நம் விசுவாசத்திற்காக வாதாடுதல்
“உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.”—1 பேதுரு 3:15.
1, 2. எதிர்ப்பைக் கண்டு ஏன் யெகோவாவின் சாட்சிகள் ஆச்சரியமடைவதில்லை, ஆனால் அவர்களுடைய விருப்பம் என்ன?
பெரும்பாலான நாடுகளில், யெகோவாவின் சாட்சிகள் பொதுவாக நேர்மையும் ஒழுக்கமுமுள்ள ஆட்களென அறியப்பட்டிருக்கிறார்கள். எந்தத் தொல்லையும் தராத நல்ல அயலகத்தாரென அநேகர் அவர்களை கருதுகிறார்கள். ஆனால், நேர்மாறாக, சமாதானத்தை நாடும் இந்தக் கிறிஸ்தவர்கள்—குண்டுகள் பறக்கும் போர்க் காலங்களிலும்சரி புறா பறக்கும் சமாதான காலங்களிலும்சரி—அநியாயமாய் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்ப்பைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவதில்லை. சொல்லப்போனால், அதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மொத்தத்தில், பொ.ச. முதல் நூற்றாண்டில் உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் ‘பகைக்கப்பட்டார்கள்’ என்பதை அறிந்திருக்கிறார்கள். ஆகையால், இன்று கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாயிருக்க கடினமாய் முயற்சி செய்பவர்கள் வேறுவிதமாய் நடத்தப்படுவதற்கு ஏன் எதிர்பார்க்க வேண்டும்? (மத்தேயு 10:22) மேலும் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.”—2 தீமோத்தேயு 3:12.
2 யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்துதலை நாடிப்போவதுமில்லை, கஷ்டங்களை—அபராதத்தையோ சிறைதண்டனையையோ கொடூரமாய் நடத்தப்படுவதையோ—விரும்புவதுமில்லை. எந்தத் தடையுமின்றி கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக, ‘தொல்லையின்றி அமைதியோடு வாழ’ அவர்கள் விரும்புகிறார்கள். (1 தீமோத்தேயு 2:1, 2, பொ.மொ.) பெரும்பாலான நாடுகளில், தங்கள் வணக்கத்திற்கு கிடைத்திருக்கும் மத சுதந்திரத்தை மதிக்கிறார்கள். மனித அரசாங்கங்களின் ஆட்சியாளர் உட்பட, ‘எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருக்க’ தங்களால் முடிந்ததை மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செய்கிறார்கள். (ரோமர் 12:18; 13:1-7) அப்படியானால், அவர்கள் ஏன் ‘பகைக்கப்படுகிறார்கள்’?
3. யெகோவாவின் சாட்சிகள் அநியாயமாக பகைக்கப்படுவதற்கான ஒரு காரணம் என்ன?
3 அடிப்படையில், பூர்வ கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட அதே காரணங்களுக்காக யெகோவாவின் சாட்சிகளும் அநியாயமாக பகைக்கப்பட்டுள்ளனர். முதலாவதாக, யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மத நம்பிக்கைகளில் உறுதியாய் இருப்பதால் மற்றவர்களுடைய வெறுப்பை சம்பாதிக்கின்றனர். உதாரணமாக, கடவுளுடைய ராஜ்யத்தை வைராக்கியமாய் பிரசங்கிக்கிறார்கள், ஆனால் அதை மக்கள் பெரும்பாலும் தவறாக புரிந்துகொண்டு, அவர்களுடைய பிரசங்க வேலையை “வலுக்கட்டாயமான மதமாற்றுதலாக” கருதுகிறார்கள். (அப்போஸ்தலர் 4:19, 20-ஐ ஒப்பிடுக.) அரசியலிலும் போர்களிலும் நடுநிலைமை வகிக்கிறார்கள், அதனால் யெகோவாவின் சாட்சிகள் விசுவாசமற்ற பிரஜைகள் என சிலசமயங்களில் தவறாக கருதப்பட்டிருக்கிறார்கள்.—மீகா 4:3, 4.
4, 5. (அ) ஏன் யெகோவாவின் சாட்சிகள் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியிருக்கிறார்கள்? (ஆ) யெகோவாவின் ஊழியர்களை துன்புறுத்துவதற்கு பெரும்பாலும் முக்கிய தூண்டுகோலாக இருந்திருப்பவர்கள் யார்?
4 இரண்டாவதாக, யெகோவாவின் சாட்சிகள் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியிருக்கிறார்கள். அப்பட்டமான பழி சுமத்தப்பட்டு அவர்களுடைய நம்பிக்கைகள் திரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக, சில நாடுகளில் ஆபத்தான மதப் பிரிவினரென முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும், ‘இரத்தத்திற்கு விலகியிருக்கும்படி’ சொல்லப்பட்ட பைபிள் கட்டளைக்கு கீழ்ப்படிந்து இரத்தமில்லாத மருத்துவ சிகிச்சையை நாடுவதால், “பிள்ளைகளை கொலைசெய்வோர்” எனவும் “தற்கொலை மதத்தவர்” எனவும் முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 15:28, 29) ஆனால் உண்மை என்னவென்றால், யெகோவாவின் சாட்சிகள் உயிரின்மீது உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதால் தங்களுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் மிகச் சிறந்த மருத்துவ கவனிப்பை பெற விரும்புகிறார்கள். இரத்தம் ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ஒவ்வொரு ஆண்டும் யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளில் அநேகர் இறக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. மேலும், குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் பைபிள் சத்தியம் ஒரேமாதிரி கவராததால், குடும்பங்களை பிரிப்பவர்கள் எனவும் சாட்சிகள் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் குடும்ப வாழ்க்கையை உயர்வாய் மதிப்பவர்கள் என்பது அவர்களோடு பழகியவர்களுக்குத் தெரியும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நேசித்து மரியாதை செலுத்த வேண்டும், அதோடு பெற்றோர் விசுவாசிகளாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி பிள்ளைகள் அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற பைபிள் கட்டளையைப் பின்பற்ற முயலுகிறவர்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.—எபேசியர் 5:21–6:3.
5 அநேக சந்தர்ப்பங்களில், யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்துவதற்கு முக்கிய தூண்டுகோலாக இருப்பவர்கள் மத எதிரிகளே. சாட்சிகளுடைய நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு அரசியல் அதிகாரிகளுடனும் செய்தித்துறையுடனும் சேர்ந்து தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள். நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் பழக்கங்களின் விளைவாக இருந்தாலும்சரி பொய் குற்றச்சாட்டுகளின் காரணமாக இருந்தாலும்சரி, யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் இப்படிப்பட்ட எதிர்ப்புக்கு எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
‘உங்கள் நியாயத்தன்மை எல்லா மனிதருக்கும் தெரிந்திருப்பதாக’
6. கிறிஸ்தவ சபைக்குப் புறம்பே உள்ளவர்களைப் பற்றி சமநிலையான நோக்கு ஏன் முக்கியம்?
6 முதலாவதாக, நம்முடைய மத நம்பிக்கைகளைப் பின்பற்றாதவர்களைக் குறித்ததில் நமக்கு சரியான நோக்குநிலை—யெகோவாவின் நோக்குநிலை—அவசியம். இல்லையென்றால், தேவையில்லாமல் மற்றவர்களிடமிருந்து பகைமையையோ கண்டனத்தையோ வரவழைத்துக்கொள்வோம். ‘உங்கள் நியாயத்தன்மை எல்லா மனிதருக்கும் தெரிந்திருப்பதாக’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (பிலிப்பியர் 4:5, NW) ஆகையால், கிறிஸ்தவ சபைக்குப் புறம்பே உள்ளவர்களைக் குறித்ததில் சமநிலையான நோக்கை கொண்டிருக்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது.
7. ‘உலகத்தால் கறைபடாதபடி’ நம்மை காத்துக்கொள்வதில் என்ன உட்பட்டுள்ளது?
7 ஒருபுறத்தில், ‘உலகத்தால் கறைபடாதவாறு [நம்மை] காத்துக்கொள்ளும்படி’ பைபிள் மிகத் தெளிவாக புத்திமதி கூறுகிறது. (யாக்கோபு 1:27; 4:4) இங்கே, ‘உலகம்’ என்ற வார்த்தை, பைபிளில் அநேக இடங்களில் பயன்படுத்தப்படுகிறதுபோல, மெய் கிறிஸ்தவர்களைத் தவிர முழு மனித சமுதாயத்தை அர்த்தப்படுத்துகிறது. இந்த மக்கள் சமுதாயத்தினரின் மத்தியில் நாம் வாழ்கிறோம்; வேலையில், பள்ளியில், அக்கம்பக்கத்தில் அவர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்படுகிறது. (யோவான் 17:11, 15; 1 கொரிந்தியர் 5:9, 10) ஆனால், கடவுளுடைய நீதியான வழிகளுடன் முரண்படுகிற மனப்பான்மைகளையும் பேச்சையும் நடத்தையையும் தவிர்ப்பதன் மூலம் உலகத்தால் கறைபடாதவாறு நம்மை காத்துக்கொள்கிறோம். இந்த உலகத்தோடு, முக்கியமாக யெகோவாவின் தராதரங்களை கொஞ்சமும் மதிக்காதவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்வதன் அபாயத்தை நாம் உணர்ந்திருப்பதும் மிகவும் இன்றியமையாதது.—நீதிமொழிகள் 13:20.
8. உலகத்தால் கறைபடாதவாறு காத்துக்கொள்ளும்படியான அறிவுரை மற்றவர்களை தாழ்வாக கருதுவதற்கு ஏன் எந்தக் காரணத்தையும் அளிப்பதில்லை?
8 இருப்பினும், இந்த உலகத்தால் கறைபடாதவாறு காத்துக்கொள்ளும்படி கொடுக்கப்பட்ட ஆலோசனை, யெகோவாவின் சாட்சிகள் அல்லாதவர்களை சிறுமைப்படுத்துவதற்கு எந்த ஆதாரத்தையும் நமக்கு கொடுப்பதில்லை. (நீதிமொழிகள் 8:13) முந்தைய கட்டுரையில் கலந்தாலோசிக்கப்பட்ட யூத மதத் தலைவர்களுடைய முன்மாதிரியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் உருவாக்கிய மதம் யெகோவாவின் தயவையும் பெறவில்லை; யூதரல்லாதவர்களுடன் நல்ல உறவையும் வளர்க்கவில்லை. (மத்தேயு 21:43, 45) தங்களுடைய சுயநீதிகொண்ட நோக்குநிலையிலிருந்து, மதவெறிப்பிடித்த இந்த மனிதர்கள் புறஜாதியாரை தாழ்வாக கருதினார்கள். சாட்சிகள் அல்லாதவர்களை இழிவாக நடத்துவதன் மூலம் நாம் இப்படிப்பட்ட குறுகிய நோக்குநிலையை காண்பிப்பதில்லை. அப்போஸ்தலன் பவுலைப் போல, பைபிள் சத்தியத்தின் செய்தியைக் கேட்கிற அனைவரும் கடவுளுடைய தயவைப் பெறுவார்கள்.—அப்போஸ்தலர் 26:29; 1 தீமோத்தேயு 2:3, 4.
9. நம்முடைய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களைப் பற்றி பேசும் விதத்தை சமநிலையான, வேதப்பூர்வமான நோக்கு நம்மீது என்ன விதமான செல்வாக்கை ஏற்படுத்த வேண்டும்?
9 சாட்சிகள் அல்லாதவர்களைப் பற்றி நாம் பேசும் விதம் வேதப்பூர்வமான நோக்கின்படி இருக்க வேண்டும். “ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும்” கிரேத்தா தீவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டும்படி தீத்துவுக்கு பவுல் அறிவுறுத்தினார். (தீத்து 3:2) கிறிஸ்தவர்கள் அங்கிருந்த ‘ஒருவரையும்’—கிறிஸ்தவரல்லாதவர்களையும்கூட—தூஷணமாய் பேசக்கூடாது என்பதை கவனியுங்கள். அவர்களில் சிலர் பொய்க்கும் பெருந்தீனிக்கும் சோம்பலுக்கும் பேர்போனவர்களாய் இருந்தார்கள். (தீத்து 1:12) ஆகவே, நம்முடைய நம்பிக்கைகளைக் கொண்டிராதவர்களைப் பற்றி பேசுகையில், மதிப்புக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது வேதப்பூர்வமற்றது. மேட்டிமையான மனநிலை மற்றவர்களை யெகோவாவின் வணக்கத்தினிடம் வழிநடத்தாது. அதற்கு மாறாக, யெகோவாவின் வார்த்தையிலுள்ள நியாயமான நியமங்களின்படி மற்றவர்களையும் நாம் நோக்கும்போதும் நடத்தும்போதும், கடவுளுடைய ‘உபதேசத்தை அலங்கரிக்கிறோம்.’—தீத்து 2:9.
மௌனமாயிருப்பது எப்பொழுது, பேசுவது எப்பொழுது
10, 11. ‘மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு’ என்பதையும் ‘பேச ஒரு காலமுண்டு’ என்பதையும் தாம் அறிந்திருந்ததை இயேசு எவ்வாறு காண்பித்தார்?
10 “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்று பிரசங்கி 3:7 சொல்கிறது. இங்குதான் பிரச்சினையே: எதிர்ப்பவர்களை எப்பொழுது புறக்கணித்துவிடுவது எப்பொழுது நம்முடைய விசுவாசத்திற்காக வாதாடுவது என்பதை தீர்மானிப்பது. ஞானமாய் செயல்படுவதில் எப்பொழுதும் பரிபூரணராய் இருந்த இயேசுவுடைய உதாரணத்திலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். (1 பேதுரு 2:21) ‘மவுனமாயிருக்க வேண்டிய காலம்’ எப்போது என்பதை அவர் அறிந்திருந்தார். உதாரணமாக, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் இயேசுவை பிலாத்துவுக்கு முன்பு பொய்யாக குற்றம்சாட்டியபோது, அவர் “மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.” (மத்தேயு 27:11-14) அவரைக் குறித்த கடவுளுடைய சித்தம் நிறைவேறுவதோடு குறுக்கிடக்கூடிய எதையும் அவர் சொல்ல விரும்பவில்லை. மாறாக, அவருடைய செயல்களே அவருக்காக பேசும்படி விட்டுவிட்டார். அவர்களுடைய கர்வமிக்க சிந்தைகளையும் இருதயங்களையும் சத்தியமும் மாற்றாது என்பதை அறிந்திருந்தார். ஆகவே அவர்களுடைய குற்றச்சாட்டை கண்டுகொள்ளாமல், வேண்டுமென்றே சாதித்த தன் மௌனத்தை கலைக்க மறுத்துவிட்டார்.—ஏசாயா 53:7.
11 என்றபோதிலும், ‘பேசுவதற்கான காலம்’ எப்பொழுது என்பதையும் இயேசு அறிந்திருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், குறைகாண்பவர்களிடம் தைரியமாகவும் வெளிப்படையாகவும் வாதாடி அவர்களுடைய பொய் குற்றச்சாட்டுகளை தவறென மறுத்துரைத்தார். உதாரணமாக, கூட்டத்தார் முன்பு பெயெல்செபூலினால் பேய்களைத் துரத்துவதாக குற்றம்சாட்டி வேதபாரகரும் பரிசேயரும் அவரை அவமதிக்க முயன்றபோது, பொய்க் குற்றச்சாட்டை அப்படியே விட்டுவிடவில்லை. நார்நாராக உறித்துவைத்தாற்போல் தர்க்கரீதியில் பேசி, உதாரணத்தின் மூலம் அந்தப் பொய்யை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். (மாற்கு 3:20-30; இதையும் காண்க: மத்தேயு 15:1-11; 22:17-21; யோவான் 18:37) அதைப்போலவே, இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டபின் நியாயசங்கத்திற்கு முன்பு இழுத்துச் செல்லப்பட்டபோது, பிரதான ஆசாரியனாகிய காய்பா தந்திரமாய் இவ்வாறு கேட்டான்: “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்”! இதுவும்கூட ‘பேசுவதற்கான காலமாய்’ இருந்தது. ஏனெனில் மெளனமாயிருப்பது, தாம் கிறிஸ்து என்பதை மறுதலிப்பதாக அர்த்தப்படுத்திவிடலாம். ஆகவே, “நீர் சொன்னபடிதான்” என இயேசு பதிலளித்தார்.—மத்தேயு 26:63, 64; மாற்கு 14:61, 62.
12. ஐக்கோனியத்தில் பவுலும் பர்னபாவும் தைரியமாய் பேசும்படி தூண்டிய சந்தர்ப்பங்கள் யாவை?
12 பவுல் மற்றும் பர்னபாவின் முன்மாதிரியையும் யோசித்துப் பாருங்கள். அப்போஸ்தலர் 14:1, 2 இவ்வாறு சொல்கிறது: “இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள். விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.” த நியூ இங்லிஷ் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஆனால் மதம் மாறாத யூதர்கள், புறஜாதியாரை தூண்டிவிட்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக அவர்களுடைய மனதை விஷமாக்கினார்கள்.” யூத எதிரிகள் அந்தச் செய்தியை தாங்கள் நிராகரித்ததோடு திருப்தியடைந்துவிடவில்லை. கிறிஸ்தவர்களுக்கு எதிராக புறஜாதி மக்களிடம் தப்பபிப்பிராயத்தை உண்டாக்கவும் முயற்சி செய்தார்கள்.a கிறிஸ்தவத்திற்கு எதிராக அவர்களுடைய பகைமை எந்தளவுக்கு இருந்திருக்க வேண்டும்! (அப்போஸ்தலர் 10:28-ஐ ஒப்பிடுக.) இது, பொதுமக்களுடைய கண்டனத்தால் புதிய சீஷர்கள் ஊக்கமிழந்துவிடாதபடி பவுலும் பர்னபாவும் ‘பேசுவதற்கான காலமாய்’ இருந்தது. “அவர்கள் [பவுலும் பர்னபாவும்] அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்.” அற்புதங்களை செய்யும்படிக்கு அவர்களுக்கு வல்லமையளிப்பதன் மூலம் யெகோவா தம்முடைய அங்கீகாரத்தைக் காண்பித்தார். இதனால் “சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள்.”—அப்போஸ்தலர் 14:3, 4.
13. கண்டனத்திற்கு பதிலளிக்கையில், பொதுவாக ‘மவுனமாயிருக்க வேண்டிய காலம்’ எப்பொழுது?
13 அப்படியானால், நாம் கண்டனம் செய்யப்படுகையில், எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? அது சூழ்நிலைகளைப் பொறுத்தது. ‘மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு’ என்ற நியமத்தை சில சந்தர்ப்பங்களில் பொருத்த வேண்டியதாக இருக்கலாம். விசேஷமாக, உப்புச்சப்பில்லாத விவாதங்களுக்கு நம்மை இழுப்பதற்கு எதிரிகள் தீர்மானித்திருக்கும் சந்தர்ப்பங்களில் இந்த நியமத்தைப் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு சத்தியத்தை அறிய இஷ்டமில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. (2 தெசலோனிக்கேயர் 2:9-12) அவிசுவாசத்தில் ஊறிப்போன பெருமைகொண்ட இருதயமுள்ளோரிடம் நியாயங்காட்டிப் பேச முற்படுவது பயனற்றது. அதைவிட, எடுத்ததெற்கெல்லாம் பொய்க் குற்றச்சாட்டு கூறுகிறவரிடமும் தர்க்கித்துப் பேசுவதில் நாம் மூழ்கிவிடுவோமாகில், மிகவும் முக்கியமான, பலனளிக்கும் வேலையிலிருந்து—அதாவது, உண்மையிலேயே பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிற நேர்மையான இருதயமுள்ளவர்களுக்கு உதவுவதிலிருந்து—நாம் திசைமாறிவிடலாம். ஆகவே, நம்மைப் பற்றி பொய்யைப் பரப்பும் மனச்சாய்வுள்ள எதிரிகளை எதிர்ப்படும்போது, நமக்கு கொடுக்கப்படும் ஏவப்பட்டு எழுதப்பட்ட அறிவுரை: ‘அவர்களை விட்டுவிலகுங்கள்.’—ரோமர் 16:17, 18; மத்தேயு 7:6.
14. மற்றவர்களுக்கு முன்பு என்ன வழிகளில் நம்முடைய விசுவாசத்திற்காக வாதாடலாம்?
14 நம்முடைய விசுவாசத்திற்காக வாதாடக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதில்லை. சொல்லப்போனால், ‘பேசுவதற்கு ஒரு காலமுண்டு.’ நம்மை பற்றிய தூஷணமான விமரிசனத்தைக் கேள்விப்பட்ட நல்மனமுள்ள ஆட்களைப் பற்றி அக்கறை கொள்கிறோம். மற்றவர்களிடம் நம்முடைய இருதயப்பூர்வமான நம்பிக்கைகளைப் பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்க மனமுள்ளவர்களாக இருக்கிறோம். சொல்லப்போனால், அப்படிப்பட்ட வாய்ப்பை நாம் வரவேற்கிறோம். பேதுரு இவ்வாறு எழுதினார்: ‘கர்த்தராகிய [கிறிஸ்துவை] உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.’ (1 பேதுரு 3:15) நாம் நெஞ்சார நேசிக்கும் நம்பிக்கைகளுக்கான அத்தாட்சியை உண்மையிலேயே அக்கறையுள்ள ஆட்கள் கேட்க விரும்பும்போதும், எதிரிகளால் எழுப்பப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளைப் பற்றி அவர்கள் கேட்கும்போதும் நியாயமான பைபிள் பதில்களைக் கொடுத்து நம்முடைய விசுவாசத்திற்காக வாதாடுவது நம்முடைய கடமை. அதோடுகூட, நம்முடைய நன்னடத்தை நம்மைப் பற்றி கொடுக்கும் சாட்சி ஏட்டிலடங்கா. நாம் உண்மையிலேயே கடவுளுடைய நீதியான தராதரங்களுக்கு இசைவாக வாழ முயற்சி செய்கிறோம் என்பதை பரந்த மனமுள்ள ஆட்கள் கவனிக்கும்போது, நம்மைப் பற்றிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை அவர்களால் உடனடியாக கண்டுகொள்ள முடியும்.—1 பேதுரு 2:12-15.
அவதூறான பிரச்சாரத்தைப் பற்றியென்ன?
15. செய்தித்துறையால் திரித்துக்கூறப்பட்ட தகவலுக்கு யெகோவாவின் சாட்சிகள் இலக்காகியிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் என்ன?
15 சிலசமயங்களில், செய்தித்துறையின் வாயிலாக வெளிவரும் திரித்துக்கூறப்பட்ட தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளை இலக்காகியிருக்கிறார்கள். உதாரணமாக, சாட்சிகள், ‘தங்களுடைய நம்பிக்கைகளை புரிந்து கொள்ளாமலும், அதை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற மனைவிகளையும், கணவர்களையும், பெற்றோர்களையும் ஒதுக்கிவிடும்படி’ தங்கள் அங்கத்தினர்களிடம் சொல்கிறார்கள் என ஆகஸ்ட் 1, 1997 அன்று வெளிவந்த ரஷ்ய செய்தித்தாளில் ஒரு அவதூறான கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் இதைத் தவிர இன்னும் பல அவதூறான விஷயங்களும் பிரசுரிக்கப்பட்டிருந்தன. யெகோவாவின் சாட்சிகளுடன் உண்மையிலேயே பழகியவர்கள் அந்தக் குற்றச்சாட்டுகள் பொய் என்பதை அறிந்திருக்கிறார்கள். விசுவாசத்தில் இல்லாத குடும்ப அங்கத்தினர்களை கிறிஸ்தவர்கள் அன்போடும் மரியாதையோடும் நடத்த வேண்டுமென பைபிள் சுட்டிக்காட்டுகிறது. அந்தக் கட்டளையைப் பின்பற்றுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் கடினமாய் முயலுகிறார்கள். (1 கொரிந்தியர் 7:12-16; 1 பேதுரு 3:1-4) அப்படியிருந்தபோதிலும், அந்தக் கட்டுரை அச்சிடப்பட்டது, இதனால் அநேக வாசகர்கள் தவறான தகவலளிக்கப்பட்டார்கள். நாம் கண்டனம் செய்யப்படும்போது எவ்வாறு நம் விசுவாசத்திற்காக வாதாடலாம்?
16, 17, மற்றும் பக்கம் 16-ல் உள்ள பெட்டி. (அ) செய்தித்துறையில் வரும் பொய் தகவலுக்கு பதிலளிப்பதைப் பற்றி காவற்கோபுரம் ஒருமுறை என்ன சொன்னது? (ஆ) செய்தித்துறையில் வரும் எதிர்மறையான அறிக்கைகளுக்கு எந்த சந்தர்ப்பத்தில் யெகோவாவின் சாட்சிகள் பதிலளிக்கலாம்?
16 இங்கேயும்கூட, ‘மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.’ காவற்கோபுரம் ஒருமுறை அதை இவ்வாறு தெரிவித்தது: “செய்தி மூலங்களில் வரும் பொய்த்தகவலை கண்டுகொள்ளாமல் விடுவதும் உண்மைக்காகப் பொருத்தமான மூலங்கள் வாயிலாக எதிர்வழக்காடுவதும் சூழ்நிலைமைகளையும் குற்றச்சாட்டை தூண்டிவிட்டவரையும் அவருடைய நோக்கத்தையும் சார்ந்துள்ளன.” சில சந்தர்ப்பங்களில், எதிர்மறையான அறிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது நல்லது. இதனால் பொய்களைப் பற்றி கூடுதலாக விளம்பரப்படுத்தாமல் இருக்கலாம்.
17 மற்ற சந்தர்ப்பங்கள், ‘பேசுவதற்கான ஒரு காலமாயிருக்கலாம்.’ நம்பகமான ஒரு இதழாசிரியருக்கு அல்லது நிருபருக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் நம்மைப் பற்றிய உண்மையான தகவலை அவர் வரவேற்கலாம். (“பொய்த் தகவல்களை சரிசெய்தல்” என்ற பெட்டியைக் காண்க.) நம்முடைய பிரசங்க வேலையைத் தடைசெய்யும் தப்பெண்ணத்தை செய்தித்துறையில் வெளிவரும் எதிர்மறையான அறிக்கைகள் தூண்டினால், உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திலுள்ள பிரதிநிதிகள் பொருத்தமான விதத்தில் சத்தியத்திற்காக வாதாட முன்முயற்சி எடுக்கலாம்.b உதாரணமாக, டிவி நிகழ்ச்சி போன்றவற்றின் வாயிலாக உண்மைகளை சொல்வதற்கு தகுதிவாய்ந்த மூப்பர்களை நியமிக்கலாம். அப்படி செய்யாமலிருப்பது யெகோவாவின் சாட்சிகளிடம் பதில் இல்லை என அர்த்தப்படுத்தலாம். இப்படிப்பட்ட விஷயங்களில் சாட்சிகள் உவாட்ச்டவர் சொஸைட்டி மற்றும் அதன் பிரதிநிதிகளின் வழிநடத்துதலுக்கு ஞானமாய் ஒத்துழைக்கின்றனர்.—எபிரெயர் 13:17.
நற்செய்திக்காக சட்டப்பூர்வமாக வாதாடுதல்
18. (அ) பிரசங்கிப்பதற்கு மனித அரசாங்கங்களிடமிருந்து நாம் ஏன் அனுமதி பெற வேண்டியதில்லை? (ஆ) பிரசங்கிப்பதற்கு அனுமதி மறுக்கப்படும்போது என்ன போக்கை நாம் பின்பற்றுகிறோம்?
18 கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நமக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் பரலோகத்திலிருந்து வந்திருக்கிறது. நமக்கு இந்த வேலையைச் செய்வதற்கு பொறுப்பளித்த இயேசுவுக்கு ‘வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம்’ கொடுக்கப்பட்டுள்ளது. (மத்தேயு 28:18-20; பிலிப்பியர் 2:9-11) ஆகையால், பிரசங்கிப்பதற்கு மனித அரசாங்கத்திடமிருந்து நமக்கு அனுமதி தேவையில்லை. அப்படியிருந்தபோதிலும், மத சுதந்திரத்தைப் பெற்றிருப்பது ராஜ்ய செய்தியைப் பரப்புவதற்கு உதவியளிக்கிறது என்பதை நாம் உணருகிறோம். நம்முடைய வழிபாட்டை தொடர்ந்து நடத்துவதற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நாடுகளில், அதைப் பாதுகாப்பதற்கு சட்டத்தை நாம் பயன்படுத்துவோம். இப்படிப்பட்ட சுதந்திரத்தை மறுக்கும் இடங்களில், சட்டத்திற்குட்பட்டு அதைப் பெற முயலுவோம். நம்முடைய நோக்கம் சமூக சீர்திருத்தம் அல்ல, ஆனால் ‘நற்செய்திக்காக வாதாடி சட்டப்பூர்வமாய் நிலைநிறுத்துவதே.’c—பிலிப்பியர் 1:7, NW.
19. (அ) ‘தேவனுடையதை தேவனுக்கு செலுத்துவதன்’ பலன் என்ன? (ஆ) எதைச் செய்வதற்கு நாம் திடதீர்மானம் எடுத்திருக்கிறோம்?
19 யெகோவாவின் சாட்சிகளாக, யெகோவாவை சர்வலோக பேரரசராக நாம் அங்கீகரிக்கிறோம். அவருடைய சட்டமே எல்லாவற்றிற்கும் மேலானது. மனசாட்சிக்கிணங்க மனித அரசாங்கங்களுக்குக் கீழ்ப்படிகிறோம், இதனால் ‘இராயனுடையதை இராயனுக்கு செலுத்துகிறோம்.’ ஆனால் ‘தேவனுடையதை தேவனுக்கு செலுத்த வேண்டும்’ என்ற அதிமுக்கியமான உத்தரவாதத்தை நிறைவேற்றுவதில் எதுவும் குறுக்கிட நாம் அனுமதிக்க மாட்டோம். (மத்தேயு 22:21) இப்படி செய்வதால் தேசங்களால் ‘பகைக்கப்படுவோம்’ என்பதை நாம் முழுமையாக புரிந்துகொள்கிறோம், ஆனால் இதை நாம் சீஷராவதற்கு ஆகும் செலவின் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்கிறோம். இந்த 20-ம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய சட்டப்பூர்வமான பதிவே நம்முடைய விசுவாசத்திற்காக வாதாட எடுத்திருக்கும் நம்முடைய திடதீர்மானத்திற்கு அத்தாட்சியளிக்கிறது. யெகோவாவின் ஆசியுடனும் ஆதரவுடனும் ‘இடைவிடாமல் உபதேசம்பண்ணி, சுவிசேஷத்தை தொடர்ந்து பிரசங்கிப்போம்.’—அப்போஸ்தலர் 5:42.
[அடிக்குறிப்புகள்]
a யூத எதிரிகள் “தங்களுக்குத் தெரிந்த [புறஜாதியாரிடம்] வலுக்கட்டாயமாக செல்வதை பழக்கமாக்கிக் கொண்டு, கிறிஸ்தவத்தைப் பற்றி தங்களுடைய கற்பனைக்கு எட்டிய எல்லாவித தீய, இழிவான அபிப்பிராயத்தையும் அவர்களிடம் சொன்னார்கள்” என்று முழு பைபிளுக்கு மேத்யூ ஹென்றி எழுதிய கமெண்ட்டரி என்ற ஆங்கில நூல் விளக்குகிறது.
b ரஷ்ய செய்தித்தாளில் அவதூறான அந்தக் கட்டுரை (15-வது பாராவில் குறிப்பிடப்பட்டுள்ளது) பிரசுரிக்கப்பட்ட பிறகு, அதில் சொல்லப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்யும்படி ரஷ்ய கூட்டாட்சியின் தகவல் சம்பந்தப்பட்ட சச்சரவுகளுக்கான மாகாண சட்டமன்றக் குழுவிடம் யெகோவாவின் சாட்சிகள் அப்பீல் செய்தனர். அவதூறான அந்தக் கட்டுரையை அச்சிட்டதற்காக சமீபத்தில் அந்தச் செய்தித்தாள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்தது.—விழித்தெழு!, நவம்பர் 22, 1998, பக்கங்கள் 26-7-ஐக் காண்க.
c பக்கங்கள் 19-22-ல் உள்ள “சட்டத்தின் பாதுகாப்புச் சுவருக்குள் நற்செய்தி” என்ற கட்டுரையைக் காண்க.
நினைவிருக்கிறதா?
◻ யெகோவாவின் சாட்சிகள் ஏன் ‘பகைக்கப்படுகிறார்கள்’?
◻ நம்முடைய மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்?
◻ எதிரிகளுக்கு பதிலளிக்கையில், இயேசு வைத்த சமநிலையான முன்மாதிரி என்ன?
◻ நாம் கண்டனம் செய்யப்படுகையில், ‘மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு’ என்ற நியமத்தை எவ்வாறு பொருத்தலாம்?
[பக்கம் 16-ன் பெட்டி]
பொய்த் தகவல்களை சரிசெய்தல்
“பொலிவியாவிலுள்ள யாக்கிபாவில், விசுவாச துரோகிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு படக்காட்சியை தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்புவதற்கு உள்ளூர் சுவிசேஷக குழு ஒன்று ஏற்பாடு செய்தது. அந்நிகழ்ச்சியின் மோசமான விளைவுகளைக் கருத்தில்கொண்டு, மூப்பர்கள் இரண்டு தொலைக்காட்சி நிலையங்களை சந்திக்க முடிவுசெய்து, யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னாலுள்ள அமைப்பு மற்றும் பைபிள்—உண்மையும் தீர்க்கதரிசனமும் அடங்கிய புத்தகம் என்ற வீடியோக்களை பொதுமக்களுக்கு காண்பிக்க ஏற்பாடு செய்தனர். சொஸைட்டியின் வீடியோக்களைப் பார்த்தப்பிறகு, விசுவாசதுரோகிகளுடைய நிகழ்ச்சியில் தவறான செய்தி அறிவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஒரு வானொலி நிலையத்தின் உரிமையாளர் கோபமடைந்தார்; எனவே வரவிருந்த மாவட்ட மாநாட்டைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக அறிவிப்பு செய்ய அனுமதி கொடுத்தார். ஆஜரானோரின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாய் இருந்தது, சாட்சிகள் நல்மனமுள்ள ஆட்களை ஊழியத்தில் சந்திக்கையில் அநேகர் நல்ல கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.”—1997 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகம், (ஆங்கிலம்) பக்கங்கள் 61-2.
[பக்கம் 17-ன் படம்]
இயேசு ஒரு சந்தர்ப்பத்தில், குறைகாண்பவர்களுடைய பொய் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக தவறென மறுத்துரைத்தார்