நீங்கள் ‘தாற்றுக்கோலை உதைத்துக் கொண்டிருக்கிறீர்களா?’
பைபிள் காலங்களில், பாரம் இழுத்துச் செல்லும் விலங்குகளை வேகமாக ஓடச் செய்வதற்கு தாற்றுக்கோல் பயன்படுத்தப்பட்டது; இது நீளமான ஒரு குச்சி, பொதுவாக இதன் நுனியில் உலோகத்தாலான கூர்மையான முள் இருக்கும். தாற்றுக்கோலால் குத்தும்போது அந்த விலங்கு முரண்டு பிடித்தால் என்னவாகும்? சுகத்திற்குப் பதிலாக அதற்கு வலிதான் மிஞ்சும்.
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து, தமது சீஷர்கள் சிலரை கைது செய்ய சென்றுகொண்டிருந்த சவுல் என்ற ஒருவருக்கு தரிசனமானபோது தாற்றுக்கோலைப் பற்றி பேசினார். கண்ணை கூசவைக்கும் ஒளியின் நடுவே, “‘சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கும்’” என்று இயேசு சொன்னதை சவுல் கேட்டார். கிறிஸ்தவர்களை இம்சைப்படுத்தியதன் மூலம் உண்மையில் கடவுளுக்கு எதிராகவே சவுல் போரிட்டுக் கொண்டிருந்தார், அப்படிப்பட்ட செயல் அவருக்குத்தான் தீங்கிழைக்கும்.—அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 26:14, பொது மொழிபெயர்ப்பு.
நாமும்கூட தெரியாமல் ‘தாற்றுக்கோலை உதைத்துக்’ கொண்டிருக்கக் கூடுமா? ‘ஞானிகளின் வார்த்தைகளை’ சரியான பாதையில் செல்லத் தூண்டும் தாற்றுக்கோல்களுக்கு பைபிள் ஒப்பிடுகிறது. (பிரசங்கி 12:11) பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் அறிவுரைகளுக்கு நாம் இடமளித்தால், சரியான பாதையில் செல்ல அவை நம்மை உந்துவிக்கும், வழிநடத்தும். (2 தீமோத்தேயு 3:16) அந்த உந்துவிப்புகளுக்கு எதிர்த்து நிற்போமாகில் நமக்குத்தான் தீங்கு.
இயேசுவின் வார்த்தைகளை இருதயத்தில் ஏற்று சவுல் தனது வழியை மாற்றிக் கொண்டதால் பிரியமான கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் ஆனார். கடவுளுடைய அறிவுரைகளுக்குச் செவிசாய்ப்பது அது போலவே நமக்கும் நித்திய ஆசீர்வாதங்களைத் தரும்.—நீதிமொழிகள் 3:1-6.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
L. Chapons/Illustrirte Familien-Bibel nach der deutschen Uebersetzung Dr. Martin Luthers