சவுல் முன்னாள் நண்பர்களையும் பகைவர்களையும் சந்திக்கிறார்
அப்போஸ்தலன் பவுல் என பிற்பாடு அறியப்பட்டவரே இந்த சவுல். இவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியபின் முதன்முறையாக எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது கொஞ்சம் பயத்தோடுதான் இருந்திருக்க வேண்டும்.a ஏன்? மூன்று வருடங்களுக்கு முன்பு இவர் எருசலேமை விட்டுச் சென்றிருந்தார்; அதுவரை இயேசுவின் சீஷர்களை பயமுறுத்திக்கொண்டும் கொலை செய்யத் துடித்துக்கொண்டும் இருந்தார். தமஸ்கு பட்டணத்தில் கிறிஸ்தவர்கள் யாரேனும் கண்ணில்பட்டால், அவர்களைக் கைது செய்யவும் அவர் கட்டளை பெற்றிருந்தார்.—அப்போஸ்தலர் 9:1, 2; கலாத்தியர் 1:18.
சவுல், கிறிஸ்தவராக மாறியவுடனேயே உயிர்த்தெழுப்பப்பட்ட மேசியாவில் தனக்கிருந்த விசுவாசத்தை தைரியமாக அறிவித்தார். அதனால் தமஸ்குவிலிருந்த யூதர்கள் அவரைக் கொலைசெய்ய எண்ணினார்கள். (அப்போஸ்தலர் 9:19-25) அப்படியிருக்க, எருசலேமிலிருந்த தன்னுடைய முன்னாள் யூத நண்பர்கள் தன்னை இருகரம் நீட்டி வரவேற்பார்களென அவர் எதிர்பார்க்க முடியுமா? அவரைப் பொறுத்தவரை, அங்கிருந்த கிறிஸ்துவின் சீஷர்களைக் கண்டுபிடிப்பதுதான் முக்கியமான விஷயமாக இருந்தது. ஆனால் அது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை.
‘சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தார்; அவர்கள் அவரைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவருக்குப் பயந்திருந்தார்கள்.’ (அப்போஸ்தலர் 9:26) அது புரிந்துகொள்ளத்தக்கதே. கிறிஸ்தவர்களை ஈவிரக்கமில்லாமல் துன்புறுத்துகிறவர் என்றுதான் அதுவரை அவரைப்பற்றி அவர்கள் அறிந்திருந்தார்கள். தன்னை ஒரு கிறிஸ்தவராக அவர் சொல்லிக்கொண்டது சபைக்குள் தந்திரமாக நுழைவதற்கு அவர் போட்ட சூழ்ச்சித் திட்டமாக அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். அதனால், எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் அவரிடமிருந்து எட்டி நிற்கவே விரும்பினார்கள்.
இருந்தாலும், அவர்களில் ஒருவர் சவுலுக்கு உதவ முன்வந்தார். அவர்தான் பர்னபா. கிறிஸ்தவர்களை முன்பு துன்புறுத்தி வந்த சவுலை “அப்போஸ்தலரிடத்தில்” அவர் அழைத்துச் சென்றதாக பைபிள் குறிப்பிடுகிறது; இங்கே ‘அப்போஸ்தலர்’ எனச் சொல்லப்பட்டிருப்பது பேதுருவையும் (கேபா) கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபையும் குறிப்பதாகத் தெரிகிறது. கிறிஸ்தவராக சவுல் மாறியதையும் தமஸ்குவில் அவர் பிரசங்கித்ததையும் குறித்து இவர்களிடத்தில் பர்னபா தெரிவித்தார் எனவும் பைபிள் குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 9:27; கலாத்தியர் 1:18, 19) சவுல்மீது பர்னபாவுக்கு எப்படி நம்பிக்கை பிறந்தது என்பதைப்பற்றி பைபிள் குறிப்பிடுகிறதில்லை. இருவரும் பரிச்சயமானவர்களாக இருந்திருப்பார்களோ? அதனால்தான் சவுலின் நடவடிக்கைகளைக் கவனித்து அவர் உண்மையிலேயே மாறிவிட்டார் என நற்சான்று கொடுக்க பர்னபா தூண்டப்பட்டிருப்பாரோ? தமஸ்குவிலிருந்த கிறிஸ்தவர்களில் சிலரை பர்னபா அறிந்திருந்ததால் சவுல் மாறியதைக் குறித்து அவர்களிடம் கேட்டுத் தெரிந்திருப்பாரோ? எப்படியிருந்தாலும்சரி, சவுலைக் குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு பர்னபா முற்றுப்புள்ளி வைத்தார். அதன் விளைவாக, அப்போஸ்தலன் பேதுருவோடு சவுல் 15 நாட்கள் தங்கினார்.
பேதுருவுடன் பதினைந்து நாட்கள்
சவுல் தனது ஊழிய நியமிப்பை இயேசுவிடமிருந்து நேரடியாகப் பெற்றிருந்தார். மனிதருடைய ஒப்புதல் அவருக்கு அவசியமாக இருக்கவில்லை; இதைத்தான் அவர் கலாத்தியர்களிடம் வலியுறுத்தினார். (கலாத்தியர் 1:11, 12) இயேசுவின் ஊழியத்தைப்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை சவுல் புரிந்துகொண்டார் என்பதில் சந்தேகமில்லை. பேதுருவுடன் சவுல் தங்கியிருந்தது இயேசுவின் ஊழியத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள அவருக்குப் போதிய வாய்ப்பை அளித்திருக்கும். (லூக்கா 24:12; 1 கொரிந்தியர் 15:3-8) சவுல், பேதுருவிடமும் யாக்கோபுவிடமும் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளத் துடித்திருப்பார். அதே சமயத்தில், சவுல் கண்ட தரிசனத்தையும் அவருடைய நியமிப்பையும் குறித்து நிறைய விஷயங்களை அவர்களும் கேட்டிருப்பார்கள்.
முன்னாள் நண்பர்களிடமிருந்து தப்பியது எப்படி?
முதல் கிறிஸ்தவ உயிர்த்தியாகி என்று ஸ்தேவான் அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் ‘உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச் சேர்ந்த சிலருடனும் சிரேன், அலக்சாந்திரியா நகரினருடனும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவருடனும்’ முன்னர் வாக்குவாதம் பண்ணியிருந்தார். இப்போதோ சவுல், ‘கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களுடனே வாதாடி,’ அவர்களுக்குத் தைரியமாக சாட்சி கொடுத்து வந்தார். அதன் விளைவு? அவர்கள் அவரைத் தீர்த்துக்கட்ட நினைத்தார்கள்.—அப்போஸ்தலர் 6:9; 9:28, 29, பொது மொழிபெயர்ப்பு.
தன்னில் ஏற்பட்ட இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கான காரணத்தை முன்னாள் நண்பர்களிடம் விளக்கவும் மேசியாவைக் குறித்து அவர்களுக்கு அறிவொளியூட்டவும் சவுல் விரும்பியது இயல்புதான். என்றாலும், கிரேக்கு மொழி பேசிய இந்த யூதர்கள் சவுலை நம்பிக்கைத்துரோகியாகக் கருதி, அவரிடம் கடும் குரோதத்தைக் காட்டினார்கள்.
தான் எந்தளவு ஆபத்தான சூழ்நிலையில் இருந்தார் என்பதை சவுல் புரிந்துகொண்டாரா? ஆலயத்தில் அவர் ஜெபம் செய்து கொண்டிருந்தபோது, மெய்மறந்த நிலைக்குள்ளாகி இயேசுவைக் கண்டார்; அப்போது நடந்ததை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நீ என்னைக் குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ” என்று அவரிடம் இயேசு கூறினார். அதற்கு சவுல் இவ்வாறு பதிலளித்தார்: ‘ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும், உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்ததையும், . . . இவர்கள் அறிந்திருக்கிறார்களே.’—அப்போஸ்தலர் 22:17-20.
தன்னுடைய உயிர் ஆபத்திலிருந்ததை சவுல் அறிந்திருந்தார் என்பதையே அவருடைய பதில் தெரிவிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். வேறு சிலரோ அவர் இவ்வாறு சொன்னதாகக் கருதுகிறார்கள்: ‘ஒருகாலத்தில் நானும் அவர்களைப்போல துன்புறுத்துபவனாக இருந்தேன், அது அவர்களுக்கே தெரியும். அதனால், நான் மதம் மாறியதை முக்கியமான விஷயமாகத்தான் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். சத்தியத்தை அவர்கள் அறிந்துகொள்ள ஒருவேளை என்னால் உதவ முடியும்.’ இருந்தாலும், அந்த யூதர்கள் ஒரு “விசுவாசதுரோகி” அளிக்கும் சாட்சியைச் செவிகொடுத்துக் கேட்க மாட்டார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். எனவே, சவுலிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன்.”—அப்போஸ்தலர் 22:21, 22.
சவுலின் உயிர் ஆபத்திலிருந்ததை சக கிறிஸ்தவர்கள் அறிந்தபோது, அவசர அவசரமாக அவரை செசரியா துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று, 500 கிலோமீட்டர் தொலைவிலிருந்த அவருடைய சொந்த ஊரான தர்சு பட்டணத்துக்கு அனுப்பி வைத்தார்கள். (அப்போஸ்தலர் 9:30) பிற்பாடு, பல வருடங்கள் கழித்துத்தான் சவுல் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.
எருசலேமிலிருந்து அவர் இவ்வாறு உடனடியாகச் சென்றது கிறிஸ்தவ சபைக்குப் பாதுகாப்பை அளித்திருக்கலாம். கிறிஸ்தவர்களை முன்பு துன்புறுத்தி வந்தவர் அங்கே இருந்தாரென்றால் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை வெடிக்கலாம். சவுல் அங்கிருந்து சென்றபிறகு, “யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.”—அப்போஸ்தலர் 9:31.
ஜாக்கிரதையுடன் இருப்பதற்குப் பாடங்கள்
முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே, இன்றும் சில சந்தர்ப்பங்களில் நாம் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டியிருக்கலாம். அந்நியர்களை நாம் அநாவசியமாக சந்தேகப்பட வேண்டியதில்லை. என்றாலும், சில சமயங்களில் மோசடிப் பேர்வழிகள் தங்களுடைய சொந்த லாபத்துக்காக யெகோவாவின் மக்களைச் சுரண்டிப் பிழைக்க முயன்றிருக்கிறார்கள், அல்லது சபைக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணத்தோடு செயல்பட்டிருக்கிறார்கள். எனவே அத்தகைய வஞ்சகர்களின் ஏமாற்று வலையில் வீழ்ந்துவிடாமலிருக்க நாம் விவேகமாகச் செயல்பட வேண்டும்.—நீதிமொழிகள் 3:27; 2 தீமோத்தேயு 3:13.
எருசலேமில் பிரசங்கிப்பதைக் குறித்து சவுல் உணர்ந்த விதம், கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டிய மற்றொரு பாடத்தைப் புகட்டுகிறது. நீங்கள் வசிக்கிற பகுதியின் சுற்றுவட்டாரங்கள் சிலவற்றில் சாட்சி கொடுப்பது அல்லது உங்களுடைய முன்னாள் நண்பர்கள் உட்பட சில ஆட்களிடம் சாட்சி கொடுப்பது, உடல் ரீதியிலோ, ஆன்மீக ரீதியிலோ ஒழுக்க ரீதியிலோகூட ஆபத்தாகிவிடலாம். எங்கு செல்கிறோம், எப்போது செல்கிறோம் போன்ற விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையோடு செயல்பட வேண்டியது அவசியம்.—நீதிமொழிகள் 22:3; மத்தேயு 10:16.
இந்தக் கொடிய உலகிற்கு அழிவு வரும் முன் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படும் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். முன்னாள் நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும்கூட ‘கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்த’ விஷயத்தில் சவுல் நமக்கு என்னே ஓர் அருமையான முன்மாதிரி!—அப்போஸ்தலர் 9:28, 29.
[அடிக்குறிப்பு]
a சவுல் இன்று அப்போஸ்தலன் பவுல் என்ற பெயரிலேயே அறியப்படுகிறார். என்றாலும், இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான பைபிள் வசனங்களில் சவுல் என்ற அவருடைய யூதப் பெயரிலேயே குறிப்பிடப்படுகிறார்.—அப்போஸ்தலர் 13:9.
[பக்கம் 16-ன் படம்]
எருசலேமுக்கு வந்தவுடன், கிரேக்கு மொழி பேசிய யூதர்களிடம் சவுல் தைரியமாகச் சாட்சி கொடுத்தார்