பேச ஆரம்பிப்பது
பாடம் 2
இயல்பு
நியமம்: “சரியான சமயத்தில் சொல்லப்படுகிற வார்த்தை எவ்வளவு அருமையானது!”—நீதி. 15:23.
பிலிப்பு என்ன செய்தார்?
1. வீடியோவைப் பாருங்கள், அல்லது அப்போஸ்தலர் 8:30, 31-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:
அ. பிலிப்பு எப்படிப் பேச ஆரம்பித்தார்?
ஆ. அவர் கேள்வி கேட்டது, இயல்பாகப் பேச ஆரம்பிப்பதற்கும் ஒரு புது விஷயத்தைச் சொல்லிக்கொடுப்பதற்கு உதவியது என்று எப்படிச் சொல்லலாம்?
பிலிப்புவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
2. நாம் ஒருவரிடம் இயல்பாகப் பேச ஆரம்பித்துவிட்டால், அவர் நம்மிடம் சகஜமாகப் பேசுவதற்கும் நாம் சொல்லும் செய்தியைக் கேட்பதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.
பிலிப்பு மாதிரி நடந்துகொள்ளுங்கள்
3. கவனியுங்கள். ஒருவருடைய சைகைகளையும் முக பாவனைகளையும் வைத்தே அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம். அவரைப் பார்த்தால் அவர் உங்களிடம் பேசுவார் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? பைபிளில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி பேச வெறுமனே, “உங்களுக்கு ஒன்று தெரியுமா . . .” என்று சொல்லிக்கூட ஆரம்பிக்கலாம். பேச விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.
4. பொறுமையாக இருங்கள். எப்படியாவது பைபிளிலிருந்து ஒரு விஷயத்தை உடனே சொல்லிவிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். இயல்பாகவும் பேச்சு வாக்கிலும் அதைச் சொல்வதற்குப் பொருத்தமான சமயம் வரும்வரை காத்திருங்கள். ஒருவேளை, அடுத்த தடவை அவரிடம் பேசும்வரைகூட நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
5. மாற்றிக்கொள்ளத் தயாராக இருங்கள். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச நினைத்திருக்கலாம். ஆனால், அவர் வேறு விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடலாம். அப்போது, அவருக்குப் பொருத்தமான ஒரு பைபிள் விஷயத்தைப் பற்றிப் பேசத் தயாராக இருங்கள்.