பர்னபா—“ஆறுதலின் மகன்”
ஒரு நண்பர் கடைசியாக உங்களுக்கு ஆறுதலளித்தது எப்போது? நீங்கள் கடைசியாக எப்போது ஒருவருக்கு ஆறுதல் அளித்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவ்வப்போது நம் எல்லோருக்கும் ஊக்கமூட்டுதல் தேவைப்படுகிறது, அன்புடன் அதை அளிப்போரை நாம் எவ்வளவாய் போற்றுகிறோம்! ஆறுதல் அளிப்பது, கவனித்துக் கேட்டு, அதை புரிந்துகொண்டு, தேவையான உதவிசெய்வதற்கு நேரம் செலவிடுவதைக் குறிப்பிடுகிறது. அதைச் செய்வதற்கு நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா?
முன்மாதிரியான முறையில் அத்தகைய மனப்பூர்வமாக செயல்பட்ட ஒருவர்தான் பர்னபா; ‘அவர் நல்லவரும் பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவருமாயிருந்தார்.’ (அப்போஸ்தலர் 11:24) பர்னபாவைப் பற்றி இவ்வாறு சொல்வதற்கு காரணம் என்ன? இந்த விவரிப்புக்குத் தகுதிபெற அவர் என்ன செய்திருந்தார்?
தயாள சிந்தையுடைய உதவியாளர்
யோசே என்பதே அவருடைய உண்மையான பெயர், ஆனால், அவருடைய பண்புக்கு மிகவும் பொருத்தமாயிருந்த ஒரு சிறப்புப் பெயரான பர்னபா என்பதை அப்போஸ்தலர்கள் அவருக்கு சூட்டினார்கள்; இதன் அர்த்தம் “ஆறுதலின் மகன்” என்பதாகும். a (அப்போஸ்தலர் 4:36) சமீபத்தில்தானே கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் பர்னபா, இயேசுவின் சீஷரில் ஒருவராக இருந்தாரென சிலர் கருதுகிறார்கள். (லூக்கா 10:1, 2) அவ்வாறு இருந்திருந்தாலும் இராவிடினும் இவர் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கிறார்.
சீப்புரு தீவிலிருந்து வந்த ஒரு லேவியரான பர்னபா, பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேக்குச் சற்று பின், தானாக மனமார்ந்து ஏதோ நிலத்தை விற்று அந்தப் பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார். அவர் ஏன் அதைச் செய்தார்? அந்தச் சமயத்தில் எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்களுக்குள், “அவனவனுக்குத் தேவையானதற்குத் தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது” என்று அப்போஸ்தலர் நடபடிகளிலுள்ள விவர அறிக்கை நமக்குச் சொல்கிறது. தேவை இருந்ததை பர்னபா கண்டதாகத் தெரிகிறது, இவர் தன் அன்பிரக்கமுள்ள இருதயத்துடன் தன்னால் இயன்றதைச் செய்தார். (அப்போஸ்தலர் 4:34-37) இவர் போதிய பொருள்வளமுள்ள ஆளாக இருந்திருக்கலாம், ஆனால், ராஜ்ய அக்கறைகளின் முன்னேற்றத்திற்காக தன் பொருளுடைமைகளையும் தன்னையும் அளிப்பதற்கு அவர் ஒருபோதும் தயங்கவில்லை. b “எங்கெல்லாம் ஜனங்களைக் கண்டாரோ, எங்கெல்லாம் ஊக்குவிப்பு தேவைப்பட்ட சூழ்நிலை இருந்ததோ அங்கெல்லாம் பர்னபா தன்னால் இயன்ற எல்லாவிதத்திலும் ஊக்குவிப்பு அளித்தார்” என்று அறிஞர் எஃப். எஃப். புரூஸ் குறிப்பிடுகிறார். அவர் உட்படுகிற இரண்டாவது சம்பவத்திலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது.
ஏறக்குறைய பொ.ச. 36-ல், தர்சு பட்டணத்து சவுல் (எதிர்கால அப்போஸ்தலனாகிய பவுல்), இச்சமயத்திற்குள் கிறிஸ்தவராகியிருந்தவர், எருசலேம் சபையோடு தொடர்புகொள்ள முயற்சி செய்தார்; ஆனால், ‘அவர்கள் அவரைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவருக்குப் பயந்திருந்தார்கள்.’ தன்னுடைய மதமாற்றம் உண்மையானது, சபையை மேலுமாகப் பாழாக்குவதற்காகச் செய்த வெறும் தந்திர சூழ்ச்சியல்ல என்று சபையை எவ்வாறு அவர் நம்பச்செய்ய முடியும்? ‘பர்னபா அவரைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோனார்.’—அப்போஸ்தலர் 9:26, 27; கலாத்தியர் 1:13, 18, 19.
பர்னபா ஏன் சவுலை நம்பினார் என்பது சொல்லப்படவில்லை. எவ்வாறாயினும், இந்த “ஆறுதலின் மகன்,” சவுல் சொன்னவற்றிற்கு செவிகொடுத்து கேட்டதானது, நம்பிக்கையற்றதாகத் தோன்றின இக்கட்டான நிலையிலிருந்து வெளியேறும்படி அவருக்கு உதவிசெய்து, இவ்வாறு தன் சிறப்புப் பெயருக்கு ஏற்ப செயல்பட்டார். பின்பு சவுல் தன் சொந்தப் பட்டணமாகிய தர்சுக்குத் திரும்பிச் சென்றுவிட்டபோதிலும், இந்த இரு நபருக்கும் இடையே நட்பு உருவாகி இருந்தது. வரவிருந்த ஆண்டுகளில், அது முக்கியமான பலன்களை அளிக்கவிருந்தது.—அப்போஸ்தலர் 9:30.
அந்தியோகியாவில்
ஏறக்குறைய பொ.ச. 45-ன்போது, சீரியாவின் அந்தியோகியாவில் ஏற்பட்டுக்கொண்டிருந்த அசாதாரணமான முன்னேற்றங்களைப் பற்றிய செய்தி எருசலேமை எட்டினது. கிரேக்கு பேசின அந்நகரவாசிகளான, அநேகர் விசுவாசிகளாக மாறிக்கொண்டிருந்தனர். அங்கு சென்று, காரியங்களைக் கவனித்தறியவும், ஊழியத்தை ஒழுங்குபடுத்தவும் சபை, பர்னபாவை அனுப்பினது. இதைப்பார்க்கிலும் ஞானமான தெரிவை அது செய்திருக்க முடியாது. லூக்கா இவ்வாறு சொல்கிறார்: “அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.”—அப்போஸ்தலர் 11:22-24.
அவர் செய்ததெல்லாம் அதுமட்டுமே அல்ல. அறிஞர் ஜ்யூஸிப்பே ரிக்கியோட்டி சொன்னதன்படி, “பர்னபா நடைமுறைக்கேற்ப செயல்படும் மனிதராக இருந்தார். நிறைவான அறுவடை பின்தொடரும் என்று நம்பிக்கையளித்த இத்தகைய சூழ்நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள வேலையில் ஈடுபடவேண்டிய தேவையையும், ஆகவே, அறுவடை செய்வதற்கான வேலையாட்களே முக்கியமாகத் தேவைப்பட்டனர் என்பதையும் உடனடியாகப் புரிந்துகொண்டார்.” பர்னபா, சீப்புருவிலிருந்து வந்தவராக இருந்ததனால், புறஜாதியாரோடு சகஜமாக நடந்து கொள்வதில் பெரும்பாலும் பழக்கப்பட்டிருக்கலாம். புறமதத்தினருக்குப் பிரசங்கிப்பதில் முக்கியமாய்த் தகுதிபெற்றவராக அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால், கிளர்ச்சியூட்டி ஊக்குவிக்கிற இந்த நடவடிக்கையில் மற்றவர்களை உட்படுத்த அவர் ஆயத்தமாக இருந்தார்.
பர்னபா, சவுலைப் பற்றி நினைத்தார். முன்னாளில் துன்புறுத்துபவராக இருந்த சவுல், ‘புறஜாதிகளுக்கு இயேசுவின் நாமத்தை அறிவிக்கிறதற்காகத் தெரிந்துகொண்ட பாத்திரம்’ என்று, அவர் மதம் மாறிய சமயத்தில் அனனியாவுக்கு அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசன வெளிப்படுத்துதலைப் பற்றி பர்னபாவுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கலாம். (அப்போஸ்தலர் 9:15) ஆகையால், சவுலைத் தேடி கண்டுபிடிக்கும்படி, தர்சுவுக்குச் செல்ல பர்னபா புறப்பட்டார். அங்கு செல்ல ஒரு வழி பயணத்திற்கு மாத்திரமே ஏறக்குறைய 200 கிலோமீட்டர் பயணப்பட வேண்டியிருந்தது. ஓர் ஆண்டு முழுவதும் இவர்கள் இருவரும் சகாக்களாக ஒன்றுசேர்ந்து ஊழியம் செய்தனர்; இந்தக் காலப்பகுதியின்போதுதான், “அந்தியோகியாவிலேயே, சீஷர்கள் தேவ அருளால் கிறிஸ்தவர்கள் என்று முதலாவதாக அழைக்கப்பட்டனர்.”—அப்போஸ்தலர் 11:25, 26, NW.
கிலவுதியு ராயனின் ஆட்சி காலத்தின்போது, ரோமப் பேரரசின் பல்வேறு பாகங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. யூத சரித்திராசிரியர் ஜொஸிபஸ் சொல்லியிருப்பதன் பிரகாரம், எருசலேமுக்குள், “உணவைப் பெறுவதற்குத் தேவைப்பட்ட பணம் இல்லாமல் பல ஜனங்கள் இறந்தனர்.” ஆகையால், அந்தியோகியாவிலிருந்த சீஷர்கள், “அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ்சேகரித்து அனுப்ப வேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.” அந்த வேலைப்பொறுப்பை முழுமையாக நிறைவேற்றின பின்பு, இந்த இருவரும் யோவான் மாற்குவுடன் அந்தியோகியாவுக்குத் திரும்பிவந்தார்கள்; அங்கு சபையில் இருந்த மற்றவர்களோடுகூட தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் மதிக்கப்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 11:29, 30; 12:25; 13:1.
ஒரு விசேஷ மிஷனரி ஊழிய நியமிப்பு
பின்பு ஓர் அசாதாரண சம்பவம் நடந்தது. “அவர்கள் யெகோவாவுக்கு பகிரங்கமாய் ஊழியம் செய்து உபவாசித்துக்கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவி சொன்னது: ‘எல்லாரிலும் பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்திருக்கிற ஊழியத்திற்கு, எனக்காகத் தனியே பிரித்துவிடுங்கள்.’” சற்று சிந்தித்துப் பாருங்கள்! அந்த இருவருக்கும் ஒரு விசேஷ ஊழிய நியமிப்பை அளிக்கும்படி யெகோவாவின் ஆவி கட்டளையிட்டது. “அவ்வாறே, பரிசுத்த ஆவியால் அனுப்பப்பட்டு இந்த மனிதர், செலூக்கியாவுக்குச் சென்று, அங்கிருந்து சீப்புருவுக்கு கப்பலேறி பயணப்பட்டனர்.” பர்னபாவும் ஓர் அப்போஸ்தலர், அல்லது அனுப்பப்பட்டவர் என்று சரியாகவே அழைக்கப்படலாம்.—அப்போஸ்தலர் 13:2, 4; 14:14, NW.
சீப்புருதீவு வழியாகப் பயணப்பட்டு, அந்தத் தீவின் ரோம மாகாண ஆளுநரான செர்கியுபவுலை மதமாற்றிய பின்பு, அவர்கள் ஆசியா மைனரின் தெற்குக் கரையிலுள்ள பெர்கே பட்டணத்திற்குச் சென்றனர்; அங்கே யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்து எருசலேமுக்குத் திரும்பி சென்றுவிட்டான். (அப்போஸ்தலர் 13:13) அது வரையாக பர்னபா தலைமை வகித்து செயல்பட்டதாக தெரிகிறது. ஒருவேளை, அதிக அனுபவம் வாய்ந்த துணைவராக இருந்ததனால் அவ்வாறு வகித்திருக்கலாம். இந்தக் கட்டத்திலிருந்து, (இப்போது பவுல் என்று குறிப்பிடப்படுகிற) சவுல் தலைமை வகிக்கிறார். (அப்போஸ்தலர் 13:7, 13, 16; 15:2-ஐ ஒப்பிடுக.) இந்தப் புதிய மாற்றத்தால் பர்னபா மனவருத்தம் அடைந்தாரா? இல்லை, தன் கூட்டாளியையும் யெகோவா வல்லமைவாய்ந்த முறையில் பயன்படுத்துவதை மனத்தாழ்மையோடு கண்டுணர்ந்த முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக அவர் இருந்தார். அவர்கள் மூலமாக, இன்னும் மற்ற பிராந்தியங்கள் நற்செய்தியைக் கேட்கும்படி யெகோவா விரும்பினார்.
உண்மையில், இந்த இருவரும் பிசீதியாவிலுள்ள அந்தியோகியாவிலிருந்து வெளியே துரத்தப்பட்டதற்கு முன்பாக, அந்த முழு பிரதேசத்தாரும் பவுலினிடமிருந்தும் பர்னபாவினிடமிருந்தும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, பலர் செய்தியை ஏற்றார்கள். (அப்போஸ்தலர் 13:43, 48-52) இக்கோனியாவில், ‘யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிகளானார்கள்.’ இது, அங்கு அதிகமான காலம் செலவிட்டு, ‘யெகோவாவின் அதிகாரத்தால் தைரியமாகப் பேசும்படி’ பவுலையும் பர்னபாவையும் தூண்டுவித்தது. ‘அவர் அவர்களுடைய கைகளின்மூலமாய் அடையாளங்களும் அற்புதங்களும் நடைபெறும்படி அருளினார்.’ தங்களைக் கல்லெறியும்படியான ஒரு சதி தூண்டப்பட்டிருந்ததைக் கேள்விப்பட்டபோது, இந்த இருவரும் ஞானமாய் அங்கிருந்து விலகி ஓடி, லிக்கவோனியாவிலும், லீஸ்திராவிலும், தெர்பையிலும் தங்கள் ஊழியத்தைத் தொடர்ந்து செய்தார்கள். லீஸ்திராவில் உயிருக்கு ஆபத்தான அனுபவங்களை பெற்றபோதிலும், பர்னபாவும் பவுலும், இருவருமே, விடாது தொடர்ந்து “சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.”—அப்போஸ்தலர் 14:1-7, (NW), 19-22.
ஊக்கம் மிகுந்த இந்த இரு போதகர்களும் பயம் தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்போவதில்லை. மாறாக, மூர்க்கமான எதிர்ப்பைத் தாங்கள் ஏற்கெனவே எதிர்ப்பட்ட இடங்களில் இருந்த கிறிஸ்தவர்களாக மாறிய புதியவர்களை திடப்படுத்தும்படி அவர்கள் திரும்பிச் சென்றனர். புதிய சபைகளில் தலைமை வகிக்கும்படி தகுதிபெற்ற ஆண்களுக்கு அவர்கள் பெரும்பாலும் உதவிசெய்திருப்பார்கள்.
விருத்தசேதனத்தைப் பற்றிய பிரச்சினை
ஏறக்குறைய, பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேக்கு 16 ஆண்டுகளுக்குப்பின், சரித்திரப் பிரசித்திபெற்ற விருத்தசேதன பிரச்சினையைக் குறித்ததில் பர்னபா உட்பட்டிருந்தார். “சிலர் யூதேயாவிலிருந்து [சீரியாவின் அந்தியோகியாவிற்கு] வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.” அது சரியில்லை என்று பர்னபாவும் பவுலும் அனுபவத்திலிருந்து அறிந்தவர்களாய், அந்தக் குறிப்பின்பேரில் விவாதித்தார்கள். தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தாமல், சகோதரர் கூட்டம் முழுவதன் நன்மைக்காக இந்தக் கேள்வி முடிவு செய்யப்பட வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, எருசலேமில் இருந்த ஆளும் குழுவினரிடம் இந்தக் கேள்வியை சமர்ப்பித்தார்கள்; அவர்களுடைய பதில்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவினது. அதன்பின்பு, “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல்” என்று விவரிக்கப்பட்ட இவர்கள், அந்தியோகியாவில் இருந்த சகோதரருக்கு இந்தத் தீர்மானத்தைத் தெரிவிக்கும்படி நியமிக்கப்பட்டவர்களுக்குள் இருந்தனர். ஆளும் குழுவினிடமிருந்து வந்த கடிதம் வாசிக்கப்பட்டு, பேச்சுகள் கொடுக்கப்பட்டபோது, சபையார் ‘அதனால் உண்டான ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்,’ மேலும் ‘திடப்படுத்தப்பட்டார்கள்.’—அப்போஸ்தலர் 15:1, 2, 4, 25-32.
‘கடுங்கோபமூண்டது’
அவரைப் பற்றிய பல நல்ல குறிப்புகளுக்குப் பின், பர்னபாவின் முன்மாதிரியின்படி நம்மால் ஒருபோதும் வாழ முடியாது என்பதாக நாம் ஒருவேளை உணரலாம். எனினும், இந்த “ஆறுதலின் மகன்” நாமெல்லாரும் இருப்பதைப்போலவே அபூரணராக இருந்தார். சபைகளைச் சந்திப்பதற்காக இரண்டாவதான மிஷனரி பயணத்தை அவரும் பவுலும் திட்டமிடும்போது, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பர்னபா, தன் மாமன் மகனான யோவான் மாற்குவைத் தங்களுடன் அழைத்துச் செல்லும்படி தீர்மானித்திருந்தார்; ஆனால், முதல் மிஷனரி பயணத்தின்போது யோவான் மாற்கு தங்களைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதால், அவனை அழைத்துச் செல்வது தகுந்ததல்ல என்று பவுல் நினைத்தார். “இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான். பவுலோ சீலாவைத் தெரிந்துகொண்டு, . . . புறப்பட்டு” வேறொரு திசையில் சென்றார்.—அப்போஸ்தலர் 15:36-40.
எவ்வளவு விசனகரமானது! இருந்தபோதிலும், இந்தச் சம்பவம், பர்னபாவின் பண்பியல்பைப் பற்றி வேறு ஒன்றையும் நமக்குச் சொல்கிறது. “இரண்டாம் தடவையாக மாற்குவின்பேரில் நம்பிக்கை வைத்து, எந்த விளைவு ஏற்பட்டாலும் அதற்கு பொறுப்பேற்க பர்னபா ஆயத்தமாக இருந்தது அவருக்கு, அழியாத நன்மதிப்பாக இன்றும் நிலைநிற்கிறது” என்று அறிஞர் ஒருவர் சொல்கிறார். அந்த எழுத்தாளர் குறிப்பாகச் சொல்லுகிறபடி, “பர்னபா தன்னில் [மாற்குவில்] நம்பிக்கை வைத்தது, தன் சொந்த நம்பிக்கையைத் திரும்பப் புதுப்பிக்க அவனுக்கு உதவிசெய்து, திரும்ப பொறுப்பை ஏற்கும்படியான ஊக்குவிப்பை அளித்தது” என்பதாக இருக்கலாம். காரியங்கள் நடந்தேறினபோது, அந்த நம்பிக்கை சரியானதென முழுமையாய்க் காட்டப்பட்டது. எவ்வாறெனில், கிறிஸ்தவ சேவையில் மாற்கு பயனுள்ளவனாக இருந்தான் என்று பவுல்தானே நன்றியோடு தெரிவித்த அந்த நாள் வந்தது.—2 தீமோத்தேயு 4:11; கொலோசெயர் 4:10-ஐ ஒப்பிடுக.
மனச்சோர்வுற்றோரிடம் செவிகொடுத்துக் கேட்கவும், புரிந்துகொள்ளவும், ஊக்குவிப்பை அளிக்கவும், உதவி தேவையாக இருப்பதை நாம் காணும்போதெல்லாம் நடைமுறையில் பயனுள்ள உதவிசெய்யவும் நேரம் செலவிட பர்னபாவின் முன்மாதிரி நம்மைத் தூண்டுவிக்கலாம். சாந்தத்துடனும், தைரியத்துடனும் தன் சகோதரரைச் சேவிக்க அவர் மனமுள்ளவராக இருந்ததையும், அதோடுகூட இதனால் உண்டான மிகச் சிறப்பான பலன்களையும் பற்றிய இந்தப் பதிவுதானே ஊக்குவிப்பாக உள்ளது. இன்று நம்முடைய சபைகளில் பர்னபாவைப் போன்ற நபர்களை உடையோராக இருப்பது எத்தகைய ஓர் ஆசீர்வாதமாக இருக்கிறது!
[அடிக்குறிப்புகள்]
a ஒரு பண்பின் “மகன்” என்று ஒருவரை அழைப்பது, அவருடைய முதன்மையான சிறப்புப் பண்பை அறிவுறுத்துவதாக இருந்தது. (உபாகமம் 3:18, NW அடிக்குறிப்பைக் காண்க.) முதல் நூற்றாண்டில், ஓர் ஆளின் பண்புகளுக்குக் கவனத்தை திருப்ப சிறப்புப் பெயர்களைப் பயன்படுத்துவது பொதுவான பழக்கமாக இருந்தது. (மாற்கு 3:17-ஐ ஒப்பிடுக.) அது ஒரு வகையான பொது ஏற்பாக இருந்தது.
b மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கட்டளையிடப்பட்டிருந்த ஏற்பாட்டைக் கவனிக்கையில், லேவியராயிருந்த பர்னபாவுக்கு எவ்வாறு சொந்த நிலம் இருந்தது என்று சிலர் கேட்டிருக்கின்றனர். (எண்ணாகமம் 18:20) எனினும், அந்தச் சொத்து பலஸ்தீனாவிலா சீப்புருவிலா, எங்கிருந்தது என்பது தெளிவாக இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் இது, எருசலேம் பகுதியில் பர்னபா வாங்கியிருந்த வெறும் சவ அடக்க இடமாக இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்காக பர்னபா தன் சொத்தைக் கொடுத்துவிட்டார்.
[பக்கம் 23-ன் படம்]
பர்னபா, ‘நல்லவரும் பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவருமாயிருந்தார்’