உயர் அதிகாரிகளுக்கு முன்பு நற்செய்தியை ஆதரித்துப் பேசுங்கள்
புதிதாக கிறிஸ்தவத்துக்கு மாறிய ஒரு யூதனைப் பற்றி எஜமானராகிய இயேசு இப்படிச் சொன்னார்: “புறதேசத்தாருக்கும் ராஜாக்களுக்கும் . . . என்னுடைய பெயரை அறிவிப்பதற்கு அவனை ஒரு கருவியாக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.” (அப். 9:15) இந்த யூதன்தான் பிறகு அப்போஸ்தலன் பவுல் என்று அழைக்கப்பட்டார்.
அந்த ‘ராஜாக்களில்’ ஒருவர்தான் ரோம பேரரசரான நீரோ. அப்படிப்பட்ட ஒரு பேரரசரிடம் உங்கள் நம்பிக்கையை ஆதரித்துப் பேச வேண்டிய சூழ்நிலை வந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? கிறிஸ்தவர்கள் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டுமென்று உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். (1 கொ. 11:1) நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்? தன்னுடைய காலத்தில் இருந்த சட்டங்களைப் பவுல் எப்படிப் பயன்படுத்தினார் என்பதைத் தெரிந்துகொள்வது அதற்கு உதவியாக இருக்கும்.
மோசேயின் திருச்சட்டம்தான் இஸ்ரவேல் தேசத்தின் சட்டமாகவும் பல இடங்களில் இருந்த கடவுள்பக்தியுள்ள யூதர்களின் ஒழுக்க நெறியாகவும் இருந்தது. ஆனால், கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. (அப். 15:28, 29; கலா. 4:9-11) இருந்தாலும், பவுலும் மற்ற கிறிஸ்தவர்களும் திருச்சட்டத்தைப் பற்றி அவமரியாதையாகப் பேசவில்லை. அவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் நிறைய யூத சமுதாயங்களில் சாட்சி கொடுத்தார்கள். (1 கொ. 9:20) சொல்லப்போனால், ஆபிரகாமின் கடவுளைப் பற்றி தெரிந்திருந்தவர்களிடம் பேசுவதற்காகவும், எபிரெய வேதாகமத்திலிருந்து அவர்களிடம் நியாயங்காட்டிப் பேசுவதற்காகவும் பவுல் பல தடவை ஜெபக்கூடங்களுக்குப் போனார்.—அப். 9:19, 20; 13:5, 14-16; 14:1; 17:1, 2.
பிரசங்க வேலையை ஒரு இடத்திலிருந்து வழிநடத்த வேண்டுமென்று அப்போஸ்தலர்கள் முடிவு செய்தபோது, முதல் முதலில் எருசலேமைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் ஆலயத்தில் தவறாமல் கற்றுக்கொடுத்தார்கள். (அப். 1:4; 2:46; 5:20) ஒரு சமயம், பவுல் எருசலேமுக்குப் போயிருந்தபோது கைது செய்யப்பட்டார். அப்போது, அவர்மேல் வழக்குத் தொடரப்பட்டது. அதனால், கடைசியில் அவர் ரோமுக்குப் போக வேண்டியிருந்தது.
பவுலும் ரோம சட்டமும்
பவுல் பிரசங்கித்த மத நம்பிக்கைகளைப் பற்றி ரோம அதிகாரிகள் என்ன நினைத்திருப்பார்கள்? இதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு மதங்களைப் பற்றி ரோமர்கள் என்ன நினைத்தார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். ரோம சாம்ராஜ்யத்தில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் இருந்தார்கள். ரோம சாம்ராஜ்யத்துக்கோ ஒழுக்க நெறிமுறைக்கோ எந்தப் பிரச்சினையும் இல்லாதவரை, அந்த மக்களுக்குத் தங்களுடைய மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் இருந்தது.
ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு ரோம அரசாங்கம் நிறைய உரிமைகளைக் கொடுத்திருந்தது. பூர்வ கிறிஸ்தவத்தின் பின்னணிகள் என்ற ஆங்கில புத்தகம் இப்படிச் சொல்கிறது: “ரோம சாம்ராஜ்யத்தில், யூத மதத்துக்கு தனி செல்வாக்கு இருந்தது . . . தங்களுடைய மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் யூதர்களுக்கு இருந்தது. ரோமர்களுடைய தெய்வங்களை வணங்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. தங்களுடைய சட்டதிட்டங்களின்படி வாழ்வதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது.” ராணுவத்தில் சேர வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருக்கவில்லை.a ரோம சட்டத்தில் யூதர்களுக்கு நிறைய உரிமைகள் இருந்தன. ரோம அதிகாரிகளிடம் கிறிஸ்தவ மதத்தை ஆதரித்துப் பேசும்போது, பவுல் அந்த உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பொது மக்களையும் அதிகாரிகளையும் அப்போஸ்தலனுக்கு எதிராகத் தூண்டுவதற்கு அவருடைய எதிரிகள் நிறைய வழிகளில் முயற்சி செய்தார்கள். (அப். 13:50; 14:2, 19; 18:12, 13) உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் கவனியுங்கள். “மோசேயின் திருச்சட்டத்தைவிட்டு விலகுமாறு,” அதாவது “விசுவாசதுரோகியாக ஆகுமாறு,” யூதர்களிடம் பவுல் பிரசங்கிப்பதாக ஒரு புரளி கிளம்பியது. இது எருசலேம் சபையிலிருந்த மூப்பர்களின் காதுகளுக்கு எட்டியது. இந்த மாதிரியான கதைகளைக் கேட்டால் பவுல் கடவுளுடைய ஏற்பாடுகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்று புதிதாக கிறிஸ்தவர்களாக மாறியிருந்த யூதர்கள் நினைத்து விடலாம். அதோடு, கிறிஸ்தவ மதம் யூத மதத்துக்கு எதிராக விசுவாச துரோகம் செய்வதாக யூத உயர் நீதிமன்றமும் சொல்லிவிடலாம். அப்படி நடந்தால், கிறிஸ்தவர்களோடு பழகும் யூதர்கள் தண்டிக்கப்படலாம். அதோடு, அவர்கள் ஒதுக்கி வைக்கப்படலாம், ஆலயத்திலோ ஜெபக் கூடங்களிலோ பிரசங்கிப்பதற்குத் தடை செய்யப்படலாம். இந்தப் புரளியைப் பொய் என்று நிரூபிப்பதற்காக ஆலயத்துக்குப் போய் கடவுள் எதிர்பார்க்காத, ஆட்சேபணையில்லாத ஒன்றைச் செய்யும்படி சபை மூப்பர்கள் பவுலிடம் சொன்னார்கள்.—அப். 21:18-27.
அவர்கள் சொன்னதைச் செய்ததால் ‘நற்செய்திக்காக வழக்காடி அதைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதற்கு’ பவுலுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. (பிலி. 1:7) ஆலயத்தில் யூதர்கள் கலகம் செய்து, அவரைத் தீர்த்துக்கட்ட பார்த்தார்கள். அதனால் ரோம ராணுவ அதிகாரி பவுலைக் கைது செய்தார். பிறகு, பவுலுக்குச் சாட்டை அடிகள் கொடுப்பதற்குத் தயாராக இருந்த சமயத்தில், தான் ஒரு ரோமக் குடிமகன் என்பதைப் பவுல் சொன்னார். அதனால், அவரை செசரியாவுக்குக் கொண்டுபோனார்கள். அங்கிருந்துதான் ரோமர்கள் யூதேயாவை ஆட்சி செய்தார்கள். அரசாங்க அதிகாரிகளிடம் தைரியமாகச் சாட்சிகொடுக்க எதிர்பாராத வாய்ப்புகள் அவருக்கு அங்கே காத்திருந்தன. கிறிஸ்தவத்தைப் பற்றி தெரியாத மக்கள் அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள அந்த வாய்ப்புகள் அவர்களுக்கு உதவியிருக்கும்.
ரோம ஆளுநரான பெலிக்சுக்குமுன் பவுல் விசாரிக்கப்படுவதைப் பற்றி அப்போஸ்தலர் 24-ஆம் அதிகாரம் விவரிக்கிறது. கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி பெலிக்ஸ் ஏற்கெனவே சில விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்தார். மூன்று விதங்களில் பவுல் ரோம சட்டத்தை மீறியதாக யூதர்கள் குற்றம் சாட்டினார்கள். (1) ரோம சாம்ராஜ்யம் முழுவதும் பவுல் யூதர்கள் மத்தியில் கலகத்தைத் தூண்டிவிட்டதாகச் சொன்னார்கள். (2) அவர் ஒரு ஆபத்தான மதப்பிரிவின் தலைவர் என்று சொன்னார்கள். (3) ரோமர்களின் பாதுகாப்பில் இருந்த ஆலயத்தின் புனிதத்தைக் கெடுக்க முயற்சி செய்வதாகச் சொன்னார்கள். (அப். 24:5, 6) இந்தக் குற்றச்சாட்டுகளால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் சூழ்நிலை இருந்தது.
குற்றம்சாட்டப்பட்டபோது பவுல் நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். குற்றம்சாட்டப்பட்ட சமயத்தில் அவர் அமைதியாக இருந்தார், மரியாதையாக நடந்துகொண்டார். திருச்சட்டத்தைப் பற்றியும் தீர்க்கதரிசிகளைப் பற்றியும் குறிப்பிட்டு, தன் ‘முன்னோர்களின் கடவுளை’ வணங்க தனக்கு உரிமை இருப்பதாகச் சொன்னார். ரோம சட்டத்தின் கீழிருந்த எல்லா யூதர்களுக்கும் இந்த உரிமை இருந்தது. (அப். 24:14) கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அடுத்த ஆளுநரான பொர்க்கியு பெஸ்துவிடமும் ஏரோது அகிரிப்பா ராஜாவிடமும் தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி பேசவும் வழக்காடவும் பவுலுக்கு வாய்ப்பு கிடைத்தது.
தன்னுடைய வழக்கு நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!” என்று பவுல் சொன்னார். (அப். 25:11) ரோம அரசன்தான் அப்போது இருந்த ஆட்சியாளர்களிலேயே அதிகாரம் படைத்த ஆட்சியாளராக இருந்தார்.
ரோம அரசனுடைய நீதிமன்றத்தில் பவுல் விசாரிக்கப்படுகிறார்
“நீ ரோம அரசன்முன் நிற்க வேண்டும்” என்று ஒரு தேவதூதர் பவுலிடம் சொன்னார். (அப். 27:24) எல்லா வழக்குகளையும் தானே விசாரிக்கப் போவதில்லை என்று ரோமப் பேரரசன் நீரோ தன்னுடைய ஆட்சியின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தார். அவருடைய ஆட்சியின் முதல் எட்டு வருடத்தில், வழக்குகளை விசாரிக்கும் வேலையைப் பெரும்பாலும் மற்றவர்கள்தான் கவனித்துக்கொண்டார்கள். நீரோ ஒரு வழக்கை தானே விசாரிக்க முடிவு செய்தால் அவருடைய அரண்மனையிலேயே அந்த விசாரணை நடக்கும் என்றும், நிறைய அனுபவமும் செல்வாக்கும் இருந்த ஆலோசகர்கள் அந்த வழக்கை விசாரிப்பதற்கு உதவினார்கள் என்றும் புனித பவுலின் வாழ்க்கையும் கடிதங்களும் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.
பவுலின் வழக்கை நீரோவே விசாரித்து, தீர்ப்பு கொடுத்தாரா அல்லது வேறு யாரையாவது விசாரிக்கச் சொல்லிவிட்டு, அதைப் பற்றி தன்னிடம் சொல்லும்படி சொன்னாரா என்பதைப் பற்றி பைபிளில் எந்தத் தகவலும் இல்லை. எது எப்படியிருந்தாலும் சரி, தான் யூதர்களின் கடவுளை வணங்கியதாகவும் அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கும்படி மக்களிடம் சொன்னதாகவும் பவுல் விளக்கினார். (ரோ. 13:1-7; தீத். 3:1, 2) நற்செய்திக்காக உயர் அதிகாரிகள்முன் நடந்த பவுலின் வழக்கு வெற்றி பெற்றதாகவும், ரோம அரசனுடைய நீதிமன்றம் அவரை விடுதலை செய்ததாகவும் தெரிகிறது.—பிலி. 2:24; பிலே. 22.
நற்செய்திக்காக நாம் வழக்காட வேண்டும்
“உங்களை இழுத்துக்கொண்டு போய் ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்பாக நிறுத்துவார்கள், அப்போது நீங்கள் அவர்களுக்கும் புறதேசத்தாருக்கும் சாட்சி கொடுப்பீர்கள்” என்று இயேசு தன்னுடைய சீடர்களிடம் சொன்னார். (மத். 10:18) இந்த வசனத்தில் சொல்லியிருக்கிறபடி, இயேசுவைப் பிரதிநிதித்துவம் செய்வது நமக்குக் கிடைத்த பாக்கியம். நற்செய்திக்காக வழக்காட நாம் எடுக்கும் முயற்சிகள் நமக்குச் சட்டப்பூர்வமான வெற்றிகளைத் தரலாம். இருந்தாலும், தவறு செய்யும் இயல்புடைய மனிதர்களால் நற்செய்தியை முழுமையாக ‘சட்டப்பூர்வமாக நிலைநாட்ட’ முடியாது. கடவுளுடைய அரசாங்கத்தால்தான் கொடுமைகளுக்கும் அநியாயங்களுக்கும் நிரந்தர முடிவு கட்ட முடியும்.—பிர. 8:9; எரே. 10:23.
இன்றும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளுக்காக வழக்காடும்போது யெகோவாவின் பெயர் புகழப்படுகிறது. பவுலைப் போல நாமும் பதட்டப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், நம்ப வைக்கும் விதத்தில் பேச வேண்டும். “எப்படிப் பதிலளிப்பதென்று முன்னதாகவே உங்கள் மனதில் ஒத்திகை பார்க்க வேண்டாம். உங்கள் விரோதிகள் ஒன்றுதிரண்டு வந்தாலும் உங்களை எதிர்த்து நிற்கவோ எதிர்த்துப் பேசவோ முடியாதபடி நான் உங்கள் வாயை ஞானத்தினால் நிரப்புவேன்” என்று இயேசு தன்னைப் பின்பற்றி வந்தவர்களிடம் சொன்னார்.—லூக். 21:14, 15; 2 தீ. 3:12; 1 பே. 3:15.
ராஜாக்களுக்கு முன்பும் ஆளுநர்களுக்கு முன்பும் மற்ற உயர் அதிகாரிகளுக்கு முன்பும் கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைகளை ஆதரித்துப் பேசும்போது, அவர்களுக்குச் சாட்சி கொடுக்கிறார்கள். அவர்களுக்குச் சாட்சி கொடுக்க, இந்த மாதிரியான சந்தர்ப்பத்தைத் தவிர வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்காமல் போகலாம். நமக்குக் கிடைத்த சில சாதகமான தீர்ப்புகளால் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், பேச்சு சுதந்திரமும் மத சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட வழக்குகளுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தாலும் சரி, கிடைக்கவில்லை என்றாலும் சரி, அந்த வழக்குகளில் கடவுளுடைய ஊழியர்கள் காட்டும் தைரியம் கடவுளைச் சந்தோஷப்படுத்துகிறது.
a எழுத்தாளரான ஜேம்ஸ் பார்க்ஸ் இப்படிச் சொல்கிறார்: “யூதர்களுக்கு . . . தங்களுடைய பழக்கவழக்கங்களின்படி செய்ய எல்லா உரிமையும் இருந்தது. ரோம சாம்ராஜ்யத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்தவர்களுக்கு எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குத் தன்னாட்சி உரிமையைக் கொடுப்பது ரோமர்களின் வழக்கமாக இருந்தது. அதனால், யூதர்களுக்கு இப்படிப்பட்ட உரிமைகள் கிடைத்தது ஒன்றும் புதிதல்ல.”