வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
நவம்பர் 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோவான் 20-21
“இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?”
யோவா 21:15, 17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்
சீமோன் பேதுருவிடம் இயேசு: இயேசுவைத் தெரியாதென்று பேதுரு மூன்று தடவை சொன்னார்; அதற்குச் சில நாட்கள் கழித்துதான் இந்தச் சம்பவம் நடந்தது. பேதுரு தன்மேல் உண்மையிலேயே அன்பு வைத்திருக்கிறாரா என்று இயேசு மூன்று தடவை கேட்டார்; அவர் அதைத் திரும்பத் திரும்பக் கேட்டதால், ‘பேதுரு துக்கப்பட்டார்.’ (யோவா 21:17) யோவானின் பதிவில் (யோவா 21:15-17) இரண்டு கிரேக்க வினைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; அதில் ஒன்று, அகாப்பேயோ (அன்பு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது), இன்னொன்று, ஃபைலேயோ (பாசம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). ‘என்மேல் உனக்கு அன்பு இருக்கிறதா?’ என்று இரண்டு தடவை இயேசு கேட்டார். அந்த இரண்டு தடவையும், இயேசுமேல் “பாசம்” இருப்பதாக பேதுரு உறுதியாகச் சொன்னார். கடைசியாக இயேசு அவரிடம், “என்மேல் உனக்குப் பாசம் இருக்கிறதா?” என்று கேட்டார். பாசம் இருப்பதாக இந்தத் தடவையும் பேதுரு உறுதியாகச் சொன்னார். அவர் தன்னுடைய பாசத்தை உறுதிசெய்த மூன்று தடவையுமே அவரிடம் இயேசு ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொன்னார்; அதாவது, உண்மையிலேயே தன்மேல் அன்பும் பாசமும் இருந்தால் ஆன்மீக அர்த்தத்தில் தன்னுடைய ‘ஆட்டுக்குட்டிகளாகிய’ சீஷர்களுக்கு ‘உணவு கொடுக்கவும்’ அவர்களை ‘மேய்க்கவும்’ வேண்டுமென்று சொன்னார். (யோவா 21:16, 17; 1பே 5:1-3) தன்னுடைய அன்பை உறுதிசெய்ய மூன்று தடவை பேதுருவுக்கு இயேசு வாய்ப்புக் கொடுத்தார்; அதன் பிறகு, தன் ஆடுகளைக் கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். இதன் மூலம், அவர் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டினார்; தன்னைத் தெரியாதென்று மூன்று தடவை சொன்ன பேதுருவைத் தான் மன்னித்துவிட்டதைக் காட்டினார்.
இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?: கிரேக்க இலக்கணத்தின்படி, “இவற்றைவிட” என்பதைப் பல விதங்களில் புரிந்துகொள்ளலாம். பேதுருவிடம் இயேசு, “மற்ற சீஷர்களைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?” என்றோ, “என்மேல் இந்த சீஷர்கள் வைத்திருக்கிற அன்பைவிட அதிக அன்பு உனக்கு இருக்கிறதா?” என்றோ கேட்டிருக்கலாம் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால், அந்தச் சீஷர்கள் பிடித்த மீன்களையோ மீன்பிடி தொழிலோடு சம்பந்தப்பட்ட விஷயங்களையோ மனதில் வைத்துத்தான் “இவற்றைவிட” என்று இயேசு சொன்னதாகத் தெரிகிறது. வேறு வார்த்தைகளில், ‘பணம் பொருளையும் தொழிலையும்விட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா? அப்படி இருக்கிறதென்றால், என் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவு கொடு’ என்று இயேசு சொன்னதாகத் தெரிகிறது. அதுவும், பேதுருவின் கடந்தகால வாழ்க்கையை வைத்துப் பார்க்கும்போது இந்த அர்த்தம்தான் சரியாக இருக்குமென்று தெரிகிறது. ஏனென்றால், இயேசு முதன்முதலில் அழைத்த சீஷர்களில் ஒருவராக பேதுரு இருந்தபோதிலும் (யோவா 1:35-42), அவர் உடனடியாக இயேசுவை முழுநேரமாகப் பின்பற்றவில்லை. அதற்குப் பதிலாக, மீன்பிடிக்கும் தொழிலுக்கே மறுபடியும் போய்விட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெரிய தொழிலை விட்டுவிட்டு ‘மனுஷர்களைப் பிடிப்பதற்கு’ வரும்படி அவரை இயேசு கூப்பிட்டார். (மத் 4:18-20; லூ 5:1-11) இயேசு இறந்து சில நாட்களுக்குப் பிறகுகூட, மீன்பிடிக்கப் போவதாக பேதுரு மற்ற அப்போஸ்தலர்களிடம் சொன்னார்; அவர்களும் அவரோடு சேர்ந்துகொண்டார்கள். (யோவா 21:2, 3) அதனால், பேதுரு ஒரு முக்கியமான முடிவுக்கு வர வேண்டியிருந்ததை இயேசு உணர்த்தியதாகத் தெரிகிறது; அதாவது, தன்னுடைய வாழ்க்கையில் மீன் பிடிக்கும் தொழிலுக்கு முதலிடம் தருவாரா அல்லது இயேசுவின் சீஷர்களுக்கு ஆன்மீக உணவு கொடுக்கும் வேலைக்கு முதலிடம் தருவாரா என்று பேதுரு முடிவு செய்ய வேண்டியிருந்தது.—யோவா 21:4-8.
மூன்றாவது தடவையாக: பேதுரு தன் எஜமானாகிய இயேசுவைத் தெரியாதென்று மூன்று தடவை சொல்லியிருந்தார். அதனால், தன் எஜமான்மேல் அன்பு வைத்திருந்ததை மூன்று தடவை உறுதிசெய்ய இயேசு அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். பேதுரு அதை உறுதிசெய்தபோது, மற்ற எல்லா விஷயங்களையும்விட கடவுளுடைய சேவைக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் அந்த அன்பையும் பாசத்தையும் காட்டும்படி இயேசு அவரிடம் சொன்னார். பொறுப்புள்ள மற்ற சகோதரர்களோடு சேர்ந்து அவர் கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்களுக்கு உணவு கொடுக்கவும், அவர்களைப் பலப்படுத்தவும், மேய்க்கவும் வேண்டியிருந்தது. அந்த சீஷர்கள் பரலோக நம்பிக்கை பெற்றவர்களாக இருந்தார்கள்; ஆனால், அவர்களுக்குக்கூட ஆன்மீக உணவு தேவைப்பட்டது.—லூ 22:32.
w12-E 8/1 18-20
பைபிள் காலங்களில் வாழ்க்கை—மீன்பிடிப்பவர்
“கலிலேயா கடலோரமாக அவர் [இயேசு] நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும் அவருடைய சகோதரன் அந்திரேயாவையும் பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள். இயேசு அவர்களிடம், ‘என் பின்னால் வாருங்கள், உங்களை மனுஷர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்’ என்று சொன்னார்.”—மத்தேயு 4:18, 19.
மீன்களையும் மீன்பிடிப்பதையும் மீனவர்களையும் பற்றி சுவிசேஷப் பதிவுகளில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கின்றன. மீன்பிடிப்பதைப் பற்றி இயேசு நிறைய உதாரணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! ஏனென்றால், இயேசு பெரும்பாலான சமயங்களில் கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் அல்லது அதன் கரையில் கற்பித்தார். (மத்தேயு 4:13; 13:1, 2; மாற்கு 3:7, 8) இந்த அழகான நன்நீர் ஏரி ஏறக்குறைய 20.92 கி.மீ. (13 மைல்) நீளத்திலும் 11.27 கி.மீ. (7 மைல்) அகலத்திலும் இருந்தது. இயேசுவின் அப்போஸ்தலர்களில் குறைந்தது ஏழு பேர், அதாவது பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, தோமா, நாத்தான்வேல் ஆகியோர், மீனவர்களாக இருந்திருக்கலாம்.—யோவான் 21:2, 3.
இயேசுவின் காலத்தில் ஒரு மீனவருடைய வாழ்க்கை எப்படி இருந்தது? மீனவர்களைப் பற்றியும் அவர்கள் செய்துவந்த தொழிலைப் பற்றியும் நீங்கள் ஏன் படித்துப் பார்க்கக் கூடாது? அப்படிச் செய்தால், அப்போஸ்தலர்கள்மீது உங்களுக்கு இருக்கும் மதிப்பு அதிகமாகும். அதோடு, இயேசு செய்த விஷயங்களையும், அவர் சொன்ன உதாரணங்களையும் நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். முதலில், கலிலேயா கடலில் மீன்பிடி தொழில் செய்வது எப்படி இருந்தது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
“கடலில் பயங்கர புயல்காற்று வீசியது”
பிளவு பள்ளத்தாக்கு ஒன்றின் இடையில் இந்த கலிலேயா கடல் அமைந்திருந்தது. அது கடல் மட்டத்திலிருந்து சுமார் 690 அடி (210 மீ.) கீழே இருந்தது. அதன் கரையோரத்தில் பாறைகள் நிறைந்த மலைச்சரிவுகள் இருந்தன. அதன் வடக்குப் பகுதியில் பிரமாண்டமான எர்மோன் மலை வானத்தைத் தொட்டுக்கொண்டு இருந்தது. குளிர்காலத்தில், கடும் குளிர்காற்று சிலசமயம் கடலில் சின்னச் சின்ன அலைகளை எழுப்பியது. கோடை காலத்தில், சூடான காற்று அதன் மேற்பரப்பில் வீசியது. திடீர் திடீரென்று, சுற்றியிருக்கும் மலைகளிலிருந்து பயங்கரமான புயல்காற்று வீசி, படகில் போய்க்கொண்டிருக்கும் படகோட்டிகளின் மீது தன்னுடைய கைவரிசையைக் காட்டியது. இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் இதுபோன்ற ஒரு புயல்காற்றில்தான் சிக்கிக்கொண்டார்கள்.—மத்தேயு 8:23-27.
மீனவர்கள் மரப் படகுகளைப் பயன்படுத்தினார்கள். அவை ஏறக்குறைய 27 அடி (8.27 மீ.) நீளத்தில் இருந்தன. அவற்றின் மையப்பகுதி சுமார் 7.5 அடி (2.3 மீ.) அகலத்தில் இருந்தது. பெரும்பாலான படகுகளுக்குப் பாய்மரம் இருந்தது. அந்தப் படகுகளின் பின்புறத் தளத்திற்குக் கீழே அறை போன்ற ஒரு அமைப்பு இருந்தது. (மாற்கு 4:35-41) அந்தப் படகுகள் மெதுவாகத்தான் சென்றன, ஆனாலும் மிக உறுதியாக இருந்தன. ஏனென்றால், கப்பற்பாயையும் பாய்மரத்தையும் தள்ளும் காற்றை ஒரு பக்கத்திலும், கனமான வலையை இன்னொரு பக்கத்திலும் அவை தாங்கிக்கொண்டு சென்றன.
இரண்டு பக்கத்திலும் பொருத்தப்பட்டிருந்த துடுப்புகளைப் பயன்படுத்தித்தான் மீனவர்கள் படகை ஓட்டினார்கள். ஒரு படகில் ஆறு அல்லது அதற்கும் அதிகமான மீனவர்கள் இருந்திருக்கலாம். (மாற்கு 1:20) அவர்கள் அநேகமாக, நாரிழை கப்பற்பாய் (1), கயிறு (2), துடுப்புகள் (3), கல்லினால் செய்யப்பட்ட நங்கூரம் (4), குளிரைத் தாங்குவதற்குத் துணிமணிகள் (5), உணவுப் பொருள்கள் (மாற்கு 8:14) (6), கூடைகள் (7), தலையணை (மாற்கு 4:38) (8), வலை (9) போன்ற கருவிகளையும் பொருள்களையும் படகில் எடுத்துக்கொண்டு போயிருக்கலாம். ஒருவேளை, கூடுதலான மிதவைகள் (10), வலையை மூழ்கச் செய்யும் கனமான பொருள்கள் (11), பழுதுபார்க்கும் கருவிகள் (12), தீப்பந்தங்கள் (13) ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டு போயிருக்கலாம்.
“ஏராளமான மீன்கள் சிக்கின”
முதல் நூற்றாண்டைப் போலவே இன்றும், ஊற்றுகளிலிருந்து வரும் தண்ணீரும் ஆறுகளிலிருந்து வரும் தண்ணீரும் கலிலேயா கடலில் சேரும் இடங்களில்தான் அதிகமான மீன்கள் கிடைக்கின்றன. இந்த இடங்களில் தாவரப் பொருள்கள் கடலுக்குள் நுழைந்து மீன்களைக் கவருகின்றன. இயேசுவின் காலத்தில் இருந்த மீனவர்கள் பெரும்பாலும் இரவில்தான் மீன்பிடிக்கப் போனார்கள். அவர்கள் தீப்பந்தங்களைப் பயன்படுத்தினார்கள். ஒருசமயம், இயேசுவின் சீஷர்களில் சிலர் இரவு முழுவதும் மீன்பிடித்தும் அவர்களுக்கு எந்த மீன்களும் சிக்கவில்லை. ஆனால், அடுத்த நாள் இயேசு சொன்ன இடத்தில் வலைகளைப் போட்டபோது அவர்களுடைய படகே மூழ்கும் அளவுக்கு ஏராளமான மீன்கள் கிடைத்தன.—லூக்கா 5:6, 7.
சிலசமயங்களில் மீனவர்கள் ஆழமான இடங்களுக்குப் போய் மீன்களைப் பிடித்தார்கள். இரண்டிரண்டு படகுகளைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டார்கள். அந்த மீனவர்கள் அந்த இரண்டு படகுகளுக்கும் இடையில் வலையைப் போட்டார்கள். பிறகு, படகை ஓட்டுபவர்கள் அந்த இரண்டு படகையும் எதிரெதிர் திசையில் வட்டமான வடிவில் ஓட்டினார்கள். அந்த வலை தண்ணீருக்குள் மூழ்க மூழ்க மீன்கள் அதில் சிக்கின. அந்த இரண்டு படகுகளும் ஒரு இடத்தில் வந்து சேர்ந்த பிறகு, வலையின் ஓரங்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை மீனவர்கள் படகுக்குள் இழுத்தார்கள். பிறகு, பிடிபட்ட மீன்களைப் படகுக்குள் போட்டார்கள். அந்த வலையின் நீளம் ஒருவேளை 100 அடிக்கும் (30 மீ.) அதிகமாக இருந்திருக்கலாம். அது சுமார் 8 அடி (2.44 மீ.) ஆழத்துக்கு இறங்கியிருக்கலாம். கூட்டமாக இருந்த எல்லா மீன்களையும் பிடிப்பதற்கு அது போதுமானதாக இருந்தது. தண்ணீரில் மிதப்பதற்காக வலையின் மேல்பகுதியில் மிதவைகள் கட்டப்பட்டிருந்தன. தண்ணீருக்குள் மூழ்குவதற்காக அதன் கீழ்ப்பகுதியில் கனமான பொருள்கள் கட்டப்பட்டிருந்தன. மீன்களைப் பிடித்த பிறகு மீனவர்கள் மறுபடியும் வலையைத் தண்ணீருக்குள் போட்டு மீன்களைப் பிடித்தார்கள். ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை இப்படிச் செய்தார்கள்.
ஆழம் அதிகமாக இல்லாத பகுதிகளில், மீன்பிடிப்பவர்கள் வேறொரு முறையைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்தார்கள். அவர்கள் ஒரு படகில் இழுவலையின் ஒரு முனையை எடுத்துக்கொண்டு கடலுக்குள் போவார்கள். படகை வட்ட வடிவில் ஓட்டி கரைக்குத் திரும்புவார்கள். அவர்கள் அப்படித் திரும்பும்போது அந்த வலையில் மீன்கள் சிக்கியிருக்கும். கரையில் நின்றுகொண்டிருந்த மீனவர்கள் அந்த வலையைக் கரைக்கு முழுவதுமாக இழுப்பார்கள். பிறகு, பிடிபட்ட மீன்களைக் கடற்கரையில் கொட்டி அவற்றைப் பிரித்தெடுப்பார்கள். நல்ல மீன்களைப் பாத்திரங்களில் போடுவார்கள். சில மீன்களை அப்போதே விற்றுவிடுவார்கள். பெரும்பாலான மீன்களை உப்பு தடவி காயவைத்து அல்லது பதப்படுத்தி மண் ஜாடிகளில் அடைத்து வைப்பார்கள். அவற்றை எருசலேமுக்கோ வேறு இடங்களுக்கோ ஏற்றுமதி செய்வார்கள். செதில்கள் அல்லது துடுப்புகள் இல்லாத மீன்கள், அதாவது விலாங்கு போன்ற மீன்கள், அசுத்தமான மீன்களாகக் கருதப்பட்டதால், அவற்றைத் தூக்கிப்போட்டார்கள். (லேவியராகமம் 11:9-12) ‘பரலோக அரசாங்கத்தை’ இழுவலைக்கு ஒப்பிட்டுப் பேசியபோது இயேசு இந்த மீன்பிடிக்கும் முறையைப் பற்றித்தான் குறிப்பிட்டார். நல்ல மீன்களை நல்ல மக்களுக்கும், ஆகாத மீன்களைக் கெட்ட மக்களுக்கும் ஒப்பிட்டுப் பேசினார்.—மத்தேயு 13:47-50.
தனியாக மீன்பிடிக்கும் ஒருவர் அநேகமாக ஒரு தூண்டிலைப் பயன்படுத்தினார். அதிலிருந்த வெண்கல கொக்கிகளில் இரையை வைத்து அவர் மீன்பிடித்தார். அல்லது, அவர் ஒரு சிறிய எறிவலையைப் பயன்படுத்தினார். அவர் தண்ணீருக்குள் கொஞ்ச தூரம் நடந்து போய், வலையைச் சரியாகப் பிடித்துக்கொண்டு தண்ணீரின்மேல் வீசினார். அரைக்கோள வடிவில் இருந்த அந்த வலை நன்றாக விரிந்தபடி தண்ணீரின் மேல் விழுந்தது. பிறகு அது மூழ்கியது. வலையின் நடுவில் இருந்த கயிற்றைப் பயன்படுத்தி மீனவர் வலையை இழுத்தார். அதில் சில மீன்கள் சிக்கின.
வலைகளின் விலை அதிகமாக இருந்தது. அதோடு, அவற்றைக் கஷ்டப்பட்டுப் பராமரிக்க வேண்டியிருந்தது. அதனால், மீனவர்கள் அவற்றைக் கவனமாகப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு தடவையும் மீன்பிடித்துவிட்டு வந்த பிறகு மீனவர்கள் அவற்றைப் பழுதுபார்க்கவும், அலசவும், காயவைக்கவும் வேண்டியிருந்தது. அதற்கே அவர்களுடைய பெரும்பாலான நேரம் செலவானது. (லூக்கா 5:2) தன்னைப் பின்பற்றும்படி இயேசு அழைத்தபோது, அப்போஸ்தலர்களான யாக்கோபும் அவருடைய சகோதரர் யோவானும் படகில் உட்கார்ந்து தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள்.—மாற்கு 1:19.
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மீனவர்கள் பல வகையான மீன்களைப் பிடித்தார்கள். அவற்றில் டிலாப்பியாதான் அதிகமாக இருந்தது. கலிலேயாவில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் இந்த வகையான மீனைத்தான் அடிக்கடி சாப்பிட்டார்கள். இயேசுவும் அநேகமாக இந்த ருசியான மீனைச் சாப்பிட்டிருப்பார். ஆயிரக்கணக்கானோருக்கு அற்புதமாக உணவு கொடுத்தபோது இயேசு பயன்படுத்திய இரண்டு மீன்கள், உப்பு தடவி காயவைக்கப்பட்ட டிலாப்பியாவாக இருந்திருக்கலாம். (மத்தேயு 14:16, 17; லூக்கா 24:41-43) இந்த வகையான மீன் பெரும்பாலும் தன்னுடைய குஞ்சுகளை வாயில் வைத்துக்கொண்டு நீந்தும். மற்ற சமயங்களில், ஒருவேளை கூழாங்கல்லை அல்லது கடலுக்கு அடியில் இருக்கும் பளபளப்பான காசை வாயில் வைத்துக்கொண்டு நீந்தும்.—மத்தேயு 17:27.
முதல் நூற்றாண்டில் திறமையான மீனவர்கள் பொறுமைசாலிகளாகவும், கடின உழைப்பாளிகளாகவும், எப்படிப்பட்ட கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ளும் நபர்களாகவும் இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. இயேசுவின் அழைப்பை ஏற்று, சீஷராக்கும் வேலையில் அவரோடு சேர்ந்துகொண்டவர்களும்கூட இதுபோன்ற குணங்களைக் காட்ட வேண்டியிருந்தது. அப்போதுதான் ‘மனுஷர்களைப் பிடிப்பதில்’ அவர்களால் திறமைசாலிகளாக ஆக முடிந்தது.—மத்தேயு 28:19, 20.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யோவா 20:17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
என்னைப் பிடித்துக்கொண்டிருக்காதே: இங்கே ஹாப்டோமாய் என்ற கிரேக்க வினைச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது, “தொடுவது” என்ற அர்த்தத்தையும் கொடுக்கலாம், “பற்றிக்கொள்வது; இறுக்கமாகப் பிடித்துக்கொள்வது” என்ற அர்த்தத்தையும் கொடுக்கலாம். “என்னைத் தொடாதே” என்று இயேசு சொன்னதாகச் சில மொழிபெயர்ப்புகள் குறிப்பிடுகின்றன. ஆனால், மகதலேனா மரியாள் தன்னைத் தொடவே கூடாது என்று இயேசு சொன்னதாகத் தெரியவில்லை; ஏனென்றால், அவர் உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு அவரைப் பார்த்த மற்ற பெண்கள் ‘அவருடைய கால்களைக் கட்டிக்கொண்டபோது’ அவர் அதைத் தடுக்கவில்லை. (மத் 28:9) இயேசு பரலோகத்துக்குப் போய்விடுவாரோ என்று மகதலேனா மரியாள் பயப்பட்டதுபோல் தெரிகிறது. தன் எஜமானின் கூடவே இருக்க வேண்டுமென்ற அளவுகடந்த ஆசையால்தான், அவரைப் போக விடாமல் பிடித்துக்கொண்டிருந்தாள். ஆனால் இயேசு, தான் உடனடியாகப் பரலோகத்துக்குப் போகப்போவதில்லை என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக, தன்னைப் பிடித்துக்கொண்டிருக்காமல் தன் சீஷர்களிடம் போய் தான் உயிரோடு எழுப்பப்பட்டதைத் தெரிவிக்கும்படி அவளிடம் சொன்னார்.
யோவா 20:28-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
என் எஜமானே, என் கடவுளே!: தோமா இந்த வார்த்தைகளை இயேசுவைப் பார்த்து வியப்போடு சொல்லியிருந்தாலும், இயேசுவின் தகப்பனை மனதில் வைத்துத்தான், அதாவது கடவுளை மனதில் வைத்துத்தான், சொன்னார் என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, இயேசுவைத்தான் தோமா இப்படி அழைத்தார் என்று மற்ற அறிஞர்கள் சொல்கிறார்கள். இது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், பைபிளிலுள்ள மற்ற வசனங்களை வைத்துத்தான் தோமா சொன்ன வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு முன்பு இயேசு, “நான் என் தகப்பனிடமும் உங்கள் தகப்பனிடமும் என் கடவுளிடமும் உங்கள் கடவுளிடமும் போகப்போகிறேன்” என்று தன் சீஷர்களிடம் சொல்லச்சொன்னதாகப் பதிவு காட்டுகிறது; அதனால், இயேசுவைச் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று தோமா நினைத்திருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல, இயேசு தன் ‘தகப்பனிடம்’ ஜெபம் செய்ததையும், அந்த ஜெபத்தில் தன் தகப்பனை ‘ஒரே உண்மையான கடவுள்’ என்று சொன்னதையும் தோமா கேட்டிருந்தார். (யோவா 17:1-3) அப்படியென்றால், பின்வரும் காரணங்களால் அவர் இயேசுவை “என் கடவுளே” என்று சொல்லியிருக்கலாம்: அவர் இயேசுவைச் சர்வவல்லமையுள்ள கடவுளாக நினைக்காவிட்டாலும், “தெய்வீகத்தன்மை உள்ளவராக” நினைத்தார். (யோவா 1:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) அல்லது, எபிரெய வேதாகமத்தில் உள்ள பதிவுகளின்படி யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய செய்தியைச் சொன்ன தேவதூதர்களை எந்த விதத்தில் அழைத்தார்களோ அந்த விதத்தில் தோமா இயேசுவை அழைத்திருக்கலாம். சில நபர்கள் அல்லது பைபிள் எழுத்தாளர்கள் யெகோவாவிடம் பேசுவதாக நினைத்துத் தேவதூதர்களிடம் பேசியதைப் பற்றிய பதிவுகளை தோமா படித்திருப்பார். (ஒப்பிட்டுப் பாருங்கள்: ஆதி 16:7-11, 13; 18:1-5, 22-33; 32:24-30; நியா 6:11-15; 13:20-22.) அதே அர்த்தத்தில் அவர் இயேசுவை “என் கடவுளே” என்று அழைத்திருக்கலாம்; இப்படி, இயேசுவை உண்மைக் கடவுளுடைய பிரதிநிதியாகவும், கடவுளின் சார்பாகப் பேசுகிறவராகவும் ஏற்றுக்கொண்டதை தோமா காட்டியிருக்கலாம்.
கிரேக்கில் ‘எஜமான்’ என்ற வார்த்தைக்கும் ‘கடவுள்’ என்ற வார்த்தைக்கும் முன்பு நிச்சயச் சுட்டிடைச்சொல் கொடுக்கப்பட்டிருப்பதால், அவை சர்வவல்லமையுள்ள கடவுளைக் குறிப்பதாகச் சிலர் வாதாடுகிறார்கள். ஆனால், இந்த வசனத்தில் வெறுமனே கிரேக்க இலக்கண விதியின்படி சுட்டிடைச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கிரேக்கில், நிச்சயச் சுட்டிடைச்சொல்லைக் கொண்ட முதல் வேற்றுமை (nominative noun) எட்டாம் வேற்றுமையாக (vocative) பயன்படுத்தப்பட்டிருப்பதற்குச் சில உதாரணங்களை இந்த வசனங்களின் நேரடி மொழிபெயர்ப்பு காட்டுகிறது: லூ 12:32 (நே.மொ., ‘அந்த சிறுமந்தை’); கொலோ 3:18–4:1 (நே.மொ., ‘அந்த மனைவிகள்,’ ‘அந்தக் கணவர்கள்,’ ‘அந்த அப்பாக்கள்,’ ‘அந்த அடிமைகள்,’ ‘அந்த எஜமான்கள்’); 1பே 3:7 (நே.மொ., ‘அந்தக் கணவர்கள்.’) அதனால், தோமா எந்த அர்த்தத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னார் என்பதைக் கிரேக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சுட்டிடைச்சொற்களை வைத்து முடிவு செய்ய முடியாது.
நவம்பர் 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 1-3
“கிறிஸ்தவ சபையின்மீது கடவுளுடைய சக்தி பொழியப்பட்டது”
இருதயத்தைச் சந்தோஷப்படுத்தும் நன்கொடைகள்
பொ.ச. 33-ஆம் ஆண்டில் கிறிஸ்தவ சபையின் பிறப்பின் முதல் நாளன்று, “அந்நியோனியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும்” மனமாற்றமடைந்து புதிதாக முழுக்காட்டப்பட்ட 3,000 பேர் தரித்திருந்தார்கள். என்ன நல்ல காரணத்திற்காக? அப்போஸ்தலர்களுடைய போதகத்தில் தொடர்ந்து தாங்கள் கவனம் செலுத்தி அந்தப் புதிதாகப் பிறந்த விசுவாசத்தை ஸ்திரப்படுத்துவதற்காக.—அப்போஸ்தலர் 2:41, 42.
யூதர்களும் யூத மதத்தைத் தழுவியவர்களும் பெந்தெகொஸ்தே பண்டிகை நாட்களுக்கு மட்டுமே எருசலேமில் தங்குவதற்குத் திட்டமிட்டு வந்திருந்தார்கள். ஆனால் அவர்களில் கிறிஸ்தவர்களாக ஆனவர்கள் இன்னும் சிறிதுகாலம் தங்கி தங்களுடைய புது விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்குக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். இது உணவிலும் வீட்டு வசதி பிரச்னையிலும் ஒரு நெருக்கடியை உண்டாக்கிற்று. வந்தவர்களில் சிலரிடம் போதுமான நிதி இல்லாமலிருந்தது. அதே சமயத்தில் மற்றவர்களிடம் அதிகமிருந்தது. ஆகவே தற்காலிகமாக, பொருட்கள் மொத்தமாகக் கூட்டப்பட்டு தேவையுடையவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.—அப்போஸ்தலர் 2:43-47.
சொத்துக்களை விற்று பொருட்களைப் பகிர்ந்து கொள்வது முற்றிலும் மனமுவந்து செய்யப்பட்டதாகவேயிருந்தது. ஒருவரும் விற்கவோ அல்லது கொடுக்கவோ கடமைப்பட்டவர்களாயில்லை; வறுமையை வளர்க்கும் ஒன்றாகவும் அது இல்லை. கூறப்பட்ட கருத்து செல்வந்த அங்கத்தினர்கள் தங்கள் எல்லா சொத்தையும் விற்று இவ்விதமாக எளியவர்களானார்கள் என்பதல்ல. மாறாக, அக்காலத்தின் சூழ்நிலைமைக்குள்ளிருந்த சக விசுவாசிகளின் மேலுள்ள கருணையின் பேரில் அவர்கள் தங்கள் சொத்தை விற்று அதன் விலை எல்லாவற்றையும் ராஜ்ய அக்கறைகள் முன்னேற்றப்படுவதற்குத் தேவைப்பட்டதைப் பூர்த்தி செய்ய அளித்தார்கள்.—2 கொரிந்தியர் 8:12-15-ஐ ஒப்பிடுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E 61 ¶1
இயேசு கிறிஸ்து
‘வாழ்வின் அதிபதி.’ தன் தகப்பனுடைய அளவற்ற கருணையின் வெளிக்காட்டாக, இயேசு கிறஸ்து தன்னுடைய பரிபூரண மனித உயிரைப் பலியாகக் கொடுத்தார். இதன் மூலம், பரலோகத்தில் கிறிஸ்துவோடு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்திருக்கிறது; அதோடு, அவருடைய ஆட்சியின்கீழ் மக்கள் பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. (மத் 6:10; யோவா 3:16; எபே 1:7; எபி 2:5; மீட்புவிலை என்ற தலைப்பைப் பாருங்கள்.) இப்படி, எல்லா மனிதர்களுக்கும் இயேசு ‘வாழ்வின் அதிபதியாக [‘இளவரசராக,’ ஆங்கில கிங் ஜேம்ஸ் வர்ஷன்; ஆங்கில த ஜெருசலேம் பைபிள்]’ ஆனார். (அப் 3:15) இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தைக்கு, “முதன்மையான தலைவர்” என்று அர்த்தம்; இந்த வார்த்தையோடு சம்பந்தப்பட்ட கிரேக்க வார்த்தை, மோசேயை (அப் 7:27, 35) இஸ்ரவேலின் ‘தலைவர்’ என்று குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
‘மன்னிக்க தயாராயிருக்கிற’ கடவுள்
14 யெகோவாவின் மன்னிப்பைப் பற்றி அப்போஸ்தலர் 3:20 (NW) மேலுமாக விவரிக்கிறது. “உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும் பொருட்டு மனந்திரும்பி அவரிடம் வாருங்கள்” என அது சொல்கிறது. “துடைத்தழிக்கப்படும்” என்பதற்கான கிரேக்க வார்த்தை “துடை, . . . ரத்துசெய் அல்லது அழி” என்ற அர்த்தத்தைத் தரலாம். எழுதப்பட்டதை துடைத்து அழிக்கும் கருத்தே இங்கு உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என கல்விமான்கள் சிலர் கூறுகின்றனர். இது எப்படி சாத்தியம்? பூர்வ காலங்களில் கார்பன், பசை, தண்ணீர் ஆகியவற்றை கலந்தே மை தயாரிக்கப்பட்டது. இந்த மையால் எழுதியவற்றை ஈரமான ஒரு துணியை வைத்து உடனடியாக அழித்துவிட முடிந்தது. இது யெகோவாவின் இரக்கத்தை அழகாக வர்ணிக்கிறது. அவர் நமது பாவங்களை மன்னிக்கும்போது, ஒரு துணியால் அவற்றை துடைத்து அழிப்பதைப் போலவே இருக்கிறது.
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
it-1-E 129 ¶2-3
அப்போஸ்தலர்
யூதாஸ் இஸ்காரியோத்துக்குப் பதிலாகப் புதிய அப்போஸ்தலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது யார்?
இயேசுவுக்குத் துரோகம் செய்துவிட்டு யூதாஸ் இறந்துபோனான். அவன் வழிதவறிப் போய்விட்டதால் மிச்சம் 11 அப்போஸ்தலர்கள்தான் இருந்தார்கள். இயேசு உயிரோடு எழுப்பப்பட்டு 40 நாட்கள் கழித்துத்தான் பரலோகத்துக்குப் போனார். ஆனால், அந்தச் சமயத்தில் யூதாசுக்குப் பதிலாக அவர் எந்தப் புதிய அப்போஸ்தலரையும் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் பரலோகத்துக்குப் போய்ப் பத்து நாட்களுக்குப் பிறகு பெந்தெகொஸ்தே நாள் வந்தது. அந்த இடைப்பட்ட சமயத்தில்தான் யூதாசுக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்று முடிவு செய்யப்பட்டது. யூதாஸ் இறந்துவிட்டதால் அல்ல, அவன் பாவம் செய்ததால்தான் அவனுடைய இடத்தை இன்னொருவர் நிரப்ப வேண்டியிருந்தது. பேதுரு மேற்கோள் காட்டிய வசனங்களிலிருந்து இது தெரிகிறது. (அப் 1:15-22; சங் 69:25; 109:8; ஒப்பிடுங்கள்: வெளி 3:11.) ஆனால், உண்மையோடு இருந்த அப்போஸ்தலன் யாக்கோபு கொலை செய்யப்பட்டபோது, அவருக்குப் பதிலாக இன்னொருவரை அப்போஸ்தலராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று யாரும் நினைத்ததாகத் தெரியவில்லை.—அப் 12:2.
இயேசுவின் அப்போஸ்தலராகப் புதிதாய்த் தேர்ந்தெடுக்கப்படுகிறவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமென்று அப்போது முடிவு செய்யப்பட்டதை பேதுருவின் வார்த்தைகள் காட்டுகின்றன. அவர் இயேசுவுக்கு நன்கு பழக்கப்பட்டவராக இருக்க வேண்டியிருந்தது. இயேசுவின் செயல்களையும், அற்புதங்களையும், முக்கியமாக அவருடைய உயிர்த்தெழுதலையும் நேரில் பார்த்தவராக இருக்க வேண்டியிருந்தது. இதை வைத்துப் பார்க்கும்போது, காலப்போக்கில் அப்போஸ்தலர்களாக வேறு யாரும் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அவர்களில் ஒருவருக்குப் பதிலாக அதே தகுதிகளை உடைய இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கும்படி கடவுளே சொல்லியிருந்தால் தவிர அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஆனாலும், பெந்தெகொஸ்தேக்கு முன்பான அந்தச் சமயத்தில், சில சகோதரர்களுக்கு அந்தத் தகுதிகள் இருந்தன. துரோகியான யூதாசுக்குப் பதிலாக அப்போஸ்தலராக ஆகும் தகுதி அவர்களில் இரண்டு பேருக்கு இருந்ததாகக் கருதப்பட்டது. பிறகு, நீதிமொழிகள் 16:33-ன் அடிப்படையில் குலுக்கல் போடப்பட்டு, மத்தியா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், “11 அப்போஸ்தலர்களோடு அவரும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.” (அப் 1:23-26) கிரேக்க மொழி பேசிய சீஷர்களின் பிரச்சினையைத் தீர்த்துவைத்த ‘பன்னிரண்டு அப்போஸ்தலர்களில்’ அவரும் ஒருவராக இருந்தார். (அப் 6:1, 2) அதேபோல், இயேசு தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு ‘பன்னிரண்டு பேருக்கு’ தோன்றியதைப் பற்றி 1 கொரிந்தியர் 15:4-8-ல் பவுல் பதிவு செய்திருக்கிறார். அவர் மத்தியாவையும் சேர்த்துத்தான் சொன்னார் என்று தெரிகிறது. இப்படி, பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது 12 அப்போஸ்தலர்கள் 12 அஸ்திவாரங்களாக இருந்தார்கள். அதாவது, அன்று உருவான ஆன்மீக இஸ்ரவேலர்களைத் தாங்கும் அஸ்திவாரங்களாக இருந்தார்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“பல மொழிகள் பேசப்படும் பிராந்தியத்தில் ஒன்றுசேர்ந்து உழைத்தல்”
od-E 93 ¶37
நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கான முறைகள்
சில சமயங்களில், வேறு மொழி சபைகளில் இருக்கும் சகோதரர்களால் ரொம்ப தூரத்தில் இருக்கிற பகுதிகளில் அடிக்கடி ஊழியம் செய்ய முடியாது; அதனால், அங்கிருக்கும் சபைகளைச் சேர்ந்தவர்களே இவர்களுடைய மொழி பேசுகிறவர்களையும் போய் சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். வேறு மொழி பேசும் ஆட்களிடம் நல்ல செய்தியைச் சொல்ல சகோதரர்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் ஆர்வம் காட்டினால், எந்தச் சபை அவருடைய மொழியில் கூட்டங்களை நடத்துகிறதோ அந்தச் சபையைச் சேர்ந்தவர்களே அவரைத் தொடர்ந்து சந்திப்பது சிறந்தது. ஒவ்வொரு சபையின் சூழ்நிலையும் வேறுபடும் என்பதால், சம்பந்தப்பட்ட சபைகளின் ஊழியக் கண்காணிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக முடிக்க என்ன செய்யலாம் என்று கலந்துபேச வேண்டும். பிறகு, அந்தச் சபைகளுக்கு வசதியாக இருக்கும் ஒரு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை எல்லாரும் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கும். அதோடு, வேறு வேறு சபையைச் சேர்ந்தவர்கள் அதே வீடுகளுக்கு மறுபடியும் மறுபடியும் போய் அங்கிருக்கிறவர்களை எரிச்சல்படுத்தாமல் இருக்க உதவும்.—நீதி. 15:22.
நவம்பர் 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 4-5
“கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள்”
w08-E 9/1 15, பெட்டி
பேசப்பட்ட வார்த்தைகள் பரிசுத்த எழுத்துக்களாக ஆனது—எழுதுவதும் ஆரம்பக் கால கிறிஸ்தவர்களும்
அப்போஸ்தலர்கள் கல்வியறிவு இல்லாதவர்களா?
“பேதுருவும் யோவானும் கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்” என்பது தலைவர்களுக்கும் எருசலேமிலிருந்த பெரியோர்களுக்கும் தெரிந்திருந்ததால், ‘அந்த இரண்டு பேரும் பயமில்லாமல் பேசியதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.’ (அப் 4:13) அப்போஸ்தலர்கள் உண்மையிலேயே கல்வியறிவு இல்லாதவர்களா? இந்த விஷயத்தைப் பற்றி, தி நியூ இன்ட்டர்பிரெட்டர்ஸ் பைபிள் இப்படிச் சொல்கிறது: “இதில் குறிப்பிடப்பட்டிருக்கிற வார்த்தைகளை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது; அதாவது, பேதுருவும் [யோவானும்] பள்ளிக்கே போகவில்லை என்றோ, அவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றோ நாம் நினைத்துவிடக் கூடாது. இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள், நியாயந்தீர்த்த ஆட்சியாளர்கள் மற்றும் பெரியோர்களின் சமூக அந்தஸ்துக்கும் அப்போஸ்தலர்களின் சமூக அந்தஸ்துக்கும் இருந்த பெரிய வித்தியாசத்தை எடுத்துக்காட்டின.”
அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
4:13—பேதுருவும் யோவானும் படிப்பறிவில்லாதவர்களாய் இருந்தார்களா? இல்லவே இல்லை. அவர்கள், ‘படிப்பறியாதவர்கள் என்றும் பேதைமையுள்ளவர்கள் என்றும்’ அழைக்கப்பட்டதற்குக் காரணம், ரபீக்களின் பள்ளிகளுக்குச் சென்று மத சம்பந்தமான பயிற்சி பெறாததே.
it-1-E 128 ¶3
அப்போஸ்தலர்
கிறிஸ்தவ சபையில் அவர்களுடைய நடவடிக்கைகள். பெந்தெகொஸ்தே நாளன்று கடவுளுடைய சக்தி அப்போஸ்தலர்களுக்குக் கிடைத்தபோது, அவர்கள் ரொம்பவே பலப்பட்டார்கள். அப்போஸ்தலர்கள் எந்தப் பயமும் இல்லாமல் நல்ல செய்தியைப் பற்றியும் இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றியும் எப்படித் தைரியமாகப் பிரசங்கித்தார்கள் என்பதைப் பற்றி அப்போஸ்தலர் புத்தகத்தின் முதல் ஐந்து அதிகாரங்கள் சொல்கின்றன. அவர்கள் சிறையில் தள்ளப்பட்டபோதும், அடிக்கப்பட்டபோதும், தலைவர்களிடமிருந்து அவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் வந்தபோதும் அவர்கள் அப்படித் தைரியமாகப் பிரசங்கித்தார்கள். அந்தப் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, கடவுளுடைய சக்தியின் உதவியோடு அப்போஸ்தலர்கள் சபையைச் சுறுசுறுப்பாக வழிநடத்தியதால், கிறிஸ்தவ சபையில் அமோக வளர்ச்சி ஏற்பட்டது. (அப் 2:41; 4:4) முதலில், எருசலேமில் ஊழியம் செய்வதற்கு அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள்; பிறகு, சமாரியாவிலும், காலப்போக்கில் பூமியின் எல்லை வரையிலும் அவர்கள் ஊழியம் செய்தார்கள்.—அப் 5:42; 6:7; 8:5-17, 25; 1:8.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E 514 ¶4
மூலைக்கல்
கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்தான் “மூலைக்குத் தலைக்கல்லாக” (எபிரெயுவில், ரோஷ் பின்னா) ஆகும் என்று சங்கீதம் 118:22 சொல்கிறது. இந்தத் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டி, இயேசு தான்தான் அந்த ‘மூலைக்குத் தலைக்கல்’ (கிரேக்கில், கிஃபலே கொனையஸ்) என்று சொன்னார். (மத் 21:42; மாற் 12:10, 11; லூ 20:17) ஒரு கட்டிடத்தின் உச்சியில் வைக்கப்படுகிற தலைக்கல் எப்படி அந்தக் கட்டிடத்தின் மிக முக்கியமான கல்லாக இருக்கிறதோ, அப்படித்தான் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் சபைக்கு, அதாவது ஆன்மீக ஆலயத்துக்கு, இயேசு கிறிஸ்து மிக முக்கியமான தலைக்கல்லாக இருக்கிறார். சங்கீதம் 118:22-ல் இருக்கிற வார்த்தைகளை பேதுருவும்கூட கிறிஸ்தவுக்குப் பொருத்தினார். மனிதர்கள் ஒதுக்கித்தள்ளிய ‘கல்’ கிறிஸ்து என்பதையும், பிறகு அவர் “மூலைக்குத் தலைக்கல்லாக” ஆவதற்குக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்—அப் 4:8-12; 1பே 2:4-7-ஐயும் பாருங்கள்.
பொய் பேசிய பேதுருவும் அனனியாவும்—நமக்கு என்ன பாடம்?
அவர்களுக்கு உதவ அனனியாவும் சப்பீராளும் தங்களிடமிருந்த ஒரு நிலத்தை விற்கிறார்கள். பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொண்டுவந்து கொடுத்த அனனியா, ‘இதுதான் மொத்த தொகை’ என்று சொல்கிறார். ஆனால், அது சுத்தப் பொய்! ஏனென்றால், அதிலிருந்து கொஞ்சப் பணத்தை அவர் தனக்கென்று எடுத்து வைத்திருந்தார். இந்த விஷயத்தை பேதுருவுக்குக் கடவுள் தெரியப்படுத்துகிறார். அதனால், பேதுரு அனனியாவைப் பார்த்து, “மனிதரிடம் அல்ல, கடவுளிடமே நீ பொய் சொல்லியிருக்கிறாய்” என்கிறார். அந்த நிமிடமே அனனியா கீழே விழுந்து செத்துப்போகிறார்! கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் கழித்து, அவருடைய மனைவி வருகிறாள். தன் கணவனுக்கு நடந்த எதுவும் அவளுக்குத் தெரியாது; தன் கணவனைப் போலவே அவளும் பொய் சொல்கிறாள், பின்பு கீழே விழுந்து செத்துப்போகிறாள்!
நவம்பர் 26–டிசம்பர் 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 6-8
“புதிய கிறிஸ்தவ சபை சோதிக்கப்படுகிறது”
“கடவுளுக்கே நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்”
17 இந்தப் புதிய சபைக்கு உள்ளுக்குள்ளிருந்தே ஒரு மறைமுகமான ஆபத்து வந்தது. அது என்ன ஆபத்து? எருசலேமுக்கு வந்து ஞானஸ்நானம் பெற்ற சீடர்கள் பலர் வீடு திரும்பும் முன்பு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். அதனால், அவர்களுக்குத் தேவையான உணவும் மற்ற பொருள்களும் வாங்க எருசலேமிலிருந்த சீடர்கள் மனமுவந்து நன்கொடை வழங்கினார்கள். (அப். 2:44-46; 4:34-37) இந்தச் சந்தர்ப்பத்தில், ஓர் இறுக்கமான சூழல் உருவானது. “அன்றாட உணவு வழங்கும் விஷயத்தில்” கிரேக்க மொழி பேசும் “விதவைகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை.” (அப். 6:1) ஆனால், எபிரெய மொழி பேசும் விதவைகளுக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது. பாரபட்சம் காட்டியதாலேயே இந்தப் பிரச்சினை எழுந்தது. ஆம், பாரபட்சம் காட்டுவது பெரும் பிரச்சினைகளுக்கு வித்திடலாம்.
“கடவுளுக்கே நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்”
18 வளர்ந்துவரும் சபையின் ஆளும் குழுவாக செயல்பட்டுவந்த அப்போஸ்தலர்கள் ‘கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் வேலையை விட்டுவிட்டு உணவு வழங்கும் வேலையில் ஈடுபடுவது’ ஞானமான செயல் அல்ல என்பதை உணர்ந்தார்கள். (அப். 6:2) பிரச்சினையைத் தீர்க்க, “கடவுளுடைய சக்தியினாலும் ஞானத்தினாலும் நிறைந்த” ஏழு ஆண்களை தேர்ந்தெடுத்து, இந்த “அவசியமான வேலையை” மேற்பார்வை செய்ய நியமிக்கும்படி சீடர்களிடம் சொன்னார்கள். (அப். 6:3) உணவைப் பகிர்ந்தளிப்பதற்கு மட்டுமல்ல, பணத்தை நிர்வகிக்க... பொருள்களை வாங்க... வரவு செலவுகளை கவனமாய் கணக்கு வைக்க... வேண்டியிருந்ததால் தகுதியுள்ள ஆண்கள் தேவைப்பட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்கள் அனைவருக்குமே கிரேக்கப் பெயர்கள் இருந்ததால், ஓரவஞ்சனை செய்யப்பட்ட விதவைகளுக்கு ஆறுதலாய் இருந்திருக்கும். பரிந்துரை செய்யப்பட்டவர்களின் தகுதிகளை அப்போஸ்தலர்கள் சிந்தித்துப் பார்த்து, ஜெபம் செய்து, இந்த “அவசியமான வேலையை” கவனிக்க அந்த ஏழு ஆண்களை நியமித்தார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஸ்தேவான்—‘கருணையும் வல்லமையும் நிறைந்தவர்’
2 இத்தருணத்தில் ஸ்தேவானின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறது. நீதிபதிகள் அவரையே உற்றுப் பார்க்கையில்... அவரது முகம் “தேவதூதரின் முகம் போல்” காட்சியளிக்கிறது. (அப். 6:15) யெகோவா தேவன் அருளும் செய்தியை அறிவிப்பதால் தேவதூதர்களின் முகம் எவ்வித கலக்கமும் இல்லாமல் எப்போதுமே சாந்தமாக... அமைதலாக... இருக்கும். அதுபோல்தான் ஸ்தேவானின் முகமும் இருக்கிறது—பகைமை நிறைந்த அந்த நீதிபதிகளால்கூட அதைப் பார்க்க முடிகிறது. ஸ்தேவானால் எப்படி அவ்வளவு அமைதலாக இருக்க முடிகிறது?
“இயேசுவைப் பற்றிய நற்செய்தியை” அறிவித்தல்
16 பிலிப்பு செய்ததைப் போன்ற வேலையைச் செய்ய இன்று கிறிஸ்தவர்கள் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். மக்களுக்குச் சந்தர்ப்பவசமாகச் சாட்சி கொடுக்க, உதாரணமாக பயணம் செய்யும்போது சாட்சி கொடுக்க, அவர்களுக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்கிறது. பல சந்தர்ப்பங்களில், நல்மனமுள்ள நபர்களை அவர்கள் சந்திப்பதெல்லாம் ஏதோ எதேச்சையாக நடக்கும் ஒன்றல்ல. இது நாம் எதிர்பார்க்க வேண்டியதுதான். ஏனென்றால், “எல்லாத் தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும்” நற்செய்தியைக் கொண்டு செல்லும் வேலையை தேவதூதர்கள் வழிநடத்துகிறார்கள் என்று பைபிள் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. (வெளி. 14:6) பிரசங்க வேலையை தேவதூதர்கள் வழிநடத்துவார்கள் என இயேசு மிகச் சரியாகவே சொல்லிவைத்தார். கோதுமையும் களைகளும் பற்றிய உதாரணத்தில், அறுவடைக்காலத்தில், அதாவது இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில், “அறுவடை செய்கிறவர்கள், தேவதூதர்கள்” என்று இயேசு சொன்னார். இவர்கள் ‘அக்கிரமம் செய்கிற எல்லாரையும் அவருடைய அரசாங்கத்திலிருந்து பிரித்தெடுப்பார்கள்’ என்றும் சொன்னார். (மத். 13:37-41) அதேசமயம் பரலோக அரசர்களையும், பிற்பாடு ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த ‘திரள் கூட்டத்தாரையும்’ இந்தத் தூதர்கள் கூட்டிச் சேர்ப்பார்கள்; இவர்களை அமைப்பிற்குள் அழைத்து வர யெகோவா அலாதி பிரியம் கொள்கிறார்.—வெளி. 7:9; யோவா. 6:44, 65; 10:16.