பாடம் 79
இயேசு செய்த அற்புதங்கள்
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்வதற்காக இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். அதேசமயத்தில், இயேசு ராஜாவாக வரும்போது என்னவெல்லாம் செய்வார் என்பதைக் காட்ட யெகோவா விரும்பினார். அதனால், அற்புதங்களைச் செய்ய தன்னுடைய சக்தியை அவருக்குக் கொடுத்தார். அந்தச் சக்தியைப் பயன்படுத்தி எல்லா வியாதிகளையும் அவரால் குணமாக்க முடிந்தது. அவர் எங்கே போனாலும், வியாதியால் கஷ்டப்பட்ட மக்கள் அவரிடம் வந்தார்கள். அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். கண் தெரியாதவர்களால் பார்க்க முடிந்தது, காது கேட்காதவர்களால் கேட்க முடிந்தது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆட்களால் நடக்க முடிந்தது, பேய் பிடித்திருந்த ஆட்களுக்கு விடுதலை கிடைத்தது. அவருடைய உடையின் ஓரத்தைத் தொட்டவர்கள்கூட குணமானார்கள். இயேசு எங்கே போனாலும் மக்கள் அவர் பின்னால் போனார்கள். அவர் தனியாக இருக்க நினைத்த சமயத்தில்கூட, தன்னிடம் வந்த யாரையும் திருப்பி அனுப்பவில்லை.
ஒரு சமயம், பக்கவாத நோயாளி ஒருவனை இயேசு தங்கியிருந்த வீட்டுக்கு மக்கள் கொண்டுவந்தார்கள். ஆனால், அந்த வீட்டில் ஒரே கூட்டமாக இருந்ததால் உள்ளே நுழைய முடியவில்லை. அதனால் அந்த வீட்டின் கூரையில் ஓட்டை போட்டு, அந்த ஆளை கீழே இறக்கினார்கள். இயேசு அவனிடம், ‘எழுந்து நட’ என்று சொன்னார். அவன் நடந்ததைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
இன்னொரு சமயம், இயேசு ஒரு கிராமத்துக்குள் நுழைந்தபோது, தொழுநோயாளிகள் பத்துப் பேர் தூரத்தில் நின்றுகொண்டு, ‘இயேசுவே, உதவி செய்யுங்கள்’ என்று கத்தினார்கள். அந்தக் காலத்தில், தொழுநோயாளிகள் மற்றவர்கள் பக்கத்தில் வரவே கூடாது. இயேசு அவர்களை ஆலயத்துக்குப் போகச் சொன்னார். ஏனென்றால், தொழுநோயாளிகள் தாங்கள் குணமான பிறகு ஆலயத்துக்குப் போக வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது. போகும் வழியிலேயே அவர்கள் குணமானார்கள். அவர்களில் ஒருவர், தான் குணமானதைப் பார்த்தவுடன், இயேசுவுக்கு நன்றி சொல்லவும் கடவுளைப் புகழவும் திரும்பி வந்தார். அந்தப் பத்துப் பேரில் இவர் மட்டும்தான் இயேசுவுக்கு நன்றி சொன்னார்.
ஒரு பெண் 12 வருஷங்களாக வியாதியால் கஷ்டப்பட்டாள். எப்படியாவது குணமாக வேண்டும் என்று நினைத்தாள். அவள் கூட்டத்துக்குள் நுழைந்து, இயேசுவின் பின்னால் போய் அவருடைய அங்கியின் ஓரத்தைத் தொட்டாள். உடனடியாக அவள் குணமாகிவிட்டாள். அப்போது இயேசு, “யார் என்னைத் தொட்டது?” என்று கேட்டார். அந்தப் பெண் பயந்துபோனாள். பிறகு, அவர் முன்னால் வந்து உண்மையைச் சொன்னாள். இயேசு அவளிடம், ‘மகளே, நிம்மதியாகப் போ’ என்று ஆறுதலாகச் சொன்னார்.
யவீரு என்ற அதிகாரி இயேசுவிடம் வந்து, ‘தயவுசெய்து என் வீட்டுக்கு வாருங்கள். என்னுடைய குட்டிப் பெண் ரொம்ப உடம்பு முடியாமல் இருக்கிறாள்’ என்று கெஞ்சினார். ஆனால், இயேசு அங்கே போவதற்கு முன்பே அவள் இறந்துவிட்டாள். இருந்தாலும், யவீருவின் வீட்டுக்கு இயேசு போனார். அங்கே நிறைய பேர் அந்தக் குடும்பத்தாருடன் சேர்ந்து புலம்பி அழுதுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், ‘அழாதீர்கள், அவள் தூங்குகிறாள்’ என்று சொன்னார். பிறகு, அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்திரு!” என்று சொன்னார். உடனே அவள் எழுந்து உட்கார்ந்தாள். சாப்பிட அவளுக்கு ஏதாவது கொடுக்கும்படி இயேசு அவளுடைய அப்பா அம்மாவிடம் சொன்னார். அவளுடைய அப்பா அம்மாவுக்கு எப்படி இருந்திருக்கும்!
‘கடவுள் தன்னுடைய சக்தியாலும் வல்லமையாலும் அவரை அபிஷேகம் செய்தார். கடவுள் அவரோடு இருந்ததால் அவர் தேசம் முழுவதும் போய் நன்மைகள் செய்து, பிசாசின் கொடுமைக்கு ஆளான எல்லாரையும் குணப்படுத்தினார்.’—அப்போஸ்தலர் 10:38