பைபிள் புத்தக எண் 13—1 நாளாகமம்
எழுத்தாளர்: எஸ்றா
எழுதப்பட்ட இடம்: எருசலேம் (?)
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 460
காலப்பகுதி: 1 நாளாகமம் 9:44-க்குப் பின்: பொ.ச.மு. 1077-1037
ஒன்று நாளாகமத்தில் சலிப்பூட்டும் வெறும் குடும்ப பட்டியல்கள்தான் இருக்கின்றனவா? இது சாமுவேல் மற்றும் இராஜாக்கள் புத்தகங்களில் சொல்லப்பட்டவற்றை வெறுமனே திரும்பவும் சொல்கிற புத்தகமா? இல்லவே இல்லை! ஏவப்பட்ட பதிவின் தகவல்மிக்க, முக்கியமான பாகம் இது. எழுதப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஜனத்தையும் அவர்களது வணக்கத்தையும் திரும்ப ஒழுங்குபடுத்தி அமைப்பதில் இன்றியமையாததாக இருந்தது. பிற்பட்ட நாட்களிலும், இன்றைக்கும் கடவுளுடைய வணக்கத்தின் மாதிரியை குறிப்பிடுவதில் முக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. வேதாகமம் முழுவதிலுமே காணப்படும் யெகோவாவுக்கு துதி செலுத்தும் மிகவும் அழகுவாய்ந்த சொற்றொடர்கள் சில ஒன்று நாளாகமத்தில் அடங்கியுள்ளன. யெகோவாவின் நீதியுள்ள ராஜ்யத்தைப் பற்றிய அருமையான முன்நிழலை இது அளிக்கிறது. அந்த ராஜ்யத்தில் நம்பிக்கை வைக்கும் அனைவரும் இதைப் படித்து பயன்பெற வேண்டும். நாளாகம புத்தகங்கள் இரண்டும் காலாகாலமாக யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் மதிப்புள்ளவையாக போற்றி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. பைபிள் மொழிபெயர்ப்பாளராகிய ஜெரோம் ஒன்று மற்றும் இரண்டு நாளாகமங்களைப் பற்றி உயர்வான எண்ணத்தை கொண்டிருந்தார். அதன் காரணமாகத்தான் அவற்றை “பழைய ஏற்பாட்டின் சுருக்கம்” என்பதாக கருதினார். “அவை உயர்வான சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தவையாக இருப்பதால், அவற்றை அறியாமல், பரிசுத்த எழுத்துக்களை அறிந்திருப்பதாக எண்ணிக்கொள்கிறவன், உண்மையில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான்”a என்று கூறினார்.
2 நாளாகமத்தின் இரண்டு புத்தகங்களும் முதலில் ஒரே புத்தகமாக, அல்லது சுருளாக இருந்தது. பிறகு வசதிக்காக இது பிரிக்கப்பட்டது. நாளாகமம் ஏன் எழுதப்பட்டது? அதன் சூழமைவை கவனியுங்கள். பாபிலோனிலிருந்து விடுதலையாகி ஏறக்குறைய 77 ஆண்டுகள் கடந்து விட்டன. யூதர்கள் தங்களுடைய தேசத்தில் மீண்டுமாக குடியேறியிருந்தனர். எருசலேமில் ஆலயம் திரும்ப கட்டப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் யெகோவாவின் வணக்கத்திலிருந்து விலகி செல்லும் ஆபத்தான போக்கு அங்கு நிலவியது. பெர்சிய அரசன், நியாயாதிபதிகளையும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை (அரசனின் சட்டத்தையும்கூட) போதிக்கும் போதகர்களையும் நியமிக்க எஸ்றாவுக்கு அதிகாரம் அளித்திருந்தார். யெகோவாவின் ஆலயத்தை அழகுபடுத்தவும் அவருக்கு அரசன் அதிகாரமளித்தார். அங்கீகரிக்கப்பட்டவர்கள் மாத்திரமே ஆசாரிய வேலை செய்வதற்கு திருத்தமான வம்சாவளி பட்டியல்கள் தேவைப்பட்டன. மேலும் அந்தந்த கோத்திரத்தாருக்குரிய சுதந்தரத்தை உறுதிப்படுத்தவும் இந்த பட்டியல் தேவைப்பட்டது; ஏனெனில், ஆசாரியத்துவம் இந்தச் சுதந்தரங்களினால்தான் ஆதரிக்கப்பட்டது. மேலும், ராஜ்யம் சம்பந்தப்பட்ட யெகோவாவின் தீர்க்கதரிசனங்களை கருதுகையில், யூதா மற்றும் தாவீதினுடைய வம்சாவளியின் தெளிவான, நம்பகமான ஒரு பதிவு முக்கியமானது.
3 திரும்ப நிலைநாட்டப்பட்ட யூதர்களை மந்தமான நிலையிலிருந்து எழுப்பவும், யெகோவாவின் உடன்படிக்கைப்படி, அவரது பற்றுமாறா அன்பைப் பெற்றிருப்பவர்கள் அவர்களே என்பதை உணர வைக்கவும் எஸ்றா மிகுந்த ஆவலுடையவராக இருந்தார். ஆகையால், நாளாகமங்களில், அந்த தேசத்தின் வரலாற்றையும் முதல் மனிதனாகிய ஆதாம் வரையாக செல்லும் மனிதவர்க்கத்தின் தொடக்கத்தை பற்றிய முழு விவரத்தையும் அவர்கள் முன் வைத்தார். தாவீதின் ராஜ்யமே மையமாக இருந்தது. ஆகவே, முற்றிலுமாக விலகி சென்றுவிட்ட பத்துக்கோத்திர ராஜ்யத்தை பற்றிய பதிவை எஸ்றா ஏறக்குறைய விட்டுவிட்டார். மாறாக யூதாவின் சரித்திரத்திற்கே அவர் முக்கியமாய் கவனம் செலுத்துகிறார். யூதாவின் மிகப் பெரிய அரசர்களை, ஆலயத்தை கட்டுபவர்களாகவும் அல்லது அதை திரும்ப புதுப்பிப்பவர்களாகவும் கடவுளுடைய வணக்கத்தில் ஆர்வத்தோடு முன்நின்று வழிநடத்துபவர்களாகவும் விவரித்தார். அந்த ராஜ்யம் கவிழ்க்கப்பட்டதற்கு வழிநடத்தின மத சம்பந்தமான பாவங்களை அவர் குறிப்பிட்டார். அதேசமயம் திரும்ப நிலைநாட்டப்படுவது சம்பந்தமான கடவுளுடைய வாக்குறுதிகளையும் அறிவுறுத்தினார். ஆலயம், ஆசாரியர்கள், லேவியர்கள், தலைசிறந்த பாடகர்கள் போன்றவற்றைக் குறித்து அநேக விவரங்களை அளிப்பதன் மூலமாக தூய்மையான வணக்கத்தின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினார். இப்படிப்பட்ட ஒரு சரித்திரப் பதிவு இருப்பது இஸ்ரவேலருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் சிறையிருப்பிலிருந்து நாடு திரும்புவதற்கான காரணத்தை இப்பதிவு சுட்டிக்காட்டியது. எருசலேமில் யெகோவாவின் வணக்கத்தை திரும்ப நிலைநாட்டுவதே அந்த காரணம்.
4 நாளாகமங்களை எஸ்றா எழுதினார் என்பதற்கு என்ன அத்தாட்சி? இரண்டு நாளாகமத்தின் முடிவான இரண்டு வசனங்களும் எஸ்றா புத்தகத்தின் ஆரம்பத்திலுள்ள முதல் இரண்டு வசனங்களும் ஒன்றேதான். மேலும் இரண்டு நாளாகமத்தின் கடைசி வாக்கியம் எஸ்றா 1:3-ல் முடிவடைகிறது. ஆகையால், நாளாகமங்களின் எழுத்தாளரே, எஸ்றா புத்தகத்தை எழுதியவராக இருந்திருக்க வேண்டும். எழுத்துநடை, மொழிநடை, சொற்கள், எழுத்துக்கூட்டுதல் ஆகியவற்றில் நாளாகம புத்தகங்களும் எஸ்றா புத்தகமும் ஒரே மாதிரி இருப்பதிலிருந்து இது மேலுமாக நிரூபிக்கப்படுகிறது. இந்த இரண்டு புத்தகங்களிலும் காணப்படும் சில சொற்றொடர்கள் பைபிளின் வேறு எந்த புத்தகத்திலும் காணப்படுவதில்லை. எஸ்றா புத்தகத்தை எழுதிய எஸ்றாவே நாளாகம புத்தகங்களையும் எழுதியிருக்க வேண்டும். யூத பாரம்பரியம் இந்த முடிவை ஆதரிக்கிறது.
5 நம்பகமானதும் திருத்தமானதுமான இந்த சரித்திரத்தை தொகுப்பதற்கு எஸ்றாவை பார்க்கிலும் தகுதியுள்ளவர் வேறு யாரும் இல்லை. ‘யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை ஆராயவும் அதின்படி செய்யவும் இஸ்ரவேலிலே நியமங்களையும் தீர்ப்புகளையும் உபதேசிக்கவும் எஸ்றா தன் இருதயத்தை நேராக்கியிருந்தார்.’ (எஸ்றா 7:10, தி.மொ.) தம்முடைய பரிசுத்த ஆவியை அளிப்பதன் மூலம் யெகோவா அவருக்கு உதவி செய்தார். எஸ்றாவிடம் கடவுளுடைய ஞானம் இருப்பதை பெர்சிய உலக வல்லரசின் அரசன் உணர்ந்துகொண்டான். இதன் காரணமாக யூத மாகாண எல்லைக்குள் அதிகமான அதிகாரங்களை அவருக்கு ஒப்புவித்தான். (எஸ்றா 7:12-26) இவ்வாறு கடவுளாலும் அரசனாலும் அதிகாரம் பெற்ற எஸ்றா, கிடைத்த மிகச் சிறந்த ஆதாரப் பதிவுகளிலிருந்து இந்த விவரத்தை தொகுத்திருக்க முடியும்.
6 எஸ்றா தனிச்சிறப்புமிக்க ஆராய்ச்சியாளர். யூத சரித்திரத்தின் பழைய பதிவுகளை, அதாவது சம்பவங்கள் நிகழ்ந்த சமயத்தில் வாழ்ந்த நம்பகமான தீர்க்கதரிசிகளாலும் அரசாங்க பதிவாளர்களாலும் பொது ஆவணங்களை காப்பவர்களாலும் தொகுக்கப்பட்ட பதிவுகளை ஆராய்ச்சி செய்தார். அவர் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் அரசாங்க ஆவணங்கள், வம்சாவளி பதிவுகள், தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட சரித்திரப்பூர்வ ஏடுகள், கோத்திர அல்லது குடும்பத் தலைவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் போன்றவற்றில் சிலவற்றையும் ஆராய்ந்திருக்க வேண்டும். இதுபோன்ற குறைந்தபட்சம் 20 தகவல் மூலங்களை எஸ்றா குறிப்பிடுகிறார்.b இவ்வாறு விவரமாக அவற்றை மேற்கோள் காட்டியது எதை சுட்டிக்காட்டியது? தன்னுடைய தகவல் மூலங்களை சரிபார்க்க விரும்பிய அக்காலத்து மக்களுக்கு எஸ்றா நேர்மையுடன் வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வார்த்தையின் நேர்மைக்கும் நம்பகத் தன்மைக்கும் போதுமான ஆதாரத்தை அளிக்கிறது. நாளாகம புத்தகங்களுடைய திருத்தமான தன்மையில் எஸ்றாவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. இப்புத்தகங்களை நம்புவதற்கு நமக்கும்கூட அதே காரணம் இருக்கலாம்.
7 பெர்சிய அரசன் அர்தசஷ்டா லாங்கிமானஸின் ஏழாவது ஆண்டாகிய பொ.ச.மு. 468-ல் எஸ்றா ‘பாபிலோனிலிருந்து வந்தார்.’ மேலும் பொ.ச.மு. 455-ல் நெகேமியாவின் குறிப்பிடத்தக்க வருகையைப் பற்றி எஸ்றா பதிவு செய்யவில்லை. எனவே, இந்த தேதிகளுக்கிடையில், பெரும்பாலும் பொ.ச.மு. 460-ல் நாளாகமம் எருசலேமில் எழுதி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். (எஸ்றா 7:1-7; நெ. 2:1-18) ‘கடவுளால் ஏவப்பட்டதும் பயனுள்ளதுமான முழு வேதாகமத்தின்’ பாகமாகவே நாளாகமத்தை எஸ்றாவின் நாளைய யூதர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அதை டிவ்ரே ஹேய்யாமிம் (Div·rehʹ Hai·ya·mimʹ) என அழைத்தனர். இதன் அர்த்தம், “நாட்களின் சம்பவங்கள்,” அதாவது, நாட்களின் அல்லது காலங்களின் சரித்திரம் என்பதாகும். ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு பின்பு, கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பாளர்களும் நாளாகமத்தை அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்த்துக்கொண்டனர். அவர்கள் இந்த புத்தகத்தை இரண்டு பாகங்களாக பிரித்தனர். அதை சாமுவேல் மற்றும் இராஜாக்கள் புத்தகங்களுக்கு அல்லது அக்காலத்திலிருந்த முழு பைபிளுக்கு கூடுதல் தகவலளிப்பதாக எண்ணி, அதை பரலீப்போமீனன் (Pa·ra·lei·po·meʹnon) என அழைத்தனர். இதன் பொருள் “கடந்துபோன காரியங்கள் (சொல்லப்படாமல் விடப்பட்டவை; விட்டுவிடப்பட்டவை)” என்பதாகும். இந்தப் பெயர் அதற்கு மிகப் பொருத்தமானதாக இல்லாவிட்டாலும், நாளாகமத்தை அவர்கள் நம்பகமானதாகவும், தேவாவியால் ஏவப்பட்டதாகவும் கருதினார்கள் என அவர்களுடைய செயல் காட்டுகிறது. லத்தீன் வல்கேட்டை தயாரிக்கையில் ஜெரோம் பின்வருமாறு ஆலோசனை கூறினார்: “[அவற்றை] நாம் தேவ சரித்திரம் முழுவதன் க்ரோனிக்கோன் (Khro·ni·konʹ) என்று பொருத்தமாக அழைக்கலாம்.” இதிலிருந்தே (ஆங்கிலத்தில்) “க்ரானிக்கல்ஸ்” (நாளாகமம்) என்ற பெயர் வந்திருக்க வேண்டும். நிகழும் சம்பவங்களின் வரிசைக்கிரமமான பதிவே நாளாகமம் ஆகும். ஒன்று நாளாகமம், வம்சாவளி பட்டியல்களை குறிப்பிட்ட பின்பு அரசன் தாவீதின் காலத்துக்கே, அதாவது பொ.ச.மு. 1077 முதல் தாவீதின் மரணம் வரையான காலப்பகுதிக்கே முக்கியமாய் கவனம் செலுத்துகிறது.
ஒன்று நாளாகமத்தின் பொருளடக்கம்
8 இந்த ஒன்று நாளாகமம் புத்தகம் இயல்பாகவே இரண்டு பகுதிகளாக பிரிகிறது: முதல் 9 அதிகாரங்களில் வம்சாவளி பட்டியல்களே முக்கியமாக உள்ளன. கடைசி 20 அதிகாரங்களில் சவுலின் மரணத்திலிருந்து தாவீதின் ஆட்சியின் முடிவு வரையாக 40 ஆண்டுகளின்போது நடந்த சம்பவங்கள் அடங்கியுள்ளன.
9 வம்சாவளி பட்டியல்கள் (1:1–9:44). இந்த அதிகாரங்கள் ஆதாமிலிருந்து செருபாபேல் வரையான வம்சாவளி பட்டியலைத் தருகின்றன. (1:1; 3:19-24) பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் செருபாபேலின் வம்சாவளியை பத்தாவது தலைமுறை வரை கொண்டு செல்கின்றன. பொ.ச.மு. 537-ல் அவர் எருசலேமுக்கு திரும்பிவிட்டார். ஆகவே எஸ்றா இப்புத்தகத்தை எழுதி முடித்த ஆண்டாகிய பொ.ச.மு. 460-க்குள் அத்தனை தலைமுறைகள் பிறந்திருப்பதற்கு போதிய காலம் இருந்திருக்காது. எனினும், எபிரெய மூலவாக்கியம் இந்த பகுதியில் முடிவுறாமல் இருக்கிறது. பட்டியலில் குறிப்பிட்டுள்ள பலர் செருபாபேலோடு எந்த முறையில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதை தீர்மானிக்க முடியாது. எனவே, சிலர் சொல்வதைப் போல் நாளாகம புத்தகங்கள் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக சொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை.
10 முதலாவது ஆதாமிலிருந்து நோவா வரையாக பத்து தலைமுறைகளின் விவரங்கள் கொடுக்கப்படுகின்றன. பின்பு ஆபிரகாம் வரையாக பத்து தலைமுறைகள் பட்டியலிடப்படுகின்றன. ஆபிரகாமின் குமாரர்களும் அவர்களுடைய சந்ததியும்; சேயீர் மலைப்பிரதேசத்தில் வாழ்ந்த ஏசாவும் சேயீரின் சந்ததியாரும்; ஏதோமின் தொடக்க கால அரசர்களும் பட்டியலிடப்பட்டுள்ளனர். எனினும், இரண்டாம் அதிகாரத்திலிருந்து இந்த பதிவு இஸ்ரவேல் அல்லது யாக்கோபின் சந்ததியினருக்கு கவனத்தை செலுத்துகிறது. அவருடைய வம்சாவளி பட்டியல் முதலாவது யூதாவின் மூலமாகவும், பிறகு பத்து தலைமுறை வழியாக தாவீது வரைக்கும் வரிசையாக செல்லுகிறது. (2:1-14) லேவியின் கோத்திரத்துக்கும் பிரதான ஆசாரியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மற்ற கோத்திரங்கள் பட்டியலிடப்படுகின்றன. மேலும் பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த அரசனாகிய சவுலை அறிமுகப்படுத்தும் முறையில் பென்யமீன் கோத்திரத்தின் வம்சாவளி பட்டியல் முடிகிறது, அதைத் தொடர்ந்து சவுலின் நடவடிக்கைகளை ஒரு திருத்தமான சரித்திரப் பதிவாக இது விளக்குகிறது. சிலசமயங்களில் எஸ்றா பதிவு செய்துள்ள வம்சாவளி பட்டியலுக்கும் பைபிளின் மற்ற பகுதிகளுக்கும் முரண்பாடுகள் இருப்பதாக தோன்றலாம். எனினும், சிலருக்கு வேறு பெயர்களும் இருந்தன; மொழி மாறுகிறது; காலம் கடந்துசெல்லும்போது சிலருடைய பெயர்களின் உச்சரிப்பு மாறலாம் என்பதையும் மனதில் வைக்க வேண்டும். கவனமான ஆராய்ச்சி இந்த பெரும்பாலான சிக்கல்களை நீக்குகிறது.
11 தான் அளித்த வம்சாவளி பட்டியல்களில் ஆங்காங்கே சரித்திரப்பூர்வமான, நிலவியல் சம்பந்தமான துணுக்கு தகவல்களை எஸ்றா சேர்க்கிறார். இவை தெளிவாக்குவதற்கும் முக்கியமான நினைப்பூட்டுதல்களை கொடுப்பதற்கும் உதவுகின்றன. உதாரணமாக, ரூபனின் சந்ததியாரை பட்டியலிடுகையில் எஸ்றா பின்வரும் முக்கியமான தகவலை சேர்க்கிறார்: “இஸ்ராயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்களாவர்: இவரே இஸ்ராயேலின் தலைமகன். ஆயினும் இவர் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால், தமது பிறப்புரிமையை இழந்தார்; இதனால் தலைமுறை அட்டவணையிலும் அவர் தலைமகனாக எண்ணப்படவில்லை. மாறாக அவ்வுரிமை இஸ்ராயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது. யூதா தம் சகோதரர்களுக்குள் ஆற்றல் படைத்தவராய் இருந்தார்; அரசர் அவரது குலத்திலேயே உதித்தார். இருந்தபோதிலும் [“தலைமகனின்,” NW] பிறப்புரிமை யோசேப்புக்கே கொடுக்கப்பட்டது.” (5:1, 2, தமிழ் கத்தோலிக்க பைபிள்) இந்த சில வார்த்தைகளில் அதிகம் விளக்கப்பட்டுள்ளது. மேலும், யோவாப், அமாசா, அபிசாய் ஆகியோர் தாவீதின் உடன்பிறந்தார் மகன்கள் என்பதை நாளாகமத்தின் மூலமாக மாத்திரமே நாம் அறிகிறோம். இது அவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்களை புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.—2:16, 17.
12 உண்மையற்ற சவுலின் மரணம் (10:1-14). கில்போவா மலையில் நடக்கும் போரில் பெலிஸ்தரின் மும்முரமான தாக்குதலோடு விவரிப்பு தொடங்குகிறது. யோனத்தான் உட்பட சவுலின் மூன்று குமாரர்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றனர். பின்பு சவுல் காயமடைகிறார். எதிரியால் கைப்பற்றப்படுவதை சவுல் விரும்பவில்லை. ஆகவே அவர் தனது ஆயுததாரியை நோக்கி, “அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன் பட்டயத்தை உருவி என்னைக் குத்திப்போடு” என்று சொல்கிறார். அவருடைய ஆயுததாரி இதை செய்வதற்கு மறுத்துவிடுகிறான். அதனால் சவுல் தற்கொலை செய்துகொள்கிறார். சவுல் ‘யெகோவாவின் வார்த்தைக்குச் செவிகொடாமல் யெகோவாவுக்குத் துரோகம் செய்தார்; அஞ்சனம் பார்க்கிறவளிடம் விசாரித்து ஆலோசனை கேட்டார்; ஆகவே’ அவர் இறந்துபோகிறார். (10:4, 13, 14, தி.மொ.) யெகோவா தாவீதிடம் ராஜ்யத்தை கொடுக்கிறார்.
13 ராஜ்யத்தில் தாவீது ஸ்திரப்படுகிறார் (11:1–12:40). காலப்போக்கில் 12 கோத்திரத்தாரும் எப்ரோனில் தாவீதிடம் கூடிவருகிறார்கள். இஸ்ரவேல் முழுவதற்கும் அவரை அரசராக அபிஷேகம் செய்கிறார்கள். தாவீது சீயோனை கைப்பற்றுகிறார். “தாவீதின் பேரும் புகழும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. சேனைகளின் ஆண்டவர் அவரோடு இருந்தார்.” (11:9, தமிழ் கத்தோலிக்க பைபிள்) அதிக பலம் வாய்ந்தவர்கள் படையில் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மூலமாக யெகோவா “பெரிய ரட்சிப்பை” அளிக்கிறார். (11:14) தாவீதை அரசராக்குவதற்கு போர்வீரர்கள் ஒன்றுகூடி ஏகமனதாக ஆதரவு தருகின்றனர். இதன் காரணமாக தாவீது ஒருமித்த ஆதரவை பெறுகிறார். இஸ்ரவேலில் விருந்தும் மகிழ்ச்சியும் காணப்படுகிறது.
14 தாவீதும் யெகோவாவின் பெட்டியும் (13:1–16:36). தேசத்தின் அதிபதிகளோடு தாவீது கலந்துபேசுகிறார். இதன் விளைவாக பெட்டியை கீரியாத்யாரீமிலிருந்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கு அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஏறக்குறைய 70 ஆண்டுகள் கீரியாத்யாரீமில் அந்த பெட்டி இருந்தது. வரும் வழியில், கடவுளுடைய கட்டளைகளை புறக்கணித்ததற்காக ஊசா இறந்துபோகிறான். பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டில் சிறிது காலம் வைக்கப்படுகிறது. (எண். 4:15) பெலிஸ்தர் தங்களுடைய தாக்குதல்களை திரும்பவும் தொடங்குகின்றனர். ஆனால் தாவீது பாகால்பிராசீமிலும் கிபியோனிலும் இரு தடவை அவர்களை புறமுதுகு காட்டி ஓட வைக்கிறார். தாவீதின் கட்டளைக்கு இணங்க லேவியர்கள் பெட்டியை பத்திரமாக தேவாட்சி முறைப்படி எருசலேமுக்கு கொண்டு செல்கின்றனர். மகிழ்ச்சியான ஆடல்பாடலோடு பெட்டி கொண்டுவரப்படுகிறது. அதற்காகவே தாவீது அமைத்த கூடாரத்தில் வைக்கப்படுகிறது. பலிகள் செலுத்தப்படுகின்றன, பாடல்கள் பாடப்படுகின்றன. தாவீது இந்த நிகழ்ச்சிக்காக யெகோவாவுக்கு நன்றிசெலுத்தும் வண்ணம் ஒரு பாடலை பாடுகிறார். பின்வரும் வார்த்தைகளில் அந்தப் பாடலின் உச்சக்கட்டம் விவரிக்கப்படுகிறது: “வானங்கள் மகிழ்ந்து பூமி பூரிப்பாவதாக, யெகோவா அரசாளுகிறார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்வார்களாக.” (1 நா. 16:31, தி.மொ.) விசுவாசத்தை தூண்டும் எத்தகைய உணர்ச்சிமிக்க சந்தர்ப்பம் இது! பிற்பட்ட காலங்களில் தாவீதின் இந்த பாட்டு, புதிய பாடல்களுக்கு அடிப்படையாக அமைகிறது. சங்கீதம் 96 இவற்றில் ஒன்றாகும். மற்றொன்று சங்கீதம் 105-ன் முதல் 15 வசனங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
15 தாவீதும் யெகோவாவின் ஆலயமும் (16:37–17:27). அசாதாரணமான ஓர் ஏற்பாடு இப்பொழுது இஸ்ரவேலில் செய்யப்படுகிறது. உடன்படிக்கை பெட்டி எருசலேமில் ஒரு கூடாரத்தில் இருக்கிறது; அங்கே ஆசாப்பும் அவருடைய சகோதரர்களும் சேவை செய்கின்றனர். எருசலேமின் வடமேற்கில் சில மைல் தூரத்திற்கு அப்பால் கிபியோன் இருக்கிறது. அங்கே பிரதான ஆசாரியராகிய சாதோக்கும் அவருடைய சகோதரர்களும் ஆசரிப்புக்கூடாரத்தில் கட்டளையிடப்பட்ட முறைப்படியான பலிகளை செலுத்தி வருகின்றனர். யெகோவாவின் வணக்கத்தை உயர்த்துவதையும் ஒன்றுபடுத்துவதையுமே தாவீது எப்போதும் மனதில் எண்ணி வருகிறார். ஆகவே யெகோவாவின் உடன்படிக்கை பெட்டிக்காக ஓர் ஆலயத்தை கட்டும்படியான தனது விருப்பத்தை தெரிவிக்கிறார். ஆனால், தாவீதல்ல அவருடைய குமாரனே தமக்கு ஒரு வீட்டை கட்டுவான் என்பதாக யெகோவா குறிப்பிடுகிறார். ‘அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணி’ தகப்பன் மகனுக்கு காட்டுவதைப்போல் அன்புள்ள தயவை காட்டப்போவதாகவும் யெகோவா கூறுகிறார். (17:11-13) யெகோவாவின் இந்த அருமையான வாக்குறுதி—நித்திய ராஜ்யத்துக்கான இந்த உடன்படிக்கை—தாவீதின் இருதயத்தை தொடுகிறது. நன்றியுணர்வு பொங்க, யெகோவாவின் பெயர் “நிலைவரப்பட்டு என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக” என்று அவர் வேண்டுகிறார். மேலுமாக கடவுளுடைய ஆசீர்வாதம் தாவீதின் குடும்பத்தின்மீது இருக்கும்படியாகவும் அவர் விண்ணப்பிக்கிறார்.—17:24, தி.மொ.
16 தாவீதின் வெற்றிகள் (18:1–21:17). வாக்குப்பண்ணப்பட்ட தேசம் முழுவதையும் ஆபிரகாமின் வித்துக்கு கொடுப்பதாக சொன்ன தம் வாக்குறுதியை யெகோவா இப்பொழுது தாவீதின் மூலமாக நிறைவேற்றுகிறார். (18:3) ஒன்றன்பின் ஒன்றாக போர்கள் தொடருகின்றன. தாவீது செல்லும் இடமெல்லாம் யெகோவா ‘அவருக்கு வெற்றி’ தருகிறார். (18:6, தி.மொ.) தாவீது மாபெரும் விதத்தில் வெற்றிவாகை சூடுகிறார். பெலிஸ்தர் படுதோல்வி அடைகின்றனர், மோவாபியர்கள் அழிக்கப்படுகின்றனர், சோபாவினர் தோற்கடிக்கப்படுகின்றனர், சீரியர்கள் தாவீதிற்கு கப்பம் கட்டுகின்றனர். மேலும் ஏதோமையும் அம்மோனையும் அமலேக்கையுங்கூட அவர் கைப்பற்றுகிறார். எனினும், இஸ்ரவேலின் மக்கள்தொகையை கணக்கிடுமாறு சாத்தான் தாவீதை தூண்டிவிடுகிறான். இதற்கு இணங்கிப்போவதால் தாவீது பாவம் செய்கிறார். தண்டனையாக கொள்ளைநோயை யெகோவா அனுப்புவதால் 70,000 பேர் கொல்லப்படுகின்றனர். பிறகு, ஓர்னானின் களத்திற்கு அருகே அந்த பேரழிவுக்கு ஒரு முடிவை கடவுள் இரக்கத்துடன் கொண்டுவருகிறார்.
17 ஆலயத்துக்காக தாவீது செய்யும் ஏற்பாடுகள் (21:18–22:19). “எபூசியனாகிய ஓர்னானின் களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி,” காத்தின் மூலம் தூதனுடைய அறிவிப்பை தாவீது பெறுகிறார். (21:18, தி.மொ.) அந்த இடத்தை ஓர்னானிடமிருந்து தாவீது விலைக்கு வாங்குகிறார். பின்பு, அவர் கீழ்ப்படிதலுடன் அங்கே பலிகளை செலுத்தி யெகோவாவை நோக்கி விண்ணப்பிக்கிறார். “வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால்” தாவீதிற்கு யெகோவா பதிலளிக்கிறார். (21:26) தம்முடைய ஆலயம் அங்கே கட்டப்படும்படி யெகோவா விரும்புகிறார் என்பதாக தாவீது முடிவுக்கு வருகிறார். “என் குமாரனாகிய சாலொமோன் சிறியன், இளைஞன்; யெகோவாவுக்குக் கட்ட வேண்டிய ஆலயமோ மகா பெரிதாயிருக்க வேண்டும்; சகல தேசங்களிலும் பேரும் பெருமையும் உடையதாய் விளங்கவேண்டும்; ஆதலால் அதற்காக வேண்டியவைகளை ஆயத்தம்பண்ணுவேன்” என்று சொல்லி, பொருட்களை வடிவமைப்பதிலும் அவற்றை சேகரிப்பதிலும் உழைக்கிறார். (22:5, தி.மொ.) அதிக போர்களை செய்து இரத்தம் சிந்தியதால், ஆலயத்தை கட்டுவதற்கு யெகோவா தன்னை அனுமதிக்கவில்லை என்பதாக சாலொமோனிடம் தாவீது விளக்குகிறார். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் தைரியத்தோடும் மனோபலத்தோடும் இருக்கும்படி அவர் தன் குமாரனுக்கு பின்வருமாறு அறிவுரை கூறுகிறார்: “தாமதியாமல் வேலையை நடத்து; யெகோவா உன்னோடிருப்பார்.”—22:16, தி.மொ.
18 யெகோவாவின் வணக்கத்துக்காக தாவீது ஒழுங்குபடுத்துகிறார் (23:1–29:30). ஆசாரியரின் மற்றும் லேவியரின் சேவைகளை திரும்ப ஒழுங்குபடுத்தி அமைப்பதற்காக, இந்தச் சமயம் கடவுளுடைய விருப்பத்தின்படி, குடிமதிப்பு எடுக்கப்படுகிறது. லேவியருடைய சேவைகள், வேதாகமத்தில் வேறு எந்த இடத்தில் விவரிக்கப்படுவதை பார்க்கிலும் நுட்ப விவரமாக இங்கே விவரிக்கப்படுகின்றன. அரசனுடைய சேவைகளுக்காக பிரிக்கப்பட்ட வகுப்புகளைப் பற்றிய விவரங்கள் சுருக்கமாக குறிப்பிடப்படுகின்றன.
19 சிறப்பு வாய்ந்த தாவீதின் ஆட்சி முடிவை நெருங்குகிறது. முழு தேசத்தின் பிரதிநிதிகளை, அதாவது ‘யெகோவாவின் சபையை’ தாவீது கூடிவர செய்கிறார். (28:8, தி.மொ.) அரசர் எழுந்து நின்று, “என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்” என்பதாக ஆரம்பிக்கிறார். பின்பு அவர், ‘உண்மையான கடவுளின் ஆலயம்’ சம்பந்தமான தன் இருதயத்தின் விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கிறார். அவர்களது முன்னிலையில் சாலொமோனுக்கு பின்வருமாறு கட்டளையிடுகிறார்: “இப்போதும் என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் கடவுளை அறிந்து மனமுவந்து முழு இருதயத்தோடும் அவரைச் சேவி; யெகோவா சகல இருதயங்களையும் ஆராய்பவர், நினைவுகள் உத்தேசங்கள் எல்லாவற்றையும் அறிபவர், நீ அவரைத் தேடுவாயானால் அவர் உனக்கு வெளிப்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்குமாக தள்ளிவிடுவார். இப்போதும் கவனித்துக்கொள், பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு யெகோவா உன்னையே தெரிந்தெடுத்தார். மனோபலங்கொண்டு நீ அதைச் செய்துமுடி.” (28:2, 9, 10, 12, தி.மொ.) ஆவியின் ஏவுதலால் யெகோவாவிடமிருந்து பெற்ற கட்டிட அமைப்புக்குரிய நுட்ப விவரங்களை இளம் சாலொமோனிடம் கொடுத்து, கட்டிட வேலைக்கு தன் சொத்திலிருந்து ஏராளமானவற்றை அளிக்கிறார்; இந்த நோக்கத்துக்காக அவர் சேமித்து வைத்திருக்கிற 3,000 தாலந்துகள் பொன்னையும் 7,000 தாலந்துகள் வெள்ளியையும் அளிக்கிறார். இப்பேர்ப்பட்ட மிகச் சிறந்த முன்மாதிரியாக அவர் இருந்ததால் பிரபுக்களும் ஜனங்களும் அவரைப் போலவே செயல்படுகின்றனர். இவர்களும் 5,000 தாலந்துகள் மதிப்புள்ள பொன்னையும் 10,000 தங்கக் காசுகளையும் 10,000 தாலந்துகள் மதிப்புள்ள வெள்ளியையும், இவற்றோடுகூட மிகுதியான இரும்பையும் வெண்கலத்தையும் நன்கொடையாக அளிக்கின்றனர்.c (29:3-7) இந்த சிலாக்கியத்திற்காக மக்கள் பெருமகிழ்ச்சியடைகின்றனர்.
20 பின்பு தாவீது ஜெபத்தில் யெகோவாவை துதிக்கிறார். இந்த ஏராளமான நன்கொடைகள் அனைத்தும் உண்மையில் கடவுளுடைய கரத்திலிருந்தே வந்தன என்பதை தாவீது ஒப்புக்கொள்கிறார். மேலும், இந்த மக்களையும் சாலொமோனையும் தொடர்ந்து ஆசீர்வதிக்குமாறு அவர் விண்ணப்பிக்கிறார். தாவீதின் இந்தக் கடைசி ஜெபம், யெகோவாவின் ராஜ்யத்தையும் அவருடைய மகிமையான பெயரையும் உயர்த்துவதில் மாட்சிமையான உச்சக்கட்டத்தை எட்டுகிறது: “எங்கள் பிதாவாகிய இஸ்ரவேலின் கடவுளே, யெகோவாவே, தேவரீரே அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரத்திற்குரியவர். யெகோவாவே, மேன்மை, வல்லமை, மகிமை, மாட்சிமை, மகத்துவம் உமக்கேயுரியன, வானத்திலும் பூமியிலும் உள்ளனவெல்லாம் உமக்கேயுரியன, யெகோவாவே, ராஜ்யமும் உமக்குரியது, தேவரீரே எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். ஐசுவரியமும் கனமும் வருவது உம்மாலேயே, தேவரீர் எல்லாவற்றையும் ஆளுபவர், உமது கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்துவதும் பலப்படுத்துவதும் உமது கரமே. இப்போதும் எங்கள் கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், உமது மகிமையுள்ள திருநாமத்தைப் புகழுகிறோம்.”—29:10-13, தி.மொ.
21 சாலொமோன் இரண்டாவது தடவை அபிஷேகம் செய்யப்படுகிறார். முதிர்வயதான தாவீதின் ஸ்தானத்தில் ‘யெகோவாவின் சிங்காசனத்தின்மீது’ உட்காருகிறார். 40 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, தாவீது ‘பூரண ஆயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவராக நல்ல முதிர்வயதிலே’ மரணமடைகிறார். (29:23, 28, தி.மொ.) பின்பு, தேசங்களின் சகல ராஜ்யங்களை காட்டிலும் தாவீதினுடைய ராஜ்யத்தின் உயர்வை எஸ்றா வலியுறுத்தி, சிறப்பான முறையில் ஒன்று நாளாகமத்தை நிறைவு செய்கிறார்.
ஏன் பயனுள்ளது
22 எஸ்றாவின் காலத்து இஸ்ரவேலர்கள் இந்தப் புத்தகத்திலிருந்து அதிக பயனடைந்தார்கள். சுருக்கமான சரித்திரப் பதிவாக விளங்கிய இது, புதிய, நம்பிக்கையான நோக்குநிலையை அளித்தது. ஆகவே யெகோவா தம்முடைய பெயரின் காரணமாகவும், அரசராகிய தாவீதுடன் செய்த ராஜ்ய உடன்படிக்கைக்கான தமது பற்றுறுதியின் காரணமாகவும் காட்டும் அன்புள்ள இரக்கங்களை மக்கள் நன்றியோடு மதித்துணர்ந்தனர். உற்சாகமடைந்தவர்களாக அவர்கள் புத்துணர்வுடன் யெகோவாவின் தூய்மையான வணக்கத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். வம்சாவளி பட்டியல்கள், திரும்பக் கட்டப்பட்ட அந்த ஆலயத்தில் சேவைசெய்யும் ஆசாரியத்துவத்தில் அவர்களுடைய நம்பிக்கையை பலப்படுத்தின.
23 ஆரம்ப கால கிறிஸ்தவ சபைக்கும் ஒன்று நாளாகமம் அதிக பயனளித்தது. இயேசு கிறிஸ்துவே ‘தாவீதின் குமாரனும்’ உரிமையுள்ள மேசியாவாகவும் இருக்கிறார் என்பதை தெளிவாக நிலைநாட்டுவதற்கு, மத்தேயுவும் லூக்காவும் இதனுடைய வம்சாவளி பட்டியல்களிலிருந்து ஆதாரங்களை எடுத்திருக்கிறார்கள். (மத். 1:1-16; லூக். 3:23-38) ஸ்தேவான் அளித்த இறுதியான சாட்சியின் முடிவில் யெகோவாவுக்காக ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காக தாவீது விண்ணப்பித்ததையும் சாலொமோனே அதை கட்டியதையும் குறிப்பிட்டார். பின்பு, “உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்” என சுட்டிக்காட்டி, சாலொமோனின் நாளிலிருந்த ஆலயம் அதிக மகிமையான பரலோக காரியங்களுக்கு முன்நிழலாய் இருப்பதைக் காட்டினார்.—அப். 7:45-50.
24 இன்றைய உண்மை கிறிஸ்தவர்களை பற்றியதென்ன? ஒன்று நாளாகமம் நம்முடைய விசுவாசத்தை கட்டியெழுப்பி ஊக்குவிக்க வேண்டும். தாவீதின் மிகச் சிறந்த முன்மாதிரியிலிருந்து நாம் பின்பற்றுவதற்கு ஏராளம் உள்ளன. அவர் எல்லா சமயத்திலும் யெகோவாவிடம் கேட்டறிந்தார்; இந்த விஷயத்தில் உண்மையற்ற சவுலுக்கு எவ்வளவு எதிர்மாறாக இருந்தார்! (1 நா. 10:13, 14; 14:13, 14; 17:16; 22:17-19) யெகோவாவின் உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்ததிலும், தன்னுடைய துதிப்பாடல்களிலும், சேவைக்காக லேவியரை ஒழுங்குபடுத்தி அமைத்ததிலும், யெகோவாவுக்காக மகிமையான ஒரு ஆலயத்தை கட்டுவதற்காக விண்ணப்பித்ததிலும், யெகோவாவும் அவருடைய வணக்கமும் தன் மனதில் முதலாவதாக இருந்ததைத் தாவீது காட்டினார். (16:23-29) அவர் குறைகூறுபவராக இல்லை. விசேஷ சிலாக்கியங்களை அவர் தனக்காக தேடவில்லை. மாறாக யெகோவாவின் சித்தத்தை செய்வதை மாத்திரமே தேடினார். ஆலயத்தை கட்டும் பொறுப்பை தாவீதின் குமாரனுக்கு யெகோவா நியமித்தார். அப்போது தாவீது முழு இருதயத்தோடு தன் குமாரனுக்கு போதித்து தன்னுடைய மரணத்துக்கு பின் தொடங்கப்போகிற அந்த வேலைக்காக ஏற்பாடுகள் செய்வதில் தன் நேரத்தையும், தன் சக்தியையும், தன் செல்வத்தையும் செலவழித்தார். (29:3, 9) நிச்சயமாகவே, கடவுள் பக்திக்கு என்னே மிகச் சிறந்த முன்மாதிரி!—எபி. 11:32.
25 அதையடுத்து, உச்சக்கட்டத்தை அடையும் முடிவான அதிகாரங்கள். தாவீது யெகோவாவை துதித்து அவருடைய “அழகிய பெயரை” சிறப்பான மொழிநடையில் மகிமைப்படுத்தினார். இது, தற்காலத்தில் யெகோவாவின் மகிமைகளையும் கிறிஸ்துவால் ஆட்சி செய்யப்படும் அவருடைய ராஜ்யத்தையும் எல்லாருக்கும் அறிவிக்கும் நம்முடைய பாக்கியத்தை மகிழ்ச்சியோடு மதித்துணர நம்மை தூண்ட வேண்டும். (1 நா. 29:10-13) யெகோவாவின் சேவையில் முழுமூச்சுடன் ஈடுபடுவதன் மூலமாக அவருடைய நித்திய ராஜ்யத்துக்காக நன்றியுணர்வை நாம் வெளிப்படுத்த வேண்டும்; இந்த விஷயத்தில் தாவீதைப் போல நமக்கும் விசுவாசமும் மகிழ்ச்சியும் என்றென்றும் இருப்பதாக. (17:16-27) மெய்யாகவே, யெகோவா தம்முடைய வித்தின் மூலமாக ஏற்படுத்தும் ராஜ்யத்தைப் பற்றிய பைபிளின் மையப்பொருள் வேறெந்த பதிவுகளைக் காட்டிலும் ஒன்று நாளாகமத்திலேயே வெகு அழகாக பிரகாசிக்கிறது. மேலுமாக யெகோவாவின் நோக்கங்களைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டும் இன்னும் கூடுதலான வெளிப்படுத்துதல்களுக்காக எதிர்பார்க்கும்படி நம்மை தூண்டுகிறது.
[அடிக்குறிப்புகள்]
a கிளார்க்கின் கமென்டரி, (ஆங்கிலம்) தொ. II, பக்கம் 574.
b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 444-5.
c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 1076.
[கேள்விகள்]
1. என்ன விதங்களில் ஒன்று நாளாகமம் கடவுளால் ஏவப்பட்ட பதிவின் முக்கியமான, பயனுள்ள பாகமாக இருக்கிறது?
2. நாளாகமம் ஏன் எழுதப்பட்டது?
3. (அ) யூதர்களுக்கு எதை உணர்த்த எஸ்றா ஆவலுடன் இருந்தார்? (ஆ) யூதாவின் சரித்திரத்தை அவர் ஏன் சிறப்பித்து காட்டினார், தூய்மையான வணக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் எவ்வாறு அறிவுறுத்தினார்?
4. நாளாகமத்தின் எழுத்தாளர் எஸ்றா என்பதை என்ன அத்தாட்சிகள் ஆதரிக்கின்றன?
5. எஸ்றாவின் ஆவிக்குரிய, உலகப்பிரகாரமான தகுதிகள் யாவை?
6. நாளாகமத்தின் திருத்தமான தன்மையில் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்?
7. நாளாகமம் எப்போது எழுதப்பட்டது, யார் அதை நம்பகமானதாக கருதினர், என்ன காலப்பகுதி அதில் அடங்கியுள்ளது?
8. ஒன்று நாளாகம புத்தகம் என்ன இரண்டு பகுதிகளாக பிரிகிறது?
9. நாளாகம புத்தகம் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக சொல்வதற்கு ஏன் எந்தக் காரணமும் இல்லை?
10. (அ) எந்த தலைமுறைகள் முதலாவதாக கொடுக்கப்படுகின்றன? (ஆ) இரண்டாவது அதிகாரத்தின் தொடக்கத்தில் முறைப்படி எந்த வம்சாவளி பட்டியலுக்கு கவனம் செலுத்தப்படுகிறது? (இ) வேறு என்ன பட்டியல்கள் கொடுக்கப்படுகின்றன, அவை எதில் முடிவடைகின்றன?
11. வம்சாவளி பட்டியல்களின் இந்தப் பதிவில் பயனுள்ள மற்ற தகவல்கள் ஆங்காங்கே சேர்க்கப்பட்டிருப்பதற்கான உதாரணங்களை கொடுங்கள்.
12. சவுலுடைய மரணத்தின்போது நிகழ்ந்த சம்பவங்கள் யாவை?
13. தாவீது எவ்வாறு ராஜ்யத்தில் மேன்மையடைகிறார்?
14. பெலிஸ்தருடன் நடந்த போரில் தாவீது எவ்வாறு வெற்றிபெறுகிறார், விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்ன சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியான பாடல் எழும்புகிறது?
15. ஒன்றுபட்ட வணக்கத்துக்காக ஓர் ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற தாவீதின் விருப்பத்திற்கு, என்ன அதிசயமான வாக்குறுதியுடன் யெகோவா பதிலளிக்கிறார்?
16. தாவீதின் மூலம் என்ன வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றுகிறார், ஆனால் தாவீது எவ்வாறு பாவம் செய்கிறார்?
17. யெகோவாவின் ஆலயத்தை கட்டுவதற்காக தாவீது என்ன ஏற்பாடுகளை செய்கிறார், சாலொமோனை அவர் எவ்வாறு உற்சாகப்படுத்துகிறார்?
18. என்ன நோக்கத்துக்காக குடிமதிப்பு எடுக்கப்படுகிறது?
19. என்ன வார்த்தைகளைச் சொல்லி தாவீது சாலொமோனுக்கு பொறுப்பளிக்கிறார், என்ன திட்டங்களை அவர் அளிக்கிறார், என்ன மிகச் சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்?
20. தாவீதினுடைய கடைசி ஜெபத்தில் மாட்சிமையான என்ன உச்சக்கட்டம் எட்டப்படுகிறது?
21. என்ன சிறப்பான முறையில் ஒன்று நாளாகமம் நிறைவுறுகிறது?
22. எஸ்றா காலத்து இஸ்ரவேலர்கள் ஒன்று நாளாகமத்தால் எவ்வாறு உற்சாகப்படுத்தப்பட்டனர்?
23. மத்தேயு, லூக்கா, ஸ்தேவான் ஆகியோர் எவ்வாறு ஒன்று நாளாகமத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்?
24. தாவீதின் சிறந்த முன்மாதிரியில் எதை இன்று நாம் பின்பற்றலாம்?
25. யெகோவாவுடைய பெயரையும் ராஜ்யத்தையும் பற்றிய என்ன மதித்துணர்வை ஒன்று நாளாகமம் நம்மில் தூண்ட வேண்டும்?