‘திரும்ப நிலைநாட்டப்படும் காலம்’ வெகு விரைவில்!
இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு சற்று முன்பு, ‘ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலில் திரும்ப நிலைநாட்டுவீர்?’ (NW) என அவரது சீஷர்கள் கேட்டனர். அந்த ராஜ்யம் வருவதற்கு சிறிது காலம் எடுக்கும் என இயேசு அவர்களுக்கு உணர்த்தினார். அந்தக் காலப்பகுதியில் சீஷர்கள் மகத்தான ஒரு வேலையை நிறைவேற்றுவார்கள். அவர்கள் “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும்” இயேசுவுக்குச் சாட்சிகளாயிருப்பார்கள்.—அப்போஸ்தலர் 1:6-8.
அந்த வேலை, சில நாட்களில், வாரங்களில், மாதங்களில் முடிந்துவிடும் வேலையல்ல. இருந்தாலும், சீஷர்கள் சற்றும் தயங்காமல் பிரசங்க வேலையில் உடனடியாக ஈடுபட்டனர். அதேசமயம் ராஜ்யம் திரும்ப நிலைநாட்டப்படும் விஷயத்தில் அவர்களுக்கிருந்த ஆர்வம் குன்றவேயில்லை. அதைப் பற்றி, எருசலேமில் கூடிய கூட்டத்தாரிடம் அப்போஸ்தலன் பேதுரு சொன்னதாவது: ‘யெகோவாவுடைய சந்நிதானத்திலிருந்து புத்துயிர் பெறும் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்த எல்லாம் திரும்ப நிலைநாட்டப்படும் காலங்கள் வருமளவும் இயேசு பரலோகத்தில் காத்திருக்கவேண்டும்.’—அப்போஸ்தலர் 3:19-21, NW.
‘திரும்ப நிலைநாட்டப்படும் காலம்,’ யெகோவாவிடமிருந்து ‘புத்துயிர் பெறும் காலமாக’ இருக்கும். இது இரண்டு விதமாக நிறைவேறும். முதலில், புத்துயிரளிக்கும் ஆவிக்குரிய பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும். இது இப்பொழுதே நிறைவேறி வருகிறது. அதற்கடுத்ததாக, பூமியில் சொல்லர்த்தமாக பரதீஸ் நிலைநாட்டப்படும்.
முதல் நிறைவேற்றம்
எருசலேமிலிருந்த கூட்டத்தாரிடம் அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டுக் காட்டியபடி, இயேசு கிறிஸ்து, ‘பரலோகத்தில் காத்திருக்க வேண்டும்.’ 1914 வரை காத்திருந்தார். அந்த வருடத்தில் அவர் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாக ஆட்சிசெய்ய ஆரம்பித்தார். அப்பொழுது யெகோவா தம் மகனை ‘அனுப்புவதாக’ பேதுரு முன்னுரைத்தார். அவரை அனுப்புவதன் அர்த்தம் என்ன? கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பாகத்தை வகிக்கும்படி இயேசுவுக்கு அனுமதியளிக்கப்போவதை அர்த்தப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியை அடையாள மொழியில் பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை [இயேசு கிறிஸ்துவின் வசம் ஒப்படைக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தை] அவள் [கடவுளுடைய பரலோக அமைப்பு] பெற்றாள்.”—வெளிப்படுத்துதல் 12:5.
ஆனால் கிறிஸ்துவின் ஆட்சிக்கு அடிபணிய இவ்வுலக ராஜ்யங்களுக்கு கொஞ்சம்கூட விருப்பம் இருக்கவில்லை. அவரது உண்மையான பிரஜைகளான யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக் கணைகளை அவை சரமாரியாக வீசின. சாட்சிகளோ, அப்போஸ்தலர்களைப் போல தயக்கமின்றி “இயேசுகிறிஸ்துவைக் குறித்துச் சாட்சி” கொடுத்துவந்தனர். (வெளிப்படுத்துதல் 12:17) இவர்களின் வேலைக்கு பல நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியது. 1918-ம் வருடத்தில் நியூ யார்க்கிலுள்ள புரூக்ளினில் அமைந்திருக்கும் உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் முக்கிய பிரமுகர்களின்மீது பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நீண்ட கால சிறைத்தண்டனை விதித்தனர். “பூமியின் கடைசிபரியந்தமும்” செய்யப்பட வேண்டிய நவீன கால பிரசங்க வேலை இனி எங்கே நடைபெறப்போகிறது என்றே அப்போதைக்குத் தோன்றியது.—வெளிப்படுத்துதல் 11:7-10.
இருந்தாலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த தலைமை காரியாலய பிரமுகர்கள் 1919-ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதன்பின் எல்லா குற்றச்சாட்டிலிருந்தும் விலக்களிக்கப்பட்டனர். சற்றும் தாமதியாமல் ஆவிக்குரிய அர்த்தத்தில் திரும்ப நிலைநாட்டப்படும் வேலையில் மும்முரமாய் ஈடுபடலாயினர். அன்று ஆரம்பித்த பிரசங்க வேலை, இன்றுவரை செழித்தோங்குகிறது!
கிறிஸ்து கட்டளையிட்டவற்றை எல்லா தேசத்தாருக்கும் கற்றுக்கொடுக்கும் மாபெரும் வேலை ஆரம்பித்தது. (மத்தேயு 28:20) அதன் பலன்? மிருக குணம் படைத்தவர்களும்கூட சாதுவாக மாறியதைக் கண்ணாரக் கண்டது புத்துயிரளித்தது. ‘மூர்க்கமாய்’ ‘தூஷண வார்த்தைகளையும்,’ ‘வம்பு வார்த்தைகளையும்’ பேசிவந்தவர்கள் அடியோடு மாறிவிட்டனர். ‘தங்களைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷ’ குணங்களை அவர்கள் வளர்த்துக்கொண்டனர். ஏசாயா தீர்க்கதரிசி பின்வருமாறு முன்னுரைத்தவை ஆன்மீக அர்த்தத்தில் இப்பொழுதே நிறைவேறி வருகின்றன: “அப்பொழுது ஓனாய் [ஓனாயைப் போன்று கடித்துக் குதறும் குணமுடையவர்களாய் இருந்தவர்கள்] ஆட்டுக்குட்டியோடே [சாதுவாக அமைதியாய் இருக்கும் குணமுடையவர்கள்] தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்.”—கொலோசெயர் 3:8-10; ஏசாயா 11:6, 9.
இரண்டாம் நிறைவேற்றம்—விரைவில்!
இன்று ஆவிக்குரிய பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இதுதவிர, இந்தப் பூமியில் சொல்லர்த்தமாக பரதீஸ் நிலைநாட்டப்படும் காலம் விரைவில் வரவிருக்கிறது. யெகோவா தேவன் நம் முன்னோர்களான ஆதாம் ஏவாளைப் படைத்து ஏதேன் என்ற தோட்டத்தில் வைத்தார். பூமியின் அந்த சிறிய பகுதி ஒரு பரதீஸாக இருந்தது. (ஆதியாகமம் 1:29-31) அதனால்தான் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும் என சொல்கிறோம். ஆனால் அப்படி நிலைநாட்டப்படுவதற்கு முன்பு, கடவுளை அவமதிக்கும் பொய் மதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். இது இவ்வுலகின் அரசியல் அமைப்புகளைக் கொண்டு நிறைவேற்றப்படும். (வெளிப்படுத்துதல் 17:15-18) அதன்பிறகு அந்த அரசியல் அமைப்புகளும் அவற்றின் ஆதரவாளர்களும் அடியோடு அழிக்கப்படுவர். முடிவாக, கடவுளின் மிகப் பெரிய எதிராளிகளான பிசாசாகிய சாத்தானும் அவனோடு சேர்ந்த பேய்களும் ஆயிரம் ஆண்டுகள் சிறை வைக்கப்படுவர். இந்தக் காலப்பகுதியில்தான் நிஜ பரதீஸ் முழுமையாய் நிலைநாட்டப்படும். அப்போது, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.” (ஏசாயா 35:1) பூமி முழுக்க தொல்லை என்ற பேச்சுக்கே இடமிராது. (ஏசாயா 14:7) இறந்துவிட்ட கோடிக்கணக்கானோர் உயிரடைவர். இவ்வாறு, மீட்பின் பலியின் அடிப்படையில் திரும்ப நிலைநாட்டப்படுவதன் நன்மைகளை அனைவரும் அனுபவிப்பர். (வெளிப்படுத்துதல் 20:12-15; 22:1, 2) தரணியெங்கும் சுற்றி வந்தாலும், குருடர், செவிடர், முடவர் என்போர் இருக்கமாட்டார். “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி முடிந்தவுடன், பிசாசும் அவனுடைய பேய்களும் கொஞ்சக் காலத்துக்கு விடுதலை செய்யப்படுவர். பூமிக்கான கடவுளுடைய நோக்கம் முழுமையாய் நிறைவேறியிருப்பதை அவர்கள் காண்பர். பிறகு அவர்களும் அழிக்கப்படுவர்.—வெளிப்படுத்துதல் 20:1-3.
திரும்ப நிலைநாட்டப்படும் காலப்பகுதியான ஆயிரம் வருடம் முடியும்போது, “சுவாசமுள்ள யாவும்” யெகோவாவைத் துதிக்கும்; அவை காலமெல்லாம் அவரைத் துதித்து பாடும். (சங்கீதம் 150:6) அவ்வாறு துதிப்பவர்கள் மத்தியில் நீங்களும் இருப்பீர்களா? நீங்களும் ஒருவராக இருக்க முடியும்.