“அழுகிறவர்களோடு அழுங்கள்”
“எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்.”—1 தெ. 5:11.
1, 2. துக்கத்தில் இருப்பவர்களை ஆறுதல்படுத்துவது பற்றி நாம் ஏன் யோசிக்க வேண்டும்? (ஆரம்பப் படம்)
“எங்க பையன் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு அப்புறம்கூட, தாங்க முடியாத வலியும் வேதனையும் எங்களுக்கு இருந்துச்சு” என்று சூசி சொல்கிறார். தன் மனைவியை திடீரென்று மரணத்தில் பறிகொடுத்த ஒரு சகோதரர், ‘என்னோட வேதனைய வார்த்தைகளால விளக்கவே முடியாது’ என்று சொன்னார். நிறைய பேர் இப்படிப்பட்ட வலியை அனுபவிப்பது சோகமான ஒரு விஷயம்! இன்று கிறிஸ்தவ சபையில் இருக்கிற நிறைய பேர், அர்மகெதோனுக்கு முன்பு தங்கள் அன்பானவர்கள் இறந்துபோவார்கள் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒருவேளை உங்கள் அன்பானவர்கள் யாராவது இறந்துபோயிருக்கலாம், அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது துக்கத்தில் தவித்துக்கொண்டிருக்கலாம். அதனால், நீங்கள் ஒருவேளை இப்படி யோசிக்கலாம்: ‘துக்கத்துல தவிக்குறவங்களுக்கு எப்படி உதவி செய்றது?’
2 நாட்கள் போகப் போக வலியும் வேதனையும் தானாகவே சரியாகிவிடும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், எப்போதுமே இது உண்மையாக இருக்குமா? “ஒருத்தர் அவரோட நேரத்தை எப்படி பயன்படுத்துறாரோ, அதை பொறுத்துதான் அவரோட வலியும் வேதனையும் குறையுங்குறத என்னால உறுதியா சொல்ல முடியும்” என்று கணவனை இழந்த ஒரு பெண் சொல்கிறார். நம் உடலில் ஏற்பட்ட காயம் சரியாவதற்கு, நேரமும் அன்பான கவனிப்பும் தேவை. அதே போல, நம் உள்ளத்தில் ஏற்பட்ட காயம் சரியாவதற்கும் நேரமும் அன்பான கவனிப்பும் தேவை! துக்கத்தில் இருப்பவர்களின் வேதனையைக் குறைக்க, குறிப்பிட்ட என்ன சில விஷயங்களை நாம் செய்யலாம்?
யெகோவா “எல்லா விதமான ஆறுதலின் கடவுள்”
3, 4. நம் வேதனையை யெகோவா புரிந்துகொள்கிறார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
3 நமக்குத் தேவையான ஆறுதல், முக்கியமாக, நம் கரிசனையுள்ள அப்பாவான யெகோவாவிடமிருந்துதான் வருகிறது. (2 கொரிந்தியர் 1:3, 4-ஐ வாசியுங்கள்.) அனுதாபம் காட்டுவதில் அவர்தான் தலைசிறந்த முன்மாதிரி! “நான்தான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்” என்று தன்னுடைய மக்களுக்கு அவர் வாக்குக் கொடுக்கிறார்.—ஏசா. 51:12; சங். 119:50, 52, 76.
4 அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்த வேதனை யெகோவாவுக்கும் இருக்கிறது. உதாரணத்துக்கு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது ராஜா போன்றவர்களை அவர் மரணத்தில் இழந்திருக்கிறார். (எண். 12:6-8; மத். 22:31, 32; அப். 13:22) அந்த உண்மையுள்ளவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவரப்போகும் அந்த நாளுக்காக யெகோவா ஆர்வமாகக் காத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (யோபு 14:14, 15) அப்போது, அவர்கள் எல்லாரும் சந்தோஷமாக இருப்பார்கள், பரிபூரண ஆரோக்கியத்தை அனுபவிப்பார்கள். கடவுளுடைய மகனான இயேசுவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இயேசு யெகோவாவுக்கு “செல்லப்பிள்ளையாக” இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 8:22, 30) அந்த அருமை மகன் துடிதுடித்து இறந்துபோனதைப் பார்த்தபோது, யெகோவாவுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் என்பதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது!—யோவா. 5:20; 10:17.
5, 6. யெகோவா நமக்கு எப்படி ஆறுதல் தருகிறார்?
5 யெகோவா நமக்கு உதவுவார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அதனால், நாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும்; நம் வேதனையையும் துக்கத்தையும் அவரிடம் மனம் திறந்து சொல்ல வேண்டும். யெகோவா நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார்... நமக்குத் தேவையான ஆறுதலைத் தருகிறார்... என்பதைத் தெரிந்துவைத்திருப்பது நம் மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! ஆனால், அவர் நமக்கு எப்படி ஆறுதல் தருகிறார்?
6 யெகோவா நமக்கு நிறைய வழிகளில் ஆறுதல் தருகிறார். அதில் முக்கியமான ஒரு வழி, தன் சக்தியைக் கொடுப்பதுதான்! (அப். 9:31) தன்னிடம் கேட்கிற எல்லாருக்கும் வல்லமை வாய்ந்த தன் சக்தியை நம் அப்பா கொடுப்பார் என்று இயேசு வாக்குக் கொடுத்தார். (லூக். 11:13) ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சூசி இப்படிச் சொல்கிறார்: “நிறைய தடவை நாங்க மண்டிபோட்டு, ஆறுதல் தாங்கனு யெகோவாகிட்ட கெஞ்சியிருக்கோம். ஒவ்வொரு தடவையும் தேவசமாதானம் உண்மையிலயே எங்களோட இதயத்தையும் மனதையும் பாதுகாத்திருக்கு.”—பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.
இயேசு நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார்
7, 8. இயேசுவால் நம்மை ஆறுதல்படுத்த முடியும் என்று எப்படி உறுதியாகச் சொல்லலாம்?
7 இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, தன் சொல்லாலும் செயலாலும் தன் அப்பாவின் அருமையான குணங்களை அச்சுப்பிசகாமல் அப்படியே வெளிக்காட்டினார். (யோவா. 5:19) ‘உள்ளம் உடைந்தவர்களையும்’ ‘துக்கப்படுகிற எல்லாரையும்’ ஆறுதல்படுத்த, யெகோவா இயேசுவைப் பூமிக்கு அனுப்பினார். (ஏசா. 61:1, 2; லூக். 4:17-21) தங்கள் வேதனைகளை இயேசு புரிந்துகொண்டார் என்பதும், தங்களுக்கு உதவ அவர் ஆசைப்படுகிறார் என்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது.—எபி. 2:17.
8 தன் இளம் வயதிலேயே, நெருங்கிய நண்பர்களையும் குடும்பத்தில் இருந்தவர்களையும் இயேசு மரணத்தில் பறிகொடுத்தார். உதாரணத்துக்கு, அவருடைய இளம் வயதிலேயே அவருடைய வளர்ப்புத் தந்தையான யோசேப்பு இறந்துபோயிருக்கலாம்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அவருடைய டீனேஜிலேயே அல்லது 20-களின் ஆரம்பத்திலேயே அவருடைய துக்கத்தையும், அவருடைய அம்மா, தம்பிகள் மற்றும் தங்கைகளின் துக்கத்தையும் அவர் சமாளிக்க வேண்டியிருந்தது. அது அவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!
9. லாசரு இறந்தபோது இயேசு தன்னுடைய அனுதாபத்தை எப்படி வெளிக்காட்டினார்?
9 மக்களை நன்றாகப் புரிந்துவைத்திருந்ததையும், அவர்கள்மேல் தனக்கு அனுதாபம் இருந்ததையும் இயேசு தன்னுடைய ஊழிய காலத்தின்போது வெளிக்காட்டினார். உதாரணத்துக்கு, அவருடைய நெருங்கிய நண்பன் லாசரு இறந்தபோது, மரியாளும் மார்த்தாளும் அனுபவித்த தாங்க முடியாத வேதனையை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. மரியாள் மற்றும் மார்த்தாள்மேல் இயேசுவுக்கு அந்தளவு அனுதாபம் இருந்ததால், அவர் கண்ணீர்விட்டார்! தான் லாசருவை உயிரோடு கொண்டுவரப்போவது தெரிந்திருந்தும், இயேசு அப்படிக் கண்ணீர்விட்டார்!—யோவா. 11:33-36.
10. இயேசு இன்றும் நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?
10 இயேசு அன்று சொன்ன ஆறுதலான வார்த்தைகள் இன்று நமக்கு எப்படி உதவும்? “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்” என்பதை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. (எபி. 13:8) ‘வாழ்வின் அதிபதியான’ இயேசுவுக்கு, வேதனையில் தவிப்பது என்றால் என்ன என்று நன்றாகவே தெரியும். அதனால், “சோதிக்கப்படுகிறவர்களுக்கு அவரால் உதவி செய்ய முடியும்.” (அப். 3:15; எபி. 2:10, 18) மற்றவர்களுடைய வேதனைகளை இன்றும் இயேசுவால் புரிந்துகொள்ள முடியும் என்பதிலும், “சரியான சமயத்தில்” அவர்களை அவரால் ஆறுதல்படுத்த முடியும் என்பதிலும் நாம் நம்பிக்கையாக இருக்கலாம்.—எபிரெயர் 4:15, 16-ஐ வாசியுங்கள்.
‘வேதவசனங்கள் ஆறுதல்படுத்துகின்றன’
11. எந்தெந்த வசனங்கள் உங்களுக்கு ஆறுதலாக இருக்கின்றன?
11 லாசரு இறந்தபோது இயேசு அனுபவித்த பயங்கரமான வேதனையைப் பற்றிய பதிவு நமக்கு ஆறுதல் தருகிறது. ஆனால், பைபிளில் இருக்கிற ஆறுதலான வசனங்களில் இது ஒரு உதாரணம்தான். இது போல ஏராளமான வசனங்கள் பைபிளில் இருக்கின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால், “அன்று எழுதப்பட்ட வேதவசனங்கள் எல்லாம் நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டன; அவை நமக்கு நம்பிக்கை தருகின்றன. நம்மை ஆறுதல்படுத்துகின்றன, சகித்திருக்க நமக்குப் பலம் தருகின்றன.” (ரோ. 15:4) நீங்கள் துக்கத்தில் தவித்துக்கொண்டிருந்தால், கீழே கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்கள் உங்கள் மனதுக்கு ரொம்பவே ஆறுதலாக இருக்கும்.
“உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.”—சங். 34:18, 19.
“கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் [யெகோவா] எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்.”—சங். 94:19.
“நம்மேல் அன்பு காட்டி அளவற்ற கருணையால் நிரந்தர ஆறுதலையும் அருமையான நம்பிக்கையையும் கொடுத்திருக்கிற நம் தகப்பனாகிய கடவுளும், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவும், உங்கள் இதயத்துக்கு ஆறுதல் தந்து . . . உங்களைப் பலப்படுத்துவார்களாக.”—2 தெ. 2:16, 17.b(அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
சபை மிகவும் ஆறுதலான ஒரு இடம்
12. மற்றவர்களை நாம் எப்படி ஆறுதல்படுத்தலாம்?
12 துக்கத்தில் தவிப்பவர்களை சபையில் இருப்பவர்களாலும் ஆறுதல்படுத்த முடியும். (1 தெசலோனிக்கேயர் 5:11-ஐ வாசியுங்கள்.) “உடைந்த உள்ளம்” உள்ளவர்களை நீங்கள் எப்படிப் பலப்படுத்தலாம், எப்படி ஆறுதல்படுத்தலாம்? (நீதி. 17:22) “பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்பதை ஞாபகத்தில் வையுங்கள். (பிர. 3:7) “துக்கப்படுறவங்க அவங்களோட எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளியில சொல்றதுதான் நல்லது. அதனால, நீங்க செய்ய வேண்டிய ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, அவங்க சொல்றத காதுகொடுத்து கேளுங்க, இடையில பேசாதீங்க” என்று கணவனை இழந்த டேலென் சொல்கிறார். யுனெயா என்பவருடைய அண்ணன் தற்கொலை செய்துகொண்டார். அவர் இப்படிச் சொல்கிறார்: “அவங்க எந்தளவு துக்கப்படுறாங்கனு உங்களால முழுசா புரிஞ்சுக்க முடியலன்னாலும், அவங்க எப்படி உணர்றாங்கனு புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க. அதுதான் ரொம்ப முக்கியம்.”
13. துக்கப்படுவது சம்பந்தமாக நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?
13 துக்கப்படுகிறவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி துக்கப்படுவதில்லை என்பதையும், ஒரே விதத்தில் துக்கத்தை வெளிக்காட்டுவதில்லை என்பதையும் நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். சில சமயங்களில், ஒருவர் எந்தளவு வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்; தன் உணர்ச்சிகளை அவரால் முழுமையாக விளக்க முடியாது. அதனால்தான், “இதயத்திலுள்ள வேதனை இதயத்துக்குத்தான் தெரியும். அதன் சந்தோஷத்தை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 14:10) ஒருவேளை, துக்கப்படுகிறவர் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டினாலும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வது எப்போதுமே சுலபம் அல்ல.
14. துக்கத்தில் இருப்பவர்களிடம் நாம் என்ன சொல்லலாம்?
14 துக்கத்தில் இருப்பவர்களிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நாம் யோசித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், “ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 12:18) நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்... என்ற சிற்றேட்டில் ஆறுதலான வார்த்தைகள் இருக்கின்றன. மற்றவர்களை ஆறுதல்படுத்த நிறைய பேர் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இருந்தாலும், துக்கப்படுகிறவர்களுக்கு மிக முக்கியமான ஒரு உதவியைச் செய்யலாம். அதாவது, ‘அழுகிறவர்களோடு அழலாம்.’ (ரோ. 12:15) கேபி என்பவருடைய கணவர் இறந்துவிட்டார். சில சமயங்களில், தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கான ஒரே வழி அழுவதுதான் என்று அவர் சொல்கிறார். “அதனாலதான், என்னோட நண்பர்கள் என்கூட அழறப்போ எனக்கு ஓரளவு ஆறுதலா இருக்கு. அந்த சமயத்துல, நான் தனியா துக்கப்படலங்கிற உணர்வு எனக்கு இருக்கும்” என்று அவர் சொல்கிறார்.
15. நம்மால் நேரில் ஆறுதல் சொல்ல முடியவில்லை என்றால் என்ன செய்யலாம்? (“இதயத்துக்கு இதமளிக்கும் வார்த்தைகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
15 துக்கத்தில் இருப்பவர்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால் கார்டு, ஈ-மெயில், டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது கடிதம் அனுப்புவது உங்களுக்குச் சுலபமாக இருக்கலாம். இதில் ஏதோ ஒன்றை அனுப்பும்போது, ஆறுதலான ஒரு வசனத்தை அதில் குறிப்பிடலாம். இறந்துபோனவருடைய அருமையான குணங்களில் உங்களுக்கு ஞாபகம் இருக்கிற ஒரு குணத்தைப் பற்றி எழுதலாம். அல்லது அவரைப் பற்றிய சந்தோஷமான நினைவுகள் ஏதாவது ஒன்றை அதில் குறிப்பிடலாம். “என்னை உற்சாகப்படுத்தி ஒரு சின்ன மெசேஜ் அனுப்புவாங்க. இல்லன்னா, அவங்களோட சேர்ந்து நேரம் செலவு செய்ய என்னை கூப்பிடுவாங்க. இதெல்லாம் எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்குனு வார்த்தைகளால சொல்லவே முடியாது . . . அவங்க என்மேல ரொம்ப அன்பா, அக்கறையா இருக்காங்க!” என்று யுனெயா சொல்கிறார்.
16. மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழி என்ன?
16 துக்கப்படுகிற சகோதர சகோதரிகளுக்காக, அவர்களோடு சேர்ந்தோ அல்லது தனியாகவோ ஜெபம் செய்வது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்யும்போது, ஒருவேளை உங்களுக்கு அழுகை வரலாம் அல்லது உங்கள் வார்த்தைகள் தடுமாறலாம். அதனால், ஜெபம் செய்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், இதயத்திலிருந்து நீங்கள் செய்யும் ஜெபம் அவர்களுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும். “சில சமயங்கள்ல சகோதரிகள் எனக்கு ஆறுதல் சொல்ல வர்றப்போ, ‘எனக்காக ஜெபம் செய்ய முடியுமா’னு அவங்ககிட்ட கேட்பேன். ஆரம்பத்துல வார்த்தைகள் வராம அவங்க தடுமாறுவாங்க. ஆனா ஒவ்வொரு தடவையும், கொஞ்ச நேரத்துலயே அவங்க வார்த்தைகள்ல இருக்குற தடுமாற்றம் சரியாயிடும். அதுமட்டுமில்ல, இதயத்துல இருக்குறதையெல்லாம் கொட்டி அவங்க ஜெபம் செய்வாங்க. அவங்களோட பலமான விசுவாசமும் அன்பும் அக்கறையும் என்னோட விசுவாசத்தை பலப்படுத்தியிருக்கு” என்று டேலென் சொல்கிறார்.
தொடர்ந்து ஆறுதல் சொல்லுங்கள்
17-19. நாம் ஏன் தொடர்ந்து ஆறுதல்படுத்த வேண்டும்?
17 ஒவ்வொருவரும் எத்தனை நாட்களுக்குத் துக்கமாக இருப்பார்கள் என்பதை யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. ஒருவர் தன் அன்பானவரை மரணத்தில் பறிகொடுக்கும்போது, ஆரம்பத்தில் அவருடைய நண்பர்களும் சொந்தக்காரர்களும் அவருடன் இருப்பார்கள். ஆனால், சில மாதங்களிலேயே அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். அதற்குப் பிறகும்கூட, அன்பானவரை மரணத்தில் பறிகொடுத்தவருக்கு ஆறுதல் தேவை. அதனால், அவருக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருங்கள். “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 17:17) துக்கப்படுகிறவர்களுக்கு நம்முடைய உதவி தேவைப்படும்வரை, நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 3:7-ஐ வாசியுங்கள்.
18 துக்கப்படுகிறவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திடீரென்று சோகத்தில் மூழ்கிவிடலாம். வருஷாவருஷம் வருகிற ஏதோவொரு நாள்... சில வேலைகளைச் செய்கிற சமயம்... ஏதோவொரு இசை... ஃபோட்டோ... வாசனை... சத்தம்... அல்லது குறிப்பிட்ட ஒரு பருவகாலம்... இப்படி ஏதோவொரு காரணத்தால் அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிடலாம். தன் துணையை இழந்து துக்கத்தில் தவிக்கும் ஒரு சகோதரனுக்கோ சகோதரிக்கோ, தன்னுடைய துணை இல்லாமல் முதல் தடவையாக ஒரு விஷயத்தைச் செய்வது ரொம்ப வேதனையாக இருக்கலாம். உதாரணத்துக்கு மாநாட்டுக்கோ, நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்ச்சிக்கோ அல்லது வேறெதாவது நிகழ்ச்சிக்கோ போவது அவருக்கு ரொம்ப வேதனையாக இருக்கலாம். “என் மனைவி இறந்ததுக்கு அப்புறம் வந்த எங்களோட கல்யாண நாள், எனக்கு தாங்க முடியாத வலியையும் வேதனையையும் தரும்ணு நினைச்சேன் . . . அதை சமாளிக்குறது அவ்வளவு சுலபமா இருக்கல. ஆனா, நான் தனியா இருக்க கூடாதுங்கிறதுக்காக, நெருங்குன நண்பர்கள்கூட சேர்ந்து நேரம் செலவு செய்ய சில சகோதர சகோதரிகள் ஏற்பாடு செஞ்சாங்க” என்று ஒரு சகோதரர் சொல்கிறார்.
19 குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டும்தான் துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தேவை என்று நினைத்துவிடாதீர்கள். “வருஷாவருஷம் வர்ற ஏதாவது ஒரு நாள்ல மட்டும் இல்லாம, வேற சமயங்கள்லயும் மத்தவங்க எனக்கு உதவுறதும்... நேரம் செலவு செய்றதும்... எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கு . . . இந்த மாதிரி திட்டம் போடாம எதேச்சையா நடக்குற விஷயங்கள் ரொம்ப உதவியாவும் ஆறுதலாவும் இருக்கு” என்று யுனெயா சொல்கிறார். ஒருவருடைய துக்கத்தையோ தனிமை உணர்வையோ நம்மால் முழுமையாக நீக்கிப்போட முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்காக சில விஷயங்களைச் செய்வதன் மூலம் நாம் அவர்களை ஆறுதல்படுத்தலாம். (1 யோ. 3:18) “கஷ்டமான ஒவ்வொரு அடியையும் நான் எடுத்து வைச்சப்போ, அன்பான மூப்பர்கள் என்னை வழிநடத்துனாங்க. அதுக்காக நான் யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கேன். யெகோவா என்னை அவரோட கைக்குள்ள வைச்சு தாங்குறத என்னால உணர முடிஞ்சது” என்று கேபி சொல்கிறார்.
20. யெகோவாவின் வாக்குறுதிகள் ஏன் ஆறுதலின் ஊற்றுமூலமாக இருக்கின்றன?
20 எல்லா விதமான ஆறுதலின் கடவுளான யெகோவா, உயிர்த்தெழுதலின்போது எல்லா விதமான துக்கத்தையும் முழுவதுமாக நீக்கிவிடுவார். இதைத் தெரிந்துவைத்திருப்பது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! (யோவா. 5:28, 29) “மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார். உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. (ஏசா. 25:8) அப்போது, யாருக்குமே ‘அழுகிறவர்களோடு அழுவதற்கு’ அவசியம் இருக்காது. ஏனென்றால், எல்லாரும் ‘சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுவார்கள்.’—ரோ. 12:15.
a இயேசுவுக்கு 12 வயது இருந்தபோது, யோசேப்பு உயிரோடு இருந்ததாக பைபிள் குறிப்பிடுகிறது. ஆனால், தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றுவதன் மூலம் தன் முதல் அற்புதத்தை இயேசு செய்தபோதோ அல்லது அதற்குப் பிறகோ, யோசேப்பைப் பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை. இதிலிருந்து யோசேப்பு இறந்துபோயிருக்கலாம் என்று தெரிகிறது. அதோடு, தான் சித்திரவதைக் கம்பத்தில் இருந்தபோது, தன் அம்மாவைக் கவனித்துக்கொள்ளும்படி அப்போஸ்தலன் யோவானிடம் இயேசு கேட்டுக்கொண்டார். யோசேப்பு உயிரோடு இருந்திருந்தால், இயேசு அப்படிக் கேட்டிருப்பாரா?—யோவா. 19:26, 27.
b ஆறுதல் தரும் மற்ற வசனங்கள்: சங்கீதம் 20:1, 2; 31:7; 38:8, 9, 15; 55:22; 121:1, 2; ஏசாயா 57:15; 66:13; பிலிப்பியர் 4:13 மற்றும் 1 பேதுரு 5:7.
c காவற்கோபுரம் 2016, பொது இதழ் எண் 3, பக். 6-7-ல் இருக்கிற “துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி?” என்ற கட்டுரையையும் பாருங்கள்.