறது.” (1967, புத். XIII, பக். 575) “அபோலாஜிஸ்ட்ஸ் [இரண்டாம் நூற்றாண்டின் கிரேக்க கிறிஸ்தவ எழுத்தாளர்கள்] ஆவியைப்பற்றி மீறியவண்ணம் தயக்கமில்லாமல் பேசினர்; ஓரளவு எதிர்பார்ப்புடன், பேரளவாய் ஆளைக்குறிக்காதமுறையில் என சொல்லலாம்,” என அது மேலும் அறிக்கை செய்கிறது.—புத். XIV, பக். 296.
பிதாவும் குமாரனும் வெவ்வேறு தனி ஆட்களல்லர் என்று போதிக்கிறவர்களோடு பைபிள் ஒத்துள்ளதா?
மத். 26:39: “[இயேசு கிறிஸ்து] சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.” (பிதாவும் குமாரனும் தனி ஆட்களாயிராவிட்டால், இத்தகைய ஜெபம் அர்த்தமற்றதாயிருக்கும். இயேசு தம்மிடம்தாமே ஜெபிக்கிறவராயிருந்திருப்பார், மேலும் அவருடைய சித்தமே தவிர்க்க முடியாத நிலையில் பிதாவின் சித்தமாயிருந்திருக்கும்.)
யோவான் 8:17, 18: “[இயேசு இந்த யூத பரிசேயருக்குப் பதிலளித்து:] இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்.” (ஆகவே, இயேசு தாம் பிதாவிலிருந்து வேறுபட்ட தனியொரு ஆள் என தம்மைக்குறித்து திட்டவட்டமாய்ப் பேசினார்.)
பக்கங்கள் 197, 198-ல், “யெகோவா” என்பதன்கீழ்ப் பாருங்கள்.
திரித்துவத்தின் பாகமாயிருப்பதாகச் சொல்லப்படுவோர் எல்லாரும் நித்தியர், ஒருவருக்கும் தொடக்கம் கிடையாதென பைபிள் போதிக்கிறதா?
கொலோ. 1:15, 16: “அவர் [இயேசு கிறிஸ்து] அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் [முதற் பேறுமானவர், தி.மொ.]. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளும்.” என்ன கருத்தில் இயேசு கிறிஸ்து “சர்வ சிருஷ்டிக்கும் முதற் பேறுமானவர்”? (1) “முதற் பேறு” என்பது இங்கே பிரதான, மிக அதிக மேம்பட்ட, மிக அதிக மேன்மைவாய்ந்த என்பதைக் குறிக்கிறதெனவும், இவ்வாறு கிறிஸ்து சிருஷ்டிப்பின் பாகமல்ல, ஆனால் சிருஷ்டிக்கப்பட்டவர்களோடு சம்பந்தப்பட்டதில் மிக அதிக மேன்மைவாய்ந்தவர் என விளங்கிக்கொள்ளப்படவேண்டும் எனவும் திரித்துவக் கோட்பாட்டாளர் சொல்கின்றனர். அவ்வாறிருந்தால், மேலும் திரித்துவக் கோட்பாடு உண்மையாயிருந்தால், பிதாவும் பரிசுத்த ஆவியும் சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறானவர்களென்று ஏன் சொல்லப்படவில்லை? பைபிள் இந்தச் சொற்களைக் குமாரனுக்கு மாத்திரமே பயன்படுத்துகிறது. “முதற்பேறு” என்பதன் வழக்கமான அர்த்தத்தின்படி, யெகோவாவின் குமாரர்களடங்கிய குடும்பத்தில் இயேசு எல்லாரிலும் மூத்தவர் என அது குறிக்கிறது. (2) கொலோசெயர் 1:15-க்கு முன்னால், “முதற்பேறான” என்ற இந்தச் சொற்றொடர் 30-க்கு மேற்பட்ட தடவைகள் பைபிளில் காணப்படுகிறது, உயிருள்ள சிருஷ்டிகளுக்கு அது பயன்படுத்துகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதே அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளது—அதாவது அந்த முதற்பேறு அந்தத் தொகுதியின் பாகம் என்பதாகும். “இஸ்ரவேலின் முதற்பேறானவன்” இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனே; “பார்வோனின் முதற்பேறானவன்” பார்வோனின் குடும்பத்தில் ஒருவனே; “மிருகத்தின் முதற்பேறாக” இருப்பவை மிருகங்களே. அப்படியானால், கொலாசெயர் 1:15-ல் அதற்கு வேறுபட்ட அர்த்தத்தைக் குறித்துக் காட்டும்படி சிலரைச் செய்விப்பது எது? அது பைபிள் பயன்படுத்தும் முறையா அல்லது அவர்கள் ஏற்கெனவே கொண்டுள்ளதும் அதற்கு நிரூபணத்தைத் தாங்கள் தேடுவதுமாகுமா? (3) கொலோசெயர் 1:16, 17-ல் “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; . . . சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது,” என்று சொல்லியிருப்பது இயேசுவை சிருஷ்டிக்கப்படவில்லையென தவிர்த்து வைக்கிறதா? “சகலமும்” என்று இங்கே மொழிபெயர்த்துள்ள கிரேக்கச் சொல் பன்ட்டா என்பதாகும், இது பஸ் என்பதன் உருமாற்றமாகும் [விகுதி சேர்க்கப்பட்டு மாறியது]. லூக்கா 13:2-ல், RS “மற்ற . . . எல்லா” என மொழிபெயர்த்திருக்கிறது; JB “மற்ற எவரை” என்றிருக்கிறது; NE “வேறு எவரை” என்று சொல்லியிருக்கிறது. (மேலும் NE-ல் லூக்கா 21:29-ஐயும் JB-ல் பிலிப்பியர் 2:21-ஐயும் பாருங்கள்.) குமாரனைப்பற்றி பைபிளில் சொல்லியிருக்கும் மற்ற எல்லாவற்றுடனும் பொருந்த, NW கொலாசெயர் 1:16, 17-ல் பன்ட்டா என்பதற்கு அதே அர்த்தத்தையே கொடுக்கிறது, இவ்வாறு அதில் ஒரு பகுதியாக, “அவரைக்கொண்டு மற்ற எல்லாக் காரியங்களும் சிருஷ்டிக்கப்பட்டன . . . மற்ற எல்லாக் காரியங்களும் அவர்மூலமாயும் அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டன,” என்று வாசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் சிருஷ்டிக்கப்பட்டவராக, கடவுள் சிருஷ்டித்த சிருஷ்டிப்பின் பாகமாகக் காட்டப்படுகிறார்.
வெளி. 1:1; 3:14: “இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்துதல், இதைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார்.” (RS) “லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற [கிரேக்கில், ஆர்கீ] ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது.” (KJ, Dy, CC, மற்றும் NW, இவற்றோடு மற்றவற்றிலும், இவ்வாறு இருக்கிறது.) இந்த மொழிபெயர்ப்பு திருத்தமானதா? இங்கே குமாரன் ‘கடவுளுடைய சிருஷ்டிப்பைத் தொடங்கினவர்’ எனவும், அவரே அதன் ‘ஆதிமூலகாரணர்’ எனவும் பொருள்படுகிறதென்ற கருத்தைச் சிலர் ஏற்கின்றனர். ஆனால் லிட்டல் மற்றும் ஸ்கட் இயற்றிய கிரேக்க-ஆங்கில அகராதி “ஆதி” என்பதை ஆர்கீ என்பதன் முதல் அர்த்தமாயிருப்பதாக வரிசைப்படுத்துகிறது. (ஆக்ஸ்ஃபர்ட், 1968, பக். 252) நியாயமுறைப்படியான முடிவு என்னவெனில், வெளிப்படுத்துதல் 3:14-ல் குறிப்பிடப்பட்டுள்ளவர் சிருஷ்டிக்கப்பட்டவர், கடவுளுடைய சிருஷ்டிப்புகளில் முதல்வர், அவருக்கு ஒரு தொடக்கம் இருந்தது என்பதே. நீதிமொழிகள் 8:22-ஐ ஒப்பிடுங்கள், அங்கே, பைபிள் உரையாசிரியர்கள் பலர் ஒப்புக்கொள்கிறபடி, இந்தக் குமாரனே ஆளுருவகஞ்செய்துள்ள ஞானமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். RS, NE, மற்றும் JB-ன்படி அங்கே பேசுகிறவர் “சிருஷ்டிக்கப்பட்டார்” என சொல்லப்படுகிறது.)
தீர்க்கதரிசனமாய், மேசியாவைக் குறித்து, மீகா 5:2 (UV), “அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.” என்று சொல்கிறது. Dy-ல் “அவருடைய புறப்படுதல் தொடக்கத்திலிருந்து, நித்தியத்தின் நாட்களிலிருந்து இருக்கிறது,” என்று கொடுத்திருக்கிறது. இது அவரைக் கடவுளைப்போன்றவராக்குகிறதா? “நித்தியத்தின் நாட்கள்” என்று சொல்வதற்குப் பதிலாக, RS அந்த எபிரெயச் சொல்லை “பூர்வ நாட்கள்” என்றும்; JB, “பண்டைய நாட்கள்” என்றும்; NW, “வரையறைப்படாத காலத்துக்குரிய நாட்கள்” எனவும் மொழிபெயர்த்திருப்பது கவனிக்கத்தக்கது. மேலே சிந்திக்கப்பட்ட, வெளிப்படுத்துதல் 3:14-ன் துணைகொண்டு நோக்குகையில், மீகா 5:2 இயேசு தொடக்கமில்லாதவரென நிரூபிக்கிறதில்லை.
திரித்துவத்தில் அடங்கியிருப்பதாகச் சொல்லப்பட்டிருப்போரில் எவரும் மற்றவரைப் பார்க்கிலும் மேம்பட்டவரோ தாழ்ந்தவரோ அல்லவெனவும், எல்லாரும் சமமானவர்கள், எல்லாரும் சர்வவல்லமையுள்ளவர்களெனவும் பைபிள் போதிக்கிறதா?
மாற்கு 13:32: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.” (பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியும் சமமானவர்களாக, ஒரே கடவுள்தன்மை உள்ளடங்கியவர்களாக இருந்தால், நிச்சயமாகவே இவ்வாறு இராது. குமாரன் தம்முடைய மனித இயல்பால் அதை அறிவதிலிருந்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தாரென எவராவது கூறினால், பரிசுத்த ஆவி ஏன் அறியவில்லை? என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.)
மத். 20:20-23: “செபெதேயுவின் குமாரருடைய தாய் . . . அவரிடத்தில் [இயேசுவினிடத்தில்] வந்து, . . . உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: . . . என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், . . . ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.” (வாதாடுகிறபடி இயேசு கடவுளாயிருந்தால் இது விளங்கமுடியாததாயிருக்கிறது! இங்கே இயேசு தம்முடைய “மனித இயல்பின்படி” வெறுமென பதில் சொல்கிறாரா? திரித்துவக் கோட்பாட்டாளர் சொல்லுகிறபடி, இயேசு உண்மையில் “கடவுள்-மனிதனாக”—ஒருவரோ அல்லது மற்றொருவரோ ஆகவல்ல, கடவுளும் மனிதனுமான இருவருமாக இருந்தாரென்றால்—அத்தகைய விளக்கம் சொன்னது உண்மையில் பொருத்தமாயிருக்குமா? அதற்கு மாறாக, குமாரன் பிதாவுக்குச் சமமானவர் அல்லர், பிதா சில தனிச்சிறப்புரிமைகளைத் தமக்கென ஒதுக்கிவைத்திருக்கிறாரென்று மத்தேயு 20:23 காட்டுகிறதல்லவா?)
மத். 12:31, 32: “எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” (பரிசுத்த ஆவி ஓர் ஆளாகவும் கடவுளாகவும் இருந்தால், இந்த வசனம் திரித்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் முரண்படும், ஏனெனில் ஏதோவொரு முறையில் பரிசுத்த ஆவி குமாரனைப் பார்க்கிலும் மேம்பட்டதென இது குறிக்கும். அதற்குப்பதிலாக, இயேசு சொன்னது, அந்த “ஆவி” உரியதாயுள்ள பிதா, மனுஷகுமாரனாகிய இயேசுவைப் பார்க்கிலும் மேம்பட்டவரென காட்டுகிறது.)
யோவான் 14:28: “[இயேசு சொன்னார்:] நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.”
1 கொரி. 11:3: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (அப்படியானால், தெளிவாகவே, கிறிஸ்து கடவுளல்ல, கடவுள் கிறிஸ்துவுக்கு மேலாக உயர்ந்த நிலையிலிருக்கிறார். இது, இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் சென்று ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்குப்பின், கிட்டத்தட்ட பொ.ச. 55-ல் எழுதப்பட்டதென்பதைக் கவனிக்கவேண்டும். ஆகவே இங்கே கூறப்பட்டுள்ள சத்தியம் பரலோகத்தில் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவைக் குறிப்பிடுகிறது.)
1 கொரி. 15:27, 28, தி.மொ.: “[கடவுள்] எல்லாவற்றையும் அவருடைய [இயேசுவின்] பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும், எல்லாம் அவருக்குக் கீழ்ப்படுத்தப் பட்டதென்று சொல்லியிருக்கும்போது எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது தெளிவு. எல்லாம் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போதோ கடவுளே எல்லாரிலும் எல்லாமாயிருப்பதற்குக் குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.”
எபிரெயச் சொல் ஷத்டாய் மற்றும் கிரேக்கச் சொல் பன்டுக்ரேடர் ஆகிய இவ்விரண்டும் “சர்வவல்லமையுள்ளவர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மூலபாஷை சொற்களும் பிதாவாகிய யெகோவாவுக்கே திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்படுகின்றன. (யாத். 6:3; வெளி. 19:6) இந்த இரண்டு சொற்களில் எதுவும் குமாரனுக்கோ பரிசுத்த ஆவிக்கோ ஒருபோதும் பயன்படுத்தியில்லை.
திரித்துவத்தின் பாகமாயிருப்பதாகச் சொல்லப்படும் ஒவ்வொருவரும் கடவுளென பைபிள் போதிக்கிறதா?
ஜெபத்தில் இயேசு பின்வருமாறு கூறினார்: “ஒன்றான [ஒரே] மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:1-3, UV; தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.) (பெரும்பான்மையான மொழிபெயர்ப்புகள் இங்கே பிதாவைக் குறித்து “ஒரே உண்மையான கடவுள்” (NW) என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றன. NE-ல் “ஒருவரே உண்மையான கடவுள்” என்றுள்ளது. வேறு இருவர் அவர் இருப்பதைப்போன்ற அதே படிநிலையில் கடவுட்களாக இருந்தால், அவர் “ஒரே உண்மையான கடவுளாக” “ஒருவரே உண்மையான கடவுளா[க]” இருக்க முடியாது, அல்லவா? “கடவுட்கள்” என குறிப்பிடப்படும் மற்றவர்கள் எவரும் பொய்ப்போலியாக இருக்கவேண்டும் அல்லது உண்மையான கடவுளின் வெறும் பிரதிபலிப்பாயிருக்கவேண்டும்.)
1 கொரி. 8:5, 6: “வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.” (இது பிதாவைக் கிறிஸ்தவர்களின் “ஒரே தேவன்” எனவும் இயேசு கிறிஸ்துவிலிருந்து தனிவேறுபட்ட படிநிலையில் இருப்பவராயும் காட்டுகிறது.)
1 பேதுரு 1:3, தி.மொ.: “நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் பிதாவுமானவர் ஸ்தாத்திரத்துக்குரியவர்.” (இயேசு பரலோகத்துக்கு ஏறிச்சென்றதைப் பின்தொடர்ந்துங்கூட, திரும்பத்திரும்ப, வேத எழுத்துக்கள் பிதாவை இயேசு கிறிஸ்துவின் “கடவுள் [தேவன்]” என குறிப்பிடுகின்றன. யோவன் 20:17-ல், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பின்தொடர்ந்து, அவர்தாமே பிதாவைக்குறித்து “என் தேவன்” என பேசினார். பின்னால், பரலோகத்திலிருக்கையில், வெளிப்படுத்துதல் 3:12-ல் பதிவுசெய்திருக்கிறபடி, அவர் அதே சொற்களை மறுபடியும் பயன்படுத்தினார். ஆனால் பிதா குமாரனை “என் தேவன்” என குறிப்பிட்டதாக பைபிளில் ஒருபோதும் அறிவித்தில்லை, மேலும் பிதாவோ குமாரனோ பரிசுத்த ஆவியை “என் தேவன்” எனக் குறிப்பிடுகிறதுமில்லை.)
கிறிஸ்து கடவுளென நிரூபிக்க முயற்சி செய்து சிலர் பயன்படுத்தும் வேத வசனங்களின்பேரில் விளக்கக் குறிப்புகளுக்கு, பக்கங்கள் 212-216-ல், “இயேசு கிறிஸ்து” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.
இறைமையியல் ஆராய்ச்சிகள், என்பதில் கார்ல் ரஹ்னெர், S.J., பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்: “ஆவியைக் குறித்து Θεός [கடவுள்] என இன்னும் ஒருபோதும் பயன்படுத்தியில்லை,” மேலும்: “πνευμ ἃγον [பரிசுத்த ஆவியைக்] குறித்துப் பேசுவதற்கு δ Θεός [சொல்லர்த்தமாய், அந்தக் கடவுள்] புதிய ஏற்பாட்டில் ஒருபோதும் பயன்படுத்தியில்லை.”—(பால்ட்டிமோர், Md.; (1961), ஜெர்மன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது, புத். I, பக்கங்கள். 138, 143.
திரித்துவக் கோட்பாட்டாளர்கள் தங்கள் நம்பிக்கையை ஆதரிக்கப் பயன்படுத்தும் வேதவசனங்களில் ஏதாவது அந்தக் கோட்பாட்டுக்கு உறுதியான ஆதாரத்தை அளிக்கிறதா?
கடவுளைப்பற்றி சத்தியத்தை அறிய உண்மையில் நாடித்தேடும் ஒருவன் தான் ஏற்கெனவே நம்புவதற்குப் பொருந்துகிறதென தான் பொருள்படுத்திக் காட்டக்கூடிய ஒரு வசனத்தைக் கண்டுபிடிக்கும்படி எதிர்பார்த்து பைபிளை அலசியாராயப் போவதில்லை. கடவுளுடைய வார்த்தைத்தானே சொல்வதை அறியவே அவன் விரும்புகிறான். ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் வாசிக்கக்கூடுமென தான் உணரும் சில வசனங்களை அவன் காணலாம், ஆனால் அவற்றை அதே விஷயத்தின்பேரிலுள்ள பைபிளின் மற்றக் கூற்றுகளுடன் ஒப்பிடுகையில் அவற்றின் பொருள் விளக்கமாகும். திரித்துவத்தின் “நிரூபணம்” என பயன்படுத்தியுள்ள வசனங்களில் பெரும்பான்மையானவை மூன்று ஆட்களையல்ல, இரண்டு ஆட்களைமாத்திரமே உண்மையில் குறிப்பிடுகின்றனவென்பதை முதன்முதல் கவனிக்கவேண்டும்; ஆகையால் அந்த வசனங்களுக்குத் திரித்துவக் கோட்பாட்டாளர் கொடுக்கும் விளக்கம் திருத்தமாயிருந்தாலும், பைபிள் திரித்துவத்தைப் போதிக்கிறதென்று இவை நிரூபிப்பதில்லை. பின்வருவத ஆழ்ந்து கவனியுங்கள்:
(மற்றப்படி குறிப்பிட்டிருந்தால் தவிர, பின்வரும் பகுதியில் மேற்கோளாகக் குறிப்பிடும் எல்லா வசனங்களும் தமிழ் UV-லிருந்து எடுக்கப்பட்டவை.)
யெகோவாவுக்கு உரியதாயுள்ள சிறப்புப்பெயர் இயேசு கிறிஸ்துவுக்குப் பயன்படுத்தியிருக்கும் அல்லது இயேசுவுக்குப் பயன்படுத்தியிருப்பதாக விவாதிக்கப்படும் வசனங்கள்
அல்பாவும் ஓமேகாவும்: இந்தச் சிறப்புப் பெயர் சரியானபடி யாருக்கு உரியது? (1) வெளிப்படுத்துதல் 1:8-ல் (தி.மொ.), அதை உடையவர் சர்வவல்லமையுள்ள கடவுளென சொல்லியிருக்கிறது. UV-ன்படி 11-ம் வசனத்தில் இந்தச் சிறப்புப் பெயர் அதைப் பின்தொடரும் விவரிப்பு காட்டுகிறபடி இயேசு கிறிஸ்துவுக்குப் பயன்படுத்தியிருக்கிறது. ஆனால் 11-ம் வசனத்தில் குறிப்பிட்டுள்ள அல்பாவும் ஓமேகாவும் மூலவாக்கியத்தில் இல்லாத போலியானதென ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டறிந்து ஒப்புக்கொள்கிறார்கள், ஆகையால் இது தி.மொ., RS, NE, JB, NAB, Dy, ஆகியவற்றில் காணப்படுகிறதில்லை. (2) வெளிப்படுத்துதலை எபிரெயுவில் மொழிபெயர்த்த பல மொழிபெயர்ப்புகள் 8-ம் வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளவர் யெகோவா என அறிந்து ஒப்புக்கொள்கின்றன, ஆகவே அவை கடவுளின் சொந்தப் பெயரை அங்கே திரும்பவும் கொண்டுள்ளன. NW, 1984 ஓர மற்றும் அடிக்குறிப்புகளுள்ள பைபிள் பதிப்பைப் பாருங்கள். (3) வெளிப்படுத்துதல் 21:6, 7-ல் ஆவிக்குரிய வெற்றிப்பெறும் கிறிஸ்தவர்கள் அல்பாவும் ஓமேகாவுமென அறியப்படுபவரின் ‘குமாரராக’ இருப்பார்களென குறித்துக் காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவுக்கு, ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உறவு அவ்வாறிருப்பதாக ஒருபோதும் சொல்லப்பட்டில்லை. இயேசு அவர்களைக் குறித்து தம்முடைய ‘சகோதரர்’ என்றே பேசினார். (எபி. 2:11; மத். 12:50; 25:40) ஆனால் இயேசுவின் அந்தச் ‘சகோதரர்’ ‘தேவனுடைய புத்திரர்’ என்று குறிப்பிடப்படுகின்றனர். (கலா. 3:26; 4:6) (4) வெளிப்படுத்துதல் 22:12-ல், TEV இயேசு என்ற பெயரைச் சேர்த்திருக்கிறது, ஆகவே 13-ம் வசனத்தில் அல்பாவும் ஓமேகாவும் எனக் குறிப்பிடப்படுவது அவருக்குப் பயன்படுத்தப்படுவதுபோல் தோன்றச் செய்திருக்கிறது. ஆனால் கிரேக்கில் இயேசு என்ற பெயர் அங்கே காணப்படுகிறதில்லை, மற்ற மொழிபெயர்ப்புகள் அதைச் சேர்த்தில்லை. (5) வெளிப்படுத்துதல் 22:13-ல், அல்பாவும் ஓமேகாவும், “ஆதியும் அந்தமும்” எனவும் சொல்லப்படுகிறது, இந்தச் சொற்கள் வெளிப்படுத்துதல் 1:17, 18-ல் இயேசுவுக்குப் பயன்படுத்தியிருக்கின்றன. இவ்வாறே, “அப்போஸ்தலர்” என்றச் சொல் இயேசு கிறிஸ்துவுக்கும் அவரைப் பின்பற்றினோரில் சிலருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது அவர்கள் ஒரே ஆள் அல்லது சமமான படிநிலையிலுள்ளோரென நிரூபிக்கிறதில்லை அல்லவா? (எபி. 3:1) ஆகவே “அல்பாவும் ஓமேகாவும்” என்ற சிறப்புப் பெயர் சர்வவல்லமையுள்ள கடவுளாகிய, பிதாவுக்கே பொருந்துகிறது, குமாரனுக்கல்ல என்ற முடிவுக்கே அத்தாட்சி வழிநடத்துகிறது.
இரட்சகர்: கடவுளை இரட்சகராக வேத எழுத்துக்கள் திரும்பத்திரும்பக் குறிப்பிடுகின்றன. ஏசாயா 43:11-ல் கடவுள்: “என்னையல்லாமல் ரட்சகர் இல்லை,” என்றும் சொல்கிறார். இயேசுவும் இரட்சகர் என குறிப்பிடப்படுவதால், கடவுளும் இயேசுவும் ஒருவரேதானா? இல்லவேயில்லை. தீத்து 1:2, 4-ல் “நம்முடைய இரட்சகராகிய தேவன்” எனவும், பின்பு இருவரையுங் குறித்து “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற . . . இயேசு கிறிஸ்துவினாலும்,” என்று சொல்லியிருக்கிறது. ஆகையால் இருவரும் இரட்சகர்கள். யூதா 25-ல் (தி.மொ.) பின்வருமாறு சொல்லி உறவு காட்டப்பட்டிருக்கிறது: “கடவுளும் நமது இரட்சகருமாகிய அவருக்கே, நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய்.” (தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.) (அப்போஸ்தலர் 13:23-ஐயும் பாருங்கள்.) ஏசாயா 43:11-ல் பயன்படுத்தியுள்ள அதே எபிரெயச் சொல் (மொஹ்ஷீயா, “இரட்சகர்” அல்லது “விடுவிப்பவர்” என மொழிபெயர்த்துள்ளது) நியாயாதிபதிகள் 3:9-ல் இஸ்ரவேலில் ஒரு நியாயாதிபதியான ஒத்னியேலுக்குப் பயன்படுத்தியுள்ளது, இது நிச்சயமாகவே ஒத்னியேலை யெகோவாவாக்கிவிடவில்லை அல்லவா? 11-ம் வசனம் யெகோவாவே இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை, அல்லது விடுதலையை அளித்தவரென்று குறிக்கிறதென ஏசாயா 43:1-12-ஐ வாசிப்பது காட்டுகிறது; அந்த இரட்சிப்பு சுற்றியிருந்த தேசங்களின் எந்தக் கடவுட்களிடமிருந்தும் வரவில்லை.
கடவுள்: ஏசாயா 43:10-ல் யெகோவா பின்வருமாறு சொல்கிறார்: “எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை.” இது, இயேசு கிறிஸ்து “வல்லமையுள்ள தேவன்” என்று ஏசாயா 9:6-ல் தீர்க்கதரிசனமாய் அழைக்கப்பட்டிருப்பதால், இயேசு யெகோவாவாக இருக்கவேண்டுமென குறிக்கிறதா? இல்லை! என்று மறுபடியுமாக, சூழமைவு பதிலளிக்கிறது. விக்கிரகவணக்க புறஜாதி தேசங்கள் ஒன்றும் யெகோவாவுக்கு முன்னால் ஒரு கடவுளை உருவாக்கவில்லை, ஏனெனில், யெகோவாவுக்கு முன்னால் ஒருவரும் வாழ்ந்திருக்கவில்லை. எதிர்காலத்திலும், தீர்க்கதரிசனஞ்சொல்லக்கூடிய உண்மையான, உயிருள்ள எந்தக் கடவுளையும் அவர்கள் உருவாக்கப்போவதில்லை. (ஏசா. 46:9, 10) ஆனால் இது, தகுந்தமுறையில் ஒரு கடவுளென (a god) குறிப்பிடப்படும் எவரையும் யெகோவா உண்டாக்கி வாழ்ந்திருக்க ஒருபோதும் செய்யவில்லையென குறிக்கிறதில்லை. (சங். 82:1, 6; யோவன் 1:1, NW) ஏசாயா 9:6-ல் இயேசுவைக் குறிப்பிட்டிருப்பதுபோல், ஏசாயா 10:21-ல் யெகோவாவை “வல்லமையுள்ள தேவன்,” என குறிப்பிட்டிருக்கிறது; ஆனால் யெகோவா ஒருவர் மாத்திரமே “சர்வவல்லமையுள்ள தேவன்” என எப்பொழுதும் அழைக்கப்படுகிறார்.—ஆதி. 17:1.
ஒரு குறிப்பிட்ட சிறப்புப் பெயர் அல்லது வருணிப்பு சொற்றொடர் வேத எழுத்துக்களில் ஒன்றுக்குமேற்பட்ட இடத்தில் காணப்பட்டால், அது அந்த ஒரே ஆளையே எப்பொழுதும் குறிக்கவேண்டுமென்ற அவசரமான முடிவுக்கு ஒருபோதும் வரக்கூடாது. இத்தகைய சிந்திப்பு, நேபுகாத்நேச்சாரே இயேசு கிறிஸ்து, ஏனெனில் அவர்கள் இருவரும் “ராஜாதி ராஜா” என்று அழைக்கப்பட்டனர், என்ற முடிவுக்கும் (தானி. 2:37; வெளி. 17:14); இயேசுவின் சீஷர்கள் உண்மையில் இயேசு கிறிஸ்துவே, ஏனெனில் இருவரும் “உலகத்துக்கு வெளிச்சம்,” என அழைக்கப்பட்டனர், என்ற முடிவுக்கும் வரும்படி வழிநடத்தும். (மத். 5:14; யோவன் 8:12, தி.மொ.) சூழமைவையும் அதே சொல்லமைப்பு பைபிளில் காணப்படும் மற்றச் சந்தர்ப்பங்களையும் நாம் எப்பொழுதும் கவனிக்க வேண்டும்.
தெளிவாக யெகோவாவுக்குப் பயன்படுத்தியுள்ள எபிரெய வேத எழுத்துக்களிலிருந்தெடுத்தப் பகுதிகளை தேவாவியால் ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளர்கள் இயேசு கிறிஸ்துவுக்குப் பயன்படுத்துதல்
ஏசாயா 40:3-ல் யெகோவாவுக்கு முன்பாக வழியை ஆயத்தஞ்செய்வதே தெளிவாகப் பேசப்பட்டிருக்கையில், யோவன் 1:23-ல் ஏன் ஏசாயா 40:3-ஐ எடுத்துக் குறிப்பிட்டு, முழுக்காட்டுபவனான யோவன் இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துவதில் செய்ததற்குப் பொருத்திப் பயன்படுத்தியுள்ளது? ஏனெனில் இயேசு தம்முடைய பிதாவைப் பிரதிநிதித்துவம் செய்தார். அவர் தம்முடைய பிதாவின் நாமத்தில் வந்தார் மேலும் அவர் தம்முடைய பிதாவுக்குப் பிரியமானவைகளையே செய்ததனால் அவருடைய பிதா அவருடன் எப்பொழுதும் இருந்தாரென்ற உறுதி அவருக்கு இருந்தது.—யோவான் 5:43; 8:29.
சங்கீதம் 102:25-27 கடவுளை நோக்கிப் பேசப்படுவதாக அந்தச் சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கையில், எபிரெயர் 1:10-12 ஏன் அதை எடுத்து குமாரனுக்குப் பொருத்திப் பயன்படுத்துகிறது? ஏனெனில் சங்கீதக்காரன் அங்கே விவரித்துள்ள சிருஷ்டிப்பு செயல்களைக் கடவுள் இந்தக் குமாரன் மூலமே நடப்பித்தார். (கொலோசெயர் 1:15, 16; நீதிமொழிகள் 8:22, 27-30 ஆகிவற்றைப் பாருங்கள்.) எபிரெயர் 1:5b-ல் அந்த மேற்கோள் குறிப்பு 2 சாமுவேல் 7:14-லிருந்து எடுத்து கடவுளுடைய குமாரனுக்குப் பொருத்திப் பயன்படுத்தியிருப்பதைக் கவனிக்கவேண்டும். அந்த வசனம் சாலொமோனுக்கே முதல் பயன்படுத்தப்பட்டபோதிலும், பின்னால் அது இயேசு கிறிஸ்துவுக்குப் பயன்படுத்தப்பட்டது சாலொமோனும் இயேசுவும் ஒருவரே என்று குறிக்கிறதில்லை. இயேசு “சாலொமோனிலும் பெரியவர்,” சாலொமோனால் நிழலாக முன்குறிக்கப்பட்ட வேலையை நிறைவேற்றுகிறார்.—லூக்கா 11:31.
பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியை ஒன்றாய்க் குறிப்பிடும் வேதவசனங்கள்
மத்தேயு 28:19-ம் 2 கொரிந்தியர் 13:14-ம் இதற்கு உதாரணங்கள். பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியும் சரிசமமானவர்கள் அல்லது சரிசமநித்தியர் அல்லது எல்லாருமே கடவுளென இந்த இரண்டு வசனங்களில் எதுவும் சொல்கிறதில்லை. பக்கங்கள் 408-412-ல் ஏற்கெனவே கொடுத்துள்ள வேதப்பூர்வ அத்தாட்சி இத்தகைய எண்ணங்களை இந்த வசனங்களில் காண எத்தனிப்பதற்கெதிராக விவாதிக்கிறது.
மக்ளின்டாக் மற்றும் ஸ்டிராங் என்பவர்கள் இயற்றிய பைபிள், இறைமைநூல், மற்றும் சர்ச் சார்ந்த இலக்கியங்களின் பல்பொருட்களஞ்சியம், திரித்துவ கோட்பாட்டை ஆதரித்துப் பேசுகிறபோதிலும், மத்தேயு 28:18-20-ஐ குறித்து பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “எனினும், இந்த வசனம், அதைத் தனியே எடுக்க, குறிப்பிடப்பட்ட அந்த மூவரின் ஆள்தன்மையையோ, அல்லது அவர்களின் சமத்துவத்தையோ அல்லது தெய்வத்தன்மையையோ தீர்வாய் நிரூபிக்காது.” (1981 மறு அச்சடிப்பு, புத். X, பக். 552) இந்த மூவரையும் ஒன்றாய்க் குறிப்பிடும் மற்ற வசனங்களைக் குறித்து, அவற்றைத் தனியே எடுக்கையில், அவை திரித்துவத்தை நிரூபிக்கப் “போதியவையல்ல” என்று இந்தப் பல்பொருட்களஞ்சியம், ஒப்புக்கொள்கிறது. (1 தீமோத்தேயு 5:21-ஐ ஒப்பிடுங்கள், அங்கே கடவுளும் கிறிஸ்துவும் தூதர்களும் ஒன்றாய்க் குறிப்பிடப்படுகிறார்கள்.)
எபிரெய வேத எழுத்துக்களில் பெயர்ச்சொற்களின் பன்மை உருவம் கடவுளுக்குப் பயன்படுத்தியிருக்கும் வசனங்கள்
ஆதியாகமம் 1:1-ல் “தேவன்” என்ற இந்தச் சிறப்புப்பெயர், எபிரெயுவில் பன்மையாயுள்ள ஏலோஹிம் என்ற சொல்லிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரித்துவக் கோட்பாட்டாளர் இதைத் திரித்துவத்தின் ஓர் அறிகுறியென விளக்குகின்றனர். மேலும், “நம்முடைய தேவனாகிய [ஏலோஹிம்] கர்த்தர் ஒருவரே கர்த்தர்,” என்று உபாகமம் 6:4-ல் சொல்லியிருப்பது திரித்துவத்தின் உறுப்பினரின் ஒருமைப்பாட்டை மறைமுகமாய்க் குறிப்பிடுகிறதென்றும் அவர்கள் விளக்குகின்றனர்.
இங்கே எபிரெயுவில் இந்தப் பெயர்ச்சொல்லின் பன்மை அமைப்பு மகத்துவத்துக்குரிய அல்லது உயர்மேன்மைக்குரிய பன்மையாகும் (NAB, செய்ன்ட் ஜோசஃப் பதிப்பு, பைபிள் அகராதி, பக். 330; மேலும், நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா, 1967, புத். V, பக். 287-ஐ பாருங்கள்.) கடவுளுக்குள் பன்மை ஆட்களடங்கிய எண்ணத்தை இது கொடுக்கிறதில்லை. இதைப் போன்ற முறையில், நியாயாதிபதிகள் 16:23-ல் பொய்க் கடவுளாகிய தாகோனைக் குறிப்பிடுகையில், ஏலோஹிம் என்ற சிறப்புப் பெயரின் ஓர் அமைப்பு பயன்படுத்தியுள்ளது; அதோடு தொடர்ந்துவரும் வினைச்சொல் ஒருமையில் இருக்கிறது, இது வெறும் ஒரு கடவுளே குறிப்பிடப்படுகிறதெனக் காட்டுகிறது. ஆதியாகமம் 42:30-ல் யோசப்பு எகிப்தின் “அதிபதி” (அடொனே, உயர்மேன்மைக்குரிய பன்மை) என்று பேசப்பட்டிருக்கிறது.
‘மகத்துவத்துக்குரிய அல்லது உயர்மேன்மைக்குரிய பன்மை’ கிரேக்க மொழியில் இல்லை. ஆகையால், ஆதியாகமம் 1:1-ல் LXX-ன் மொழிபெயர்ப்பாளர்கள் ஹோ தியாஸ் (கடவுள், ஒருமை) என்பதை ஏலோஹிம் என்பதற்குச் சரிசமமாகப் பயன்படுத்தியுள்ளனர். இயேசு, உபாகமம் 6:4-ஐ எடுத்துக் குறிப்பிட்டுச் சொன்ன பதில் அடங்கியுள்ள மாற்கு 12:29-ல் இவ்வாறே கிரேக்க ஒருமையாகிய ஹோ தியாஸ் பயன்படுத்தியுள்ளது.
உபாகமம் 6:4-ல், கடவுளுடைய பெயரின் நான்கெழுத்துக்கள் எபிரெய மூலவாக்கியத்தில் இரு முறை உள்ளது, ஆகையால் “நம்முடைய கடவுளாகிய யெகோவா ஒரே யெகோவா,” (NW) என்றே மிகச் சரியாய் வாசிக்கப்படவேண்டும். இது கூறப்பட்ட அந்த இஸ்ரவேல் ஜனம் திரித்துவத்தில் நம்பிக்கை கொண்டில்லை. பாபிலோனியரும் எகிப்தியரும் திரித்துவங்களான கடவுட்களை வணங்கினர். ஆனால் யெகோவா வேறுபட்டவரென இஸ்ரவேலுக்குத் தெளிவாக்கப்பட்டது.
பயன்படுத்தும் மொழிபெயர்ப்பைச் சார்ந்து, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளுக்கு வரக்கூடிய வசனங்கள்
ஒரு பகுதியை ஒன்றுக்கு மேற்பட்ட முறையில், இலக்கணரீதியாய் மொழிபெயர்க்க முடியுமென்றால், எது திருத்தமான மொழிபெயர்ப்பு? பைபிளின் மற்ற எல்லாப் பாகத்துடனும் ஒத்திருப்பதேயாகும். ஒருவன் பைபிளின் மற்றப் பாகங்களைக் கவனியாமல்விட்டு, தன் விருப்பத்துக்கு உகந்த முறையில் மொழிபெயர்த்துள்ள ஒரு வசனத்தைச் சுற்றித் தன் நம்பிக்கையைக் கட்டியெழுப்பினால், அவனுடைய நம்பிக்கை உண்மையில் பிரதிபலிப்பது கடவுளுடைய வார்த்தை அல்ல, அவனுடைய சொந்த மற்றும் ஒருவேளை மற்றொரு அபூரண மனிதனுடைய எண்ணங்களேயாகும்.
UV-ல் வாசிக்கிறபடி: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.” (KJ, Dy, JB, NAB இதைப்போன்ற சொல்லமைப்பைப் பயன்படுத்துகின்றன.) எனினும், NW-ல் பின்வருமாறு வாசிக்கப்படுகிறது: “ஆதியில் அந்த வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை கடவுளுடன் [God] இருந்தது, அந்த வார்த்தை ஒரு கடவுளாயிருந்தது [a god]. இவர் ஆதியில் கடவுளுடன் இருந்தார்.”
யோவான் 1:1, 2-ன் எந்த மொழிபெயர்ப்பு சூழமைவுடன் ஒத்திருக்கிறது? யோவன் 1:18-ல் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.” 14-ம் வசனத்தில்: “அந்த வார்த்தை மாம்சமாகி, . . . நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்,” எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. மேலும் ஆதியில் அவர் “தேவனோடு” இருந்தாரென 1-ம் 2-ம் வசனங்களில் சொல்லியிருக்கிறது. எவராவது ஒருவரோடும் அதே சமயத்தில் அந்த ஆள் ஆகவும் இருக்க முடியுமா? யோவன் 17:3-ல் இயேசு பிதாவை ‘ஒரே மெய்த் தேவன்’ என அழைக்கிறார்; ஆகவே இயேசு “ஒரு கடவுளாக” வெறுமென தம்முடைய பிதாவின் தெய்வீகப் பண்புகளைப் பிரதிபலிக்கிறார்.—எபி. 1:3.
“ஒரு கடவுள்” (a god) என்ற மொழிபெயர்ப்பு கிரேக்க இலக்கண விதிகளோடு ஒத்திருக்கிறதா? அந்தக் கிரேக்க மூலவாக்கியம் “அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்றே மொழிபெயர்க்கவேண்டுமென சில குறிப்புரை நூல்கள் வற்புறுத்தி விவாதிக்கின்றன. ஆனால் எல்லாம் அதை ஒப்புக்கொள்கிறதில்லை. “பண்படிப்படையான சார்படையற்ற பயனிலைப் பெயர்ச்சொற்கள்: மாற்கு 15:39 மற்றும் யோவன் 1:1,” என்ற தன் கட்டுரையில், ஃபிலிப் B. ஹார்னர், யோவன் 1:1-ல் இருப்பதைப்போன்ற அத்தகைய தனி எழுவாய் பயனிலையுடைய வாக்கிய உறுப்புகள், “வினைச்சொல்லுக்கு முன்னால் சார்படையற்றப் பயனிலை வருகையில், முதன்மையாய் அர்த்தத்தில் பண்படிப்படையானவையாயிருக்கின்றன. அந்த லோகாஸ், தியாஸின் பண்புடையவரென அவை சுட்டிக்காட்டுகின்றன,” என்று சொன்னார். அவர் ஆலோசனைக் கூறுவதாவது: “அந்த வாக்கிய உறுப்பு, ‘அந்த வார்த்தை கடவுளைப்போன்ற அதே பண்புடையவராயிருந்தார்,’ என ஒருவேளை மொழிபெயர்க்கப்படலாம்.” (பைபிள் சம்பந்த இலக்கியங்களின் பத்திரிகை, 1973, பக். 85, 87) இவ்வாறு, இந்த வசனத்தில், தியாஸ் என்ற சொல் இரண்டாவது தடவை வருகையில் திட்டமான சுட்டிடைச்சொல் (ஹோ) சேர்க்கப்பட்டிராததும் கிரேக்கிலுள்ள இந்த வாக்கியத்தில் வினைச்சொல்லுக்கு முன்னால் வைக்கப்பட்டிருப்பதும் தனிக் கவனிப்புக்குரியது. கவனத்தைக் கவருவதாய், யோவன் 1:1-ஐ “அந்த வார்த்தை தேவனாயிருந்தது,” என்று மொழிபெயர்ப்பதை வற்புறுத்தும் மொழிபெயர்ப்பாளர்கள், வினைச்சொல்லுக்கு முன்னால் ஒருமை சார்படையற்ற பயனிலைப் பெயர்ச்சொல் வரும் மற்றப் பகுதிகளைத் தாங்கள் மொழிபெயர்ப்பதில் பொதுநிலைச் சுட்டப் (ஒரு) பயன்படுத்தத் தயங்குகிறதில்லை. இவ்வாறு யோவன் 6:70-ல், JB மற்றும் KJ ஆகிய இரண்டும் யூதாஸ் ஸ்கரியோத்தை “ஒரு பிசாசு” என்று, குறிப்பிடுகின்றன, மேலும் யோவான் 9:17-ல் இயேசுவை “ஒரு தீர்க்கதரிசி” என்று விவரிக்கின்றன.
ஜான் L. மக்கென்ஸி, S.J., தன் பைபிள் அகராதியில் பின்வருமாறு சொல்கிறார்: “யோ[வான்] 1:1 ‘அந்த வார்த்தை அந்தக் கடவுளுடன் [=பிதாவுடன்] இருந்தார், அந்த வார்த்தை தெய்வீக ஆளாயிருந்தார்,’ என்றே நுட்பகண்டிப்பாய் மொழிபெயர்க்கப்படவேண்டும்.”—(அடைப்புக்குறிகள் அவருடையவை. கொள்கை கெடுதியற்றதென்ற உறுதிசான்றோடும் அச்சிடுவதற்குரிய அரசியல் இசைவுரிமையுடனும் பிரசுரிக்கப்பட்டது.) (நியு யார்க், 1965), பக். 317.
மேல் சொல்லப்பட்டதற்குப் பொருந்த, AT பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கிறது: “அந்த வார்த்தை தெய்வீகமாயிருந்தது”; Mo, “அந்த லோகாஸ்” தெய்வீகமாயிருந்தது; NTIV, “அந்த வார்த்தை ஒரு கடவுளாயிருந்தது.” லுட்விக் திம்மி என்பவர் தன்னுடைய ஜெர்மன் மொழிபெயர்ப்பில் இதைப் பின்வருமாறு பெயர்த்திருக்கிறார்: “அந்த வார்த்தை ஒருவகையான கடவுளாயிருந்தார்.” (இயேசு கிறிஸ்துவான) அந்த வார்த்தையை “ஒரு கடவுள்” எனக் குறிப்பிடுவது வேத எழுத்துக்களின் மற்ற எல்லாப் பாகத்திலும் இந்தப் பதத்தின் உபயோகத்தோடு ஒத்திருக்கிறது. உதாரணமாக, சங்கீதம் 82:1-6-ல் இஸ்ரவேலில் மனித நியாயாதிபதிகள் “தேவர்கள்” [எபிரெயுவில், எலோஹிம்; கிரேக்கில், தியாய், யோவன் 10:34-ல்] என்று குறிப்பிடப்பட்டனர், ஏனெனில் அவர்கள் யெகோவாவின் பிரதிநிதிகளாயிருந்தார்கள் மேலும் அவருடைய சட்டத்தைப் பேசவேண்டியிருந்தது.
மேலும் NW பிற்சேர்க்கை, 1984 ஓர மற்றும் அடிக்குறிப்புகளுள்ள பதிப்பு, பக். 1579-ஐ பாருங்கள்.
UV வாசிப்பதாவது: “இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் [கிரேக்கில், இகோ ஈமீ] என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (NE, KJ, TEV, JB, NAB ஆகிய இவையெல்லாவற்றிலும் “இருக்கிறேன்” என்றிருக்கிறது. ஒரு சிறப்புப் பெயர் என்ற எண்ணத்தை இதற்குத் தரும்படி இந்த மொழிபெயர்ப்புகளில் சில பெரிய எழுத்துக்களையும் இதற்குப் பயன்படுத்துகின்றன. இவ்வாறு யாத்திராகமம் 3:14-உடன் இந்தச் சொற்றொடரை இணைக்க இவை முயற்சி செய்கின்றன, அங்கே, அவற்றில் மொழிபெயர்த்துள்ளபடி கடவுள் தம்மை “இருக்கிறேன்” என்ற சிறப்புப் பெயரால் குறிப்பிடுகிறார்.) எனினும், NW-ல் யோவன் 8:58-ன் பிற்பகுதி பின்வருமாறு கொடுத்திருக்கிறது: “ஆபிரகாம் உண்டாயிருப்பதற்கு முன்பே, நான் இருந்தேன்.” (AT, Mo, CBW, மற்றும் SE ஆகியவற்றின் மொழிநடையில் இதே எண்ணம் குறிப்பிடப்பட்டுள்ளது.)
எந்த மொழிபெயர்ப்பு சூழுமைவுடன் ஒத்திருக்கிறது? (57-ம் வசனத்தில்) யூதர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு பதிலளித்துக்கொண்டிருந்தார், அது வயதைப் பற்றியது யாரென அடையாளங்காட்டுவதைப் பற்றியதல்ல. இயேசுவின் பதில் நியாயப்படியே அவருடைய வயது, அவர் வாழ்ந்திருந்த கால நீடிப்பு சம்பந்தப்பட்டதாக இருந்தது. கவனத்தைக் கவருவதாய், இகோ ஈமீ என்பதை பரிசுத்த ஆவிக்குச் சிறப்புப் பெயராகப் பொருத்திப் பயன்படுத்துவதற்கு எந்த முயற்சியும் ஒருபோதும் எடுக்கப்படவில்லை.
A. T. ராபர்ட்சன் இயற்றிய சரித்திர ஆராய்ச்சி துணைகொண்டு கிரேக்க புதிய ஏற்பாட்டின் ஓர் இலக்கணம் என்பதில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “இந்த வினைச்சொல் [ஈமீ] . . . மற்ற எந்த வினைச்சொல்லையும்போல், [இகோ ஈமீ] என்பதில் இருப்பதைப்போல், வாழ்ந்திருப்பதை பயனிலையாகச் சிலசமயங்களில் குறிப்பிடுகிறது (யோ. 8:58).”—நாஷ்வில், டென்.; 1934, பக். 394.
மேலும் NW பிற்சேர்க்கை, 1984 துணைக் குறிப்புகளுள்ள பதிப்பு, பக். 1582, 1583-ஐ பாருங்கள்.
கத். வுல். வாசிப்பதாவது: “உங்கள் மட்டிலும் சர்வேசுரன் தம்முடைய இரத்தத்தினால் தமக்குச் சொந்தமாக்கின தமது திருச்சபையை ஆளுவதற்கு இஸ்பிரீத்துசாந்துவானவர் உங்களை மேற்றிராணிமார்களாக ஸ்தபித்து (ஒப்பித்த) சர்வ மந்தையின் மட்டிலும் எச்சரிக்கையாயிருங்கள்.” (UN, KJ, Dy, NAB இதைப்போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றன.) எனினும், NW-ல் முன் பகுதி பின்வருமாறு வாசிக்கப்படுகிறது: “தம்முடைய சொந்தமானவரின் [குமாரனின்] இரத்தம்.” (TEV-ல் இதைப்போன்றிருக்கிறது. 1953-ல் அச்சடித்த RS-ல் “தம்முடைய சொந்த இரத்தத்தால்,” என்று இருக்கிறபோதிலும், அதன் 1971-ன் பதிப்பில் “தம்முடைய சொந்தக் குமாரனின் இரத்தத்தால்,” என்றிருக்கிறது. Ro மற்றும் Da-ல் வெறுமென “தம்முடைய சொந்த இரத்தம்,” என வாசிக்கப்படுகிறது.)
எந்த மொழிபெயர்ப்பு(கள்) 1 யோவான் 1:7 உடன் ஒத்திருக்கிறது? அங்கே சொல்லியிருப்பதாவது: “அவருடைய [கடவுளுடைய] குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (வெளிப்படுத்துதல் 1:4-6-ஐயும் பாருங்கள்.) யோவன் 3:16-ல் கூறப்பட்டுள்ளபடி, நாம் ஜீவனடையும்படிக்கு, கடவுள் தம்முடைய ஒரே-பேறான குமாரனை அனுப்பினாரா, அல்லது அவர்தாமே மனிதனாக வந்தாரா? கடவுளுடையதல்ல, அவருடைய குமாரனின் இரத்தமே ஊற்றப்பட்டது.
மேலும் NW பிற்சேர்க்கை, 1984 ஓர மற்றும் அடிக்குறிப்புகளுள்ள பதிப்பு, பக். 1580-ஐ பாருங்கள்.
கத். வுல். வாசிப்பதாவது: “பிதாப்பிதாக்களும் அவர்களுடைய (பிதாக்களுமே). கிறீஸ்துநாதரும் மாம்ச ஐக்கியத்தின்படி அவர்களிடத்திலிருந்து வந்தவர். அவரே எல்லாத்துக்கும் மேலாக என்றென்றைக்கும் ஸ்துதிக்கப்பட்டிருக்கிற கடவுள். ஆமென்.” (UV, KJ, Dy-லும் அவ்வாறே இருக்கிறது.) எனினும் NW-ல் இந்த வசனத்தின் பிற்பகுதி பின்வருமாறு வாசிக்கப்படுகிறது: “அவர்களிலிருந்து மாம்சப்படி கிறிஸ்து தோன்றினார்: கடவுள், எல்லாவற்றிற்கும் மேலானவர், என்றென்றும் துதிக்கப்படுவாராக. ஆமென்.” (RS, NE, TEV, NAB, Mo, தி.மொ. (அடிக்குறிப்பு) யாவும் NW-ல் இருப்பதைப்போன்ற சொல்லமைப்பைப் பயன்படுத்துகின்றன.)
கிறிஸ்து “எல்லாவற்றிற்கும் மேலானவர்” என்றும் ஆகையால் அவர் கடவுள் எனவும் இந்த வசனம் சொல்லுகிறதா? அல்லது அது கடவுளையும் கிறிஸ்துவையும் வெவ்வேறு தனி ஆட்களாகக் குறிப்பிட்டு கடவுள் “எல்லாவற்றிற்கும் மேலானவர்” என்று சொல்லுகிறதா? ரோமர் 9:5-ன் எந்த மொழிபெயர்ப்பு ரோமர் 15:5, 6-உடன் ஒத்திருக்கிறது? இது கடவுளைக் கிறிஸ்து இயேசுவிலிருந்து முதல் தனிப்படுத்துகிறது பின்பு “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தும்படி,” வாசகரை ஊக்குவிக்கிறது. (மேலும் 2 கொரிந்தியர் 1:3-ஐயும் எபேசியர் 1:3-ஐயும் பாருங்கள்.) ரோமர் 9-ம் அதிகாரத்தில் பின்தொடர்ந்து வருவதைக் கவனியுங்கள். வசனங்கள் 6-13-ல் கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றம் மாம்சத்தின்படியான பரம்பரை சுதந்தரிப்பின்பேரில் அல்ல, கடவுளுடைய சித்தத்தின்பேரிலேயே சார்ந்திருக்கிறதென காட்டியிருக்கிறது. வசனங்கள் 14-18-ல் கடவுளே எல்லாருக்கும் மேலானவர் என்ற உண்மையை விளக்கமாகத் தெரியச் செய்யும்படி, யாத்திராகமம் 9:16-ல் பதிவுசெய்துள்ளபடி, பார்வோனுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது, வசனங்கள் 19-24-ல் கடவுளுடைய உன்னதத்துவம், ஒரு குயவனையும் அவன் உண்டாக்கும் மண்பாண்டங்களையும் பற்றிய உவமையால் மேலும் விளக்கிக் காட்டப்படுகிறது. அப்படியானால் 5-ம் வசனத்தில்: “கடவுள், எல்லாவற்றிற்கும் மேலானவர், என்றென்றும் துதிக்கப்படுவாராக. ஆமென்,” என்ற கூற்று எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது!—NW.
புதிய ஏற்பாட்டு இறைமையியலுக்குரிய புதிய சர்வதேச அகராதி என்பதில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “ரோமர் 9:5 விவாதிக்கப்படுகிறது. . . . இந்தக் கூற்றைக் கிறிஸ்துவுக்குக் குறிப்பிடுவது எளிதாயும், மொழிநடைப்படி முற்றிலும் சாத்தியமாகவும் இருக்கும். அப்பொழுது இந்த வசனம், ‘எல்லாவற்றிற்கும் மேல் கடவுளாயிருக்கிற கிறிஸ்து, என்றென்றும் துதிக்கப்படுவாராக. ஆமென்,’ என வாசிக்கப்படும். அவ்வாறிருந்தாலுங்கூட, கிறிஸ்து கடவுளுடன் முழுமையாகச் சரிநிகராக்கப்படுவதில்லை, தெய்வீகப் பண்புடைய ஓர் ஆளென மாத்திரமே விவரிக்கப்படுவார், ஏனெனில் தியாஸ் என்ற இந்தச் சொல் சுட்டிடைச்சொல்லைக் கொண்டில்லை. . . . அந்தக் கூற்று கடவுளை நோக்கிக் கூறப்படும் புகழ்கூற்றென்பதே அதிக உண்மையாயிருக்கக்கூடிய விளக்கமாகும்.”—(கிராண்ட் ராப்பிட்ஸ், மிச்.; 1976), ஜெர்மன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது, புத். 2, பக். 80.
மேலும் NW பிற்சேர்க்கை, 1984 துணைக் குறிப்புகளுள்ள பதிப்பு, பக். 1580, 1581-ஐ பாருங்கள்.
UV வாசிப்பதாவது: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், . . . ” (Dy அதே சொற்களைக் கொண்டுள்ளது. JB-ல்: “அவர் கடவுளுடன் தம்முடைய சமத்துவத்தைப் பற்றிக்கொண்டிருக்கவில்லை,” என்றிருக்கிறது.) எனினும் NW-ல் இந்தப் பகுதியின் பிற்பட்ட பாகம் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: “அவர், கடவுளுடைய ரூபத்தில், இருந்தபோதிலும், அதை அதாவது, தான் கடவுளுக்குச் சமமாயிருக்கவேண்டுமென்பதை அபகரித்துக்கொள்ளும்படி [கிரேக்கில், ஹர்பக்மன்] எண்ணமிடவில்லை.” (RS, NE, TEV, NAB ஆகியவற்றில் இதே எண்ணமே கொடுக்கப்பட்டுள்ளது.)
எந்த எண்ணம் சூழமைவுடன் ஒத்திருக்கிறது? இங்கே விவாதிக்கப்படுகிற காரியத்தில் கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றும்படி 5-ம் வசனம் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறுகிறது. “தேவனுக்குச் சமமாயிருப்பதை” ‘கொள்ளையாடுவதாக அல்ல,’ ஆனால் தங்கள் உரிமையென கருதும்படி அவர்களை ஊக்கப்படுத்தவேண்டுமா? நிச்சயமாகவே இல்லை! எனினும், “தான் கடவுளுக்குச் சமமாயிருக்கவேண்டுமென்பதை அபகரித்துக்கொள்ளும்படி எண்ணமிடாத”வருடைய (NW) மாதிரியை அவர்கள் பின்பற்றலாம். (ஆதியாகமம் 3:5-ஐ ஒப்பிடுங்கள்.) இத்தகைய மொழிபெயர்ப்பு இயேசு கிறிஸ்துதாமே பின்வருமாறு சொன்னதோடு ஒத்திருக்கிறது: “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.”—யோவான் 14:28.
தி எக்ஸ்பொஸிட்டர்ஸ் கிரீக் டெஸ்டமென்ட் என்பதில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “[ஹர்பாஸோ] அல்லது அதன் அடிப்படையாகத் தோன்றிய மற்றச் சொற்கள் ஏதாயினும் [ஹர்பக்மன் உட்பட] ‘உடைமையில் பற்றிவைத்திருக்கும்,’ ‘விடாது வைத்திருக்கும்’ கருத்தைக் கொண்டுள்ள எந்தப் பகுதியையும் நாங்கள் காண்கிறதில்லை. அது ‘அபகரிப்பது,’ ‘வன்முறையாய்ப் பிடுங்குவது’ என்றே மாறாமல் பொருள்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறு ‘பறித்துக்கொள்’ என்ற உண்மையான கருத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ள ‘உறுதியாகப் பிடி’ என்பதற்குள் நழுவிச் செல்வது அனுமதிக்கக்கூடியதல்ல.”—(கிராண்ட் ராப்பிட்ஸ், மிச்.; 1967), W. ராபர்ட்ஸன் நிக்கல் என்பவர் பதிப்பித்தது, புத். III, பக். 436, 437.
UV வாசிப்பதாவது: “தேவத்துவத்தின் [கிரேக்கில், தியோட்டிடாஸ்] பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் [கிறிஸ்துவில்] வாசமாயிருக்கிறது.” (இதைப்போன்ற எண்ணம் NE, RS, JB, NAB, Dy ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் NW-ல்: “அவரில்தான் தெய்வீக பண்பின் எல்லா நிறைவும் சரீரப்பிரகாரமாய் தங்கியிருக்கிறது.” (AT, We, மற்றும் CKW ஆகியவற்றில் “தெய்வத்துவம்,” என்பதற்குப் பதிலாக “கடவுளுடைய இயல்பு,” என்றிருக்கிறது. 2 பேதுரு 1:4-ஐ ஒப்பிடுங்கள்.)
கொலோசெயர் 2:9-க்கு எல்லாரும் ஒரே பொருள்விளக்கம் தருகிறதில்லையென ஒப்புக்கொள்ளவேண்டியதே. ஆனால் தேவாவியால் ஏவப்பட்ட கொலாசெயர் நிருபத்தின் மீதி பாகத்தோடு எது ஒத்திருக்கிறது? கிறிஸ்து, கடவுளாக, திரித்துவத்தின் பாகமாக இருப்பதால் தம்முடையதாயுள்ள ஒன்றைத் தம்மில் கொண்டிருந்தாரா? அல்லது அவரில் தங்கியிருக்கும் “அந்த நிறைவு” வேறு ஒருவர் தீர்மானித்ததால் அவருடையதாயிற்றா? எல்லா நிறைவும் கிறிஸ்துவில் தங்கியிருந்தது ஏனெனில் அவ்வாறு இருப்பது “பிதாவுக்குப் பிரியமாயிருந்தது” என்று கொலாசெயர் 1:19, 20-ல் (KJ, Dy) சொல்லியிருக்கிறது. NE-ல் “கடவுளுடைய சொந்தத் தெரிவினால்,” என்று சொல்லியிருக்கிறது.
கொலோசெயர் 2:9-க்கு அடுத்துள்ள சூழமைவைக் கவனியுங்கள்: 8-ம் வசனத்தில், தத்துவஞானத்தையும் மனிதப் பாரம்பரியங்களையும் சிபாரிசு செய்வோரால் தவறாக வழிநடத்தப்படுவதற்கு எதிராக வாசகர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும் கிறிஸ்துவுக்குள் “ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது,” என்று சொல்லப்பட்டு “அவருக்குள் நடந்துகொண்டு,” “அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், . . . விசுவாசத்தில் உறுதிப்பட்டு” இருக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். (3, 6, 7-ம் வசனங்கள்) மனித தத்துவஞானத்தைத் தொடங்கிவைப்பவர்களிலோ போதிக்கிறவர்களிலோ அல்ல, அவரிலேயே ஒரு குறிப்பிட்ட மதிப்புமிகுந்த “நிறைவு” தங்கியிருக்கிறது. கிறிஸ்துவிலிருந்த அந்த “நிறைவு” கிறிஸ்துவைக் கடவுளாகும்படி செய்துவிட்டதென அப்போஸ்தலன் பவுல் சொல்கிறானா? கொலாசெயர் 3:1-ன்படி அவ்வாறு சொல்லவில்லை, அதில் கிறிஸ்து “தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிரு”ப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.—KJ, Dy, TEV, NAB-ல் பாருங்கள்.
லிட்டல் மற்றும் ஸ்கட் இயற்றிய கிரேக்க-ஆங்கில அகராதியின்படி, தியோட்டெஸ் என்பது (எழுவாய்ச் சொல்லமைப்பு, இதிலிருந்து தியோட்டிடாஸ் என்பது வருவிக்கப்பட்டது) “தெய்வத்தன்மை, தெய்வீக இயல்பு,” என்று பொருள்கொள்கிறது. (ஆக்ஸ்ஃபர்ட், 1968, பக். 792) உண்மையில் “தெய்வத்தன்மை”யிலிருப்பது அல்லது “தெய்வீக இயல்பில்” இருப்பது கடவுளுடைய குமாரனான இயேசுவைப் பிதாவுடன் சரிசமமானவராகவும் சரிசமநித்தியராகவும் செய்கிறதில்லை. எவ்வாறு, எல்லா மனிதரும் “மனிதத்தன்மையில்” அல்லது “மனித இயல்பில்” பங்குடையோராயிருப்பது அவர்களைச் சரிசமமானவர்களாக அல்லது எல்லாரையும் ஒரே வயதானவர்களாகச் செய்துவிடுகிறதில்லையோ அவ்வாறே இதுவும் இருக்கிறது.
UV வாசிப்பதாவது: “நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி.” (NE, TEV, JB ஆகியவற்றில் இதைப்போன்ற சொல்லமைப்பு காணப்படுகிறது.) எனினும், NW-ல் பின்வருமாறு இருக்கிறது: “சந்தோஷமான நம்பிக்கைக்காகவும் மகா கடவுளின் மற்றும் நம்முடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தலுக்காகவும் நாம் காத்திருக்கையில்.” (NAB-யிலும் இதைப்போன்று மொழிபெயர்த்திருக்கிறது.)
எந்த மொழிபெயர்ப்பு தீத்து 1:2-உடன் ஒத்திருக்கிறது? அங்கே “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும்,” எனக் குறிப்பிட்டிருக்கிறது. வேத எழுத்துக்கள் கடவுளையும் இரட்சகராகக் குறிப்பிடுகிறபோதிலும், இந்த வசனம் அவரையும், கடவுள் யார்மூலம் இரட்சிப்பை ஏற்பாடு செய்கிறாரோ அவரான கிறிஸ்து இயேசுவையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறது.
கிறிஸ்து கடவுளும் இரட்சகருமென்று தீத்து 2:13 குறிப்பிடுகிறதென சிலர் விவாதிக்கின்றனர். கவனத்தைக் கவருவதாய், RS, NE, TEV, JB ஆகியவற்றில் இந்தக் கருத்தை அனுமதிப்பதுபோல்தோன்றும் முறையில் தீத்து 2:13-ஐ மொழிபெயர்த்திருக்கின்றனர், ஆனால் 2 தெசலோனிக்கேயர் 1:12-ஐ அவர்கள் மொழிபெயர்த்ததில் இதே விதியை அவர்கள் பின்பற்றியில்லை. தி கிரீக் டெஸ்டமென்ட் என்பதில் ஹென்ரி ஆல்ஃபர்ட் பின்வருமாறு கூறுகிறார்: “[தீத்து 2:13-ல், கடவுளையும் கிறிஸ்துவையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் ஒரு மொழிபெயர்ப்பு] அந்த வாக்கியத்தின் எல்லா இலக்கண தேவைகளையும் திருப்திசெய்கிறதென நான் ஒப்புக்கொள்வேன்: அமைப்பு முறையிலும் சூழ்நிலைப் பொருத்தத்தின்படியும் அது அதிக சரியாயிருக்கக் கூடியது, அப்போஸ்தலனின் எழுத்துநடை பாங்குக்கும் அதிகம் ஒத்திருக்கிறது.”—(பாஸ்டன், 1877), புத். III, பக். 421.
மேலும் NW பிற்சேர்க்கை, 1984 துணைக் குறிப்புகளுள்ள பதிப்பு, பக். 1581, 1582-ஐ பாருங்கள்.
UV வாசிப்பதாவது: “குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. . . . என்றும் சொல்லியிருக்கிறது.” (KJ, NE, TEV, Dy, JB, NAB இதைப்போன்று மொழிபெயர்த்திருக்கின்றன.) எனினும், NW-ல்: “ஆனால் குமாரனைக் குறித்தோ: ‘கடவுளே என்றென்றும் உம்முடைய சிங்காசனம்,’” என மொழிபெயர்த்திருக்கிறது. (AT, Mo, TC, By ஆகியவற்றிலும் இதே எண்ணமே உள்ளது.)
எந்த மொழிபெயர்ப்பு சூழமைவோடு பொருத்தமாயுள்ளது? கடவுள் பேசுகிறாரென முந்தின வசனங்கள் சொல்கின்றன, அவரை நோக்கிப் பேசப்படுவதாகச் சொல்லியில்லை; மேலும் பின்தொடரும் வசனம் “தேவனே, உம்முடைய தேவன்,” என்ற சொற்களைப் பயன்படுத்துகிறது, இது அழைத்துப் பேசப்படுகிறவர் மகா உன்னத கடவுள் அல்ல ஆனால் அந்தக் கடவுளை வணங்குகிற ஒருவரே எனக் காட்டுகிறது. எபிரெயர் 1:8-ல் சங்கீதம் 45:6-லிருந்து எடுத்துக் குறிப்பிட்டுள்ளது, அது முதன்முதல் இஸ்ரவேலின் ஒரு மனித அரசனை நோக்கிப் பேசப்பட்டது. இந்தச் சங்கீதமெழுதின பைபிள் எழுத்தாளன் அந்த மனித அரசனைச் சர்வவல்லமையுள்ள கடவுளென்று எண்ணவில்லையென்பதில் சந்தேகமில்லை. அதற்கு மாறாக, சங்கீதம் 45:6-ல், RS “உம்முடைய தெய்வீகச் சிங்காசனம்,” என மொழிபெயர்த்திருக்கிறது. (NE-ல், “உம்முடைய சிங்காசனம் கடவுளுடைய சிங்காசனத்தைப்போல் உள்ளது,” என்றுள்ளது. JP [7-ம் வசனம்]: “கடவுளால் கொடுக்கப்பட்ட உம்முடைய சிங்காசனம்.”) அநேகமாய் சங்கீதம் 45-ல் முதன்முதல் அழைத்துப் பேசப்பட்ட அரசனான சாலொமோன், “யெகோவாவின் சிங்காசனத்தின்மீது” வீற்றிருந்தானென சொல்லப்பட்டது. (1 நாளா. 29:23, NW) கிறிஸ்துவின் அரசபதவிக்கு கடவுளே “சிங்காசனம்,” அல்லது மூலகாரணரும் ஆதரித்துத் தாங்குபவரும் என்ற இந்த உண்மைக்குப் பொருந்த, தானியேல் 7:13, 14-ம் லூக்கா 1:32-ம் கடவுள் அத்தகைய அதிகாரத்தை அவருக்கு அளிக்கிறாரெனக் காட்டுகின்றன.
எபிரெயர் 1:8, 9 சங்கீதம் 45:6, 7-லிருந்து எடுத்துக் குறிப்பிடுகிறது, இதைக் குறித்து பைபிள் அறிவாளர் B. F. உவெஸ்ட்காட் பின்வருமாறு கூறுகிறார்: “LXX. இரண்டு மொழிபெயர்ப்புகளை ஒப்புக்கொள்கிறது: [ஹோ தியாஸ்] என்பது இரண்டு சந்தர்ப்பங்களிலும் (உம்முடைய சிங்காசனம், கடவுளே, . . . ஆகையால், கடவுளே, உம்முடைய கடவுள் . . . ) விளி வேற்றுமையாகக் கருதப்படலாம். அல்லது முதற் சந்தர்ப்பத்தில் (கடவுளே உம்முடைய சிங்காசனம், அல்லது உம்முடைய சிங்காசனம் கடவுளே . . . ) எழுவாயாக (அல்லது பயனிலையாக) ஏற்கப்படலாம், இரண்டாம் சந்தர்ப்பத்தில் (ஆகையால் கடவுளே, உம்முடைய கடவுள்தாமே . . . ) [ஹோ தியாஸ்ஸோ] என்பதற்கு நேரியைவிலும் ஏற்கலாம். . . . மூலமுதலில் [எலோஹிம்] அரசனை அழைத்துப் பேசப்படுவது சற்றும் சாத்தியமாயிராது. ஆகையால் இயல்பான முடிவானது [ஹோ தியாஸ்] LXX-ல் விளிவேற்றுமையில் இருக்கிறதென்ற நம்பிக்கைக்கு எதிராயுள்ளது. இவ்வாறு முழுமையில் முதல் வாக்கிய உறுப்பில்: கடவுளே உம்முடைய சிங்காசனம் (அல்லது, உம்முடைய சிங்காசனம் கடவுளே) என்ற மொழிபெயர்ப்பையே ஏற்பது மேம்பட்டதெனத் தோன்றுகிறது, அதாவது, ‘உம்முடைய ராஜ்யம், அசைக்கமுடியாத கற்பாறையாகிய, கடவுளின்மேல் ஆதாரங்கொண்டுள்ளது.’ என்பதாகும்.”—எபிரெயருக்கு எழுதின நிருபம் (லண்டன், 1889), பக்கங்கள் 25, 26.
UV வாசிப்பதாவது: “[பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.” (இந்தத் திரித்துவப் பகுதியை Dy-ம் சேர்த்திருக்கிறது.) எனினும், “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று,” என்ற இவ்வார்த்தைகள் NW-ல் சேர்த்தில்லை. (RS, NE, TEV, JB, NAB ஆகியவையும் இந்தத் திரித்துவ பகுதியைச் சேர்க்காமல் விட்டிருக்கின்றன.)
இந்தத் திரித்துவ பகுதியைக் குறித்து, மூலவாக்கிய திறனாய்வாளர் F. H. A. ஸ்கிரிவினர் பின்வருமாறு எழுதினார்: விவாதிக்கப்பட்ட இந்த வார்த்தைகள் புனித யோவனால் எழுதப்படவில்லையென்ற எங்கள் உறுதியான நம்பிக்கையை அறிவிக்க நாங்கள் தயங்கவேண்டியதில்லை: அவை முதன்முதல் ஆப்பிரிக்காவிலிருந்த லத்தீன் பிரதிகளுக்குள் புத்தக பக்க ஓரத்திலிருந்து கொண்டுவரப்பட்டன, அங்கே அவை வச. 8-ன் பேரில் பக்தியுள்ள ஆர்த்தடாக்ஸ் ஓர விளக்கக் குறிப்பாக குறித்துவைக்கப்பட்டிருந்தன: அந்த லத்தீனிலிருந்து அவை இரண்டு அல்லது மூன்று பிற்பட்ட கிரேக்கக் கையெழுத்துப்பிரதிகளுக்குள் மெல்ல நுழைந்தன, அங்கிருந்து அச்சடிக்கப்பட்ட கிரேக்க மூலவாக்கியத்துக்குள் நுழைந்தன, அது அவற்றிற்கு நியாயமான உரிமையில்லாத ஓர் இடம்.”—புதிய ஏற்பாட்டின் குற்றங்குறை ஆராய்ச்சிக்கு ஒரு தெளிவான அறிமுகம் (கேம்பிரிட்ஜ், 1883, மூன்றாம் பதி.), பக். 654.
இந்த வசனங்களின்பேரில் JB-ல் அடிக்குறிப்பையும், NW பிற்சேர்க்கை, 1984 துணைக் குறிப்புகளுள்ள பதிப்பு, பக். 1580-லும் பாருங்கள்.
தங்கள் கோட்பாட்டின் அம்சங்களைக் குறிப்பதாகத் திரித்துவக் கோட்பாட்டாளர்கள் சொல்லும் மற்ற வேதவசனங்கள்
இந்த வசனங்களில் முதலாவதானது குமாரனை மாத்திரமே குறிப்பிடுகிறது; மற்றது பிதாவையும் குமாரனையும் குறிப்பிடுகிறது; இந்த இரண்டில் எதுவும் பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியைக் குறிப்பிட்டு அவர்கள் ஒரே கடவுளாக அமைந்திருக்கிறார்களென சொல்லுகிறதில்லை என்பதைக் கவனியுங்கள்.
இயேசு இங்கே சொன்னதில், தாமே தம்மை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பிக்கொள்வாரென பொருள்கொண்டாரா? அப்போஸ்தலர் 2:32-ல்: “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்,” என்று சொல்லியிருப்பதால், அது இயேசு கடவுளென குறிக்கிறதா? இல்லவேயில்லை. அத்தகைய கருத்து கலாத்தியர் 1:1-உடன் முரண்படும், அதில், இயேசுவை உயிர்த்தெழுப்பினவர் குமாரன் என்று அல்ல, பிதா என்றே சொல்லியிருக்கிறது. இதைப்போன்ற சொல்-முறையைப் பயன்படுத்தி, லூக்கா 8:48-ல் இயேசு ஒரு பெண்ணினிடம் பின்வருமாறு சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளது: “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.” அவள் தன்னைத்தானே சுகப்படுத்திக்கொண்டாளா? இல்லை; அவளுக்கு விசுவாசம் இருந்ததனால் கிறிஸ்துவின்மூலம் கடவுளிடமிருந்து வந்த வல்லமையே அவளைச் சுகப்படுத்தினது. (லூக்கா 8:46; அப்போஸ்தலர் 10:38) இவ்வாறே, இயேசு, மனிதனாகத் தாம் காட்டின தம்முடைய பரிபூரண கீழ்ப்படிதலால், தம்மைப் பிதா மரித்தோரிலிருந்து எழுப்பி, அவ்வாறு கடவுளுடைய குமாரனென ஒப்புக்கொள்வதற்கு நீதிக்குரிய ஆதாரத்தைப் பிதாவுக்கு அளித்தார். இயேசுவின் உண்மையான வாழ்க்கைப் போக்கினிமித்தம், அவர் உயிர்த்தெழுப்பப்பட்டதற்கு இயேசுதாமே பொறுப்புள்ளவராயிருந்தாரென சரியானபடி சொல்லப்படலாம்.
புதிய ஏற்பாட்டில் சொல் வருணனைகள் என்பதில் A. T. ராபர்ட்ஸன் பின்வருமாறு சொல்கிறார்: “[யோவான்] 2:19-ல் இயேசு சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: ‘மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்.’ பிதா அவருக்காகச் செயலாற்றுபவராயிராமல் தாமே தம்மை மரித்தோரிலிருந்து எழுப்பிக்கொள்வாரென அவர் பொருள்கொள்ளவில்லை (ரோமர் 8:11).”—(நியு யார்க், 1932), புத். V, பக். 183.
“நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,” என்று சொன்னபோது, அவர்கள் சரிசமமானவர்களாக இருக்கிறார்களென இயேசு பொருள்கொண்டாரா? அவ்வாறே கருதினதாகத் திரித்துவக்கோட்பாடாளர்கள் சிலர் சொல்கின்றனர். ஆனால் யோவன் 17:21, 22-ல் இயேசு தம்மைப் பின்பற்றினோரைக் குறித்துப் பின்வருமாறு ஜெபித்தார்: “அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும்,” மேலும் அவர் “நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி” என்பதையும் சேர்த்தார். “ஒன்றாய்” என்பதற்குரிய அதே கிரேக்கச் சொல்லை (ஹென்) இதில்வரும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினார். இயேசுவின் சீஷர்கள் எல்லாரும் திரித்துவத்தின் பாகமாவதில்லை என்பது வெளிப்படையாயிருக்கிறது. ஆனால் அவர்கள் பிதாவோடும் குமாரனோடும் நோக்க ஒருமைப்பாட்டில் நிச்சயமாகவே பங்குகொள்வோராகின்றனர், இதே வகையான ஒற்றுமையே கடவுளையும் கிறிஸ்துவையும் ஒன்றுபடுத்துகிறது.
திரித்துவ நம்பிக்கையை விடாது பற்றிக்கொண்டிருப்போரை அது என்ன நிலையில் வைக்கிறது?
அது அவர்களை மிக ஆபத்தான நிலையில் வைக்கிறது. திரித்துவக் கோட்பாடு பைபிளில் காணப்படுகிறதுமில்லை, பைபிள் போதிக்கிறதோடு பொருத்தமாயுமில்லை என்பதற்கு அத்தாட்சி மறுக்கமுடியாததாயிருக்கிறது. (முந்தின பக்கங்களைப் பாருங்கள்.) இது உண்மையான கடவுளைப் படுமோசமாய்த் தவறாகத் திரித்துக் காட்டுகிறது. எனினும், இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.” (யோவான் 4:23, 24) இவ்வாறு, தங்கள் வணக்கம் “உண்மையோடு” அதாவது கடவுளுடைய சொந்த வார்த்தையில் குறித்துவைக்கப்பட்டுள்ள சத்தியத்துக்குப் பொருந்த இல்லாதவர்கள், “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்க”ளல்லவென இயேசு தெளிவாக்கினார். முதல் நூற்றாண்டின் யூத மதத் தலைவர்களுக்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். மாயக்காரரே, உங்களைக் குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான்.” (மத். 15:6-9) இது பைபிளின் தெளிவான சத்தியங்களுக்குப்பதில் மனித பாரம்பரியங்களைத் தெரிந்துகொண்டு ஆதரித்து வாதாடும் இன்று கிறிஸ்தவமண்டலத்திலுள்ளோருக்கு அதே வலிமையுடன் பொருந்துகிறது.
திரித்துவத்தைக் குறித்து, அதன் உறுப்பினர் “புரிந்துகொள்ளமுடியாதவர்கள்” என்று (ஆங்கிலத்திலுள்ள) அதனேசியன் விசுவாசப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறது. இந்தக் கோட்பாட்டைப் போதிக்கிறவர்கள் அது “மர்மம்,” என அடிக்கடி கூறுகின்றனர். “நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்,” என்று இயேசு சொன்னபோது சந்தேகமில்லாமல், இத்தகைய ஒரு திரித்துவக் கடவுள் இயேசுவின் மனதில் இல்லை. (யோவான் 4:22) நீங்கள் வணங்கும் கடவுளை நீங்கள் உண்மையில் அறிந்திருக்கிறீர்களா?
வினைமையான கேள்விகள் நம் ஒவ்வொருவரையும் எதிர்ப்படுகின்றன: நாம் சத்தியத்தை உள்ளப்பூர்வமாய் நேசிக்கிறோமா? கடவுளுடன் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உறவை நாம் உண்மையில் விரும்புகிறோமா? எல்லாரும் சத்தியத்தை உண்மையாய் நேசிக்கிறதில்லை. பலர், சத்தியத்தின்மீதும் கடவுள்மீதுமுள்ள அன்புக்கு மேலாகத் தங்கள் உறவினரின் மற்றும் கூட்டாளிகளின் அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதை வைத்திருக்கின்றனர். (2 தெச. 2:9-12; யோவன் 5:39-44) ஆனால், இயேசு தம்முடைய பரலோகப் பிதாவிடம் செய்த ஊக்கமான ஜெபத்தில் சொன்னதுபோல்: “ஒரே உண்மையான கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை அவர்கள் பெற்றுவருவதே, நித்திய ஜீவனைக் குறிக்கிறது.” (யோவான் 17:3, NW) மேலும் சங்கீதம் 144:15-ல் உண்மைப்படி பின்வருமாறு கூறியிருக்கிறது: “யெகோவாவைக் கடவுளாகக் கொண்டுள்ள ஜனங்கள் சந்தோஷமுள்ளவர்கள்!”—NW.
ஒருவர் இவ்வாறு சொன்னால்—
‘உங்களுக்குத் திரித்துவத்தில் நம்பிக்கை உண்டா?’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘இது நம்முடைய காலத்தில் பிரபலமாயுள்ள நம்பிக்கை. ஆனால் இது இயேசுவும் அவருடைய சீஷர்களும் கற்பித்ததல்லவென உங்களுக்குத் தெரியுமா? ஆகையால், யாரை வணங்கும்படி இயேசு சொன்னாரோ அவரையே நாங்கள் வணங்குகிறோம்.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘இயேசு கற்பித்தபோது, எல்லாவற்றிலும் மிகப் பெரியதென அவர் சொன்ன கட்டளை இதோ இங்கே இருக்கிறது . . . (மாற்கு 12:28-30).’ (2) ‘இயேசு தாம் கடவுளுக்குச் சமமாயிருந்ததாக ஒருபோதும் உரிமைபாராட்டவில்லை. அவர் சொன்னதாவது . . . (யோவான் 14:28).’ (3) ‘அப்படியானால் திரித்துவக் கோட்பாட்டின் தொடக்கம் என்ன? அதைப்பற்றி பிரசித்திப்பெற்ற என்ஸைக்ளோபீடியாக்கள் சொல்வதைக் கவனியுங்கள். (பக்கங்கள் 405, 406-ஐப் பாருங்கள்.)’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘இல்லை, நான் நம்புகிறதில்லை. பாருங்கள். அந்த நம்பிக்கையோடு நான் ஒருபோதும் பொருந்தவைக்க முடியாத பைபிள் வசனங்கள் இருக்கின்றன. இதோ இது அவற்றில் ஒன்று. (மத். 24:36) ஒருவேளை நீங்கள் இதை எனக்கு விளக்கக்கூடும்.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘குமாரன் பிதாவுக்குச் சமமாயிருந்தால், குமாரன் அறியாதக் காரியங்களை எவ்வாறு பிதா அறிந்திருக்கிறார்?’ இது அவருடைய மனித இயல்பைக் குறித்ததில் மாத்திரமே உண்மையாயிருந்ததென அவர்கள் விடையளித்தால், பின்பு இவ்வாறு கேளுங்கள்: (2) ‘ஆனால் பரிசுத்த ஆவி ஏன் அறியவில்லை?’ (அவர் சத்தியத்தில் உண்மையான அக்கறை காட்டினால், கடவுளைப்பற்றி வேத வசனங்களில் சொல்லியிருப்பதை அவருக்குக் காட்டுங்கள். சங். 83:17; யோவன் 4:23, 24)
பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை: ‘இயேசு கிறிஸ்துவில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு ஆனால் திரித்துவத்தில் அல்ல. ஏன்? ஏனெனில் கிறிஸ்துவைப்பற்றி அப்போஸ்தலன் பேதுரு நம்பினதை நாங்கள் நம்புகிறோம். அவன் சொன்னதைக் கவனியுங்கள் . . . (மத். 16:15-17).’
கூடுதலான யோசனை: ‘திரித்துவத்தைக் குறிப்பிடுகையில் எல்லாரும் ஒரே காரியத்தை மனதில் கொண்டிருப்பதாக நான் காண்கிறதில்லை. நீங்கள் கருதுவது என்னவென நான் அறிந்தால் ஒருவேளை நான் உங்கள் கேள்விக்குச் சற்று நன்றாய் விடைக் கொடுக்க முடியும்.’ பின்பு மேலும் சொல்லலாம்: ‘அந்த விளக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் நான் பைபிள் கற்பிப்பதை மாத்திரமே நம்புகிறேன். “திரித்துவம்” என்ற சொல்லை நீங்கள் எப்போதாவது பைபிளில் கண்டிருக்கிறீர்களா? . . . (உங்கள் பைபிளிலுள்ள சொற்களின் இடக்குறிப்புப் பட்டியலை எடுத்துக் காட்டுங்கள்.) ஆனால் கிறிஸ்து பைபிளில் குறிப்பிடப்படுகிறாரா? . . . ஆம், நாங்கள் அவரில் நம்புகிறோம். “கிறிஸ்து” என்பதன்கீழுள்ள இடக்குறிப்புப் பட்டியலைக் கவனியுங்கள், இதில் கொடுத்துள்ள ஓர் இடக்குறிப்பு மத்தேயு 16:16. (இதை வாசியுங்கள்.) இதையே நான் நம்புகிறேன்.’
அல்லது இவ்வாறு விடையளிக்கலாம் (அவர் யோவன் 1:1-க்குக் குறிப்பாய்க் கவனத்தை இழுத்தால்): ‘இந்த வசனத்தை நான் நன்றாய் அறிந்திருக்கிறேன். சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் இயேசு “கடவுள்” (God) என்று சொல்லியிருக்கிறது, மற்றவற்றில் அவர் “ஒரு கடவுள்” (a god) என்று சொல்லியிருக்கிறது. ஏன்?’ (1) ‘அதற்கு அடுத்துள்ள வசனத்தில் “தேவனோடு” இருந்தார் என்று சொல்லியிருப்பதனால் இருக்கக்கூடுமா?’ (2) ‘இங்கே யோவன் 1:18-ல் காணப்படுகிற இதனால் இருக்கக்கூடுமா?’ (3) ‘இயேசுதாமே ஒருவரைக் கடவுளாக வணங்குகிறாராவென நீங்கள் எப்போதாவது வியப்புடன் சிந்தித்ததுண்டா? (யோவான் 20:17)’
‘கிறிஸ்துவின் தெய்வீகத்தில் நீங்கள் நம்புகிறீர்களா?’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘ஆம், நான் நிச்சயமாகவே நம்புகிறேன். ஆனால், “கிறிஸ்துவின் தெய்வீகம்” என நீங்கள் குறிப்பிடுகையில் நீங்கள் மனதில் கொண்டிருக்கும் அதே காரியம் ஒருவேளை என் மனதில் இராது.’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘நான் ஏன் அவ்வாறு சொல்கிறேன்? ஏசாயா 9:6-ல் இயேசு கிறிஸ்து “வல்லமையுள்ள தேவன்” என விவரிக்கப்பட்டிருக்கிறார், ஆனால் அவருடைய பிதா ஒருவர் மாத்திரமே சர்வவல்லமையுள்ள தேவன் என எப்பொழுதும் குறிப்பிடப்படுகிறார்.’ (2) ‘மேலும் யோவன் 17:3-இல் இயேசு தம்முடைய பிதாவை “ஒரே உண்மையான கடவுள்,” என்று சொல்வதைக் கவனியுங்கள். ஆகையால், பெரும்பாலும், இயேசு உண்மையான கடவுளின் வெறும் ஒரு பிரதிபலிப்பேயாவார்.’ (3) ‘கடவுளுக்குப் பிரியமானவர்களாக நடக்க நம்முடைய பங்கில் தேவைப்படுவதென்ன? (யோவான் 4:23, 24)’