டேஷன்—மத வாதியா மதபேத வாதியா?
அப்போஸ்தலன் பவுல் தனது மூன்றாம் மிஷனரி பயணத்தின் முடிவில், எபேசு சபையிலிருந்த மூப்பர்களுடன் கூடி பேசினார். “நான் போன பின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்” என்று அவர்களிடம் கூறினார்.—அப்போஸ்தலர் 20:29, 30.
பவுல் சொன்னபடியே, இந்த மாற்றத்தையும் முன்னுரைக்கப்பட்ட விசுவாச துரோகத்தையும் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு சந்தித்தது. மறையியல் ஞானக் கோட்பாடு (Gnosticism) எங்கும் ஊடுருவி பரவிக் கொண்டிருந்தது; இந்தக் கொள்கை மத இயக்கமாகவும் தத்துவ இயக்கமாகவும் வளர்ந்து, விசுவாசிகள் சிலருடைய நம்பிக்கையைக் கறைப்படுத்தியது. ஆன்மீக விஷயங்கள் நல்லது, மாம்சப்பிரகாரமான விஷயங்கள் அனைத்தும் தீயது என்றும் மறையியல் ஞானக் கோட்பாட்டாளர்கள் சிலர் நம்பினர். மாம்சப்பிரகாரமான அனைத்தும் தீயது என அவர்கள் விவாதித்ததால், திருமணத்தையும் பிள்ளைப்பேற்றையும் புறக்கணித்தனர், இவையெல்லாம் சாத்தானிடமிருந்து வந்தவை என்று வாதாடினர். ஆன்மீக விஷயங்களே சிறந்தது என்பதால், ஒருவன் தன் சரீரத்தை எப்படி பயன்படுத்தினாலும் ஒன்றுமில்லை என்றும் அவர்களில் சிலர் நம்பினர். இத்தகைய கருத்துக்களால் மட்டுமீறிய வாழ்க்கை பாணிகளில் ஈடுபட்டனர்; துறவறம் அல்லது சுகபோகம் என இரு முனைகளில் ஊசலாடிக் கொண்டிருந்தனர். இரட்சிப்பு என்பது புரியாப் புதிரான மறையியல் ஞானத்திலிருந்து, அல்லது சுய அறிவிலிருந்து மட்டுமே வரும் என அவர்கள் வாதாடினர். இதனால் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்திற்கு அங்கே எந்த இடமும் இருக்கவில்லை.
ஆபத்தான இந்த மறையியல் ஞானக் கோட்பாட்டுக்கு கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டவர்கள் எப்படி பிரதிபலித்தார்கள்? படித்தவர்கள் சிலர் இந்தத் தவறான கொள்கையை எதிர்த்து முழக்கமிட்டனர், மற்றவர்களோ இதன் செல்வாக்கிற்கு இணங்கிச் சென்றனர். உதாரணமாக, ஐரினியஸ் என்பவர் மதபேத போதனைகளை எதிர்த்து உயிர்மூச்சு உள்ளவரை போராடினார். இவர் பாலிகார்ப்பின் சீடர், அப்போஸ்தலர்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதர்தான் இந்த பாலிகார்ப். இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் போதித்தவற்றை உறுதியாக கடைப்பிடிக்கும்படி பாலிகார்ப் பரிந்துரை செய்தார். ஐரினியஸின் நண்பர் ஃப்ளோரினஸ் என்பவரும் பாலிகார்ப்பின் சீடரே; ஆனாலும் வேலன்டைனஸ் என்பவருடைய போதனைகள் அவரைக் கவர்ந்தன. மறையியல் ஞானக் கோட்பாட்டு இயக்கத்தின் மிகப் பிரபலமான தலைவரே இந்த வேலன்டைனஸ். அவை உண்மையில் கொந்தளிப்பான காலங்களே.
அந்த சமயத்தின் ஆன்மீக நிலைமையை டேஷன் என்பவருடைய எழுத்துக்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. டேஷன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரபல எழுத்தாளர். அவர் எப்படிப்பட்ட மனிதர்? எவ்வாறு ஒரு “கிறிஸ்தவரானார்”? மறையியல் ஞானக் கோட்பாடு எனும் மதபேதத்தில் அவருடைய நிலை என்ன? ஆர்வத்தைத் தூண்டும் அவருடைய பதில்களும் அவருடைய முன்மாதிரியும் இன்று சத்தியத்தை நாடுவோருக்கு மதிப்புமிகுந்த பாடங்களை சொல்லித் தருகின்றன.
‘கேள்விப்பட்டிராத சில கருத்துக்களை’ அறியவருதல்
டேஷனுக்கு சொந்த நாடு சிரியா. பல இடங்களுக்குப் பயணித்ததாலும் புத்தகப் புழுவாக இருந்ததாலும் அன்றைய கிரேக்க-ரோம கலாச்சாரத்தில் ஓர் அறிவுஜீவியாக திகழ்ந்தார். ஊர் ஊராக சென்று சொல்வன்மையுடன் சொற்பொழிவாற்றும் ஒருவராக டேஷன் ரோமுக்கு வந்தார். ரோமில் தங்கியிருந்த சமயத்தில், அவருடைய பார்வை கிறிஸ்தவத்தின் பக்கம் திரும்பியது. ஜஸ்டின் மார்டருடன் கூட்டுறவுகொள்ளத் தொடங்கினார், ஒருவேளை அவருடைய மாணாக்கனாகவும் ஆகியிருக்கலாம்.
அந்நாளைய கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியதைப் பற்றிய அறிவொளியூட்டும் தன் பதிவில், “சத்தியத்திற்காக தேடி அலைந்தேன்” என டேஷன் கூறுகிறார். வேதாகமத்தைப் புரட்டிப் பார்க்க கிடைத்த பாக்கியத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “இதுவரை கேள்விப்பட்டிராத சில கருத்துக்களை நான் அறிய நேரிட்டது. கிரேக்கருடைய கருத்துக்களைவிட அவை மிகவும் பழமையானவை; கிரேக்க நூல்களில் காணப்படும் தவறுகளோடு ஒப்பிட அவை மிகவும் தெய்வத்துவமுடையவை; போலி பெருமையற்ற எளிமையான மொழிநடை, எழுத்தாளர்களுடைய ஒளிவுமறைவற்ற பண்பு, எதிர்கால சம்பவங்களை முன்னறியக்கூடிய அறிவு, தரமான அரிய சித்தாந்தங்கள், ஒரே இறைவனில் மையம் கொண்ட இந்த அண்டத்தை ஆளும் அரசாங்கத்தைப் பற்றிய பிரகடனம் ஆகியவற்றால் அவற்றில் விசுவாசம் வைப்பதற்கு தூண்டப்பட்டேன்.”
தன்னுடைய நாளில் பரவியிருந்த கிறிஸ்தவத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு டேஷன் தனது சமகாலத்து மக்களை அழைக்கத் தயங்கவில்லை; குழப்பமூட்டுகிற புறமதக் கொள்கைக்கு முற்றிலும் மாறாக அது எளிமையாகவும் தெளிவாகவும் இருந்ததை பார்ப்பதற்கு உற்சாகப்படுத்தினார். அவருடைய எழுத்துக்களிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?
அவருடைய எழுத்துக்கள் எதை வெளிப்படுத்துகின்றன?
டேஷனுடைய எழுத்துக்கள் ஒரு மதவாதியாக, தன்னுடைய மத நம்பிக்கைகளை ஆதரித்துப் பேசும் ஓர் எழுத்தாளராக அவரை சித்தரித்துக் காட்டுகின்றன. புறமத தத்துவஞானத்தைக் குறித்து கடுமையாக சாடினார். கிரேக்கரிடம் பேசுதல் (ஆங்கிலம்) என்ற தனது படைப்பில், புறமதக் கொள்கைகள் உருப்படாதவை என்றும் கிறிஸ்தவத்தின் கொள்கைகள் நியாயமானவை என்றும் வலியுறுத்திக் கூறுகிறார். கிரேக்கருடைய வழிகள் மீது தனக்கிருந்த வெறுப்பை அவருடைய எழுத்து நடை கடுமையாக விமர்சிக்கிறது. உதாரணமாக, ஹெராக்ளைட்டஸ் என்ற தத்துவஞானியைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “என்றாலும், இந்த மனிதனின் மடமையை மரணம் மெய்ப்பித்துக் காட்டியது; நீர்க்கோவை வியாதி அவனை தொற்றியபோது, மருத்துவமும் தத்துவஞானமும் பயின்றிருந்ததால் தன் உடலெங்கும் எருவை பூசிக்கொண்டான், அது கல்லாக உறைந்தபோது அவனுடைய உடல் முழுவதும் சுருங்கிவிட்டது, அதனால் அவன் துண்டு துண்டாக பீறுண்டு கடைசியில் செத்து மடிந்தான்.”
சகலத்தையும் படைத்த ஒரேவொரு கடவுளே இருக்கிறார் என்ற நம்பிக்கையை டேஷன் உயர்வாக மதித்தார். (எபிரெயர் 3:4) கிரேக்கரிடம் பேசுதல் என்ற நூலில், கடவுளை “ஆவியானவர்” என குறிப்பிட்டு இவ்வாறு கூறுகிறார்: “அவர் ஒருவரே ஆரம்பம் இல்லாதவர், அவரே எல்லாவற்றையும் ஆரம்பித்தவர்.” (யோவான் 4:24; 1 தீமோத்தேயு 1:17) வழிபாட்டில் உருவங்களைப் பயன்படுத்துவதைப் புறக்கணித்து, டேஷன் இவ்வாறு எழுதுகிறார்: “மரக் கட்டைகளையும் கல்லுகளையும் எப்படி நான் தெய்வங்களாக பேச முடியும்?” (1 கொரிந்தியர் 10:14) பரலோக பிதாவின் படைப்புகளில் முதலாவதாக தோன்றி, பிற்பாடு இந்த அண்டத்தை படைப்பதில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையை, அல்லது லோகோஸை அவர் நம்பினார். (யோவான் 1:1-3; கொலோசெயர் 1:13-17) குறித்த காலத்தில் நடைபெறும் உயிர்த்தெழுதலைப் பற்றி டேஷன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எல்லா காரியங்களும் முடிவடைந்த பிறகு உடல்கள் உயிர்த்தெழுப்பப்படும் என்பதை நாம் நம்புகிறோம்.” நாம் ஏன் மரிக்கிறோம் என்பதற்குரிய காரணத்தை குறிப்பிடுகையில் டேஷன் இவ்வாறு எழுதுகிறார்: “நாம் சாவதற்குப் படைக்கப்படவில்லை, நம்முடைய தவறினாலேயே நாம் சாகிறோம். நம்முடைய சுயாதீனம் நம்மை அழித்துவிட்டது; சுதந்திரமாய் இருந்த நாம் அடிமைகளாய் ஆகிவிட்டோம்; பாவத்தின் காரணமாக நாம் விற்கப்பட்டிருக்கிறோம்.”
ஆத்துமாவைப் பற்றி டேஷன் கொடுக்கும் விளக்கம் குழப்புவதாக இருக்கிறது. “கிரேக்கரே, ஆத்துமா அழியாதது அல்ல, ஆனால் அழியக்கூடியது. என்றாலும், அது சாகாமல் இருக்கும் சாத்தியமுள்ளது. ஆத்துமாவிற்கு சத்தியம் தெரியவில்லையென்றால் அது சாகிறது, அது உடலோடு மறைந்துவிடுகிறது, ஆனால் உலகத்தின் முடிவில் உடலோடு மீண்டும் எழுந்திருக்கும், இருந்தாலும் கடைசியில் நித்தியத்திற்கும் தண்டனை பெறுவதன் மூலம் அது மரண தீர்ப்பை அடையும்” என்று சொல்கிறார். இந்தக் கூற்றுகள் வாயிலாக டேஷன் உண்மையில் என்ன சொல்ல வந்தார் என்பது விளங்கவில்லை. சில பைபிள் போதனைகளைக் கடைப்பிடித்துக்கொண்டு அதேசமயத்தில் அப்போது வாழ்ந்த மக்களுடைய தயவை சம்பாதிப்பதற்காக வேதாகம சத்தியங்களை புறமத தத்துவஞானத்தால் கறைப்படுத்த நினைத்திருப்பாரா?
டேஷனுடைய குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்பு டையடெஸரான், அல்லது நான்கு சுவிசேஷங்களின் ஒத்திசைவு. சிரியாவிலுள்ள சபைகளில் இருந்தவர்களுக்கு முதன் முதலில் அவர்களுடைய மொழியில் சுவிசேஷங்களை தந்த பெருமை டேஷனையே சாரும். இது மிகவும் உயர்வாக போற்றப்பட்ட ஒரு படைப்பு, நான்கு சுவிசேஷங்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விவரப்பதிவாக தந்திருந்தார். இதை சிரியன் சர்ச் பயன்படுத்தியது.
கிறிஸ்தவரா அல்லது மதபேத வாதியா?
டேஷனுடைய எழுத்துக்களை கூர்ந்து ஆராய்ந்தால் அவர் வேதாகமத்துடன் பரிச்சயமானவராக இருந்ததையும் அதன் மீது பெரும் மதிப்பு வைத்திருந்ததையும் காணலாம். வேதாகமம் அவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவர் இவ்வாறு எழுதுகிறார்: “நான் ஒரு செல்வந்தனாய் ஆவதற்கு ஆசைப்படுவதில்லை; இராணுவ சேவையை புறக்கணிக்கிறேன்; வேசித்தனத்தை வெறுக்கிறேன்; கப்பலோட்டியாக ஆவதற்கு செல்வம் திரட்ட வேண்டுமென்ற தீரா ஆசையும் எனக்கு இல்லை; . . . பேரும் புகழும் பெற வேண்டுமென்ற வெறி இல்லை; . . . மக்கள் இன்பத்தில் திளைத்தாலும் சரி வறுமையில் வாடினாலும் சரி, எல்லாருக்கும் ஒரே சூரியன், எல்லாருக்கும் ஒரே சாவு.” டேஷன் இவ்வாறு புத்திமதி கூறுகிறார்: “உலக ஆசைக்கு அடிபணிவதை அடியோடு ஒழி, அதன் மடத்தனமான செயல்களை அறவே வெறுத்தொதுக்கு. கடவுளுக்காக வாழ், அவரைப் புரிந்துகொண்டு உன்னுடைய பழைய சுபாவத்தைக் களைந்துபோடு.”—மத்தேயு 5:45; 1 கொரிந்தியர் 6:18; 1 தீமோத்தேயு 6:10.
இருந்தாலும், இரட்சகருடைய கோட்பாட்டின்படி பரிபூரணம் (ஆங்கிலம்) என்ற டேஷனுடைய நூலை சற்று கவனியுங்கள். இதில் திருமண ஏற்பாட்டை கொண்டுவந்தது பிசாசே என குற்றம்சாட்டுகிறார். திருமணம் எனும் பந்தத்தின் மூலம் அழியக்கூடிய இந்த உலகுடன் மக்கள் தங்களை இணைத்துக் கொள்வதால் திருமணத்தை டேஷன் கடுமையாக கண்டனம் செய்கிறார்.
சுமார் பொ.ச. 166-ல், ஜஸ்டின் மார்டருடைய மரணத்திற்குப்பின், துறவறம் மேற்கொள்ளும் எக்ராடீட்டெஸ் என்ற ஒரு மதப் பிரிவை அவர் ஸ்தாபித்தார் அல்லது அப்படிப்பட்ட ஒன்றுடன் கூட்டுறவு கொண்டார் என தெரிகிறது. இந்த மதப் பிரிவை தழுவியவர்கள் தன்னடக்கத்தையும் சரீரத்தை அடக்கியாளுவதையும் மிக அதிகமாக வலியுறுத்தினார்கள். திராட்சைரசம், திருமணம், பொருளுடைமைகள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்கும்படி சொல்கிற ஒரு துறவறத்தை அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.
கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்
வேதாகமத்திலிருந்து இவ்வளவு தூரம் டேஷன் வழிவிலகிப் போனதற்கு காரணம் என்ன? “கேட்கிறதை மறக்கிறவனாயி”ருந்தாரா? (யாக்கோபு 1:23-25) பொய்யான கதைகளைப் புறக்கணிப்பதன் மூலம் மனித தத்துவங்களுக்கு இரையாவதை டேஷன் தவிர்க்கத் தவறிவிட்டாரா? (கொலோசெயர் 2:8; 1 தீமோத்தேயு 4:7) அவர் ஆதரித்துப் பேசிய கருத்துக்களில் பெரும் தவறுகள் இருந்ததால், அவருக்குப் புத்தி பேதலித்திருக்குமா?
எதுவாக இருந்தாலும்சரி, டேஷனுடைய எழுத்துக்களும் முன்மாதிரியும் அவருடைய நாளில் நிலவிய மத சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. உலக தத்துவஞானம் எந்தளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை அவை நமக்கு பறைசாற்றுகின்றன. ஆகவே, ‘சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகியிருங்கள்’ என்ற அப்போஸ்தலன் பவுலின் எச்சரிக்கைக்கு செவிசாய்ப்போமாக.—1 தீமோத்தேயு 6:20.