சவுலின் பிரசங்கம் எதிர்ப்பைத் தூண்டுகிறது
தமஸ்குவில் இருந்த யூதர்களால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பாரம்பரிய கொள்கைகளை வைராக்கியமாகக் கடைப்பிடித்து வந்தவர் எப்படி திடீரென விசுவாச துரோகியாக மாறினார்? எருசலேமிலே இயேசுவைப் பற்றி பிரசங்கிப்பவர்களைத் துன்புறுத்தியவராக சவுல் அறியப்பட்டிருந்தார். தமஸ்குவில் இருந்த சீஷர்களை துன்புறுத்துவதற்காக அங்கே வந்திருந்தார். ஆனால் இப்போதோ, தேவதூஷண குற்றத்திற்காகக் கழுமரத்தில் அறையப்பட்ட அந்த இழிவான குற்றவாளிதான் மேசியா என்று இவரே பிரசங்கிக்கிறாரே! இவருக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது?—அப்போஸ்தலர் 9:1, 2, 20-22.
அநேகமாக, இந்த மாற்றத்திற்குக் காரணம் இருந்திருக்கும். எருசலேமிலிருந்து சவுலுடன் பயணம் செய்த ஆட்கள் அதைப் பற்றி, அதாவது வழியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசியிருப்பார்கள். அப்போது என்ன நடந்ததென்றால், தமஸ்குவை நெருங்கியபோது, திடீரென வானத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி அவர்களைச் சுற்றி பிரகாசித்தது. எல்லாரும் தரையில் விழுந்தார்கள். ஒரு குரல் பேசுவதுகூட கேட்டது. ஆனால் சவுலைத் தவிர வேறு எவரும் பாதிக்கப்படவில்லை. அவர் மட்டுமே தரையில் விழுந்து கிடந்தார். எழுந்திருத்த போது அவரால் எதையும் காண முடியவில்லை; எனவே அவருடன் பிரயாணம் செய்தவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போக வேண்டியிருந்தது.—அப்போஸ்தலர் 9:3-8; 26:13, 14.
எதிர்ப்பவர் ஆதரிப்பவராக மாறுகிறார்
தமஸ்குவுக்கு வரும் வழியில் சவுலுக்கு என்ன நேர்ந்தது? ஒருவேளை நீண்ட பிரயாணமோ உச்சி வெயிலோ அவரைப் பலவீனப்படுத்திவிட்டதா? அதற்குப் பல இயற்கை காரணங்களைக் கண்டுபிடிக்க இன்றைய விமர்சகர்கள் முயன்றிருக்கின்றனர். பிதற்றலோடு மூளைக்கோளாறு, மாயத்தோற்றம், மனசாட்சியின் உறுத்துதலால் ஏற்பட்ட மன பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி, காக்காய் வலிப்பு என பல காரணங்களை அவர்கள் அளித்துள்ளனர்.
உண்மை என்னவென்றால், கண்ணைக் கூசச் செய்யும் ஒளியில் இயேசு தோன்றி, தாமே மேசியாவென அவரை நம்ப வைத்தார். அந்தச் சம்பவத்தை வரைந்த ஓவியர்கள் சிலர் அவர் குதிரையிலிருந்து விழுவதைப் போல சித்தரித்துள்ளனர். ஒருவேளை அப்படி நடந்திருக்கலாம் என்றாலும், ‘அவர் தரையிலே விழுந்தார்’ என்று மட்டுமே பைபிள் குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 22:6-11) அவர் எப்படி விழுந்திருந்தாலும்சரி, ஆணவமிக்க ஸ்தானத்திலிருந்து அவர் விழுந்தார் என்பதுதான் அதைவிட பெரிய உண்மை. இயேசுவின் சீஷர்கள் நிஜத்தைப் பிரசங்கித்தார்கள் என்பதை அவர் இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களில் ஒருவராவதைத் தவிர சவுலுக்கு வேறு வழியே இருந்திருக்கவில்லை. இயேசுவின் செய்தியைத் தீவிரமாக எதிர்த்து வந்தவர் இப்போது அதை உறுதியாக ஆதரிப்பவராக ஆனார். பார்வையடைந்து, முழுக்காட்டப்பட்ட பின்பு, “சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப் பண்ணினான்.”—அப்போஸ்தலர் 9:22.
கொலை திட்டம் தோல்வியடைகிறது
பவுல் என பின்னர் அறியப்பட்ட சவுல், மதம் மாறிய பிறகு எங்கே சென்றார்? கலாத்தியருக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “அரபி தேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பி வந்தேன்.” (கலாத்தியர் 1:17) ‘அரபி தேசம்’ என்ற பதம் அரேபிய தீபகற்பத்தில் எந்த பகுதிக்குச் செல்வதையும் குறிக்கலாம். சிரியா பாலைவனத்திற்கு அல்லது நான்காம் அரேத்தா ராஜாவின் நாபாட்டிய சாம்ராஜ்யத்தில் ஏதோவொரு பகுதிக்கு பவுல் சென்றிருக்கலாம் என அறிஞர்கள் சிலர் கூறுகிறார்கள். இயேசு முழுக்காட்டுதல் பெற்ற பின்பு வனாந்தரத்திற்குச் சென்றதைப் போலவே, சவுலும் முழுக்காட்டுதல் பெற்ற பிறகு தியானிக்க அமைதியான ஓரிடத்திற்குச் சென்றார்.—லூக்கா 4:1.
தமஸ்குவுக்கு சவுல் திரும்பி வந்த பிறகு, ‘யூதர்கள் அவரைக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.’ (அப்போஸ்தலர் 9:23) தமஸ்குவில் அரேத்தா ராஜாவின் பிரதிநிதியான சேனைத்தலைவன் அவரைப் பிடிப்பதற்காக அந்தப் பட்டணத்துக்குக் காவல் வைத்தான். (2 கொரிந்தியர் 11:32) எதிரிகள் சவுலைக் கொல்ல திட்டம் தீட்டுகையில், இயேசுவின் சீஷர்களோ அவரைத் தப்புவிக்க வழிவகுத்தனர்.
சவுல் தப்பிப்பதற்கு உதவியவர்களில் அனனியாவும் அவர் மதம் மாறிய பின்பு அவரோடிருந்த சீஷர்களும் இருந்தார்கள்.a (அப்போஸ்தலர் 9:17-19) தமஸ்குவில் சவுலுடைய பிரசங்கத்தைக் கேட்டு விசுவாசிகளான சிலரும் அவருக்கு உதவியிருக்கலாம், ஏனெனில் அப்போஸ்தலர் 9:25 (NW) இவ்வாறு கூறுகிறது: “அவருடைய சீஷர்கள் இராத்திரியிலே அவரைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில் வழியாய் இறக்கிவிட்டார்கள்.” “அவருடைய சீஷர்கள்” என்ற பதம் சவுலால் போதிக்கப்பட்டவர்களைக் குறிக்கலாம். எப்படியிருந்தாலும், ஊழியத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றி அவருக்கு எதிராக எரிந்து கொண்டிருந்த பகைமை எனும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதைப் போல அமைந்தது.
கற்றுக்கொள்ள ஒரு பாடம்
சவுல் மதம் மாறி முழுக்காட்டப்பட்ட சமயத்தில் நடந்த சம்பவங்களை நாம் ஆராயும்போது, தன்னை மற்றவர்கள் எவ்வாறு எடை போட்டார்கள் என்பதைப் பற்றி அவர் அதிகம் கவலைப்படவும் இல்லை, பயங்கர எதிர்ப்பைக் கண்டு ஊழியத்தை விட்டுவிடவும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் அவர் பெற்றிருந்த ஊழிய நியமிப்பு அவருக்கு அதிமுக்கியமாக இருந்தது.—அப்போஸ்தலர் 22:14, 15.
நற்செய்தியைப் பிரசங்கிப்பது முக்கியம் என்பதைச் சமீபத்தில் தான் புரிந்துகொண்டீர்களா? அப்படியானால், உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் ராஜ்ய அறிவிப்பாளர்களாய் இருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பீர்கள். ஊழியத்தில் சில சமயங்களில் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தால் ஆச்சரியப்படாதீர்கள். (மத்தேயு 24:9; லூக்கா 21:12; 1 பேதுரு 2:20) சவுல் எதிர்ப்பைச் சமாளித்த விதம் நமக்கு நல்ல மாதிரியாக அமைகிறது. சோதனைகளை சந்திக்கையில் விட்டுக்கொடுக்காமல் சகித்து நிற்கும் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவர். இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.” இருப்பினும், அவர்களிடம் இவ்வாறு உறுதியளித்தார்: “சகிப்புத்தன்மையால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக் கொள்வீர்கள்.”—லூக்கா 21:17-19, NW.
[அடிக்குறிப்பு]
a கலிலேயாவில் இயேசு பிரசங்கித்ததற்குப் பின்பு அல்லது பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, கிறிஸ்தவம் தமஸ்குவில் பரவ ஆரம்பித்திருக்கலாம்.—மத்தேயு 4:24; அப்போஸ்தலர் 2:5.
[பக்கம் 28-ன் படம்]
இயேசு தோன்றிய போது, சவுல் ‘தரையிலே விழுந்தார்’
[பக்கம் 29-ன் படம்]
தமஸ்குவில் கொலை செய்யப்படுவதிலிருந்து சவுல் தப்பினார்