யெகோவாவின் சாட்சிகள் ஏன் தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை?
யெகோவாவின் சாட்சிகள் அரசாங்கங்களையும் தேசிய சின்னங்களையும் மதிக்கிறார்கள். கொடி வணக்கம் செய்வதற்கும், உறுதிமொழி சொல்வதற்கும், தேசிய கீதத்தை பாடுவதற்கும் மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பதையும் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
ஆனால் யெகோவாவின் சாட்சிகளாக, நாங்கள் எந்த தேசிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. ஏனென்றால், அது பைபிள் போதனைகளுக்கு எதிராக இருக்கிறது என்று நம்புகிறோம். நாங்கள் எப்படி மற்றவர்களுடைய நம்பிக்கைகளுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அதேபோல் மற்றவர்களும் எங்களுடைய நம்பிக்கைகளுக்கும் எங்களுடைய முடிவுகளுக்கும் மரியாதை கொடுத்தால் ரொம்ப சந்தோஷப்படுவோம்.
இந்த கட்டுரையில்
எந்த பைபிள் போதனைகளின் அடிப்படையில் யெகோவாவின் சாட்சிகள் இந்த முடிவை எடுக்கிறார்கள்?
இரண்டு பைபிள் போதனைகளின் அடிப்படையில் நாங்கள் இந்த முடிவை எடுக்கிறோம்:
வணக்கம் கடவுளுக்கு மட்டும்தான் போய்ச் சேர வேண்டும். “உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 4:8) உறுதிமொழிகளிலும் தேசிய கீதங்களிலும் தேசபக்தியைக் காட்டும் வார்த்தைகள் இருக்கின்றன. வேறு எதையும்விட அல்லது வேறு யாரையும்விட தேசத்தைத்தான் ரொம்ப நேசிக்கிறோம் என்று வாக்கு கொடுப்பதைப் போன்ற வார்த்தைகள் அவற்றில் இருக்கின்றன. யெகோவாவின் சாட்சியாக இருக்கிற ஒருவருடைய மனசாட்சி இந்த மாதிரி வார்த்தைகளை சொல்வதற்கு கண்டிப்பாக இடம்கொடுக்காது.
வணக்கத்தில் சிலைகளை பயன்படுத்துவதை, அதாவது சிலை வணக்கம் செய்வதை, பைபிள் தவறு என்று சொல்கிறது. கொடி வணக்கத்தையும், அதாவது கொடிக்கு சல்யூட் அடிப்பதையும், யெகோவாவின் சாட்சிகள் சிலை வணக்கம் மாதிரிதான் பார்க்கிறார்கள். (1 கொரிந்தியர் 10:14) சரித்திரத்தை ஆராய்ச்சி செய்கிற சில வல்லுனர்கள் தேசிய கொடிகளும் மத சின்னங்கள் மாதிரிதான் என்று ஒத்துக்கொள்கிறார்கள். ”தேசபக்திக்கான முக்கிய சின்னமும் தேசிய வணக்கத்துக்கான மையப்பொருளும் கொடியே” என்று சரித்திர வல்லுனர் கார்ல்டன் ஜே. ஹெச். ஹேஸ் எழுதினார்.a ஆரம்ப காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைப் பற்றி எழுத்தாளர் டேனியெல் பி. மேனிக்ஸ் இப்படி சொன்னார்: ”கிறிஸ்தவர்கள் . . . [ரோம] பேரரசின் காக்கும் தெய்வத்திற்கு பலி செலுத்த மறுத்துவிட்டார்கள். இன்று இதை கொடியை வணங்க மறுப்பதற்கு சமமாக சொல்லலாம்.”b
யெகோவாவின் சாட்சிகள் கொடிக்கு சல்யூட் அடிக்கவில்லை என்றாலும் அதற்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கிறார்கள். அவற்றை அவர்கள் எரிப்பது இல்லை, சேதப்படுத்துவது இல்லை, அவமதிக்கிற மாதிரி வேறு எதையும் செய்வது இல்லை. மற்ற தேசிய சின்னங்களையும் அவர்கள் அவமதிப்பது இல்லை.
கடவுளுடைய பார்வையில் எல்லா மனிதர்களும் சமம்தான். (அப்போஸ்தலர் 10:34, 35) கடவுள், ‘ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணினார்’ என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 17:26) அதனால், யெகோவாவின் சாட்சிகள் ஒரு குறிப்பிட்ட தேசம் அல்லது இனம் மற்றொன்றைவிட உயர்ந்தது என நினைப்பதில்லை. எல்லா தேசத்தை சேர்ந்தவர்களையும் எல்லா பின்னணியை சேர்ந்தவர்களையும் நாங்கள் மதிக்கிறோம்.—1 பேதுரு 2:17.
தேசிய நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்ற அரசாங்க சட்டம் இருந்தால் என்ன செய்வார்கள்?
யெகோவாவின் சாட்சிகள் அரசாங்கங்களை எதிர்ப்பது கிடையாது. இன்றைக்கு சில விஷயங்கள் இந்த உலகத்தில் இருக்கட்டும் என்று கடவுள் அனுமதித்திருக்கிறார். அதில் ஒன்றுதான் அரசாங்கங்கள். சொல்லப்போனால், இவை எல்லாமே ‘கடவுளுடைய ஏற்பாடுகள்’ என்று நாங்கள் நம்புகிறோம். (ரோமர் 13:1-7) அதுமட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் எல்லாருமே அரசாங்க அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்றும் நம்புகிறோம்.—லூக்கா 20:25.
கடவுள் செய்யக் கூடாது என சொல்லியிருக்கும் சில விஷயங்களை அரசாங்கங்கள் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது? சிலசமயங்களில் அரசாங்கம் போடும் சட்டங்களை மாற்றியமைப்பதற்கு சட்டப்பூர்வமாக முறையிடலாம்.c ஆனால், அப்படி மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றால் யெகோவாவின் சாட்சிகள் “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய” நினைப்பார்கள்.—அப்போஸ்தலர் 5:29.
அரசியல் அல்லது சமூக விஷயங்களில் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் அப்படிச் செய்கிறார்களா?
இல்லை! யெகோவாவின் சாட்சிகள் சமூக அல்லது அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவது கிடையாது. உறுதிமொழி சொல்லாமல் இருப்பது... கொடி வணக்கம் செய்யாமல் இருப்பது... தேசிய கீதம் பாடாமல் இருப்பது... இவையெல்லாம் அரசாங்கங்களை எதிர்த்து போராடுவதற்காக அல்ல; பைபிள் சொல்வதுபோல் வாழ்வதற்காகத்தான்!
a எஸ்ஸேஸ் ஆன் நேஷனலிஸம், பக்கங்கள் 107-108.
b த வே ஆஃப் த க்லாடியேட்டர்ஸ், பக்கம் 212.
c உதாரணத்திற்கு, “75 வருடங்களுக்கு முன் உச்சநீதி மன்றத்தில் கிடைத்த ஒரு வெற்றி” என்ற ஆங்கில கட்டுரையை பாருங்கள்.