அதிகாரம் 22
“யெகோவாவுடைய விருப்பப்படி நடக்கட்டும்”
யெகோவாவுடைய விருப்பத்தைச் செய்வதில் தீர்மானமாக இருக்கும் பவுல் எருசலேமுக்குச் செல்கிறார்
அப்போஸ்தலர் 21:1-17-ன் அடிப்படையில்
1-4. பவுல் ஏன் எருசலேமுக்குப் போகிறார், அவருக்கு அங்கே என்ன நடக்கப்போகிறது?
மிலேத்துவில் பவுலும் லூக்காவும் எபேசு சபை மூப்பர்களிடமிருந்து பிரியாவிடை பெறுகிறார்கள். உருக்கமான அந்தச் சமயத்தில் அங்கிருக்கிற எல்லாருக்கும் இதயம் கனக்கிறது... தொண்டை அடைக்கிறது... கண்ணீர் பொங்கி வழிகிறது. அந்த இரண்டு மிஷனரிகளும் கப்பல் தளத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். பயணத்துக்குத் தேவையான எல்லாப் பொருள்களோடும் புறப்படத் தயாராக இருக்கிறார்கள். யூதேயாவிலுள்ள ஏழை எளிய கிறிஸ்தவர்களுக்காகத் திரட்டப்பட்ட நன்கொடை தொகையும் அவர்களிடம் இருக்கிறது; அதைப் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடத் தீர்மானமாயிருக்கிறார்கள்.
2 அவர்கள் ஏறியிருக்கிற அந்தப் பாய்மரக் கப்பல் சந்தடிமிக்க கப்பல்கூடத்தைவிட்டு நகருகிறது; தென்றல் வீசுகிற திசையில் மெதுவாகச் செல்கிறது. அந்த இரண்டு மிஷனரிகளும் அவர்களுடைய பயண நண்பர்கள் ஏழு பேரும், சோகமே உருவாக நிற்கிற சகோதரர்களுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். (அப். 20:4, 14, 15) கண்ணுக்கெட்டும் தூரம்வரை அவர்களுக்குக் கையசைத்துக்கொண்டே போகிறார்கள்.
3 கிட்டத்தட்ட மூன்று வருஷங்களாக, பவுல் எபேசு சபை மூப்பர்களுடன் தோளோடு தோள்சேர்ந்து உழைத்திருக்கிறார். இப்போதோ, கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு இசைய எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே போன பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று அவருக்கு ஓரளவு தெரிந்திருக்கிறது. அந்த மூப்பர்களிடம் அவர் முன்பு இப்படிச் சொல்லியிருந்தார்: “இப்போது, கடவுளுடைய சக்திக்குக் கட்டுப்பட்டு எருசலேமுக்குப் போகிறேன். ஆனால், அங்கே எனக்கு என்ன நடக்குமென்று தெரியாது. சிறைவாசத்தையும் உபத்திரவத்தையும் அனுபவிக்கப்போகிறேன் என்று மட்டுமே தெரியும். இதை ஒவ்வொரு நகரத்திலும் கடவுளுடைய சக்தி என்னிடம் சொல்கிறது.” (அப். 20:22, 23) ஆபத்து இருக்கிறதென்று தெரிந்தும் பவுல், “கடவுளுடைய சக்திக்குக் கட்டுப்பட்டு” எருசலேமுக்குப் போகிறார்; கடமை உணர்ச்சியோடும், முழு விருப்பத்தோடும் போகிறார். தன் உயிரை அவர் மதிக்கிறார், ஆனால் கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதற்குத்தான் முதலிடம் தர வேண்டுமென நினைக்கிறார்.
4 நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? சொல்லப்போனால், யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தபோது, அவருடைய விருப்பத்தைச் செய்ய முதலிடம் தருவோம் என்று நாம் வாக்குக் கொடுத்தோம். அந்த வாக்குக்கு ஏற்றபடி வாழ அப்போஸ்தலன் பவுலுடைய நல்ல முன்மாதிரியை யோசித்துப்பார்ப்பது நமக்கு உதவும்.
‘சீப்புரு தீவை’ கடந்துபோகையில்... (அப். 21:1-3)
5. பவுலும் அவருடைய நண்பர்களும் எந்த வழியில் போய் தீருவை அடைந்தார்கள்?
5 பவுலும் அவருடைய நண்பர்களும் போன கப்பல் காற்றடிக்கும் திசையில் “நேராக” போய், கோஸ் நகரத்தை அதே நாளில் அடைந்தது. (அப். 21:1) அன்று இரவு கப்பல் அங்கே நங்கூரமிடப்பட்டது; மறுநாள் ரோதுவுக்கும், பின்பு பத்தாராவுக்கும் போனது. ஆசியா மைனரின் தெற்குக் கரையோரப் பகுதியான பத்தாராவில், சகோதரர்கள் ஒரு பெரிய சரக்குக் கப்பலில் ஏறி, நேராக பெனிக்கேயிலுள்ள தீருவுக்குப் போனார்கள். வழியில், அவர்களுக்கு “இடது பக்கம் சீப்புரு தீவு தெரிந்தது.” (அப். 21:3) ஆனால், அப்போஸ்தலர் புத்தகத்தை எழுதிய லூக்கா ஏன் இந்த விவரத்தைச் சொன்னார்?
6. (அ) சீப்புருவைப் பார்த்தது பவுலை ஏன் உற்சாகப்படுத்தியிருக்கலாம்? (ஆ) யெகோவா உங்களை எப்படி ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை மனதில் அசைபோட்டுப் பார்க்கும்போது நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறீர்கள்?
6 பவுல் ஒருவேளை அந்தத் தீவைச் சுட்டிக்காட்டி, அங்கே தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கலாம். முதல் மிஷனரி பயணத்தின்போது, சுமார் ஒன்பது வருஷங்களுக்குமுன், பவுலும் பர்னபாவும் மாற்குவும் அங்கே எலிமா என்ற மந்திரவாதியைச் சந்தித்திருந்தார்கள்; அவர்களுடைய ஊழியத்தை அவன் எதிர்த்திருந்தான். (அப். 13:4-12) அந்தத் தீவில் நடந்த சம்பவங்களை மனதில் அசைபோட்டுப் பார்த்தது பவுலை உற்சாகப்படுத்தி, வரப்போகிற பிரச்சினைகளைச் சமாளிக்க பலப்படுத்தியிருக்கலாம். கடவுள் நம்மை எப்படி ஆசீர்வதித்திருக்கிறார், சோதனைகளைச் சகிக்க நமக்கு எப்படி உதவியிருக்கிறார் என்பதையெல்லாம் மனதில் அசைபோட்டுப் பார்ப்பது நமக்கும்கூட உதவும். அப்படிச் செய்தால் தாவீது உணர்ந்ததைப் போலவே நாமும் உணருவோம்: “நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும். ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.”—சங். 34:19.
‘சீஷர்களைத் தேடிக் கண்டுபிடித்தோம்’ (அப். 21:4-9)
7. தீருவுக்கு வந்துசேர்ந்தபின் பவுலும் அவருடைய நண்பர்களும் என்ன செய்தார்கள்?
7 கிறிஸ்தவத் தோழமையை பவுல் பொக்கிஷமாக நினைத்தார்; மற்ற கிறிஸ்தவர்களோடு இருப்பதைத்தான் அவர் மிகவும் விரும்பினார். தீருவுக்கு வந்துசேர்ந்தபோது, ‘அங்கிருந்த சீஷர்களைத் தேடிக் கண்டுபிடித்தோம்’ என்று லூக்கா எழுதினார். (அப். 21:4) அப்படியென்றால், தீருவில் சகோதரர்கள் இருப்பதைத் தெரிந்திருந்த பவுலும் அவருடைய நண்பர்களும் அவர்களைக் கண்டுபிடித்து அவர்களோடு தங்கியதாகத் தெரிகிறது. இன்று நாமும்கூட எங்கே போனாலும், அன்பாக வரவேற்கிற சகோதர சகோதரிகளைக் கண்டுபிடிக்க முடியும்; சத்தியத்தில் இருப்பதால் நமக்குக் கிடைத்திருக்கிற மாபெரும் ஆசீர்வாதங்களில் இதுவும் ஒன்று! சொல்லப்போனால், கடவுளை நேசிக்கிற உண்மை வணக்கத்தாருக்கு உலகெங்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்!
8. அப்போஸ்தலர் 21:4-ஐ நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
8 தீருவில் ஏழு நாட்கள் தங்கியதைப் பற்றி விவரித்தபோது லூக்கா இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்பட்டதால், எருசலேமுக்குள் காலெடுத்து வைக்க வேண்டாமென்று [தீருவில் இருந்த சகோதரர்கள்] பவுலிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.” (அப். 21:4) இதைப் படிக்கும்போது முதலில் நமக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். யெகோவா தன் மனதை மாற்றிக்கொண்டது போல் தெரியலாம். ஆனால், உண்மையிலேயே யெகோவா பவுலை எருசலேமுக்குப் போக வேண்டாமெனச் சொன்னாரா? இல்லை. பவுல் எருசலேமில் துன்புறுத்தப்படுவார் என்று கடவுளுடைய சக்தி முன்பு தெரிவித்திருந்ததே தவிர, பவுல் அந்த நகரத்துக்குப் போகக் கூடாது என்று தெரிவிக்கவில்லை. எருசலேமில் பவுலுக்குத் தீங்கு ஏற்படும் என்பதை தீருவிலிருந்த சகோதரர்கள் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. அதனால், பவுல்மேல் இருந்த கரிசனையால், அந்த நகரத்துக்குப் போக வேண்டாமென அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். வரவிருந்த ஆபத்திலிருந்து பவுலை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்ற அவர்களுடைய ஆசை நியாயமானதுதான். இருந்தாலும், பவுல் கடவுளுடைய விருப்பத்தைச் செய்யும் தீர்மானத்தோடு எருசலேமை நோக்கித் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார்.—அப். 21:12.
9, 10. (அ) தீருவிலிருந்த சகோதரர்கள் கவலையோடு சொன்ன வார்த்தைகளைக் கேட்ட பவுலுக்கு எந்தச் சம்பவம் ஞாபகத்துக்கு வந்திருக்கலாம்? (ஆ) இன்று மக்கள் பொதுவாக என்ன நினைக்கிறார்கள், இயேசுவின் வார்த்தைகளோடு ஒப்பிட இது எப்படி நேர்மாறாக இருக்கிறது?
9 இயேசுவும் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்ப்பட்டார் என்பதை பவுல் ஒருவேளை அப்போது நினைத்துப் பார்த்திருக்கலாம்; இயேசு எருசலேமுக்குப் போகப் போவதாகவும், அங்கே பல பாடுகள் படப்போவதாகவும், பின்பு கொலை செய்யப்படப்போவதாகவும் தன் சீஷர்களிடம் சொன்னபோது, பேதுரு உணர்ச்சிவசப்பட்டு, “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்! இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்று சொன்னார். அதற்கு இயேசு, “என் பின்னால் போ, சாத்தானே! நீ எனக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாய்; நீ கடவுளைப் போல் யோசிக்காமல் மனுஷர்களைப் போல் யோசிக்கிறாய்” என்றார். (மத். 16:21-23) கடவுள் கொடுத்திருந்த நியமிப்பை ஏற்றுக்கொண்டு அதற்காக தியாகங்கள் செய்ய இயேசு உறுதியாக இருந்தார். பவுலும் அதேபோல் உறுதியாக இருந்தார். அப்போஸ்தலன் பேதுருவுக்கு இருந்ததைப் போலவே தீருவிலிருந்த சகோதரர்களுக்குக் கண்டிப்பாக நல்ல எண்ணம் இருந்திருக்கும். ஆனால், கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
10 பொதுவாக, இன்று மக்கள் தாங்கள் கஷ்டப்படக் கூடாதென நினைக்கிறார்கள், நோகாமல் வாழ்க்கையை ஓட்டவே விரும்புகிறார்கள். தங்களுடைய மதம் தங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கக் கூடாது என்றும், தங்களுக்குச் சௌகரியமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், தன்னுடைய சீஷர்கள் முற்றிலும் வித்தியாசமான எண்ணத்தைக் காட்ட வேண்டும் என்று இயேசு உற்சாகப்படுத்தினார். “யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே துறந்து, தன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வர வேண்டும்.” என்று சொன்னார். (மத். 16:24) இயேசு சொன்னபடி செய்வது சுலபமல்ல, ஆனால் அதுதான் ஞானமானது, சரியானது.
11. தீரு நகரத்தில் இருந்த சகோதரர்கள் பவுல்மீது பாசத்தையும், அவருடைய ஊழியத்துக்கு ஆதரவையும் எப்படிக் காட்டினார்கள்?
11 பவுல், லூக்கா, மற்றும் அவர்களுடைய நண்பர்கள் தங்களுடைய பயணத்தைத் தொடருவதற்கான நேரம் சீக்கிரத்திலேயே வந்தது. அவர்கள் பிரியாவிடை பெற்றதைப் பற்றிய விவரிப்பு நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. தீரு நகரத்தில் இருந்த சகோதரர்கள் பவுல்மீது எந்தளவு பாசம் வைத்திருந்தார்கள், அவருடைய ஊழியத்துக்கு எந்தளவு ஆதரவு தந்தார்கள் என்பது அந்தச் சந்தர்ப்பத்தில் பளிச்செனத் தெரிந்தது. அவர்களை வழியனுப்புவதற்காக ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று நிறைய பேர் கடற்கரை வரைக்கும் போனார்கள். அங்கே, எல்லாரும் ஒன்றுசேர்ந்து மண்டியிட்டு ஜெபம் செய்தார்கள், பின்பு விடைபெற்றார்கள். அதன்பின், பவுலும் லூக்காவும் அவர்களுடைய நண்பர்களும் கப்பலில் ஏறி, பித்தொலோமாய் நகரத்துக்குப் போனார்கள்; அங்கே சகோதரர்களைச் சந்தித்து அவர்களோடு ஒரு நாள் தங்கினார்கள்.—அப். 21:5-7.
12, 13. (அ) பிலிப்பு எப்படி ஒரு உண்மையுள்ள ஊழியராக இருந்தார்? (ஆ) அப்பாக்களுக்கு பிலிப்பு எப்படி ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார்?
12 அடுத்து, பவுலும் அவருடைய நண்பர்களும் செசரியாவுக்குப் பயணம் செய்தார்கள். அங்கே, “நற்செய்தியாளரான பிலிப்புவின் வீட்டுக்குப் போய் அவரோடு” தங்கினார்கள் என்று லூக்கா சொல்கிறார்.a (அப். 21:8) பிலிப்புவைப் பார்த்து அவர்கள் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார்கள். சுமார் 20 வருஷங்களுக்குமுன் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த எருசலேம் சபையில் உணவு வழங்கும் வேலையைச் செய்வதற்காக அப்போஸ்தலர்களால் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஊழியத்தில் நீண்ட காலம் வைராக்கியமாக ஈடுபட்டிருந்தார். துன்புறுத்தல் சமயத்தில் சீஷர்கள் எல்லாரும் சிதறடிக்கப்பட்டபோது, சமாரியாவுக்குப் போய் பிரசங்கிக்க ஆரம்பித்திருந்தார். பிறகு, எத்தியோப்பிய அதிகாரி ஒருவரிடம் பிரசங்கித்து அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தார். (அப். 6:2-6; 8:4-13, 26-38) எப்பேர்ப்பட்ட உண்மையுள்ள ஊழியர்!
13 ஊழியத்தில் பிலிப்பு கொஞ்சம்கூட தன் வைராக்கியத்தை இழக்கவில்லை. செசரியாவில் வாழ்ந்துவந்த அவர் ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்; லூக்கா அவரை ‘நற்செய்தியாளர்’ என்று சொன்னதிலிருந்து இது தெரிகிறது. அதோடு, பிலிப்புவுக்கு நான்கு மகள்கள் இருந்ததாகவும், அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லிவந்ததாகவும் அந்தப் பதிவில் வாசிக்கிறோம்; அதனால், அவர்கள் தங்களுடைய அப்பாவின் முன்மாதிரியைப் பின்பற்றினார்கள் என்பது தெரிகிறது.b (அப். 21:9) அப்படியானால், பிலிப்பு தன்னுடைய குடும்பத்தை ஆன்மீக விதத்தில் பலப்படுத்த கடினமாக உழைத்திருக்க வேண்டும். இன்று கிறிஸ்தவ அப்பாக்களும் அவருடைய உதாரணத்தைப் பின்பற்றி, ஊழியத்தில் முன்மாதிரியாக விளங்க வேண்டும்; அதோடு, ஊழியத்தை நேசிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
14. பவுல் தன் சகோதரர்களைச் சந்தித்ததால் என்ன நன்மைகள் வந்தன, அதேபோன்ற என்ன வாய்ப்புகள் இன்று நமக்கு இருக்கின்றன?
14 பவுல் ஒவ்வொரு இடமாகப் போனபோது, அங்கே இருந்த சகோதரர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களோடு நேரம் செலவு செய்தார். பயணக் கண்காணியான அவரையும் அவருடைய நண்பர்களையும் அந்தச் சகோதரர்கள் ஆசை ஆசையாக வரவேற்று உபசரித்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. “ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற” அப்படிப்பட்ட சந்திப்புகள் நிச்சயமாகவே அவர்கள் எல்லாருக்கும் உதவின. (ரோ. 1:11, 12) இன்றும் அதேபோன்ற வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. நாம் எவ்வளவு வசதிக்குறைவான வீட்டில் வாழ்ந்தாலும் சரி, வட்டாரக் கண்காணிக்கும் அவரது மனைவிக்கும் தங்க இடமளித்தோமென்றால் நிறைய நன்மைகளை அடைவோம்.—ரோ. 12:13.
“சாவதற்குக்கூட தயாராக இருக்கிறேன்” (அப். 21:10-14)
15, 16. அகபு என்ன செய்தியைச் சொன்னார், அதைக் கேட்டவர்கள் எப்படி உணர்ந்தார்கள்?
15 பவுல் பிலிப்புவோடு தங்கியிருந்த சமயத்தில் மதிப்புக்குரிய இன்னொருவர் வந்தார்; அவர் பெயர் அகபு. அவர் ஒரு தீர்க்கதரிசி என்பது பிலிப்புவின் வீட்டில் கூடியிருந்தவர்களுக்குத் தெரிந்திருந்தது; கிலவுதியு அரசனின் காலத்தில் கொடிய பஞ்சம் ஏற்படப்போகிறது என்று அவர் முன்னறிவித்திருந்தார். (அப். 11:27, 28) அதனால், ‘அகபு ஏன் இங்கே வந்திருக்கிறார்? இப்போது என்ன செய்தி சொல்லப்போகிறார்?’ என்றெல்லாம் அவர்கள் யோசித்திருக்கலாம். அவர்கள் அகபுவையே கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர் பவுலுடைய இடுப்புவாரை எடுத்தார். (இடுப்புவார் என்பது பணமும் பொருள்களும் வைப்பதற்காக இடுப்பில் கட்டப்பட்ட நீண்ட துணி.) பின்பு, அதை வைத்து தன் கால்களையும் கைகளையும் கட்டிக்கொண்டார். அதன்பின் ஒரு முக்கியமான செய்தியைச் சொன்னார். “கடவுளுடைய சக்தி சொல்வது என்னவென்றால், ‘இந்த இடுப்புவார் யாருக்குச் சொந்தமோ அவரை யூதர்கள் எருசலேமில் இப்படிக் கட்டி, மற்ற தேசத்து மக்களின் கைகளில் ஒப்படைப்பார்கள்’” என்றார்.—அப். 21:11.
16 பவுல் எருசலேமுக்குப் போவார் என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்தியது. அதோடு, பிரசங்க வேலையின் காரணமாக யூதர்கள் அவரை “மற்ற தேசத்து மக்களின் கைகளில் ஒப்படைப்பார்கள்” என்பதையும் அது வெளிப்படுத்தியது. இந்தத் தீர்க்கதரிசனத்தைக் கேட்டவர்கள் கலக்கமடைந்தார்கள். லூக்கா இப்படி எழுதுகிறார்: “இதைக் கேட்டபோது எருசலேமுக்குப் போக வேண்டாமென்று நாங்களும் அங்கிருந்தவர்களும் பவுலைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டோம். அதற்கு பவுல், ‘ஏன் இப்படி அழுது என்னை மனம்தளர வைக்கிறீர்கள்? எஜமானாகிய இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கைது செய்யப்படுவதற்கு மட்டுமல்ல, சாவதற்குக்கூட தயாராக இருக்கிறேன்’ என்று சொன்னார்.”—அப். 21:12, 13.
17, 18. பவுல் தன்னுடைய முடிவில் எப்படி உறுதியாக இருந்தார், சகோதரர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?
17 இந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: லூக்கா உட்பட அங்கிருந்த சகோதரர்கள் பவுலை எருசலேமுக்குப் போக வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்கிறார்கள். சிலர் கண்ணீர்விட்டு அழுகிறார்கள். அவர்களுடைய அன்பையும் அக்கறையையும் பார்த்து நெகிழ்ந்துபோகிற பவுல், “ஏன் . . . என்னை மனம்தளர வைக்கிறீர்கள்?” என்று கனிவாகக் கேட்கிறார்; “மனம்தளர வைக்கிறீர்கள்” என்பதற்கான கிரேக்கச் சொற்றொடரைச் சில மொழிபெயர்ப்புகள், “மனதை உடைக்கிறீர்கள்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. இருந்தாலும், பவுல் தன் தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறார்; தீருவிலிருந்த சகோதரர்களுடைய கெஞ்சல்களுக்கு இணங்காதது போலவே இவர்களுடைய கெஞ்சல்களுக்கும் கண்ணீருக்கும் அவர் இணங்குவதில்லை. அதற்குப் பதிலாக, தான் ஏன் எருசலேமுக்குப் போக வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்குகிறார். எப்பேர்ப்பட்ட உறுதி! எப்பேர்ப்பட்ட தைரியம்!! இயேசுவைப் போலவே, அவர் எருசலேமுக்குப் போக உறுதியாக இருக்கிறார். (எபி. 12:2) இயேசுவின் சீஷரான அவர் ஒரு உயிர்த் தியாகியாக ஆக வேண்டும் என்று விரும்பவில்லை; ஆனால் ஒருவேளை அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், அதை ஒரு கௌரவமாகவே நினைத்திருப்பார்.
18 பவுல் பேசியதைக் கேட்ட அந்தச் சகோதரர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். “நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை; அதனால், ‘யெகோவாவுடைய விருப்பப்படி நடக்கட்டும்’ என்று சொல்லி அமைதியாகிவிட்டோம்” என்று லூக்கா சொல்கிறார். (அப். 21:14) தாங்கள் சொன்னபடிதான் பவுல் நடக்க வேண்டும் என்று அவர்கள் பிடிவாதமாக இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, பவுல் சொல்வதைக் கேட்டு, அதை ஏற்றுக்கொண்டார்கள்; யெகோவாவின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடந்தார்கள்; அது கஷ்டமாக இருந்தாலும், அப்படிச் செய்தார்கள். பவுல் தன்னுடைய உயிருக்கு ஆபத்தாக முடியப்போகிற பயணத்தைச் செய்ய முடிவெடுத்தார். அன்பான சகோதரர்கள் அவருக்குத் தடை சொல்லாமல் இருந்திருந்தால், அவருக்குக் கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கும்.
19. பவுலுக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து என்ன முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
19 பவுலுக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்: கடவுளுடைய சேவையில் தியாகங்கள் செய்ய நினைக்கிறவர்களுக்கு நாம் ஒருபோதும் தடை சொல்லக் கூடாது. வாழ்வா, சாவா என்ற சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல, மற்ற பல சந்தர்ப்பங்களிலும் இந்தப் பாடத்தை நாம் பொருத்தலாம். உதாரணத்துக்கு, தங்களுடைய பிள்ளைகள் யெகோவாவின் சேவைக்காக வீட்டைவிட்டு ரொம்ப தூரம் போவதைப் பார்க்கிற நிறைய கிறிஸ்தவப் பெற்றோர்களுக்கு மனம் கஷ்டமாக இருந்தாலும், அவர்களைத் தடுக்காமல் இருக்க உறுதியாக இருக்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிலிஸ் தன்னுடைய ஒரே மகள் ஆப்பிரிக்காவில் மிஷனரி ஊழியம் செய்ய முடிவெடுத்தபோது தனக்கு எப்படி இருந்ததென விவரிக்கிறார்: “அவள் என்னைவிட்டு ரொம்ப தூரம் போகப் போகிறாள் என்று நினைத்தபோது, துக்கம் தொண்டையை அடைத்தது; மனம் பாரமாக இருந்தது. ஆனால், ஒரு பக்கம் பெருமையாகவும் இருந்தது. இதைப் பற்றி நிறைய ஜெபம் செய்தேன். அப்படிப் போவது அவளுடைய சொந்த முடிவாக இருந்ததால், நான் அதில் குறுக்கே வரவில்லை. கடவுளுடைய சேவைக்கு முதலிடம் தர வேண்டுமென்று நான்தானே அவளுக்குக் கற்றுக்கொடுத்திருந்தேன்! இப்போது, 30 வருஷங்களாக வெளிநாடுகளில் ஊழியம் செய்துவருகிறாள்; அவளுடைய உண்மைத்தன்மையை நினைத்து ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.” நாமும்கூட, தியாக மனப்பான்மை காட்டுகிற சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்துவது எவ்வளவு நல்லது!
“சகோதரர்கள் எங்களைச் சந்தோஷமாக வரவேற்றார்கள்” (அப். 21:15-17)
20, 21. பவுல் எப்போதும் மற்ற சகோதரர்களோடு இருப்பதையே விரும்பினார் என்பதை எது காட்டுகிறது, அவர் ஏன் அப்படியிருக்க விரும்பினார்?
20 பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டன; பவுல் எருசலேமுக்குக் கிளம்பினார்; சகோதரர்கள் அவர் கூடவே போனதன் மூலம் அவருக்கு முழு ஆதரவு காட்டினார்கள். பவுல் எருசலேமுக்குப் பயணம் செய்ய ஆரம்பித்ததிலிருந்தே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரும் அவருடைய நண்பர்களும் சகோதர சகோதரிகளோடு இருக்கவே விரும்பினார்கள். தீருவில், சகோதரர்களைக் கண்டுபிடித்து அவர்களோடு ஏழு நாட்கள் தங்கினார்கள். பித்தொலோமாய் நகரத்திலிருந்த சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அவர்களோடு ஒரு நாள் தங்கினார்கள். செசரியாவில், பிலிப்புவின் வீட்டில் நிறைய நாட்கள் தங்கினார்கள். அதன்பின், செசரியாவைச் சேர்ந்த சில சீஷர்கள் பவுலோடும் அவரது நண்பர்களோடும் எருசலேம்வரை போனார்கள்; அங்கே போனதும், மினாசோன் என்ற ஆரம்பகால சீஷர் தன்னுடைய வீட்டுக்கு அவர்களை வரவேற்று உபசரித்தார். எருசலேமிலிருந்த “சகோதரர்கள் எங்களைச் சந்தோஷமாக வரவேற்றார்கள்” என்று லூக்கா எழுதினார்.—அப். 21:17.
21 பவுல் எப்போதும் மற்ற சகோதரர்களோடு இருப்பதையே விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சகோதர சகோதரிகளிடமிருந்து நமக்கு இன்று உற்சாகம் கிடைப்பது போலவே அன்று அவருக்கும் கிடைத்தது. அந்த உற்சாகம்தான், தன்னைக் கொல்லத் துடித்துக்கொண்டிருந்த எதிரிகளைச் சந்திக்க அவருக்குத் தைரியத்தைத் தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
a “செசரியா—ரோம மாகாணமான யூதேயாவின் தலைநகரம்” என்ற பெட்டியை, பக்கம் 174-ல் பாருங்கள்.
b “சபையில் பெண்கள் போதகர்களாக இருந்தார்களா?” என்ற பெட்டியை, பக்கம் 177-ல் பாருங்கள்.