அதிகாரம் 10
“யெகோவாவின் வார்த்தை அதிகமதிகமாகப் பரவிவந்தது”
பேதுரு காப்பாற்றப்பட்டார், நல்ல செய்தி பரவுவதை துன்புறுத்தலால் தடுத்துநிறுத்த முடியவில்லை
அப்போஸ்தலர் 12:1-25-ன் அடிப்படையில்
1-4. என்ன இக்கட்டான சூழலை பேதுரு எதிர்ப்படுகிறார், அவருடைய இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணர்வீர்கள்?
பேதுரு முன்செல்ல ‘ட்டங்...ங்...ங்...’ என்ற சத்தத்துடன் சிறைச்சாலையின் இரும்புக் கதவு மூடப்படுகிறது. சங்கிலிகளால் கட்டப்பட்டு இரண்டு படைவீரர்களுக்கு நடுவே சிறைக்குள் கொண்டு செல்லப்படுகிறார் பேதுரு. மணிநேரங்கள் கரைகின்றன, நாட்கள் கழிகின்றன, சிறையில் அடைபட்டிருக்கும் பேதுருவோ தனக்கு என்ன நடக்கப்போகிறது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அவர் கண்ணில் தெரிவதெல்லாம் சிறைச்சாலையின் சுவர்... சிறைக் கம்பிகள்... இரும்புச் சங்கிலிகள்... படைவீரர்கள்... அவ்வளவுதான்.
2 தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் பேதுருவின் காதில் தீ கக்கும் வார்த்தைகள் வந்து விழுகின்றன. பேதுருவைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற வெறியுடன் முதலாம் ஏரோது அகிரிப்பா ராஜா இருக்கிறார் என்ற செய்திதான் அது.a சொல்லப்போனால், பஸ்கா பண்டிகைக்குப் பிறகு பேதுருவை மக்கள் முன்னிலையில் நிறுத்தி... அவருக்கு மரணதண்டனை கொடுத்து... மக்கள் மனதைக் குளிர்விக்க வேண்டும் என்பதே ஏரோதின் எண்ணம். இது வெறும் அச்சுறுத்தல் கிடையாது. இதற்கு முன்பு பேதுருவின் சக அப்போஸ்தலன் யாக்கோபுக்கு இதே ராஜாதான் மரணதண்டனை கொடுத்தார்.
3 மரண தண்டனை கொடுக்கப்படுவதற்கு முந்திய நாள் மாலைப் பொழுதில்... இருள் கவ்விய அந்தச் சிறை அறையில்... பேதுரு என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார்? கைகள் கட்டப்பட்ட நிலையில் தான் விரும்பாத இடத்துக்கு கொண்டுபோகப்படுவார், அதாவது கொல்லப்படுவார், என்று இயேசு எப்போதோ சொன்ன வார்த்தைகளை பேதுரு இப்போது மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கிறாரா? (யோவா. 21:18, 19) அந்த நேரம்தான் வந்துவிட்டதோ என்று பேதுரு ஒருவேளை நினைத்திருக்கலாம்.
4 பேதுருவின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணர்வீர்கள்? ஒருவேளை நம்பிக்கையிழந்து, ‘இனி அவ்வளவுதான்’ என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இயேசுவின் உண்மையான சீஷர் எந்தவொரு சூழ்நிலையிலும் நம்பிக்கை இழந்துவிட வேண்டுமா? பேதுருவும் மற்ற கிறிஸ்தவர்களும் துன்புறுத்தலை எதிர்கொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
“சபையிலிருந்த எல்லாரும் . . . உருக்கமாக ஜெபம் செய்துவந்தார்கள்” (அப். 12:1-5)
5, 6. (அ) முதலாம் ஏரோது அகிரிப்பா ராஜா கிறிஸ்தவ சபையை ஏன் துன்புறுத்தினான், எப்படித் துன்புறுத்தினான்? (ஆ) யாக்கோபின் மரணம் சபைக்கு ஏன் பேரிடியாக இருந்தது?
5 முந்தின அதிகாரத்தில் பார்த்தபடி, யூதராக இல்லாத கொர்நேலியுவும் அவருடைய சொந்தக்காரர்களும் மதம் மாறியது கிறிஸ்தவ சபையில் இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், யூதக் கிறிஸ்தவர்கள் யூதராக இல்லாத கிறிஸ்தவர்களோடு சேர்ந்து கடவுளை வணங்கியது விசுவாசிகளாக இல்லாத யூதர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
6 யூதர்களின் ஆதரவைப் பெற இதுதான் சமயம் என்று நினைத்த தந்திரக்கார அரசியல்வாதியான ஏரோது, கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த களம் இறங்கினான். அப்போஸ்தலன் யாக்கோபு இயேசுவின் நெருங்கிய சொந்தக்காரர் என்பதை ஏரோது கேள்விப்பட்டிருப்பான். அதனால்தான், “யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபை வாளால் வெட்டிக் கொன்றான்.” (அப். 12:2) கிறிஸ்தவ சபைக்கு இது ஒரு பேரிடி! இயேசு தோற்றம் மாறியதையும்... மற்றவர்கள் பார்க்காத சில அற்புதங்களையும்... பார்த்த மூன்றே அப்போஸ்தலர்களில் யாக்கோபும் ஒருவர். (மத். 17:1, 2; மாற். 5:37-42) யாக்கோபுக்கும் அவரது அண்ணன் யோவானுக்கும் இருந்த அனல்வீசும் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, “இடிமுழக்க மகன்கள்” என்று இயேசு அவர்களை அழைத்தார். (மாற். 3:17) தைரியமும், விசுவாசமும், அன்பும் கொண்ட இப்படிப்பட்ட அப்போஸ்தலனை சபை பறிகொடுத்துவிட்டது!
7, 8. பேதுரு சிறையில் தள்ளப்பட்டபோது சபையில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்?
7 அகிரிப்பா நினைத்தபடியே, யாக்கோபு இறந்த செய்தி யூதர்களுக்குக் கொண்டாட்டமாக இருந்தது. மக்களின் வரவேற்பைப் பெற்ற தலைக்கனத்தில், அடுத்ததாக பேதுருவைக் குறிவைத்தான். ஆரம்பத்தில் பார்த்தபடி, பேதுருவை கைது செய்துவிட்டான். சிறை எல்லாம் அப்போஸ்தலர்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது அகிரிப்பாவுக்கு நன்றாகத் தெரியும்; ஏனென்றால், இதே புத்தகத்தின் 5-ம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, சீஷர்கள் சிலர் சிறையிலிருந்து அற்புதமாக விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். அதனால், இந்த முறை அவன் ரொம்ப உஷாராக இருந்தான். பேதுரு தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக இரண்டு படைவீரர்களுக்கு இடையே அவரை சங்கிலியால் பூட்டி வைத்தான். அதுமட்டுமா, இரவும் பகலும் மாறி மாறி அவரைக் காவல் காக்க 16 படைவீரர்களையும் நியமித்தான். ஒருவேளை பேதுரு தப்பித்துப் போனால், அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனை இவர்களுக்குக் கொடுக்கப்படும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பேதுருவின் அன்புக்குரிய சக கிறிஸ்தவர்களால் என்ன செய்ய முடியும்?
8 என்ன செய்ய வேண்டுமென்று சபையில் இருந்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது. ஏரோது, “பேதுருவைச் சிறையிலேயே அடைத்து வைத்திருந்தான். அந்தச் சமயத்தில், சபையிலிருந்த எல்லாரும் அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக ஜெபம் செய்துவந்தார்கள்” என்று அப்போஸ்தலர் 12:5 சொல்கிறது. தங்கள் அன்பு சகோதரனுக்காக அவர்கள் உருக்கமாக ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள். யாக்கோபு கொலை செய்யப்பட்டதால் அந்தச் சீஷர்கள் மனம் உடைந்து போய்விடவில்லை; ஜெபம் செய்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று நினைத்துவிடவும் இல்லை. ஜெபங்களுக்கு யெகோவா நிச்சயம் பதில் தருவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவருடைய விருப்பத்துக்கு இசைவாக ஜெபம் செய்தால், அவர் நிச்சயம் பதில் தருவார். (எபி. 13:18, 19; யாக். 5:16) இன்று இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு அருமையான பாடம்.
9. ஜெபம் செய்வதில் பேதுருவின் சக கிறிஸ்தவர்கள் வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 பல்வேறு சோதனைகளை அனுபவிக்கிற சகோதரர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் துன்புறுத்தலையோ அரசாங்க தடைகளையோ இயற்கை பேரழிவுகளையோ சகித்து வரலாம். அவர்களுக்காக நீங்கள் யெகோவாவிடம் மன்றாடி ஜெபம் செய்யலாம், இல்லையா? அவ்வளவாக வெளியில் தெரியாத பிரச்சினைகளை, உதாரணத்துக்கு, குடும்பப் பிரச்சினைகளை... மனச்சோர்வை... அல்லது விசுவாசத்துக்கு பரீட்சையாக இருக்கும் வேறு பிரச்சினைகளை... சந்திக்கும் சகோதரர்களைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதனால், ஜெபம் செய்வதற்குமுன் யாருக்காக எல்லாம் ஜெபம் செய்யலாம் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; அப்படிச் செய்தால், ‘ஜெபத்தைக் கேட்கிற’ யெகோவாவிடம் அவர்களுக்காகவும் சேர்த்து மன்றாட முடியும். (சங். 65:2) சொல்லப்போனால், உங்களுக்குக் கஷ்டம் வரும்போது உங்களுடைய சகோதர சகோதரிகளும் இதைத்தான் செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள், இல்லையா?
“என் பின்னால் வா” (அப். 12:6-11)
10, 11. சிறையிலிருந்த பேதுருவை தேவதூதர் எப்படி விடுதலை செய்து வெளியே கூட்டிக்கொண்டு வந்தார்? விளக்குங்கள்.
10 தனக்கு முடிவு நெருங்கிவிட்டதை நினைத்து பேதுரு சோகக் கடலில் மூழ்கிவிட்டாரா? நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால் படைவீரர்கள் அந்த இரவு கண் அயராமல் அவரைக் காவல் காத்துக் கொண்டிருக்க... அவர் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார் என்பது மட்டும் நமக்குத் தெரியும். அடுத்த நாள் தனக்கு என்ன நடந்தாலும் சரி, யெகோவா தன்னை கைவிடமாட்டார் என்பதில் இந்த உண்மை சீஷர் உறுதியாக இருந்தார். (ரோ. 14:7, 8) அன்று இரவு நடக்கவிருந்த அற்புதமான சம்பவங்களை பேதுரு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். திடீரென்று பிரகாசமான ஒளி அந்தச் சிறை அறையைச் சூழ்ந்துகொண்டது. அங்கே ஒரு தேவதூதர் வந்திருந்தார், படைவீரர்களின் கண்ணுக்கு அவர் தெரியவில்லை. பேதுருவை அவசர அவசரமாக எழுப்பினார். அப்போது அவர் கைகளில் கட்டப்பட்டிருந்த இரும்புச் சங்கிலிகள்... உடைக்க முடியாதது போல் தோன்றிய அந்தச் சங்கிலிகள்... தானாகவே கழன்று கீழே விழுந்தன!
11 பேதுருவுக்கு தேவதூதர் சுருக்கமாகச் சில கட்டளைகள் போட்டார்: ‘சீக்கிரம் எழுந்திரு! . . . புறப்படு, செருப்பைப் போட்டுக்கொள். . . . உன் மேலங்கியைப் போட்டுக்கொள்.’ பேதுரு உடனடியாக கீழ்ப்படிந்தார். கடைசியாக, “என் பின்னால் வா” என்று தேவதூதர் சொன்னார், பேதுருவும் போனார். அவர்கள் சிறையைவிட்டு வெளியே வந்தார்கள்... காவல்காத்துக் கொண்டிருந்த படைவீரர்களைக் கடந்து போனார்கள்... ஓசையின்றி நடந்து பிரமாண்டமான இரும்புக் கதவை அடைந்தார்கள். இப்போது, அந்தக் கதவைத் தாண்டி எப்படிப் போவார்கள்? இதே கேள்வி பேதுருவின் மனதிலும் வந்திருந்தால், அது அடுத்த சில நிமிஷங்களில் அவர் மனதைவிட்டு மறைந்திருக்கும். ஏனென்றால், கதவை நெருங்கியவுடன், “அது தானாகவே திறந்துகொண்டது.” இதெல்லாம் பேதுருவின் பொறியில் தட்டுப்படுவதற்கு முன்பே அவர்கள் அந்தக் கதவைத் தாண்டி தெருவுக்குப் போய்விட்டார்கள்; உடனே தேவதூதர் மறைந்துவிட்டார். அங்கே பேதுரு தன்னந்தனியாக நின்றார், இப்போதுதான் அவருக்குத் தெரிகிறது... நடந்ததெல்லாம் கனவல்ல என்று. இது ஒன்றும் தரிசனமும் அல்ல. அவர் நிஜமாகவே விடுதலை செய்யப்பட்டிருந்தார்!—அப். 12:7-11.
12. பேதுருவை யெகோவா விடுதலை செய்ததைப் பற்றிய பதிவிலிருந்து நாம் எப்படி ஆறுதல் பெறலாம்?
12 யெகோவா தன் ஊழியர்களைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! அன்று உலகத்திலேயே வல்லமை வாய்ந்த அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றிருந்த ஒரு ராஜா, பேதுருவை சிறைபிடித்து வைத்திருந்தான். இருந்தாலும், பேதுரு அந்தச் சிறையைவிட்டு வெளியே வந்துவிட்டார்! உண்மைதான், யெகோவா தன்னுடைய ஊழியர்கள் எல்லாரையும் இதேபோல் அற்புதமாக விடுதலை செய்வதில்லை. யாக்கோபை அவர் அப்படி விடுவிக்கவில்லை; ஏன், பேதுருவேகூட பிற்காலத்தில் இயேசு சொன்னபடியே மரணத்தை சந்தித்தபோது யெகோவா அவரை அற்புதமாக விடுவிக்கவில்லை. இன்று இருக்கிற கிறிஸ்தவர்கள் தங்களுக்கு அற்புதமாக விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதில்லை. இருந்தாலும், யெகோவா மாறவில்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். (மல். 3:6) அதோடு, யாராலும் விடுவிக்க முடியாத மரணம் என்ற சிறையிலிருந்து லட்சக்கணக்கான மக்களை தன்னுடைய மகன் மூலம் சீக்கிரத்தில் விடுதலை செய்வார். (யோவா. 5:28, 29) இன்று நமக்குத் துன்புறுத்தல் வரும்போது இதுபோன்ற வாக்குறுதிகளை யோசித்துப் பார்த்து உற்சாகம் பெறலாம்.
“அவரைப் பார்த்து திகைத்துப்போனார்கள்” (அப். 12:12-17)
13-15. (அ) மரியாளின் வீட்டில் கூடியிருந்தவர்கள் பேதுருவைப் பார்த்தபோது எப்படி உணர்ந்தார்கள்? (ஆ) அப்போஸ்தலர் புத்தகம் எதன் பக்கம் நம் கவனத்தைத் திருப்புகிறது, இருந்தாலும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு பேதுரு என்ன உதவி செய்து கொண்டிருந்தார்?
13 இருள் சூழ்ந்த அந்தத் தெருவில் நின்றுகொண்டு, எங்கே போவது என்று யோசித்துக் கொண்டிருந்தார் பேதுரு. உடனே ஞாபகத்துக்கு வந்தது... பக்கத்தில் இருந்த மரியாள் என்ற கிறிஸ்தவ பெண்ணின் வீடு. அவர் ஒரு விதவை, ஆனால் கொஞ்சம் வசதியானவர். ஒரு சபையே கூடிவரும் அளவுக்கு அவருக்குச் சொந்தமாக ஒரு பெரிய வீடு இருந்தது. மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானின் அம்மாதான் இவர். இந்த மாற்குவைப் பற்றி முதல் முறையாக இங்கேதான் அப்போஸ்தலர் புத்தகம் சொல்கிறது. இவரே பிற்பாடு பேதுருவுக்கு மகன்போல் இருந்தார். (1 பே. 5:13) அன்று இரவு, நிறைய சகோதரர்கள் மரியாளின் வீட்டில் கூடி, ராத்திரி ரொம்ப நேரம்வரை ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேதுருவுக்காகத்தான் ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை; ஆனால், அவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே யெகோவா பதில் தருவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
14 அந்த வீட்டின்முன் இருந்த முற்றத்தின் கதவை பேதுரு தட்டினார். உள்ளேயிருந்து ரோதை (கிரேக்கில் பொதுவாக வைக்கப்படும் இந்தப் பெயருக்கு “ரோஜா” என்று அர்த்தம்) என்ற வேலைக்காரப் பெண் வந்தாள். பேதுருவின் குரலைக் கேட்டபோது அவள் காதையே அவளால் நம்ப முடியவில்லை. கதவைத் திறந்துவிடுவதற்குப் பதிலாக, சந்தோஷம் தாங்காமல் திரும்பவும் வீட்டிற்குள் ஓடிப்போய் பேதுரு வந்திருக்கும் செய்தியை சொல்லி அவர்களை நம்பவைக்க முயற்சி செய்தாள். ஆனால், அவர்களோ “உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று சொன்னார்கள். ஆனால், அவள் விட்டுவிடவில்லை, தான் சொல்வது உண்மை என்று அவர்களுக்குத் திரும்பத் திரும்பச் சொன்னாள். அது ஒருவேளை பேதுருவின் தூதராக இருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். (அப். 12:12-15) அதுவரை, பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தார், கடைசியாக அவர்கள் போய் கதவைத் திறந்தார்கள்.
15 அவர்கள் வெளியே வந்தபோதோ, “அவரைப் பார்த்து திகைத்துப்போனார்கள்.” (அப். 12:16) சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த சகோதரர்களுக்குத் தான் விடுதலையாகி வந்த கதையைச் சொல்வதற்குமுன் பேதுரு முதலில் அவர்களை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது; பின்பு, தான் சொன்னதையெல்லாம் யாக்கோபுக்கும் மற்ற அப்போஸ்தலர்களுக்கும் சொல்லச் சொன்னார். ஏரோதுவின் படைவீரர்கள் அவரைக் கண்டுபிடிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பினார். கொஞ்சம் பாதுகாப்பான இடத்துக்கு போய் தன் ஊழியத்தைத் தொடர்ந்தார். 15-ம் அதிகாரத்தில், விருத்தசேதன பிரச்சினையைத் தீர்ப்பதில் மட்டும் பேதுரு மீண்டும் தலைகாட்டுகிறார். பின்பு அவரைப் பற்றி அப்போஸ்தலர் புத்தகம் எதுவும் சொல்வதில்லை. அடுத்தபடியாக பவுல் செய்த வேலைகள், பயணங்கள் பக்கம் அது நம் கவனத்தைத் திருப்புகிறது. ஆனால் பேதுரு எங்கே போயிருந்தாலும் சரி, சகோதர சகோதரிகளின் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். மரியாளின் வீட்டில் கூடியிருந்த சகோதரர்களைப் பார்த்துவிட்டு அவர் போனபோது அவர்கள் எல்லாருமே நிச்சயம் சந்தோஷத்தில் திளைத்திருப்பார்கள்.
16. எதிர்காலத்தில் நாம் அளவில்லா ஆனந்தத்தை அனுபவிப்போம் என்று எப்படி உறுதியாக சொல்லலாம்?
16 சில நேரங்களில் யெகோவா தன்னுடைய ஊழியர்கள் எதிர்பார்ப்பதைவிட பலமடங்கு அதிகமாக ஆசீர்வதிக்கிறார், சந்தோஷத்தில் அவர்களைத் திக்குமுக்காட செய்துவிடுகிறார். அன்று இரவு பேதுருவின் ஆன்மீக சகோதர சகோதரிகள் அப்படியொரு சந்தோஷத்தைத்தான் அனுபவித்தார்கள். யெகோவாவின் அளவற்ற ஆசியைப் பெற்றுக்கொள்ளும்போது சில சமயங்களில் நாமும் இப்படி உணர்கிறோம். (நீதி. 10:22) எதிர்காலத்தில், யெகோவாவின் வாக்குறுதிகள் எல்லாமே உலகம் முழுவதும் நிறைவேறப்போவதை நாம் பார்க்கப்போகிறோம். யெகோவாவின் வாக்குறுதிகள் உண்மையாகும்போது, அவை நம் கற்பனையையும் மிஞ்சிவிடும். அதனால், கடைசிவரை நாம் விசுவாசத்தில் நிலைத்திருந்தால், நாம் அனுபவிக்கப்போகும் சந்தோஷத்துக்கு எல்லையே இருக்காது.
“யெகோவாவின் தூதர் அவனைத் தாக்கினார்” (அப். 12:18-25)
17, 18. மக்கள் ஏன் ஏரோதுக்குத் துதிபாடினார்கள்?
17 பேதுரு தப்பித்து போனது ஏரோதுவுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது; ஆனால், அது இன்ப அதிர்ச்சி அல்ல. ஒரு இடம்கூட விடாமல் எல்லா இடத்திலும் பேதுருவைத் தேடும்படி ஏரோது கட்டளை போட்டான், பிறகு பேதுருவைக் காவல் காத்த படைவீரர்களை விசாரித்தான். அவர்களை “இழுத்துக்கொண்டுபோய்த் தண்டிக்க” சொல்லி உத்தரவு கொடுத்தான்—அநேகமாக மரண தண்டனை கொடுத்திருப்பான். (அப். 12:19) ஏரோது அகிரிப்பாவை இரக்க குணம் படைத்தவராகவோ கருணையே உருவானவராகவோ யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். இந்தக் கொடூர மனிதனுக்கு என்றைக்காவது தண்டனை கொடுக்கப்பட்டதா?
18 பேதுரு தப்பித்துப் போனபோது அகிரிப்பாவின் பெருமைக்கு ஒரு பெரிய அடி விழுந்தது. ஆனால், சீக்கிரத்திலேயே அவன் மறுபடியும் பெருமைபிடித்து ஆட ஆரம்பித்துவிட்டான். அரசியல் சார்ந்த ஒரு விழாவின்போது, அகிரிப்பாவின் எதிரிகள் சிலர் அவனுடன் சமாதானம் பண்ணிக்கொள்ள முன்வந்தார்கள். அந்த விழாவுக்கு கூடிவந்திருந்த ஒரு பெருங்கூட்டத்தின் முன் ஒரு சொற்பொழிவு கொடுக்க அகிரிப்பா தயாராக இருந்ததாகத் தெரிகிறது. விழாவுக்காக ‘ஏரோது ராஜ உடை போட்டுக்கொண்டதாக’ லூக்கா பதிவு செய்திருக்கிறார். ஏரோதுவின் உடை வெள்ளியால் நெய்யப்பட்டிருந்ததாக யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் சொல்கிறார். அதனால், ராஜாவின் மேல் ஒளி வீசியபோது அவன் பிரகாசமாக ஜொலித்தான். பெருமை பிடித்த அந்த ராஜா பேச ஆரம்பித்தான். உடனே மக்கள்... அரசனுக்கு முகஸ்துதி செய்வதற்காக, “இது தெய்வக் குரல்! மனுஷக் குரல் அல்ல” என்று சத்தமாக ஆரவாரம் செய்தார்கள்.—அப். 12:20-22.
19, 20. (அ) ஏரோதுவை யெகோவா ஏன் தண்டித்தார்? (ஆ) ஏரோது அகிரிப்பாவின் திடீர் மரணத்தைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன ஆறுதலை அடைகிறோம்?
19 உண்மையில் இந்த மகிமை கடவுளுக்கே சேர வேண்டும்! இதையெல்லாம் கடவுள் பார்த்துக்கொண்டே இருந்தார்! ஏரோது தனக்கு விழவிருந்த பேரடியைத் தவிர்த்திருக்கலாம். கூட்டத்தாரைப் பார்த்து ‘அப்படிச் சொல்லாதீர்கள்’ என்று சொல்லியிருக்கலாம்; அல்லது அவர்களுடைய புகழ்ச்சியை மறுத்திருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. “அகம்பாவம் வந்தால் அழிவு வரும்” என்ற நீதிமொழி அவனுடைய வாழ்வில் நிஜமாகிவிட்டது. (நீதி. 16:18) “அந்த நொடியே யெகோவாவின் தூதர் அவனைத் தாக்கினார்.” அதனால், அகந்தை கொண்ட அந்த அரசனுக்கு அருவருப்பான ஒரு முடிவு வந்தது. ஏரோது “வியாதிப்பட்டுப் புழுபுழுத்துச் செத்தான்.” (அப். 12:23) அகிரிப்பா திடீரென வியாதிப்பட்டு இறந்துபோனான் என்றும் மக்களின் புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டதாலேயே தனக்கு இந்த நிலை வந்ததாக அகிரிப்பாவே ஒத்துக்கொண்டான் என்றும் ஜொஸிஃபஸ் சொன்னார். ஐந்து நாட்கள் அவதிப்பட்டபின் அகிரிப்பா இறந்துபோனதாக ஜொஸிஃபஸ் எழுதினார்.b
20 சில நேரங்களில் கடவுள்பக்தி இல்லாதவர்கள் செய்யும் அநியாயங்களுக்கெல்லாம் தண்டனையே கிடைக்காததுபோல் தோன்றலாம். இதைப் பார்த்து நாம் ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை; ஏனென்றால், இந்த “உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.” (1 யோ. 5:19) ஆனால், கெட்டவர்கள் தண்டனை பெறாமல் போகும்போது சில சமயங்களில் கடவுளுடைய ஊழியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், இதுபோன்ற பைபிள் பதிவுகள் நமக்கு ஆறுதல் தருகின்றன. சொல்லப்போனால், யெகோவாவே தலையிட்டு, தாம் நீதியை நேசிப்பவர் என்பதை தன்னுடைய ஊழியர்களுக்கு நிரூபிப்பது போல் இருக்கிறது. (சங். 33:5) இன்றோ நாளையோ கண்டிப்பாக அவருடைய நீதி நிலைநாட்டப்படும்.
21. அப்போஸ்தலர் 12-ம் அதிகாரத்தில் என்ன முக்கியமான விஷயம் இருக்கிறது, அது ஏன் இன்று நமக்கு ஆறுதல் தருகிறது?
21 “யெகோவாவின் வார்த்தை அதிகமதிகமாகப் பரவிவந்தது” என்ற உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுடன் பதிவு முடிவடைகிறது. (அப். 12:24) நம் நாட்களில் பிரசங்க வேலையை யெகோவா ஆசீர்வதித்திருப்பதை இந்தப் பதிவு நமக்கு ஞாபகப்படுத்தலாம். அதனால், அப்போஸ்தலர் 12-ம் அதிகாரம் வெறுமனே ஒரு அப்போஸ்தலரின் மரணத்தையும் இன்னொரு அப்போஸ்தலரின் விடுதலையையும் பற்றி மட்டுமே நமக்குச் சொல்வதில்லை. கிறிஸ்தவ சபையை சின்னாபின்னமாக்க... பிரசங்க வேலையை முடக்க... சாத்தான் எடுத்த முயற்சிகளை யெகோவா தவிடுபொடியாக்கியதைப் பற்றிய முக்கியமான விஷயத்தை அது நமக்கு விளக்குகிறது. ஆனால், சாத்தானுடைய தாக்குதல்கள் தோல்வியைத்தான் சந்தித்தன, இதுபோன்ற எல்லா சதித்திட்டங்களும் தோல்வியைச் சந்தித்தாக வேண்டும். (ஏசா. 54:17) அதேசமயத்தில், யெகோவா மற்றும் இயேசுவின் பக்கம் இருப்பவர்கள் செய்யும் வேலை ஒருபோதும் தோல்வி அடையாது. கேட்கவே ஆறுதலாக இருக்கிறது, இல்லையா? இன்று “யெகோவாவின் வார்த்தையை” உலகம் எங்கும் பரப்பும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
a பக்கம் 79-ல், “முதலாம் ஏரோது அகிரிப்பா ராஜா” என்ற பெட்டியைப் பாருங்கள்.
b ஜொஸிஃபஸும் லூக்காவும் சொல்லியிருக்கிற நோய் அறிகுறிகள் உருளைப் புழுக்களால் ஏற்படும் குடல் அடைப்பாக இருந்திருக்கலாம் என்றும் அது உயிரையே கொன்றுவிடும் என்றும் டாக்டரும் எழுத்தாளருமான ஒருவர் எழுதினார். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர் வாந்தியெடுக்கும்போது இந்தப் புழுக்கள் வெளிவரும், அல்லது நோயாளி இறக்கும்போது வெளிவரும். “லூக்கா மருத்துவராக இருந்ததால், [ஏரோது] கோர மரணம் அடைந்ததை அவருடைய துல்லியமான பதிவு காட்டுகிறது” என்று ஒரு புத்தகம் சொல்கிறது.