சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி
“நீங்கள் . . . பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”—அப்போஸ்தலர் 1:8.
1. பைபிளைக் கற்பிக்கும் ஆசிரியர்களான நாம் எதற்கு கவனம் செலுத்துகிறோம், ஏன்?
திறமைமிக்க ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுப்பது என்பதற்கு மட்டுமல்ல, அதை எப்படி சொல்லிக்கொடுப்பது என்பதற்கும் கவனம் செலுத்துகிறார்கள். பைபிள் சத்தியத்தைப் பிரசங்கிக்கும் ஆசிரியர்களான நாமும் இதையே செய்கிறோம். பிரசங்கிக்கும் செய்திக்கும் பயன்படுத்தும் முறைகளுக்கும் நாம் கவனம் செலுத்துகிறோம். நம்முடைய செய்தி, அதாவது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி, மாறுவதில்லை, ஆனால் நாம் பயன்படுத்தும் முறைகளை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கிறோம். ஏன்? முடிந்தவரை அநேகருக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கே.
2. நம்முடைய பிரசங்க முறைகளை மாற்றிக்கொள்வதன் மூலம் யாரை நாம் பின்பற்றுகிறோம்?
2 பிரசங்க முறைகளை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதன் மூலம் கடவுளுடைய முற்கால ஊழியர்களை நாம் பின்பற்றுகிறோம். உதாரணமாக, அப்போஸ்தலன் பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இவ்வாறு கூறினார்: “யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், . . . நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். . . . பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.” (1 கொரிந்தியர் 9:19-23) இப்படி ஆட்களுக்கு ஏற்றவாறு வித்தியாசமான முறைகளைப் பயன்படுத்தியது பவுலுக்கு அதிக பலன் தந்தது. நாம் சொல்லும் செய்தியைக் கேட்கிற ஆட்களுக்கு ஏற்றவாறு கரிசனையோடு நம்முடைய பிரசங்கங்களை மாற்றிக்கொண்டால், நாமும் அதிக பலன் பெறுவோம்.
‘பூமியின் எல்லையெங்கும்’
3. (அ) பிரசங்க வேலையில் நாம் என்ன சவாலை எதிர்ப்படுகிறோம்? (ஆ) ஏசாயா 45:22-ல் உள்ள வார்த்தைகள் எப்படி இன்றைக்கு நிறைவேறி வருகின்றன?
3 பிராந்தியத்தின் அளவே, அதாவது ‘பூலோகமெங்கும்’ பிரசங்கிப்பதே, நற்செய்தியை அறிவிப்போர் எதிர்ப்படும் ஒரு பெரும் சவால். (மத்தேயு 24:14) கடந்த நூற்றாண்டில், அநேக நாடுகளில் நற்செய்தியைப் பரப்புவதற்கு கடவுளுடைய ஊழியர்கள் பலர் கடுமையாய் உழைத்தார்கள். அதன் பலன்? பிரமிப்பூட்டும் உலகளாவிய விஸ்தரிப்பு! 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், சில நாடுகளில் மட்டுமே பிரசங்க வேலை நடைபெற்று வந்தது. இன்றோ யெகோவாவின் சாட்சிகள் 235 நாடுகளில் மும்முரமாய் பிரசங்கித்து வருகிறார்கள்! உண்மையிலேயே ராஜ்ய நற்செய்தி ‘பூமியின் எல்லையெங்கும்’ அறிவிக்கப்பட்டு வருகிறது.—ஏசாயா 45:22.
4, 5. (அ) நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் முக்கிய பங்கு வகித்திருப்பவர்கள் யார்? (ஆ) வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கள் கிளை அலுவலக பிராந்தியத்தில் சேவை செய்பவர்களைக் குறித்து சில கிளை அலுவலகங்கள் என்ன சொல்லியிருக்கின்றன?
4 இத்தகைய வளர்ச்சிக்கு காரணங்கள் யாவை? அநேகம் இருக்கின்றன. உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் பயிற்சி பெற்ற மிஷனரிகளும், சமீப காலத்தில் ஊழியப் பயிற்சிப் பள்ளியில் பங்குபெற்ற 20,000-க்கும் அதிகமானோரும் இந்த வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். அது போலவே, சாட்சிகள் பெரும்பாலோர் ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படும் இடங்களுக்கு தங்களுடைய சொந்த செலவிலேயே சென்றிருக்கிறார்கள். இத்தகைய சுயதியாக மனப்பான்மையுடைய ஆண்களும் பெண்களும், பெரியோரும் சிறியோரும், மணமுடித்தவர்களும் முடிக்காதவர்களும் பூமியெங்கும் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். (சங்கீதம் 110:3; ரோமர் 10:18) இதற்காக அவர்கள் வெகுவாக பாராட்டப்படுகிறார்கள். கிளை அலுவலகப் பிராந்தியத்தில் தேவை அதிகம் இருக்கிற இடங்களில் சேவை செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களைப் பற்றி சில கிளை அலுவலகங்கள் எழுதியதை கவனியுங்கள்.
5 “இந்த அருமையான சாட்சிகள் ஒதுக்குப்புற இடங்களுக்குச் சென்று பிரசங்கிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறார்கள், புதிய சபைகளை ஸ்தாபிக்க உதவுகிறார்கள், உள்ளூர் சகோதர சகோதரிகளுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் பங்களிக்கிறார்கள்.” (ஈக்வடார்) “இங்கு சேவை செய்கிற நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர் நாட்டைவிட்டுப் போக வேண்டியிருந்தால், சபைகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கும். அவர்கள் இங்கிருப்பது ஓர் ஆசீர்வாதமே.” (டொமினிகன் குடியரசு) “எங்களுடைய சபைகள் பெரும்பாலானவற்றில், சகோதரிகள் அதிகமானோர் இருக்கிறார்கள், சில இடங்களில் 70 சதவீதத்தினர் வரை இருக்கிறார்கள். (சங்கீதம் 68:11, NW) இவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தில் புதியவர்கள், ஆனால் வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் மணமாகாத பயனியர் சகோதரிகள் இத்தகைய புதியவர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் பேருதவி அளிக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் இந்தச் சகோதரிகள் எங்களுக்கு அரும்பெரும் பரிசு!” (ஒரு கிழக்கு ஐரோப்பிய நாடு) வேறொரு நாட்டில் சேவை செய்வதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?a—அப்போஸ்தலர் 16:9, 10.
‘பலவித பாஷைக்காரராகிய பத்து மனுஷர்’
6. பிரசங்க வேலையின்போது மொழி ரீதியில் எதிர்படும் சவாலை சகரியா 8:23 எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?
6 பூமியில் பல்வேறு மொழிகள் பேசப்படுவது மற்றொரு பெரும் சவாலாகும். கடவுளுடைய வார்த்தை இவ்வாறு முன்னறிவித்தது: “அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்.” (சகரியா 8:23) இந்தத் தீர்க்கதரிசனத்தின் நவீனகால நிறைவேற்றத்தில், அந்தப் பத்து மனுஷர் வெளிப்படுத்துதல் 7:9-ல் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ள திரள்கூட்டத்தாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். ஆனாலும், சகரியா தீர்க்கதரிசனத்தின்படி, அந்தப் “பத்து மனுஷர்” சகல தேசத்திலிருந்து மட்டுமல்ல, ‘பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில்’ இருந்தும் வருவார்கள் என்பதைக் கவனியுங்கள். தீர்க்கதரிசனத்திலுள்ள இந்த முக்கிய விவரம் நிறைவேறியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோமா? ஆம், நிச்சயமாகவே பார்த்திருக்கிறோம்.
7. ‘பலவித பாஷைக்காரரிலுமிருந்து’ வந்தவர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதைக் குறித்து புள்ளிவிவரங்கள் என்ன காட்டுகின்றன?
7 புள்ளிவிவரங்கள் சிலவற்றை கவனியுங்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்பு நம்முடைய பிரசுரங்கள் 90 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக உயர்ந்துவிட்டது. வெகு சிலரே பேசுகிற மொழியாக இருந்தாலும்கூட, அந்த மொழியிலும் பிரசுரங்களை அச்சிடுவதற்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” எல்லா முயற்சியையும் செய்திருக்கிறது. (மத்தேயு 24:45, NW) உதாரணமாக, பைபிள் பிரசுரங்கள் இப்பொழுது கிரீன்லாந்து மொழியில் (47,000 பேர் பேசுகிறார்கள்) கிடைக்கின்றன, பலாவன் மொழியில் (15,000 பேர் பேசுகிறார்கள்) கிடைக்கின்றன, யாப்பீஸ் மொழியில் (7,000-க்கும் குறைவானவர்களே பேசுகிறார்கள்) கிடைக்கின்றன.
புதிய வாய்ப்புகளுக்கு வழிநடத்தும் ‘பெரிய கதவு’
8, 9. என்ன நிலைமை நமக்கு ‘பெரிய கதவை’ திறந்திருக்கிறது, இதற்கு ஆயிரக்கணக்கான சாட்சிகள் எப்படி பிரதிபலித்திருக்கிறார்கள்?
8 ஆனால் இன்றைய நாட்களில் பல்வேறு மொழிகளைப் பேசும் ஆட்களுக்கு நற்செய்தியைச் சொல்வதற்கென நாம் அயல்நாடு செல்ல வேண்டியதில்லை. சமீப ஆண்டுகளில், கோடிக்கணக்கான குடியேறிகளும் அகதிகளும் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு சென்றிருப்பது எண்ணற்ற பிறமொழி சமுதாயங்களை உருவாக்கியிருக்கிறது. உதாரணமாக, பிரான்சிலுள்ள பாரிஸ் நகரில் சுமார் 100 மொழிகள் பேசப்படுகின்றன. கனடாவிலுள்ள டோரான்டோவில் 125 மொழிகளும், இங்கிலாந்திலுள்ள லண்டனில் 300-க்கும் அதிகமான மொழிகளும் பேசப்படுகின்றன! இவ்வாறு அநேக சபை பிராந்தியங்களுக்கு பிற நாடுகளிலிருந்து ஜனங்கள் வந்திருப்பதால் எல்லா தேசத்தாருக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்குப் புதிய வாய்ப்புகள் எனும் ‘பெரிய கதவு’ திறந்திருக்கிறது.—1 கொரிந்தியர் 16:9.
9 மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஆயிரமாயிரம் சாட்சிகள் இந்தச் சவாலை ஏற்றிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோருக்கு, இது கஷ்டமாக இருக்கிறது. என்றாலும், குடியேறிகளும் அகதிகளும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு உதவி செய்கையில் கிடைக்கும் மகிழ்ச்சி இந்தக் கஷ்டத்தைப் போக்கிவிடுகிறது. சமீப வருடத்தில், மேற்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெற்ற மாவட்ட மாநாடுகளில் முழுக்காட்டப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதத்தினர் மற்றொரு தேசத்திலிருந்து வந்தவர்களே.
10. சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி புத்தகத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறீர்கள்? (பக்கம் 26-ல், “சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி சிறுபுத்தகத்தின் அம்சங்கள்” என்ற பெட்டியைக் காண்க.)
10 உண்மைதான், நம்மில் பெரும்பாலோர் ஓர் அயல்மொழியைக் கற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அப்படியிருந்தாலும், சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்திb என்ற புதிய வெளியீடான சிறுபுத்தகத்தை நன்கு பயன்படுத்தி, குடியேறிகளுக்கு உதவி செய்வதில் நாமும் பங்குகொள்ளலாம்; அதில், மனதைக் கவரும் பைபிள் செய்தி பல்வேறு மொழிகளில் உள்ளது. (யோவான் 4:37) இப்புத்தகத்தை ஊழியத்தில் நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
மக்கள் செவிசாய்க்காதபோது
11. சில பிராந்தியங்களில் நாம் எதிர்ப்படுகிற மற்றொரு சவால் என்ன?
11 இந்தப் பூமியில் சாத்தானுடைய செல்வாக்கு அதிகமாகையில், மற்றொரு சவாலையும் நாம் மிக அடிக்கடி எதிர்ப்படுகிறோம்; அதுதான் மக்கள் செவிசாய்க்காத சில பிராந்தியங்கள். ஆனால் இந்த நிலைமையைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் இப்படிப்பட்ட சூழல் நிலவுமென இயேசு முன்னறிவித்தாரே. நம்முடைய நாளைப் பற்றி பேசியபோது, அவர் இவ்வாறு கூறினார்: “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” (மத்தேயு 24:12) கடவுள் நம்பிக்கையும் பைபிள் மீது மதிப்பும் அநேகரிடத்தில் குறைந்துவிட்டன. (2 பேதுரு 3:3, 4) அதன் விளைவாக, உலகின் சில பகுதிகளில், வெகு சிலரே கிறிஸ்துவின் சீஷர்களாகிறார்கள். என்றாலும், மக்கள் செவிசாய்க்காத இத்தகைய பிராந்தியங்களில் உண்மையுடன் பிரசங்கிக்கும் நம் அன்பான சகோதர சகோதரிகளுடைய உழைப்பு வீண் அல்ல. (எபிரெயர் 6:10) ஏன்? பின்வரும் குறிப்பை கவனியுங்கள்.
12. நம்முடைய பிரசங்க வேலையின் இரண்டு நோக்கங்கள் யாவை?
12 நம்முடைய பிரசங்க வேலையின் இரண்டு முக்கிய நோக்கங்களை மத்தேயு சுவிசேஷம் சிறப்பித்துக் காட்டுகிறது. ஒன்று, ‘சகல ஜாதிகளையும் நாம் சீஷராக்குவது.’ (மத்தேயு 28:19) மற்றொன்று, ராஜ்ய செய்தி ஒரு “சாட்சியாக” அமைவது. (மத்தேயு 24:14) இந்த இரண்டு நோக்கங்களுமே முக்கியமானவை, ஆனால் இரண்டாவது நோக்கம் விசேஷ அர்த்தமுடையது. ஏன்?
13, 14. (அ) கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தின் தனிச்சிறப்புக்குரிய அம்சம் என்ன? (ஆ) முக்கியமாக, மக்கள் செவிசாய்க்காத பிராந்தியங்களில் பிரசங்கிக்கும்போது எதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்?
13 “உம்முடைய வருகைக்கும் [“பிரசன்னத்திற்கும், NW], உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று இயேசுவிடம் அப்போஸ்தலர்கள் கேட்டதாக பைபிள் எழுத்தாளர் மத்தேயு பதிவு செய்தார். (மத்தேயு 24:3) அதற்கு இயேசு, உலகளாவிய பிரசங்க வேலை அந்த அடையாளத்தின் தனிச்சிறப்புக்குரிய ஓர் அம்சமாக இருக்குமென கூறினார். இங்கு சீஷராக்குவதைப் பற்றி அவர் பேசினாரா? இல்லை. ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்’ என்று அவர் கூறினார். (மத்தேயு 24:14) இவ்வாறாக, ராஜ்ய பிரசங்க வேலைதானே அந்த அடையாளத்தின் முக்கிய அம்சம் என்பதை இயேசு காட்டினார்.
14 ஆகவே, ராஜ்ய நற்செய்தியை நாம் அறிவிக்கும்போது, சீஷராக்குவதில் நாம் எப்போதும் வெற்றி பெறாவிட்டாலும்கூட, “சாட்சி” கொடுப்பதில் வெற்றி பெறுகிறோம் என்பதை மனதில் வைத்திருக்கிறோம். மக்கள் எப்படி பிரதிபலித்தாலும்சரி, நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், இவ்வாறாக இயேசுவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதில் நாம் பங்குகொள்கிறோம். (ஏசாயா 52:7; வெளிப்படுத்துதல் 14:6, 7) மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஜார்டி என்ற இளம் சாட்சி இவ்வாறு குறிப்பிட்டார்: “மத்தேயு 24:14-ஐ நிறைவேற்றுவதில் என்னையும் யெகோவா பயன்படுத்துகிறார் என்பதை அறிந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.” (2 கொரிந்தியர் 2:15-17) நீங்களும் இப்படித்தான் உணருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
நம்முடைய செய்தியை எதிர்க்கும்போது
15. (அ) எதைக் குறித்து தம்மைப் பின்பற்றுவோருக்கு இயேசு முன்னெச்சரித்தார்? (ஆ) எதிர்ப்பின் மத்தியிலும் பிரசங்கிக்க எது நமக்கு உதவுகிறது?
15 ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் எதிர்ப்புகள் மற்றொரு சவாலாக இருக்கின்றன. தம்மைப் பின்பற்றுவோரை இயேசு இவ்வாறு முன்னெச்சரித்தார்: “என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” (மத்தேயு 24:9) ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போலவே, இயேசுவைப் பின்பற்றுவோர் இன்றைக்கும் பகைக்கப்பட்டிருக்கிறார்கள், எதிர்க்கப்பட்டிருக்கிறார்கள், துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:17, 18, 40; 2 தீமோத்தேயு 3:12; வெளிப்படுத்துதல் 12:12, 17) சில நாடுகளில், அரசாங்கத்தினால் அவர்கள் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், இத்தகைய நாடுகளில் வாழும் உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து ராஜ்ய நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கிக்கிறார்கள். (ஆமோஸ் 3:8; அப்போஸ்தலர் 5:29; 1 பேதுரு 2:21) அப்படிச் செய்வதற்கு, அவர்களுக்கும் உலகெங்கும் வாழ்கிற பிற சாட்சிகளுக்கும் எது உதவி செய்கிறது? யெகோவா தமது பரிசுத்த ஆவியின் மூலம் அவர்களைப் பலப்படுத்துகிறார்.—சகரியா 4:6; எபேசியர் 3:16; 2 தீமோத்தேயு 4:17.
16. பிரசங்க வேலைக்கும் பரிசுத்த ஆவிக்கும் இடையே உள்ள தொடர்பை இயேசு எவ்வாறு காட்டினார்?
16 தம்மைப் பின்பற்றுவோரிடம் பின்வருமாறு சொன்னபோது, கடவுளுடைய ஆவிக்கும் பிரசங்க வேலைக்கும் இடையே உள்ள தொடர்பை இயேசு வலியுறுத்திக் காட்டினார்: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, . . . பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:8; வெளிப்படுத்துதல் 22:17) இந்த வசனத்திலுள்ள சம்பவங்களின் வரிசைக்கிரமம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். முதலில், அந்த சீஷர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள், பிறகு உலகெங்கிலும் சாட்சி கொடுக்கும் வேலையை செய்தார்கள். ‘சகல ஜாதிகளுக்கும் சாட்சி’ கொடுப்பதில் சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தை கடவுளுடைய ஆவியால் மாத்திரமே அவர்கள் பெற்றார்கள். (மத்தேயு 24:13, 14; ஏசாயா 61:1, 2) ஆகையால், பரிசுத்த ஆவியை ‘சகாயர்’ என இயேசு குறிப்பிட்டது பொருத்தமாக இருந்தது. (யோவான் 15:26, NW) தமது சீஷர்களுக்குக் கடவுளுடைய ஆவி கற்பித்து வழிநடத்துமென அவர் கூறினார்.—யோவான் 14:16, 26; 16:13.
17. கடும் எதிர்ப்பை நாம் சந்திக்கும்போது, பரிசுத்த ஆவி எவ்வாறு நமக்கு உதவுகிறது?
17 நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலைக்குக் கடும் எதிர்ப்பு வரும்போது, எந்தெந்த வழிகளில் கடவுளுடைய ஆவி இன்று நமக்கு உதவுகிறது? கடவுளுடைய ஆவி நம்மைப் பலப்படுத்துகிறது, நம்மைத் துன்புறுத்துகிறவர்களை எதிர்க்கிறது. இதைத் தெரிந்துகொள்வதற்கு, சவுல் ராஜாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கவனியுங்கள்.
கடவுளுடைய ஆவி அவர்களை எதிர்க்கிறது
18. (அ) சவுலிடம் காணப்பட்ட மிக மோசமான மாற்றம் என்ன? (ஆ) தாவீதை துன்புறுத்துவதற்கு சவுல் பயன்படுத்திய முறைகள் யாவை?
18 இஸ்ரவேலின் முதல் அரசனாகிய சவுலின் ஆட்சி ஆரம்பத்தில் நன்கு செழித்தோங்கியது, ஆனால் பிற்காலத்தில் அவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதவராக ஆகிவிட்டார். (1 சாமுவேல் 10:1, 24; 11:14, 15; 15:17-23) அதன் விளைவாக, கடவுளுடைய ஆவியின் ஆதரவை அவர் இழந்தார். அடுத்த அரசனாக அபிஷேகம் பண்ணப்பட்டு கடவுளுடைய ஆவியின் ஆதரவைப் பெற்ற தாவீதின் மீது சவுல் மூர்க்க வெறிகொண்டார். (1 சாமுவேல் 16:1, 13, 14) தாவீதோ மிக எளிதில் அவருடைய தாக்குதலுக்கு இரையாகும் நிலையில் இருந்தார். சொல்லப்போனால், தாவீதின் கையில் வெறும் சுரமண்டலம்தான் இருந்தது, சவுலின் கையிலோ ஈட்டி இருந்தது. ஒருநாள் தாவீது தனது சுரமண்டலத்தை இசைத்துக் கொண்டிருந்த சமயத்தில், ‘சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப் போடுவேன் என்று ஈட்டியை அவர்மேல் எறிந்தார்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவருக்குத் தப்பினார்.’ (1 சாமுவேல் 18:10, 11) அதற்குப்பின், சவுல் தாவீதின் நண்பனும் தன்னுடைய மகனுமான யோனத்தானுடைய சொல்லுக்குச் செவிசாய்த்து, ‘[தாவீது] கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டார்.’ ஆனாலும், அதன் பிறகு சவுல் மீண்டும் ‘தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப் போடப் பார்த்தார்; இவர் சவுலுக்கு விலகினதினாலே, அவர் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது.’ தாவீதோ தப்பியோடினார், ஆனால் சவுல் அவரைப் பின்தொடர்ந்து சென்றார். அந்த முக்கியமான கட்டத்தில், கடவுளுடைய ஆவி சவுலின் எதிரியாக ஆனது. எவ்வாறு?—1 சாமுவேல் 19:6, 10.
19. பரிசுத்த ஆவி தாவீதை எவ்வாறு பாதுகாத்தது?
19 தீர்க்கதரிசியான சாமுவேலிடம் தாவீது தஞ்சம் புகுந்தார், ஆனால் தாவீதைப் பிடிக்க சவுல் தன்னுடைய ஆட்களை அனுப்பினார். என்றாலும், அவர்கள் தாவீது மறைந்திருந்த இடத்திற்கு வந்தபோது, “சவுலினுடைய சேவகரின்மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.” கடவுளுடைய ஆவி அவர்களை மேற்கொண்டதால் தாங்கள் வந்த நோக்கத்தையே அவர்கள் மறந்துவிட்டார்கள். தாவீதைப் பிடிக்க இன்னும் இருமுறை சவுல் தனது ஆட்களை அனுப்பினார், அப்பொழுதும் இதுவே சம்பவித்தது. கடைசியாக, சவுல் ராஜாவே தாவீதைத் தேடிப் போனார், ஆனால் சவுலும்கூட கடவுளுடைய ஆவியை எதிர்த்துநிற்க முடியவில்லை. சொல்லப்போனால், “அன்று பகல் முழுவதும் இராமுழுவதும்” பரிசுத்த ஆவி அவரை செயலற்றவராக்கியது—இதற்கிடையே தாவீது தப்பியோடுவதற்குப் போதுமான சமயம் கிடைத்தது.—1 சாமுவேல் 19:20-24.
20. தாவீதை சவுல் துன்புறுத்திய பதிவிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்?
20 சவுலையும் தாவீதையும் பற்றிய இந்தப் பதிவு நமக்கு பலப்படுத்தும் ஒரு பாடமாக இருக்கிறது. அதாவது கடவுளுடைய ஆவி எதிர்த்து நிற்கும்போது, கடவுளுடைய ஊழியர்களைத் துன்புறுத்துபவர்கள் வெற்றிபெற முடியாது. (சங்கீதம் 46:11; 125:2) இஸ்ரவேலின் மீது தாவீது அரசராக ஆவது யெகோவாவின் நோக்கமாக இருந்தது. அதை எவருமே மாற்ற முடியவில்லை. நம்முடைய நாளில், ‘ராஜ்யத்தின் நற்செய்தி பிரசங்கிக்கப்படும்’ என்பதை யெகோவா தீர்மானித்திருக்கிறார். அதை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது.—அப்போஸ்தலர் 5:40, 42.
21. (அ) இன்று எதிரிகள் சிலர் எவ்வாறு செயல்படுகிறார்கள்? (ஆ) நாம் எதில் நம்பிக்கையுடன் இருக்கலாம்?
21 சில மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் பொய்களைப் பரப்புகிறார்கள், நம்மைத் தடுப்பதற்கு வன்முறையையும் பயன்படுத்துகிறார்கள். என்றாலும், ஆவிக்குரிய விதத்தில் தாவீதை யெகோவா பாதுகாத்தது போல், அவருடைய ஜனங்களையும் இன்று அவர் பாதுகாப்பார். (மல்கியா 3:6) ஆகவே, நாமும் தாவீதைப் போல், “தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” என்று நம்பிக்கையுடன் சொல்வோமாக. (சங்கீதம் 56:11; 121:1-8; ரோமர் 8:31) சகல தேசத்தாருக்கும் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை செய்கையில், யெகோவாவின் உதவியால் எல்லா சவால்களையும் நாம் தொடர்ந்து எதிர்கொள்வோமாக.
[அடிக்குறிப்புகள்]
a பக்கம் 22-ல், “ஆழ்ந்த மனதிருப்தி” என்ற பெட்டியைக் காண்க.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• பிரசங்கிக்கும் முறைகளை ஏன் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நாம் மாற்றிக்கொள்கிறோம்?
• எந்தப் புதிய வாய்ப்புகளுக்கு வழிநடத்தும் ‘பெரிய கதவு’ திறக்கப்பட்டுள்ளது?
• மக்கள் நன்கு செவிசாய்க்காத பிராந்தியங்களிலும்கூட, நம்முடைய பிரசங்க வேலையினால் என்ன நிறைவேற்றப்படுகிறது?
• ராஜ்ய பிரசங்க வேலையை ஏன் எந்தவொரு எதிரியும் தடுத்து நிறுத்த முடியாது?
[பக்கம் 22-ன் பெட்டி]
ஆழ்ந்த மனதிருப்தி
“ஒன்று சேர்ந்து யெகோவாவுக்குச் செய்யும் சேவையில் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவித்து மகிழ்கிறார்கள்.” ஸ்பெய்னிலிருந்து பொலிவியாவுக்கு மாறிச்சென்ற ஒரு குடும்பத்தாரை இது விவரிக்கிறது. ஒரு தனித்த தொகுயினருக்கு உதவி செய்ய அந்தக் குடும்பத்தினரின் மகன் சென்றிருந்தான். அவன் பெற்ற சந்தோஷம் அவனுடைய பெற்றோர்களையும் கவர்ந்தது. விரைவில், 14 முதல் 25 வயதுடைய நான்கு பையன்கள் உட்பட, அவர்கள் அனைவரும் அங்கு சேவை செய்ய சென்றார்கள். அந்தப் பையன்களில் மூவர் பயனியர் ஊழியம் செய்கிறார்கள், இவர்கள் இடம் மாறிச்செல்ல காரணமாயிருந்த அந்தப் பையன் சமீபத்தில் ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொண்டார்.
“நிறைய சவால்கள் இருக்கின்றன” என கூறுகிறார் கிழக்கு ஐரோப்பாவில் சேவிக்கும் கனடாவைச் சேர்ந்த 30 வயது ஏன்ஜெலிகா. “ஆனால் ஊழியத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்வதில் நான் திருப்தியை கண்டடைந்தேன். நான் செய்யும் உதவிக்காக உள்ளூர் சாட்சிகள் நன்றியுணர்ச்சி பொங்க சொன்ன வார்த்தைகள் என் இதயத்தைத் தொட்டன.”
“நாங்கள் பழகிக்கொள்ள வேண்டிய அநேக பழக்கவழக்கங்கள் இருந்தன” என அன்னா மற்றும் லாரா விவரிக்கிறார்கள்; சுமார் 28 வயதுடைய உடன்பிறந்த சகோதரிகள், அமெரிக்காவைச் சேர்ந்த இவர்கள் டொமினிகன் குடியரசில் சேவை செய்கிறார்கள். “என்றாலும், உற்சாகமிழக்காமல் எங்களுடைய ஊழிய வேலையை தொடர்ந்து செய்தோம். நாங்கள் பைபிள் படிப்புகள் நடத்துபவர்களில் ஏழு பேர் இப்பொழுது கூட்டங்களுக்கு வருகிறார்கள்.” சபையே இல்லாத ஒரு நகரத்தில் ராஜ்ய பிரஸ்தாபிகள் அடங்கிய ஒரு தொகுதியை ஒழுங்கமைப்பதில் இந்த இரண்டு சகோதரிகளும் சிறந்த பங்காற்றினார்கள்.
சுமார் 28 வயதுடைய லாரா என்ற சகோதரி, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அயல்நாட்டில் சேவை செய்து வருகிறார். அவர் கூறுகிறார்: “நான் வேண்டுமென்றே என்னுடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்கிறேன். வறுமையில் இருக்கும்போதுதான் எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்றல்ல, நாமே அதை தெரிவு செய்ய வேண்டும். அதுவே புத்திசாலித்தனமும்கூட என்பதை பிரஸ்தாபிகள் புரிந்துகொள்ள உதவுகிறது. பிறருக்கு உதவி செய்வது, முக்கியமாக இளைஞர்களுக்கு உதவி செய்வது, எனக்கு உற்சாகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது; அயல்நாட்டில் சேவை செய்கையில் வரும் கஷ்டங்களைச் சமாளிக்க இது எனக்குப் பெரிதும் உதவுகிறது. வேறு எப்பேர்ப்பட்ட வாழ்க்கைக்காகவும் இதை விட்டுக்கொடுக்க மாட்டேன், யெகோவா அனுமதிக்கும் வரை நான் தொடர்ந்து செய்வேன்.”
[பக்கம் 26-ன் பெட்டி/படம்]
சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி சிறுபுத்தகத்தின் அம்சங்கள்
சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற இச்சிறு புத்தகத்தில் ஒருபக்க செய்தி ஒன்று உள்ளது; சில நாடுகளின் பதிப்புகளில் இது 92 மொழிகளில் கிடைக்கிறது. வீட்டுக்காரர் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, அவரிடம் நீங்கள் பேசுவது போலவே இருக்கும்.
இந்தச் சிறுபுத்தகத்தின் முன்னுரையில், நமக்குப் புரியாத மொழியைப் பேசுபவர்களுக்குப் பயனுள்ள உதவி அளிக்க அநேக படிகளை நாம் எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. தயவுசெய்து இந்தப் படிகளை கவனமாக வாசித்து அதிக ஜாக்கிரதையுடன் பின்பற்றுங்கள்.
பொருளடக்கத்தில் மொழிகள் மட்டுமல்ல, அவற்றிற்குரிய குறியீடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பிற மொழி துண்டுப்பிரதிகளிலும் பிரசுரங்களிலும் அச்சிடப்பட்டுள்ள மொழி குறியீடுகளைக் கண்டுபிடிக்க இந்த அம்சம் உங்களுக்கு உதவுகிறது.
[படம்]
ஊழியத்தில் இச்சிறு புத்தகத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
[பக்கம் 23-ன் படங்கள்]
நமது பைபிள் பிரசுரங்கள் இப்பொழுது 400-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன
கானா
லாப்லாந்து (சுவீடன்)
பிலிப்பைன்ஸ்
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படும் இடங்களில் நீங்கள் சேவை செய்ய முடியுமா?
ஈக்வடார்
டொமினிகன் குடியரசு