யெகோவாவின் வைராக்கியமுள்ள சாட்சிகள் முன்னேறிச் செல்கிறார்கள்!
யெகோவாவின் முதல் நூற்றாண்டு சாட்சிகள் தைரியமும் வைராக்கியமுமுள்ள செயல் நடப்பித்த ஜனங்களாக இருந்தனர். “நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்ற இயேசு கொடுத்த வேலையை அவர்கள் ஆர்வத்தோடு நிறைவேற்றி வந்தனர்.—மத்தேயு 28:19, 20.
ஆனால் ஆரம்ப காலத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் அந்த வேலையைப் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக் கொண்டனர் என்பது நமக்கு எப்படித் தெரியும்? ஏன், பைபிள் புத்தகமாகிய அப்போஸ்தலருடைய நடபடிகள், அவர்கள் உண்மையில் முன்னேறிக் கொண்டு சென்ற யெகோவாவின் வைராக்கியமுள்ள சாட்சிகளாக இருந்தார்கள் என்பதை நிரூபிக்கிறது!
நன்மைகளும் மற்ற அம்சங்களும்
மொழியிலும் பாணியிலும் மூன்றாவது சுவிசேஷத்துக்கும் அப்போஸ்தலர் புத்தகத்திற்குமிடையேயுள்ள ஒற்றுமை, ஒரே எழுத்தாளரைச் சுட்டிக் காண்பிக்கிறது. அவர் “பிரியமான வைத்தியனாகிய” லூக்காவாகும். (கொலோசெயர் 4:14) அப்போஸ்தலர் நடபடிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் சம்பாஷணைகளும் ஜெபங்களும் அதன் சிறப்பு அம்சங்களில் இடம் பெறுகின்றன. புத்தகத்தில் 20 சதவிகிதம் மெய் விசுவாசத்தை நியாயப்படுத்தி பேதுருவும் பவுலும் கொடுத்தது போன்ற பேச்சுகள் அடங்கியிருக்கின்றன.
அப்போஸ்தலர் புத்தகம் சுமார் பொ.ச. 61-ல் ரோமில் எழுதப்பட்டது. இதன் காரணமாகவே சுமார் பொ.ச. 64-ல் பவுல் இராயனுக்கு முன் தோன்றியதையோ கிறிஸ்தவர்களுக்கு எதிராக நீரோ கொண்டுவந்த துன்புறுத்தலைப் பற்றியோ அது குறிப்பிடுவதில்லை.—2 தீமோத்தேயு 4:11.
லூக்கா சுவிசேஷத்தைப் போல, அப்போஸ்தலர் தெயோப்பிலுவுக்கு எழுதப்பட்டது. விசுவாசத்தை அழியாது காக்கவும், கிறிஸ்தவம் பரப்பப்பட்டிருக்கும் அளவு குறித்து அறிவிக்கவும் இது எழுதப்பட்டது. (லூக்கா 1:1–4; அப்போஸ்தலர் 1:1, 2) யெகோவாவின் கரம் அவருடைய உண்மைத்தவறா ஊழியர்களோடு கூட இருந்ததைப் புத்தகம் நிரூபிக்கிறது. அது அவருடைய ஆவியின் வல்லமையை நம்மை உணரச் செய்து தேவாவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட தீர்க்கதரிசனத்தில் நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. அப்போஸ்தலர் புத்தகம் துன்புறுத்துதலைச் சகிக்க நமக்கு உதவி செய்து, நம்மையே தியாகம் செய்கிற யெகோவாவின் சாட்சிளாக இருக்க நம்மை உந்துவித்து ராஜ்ய நம்பிக்கையில் நம்முடைய விசுவாசத்தைக் கட்டியெழுப்புகிறது.
சரித்திரப் பூர்வமான பிழையின்மை
பவுலின் கூட்டாளியாக, லூக்கா அவர்களுடைய பிரயாணங்களைப் பதிவு செய்தான். நேரில் கண்ட சாட்சிகளிடம் அவன் பேசினான். இந்த உண்மைகளும் முழுமையான ஆராய்ச்சியும், அவனுடைய எழுத்துக்களை சரித்திரப்பூர்வமான பிழையின்மையைப் பொறுத்தவரையில் தலைச்சிறந்த படைப்பாகச் செய்கிறது.
ஆகவே அறிஞர் வில்லியம் ராம்சேயினால் பின்வருமாறு சொல்லமுடிந்தது: “லூக்கா முதல்தரமான ஒரு சரித்திராசிரியர். உண்மைகளைப் பற்றிய அவருடைய கூற்றுகள் வெறுமென நம்பத்தகுந்தவை மட்டுமன்றி, மெய்யான சரித்திர அறிவுநுட்பத்தில் அவர் திறமைப் பெற்றவர். . . . இந்த ஆசிரியர், மிகப் பெரிய சரித்திராசிரியர்களின் வரிசையில் அவர்களோடு கூட வைக்கப்பட வேண்டும்.”
பேதுரு—உண்மையுள்ள ஒரு சாட்சி
கடவுள் கொடுத்திருக்கும், நற்செய்தியை அறிவிக்கும் வேலையை, யெகோவாவின் பரிசுத்த ஆவியின் வல்லமையால் மாத்திரமே நிறைவேற்றமுடியும். இதன் காரணமாகவே இயேசுவை பின்பற்றியவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது, அவர்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் “பூமியின் கடைசிபரியந்தமும்” அவருக்கு சாட்சிகளாவார்கள். பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவின் போது அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுகிறார்கள். அது காலை 9 மணியளவாக இருப்பதால், சிலர் நினைப்பது போல அவர்கள் நிச்சயமாகவே மதுபானத்தால் வெறிகொண்டில்லை. பேதுரு கிளர்ச்சியூட்டும் ஒரு சாட்சியைக் கொடுக்க, 3,000 பேர் ஞானஸ்நானம் பெறுகிறார்கள். மத எதிரிகள் ராஜ்ய அறிவிப்பாளர்களின் வாயை அடக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் ஜெபத்துக்குப் பதிலளிப்பவராக கடவுள் தம்முடைய சாட்சிகளுக்குத் தம்முடைய வார்த்தையை தைரியத்தோடு பேச உதவி செய்கிறார். மீண்டும் பயமுறுத்தப்படுகையில் அவர்கள், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் நாங்கள் அரசராக தேவனுக்கே கீழ்ப்படிய வேண்டும்” என்று சொல்கிறார்கள். வீடு வீடாக அவர்கள் தொடர்ந்து பிரசங்கித்து வருகையில் வேலை முன்னேறுகிறது.—1:1–5:42.
யெகோவாவின் ஆவியின் மீது சார்ந்திருப்பது அவருடைய சாட்சிகளுக்கு துன்புறுத்தலைச் சகித்துக் கொள்ள உதவி செய்கிறது. ஆக, உண்மையுள்ள சாட்சியான ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு, இயேசுவை பின்பற்றியவர்கள் சிதறடிக்கப்படுகிறார்கள், ஆனால் இது வார்த்தை பரவவே காரணமாயிருக்கிறது. சுவிசேஷகனாகிய பிலிப்பு சமாரியாவில் முன்சென்று ஊழியத்தைச் செய்கிறான். எதிர்பாராதவகையில், தர்சு பட்டணத்தானாகிய சவுலின் கொடுமையான துன்புறுத்தல் மாறிவிடுகிறது. அப்போஸ்தலனாகிய பவுலாக, அவன் தமஸ்குவில் துன்புறுத்தலின் உக்கிரத்தை உணருகிறான், ஆனால் யூதர்களின் கொலைவெறி சதியை தப்பித்துக் கொள்கிறான். சிறிது காலம் பவுல் எருசலேமில் அப்போஸ்தலர்களோடு கூட்டுறவு கொள்கிறான். பின்னர், தன்னுடைய ஊழித்தில் இடம்விட்டு இடம் செல்கிறான்.—6:1–9:31.
அப்போஸ்தலர் நடபடிகள் தொடர்ந்து காண்பிக்கிறபடியே, யெகோவாவின் கரம் அவருடைய சாட்சிகளோடே கூட இருக்கிறது. பேதுரு தொற்காளை (தபீத்தாள்) மரணத்திலிருந்து எழுப்புகிறான். ஓர் அழைப்பை ஏற்றுக் கொள்பவனாய் செசரியாவில் அவன் கொர்நேலியுவுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கிறான். அவர்கள் இயேசுவின் சீஷராகும் முதல் புறஜாதியாராக முழுக்காட்டுதல் பெறுகிறார்கள். இவ்விதமாக “எழுபது வாரங்கள்” முடிவுக்கு வர, பொ.ச. 36-க்கு இது நம்மைக் கொண்டுவருகிறது. (தானியேல் 9:24) அதற்குப்பின் விரைவில், முதலாம் ஏரோது அகிரிப்பா அப்போஸ்தலனாகிய யாக்கோபை கொலை செய்து பேதுருவை சிறைச்சாலையில் வைக்கிறான். ஆனால் அப்போஸ்தலனை தேவதூதர் விடுவிக்க, ‘யெகோவாவின் வசனம் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது.’—9:32–12:25.
பவுலின் மூன்று மிஷனரி பிரயாணங்கள்
பவுல் செய்தது போல கடவுளுடைய ஊழியத்தில் தங்களையே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வரும் ஆசீர்வாதங்கள் ஏராளம். அவனுடைய முதல் மிஷனரி பிரயாணம் சீரியாவிலுள்ள அந்தியோகியாவில் ஆரம்பமாகிறது. சீப்புருத் தீவில், செர்கியுபவுல் என்னும் அதிபதியும் இன்னும் மற்றவர்களும் விசுவாசிகளாகிறார்கள். பம்பிலியாவிலுள்ள பெர்கேவில் யோவான் மாற்கு அவர்களைவிட்டுப் பிரிந்து எருசலேமுக்குத் திரும்பிப் போகிறான். ஆனாலும் பவுலும் பர்னபாவும் பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவை நோக்கிச் செல்கிறார்கள். லீஸ்திராவில் யூதர்கள் துன்புறுத்தலைத் தூண்டிவிடுகிறார்கள். கல்லெறியப்பட்டு, மரித்துப் போனானென்று எண்ணிவிடப்பட்டபோதிலும் பவுல் எழுந்து நலமடைந்து ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறான். கடைசியாக அவனும் பர்னபாவும் சீரியாவிலுள்ள அந்தியோகியாவுக்குத் திரும்பி வந்து முதல் பிரயாணத்தை முடித்துக் கொள்கிறார்கள்.—13:1–14:28.
முதல் நூற்றாண்டிலிருந்தது போலவே, இன்றைய ஆளும் குழு கருத்து வேறுபாடுகளுக்குப் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடு தீர்வு காண்கிறது. “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும் வேசித்தனத்திற்கும்” விலகியிருக்கும்படியாகச் சொல்லப்பட்ட அந்த “அவசியமான” காரியங்களில் விருத்தசேதனம் இடம்பெறவில்லை. (15:28, 29) பவுலும் பர்னபாவும் இரண்டாவது பிரயாணத்தைத் துவங்குகையில் தீமோத்தேயு அவர்களைச் சேர்ந்து கொள்கிறான். மக்கெதோனியாவுக்கு வரும்படியான அழைப்புக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பிலிப்பு பட்டணத்தில் சாட்சிக் கொடுத்ததின் விளைவுகள் கிளர்ச்சியும் சிறையிலடைக்கப்படுவதுமாக இருக்கிறது. ஆனால் பவுலும் பர்னபாவும் ஒரு பூமியதிர்ச்சியில் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் சிறைச்சாலைக்காரனுக்கும் அவன் வீட்டாருக்கும் பிரசங்கம் பண்ணுகிறார்கள், இவர்கள் விசுவாசிகளாகிறார்கள்.—15:1–16:40.
யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய வார்த்தையை ஊக்கமாகப் படிக்கும் மாணாக்கர்களாக இருக்க வேண்டும். வேதவாக்கியங்களை ஆராய்ந்த பெரோயாப் பட்டணத்தார் அவ்விதமாக இருந்தார்கள். பவுலும் அவ்விதமாக இருந்தான். அத்தேனேப் பட்டணத்தில் மார்ஸ் மேடையில் அவன் யெகோவாவின் படைப்பைக் குறித்து சாட்சி கொடுக்கிறான், சிலர் விசுவாசிகளாகிறார்கள். கொரிந்துவில் அந்தளவுக்கு அக்கறைக் காண்பிக்கப்படுவதால் அவன் அந்தப் பட்டணத்தில் 18 மாதங்கள் தங்கிவிடுகிறான். அங்கிருக்கையில், தெசலோனிக்கேயருக்கு அவன் முதலாம் மற்றும் இரண்டாம் நிருபங்களை எழுதுகிறான். சீலாவையும் தீமோத்தேயுவையும்விட்டு பிரிந்து, அப்போஸ்தலன் எபேசுவுக்கு கடலில் பிரயாணஞ் செய்து, பின்னர் செசரியாவுக்கு கப்பலில் ஏறிப் புறப்பட்டு எருசலேமுக்கு பயணிக்கிறான். சீரிய அந்தியோகியாவுக்கு அவன் திரும்பி வருகையில், அவனுடைய இரண்டாவது மிஷனரிப் பயணம் முடிவுக்கு வருகிறது.—17:1–18:22.
பவுல் காண்பித்தவிதமாக, வீட்டுக்கு வீடு சாட்சிக் கொடுத்தல் கிறிஸ்தவ ஊழியத்தின் இன்றியமையாத பாகமாகும். அப்போஸ்தலனின் மூன்றாவது பயணம் (பொ.ச. 52–56) பெரும்பாலும் இரண்டாவதுப் பயணத்தில் சென்ற இடங்களுக்கே திரும்பச் செல்வதாக இருக்கிறது. பவுலின் ஊழியம் எபேசுவில் எதிர்ப்பைத் தூண்டிவிடுகிறது. இங்கே அவன் கொரிந்தியருக்கு முதலாம் நிருபத்தை எழுதுகிறான். கொரிந்தியருக்கு இரண்டாவது நிருபம் மக்கெதோனியாவிலிருந்து எழுதப்படுகிறது. மேலும் கொரிந்துவிலிருக்கையில் அவன் ரோமர்களுக்கு எழுதுகிறான். மிலேத்துவில் பவுல் எபேசுவிலுள்ள மூப்பர்களைச் சந்தித்து, எவ்விதமாக வீடுகள்தோறும் வெளியரங்கமாக அவர்களுக்கு உபதேசம் பண்ணினான் என்பதைப் பற்றி பேசுகிறான். அவனுடைய மூன்றாவது பயணம் அவன் எருசலேமுக்கு வந்து சேருகையில் முடிவுக்கு வருகிறது.—18:23–21:14.
துன்புறுத்தல் பயனற்றதாகிறது
துன்புறுத்தல், யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளின் உதடுகளை அடைத்துவிடுகிறதில்லை. ஆகவே, எருசலேமிலுள்ள ஆலயத்தில் ஜனக்கூட்டம் வன்முறையாக பவுலுக்கு எதிராக எழுந்தபோது, அவன் குமுறிக் கொண்டிருந்த கலக கும்பலுக்கு தைரியமாக சாட்சி கொடுக்கிறான். அவனைக் கொலை செய்வதற்கு செய்யப்பட்ட சதி திட்டம், ஓர் இராணுவ காவலரோடுகூட அவன் செசரியாவுக்கு தேசாதிபதி பேலிக்ஸினிடம் அனுப்பப்படுகையில் தோல்வியடைகிறது. பேலிக்ஸ், இலஞ்சம் எதிர்பார்த்து பவுலைக் காவலில் இரண்டு ஆண்டுகள் வைத்தும் அதை அவன் பெற்றுக் கொள்வதில்லை. அவனை அடுத்து அதிபதியாக வந்த பெஸ்து, பவுல் இராயனுக்கு அபயமிட்டதை கேட்கிறான். ஆனால் ரோமை நோக்கிச் செல்வதற்கு முன்னால் அப்போஸ்தலன் அகிரிப்பா ராஜா முன்பாக குற்றச்சாட்டுக்கு எதிராக கிளர்ச்சியூட்டும் தன்னிலை விளக்கத்தை அளிக்கிறான்.—21:15–26:32.
வழக்கு விசாரணைகளால் தளர்ந்துவிடாது, யெகோவாவின் ஊழியர்கள் தொடர்ந்து பிரசங்கித்து வருகிறார்கள். இது பவுலின் விஷயத்தில் உண்மையாக இருந்தது. இராயனுக்கு அவன் அபயமிட்டதன் காரணமாக அப்போஸ்தலன் சுமார் பொ.ச. 58-ல் லூக்காவோடு ரோமுக்குப் புறப்படுகிறான். லீசியா நாட்டு மீறாப் பட்டணத்தில், அவர்கள் மற்றொரு கப்பலில் ஏறிக் கொள்கிறார்கள். அவர்கள் கப்பற்சேதத்துக்கு உட்பட்டு, மெலித்தா தீவில் வந்திறங்கிய போதிலும் பின்னால் மற்றொரு கப்பல் அவர்களை இத்தாலியாவுக்கு கொண்டுச் செல்கிறது. ரோமில் இராணுவ காவலரின் மேற்பார்வையிலும்கூட, பவுல் ஜனங்களை உள்ளே அழைத்து அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறான். இந்தச் சிறையிருப்பின்போது அவன் எபேசியருக்கும், பிலிப்பியருக்கும் கொலோசெயருக்கும் பிலேமோனுக்கும், எபிரெயருக்கும் எழுதுகிறான்.—27:1–28:31.
எப்போதும் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்
கடவுளுடைய குமாரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலை முதல் நூற்றாண்டின் யெகோவாவின் சாட்சிகளால் உண்மையுடன் தொடர்ந்து செய்யப்பட்டது என்பதை அப்போஸ்தலர் புத்தகம் காண்பிக்கிறது. ஆம், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் அவர்கள் வைராக்கியமாக சாட்சிக் கொடுத்தார்கள்.
இயேசுவை ஆரம்ப காலத்தில் பின்பற்றியவர்கள் ஜெபசிந்தையோடு கடவுள் மீது சார்ந்திருந்ததால் அவருடைய கரம் அவர்களோடேகூட இருந்தது. இவ்விதமாக ஆயிரக்கணக்கானோர் விசுவாசிகளானார்கள், ‘அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டது.’ (கொலோசெயர் 1:23) ஆம், அப்போதும் இப்போதும், மெய்க் கிறிஸ்தவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் யெகோவாவின் வைராக்கியமுள்ள சாட்சிகளாக நிரூபித்து வந்திருக்கிறார்கள்! (w90 5/15)
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]]
நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு: கொர்நேலியு படைத்துறையில் ஓர் உயர் அதிகாரி அல்லது ஒரு நூற்றுக்கு அதிபதியாக இருந்தான். (10:1) நூற்றுக்கு அதிபதியின் ஆண்டு வருவாய், காலாட்படை வீரனுடையதைவிட சுமார் ஐந்து மடங்கு அதிகமானதாக அல்லது சுமார் 1,200 வெள்ளிப் பணமாக இருந்தது. ஆனால் இது இன்னும் கூடுதலாகவும் இருக்கக்கூடும். ஓய்வுப் பெறுகையில் அவன் பணமாகவோ நிலமாகவோ ஒரு மானியத்தொகையைப் பெற்றுக் கொண்டான். அவனுடைய இராணுவ உடை, ஒரு வெள்ளி தலைக்கவசத்திலிருந்து முட்டி அளவே அணியும் குறும்பாவாடை வரையாகவும், நேர்த்தியான கம்பளித்தளர் மேலுடுப்பும் அலங்காரம் செய்யப்பட்ட காலின் போர்க்கவசமுமாக இருந்தது. நூற்றுக்கு அதிபதியின் படைப்பிரிவு முறைப்படி 100 மனிதர்களைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் 80 பேர் மாத்திரமே இருந்திருக்கிறார்கள். சுதந்திர ரோம குடிமக்களும், இத்தாலிய சுதந்திர மனிதர்களும் “இத்தாலிய பட்டாளத்தில்” சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]
மேல் வீட்டில் ஜெபம்: பேதுரு மேல் வீட்டில் தனிமையில் ஜெபம் பண்ணப் போனபோது அவன் பிறருடைய கவனத்தைக் கவருவதற்காக முயற்சி செய்துக் கொண்டில்லை. (10:9) தட்டையான மாடியைச் சுற்றி ஒரு கைப்பிடிச் சுவர், அவனை பார்க்க முடியாதபடி மறைத்துக் கொண்டிருக்க வேண்டும். (உபாகமம் 22:8) மாடி, மாலை நேரங்களில் ஓய்வெடுப்பதற்கும் தெரு கூச்சலைத் தவிர்ப்பதற்கும்கூட ஓர் இடமாக இருந்தது.
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]
மனுஷரூபத்தில் தேவர்கள் என கருதப்பட்டார்கள்: பவுல் சப்பாணி ஒருவனை குணப்படுத்தியபோது அது லீஸ்திராவிலுள்ள மக்களை, தேவர்கள் மனுஷ ரூபத்தில் வந்திருப்பதாக எண்ணும்படிச் செய்கிறது. (14:8–18) கிரேக்கர்களின் முக்கிய கடவுளாகிய யூப்பித்தருக்கு அந்தப் பட்டணத்தில் ஓர் ஆலயமிருந்தது. அவனுடைய மகன் மெர்க்கூரி, கடவுட்களின் தூதுவன் பேச்சுத் திறமைக்குப் பேர்போனவனாக இருந்தான். பேசுவதில் முதன்மையாக இருந்ததால் பவுலை மக்கள் மெர்க்கூரி என்று நினைத்தார்கள். பர்னபாவை யூப்பித்தர் என்பதாகக் கருதினார்கள். பொய் கடவுட்களின் சிலைக்கு பூ அல்லது புன்னை அல்லது தேவதாரு இலைகளாலான மாலைகளை அணிவிப்பது பழக்கமாக இருந்தது. ஆனால் பவுலும் பர்னபாவும் இப்படியாக வணக்கத்துக்குரிய வகையில் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]
சிறைச்சாலைக்காரன் விசுவாசிக்கிறான்: பூமியதிர்ச்சி ஒன்று சிறைச்சாலையின் கதவுகளைத் திறக்கச் செய்து காவலிலிருந்தவர்களின் கட்டுகளை கழன்றுப் போகச் செய்தபோது, அந்தப் பிலிப்பிய சிறைச்சாலைக்காரன் தன்னைக் கொலை செய்துகொள்ள இருந்தான். (16:25–27) ஏன்? தப்பியோடியவனின் தண்டனையை சிறைச்சாலைக்காரன் அனுபவிக்க வேண்டும் என்பது ரோம சட்டத்தின் தீர்ப்பாக இருந்தது. சிறைச்சாலைக்காரன், ஒரு சில கைதிகளுக்குக் காத்துக்கொண்டிருந்த வாதனையான மரணத்தை அனுபவிப்பதைக் காட்டிலும் தற்கொலை செய்துகொள்வதையே விரும்பியதாகத் தெரிகிறது. என்றபோதிலும், அவன் நற்செய்தியை ஏற்றுக்கொண்டான், “அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.”—16:28–34.
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
இராயனுக்கு ஓர் அபயம்: பிறப்பிலிருந்து ஒரு ரோம குடிமகனாக, பவுல் இராயனுக்கு அபயமிடவும் ரோமில் நியாயம் விசாரிக்கப்படவும் உரிமையுள்ளவனாக இருந்தான். (25:10–12) ரோம குடிமகன் விசாரணைக்குட்படுத்தப்படாமல், கட்டப்படவோ, அடிக்கப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ கூடாது.—16:35–40; 22:22–29; 26:32.
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
தேவிதியானாளுக்கு கோவிற்காப்பாளர்: பவுலின் பிரசங்கத்தால் அமைதியிழந்த வெள்ளித்தட்டான் தெமேத்திரியு ஒரு கலகத்தைத் தூண்டிவிட்டான். ஆனால் பட்டணத்துச் சம்பிரதியானவன் கூட்டத்தைக் கலையச் செய்து அனுப்பிவிட்டான். (19:23–41) வெள்ளித்தட்டான்கள், பல மார்புகளைக் கொண்ட கருவளத் தெய்வமாகிய தேவிதியானாளின் சிலையை வைப்பதற்கு வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்தார்கள். பட்டணங்கள் அவளுடைய ‘கோவிற்காப்பாளர்’களாக இருப்பதற்கு ஒன்றொடொன்று போட்டிப் போட்டன.
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
கடலில் கொந்தளிப்பு: பவுலை ஏற்றிச் சென்ற கப்பல், யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்றினால் தாக்கப்பட்டபோது, ‘அவர்கள் படவை வசப்படுத்திக் கொள்ளக்கூடாதவர்களானார்கள்.’ (27:15, 16) படவு சிறியதாக பொதுவாக கப்பலால் கயிறு கொண்டு கட்டியிழுக்கப்பட்டதாயிருந்தது. புயல்காற்று வீசுகையில், கப்பற்பாய்மரம் வேலை செய்வதால் அதற்கு ஏற்படும் விசை அழுத்தத்தை மட்டுப்படுத்த ஒரு கப்பல் பொதுவாக அதன் உடற்பகுதியைச் சுற்றி செல்லும் நங்கூரச் சங்கிலியைத் தாங்கிச் சென்றது. (27:17) இந்தக் கப்பலாட்கள், நாலு நங்கூரங்களைப் போட்டு கப்பலைச் செலுத்த பயன்படும் சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டார்கள். (27:29, 40) அலெக்சந்திரியாப் பட்டணத்துக் கப்பல் அதன் முகப்பில் கப்பலோட்டிகளின் காவலர்களாகக் கருதப்படும் “யூப்பித்தரின் குமாரர்கள்”—காஸ்டர் மற்றும் போலக்ஸ் உருவத்தலை அடையாளத்தைத் தாங்கியதாக இருந்தது.—28:11.